பக்கங்கள்

ஒண்ணுமே புரியலே இந்த கிரிக்கட்டுல (IPL)



பின்னூட்டமாய் நண்பர் கோபி எழுதிய சூப்பர் கமென்ட்ஸை சிவப்பு நிறத்தில் சேர்த்துள்ளேன். (நன்றி நண்பர் கோபி - http://edakumadaku.blogspot.com/ மற்றும் http://www.jokkiri.blogspot.com/)

IPL தொடங்குது. இங்க விளையாட கூடாதுன்னு சொன்னதாலே பயலுக எல்லாம் மட்டைய தூக்கிகிட்டு பக்கத்து ஊருக்கு கிளம்பிட்டானுக. படுகாளிக்கு சின்ன சந்தேகம்.

1. ஓங்கி அடிச்துலே பந்து இரண்டா போச்சு, அதுலே ஒண்ணு
எல்லை கோட்டுக்கு வெளிய விழுந்துச்சு, இன்னொன்னு உள்ளே. அப்போ எத்தனை ரன்.

மொத்தம் 6+ 4 = 10 ரன்

2. ஓங்கி அடிச்துலே பந்து இரண்டா போச்சு, அதுலே ஒண்ணு கிழே விழுந்துச்சு இன்னொன்னு ஒருதான் கையிலே விழுந்து அதை அவன் பிடிச்சிட்டான். அப்போ அவுட்டா இல்லையா

அவன் அவுட், அவுட் இல்ல (ஏதாவது புரியுதா??)

3. ஓங்கி அடிச்துலே பந்து இரண்டா போச்சு, அதுலே ஒண்ணு ... (டேய் எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கிங்க) ... தேமேன்னு நின்னு கிட்டு இருந்த நம்ம கிச்சா மேலே விழுந்திருச்சி. இது விபத்தா இல்லே திட்டமிட்ட தாக்குதலா

இது திட்டமிட்ட தாக்குதல் என்கிற விபத்து என்கிற திட்டமிடாத தாக்குதல். (புத்தம் சரணம் கிச்சாமி!!)

4. ஓங்கி அடிச்துலே கால் தடுக்கி நம்ம பேட்ஸ்மன் ஸ்டம்பிலே விழுந்திட்டார், (அட பாவி போயும் போயும் அங்கேயா விழுவ) அதே நேரத்தில் அடிச்ச பந்தை நம்ம பீல்டர் பயலும் பிடிச்சிட்டான். இப்போ விக்கெட் ஹிட் அவுட்டா இல்ல கேட்ச் அவுட்டா

ஹிட் கேட்ச் விக்கட் அவுட் (ஹீ ஹீ)

5. ஒரு டீம். இப்போதான் புதுசா விளையாட வந்து இருக்கானுக. எல்லா பயலும் ரன் எடுக்காம அவுட் ஆயிட்டாணுக. நம்ம பயலுகளும் நோ பால் வைட் ன்னு ஒண்ணுமே கொடுக்கலே (கஞ்ச பயலுக ) ஸ்கோர் 0/10... இப்போ அடுத்த டீம் விளையாடனுமா இல்லே மேட்ச் முடிஞ்சு போச்சா

அடுத்த டீம் வெளையாடனும், அடுத்த மேட்ச்... (எப்படி!!!... அஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்)

6. நம்ம பய பௌலிங் பண்றேன்னு தூக்கி வீசுனது ஒரு பனை உசரத்துக்கு போய் நேரா பேட்ஸ்மன் மண்டைக்கு பின்னாலே இறங்கி ஸ்டம்பில அடிச்சிருச்சி, இப்போ அவுட்டா

கொஞ்சம் ஏமாந்தா, அந்த பேட்ஸ்மன் மண்டை மேலே விழுந்து அவுட் (ஆளே அவுட் "தல")...... அவ்ளோதான் சொல்லிட்டேன்.

எங்கேடா இருக்க

என்னோடு பள்ளியில் படித்தவர்கள். இப்போது எங்கே என்று தெரியாதவர்கள், தேடி சந்திக்கவேண்டும் என்று நான் ஆசைபடுபவர்கள்.

பங்கர கொத்து பரந்தாமன் - ஸ்டெப் கட்டிங் ஆசையால் முடி வளர்த்து எண்ணை தேய்த்து வளர்த்தவன். காதுகளுக்கு மேல் வளர்ந்து இருக்கும். காதை மறைக்கும் வரை வளர்க்க ஆசை, ஆனால் குடும்பமும் பள்ளி குழுமமும் அங்கிகரிக்காததால் ஏங்கி இருப்பவன். என்றாலும் காதுகளுக்கு மேல் வளர்ந்து இருக்கும். நடக்கும் போது பின் மண்டை முடி குதிக்கும். அதற்காவே ஒரு மாதிரி குதித்து குதித்து நடப்பான். முடி அதிகம் ஆனதால் நிச்சயம் சீப்பு வேண்டும். சீவி முடித்தவுடன் ஆள் காட்டி விரலால் மேலிருந்து தொடக்கி கீழ் வரை சுரென்று இழுப்பான். பின்னர் வாயால் ஒரு ஊது ஊதுவான். நாங்கள் எல்லாம் பொறாமையாய் பார்ப்போம்.
ஒரு நாள் பள்ளியில் தலைமை ஆசிரியர் அவன் நீண்ட முடியை கவனித்து விட்டார். தலை முடி பிடித்து நடு சபையில் அழைத்து வந்தார். கதற கதற அவசர அவசரமாக அவரே முடி வெட்டி விட அவமானத்தில் அவன் தலை கவிழ்ந்தான். முன் அனுபவம் இல்லாத பாவத்தால் முடி வெட்டு ரொம்ப சுமார். அங்கங்கே ஒரு கொத்து. அன்றில் இருந்து அவன் இப்பெயர் பெற்றான்.

நாக்கு துருத்தி
இரண்டு நடேசன் இருந்ததால் வித்தியாசப் படுத்தவேண்டிய நிர்பந்தம். பாவம் இவன் மாட்டி கொண்டான். கோபப்படும்போது நாக்கை மடித்து கண்ணை உருட்டி ஒரு பாவம் காட்டுவான். . தப்பு எதாவது செய்து விட்டால் அதற்கும் நாக்கை மடித்து கையை உதறி ஐயோ என்பான். வேறு என்ன செய்ய… நண்பர்களால் நாக்கு துருத்தி என்று அழைக்க பட்டான். மற்றொரு நடேசன் அமைதியாய் இருந்ததால் நடேசு என்று பெயர் பெற்றான்.
நுணலும் தன் வாயால் / நாக்கால் கெடும்

நார வாயன்
வாயில் காற்றை உள்ள இழுத்து இரு உதடுகளையும் குவித்து மடக்கி மேலும் கீழும் ஆட்டுவான். கிச் கிச் என்று வினோதமாய் குரல் எழுப்புவான். நாங்கள் எல்லாம் எத்தனை முயற்சி செய்தும் அத்தனை நேர்த்தி இல்லை. இதில் அவன் தான் சூப்பர். பிரத்யேகமாய் பயிற்சி எடுப்பதாய் எங்களிடம் பீத்திக் கொள்வான். என்ன பயிற்சியோ ????

கொக்கின் வாய் போலே நாரை வாய் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வைக்க பட்டது. ஆனால் துர் நாற்றம் என்பதும் இதில் அர்த்தமாக்கப்பட்ட போது இந்த பழக்கத்தையே விட்டான். பழக்கம் போச்சு, ஆனா பேரு போகலே.

சண்டை கார மோகன்

எள்ளும் கொள்ளும் வெடிக்கும் ஒரு உறவு. அருகில் உட்காருவது இல்லை. பார்த்தால் முகம் திருப்பி கொள்வோம். எதேசையாக இடித்து கொண்டால் தூ தூ என்று துப்பி கொள்வோம்.

