பக்கங்கள்

96 - (திரை விமர்சனம்)

“நேத்து தியேட்டர்ல ’96’ சினிமா பாத்தேன்…”
“படம் எப்படி…?”
“நல்லாயிருக்கு…!”
“ஓ..!! அப்படியா.. நல்ல படமா…”
“இல்ல.. நல்ல படமில்ல…!”

“என்னது..!!! நல்ல படமில்லையா..? நல்லாயிருக்குன்னு இப்ப சொன்ன…”

“ஆமா.. நல்லா எடுத்துருக்காங்க… ஆனா நல்ல படம் இல்ல…”
நே!...

“அற்புதமான டேக்கிங்.. அசத்தலான கேமரா… அடி தூள் நடிப்பு… அமர்க்களமான டைரக்‌ஷன்… செம எண்டர்டெயினர்.. ஆனா.. படம் நல்ல படமில்ல…”
“யோவ்.. இவ்வளவும் இருந்தா அது நல்ல படம்யா…”

“ம்…… நல்ல படமில்ல…. எப்படிச் சொல்றது….!!!! சரி, ஒரு கேள்வி… நீ படம் பார்த்துட்டல்ல…. இந்த 96 படத்துக்கு இரண்டாம் பாகம் எடுத்தா எப்படி இருக்கும்.. கொஞ்சம் யோசி…. ம்.. ஜானு சிங்கப்பூர் ஏர்போர்ட்ல இறங்கிறா.. அங்க அவளை வரவேற்க புருஷனும்… புள்ளையும் நிக்கிறாங்க.. அங்க தொடங்குங்களேன்.. படத்த… பப்பரப்பான்னு பல்லு இளிக்கும்…

இதுவரைக்கும் குழப்பமில்லாம போன ஒரு குடும்பத்துல அனாவசியமான குழப்பங்கள்.. இல்லியா.. அது போக, இந்த ஜானு இனிம இயல்பா இருக்க முடியுமான்னு நாமளே கேட்டுக்க வேண்டியது தான்.

தோழமையே… இந்தப் படம் இன்னிக்கு செம ஹிட்டு…… படத்த பார்த்துட்டு வந்த என்னோட காண்டக்ட் ஒருத்தர் சொன்னாரு.. கிளைமாக்ஸ்ல ஏர்போர்ட் சீன்ல.. கலக்கி எடுத்துட்டாங்க… ஐய்யோ.. அந்த புள்ள… ஜானு….  திரும்பி வந்துறாதான்னு… முழு தியேட்டருமே.. ஏங்குது.. அவ ப்ளேன்ல போனதும் மொத்த தியேட்டருமே அழுதுன்னாரு…

அடப் பாவிங்களா.. என்னது தியேட்டரே அழுவுதா….???? தினம் தினம்… நியூஸ் பேப்பர்ல வாசிக்கிறோமே… கள்ளக் காதலன்… கட்டின புருஷன கல்ல தூக்கிப் போட்டு கொண்ணுட்டான்னு… %#@#$%^^@!...... ஏர்போர்ட்ல ஏறாம அந்தப் புள்ள திரும்பி வந்தா… அந்தக் கதைடா இது…

தமிழ் மொழிக்குன்னு.. தமிழ் இனத்துக்குன்னு ஒரு பண்பாடு இருக்குடா…. தமிழ்ல சொல்லுவாங்களே… ஒரு வார்த்தை… நூத்துல ஒரு வார்த்தை…
ஆண்மை என்றால் என்ன என்பதற்கான விளக்கம் அதுல இருக்குடா…..  

ஆண்மை… !!!!

ஆண் என்பவன் எப்படி இருக்கணும்ன்னு… ?????

‘பிறன் மனை நோக்கா பேராண்மை’ …என்ற உயர்ந்த தத்துவம் சொன்ன கலாச்சாரம்டா… எங்கடா போச்சு உங்க புத்தி… ஏண்டா… நாகரீகம்ங்கிற பேரில.. நருவீசுங்கிற பேரில.. ஓழுக்கக் கேட்டையும்… ஓழுங்கினத்துக்கும் ஓசாரம் பாடுறீக…

நல்லா கேட்டுக்கோங்க…

காதலுறுவதும்.. காமுறுவதும்… இயல்பு.. அதிலும் குறிப்பாய் இளமையில் இளகுவது… இயல்போ இயல்பு…. மனித இயல்பு… ஆண் பெண் எனும் பாகுபாடு அதில் இல்லை. அதில் தவறும் இல்லை.. குறிப்பாய் பள்ளிப் பருவத்தில் வருவது… ஒரு எதிர் பாலின ஈர்ப்பு…. இது பக்குவக்கப்பட்ட காதலா… !!!!! ??????

காதல் என்னும் வார்த்தைக்கும் வாழ்கைக்கும் விளக்கமே அறியாத வயதில்.. வெறும்..உணர்வுகளினால் உந்தப்பட்ட… ஒரு மன மகிழ்வின் உச்சம். அவ்வளவு தான்... 

