பக்கங்கள்

படம், பட்டாசு, பட்சணம்.... என பட்டய கிளப்புவோம் !!!

தீபாவளி…. பேர சொன்னதுமே சும்மா அதிருதில்ல…. யெஸ். மனசும் உணர்வும் இணைந்து ஒரு உற்சாக அனுபவம் பெருகிறது. இந்து, சமணம், சீக்கியம் என பல பிரிவுகளாலும், தீபங்களின் திருவிழா என எல்லா இந்தியராலும் உற்சாகமாக கொண்டாடப்படும் திருவிழா.

இந்த நல்ல நாளில் நாமனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். படம், பட்டாசு, பட்சணம் என பட்டய கிளப்புவோம். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


குடும்பமாய் இணைந்திருந்து, நல் உறவு ஏற்படுத்தி, அக்கம் பக்கம் சூழ அன்பாய் இந்த விழாவை கொண்டாடுவோம். நமக்குண்டான பிரிவுகளில் இருந்து விலகி, ஒற்றுமை தழைக்க கொண்டாட்டத்தில் கலந்திடுவோம்.

இந்த தீபாவளியை மாற்றம் தரும் திரு நாளாய் கொண்டாட வேண்டுமென்றால் தொடர்ந்து சிந்திக்கலாம், இல்லையா பட்டிமன்றமும், பந்தியும் தயாராக உள்ளது, அங்கே போயி விடுவோம் என முடிவெடுக்கலாம்,

நரகாசுர வெற்றி

இதுதானே சொல்லப்படும் கதை.

பூமித் தாய்க்கு பிறந்த நரகன், தன் வலிமையால் இந்த உலகை வென்றான், உலகம் அனைத்தையும் தன் கீழ் கொணர்ந்தான். தன் பேராசையால் வானுலகையும் தேவர்களையும் கூட வெல்ல நினைத்தான். அப்போதுதான் அவனை அழிக்க வேண்டிய கட்டாயம் வந்தது.

கிருஷ்ணரும் சத்ய பாமாவும் இணைந்து நரகாசுரனை எதிர் கொண்டனர். ஆவேசமாய் நரகாசுரன் போர் புரிந்தாலும், நம்ம கிருஷ்…!!!!, அன்புடனும் அனாயசத்துடனும் போர் புரிந்தார். கிளைமாக்சாக சுதர்சன சக்ரா எனும் ஆயுதத்தில் நரகாசுரன் வீழ்த்தப்பட்டான்.

காந்தி, மகாபாரதம் படித்து விட்டு சொல்வார். இது ஏதோ கதையாகவோ, புராணமாகவோ மட்டும் பார்க்க என்னால் முடியவில்லை. 100 சகோதரர்களை 5 ஆட்கள் கொல்வார்கள் என்பதெல்லாம் இதிகாசம் அல்ல,  நம்மைப் பற்றி நமக்கு விளக்க ஏற்படுத்தப்பட்ட விளக்க சாரங்கள் (Metaphors) மட்டுமே என்பார்.

அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு மேலே கூறியுள்ள கதையை வாசித்தால், நரகாசுரன் நமக்குள் தான், கிருஷ்ணரும் நமக்குள் தான். போரும் நமக்குள் தான், வெற்றியும் தீபாவளியும் கூட நமக்குள் தான்.

நான் தான் வலியவன், என்னால் இந்த உலகை  வெல்ல முடியும்…. என நினைத்து அதில் முயன்று வெற்றியும் பெற்றான் நரகன். உலகம் அவன் வசம் ஆனது. ஆனால் இறைவனையே வெல்ல முடியும் என நினைத்தான்…. வெற்றி பெற முடியாமல் அவன் தோற்றுப்போனான்….

உலகை வெல்லும் நம் அனைவரின் பயணத்திலும் இந்த அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நரகனாகி நாமும் நரகனாக வாழ வேண்டியிருக்கலாம்.

நரகனின் தொடக்கம் உலகை வெல்லும் வலுவில் ஒரு பயணம், ஒரு மூர்க்கமான பயணம்… உலகை வென்றதும், கைக்கு கீழே உலகம் வந்ததும், அதன் பின் வேறு ஒரு தேடல் தொடங்கும். இறை தேடலும் அதையும் வெல்லுவேன் என முயலுவதும் அடுத்த படி… இறைத்தேடல் தொடங்குவது இயல்பு என்றாலும். அந்த தேடலிலும் பலம் சேர்க்கவும், பரிமளிக்கவும் முயல்வது அன்றி, இறையின் இயல்பை பின்னுக்கு தள்ளிவிட்டு மனிதர்களை விட நான் மேலானவன் எனக் காட்ட சில பளபளப்புக்களையே விரும்புவோம்…  

அந்த பலத்தில் மயங்காதும், வெற்றி பெற வேண்டும் என எண்ணாமலும் எளிமையை ஏற்றுக் கொண்டு பணிவுடன் இருக்க வேண்டிய அவசியம் நமக்கு நரகாசுரன் கதை வழியாக சொல்லப்படுகிறது.