பரிட்ஷை எழுதும்போது ஒரு நாள் அவன் அமரும் இருக்கையில் உட்கார பணிக்க பட்டேன். உடம்பெல்லாம் ஏதோ எறும்பு ஊரும் உணர்ச்சி. சக மாணவர் எல்லாம் கேலி செய்து சிரித்தார். அவன் கூட நெளிந்து கொண்டு உட்கார்ந்தது நியாபகம் .

ஏன் இந்த பகை. ஏதோ ஒரு நாளில் புழுக்கை பென்சில் சமாசாரத்தில் வெடித்த குண்டு. இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.

சினிமா புதிர் - கமல் காந்த / யார் இவர்

யார் இந்த பிரபலம் ????

இன்று மிக பிரபலமான ஒரு தமிழ் சினிமா நடிகர். அரசியலிலும் இன்று இவர் கொடி பறக்குது

இவர் இயற்பெயர் வேறு. ஆனால் திரை துறையில் கால் பதிக்க இவர் இட்ட பெயர் கமல் காந்த. தனக்கு தானே வைத்து கொண்ட பெயர் இது.

ஏன் இந்த பெயர் என்று கேட்டதற்கு. மொட்டை மாடி கூட்டி போய் சட்டையை கழட்டி விட்டு துள்ளிகுதித்து போஸ் கொடுத்தார். பேட்டி எடுக்க சென்ற ஆனந்த விகடன் நிருபர் பயந்து போனார். ஆனாலும் மிக வித்தியாசமாக அவர் கொடுத்த போஸ் பார்த்து பாராட்டினார்.

கமல் காதல் இளவரசன் , ரஜினி அடி தடி என்று தூள் கிளப்புகிறார். நான் இவர்கள் இருவர் செய்யும் வேலையையும் செய்வேன் அதனால் தான் இந்த பெயர் என்றார் இந்த ஸ்டார். பின்னர் இந்த பெயரை மாற்றி வேறு பெயரில் முயற்சித்து பிரபலமும் ஆனார்.

இவர் நேற்றைய மிஸ்டர். மெட்ராஸ்.

கண்டு பிடித்தீர்களா - சரியான விடை : சுப்ரீம் ஸ்டார் சரத் குமார்

பாய்ச்சா பக்


வார இறுதியில் குடும்பமாய் வாகனத்தில் நான் படுக்காளி. மூன்று வயது முல்லை மலர் , என் மகளை சொல்லுகிறேன். தூரத்தில் கண்கள் சிக்கி கொண்டு வெறித்த பார்வையுடன் அந்தகாரத்தை உற்று நோக்கியவாறு பாய்ச்சா பக் …பாய்ச்சா பக்…

என்ன இது. ஒன்றுமே புரியவில்லையே. வார்த்தையையும் இல்லை, சொற் பதமாகவும் இல்லை. அவள் அகராதி சற்றே வித்தியாசமானது. ரசிக்ககூடியது. என்றாலும் இது புது வார்த்தை. ரகசிய சமிக்கையில் துணைவியரிடம் கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை.

அடுத்து இருந்த என் மகன் சொன்னான் "நாம பார்த்த சினிமா பாட்டு பாடுறா" ‘Boys are Back’ - High school musicalsதிரைப்படம்

துணுக்குற்றேன். ஆச்சரியம். மெலிதாய் அவள் விரல் தொட்டு, சொன்னேன். பாய்ச்சா பக்… பாய்ச்சா பக்
“வாய மூடு, கார ஒட்டு” நான் சொல்வது அல்ல அவள் நினைப்பதும், பாடுவதும. கேலி செய்கிறேன் என்பதாய் உணர்ந்ததால் அவள் சொன்னாள். “வாய மூடு, கார ஒட்டு”

டிசம்பர் வெளியீடாய் இந்த திரைப்படம்.
ஆரவாரமாய் ஒரு கை பந்தாட போட்டியில் தொடங்குகிறது படம். சிவப்பு கட்சி ஊதா கட்சி இரண்டும் உக்கிரமான விளையாட்டு. தோல்வியின் விளிம்பிலே சிவப்பு கட்சி. தொங்கிய தோள்களுடன் இடைவேளைக்காக வந்தவர்களை பார்த்து கோச் சொல்லுகிறார். “நடந்தது நல்லவையாகவே இருக்கட்டும். இன்னும் இருப்பது 16 நிமிடங்கள்தான். இனி எப்போது இந்த உடை உடுத்தி நீங்கள் விளையாட முடியும் என்று தெரியவில்லை. இருக்கும் இந்த 16 நிமிடத்தில் போய் பூந்து விளையாடு” புது உத்வேகத்தோடு 16 நிமிடம் என்ற ஒரே தாரக மந்திரத்தோடு உள்ளே வருகிறது அந்த அணி. பாடல் தொடங்குகிறது 16 நிமிடம் என்ற அதே வரிகளோடு. நிமிர்ந்து உட்காருகிறோம் நாம். நாமே விளையாடுவது போலே ஒரு உணர்ச்சி ஆரவாரமான வெற்றி பெறுகிறது அந்த அணி.

கதை ஒன்றும் புதுசு இல்லை. பள்ளி பருவம் முடிந்தும் வாழ்வின் புது அத்தியாயம் தொடங்கினாலும் இனிய நினைவுகளை உங்களோடு கொண்டு செல்லுங்கள் என்ற கதை வரி தான் இந்த திரைப்படம்.

'பசுமை நிறைந்த நினைவுகளே' என்று நம் முன் தலைமுறை பாடியதும் 'மனம் பாடிட நினைகிறதே வார்த்தை எங்கே' என்று நாம் நினைவு கொண்டதும் இதே தான்.

திரைப்படம் மனித வாழ்வின் முக்கிய பங்களிக்கும் ஒரு செய்கை என்னை சிந்திக்க தூண்டுகிறது. மூன்று வயதில் என் மகள் கொண்ட நினைவு செதில் என்னை திரைப்படம் தயாரிக்கும் துறையில் உள்ளவர்களை பார்த்து கை கூப்பி கெஞ்ச தோன்றுகிறது "ஐயா பார்த்து படம் எடுங்க"

சமுதாய சீர் திருத்தத் அக்கினிக்குஞ்சு

மிக்க மகிழ்ச்சி.

ஜோ பாஸ்கர் :வண்ணன் வரதன் பதிவு பின்னூட்டம்
நாம் நமது குழந்தை களுக்கு நம்மை அறியாமலே இப்படி ஏதாவது தவறான கருத்துகளைப் பரப்புகிறோமா என்று என்னைத் தீவிரமாக சிந்திக்க வைத்து விட்டீர்கள்

உங்கள் இந்த பதிவை குழந்தைகளோடு இன்றே விவாதிப்பது தான் அவர்களுக்கு நற்சிந்தனை ஊட்டும் நல்ல வழி என எண்ணுகிறேன்.

சமுதாய சீர் திருத்தத் தீக்கு அக்கினிக்குஞ்சு தந்த உங்கள் சீரிய சிந்தனைக்கு
நன்றி

கோபி : நான் கடவுள் பின்னூட்டம்
கொடுக்கும் குணம் உள்ள ஒரு சிலரும் படுக்காளியின் கோபம் கண்டு கொடுக்காமல் இருந்து விடக்கூடாது என்று நான் நீண்ட நெடிய உருவில் இருக்கும் எங்களூர் அய்யனாரை வேண்டுகிறேன்.

நான் கடவுள் - திரை விமர்சனம்



குழந்தைசாமி உழைத்து களைத்து அலுத்து வீட்டிற்கு வந்தார். அவர் மக்கள் இருவர். ஒருவர் யானை முகமூடி, மற்றவர் சிங்க முகமூடி அணிந்து கொண்டார்கள். ஒரு நாடகம் நடித்து காட்டினார்கள். சரிந்து படுத்து கொண்டு, பெரிதாய் அலட்டி கொள்ளாமல் பார்த்தார்.