காதலை…..,!!! மேலே நாம் சொன்ன காதலை… இளமையில் கொண்டிருந்தால்... அறியாமல் தெரியாமல் அது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்தால்...  என்று அது நிறைவேறாது என ஆகிறதோ.. 

அப்போது.. அக்கணமே.. அதை விட்டு விலக வேண்டும். 

மனித வாழ்வில் பெண், காதல், இன்பம் என்பவை ஒரு அங்கம் தானே அன்றி.. அது மட்டுமே வாழ்க்கை அல்ல… 

உலகம் என்பதே ஆண்/ பெண் என்பதாகவும், அக்காதல் என்பதாகவும் சித்தரிப்பது அரைவேக்காட்டுத்தனம்.

திருமணம் எனும் பந்தத்தில் நம்பிக்கை கொண்டு, தாலி கட்டியவுடன்… பிறன் மனை நோக்கா பேராண்மையுடன்… வாழ வேண்டும்… அதை விடுத்து… பள்ளி நாட்களில் அப்பெண்ணிடம் இருந்து திருடிய… அவள் உடையை.. வருஷங்களாக பெட்டியில் வைத்து.. அதை தடவித் தடவிப் பார்ப்பது.. மன நோய்…

இப்படம்.. அப்படி ஒரு மன சிக்கலையும்… உறவின் சிக்கலையும்… சமூக சிக்கலையும்… நட்சத்திர உணவு விடுதியின் தரத்தில் பரிமாறுகிறது..

கழுதை மூத்திரத்தை.. கப்புல ஊத்தி கொடுத்தா.. அதை மொடக்கு மொடக்குன்னு குடிச்சுட்டு வர்ற.. அப்புராணி குரூப்புடா… நம்மாளுங்க….
அப்பாவி சமூகம்டா.. படுபாவிகளா…
இங்க உள்ள நிறைய பேருக்கு இறங்கிறதுக்கு முன்னால… அது குழியா.. சுழியான்னு தெரியாம.. கால உட்டுப்புட்டு.. அப்புறமா… குத்துதே.. குடையுதேன்னு கூப்பாடு போடுற கூட்டம்டா….

திரைப்படங்கள் வர்ற மாதிரியே… ஹேர் ஸ்டைல் வச்சுக்கிறேன்.. அதே மாதிரி ட்ரஸ் போட்டுக்கிறேன்…. அதில வர்ற மாதிரியே பேஸ்ரேன்… என அலையுற… ஒரு குரூப்பு இருக்கேடா…

கடந்த காலம் என்பது எப்போதுமே.. எந்த வடிவிலுமே... ஒரு இனிமை தரும்.. சுகம் தரும்… முப்பது வருசத்துக்கு முன்னால … எனும் எதுவுமே… சுகம் தான்…

பத்து வயசில சாப்பிட்ட பரங்கிக்காய் கூட பவுசு தான்…

இந்த இதம்.. சுகம் … பெண்ணின் நினைவு மட்டும் தான்.. அவளின் காதல் மட்டும் தான் எனும் தப்பான அனுமானங்கள் ஆபத்தானவை…

பெண், ஆண் இருவரும் இரு இயல்புகளில் இங்கு இயங்குகிறார்கள். அன்பு வயப்படுவதும், அன்பால் இணைவதும் அற்புதம். இணைந்த காதலுடன் வாழ்வை எதிர் நோக்குவது பெருமை.

பெண் அலங்காரமானவள்.. ஆனால் அற்புதமானவளோ அல்லது தேவதையோ அல்ல… அவளும் நம் போல் சக மனுஷி… அவளை உயர்த்தவும் வேண்டாம்… தாழ்த்தவும் வேண்டாம்… பிரிதொரு உயிரை… நேசிக்கவும் விரும்பவும்… உதவவும்.. மதிக்கவும் இருக்கும் மன திடமே ஆரோக்கியமானது. பெண்ணுக்கும் இது பொருந்தும்.

ஒரு ஆடவன் தன்னை விரும்புகிறான் ஆராதிக்கிறான் என்றால் உடனே அதில் ஆணவம் கொள்வதோ, தன் இருப்பை புரியாது இயங்குவதோ அவளே அவள் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்வதும் ஆபத்தானவை.

”புள்ளி வைத்து பரவும் கோடுகளே கோலங்கள்….!
சமூக விதி மீறல்கள் – உறவுச் சிக்கல்கள் அலங்கோலங்களே….!!”