இதே குழந்தைசாமியின் வரவேற்பு அறையில் நிஜமாகவே ஒரு யானையும் சிங்கத்தையும் விட்டு நாடகம் நடத்தினால்.

அதே கதி தான் நமக்கும். இது வரை டம்மி கதை களம், டம்மி கதாநாயகர்கள் நகைச்சுவைக்குரிய கேலி கூத்தாய் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து தூங்கி விட்ட ஒரு நிலையில் அடித்து எழுப்பி காட்டினால்.

பிட்சை பாத்திரம் பாட்டை தொலைக்காட்சிகளில் பாத்தேன். இந்த படத்துக்கு போக மாட்டேன் என்பவர்க்கு 'ஐயா வலியை மட்டும் உணர்ந்து கொண்டு புண்ணை பார்க்காமல் முகத்தை திருப்பி கொள்ள வேண்டாம்'

AK47 வைத்து கொசுக்களை விரட்டினால் எப்படி?
மாபெரும் சக்தியான சினிமா வெறுமே ஒரு பொழுதுபோக்கவா?
சமூக மாற்றம், சிந்தனை சீர்படுத்தல் என்ற பாதையில் பயணித்தால் எத்தனை பெரிய மாற்றம்.

கோபம் கொப்பளிக்கும் பாலா அக்கறையாய் சொல்ல நினைக்கும் சிந்தனை இது என்று தோன்றுகிறது.

சரி கதை என்ன.
உடல் நசிந்து பிறக்கும் மனித ஜீவன் வாழ விரும்பவில்லை எனும் போது, என்ன செய்ய. அதை இப்படி ஆக்கிய காரணகர்த்தாக்கள் யார்.

சரி முடிவு என்ன.
தன்னை கடவுளாய் அறிவித்து கொண்ட அகோரி மரணத்தை பரிசளிப்பது

பாலா பார்க்க மறந்த கோணம்

பிட்சை வாழ்வின் பிரச்சினை அம்சவல்லியோ, முருகனோ, தாண்டவனோ அல்ல. பரோபகாரி என்று சொல்லிக்கொண்டு முதுகெலும்பு இல்லாமல் பிட்சை போடுகிறானே அந்த புண்ணாக்கு தான். கை நிறைய சில்லறை மாற்றி கொண்டு நீட்டிய பத்திரத்தில் இடும் அவன், அந்த பிட்சைகாரரை உற்று பார்த்தானா. இல்லையே. தன் சுய திருப்தியோ அல்லது ஊருக்கு சொல்லும் எச்சில் குணமோ தானே உள்ளது. தர்மம் தலை காக்கும் என்ற உப்புமா தத்துவங்களை தகிடுதங்களை எல்லாம் குப்பையில் போடுங்கள்

உண்மையான அக்கறை இல்லாமல் பிரச்சினை தீர்க்காமல் விலகி செல்லும் அவன் தான் தண்டணைக்கு உரியவன்.

இது நடக்குமா

இதற்கு பின் பிட்சை போடும் முன் யோசிப்போமா.
முருகன் தாண்டவன் எல்லாம் இந்த வேலை விட்டு விட்டு பொது கழிப்பரையில் மலம் தின்பார்களா.
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவலர், தன் கடமையை செய்வாரா
நீதி துரையின் இறையாண்மையை இயலாமை விட்டு விலகுமா

இது நடந்தால் ருத்ரன் தேவை இல்லை.

இந்த சிந்தனை எதுவும் நடக்காமல் இதை வெறும் கதையாக பார்த்து விட்டு சென்றால் பாலாவின் முயற்சிகள் வீணாகும்

வண்ணான் வரதன்




கருத்த மேனி. கல் போலே இறுகிய உடற் கட்டு. நான் வசித்த நகரத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அவன் குடித்தனம்.

அவன் அகராதியிலே துணிக்கு இரண்டு பெயர். அழுக்கு மற்றும் வெள்ளை. துவைத்த பின் துணிகளுக்கு அப்படி ஒரு பெயர், வர்ணம் பற்றி கவலை இல்லை துவைத்த பின் துணிக்கு பெயர் வெள்ளை.

அழுக்கு துணி பொதியும், வெளுத்து வைத்த வெள்ளையும் தூக்கி தூக்கி ஒரு பக்கம் சரிந்து நடப்பான். சின்ன ஐயா என்று மரியாதையாய் அழைப்பான். அந்த அழைப்பில் அன்றே எனக்கு கர்வம். என் அண்ணன் என் கூட இருந்தால் சின்ன ஐயா தம்பி என்பான்.

ஒரு முறை வந்தால் அவன் மறு முறை வர எப்படியும் ஒரு மாதம் ஆகும். சில நேரம் இரண்டு. இத்தனை கால தாமதம் என்பதால் அவனிடம் அழுக்கு போட ஒரு அச்சம். அரசியல் வாதி போலே எப்போதும் வாக்குறுதி தருவான். இந்த முறை அடுத்த வாரம் வருவேன் என்று.
நம்பி துணி போட்டால் அதோ கதி தான், அதே கதை தான்.

நம் துணிகள் சில நேரம் காணாமல் போகும். சோகத்துடன் வீட்டு முற்றத்தில் நின்று அந்த பிரச்சினையை சமாளிப்பான். நம் திட்டுகளை அமைதியாய் ஏற்றுக்கொண்டு மௌனமாய் போர் புரிவான். துணிகள் சில நேரம் மாறும். ஆச்சி செல்லமாய் அதற்கு பெயர் வைத்தார் வரதன் வீட்டு சீதனம்.

என்றாலும் பாவம்.

எப்போதும் அட்வான்ஸ் காசு வாங்கி விடுவான். வீட்டில் கறாராய் முடிவு செய்வார். இந்த முறை சலவை துணி குடுக்க கூடாது, அட்வான்ஸ் கழித்து கொண்டே பணம் செட்டில் செய்ய வேண்டும் என்று. என்றாலும் முடியாது. அவன் இரக்கம் எங்களை வெல்லும்.
துணி பொதி இறக்கி வைத்த உடன் தன் குடும்ப சுமை இறக்கி வைப்பான். இறைவன் இரக்கமில்லாதவன் என்பதாய் தோன்றும். அரை விலைக்கு விற்க முடிவு செய்த பள்ளி புத்தகத்தை, அவன் குழந்தைகளுக்கு இலவசமாய் குடுப்போம். இனி மேல் உடுத்த முடியாது, என்று கை பிடி சேலையாய் உரு மாறும் உபயோகம் மாறும் சட்டைகள் சேலைகள் அவர்கள் வீட்டின் உடுமாத்துக்கு என செல்லும்.
ஒரு முறை வீட்டிக்கு வந்த போது, கொல்லையில் உள்ள துவைக்கும் கல் சென்று, நாங்கள் தடுத்தும் எங்கள் துணிகளை சலவை செய்தான். எங்களால் முடியாத முரட்டு போர்வையை காலில் அண்டை கொடுத்து கையால் முறுக்கி புழிந்தான். தும்பை பூவாய் எங்கள் துணிகள் மாறின. அந்த செய்கைக்கு, எங்கள் வீட்டின் உணவை மட்டும் கூலியை பெற்றான்.
எத்தனை துணி, எவ்வளவு பணம் என்ற கணக்கு வழக்கு தெரியாது. குடுத்ததை வாங்கி கொள்வான். தேவைக்கு கேட்பான். நாங்களே முடிவு செய்ய வேண்டும், என்று விலை உயர்வு செய்ய வேண்டும் என்று.
அவன் மனைவியை பார்த்து இருக்கிறேன் அவன் குழந்தைகளை பார்த்து இருக்கிறேன். அவர்கள் குடும்பத்தின் வருமானம் நாங்கள். முக்கியமான வாடிக்கையாளர் நாங்கள். வியாபாரம் இல்லாது மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒரு உறவு.

சரித்திரங்களில் மாத்திரமே வாசித்து இருந்த வாழ்கை போலே தோன்றும். அவன் வாழ்வின் நோக்கம் என்ன.

இன்று

வியாபாரம் என்று உணராது அடிமையாய் அவன் சிந்தித்த எண்ணம் கோபம் கொள்ள செய்கிறது. என் பெயர் சொல்லி கூப்பிடாத, எங்கள் வீட்டின் நடு வீட்டுக்கு செல்ல இயலாத சாதிய நிலை ஆத்திரம் கொள்ள வைக்கிறது.

இன்று பார்க்காத வரதனை நினைக்கும் போது நிம்மதி வருகிறது. இன்றும் கிராமங்களில் இப்படி உண்டோ என்று கேள்வி வருகிறது.


ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் 15/03/09


காலையிலே காரசாரமாய் ஒரு விவாதம்.
வியாபாரம் போலே ஒரு பேரம்.
"என்னை நாளைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போவியா மாட்டியா"
"நான் என்ன சாத்தானா, கோவிலுக்கு வேண்டாமுன்னு சொல்றதுக்கு"

விஷயம் வேற ஒண்ணும் இல்லை. படுகாளிக்கு பன்னிரெண்டு வயசு, சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சுட்டான்,
ஆச்சி வைத்து சூப்பரா டபுள்ஸ் அடிக்கிறான்.

"ஆச்சி முதல்ல உக்காருங்க, காலை நீட்டுங்க, மடியை காட்டுங்க, நான் படுக்கட்டும், நம்ம பேசி ஒரு முடிவு பண்ணுவோம்”
வேறு வழி இல்லாது, சிரமப்பட்டு சிரிப்போடு உட்கார்ந்து "வாய வைச்சு பொழைச்சுக்குவேடா” என்று ஆசிர்வாதமாய் சொல்லி கொண்டே கால் நீட்ட, படுக்காளி நான் சந்தோசமாய் படுத்தேன்.


"எட்டணா குடுத்துருங்க வீட்டு வாசல்லே இருந்து கோவில் வாசல் வரைக்கும் அலுங்காம குலுங்காம கொண்டு விடுறேன்"
"பஸ்சிலே போனாலே நாலாணா தான, உனக்கு எதுக்கு எட்டணா குடுக்கணும்"

"பஸ்சுக்கு போனா காத்திருக்கணும், எப்போ வருமுன்னு தெரியாது, உக்கார இடம் கிடைக்குமா அதுவும் தெரியாது, வேர்த்து விரு விருத்து, ஓவ்வொறு ஸ்டாப்லயும் நின்னு நின்னு போகணும்”
"அட போடா பஸ்சிலே நல்ல மெத்து மெத்துன்னு உக்காரலாம், உன் வண்டியிலே கம்பி குத்தும்.சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் 10 பைசா தாரேன்”
"அதெல்லாம் முடியாது. சிலு சிலுன்னு காத்து வரும்முல அதை பாருங்க, உங்களுக்காக 30 பைசா குடுத்திருங்க, மேட்டர முடிச்சுருவோம்”

அரை மனசோட, பொக்கை வாய் சிரிப்போட "பெரியாளானா பெருசா வருவேடா" என்று ஆச்சி எழுந்திரிக்க - புளிப்பு முட்டாய் வாங்கி ஒண்ணு நான், இன்னொன்னு ஆச்சிக்கு குடுத்து ஜாலியா வண்டியிலே போகலாம் என்று தயார் படுத்திகொண்டு படுக்காளியும்.


இன்று விற்பனை பிரிவில் வாழ்கை எனும் வண்டி ஓட்ட என்னை தயார் படுத்திய நிகழ்வுகளை திரும்பி பார்கிறேன். Phasing, striking balance, firming your stand, understanding need, highlight service capability, demanding premium, create objections to objectives என்ற கோட்பாடுகளை எளிமையாக கற்று கொடுத்து இருக்கிறார் என் ஆச்சி. நன்றி

பெண்ணின் இதம் ஒரு தனி விதம்.


என்னை பாதித்த மகளிர் என்று மகளிர் தின நினைவுகள்.

தாய், ஆச்சி, மனைவி, உறவினர், தோழமை, மகள் என்று பல வழிகளில் என்னை உருவாக்கி உரமாக்கி உள்ளனர்.

பெண்ணின் இதம் ஒரு தனி விதம். சோர்ந்து போன போது- மடியில் படுத்து கதறி அழுதபோது - தலை தடவி தாய் தந்த நம்பிக்கை அலாதி ஆனது. இன்னும் இன்னும் என்று ஏங்குவது. உலகத்தின் நம்பிக்கையை அந்த ஒரு தடவல் - மெய் தீண்டல் உணர்த்தும். பாதுகாப்பாய் இருந்த கருப்பை காலங்கள் அல்லது கர்பப்பை காலங்கள் எந்த மனித உயிரும் ஏங்கும். புத்தியை விலக்கி வைத்து விட்டு ஆன்மா தேடும்.


காதலில் திளைத்து கண்களை மூடி கண்ணுக்கு தெரியாத வான் வெளியை பார்க்கும் போது இனிமையின் உச்சம், தன்னம்பிகை தரும். இலக்கியம் பொங்கி பரிமளிக்கும். இறை உணர்தலே நிகழும் உன்னத உணர்ச்சி.

பெண் நட்பு தரும் நம்பிக்கை ஒரு தனி விதம். கர்வம் இல்லாத நிலை. நம் தலை கனம் நம்மை விட்டு விலகும்.

எழுத்து சித்தர் பாலா பெண்ணை விளக்கிட சிங்கத்தை துணைக்கு அழைப்பார். ஆண் சிங்கம் அழகானது. பிடரி உள்ளது. உறுமும் பயம் காட்டும் ஆனால் சோம்பேரி, கொல்லத் தெரியாது

வீரியம் ஆனதும் சுறுசுருப்பானதும் பெண் சிங்கம். குடும்ப அமைப்பு, இரை தேடுவது இதை எல்லாம் பார்த்து கொள்வது பெண் சிங்கம். சண்டைக்கு சென்றால் கொன்று விட்டு தான் மறு வேலை. இந்த பம்மாத்து உதார் விடுவது எல்லாம் தெரியாது. கிடையாது.

இதை உற்று நோக்கிய நம் முன்னோர்கள் தான் , கலாச்சாரத்தின் பெயரால் அவளை வீட்டுக்குள் வைத்து விட்டு ஆண்களை முன்னிலை படுத்தி கோட்பாடுகள் அமைத்தார்கள் என்பார். (பின்னே பேசி சமாளிக்க வேண்டிய பஞ்சாயத்தை கொலை கேஸ் ஆக்கினா)


சரி ஒரு கேள்வி.

இருபாலருக்கும் பொதுவான ஒரு கேள்வி. மேலே சொன்ன விடயங்களை ஒரு பெண்ணால் மட்டும் செய்யா முடியுமா இல்லை ஒரு ஆண் செய்ய முடியுமா. (சிண்டு முடியும் வேல எல்லாம் இல்லை)

இயல்பிலே சற்று வித்தியாசம் ஆனவள் பெண். அவள் தேவைகள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் பங்களிப்பு எல்லாம் ஆணின் கோட்பாடுகளில் புரிந்து கொள்வது சற்று சிரமம்.

இந்த வித்தியாசமும் போராட்டமும் தான் மனித வாழ்வாய் விஸ்வரூபம் எடுக்கிறது.

இதெல்லாம் சரி காளையர் தினம் எப்போ கொண்டாட போறிங்க.

புனித பிறந்த நாள் சிந்தனை

இஸ்லாம் என்ற இறை வழி வித்திட்ட பெருமகனார் பிறந்த தினம் இன்று. இறை நினைப்பில் மனித சாயல் வந்து விடக் கூடாது என்று மிக கவனமாய் கோட்பாடுகள் வித்திட்ட மகான்.