மறுபடியும் சொல்றேன்… அமைதியான, கவித்துவமான… காட்சி அமைப்புக்கள்.. ஆழமான உணர்வுகளை அம்சமாக சொல்லும் திறன்.. எல்லாம் செமயா இருக்குது… மொத்த மக்களையும் கட்டிப் போடுற மேஜிக் எல்லாம்.. வியப்பா இருக்குது… ஆனா…. சொல்ற கருத்துல கவனம் வையுங்க…

திரைப்படங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.. சினிமாவ ஆக்கபூர்வ ஆயுதமாக்குங்கள்…
நாம பாடுற பாட்டும்… ஆடுற கூத்தும்…
படிப்பினை தந்தாகணும்…
நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்…
படம் எடுக்கும் போது பாத்து எடுங்க…

ரேடியோவில் எனது நாடகம்

தீபாவளி ஸ்பெஷல்… சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் எனது நாடகம் ஒலிபரப்பாகிறது.

நாடகம் எதைப் பற்றி…


இந்த நாடகம் எழுத என்னை தூண்டியது இந்த தகவல்தான்… ஆம், எம்.ஜி.யார். காலத்து தகவல்கள்….
  • 1.   தன் வீடு – இயற்கையாக இருக்க வேண்டும். சுற்றி தோட்டம் அமைத்து, மிகப்பெரியதாக இருக்க வேண்டும். நகரத்தின் வாசனை இல்லாமல், அழகிய சூழ் நிலையில் தூரமாய் இருந்தாலும் பரவாயில்லை…. ஊருக்கு வெளியே பெரியதாக இருக்க வேண்டும் என அவர் தேர்ந்தெடுத்த இடம் … ராமபுரம். அன்றைய சென்னையில் சைதாப்பேட்டை தான் சிட்டி…
  • 2.   சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் – அழிந்து போன மூர் மார்கெட்டும் இடையில், சென்னை மிருகக் காட்சி சாலை இருந்தது. நகரின் மத்தியில் இருந்ததால், மாசு பட்ட சூழலில் மிருகங்கள் இறக்க நேரிட்டது. எனவே, எம்ஜியார் ஊருக்கு வெளியே வண்டலூரில் மிருகக் காட்சி சாலை அமைக்க திட்டமிட்டார்.

என்னது… மிருகக் காட்சி சாலையா…. ஊருக்கு வெளியேயா….????? அதுவும் 30 கி.மி. அந்தப்பக்கமா… ….????? காட்டுக்குள்ள வைச்சா பொது மக்கள் எப்படிப் போவாங்க என விமர்சனங்கள் எழுந்தன. அவர் தீர்மானமாய் வண்டலூரில் அந்த குன்றுகள் சூழ்ந்த காட்டையே தேர்ந்தெடுத்து மிருகக் காட்சி சாலை அமைத்தார்…

இன்று…

ஒரு ஐம்பது வருடத்தில்.. என்ன ஆச்சு.. ராமபுரம் சிட்டி செண்டர்.. வண்டலூரில் பேருந்து நிலையம் அமைக்க திட்டம். இப்படி, நகரம் விரிந்து பரந்து விட்டது. நம் தேவைகள் அப்படி.
அன்றைய வீடுகளைப் பாருங்களேன்.. குறைந்தது ஒரு ஒன்றரை கிரவுண்டு.. சுற்றி இடம். மரங்கள் செடிகள், கிணறுகள். ஆனால் இன்று..
அடுக்கு மாடிக் கட்டிடங்கள் அல்லது தனி மனையா.. அரை கிரவுண்டில் வீடு என சுருக்கிக் கொண்டாலும் கூட நம் தேவைகள் நிறைவு பெறவில்லை..

சரி, இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் என்னவாகும்… ????

100 வருடத்தில்… ????

நம் தேவைகளும் பெருகுமல்லவா .மேலும் இது வெறும் நிலம் குறித்தது மட்டுமல்ல. இன்னும் நம் மனிதர்களுக்கு அவசியமான நீர், காற்று, மண் வளங்கள், போக்குவரத்து.. இப்படி எத்தனை எத்தனையோ…

50 வருடத்துக்கு முன் அமைத்த நம் திட்டங்களும் தேவைகளும் இன்று புதிய பரிமாணத்தில் இருப்பது உண்மை.. நிதர்சனம். நாம் எதிர்பார்ப்பதை விட காலங்கள் வேகமாக சுழலுகின்றன..

இன்று பாருங்களேன்.. காற்றின் மாசு அளவை சொல்லி.. இதோ வெடி வெடிக்க நீதிமன்றம்  - நேரம் குறித்து நிர்பந்திக்கிறது…

இயற்கை சூழலின் இன்றைய நிலையை அடிப்படையாக்கி அறிவியல் புனைவு எனும் விதத்தில் - கற்பனைத் தேரில் ஏறி,  பொழுதுபோக்கு அதிரடி நாடகம் எழுதியிருக்கிறேன். 

அந்த ஒலிச்சந்தி கையில் கிடைத்ததும், பதிவேற்றுகிறேன்.


சென்னையில் வாய்ப்பு இருப்பவர்கள்- நேரலையில் கேட்டு மகிழலாம்.. நன்றி வணக்கம்.