மற்ற மார்கத்தை போலே பிறந்த நாள் கொண்டாட்டம் கூடாது என்று எண்ணியதால், இன்றும் ஒரு சாரார் கொண்டாடுவதில்லை.

என்றாலும் அவரை, அவர் மேன்மையை நினைக்க இந்த தினம் பயன் படட்டுமே

கொக்கு பர பர - முடிவுகள்

சூப்பர். இரண்டு முடிவுகள் வந்து விட்டது.

இந்த பதிவை வாசிக்கும் முன் :
ஒரு கதை எழுதி படுக்காளி நான் பாதியில் விட்டு விட்டேன் (கொக்கு பர பர .... ) முடிவு பகுதி எழுதுங்களேன் என்றபோது கிடைத்து இது.

ஒன்று

சட்டம்பியின் பதிலை கேட்டு துரைகு கோவம் மூக்கின் மேல் ஒற்றை காலில் நின்றது. துப்பாகியை எடுத்து சட்டம்பியை குறிவைத்தார். எதாவது சொல்லி தப்பித்தால் போதும் என்று சட்டம்பி பயந்துகொண்டே சொன்னான் "துரை நீங்க பறக்கிற கொக்க சுட்டுருந்தா ரெண்டு கால் இருந்துருக்கும். நின்ன கொக்க சுட்டதனால ஒரு கால் தான் இருக்கு. அதுக்கு நான் என்ன செய்வேன்?"சட்டம்பியின் குறும்பான பதிலை ரசித்த துரை சிரித்துக்கொண்டே பறந்துகொண்டிருக்கும் கொக்கின் பக்கம் தன் துப்பாகியை திருப்பினார்...

இரண்டு :

பீட்டர் எனும் வெள்ளைக்கார துரை துப்பாக்கி எடுத்து கொண்டு கொக்கு சுட போனார். நம் காலத்தில் இந்த கதை நடந்து இருந்தால் விலங்கை தூக்கி கொண்டு காவலரும் சென்றிருப்பார். சுட்டார் கொக்கை துரை. இன்று நல்ல வேட்டை. அவசரமாய் வீடு திரும்பி சமையல் காரன் சட்டம்பியை தேடினார். சட்டம்பி சரக்கில் மிதந்து கொண்டிருந்தார். துறையை பார்த்ததும் சரக்கு குப்பி, மிளகு டப்பியின் பின் ஒளிந்தது. "நல்ல மிளகு போட்டு வறுத்து வை” , வாசனை மூக்க தொளைக்கணும் என்று சொல்லி விட்டு ஆத்துக்கு குளிக்க போனார். சமையல் தொடங்கினான் நம்ம சட்டம்பி. சுவையின் நறுமணம் கிறுகிறுக்க விட்டது. ஆவல் அடங்காது ஒரு காலை தின்று விட்டான். ஆஹா, ஒரு கால் போச்சே....... குளித்து முடித்து வந்த பீட்டர் பரிமாற சொன்னார். தட்டில் உள்ள ஒரே ஒரு காலை பார்த்து திகைத்து போனார். எங்கேப்பா இன்னொரு கால். சட்டம்பி சொன்னான் “அதாண்ணே இது" .
கதையை நாம் இப்படி முடித்தால் கவுண்டமணி சண்டைக்கு வருவார். இது கதையில் ஒரு வசனம் அவ்வளவுதான்.
சரி, மேலே கதை கேப்போம். சட்டம்பி சொன்னான் "கொக்குக்கு ஒரு கால் தானே" துரை வினோதமாய் பார்த்தார். இருவரும் சேர்ந்து ஆற்றங்கரைக்கு மறுபடி வந்தார்கள். ஒற்றை காலோடு நின்று கொண்டு இருந்த கொக்கை காட்டினான் சட்டம்பி. துரை ஞே! என்று பார்த்தார். இரு கையும் இணைந்து தட்டி ஒ என்று சத்தம் போட்டார். கொக்கெல்லாம் பறந்தது. இரண்டு காலும் தெரிந்தது. துரை சொன்னார் "இப்போ என்ன செய்விங்க", "சட்டம்பி இப்போ என்ன சொல்றீங்க" .
சட்டம்பி பதில் சொன்னான் "சாப்பிடும்போது இதே மாதிரி ஒ-ன்னு சொல்லி கை தட்டுனா ஒரு வேளை கொக்குக்கு இரண்டு கால் வந்தாலும் வரும்” பறக்கும் போது கொக்குக்கு இரண்டு கால், அதுவே படுத்துடுச்சுன்னா ஒரே கால். இதோட கதை முடிச்சா இரண்டம் கிளாஸ் கதை ஓகே, நமக்கு. சரி கதை தொடர்ந்து படிப்போம்.
கோபம் கொண்ட பீட்டர், சட்டம்பியை ஓங்கி ஒரு உதை விட்டார். அவன் கலங்கி போய், பின்பக்கம் வழியே ஓடி, குளக்கரையில் நின்று கொண்டான்.
பின்னாலேயே பீட்டரும், தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, சட்டம்பியை துரத்தி வந்தார். அங்கே ..................
சட்டம்பி, ஒரு கத்தியை எடுத்து, கல்லில் வைத்து கூர் தீட்டி கொண்டிருந்தான். அதை பார்த்த பீட்டருக்கு வெலவெலத்து விட்டது.
சட்டம்பி, கொக்கு பறந்து போனா என்ன, ஒரு காலோடயோ, இல்ல ரெண்டு காலோடயோ இருந்தா என்ன ...... இருக்கறத சாப்பிட வேண்டியதுதான்.
நீ வந்து இருக்கறத போடு, நான் சாப்பிடுறேன்.
சட்டம்பி சொன்னான், துரை, நான் அங்க வந்தா, நீ என்ன போட்டாலும் போட்டுடுவ. அதனால, நான் உனக்கு இங்கேயே போடறேன்னு சொல்லி, ஒரு கைல அந்த கத்திய எடுத்துக்கொண்டு துரையை துரத்த, துரை திரும்பி வந்து தன் பங்களாவுக்குள் ஒளிந்து கொண்டான்.

கொக்கு பர பர

பீட்டர் எனும் வெள்ளைக்கார துரை துப்பாக்கி எடுத்து கொண்டு கொக்கு சுட போனார். நம் காலத்தில் இந்த கதை நடந்து இருந்தால் விலங்கை தூக்கி கொண்டு காவலரும் சென்றிருப்பார்.

சுட்டார் கொக்கை துரை. இன்று நல்ல வேட்டை. அவசரமாய் வீடு திரும்பி சமையல் காரன் சட்டம்பியை தேடினார். "நல்ல மிளகு போட்டு வருத்து வை” என்று சொல்லி ஆத்துக்கு குளிக்க போனார். சமையல் தொடங்கினான் நம்ம சட்டம்பி. சுவையின் நறுமணம் கிறுகிறுக்க விட்டது. ஆவல் அடங்காது ஒரு காலை தின்று விட்டான். ருசி பார்க்க என்று தொடக்கி நல்லா இருந்ததால் முழுதும் தின்று விட்டான்.

குளித்து முடித்து வந்த பீட்டர் பரிமாற சொன்னார். தட்டில் உள்ள ஒரே ஒரு காலை பார்த்து திகைத்து போனார். எங்கேப்பா இன்னொரு கால். சட்டம்பி சொன்னான் “அதாண்ணே இது"
கதையை நாம் இப்படி முடித்தால் கவுண்டமணி சண்டைக்கு வருவார். இது கதையில் ஒரு வசனம் அவ்வளவுதான். சரி மேலே கதை கேப்போம்.

கோபம் வந்தாலும் அடக்கி கொண்டு கேட்டார் துரை. இல்லப்பா கொக்குக்கு ஒரு கால் இங்கே இருக்கு இன்னொரு கால் எங்கே? சட்டம்பி சொன்னான் "கொக்குக்கு ஒரு கால் தானே" துரை வினோதமாய் பார்த்தார். இருவரும் சேர்ந்து ஆற்றகரைக்கு மறுபடி வந்தார்கள். ஒற்றை காலோடு நின்று கொண்டு இருந்த கொக்கை காட்டினான் சட்டம்பி.

துரை நே! என்று பார்த்தார். இரு கையும் இணைந்து தட்டி ஒ என்று சத்தம் போட்டார். கொக்கெல்லாம் பறந்தது. இரண்டு காலும் தெரிந்தது. துரை சொன்னார் "இப்போ என்ன செய்விங்க" சட்டம்பி பதில் சொன்னான் "சாப்பிடும்போது இதே மாதிரி ஒ சொல்லி கை தட்டுனா ஒரு வேளை இரண்டு கால் வரும்”

பறக்கும் போது கொக்குக்கு இரண்டு கால், அதுவே படுத்திருசின்னா ஒரே கால்

இதோட கதை முடிச்சா இரண்டாம் கிளாஸ் கதை. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு.

சரி கதை தொடர்ந்து படிப்போம். ........


கதையை நான் முடிக்காமல் விட்டு விட்டேன். முடிவு பகுதியை எழுதி அனுப்புங்களேன்.

நீட்டி ஊட்டி ஒரு டகால்டி

அண்மையில் படித்ததும் பிடித்தது

இறைவன் ஒரு கெய்டட் டூர் செய்தார். எங்கே!!!! சொர்க்கம் எது நரகம் எது என்று காட்ட. கதை ஓஹோனு தொடங்குதே ....

ஒரு அறையிலே மணக்க மணக்க சூப். இவனுக்கு வாயில் எச்சி ஊறியது. அங்கு அமர்ந்தவர் கையில் எல்லாம் ஒரு முழ நீள ஸ்பூன். எத்தனை முயன்றாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவே இல்லை.

எலும்பும் தோலுமாய் திரும்ப திரும்ப முயற்சித்து கொண்டே பாவம் போலே நரகத்தில் நம்மவர்கள்.

அடுத்த அறைக்கு வருவோம். அங்கும் அதே மணக்க மணக்க சூப், அதே முழ நீள ஸ்பூன், ஆனால் இங்கே எல்லோரும் குஷியாய் புஷ்டியாய் இருக்கிறார்கள்

எப்படி.

முழ நீள ஸ்பூனை நீட்டி அடுத்தவன் வாயில் ஊட்டி… ஆஹா ! ஊட்டியவன் இவனுக்கு ஊட்ட, கொஞ்சி குலவி நல்லா கும்மாளம் போடுராங்களாம்.

ஆத்மாவின் பயணம் – விமர்சனம்

தலைவா உன் வருகை!
தூக்கினேன் என் இருகை!

வணங்கவும்!! கேள்விகளுக்கு விடை தெரியாததாலும்!! (சாய்சில் விட்டு விட்டேன்)

நன்றி - ஜோ பாஸ்கர்

விமர்சனம் - கதையின் கருவை ஒட்டி, இன்னும் ஆழ சென்று கேள்விகள் மலர்ந்து இருக்கிறது. தங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்
பசி இல்லாத பகை இல்லாத காயம் இல்லாத காமம் இல்லாத உடைகள் இல்லாத உடைசல் இல்லாத உலகைப்படைத்த உட்டாலக்கடி பிரம்மனே !உங்களிடம் சில வாதக்கேள்விகள்....

*நடு மரத்தின் கனியை உண்ணக்கூடாது எனப்பணித்த இறைவன் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று சொன்னது ஏன் ?

*நடு மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்ற உத்தரவு மனிதப் படைப்புகளுக்கு மட்டும் தானா ? அப்படியானால் விலங்குகளும் இன விருத்தி செய்கிறதே எப்படி ?

*நிர்வாணம் என்றல் என்னவென்று இறைவன் படைத்த விலங்குகள் இன்னும் உணரவே இல்லையே! அப்படியானால் அவை இன்னும் நடு மரத்தின் கனியை உண்ணவே இல்லையா ?

*மனிதப்படைப்புகள் நிச்சயம் தனது உத்தரவை மீறும் என்று இறைவனுக்கு முதலிலேயே தெரியுமா? ஆண் என்றும் பெண் என்றும் இரு வேறு விதமாகப் படைத்தது ஏன் ?

*மற்ற எந்த விலங்குக்கும் பேசக் கற்றுத்தராத இறைவன் பாம்புக்கு மட்டும் பேசக் கற்றுத் தந்ததேன் ?

*சில தினங்களுக்கு முன் நீங்கள் வினவிய காலா நூலா கேள்வி மீண்டும். ஆதாம் ஏவாள் தவறு செய்த பொது தம் கால் கொண்டு ஆடினார்களா அல்லது நூல் கொண்டு ஆட்டுவிக்கப்பட்டர்களா ?

*பாம்பு சொல்கிறது - "நடு மரத்தின் கனியை உண்டால் நீங்களும் இறைவனைப் போல ஆகி விடு வீர்கள்" -அப்படி என்றால் நடு மரத்தின் கனி என்றால் பகுத்தறிவு என்று பொருள் கொள்ளலாமா?பகுத்தறிவு வந்ததால் தான் நிர்வாணம் புரிந்ததா?பாம்புக்கு பகுத்தறிவு எங்கிருந்து வந்தது?படைத்தவன் பாதகம் மிக்க பாம்பைப் படைத்ததேன்?

*ஆதாமும் ஏவாளும் பாவம் புரிந்த பிறகு தோட்டத்தில் இருந்து துரத்தி விடப்பட்டார்கள். விலங்குகள் வெளியே வந்தது எப்போது?

*உங்கள் கதையின் நாயகிக்கு தொப்பிள் இருந்ததா ? அவள் படைக்கப்பட்டவளா அல்லது பிறந்தவளா என்பதை உறுதி செய்ய ..

*பசி என்பதையே படைக்காத இறைவன் வாயையும் வயிற்றையும் படைத்தது ஏன்?

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் 02/03/09

ஜவுளி கடையில் பயங்கர கூட்டம். பண்டிகை நெரிசல்.
வேர்த்து விருவிருத்து எல்லோரும் புடைவையை பார்க்க முண்டி அடித்து கொண்டு இருந்தனர். படுக்காளியின் குடும்பமும் அங்கனமே.

“எள்ளு தான் எண்ணைக்கு காயுது, எலிபுழுக்கை நீ எண்டா காயிர, வெளியிலே பெஞ்ச்ல உக்காரு, போகும் போது ஒண்ணா போயிடலாம்” ஆச்சி ஆதங்கத்தோடு சொன்னார்
“இல்ல ஆச்சி நான் போயிட்ட நீங்க தனியா இருப்பிங்களே பயந்து போயிருவீங்களே தான் நானும் நிக்கிறேன்.”
“அட போடா புடைவை கடையிலே வந்து என்னை யார் தூக்கிட்டு போறாங்க”
“சொல்ல முடியாது ஆச்சி புடைவையே தூக்கி பையில போட்டுட்டு போறவுங்க உங்களையும் தூக்கி பையிலே போட்டுட்டு போயிட்டா.

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் 02/03/09

“இந்த உடுப்பு எப்படி இருக்கு” புதியதாய் வாங்கிய சட்டை போட்டதும் கேட்டான் படுக்காளி
“எங்க ராசா மாதிரி இருக்கு!!!”
பேசாமல் இருக்க வேண்டியது தானே, "தாத்தா விட நல்லா இருக்கேன்ல "
"வெளக்கமாத்துக்கு பட்டுல குஞ்சம், அவுக நடந்து வந்தா எப்படி இருக்கும். எங்க அய்யா கால் தூசி பெறுவியால நீ"
"ஏன் ஆச்சி உங்க அய்யா கால் தூசிக்கு இரண்டு கை, இரண்டு கால், ஒரு தலை எல்லாம் இருக்குமா என்னை போலே, அப்போ கொட்டுறது தூசி இல்லை, புழுவும் பூச்சியும்"
அடிப்பதற்கு ஆச்சி எழுந்திரிக்க, படுக்காளி பிடித்தேன் ஓட்டம்.
ஆச்சி - அருகில் படுக்காளி

என் சேட்டைகளை அங்கிகரித்தும் ஊக்கப்படுத்தியும் என்னை வளர்த்த என் ஆச்சியின் பாதங்களுக்கே இது சமர்ப்பணம்.

என்னை எனக்கு பிடித்தது

துபாய் சாலை... காலை நேரம்.

அலுவலகம் செல்லும் அவசரத்தில் – ஆண்களும் பெண்களும் வாகனங்களில் இருந்தார்கள். வழுக்கும் பாதையில் வண்ண வண்ண வாகனங்கள்  நழுவிக் கொண்டிருந்தன. அந்த வாகனக் கூட்டத்தில் நானும் இருக்கிறேன்….

இன்னொரு வாடிக்கையான நாள் என நினைத்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கு தெரியவில்லை. நான் இன்று ஒரு புதிய அனுபவத்தை பெறப் போகிறேன் என்று.

சன்னலைத் திறந்தால் தலைமுடி மட்டுமல்ல – கண்களே கூட கலங்கும் வாகன வேகம். சட்டென என் காரின் வேகத்தை குறைக்க வேண்டியதாயிற்று. ஆம்  சாலை ஓரத்தில் அந்த இளம் பெண்ணை கண்டேன்.

அப்பெண், உள்ளூர் பெண். நீண்ட கருப்பு அங்கியிலே. வெள்ளை வெளேரென… வயது  சுமார் 18-19 இருக்கலாம்.

அடித்து சுழன்ற காற்றிலே அவள் அங்கி பட படத்து விலகியது. உள்ளே உடை ஒன்றும் இல்லை. ஆண்டவா....   என்ன இது என்று எண்ணும்போதே அவளை சுற்றி ஒரு 5-6 பேர் நிற்பது தெரிந்தது. கூர்ந்து கவனித்ததில் அழுத கண்களும் அடி வாங்கி கன்னிய முகமும் தெரிந்தது. ஏதோ பிரச்சினை. வாகனத்தை மெதுவாக்கியபடி..

கண்ணாடி சன்னல் வழியே கேட்டேன் "ஏதேனும் உதவி வேண்டுமா"

"என்னை பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் விட முடியுமா" – இது அவள்

"சரி ஏறி கொள்ளுங்கள்"

அந்த கும்பலில் இருந்து அவள் தப்பித்தது போல் அவசரமாய் உள் அமர்ந்தாள்... உள்ளே அமர்ந்ததும் குப்பென்று ஒரு துர் நாற்றம். முந்தின இரவு உற்சாக பானம் அருந்தி வாந்தி எடுத்த வாசனை. கை பையை துழாவி நறுமண தைலம் எடுத்து பூசி கொண்டாள். அவளுக்கும் உரைத்து இருக்க வேண்டும்.

அமர்ந்து சிறிது நேரம் ஆனாலும் பட படக்கும் விழிகளுடன் அரை நிர்வாணம் தந்த அசௌகரியமும் ... அவள் நிலை கொள்ளாது இருந்தாள்.

மெலிதாய் சொன்னேன். நான் உங்கள் சகோதரன் போலே, எனக்கும் மகள் உண்டு. ஏதோ பிரச்னை என்று தெரிகிறது. வருந்த வேண்டாம் பாதுகாப்பான கரங்களில் உள்ளிர்கள் என்று உணர்ந்தால் போதும். வாக்கியம் முடிக்கும் முன்னே கண்ணீர் பிரிட ஒ…. என்று அழத் தொடங்கினாள்.

குழந்தையும் இல்லாத பெண்ணும் இல்லாத அந்த இரண்டாம் கட்டான் அழுவது பாவமாய் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை, என்றாலும் அழுகை அவள் உணர்ச்சியை சரி படுத்தும் என்பதும் புரிந்தது.

அழட்டும், அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். சற்று நேரத்தில் அழுது முடித்த பின் முன்னால் குனிந்து வைக்கப்பட்டு இருந்த தேனிர் கோப்பையை பார்த்தாள். நான் குடித்து முடித்து வைத்து இருந்தது. அதை கையில் எடுத்து ஏதேனும் மிச்சம் உள்ளதா என்றும் பார்த்தார்.

ஐயோ என்ன கொடுமை இது. இன்று பார்த்து தண்ணிர் கூட இல்லையே. மன்னிப்பு கேட்டேன்.

அதற்குள் என் கண்களில் சாலையில்….. ஒரு போலீஸ் காரர் தென் பட்டார். இரு சக்கர வாகனத்துடன் டிராபிக் கண்ட்ரோல் செய்பவர்…..
 
வாகனத்தை  நிறுத்தி அவர் அருகில் சென்று சுருக்கமாய் சொன்னேன் "யார் என்று தெரியாது, என்ன பிரச்சினை என்றும் தெரியாது, காவல் நிலையம் செல்ல வேண்டும் என்று மட்டும் சொன்னார்.. என விளக்கினேன்.

காவலர் என் வண்டியின் அருகில் சென்று அவளுடன் பேசினார்.

எனக்கு தெரியாத/ புரியாத மொழியில் இருவரும் பேசி கொண்டார்கள்.

மொழி புரியவில்லை… ஆனாலும் என்னால் சிலவற்றை உணர முடிந்தது.

சில வார்த்தைகள், சில உணர்வுகள்  அந்த விஷயத்தை விளக்கத்தானே செய்கின்றன.. மெலிதாய் எனக்கு  புரிந்தது ஒரு பாலியல் வன்முறை அரங்கேறி இருக்கிறது. அது என்ன.. எப்படி நடந்தது... என ஆர்வம் இருந்தாலும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முனைப்பு என்னிடம் இல்லை.

 பாவம் சிறு பெண்… ஏதோ ஒரு அசம்பாவிதம்…. அது என்ன என கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாத என் மனதை… நான் உற்று நோக்கினேன்… அப்போது…. என்னை எனக்கு பிடித்தது.

சிறிது நேர பேசி விட்டு வந்த……  காவலர் என்னிடம் சொன்னார்.. இப்போது நான் புரிந்து கொள்ளும் ஆங்கிலத்தில்...  "என்னை பின் தொடர்ந்து வாருங்கள், அருகில் உள்ள காவல் நிலையம் வரை"

ஒரு விண்ணப்ப தொனியில்... நான் "அலுவலகத்திற்கு செல்ல வேண்டும், நீங்களே பார்த்து கொள்ள முடியுமா" என்றதை கண்களால் மறுத்தார்.. "மன்னிக்க வேண்டும், நீங்கள் வந்தால் தான் சரி"

சரி ஆனது ஆச்சு, முடித்து விட்டு சென்று விடுவோமே என்று வண்டியை எடுத்து அவர் பின்னால் சென்றேன்.

அவரோடு சென்றதால் சாலை விதிகளை மீறி ஒரு வழி பாதையில் எதிர் திசையில் சென்றேன். அவசர காலத்தில் காவல் வண்டிகள் செல்லும் சமிக்கை - சைரன் ஒலியோடு விரைவாய் சென்ற அந்த பயணம் ஒரு புதிய அனுபவம்….

சாலையில் செல்லும் கார்கள் எல்லாம் கூட… என் வண்டியை ஆர்வமாய் பார்த்தது… யார் அது உள்ளே.. .என சில எட்டிப்பார்த்தது… நான் மெலிதாய் சிரித்தபடி. பயணிக்கிறேன்….

அந்த எஸ்கார்ட் போலீசுடன்.. துபாய் நகரில்.. கார் ஓட்டியது… வித்தியாசமாய் இருந்தது.... என்னை எனக்கு பிடித்தது...

அரபியில் எழுதப்பட்ட, காவல் நிலையத்தில் வண்டி நின்றது... எங்களை எதிர்பார்த்து நின்றிருந்த பெண் காவலர்... ஒரு போர்வையுடன் என் வண்டி அருகில் வந்தார்...

...
 
இந்த காவலர் அதனுள் தகவல் தந்து ... எங்களை வரவேற்க்க தயாராய் இருந்திருக்கிறது....

பெண் காவலர், போர்வையைப் போர்த்தி, அந்த பெண்ணை ஆதரவாய் அணைத்தபடி கொண்டு சென்றார்…. அந்த பெண் இறங்கி சென்றதும்... மெதுவாய் நான் இறங்கினேன்...

சட்டென அவள் என் டீ கோப்பையை பார்த்தது நினைவுக்கு வந்தது.

பார்வையில் பட்ட பெட்டி கடையுள் சென்று குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து, மெல்லிய நடையில் உள் நுழைந்தேன்... அவள் அதற்குள் உடுத்தி அப்பெண் காவலருடன் பேசிக் கொண்டிருந்தாள்..

தூரத்தில் இருந்தபடி, பாட்டிலை காட்டினேன்.. அவள் ஓடி வந்து அதை. நன்றியோடு பெற்று கொண்டாள்.

காவல் நிலையம். மரியாதையாய் என்னை ஒரு அறையில் இருக்க செய்து விட்டு அந்த பெண்ணை அழைத்து சென்று தனியாய் விசாரித்து கொண்டு இருந்தார்கள்

காவல் நிலையம் ஒரு மாதிரியான இடம். சட்டம் மீறுபவர்களும், அதனால் பாதிக்க பட்டவரும் அதை கண் காணிப்பவர்களும் உள்ள இடம். சராசரி மனித மென்மை அங்கே தொலைந்து போய்  (பொய்) இருக்கும்.

பார்வையிலே ஒரு சந்தேகம் இருக்கும். காற்றிலே ஒரு வன்முறை தூக்கலாய் இருக்கும். மென்மை மனம் கொண்டவர்கள் அங்கே அசௌகரியமாக இருப்பார்கள். நானும் அங்கனமே.


சீக்கிரம் முடித்து விட்டு போனால் தேவலை என்பதாய் அமர்ந்து இருந்தேன். தனியாய் அமர்ந்து இருந்த அறையில் புயல் போலே ஒரு பெண் காவலர் வந்தார்.

"
சரியாக எங்கே அந்த பெண்ணை பார்த்திர்கள்" ... நான் விளக்கமாய் அந்த இடத்தை சொன்னேன். சரி என்று சொல்லி விட்டு வேகமாய் நகர, அவசரமாய் அவரை வழி மறித்து கேட்டேன். "நான் செல்லலாமா" மறுத்து சொன்னார் "இது பெரிய பிரச்சினை, நீங்கள் அமருங்கள்"

லேசான பயம். தேவை இல்லாமல் ஆழம் தெரியாமல் கால் விட்டேனோ. என்னவெல்லாம் நடக்குமோ என்று பலவீனமான ஒரு சிந்தனை. சராசரி சிந்தனை என்னை அப்பிப் பிடித்தது.

தலை சிலுப்பி என்னை நானே கடிந்து கொண்டேன். என்ன தவறு செய்தாய். ஒன்றும் இல்லையே. பின்னே என்ன.... என்ன ஆகி விடும். எது ஆனாலும் பரவாயில்லை. இறுதி வரை நின்று பார்த்து விடு. சுரீர் என்று அந்த சிந்தனை என்னை சமப் படுத்தியது. அமைதி ஆனேன்.  போராடும் குணம் என்னுள் தெரிந்தது… அப்போது…. என்னை எனக்கு பிடித்தது.

நேரங்கள் கடக்க ஒரு உயர் காவல் அதிகாரி வந்தார். "மன்னிக்கவும் நேரம் ஆகி விட்டது, உங்களை காக்க வைத்து விட்டோம், அவசர கதியில் அந்த சிலரை பிடிக்க சில ஏற்பாடுகள் செய்தோம் அதனாலையே இந்த தாமதம் என்றார்" உங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியுமா.... நான் பதில் ஏதுவும் சொல்லாமல்.. தலை அசைத்து...  தெரியாது என்பதாய் சொன்னேன் .

அமர்ந்து விவரித்தார்… இப்பெண் துபாய் அல்ல… வெளியூர்….. ஆண் நண்பர்களோடு…. நேற்று மாலை இரவு விடுதி ஒன்றில் இந்த பெண் உற்சாக பானம் அருந்தி இருக்கிறார்.

பின்னர் வண்டியில் அழைத்து செல்வதாய் சொன்ன சிலரோடு சென்ற போது மயக்க மருந்து உபோயோகித்து வன்முறையில் ஈடு பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணிற்கு அவர்கள் யார் என்றோ, அந்த இடம் எது வென்றோ தெரியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பித்து வந்திருக்கிறாள்….

நல்ல உள்ளம் கொண்ட உங்களின் சமயோகித உதவியை நன்றி கூறுகிறார். இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம், தங்கள் உதவிக்கு நன்றி என்று அழுத்தமாய் கை கொடுத்தார். என் தொலைபேசி எண்ணையோ, விலாசம் என எதுவும் கேட்காமல்...

’CELL எண்ணை; வாங்காமல்….. ’என்னை செல்..!!!!!!’  என சொன்னது... ஆறுதலாய் இருந்தது..

வெளியே வந்து... வெளிக் காற்றை சுவாசித்தபோது... இலகுவானது.. ஏதோ ஒரு பெரிய பாரம் இறங்கியது போல.. என் பயங்கள்/ சந்தேகங்கள் எனை விட்டு நழுவி இருந்தது.

ம்... அந்தப் பெண் பாதுகாப்பாய் இருக்கிறாள்… இனி என்ன செய்வாள்… என்ன முடிவெடுப்பாள்.. அவள் குடும்பம் என்ன செய்யும்… என்ன சொல்லும்…

தெரியாது…

சின்னப்பெண்... தன்னையும் உலகையும் புரிந்து கொள்ளும் பக்குவம் பெறவில்லை… வாழ்க்கை அனுபவமோ இல்லை.

இன்பம் தேடும் வயது இது என்று புரிகிறது.

இன்பம் தேடுதல் இயல்பும் நியாமும் என்றாலும்..... எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய அவசியம் பெண் குழந்தைகளுக்கு உண்டு. ஒரு பெண்ணை பெற்ற தகப்பன் என்ற சிந்தனை தந்த அறிவுரையோடு மெல்ல காவல் நிலையம் விட்டு வெளி வந்தேன்.

இனி அவளைப் பார்ப்பேனா என்பது தெரியாது…..

என் மகளாய்த் தோன்றிய அப்பெண்ணை… மனதால் ஆசிர்வதித்தேன்…. அவளிடம் பேசினேன்….

இந்த சம்பவத்தில் இருந்து பாடம் படி… இதை மற….

வாழ்க்கை மேல் அவ நம்பிக்கை கொள்ளாதே… வாழ்வு உன்னதமானது தான்.

மனிதர்களிடம் கவனமாயிரு…. உன்னைச் சிதைக்கும் மிருகங்களோடு… கனிவும் கருணையும் கொண்ட மனிதர்களும் இப்புவியில் உண்டு…

வண்டி ஓடத் துவங்கியது... ஒரு மாறுதலுக்காய், ஏசியை அணைத்து விட்டு, சன்னலை மெதுவாய் திறந்தேன்... காற்று சுழன்று அடித்தது