இன்று சில நிமிடங்கள் இது குறித்து யோசிக்கலாம். சில எளிய செயல் திட்டம் தீட்டலாம். ஒரு மாற்றம் தரும்…., முடிவில்லா மகிழ்வு தரும்….. ஒரு சில போர்கள் செய்யலாம்.
1.   
  1. உலகையே ஆழ்வேன் என சொல்லும் நரகனை நமக்குள் தேடுவோம்.
  2. 2.   உலகை வென்ற பின், வானுலகை கூட விட்டுவைக்க மாட்டேன் என எகிறும் நரகனையும் நமக்குள் தேடுவோம்.
  3. 3.   இந்த நரகனை அழிக்க, எந்த கிருஷ்ணரும், எந்த சத்ய பாமாவும் நமக்குள் இணைய வேண்டும் என தேடுவோம்
  4. 4.   சுதர்சன சக்ரா எது என இனம் கண்டு கொள்வோம்….
  5. 5.   உக்கிரமான அந்த போர் – தீபாவளி சண்டை….  எது என புரிவோம்
  6. 6.   போரின் முடிவில், வெற்றியின் கொடி….. வரிசையாய் பூத்து நிற்கும் தீபங்களை நாடுவோம்.
இந்த வருட தீபாவளி நம் எல்லோருக்கும் ஆசிர்வாதமான ஆச்சரியமான அற்புதங்கள் நிகழ வாழ்த்துக்கள். 

சிவம் மைனஸ் 21 கிராம் = சவம் (சிறுகதை )



அன்பு வாசக தோழமைக்கு வணக்கம்… நாம் அறிந்திருக்க வேண்டிய சில தகவல்களை கதையின் வடிவமாய் இங்கு சமர்ப்பிக்கிறேன். அன்புடன் உங்கள் கருத்து அறியவும் ஆவலாக உள்ளேன்… 

(பகுதி – 1)


யெஸ்…. இன்று அவன் நிச்சயம் இறந்து விடுவான்.

தன் மெல்லிய குரலில் ஆழப்பார்வையுடன் அவர் சன்னமாக சொன்னார். சொன்னவர் மீசையிலும் தாடியிலும் தன் முகத்தை தொலைத்து இருந்தார். அந்த மருத்துவ மனையின் சுவர்களுக்கு காதுகள் இருந்தால் கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை.  நகரத்தின் ஒதுக்குப்புறமான அந்த இன்ஸ்டிடுயூட்டின் மருத்துவமனை… அமைதியான இருளில், அங்கங்கு ஓளிரும் செயற்கை குழல் விளக்கை சட்டை செய்யாமல் கருப்பாகவே இருந்தது.

டாக்டர். தூகல், செய்தி கேட்டு நிமிர்ந்தார். கேட்ட செய்தியை மனதில் வாங்கி யோசிக்க துவங்கினார், உடல் பரபரத்தது… செய்தி சொன்னவரை அணுகி, இன்னும் நெருக்கமாய் அமர்ந்து கொண்டு, ஷூவர்…. கேள்வியில் சம்பிரதாயமே இருந்தது. மனம் விரைவாக செய்ய வேண்டிய செயல்களை பற்றியே யோசித்தது.

ஆம். பல்ஸ் குறைந்து விட்டது. ** விழித்திரை விரிக்க துவங்கி விட்டது. இன்னும் சில மணிகளில் இருக்கலாம். நிச்சயமாய் சொல்ல முடியாதே,,,, ஆனாலும்….  ஒன்று மட்டும் நிச்சயம் இன்று அவன் இறந்து விடுவான். தூகல் தன் கை கடிகாரத்தை பார்த்தார். இரவு மணி 11.30 என காட்டியது. குளிர் காற்று ஒன்று சன்னலின் இடையில் மறைக்கப்பட்ட திரைச்சீலையை தள்ளி விட்டு டாக்டர் தூகலின் முகத்தை வருடியது.

அசையக் கூடாது ஒரு நிமிடம், ஒரு கணம் அசையக் கூடாது. படுக்கையின் அருகிலேயே இருந்து கண் கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேளை மரணம் தாமதித்தால், ஐந்தாறு மணி நேரங்கள் ஆகி விட்டால், விடிந்து விட்டால் என்ன செய்வது….., என் விழிப்புணர்வுக்கு 24 மணி நேரம் இல்லையே. போன முறை நடந்த தவறு இம்முறை நடக்க கூடாது. என்ன செய்யலாம்.

கண் மூடி, சுவாசத்தை கவனித்தார். வேகம்…. சின்ன சின்ன இடைவெளியில் மூச்சு… பிரிக்குவென்ஸி கம்மி. இதயம் துடிப்பது உயர்ந்த சத்தத்தில் கேட்டது. ரத்தம் துரித கதியில் ஓடிக் கொண்டிருக்கிறது, மனம் உணர்வுகளின் பாதையில் அல்லவா தறி கெட்டு ஓடுகிறது. அறிவின் பாதையில் சென்றால்தானே நல்லது. உணர்ச்சியின் பாஷையில் அல்லவா, எமோஷனலாக அல்லவா இப்போது சிந்தித்து கொண்டிருக்கும்… இப்போது எடுக்கும் முடிவு பகுத்தறிவாகாதே… உணர்வின் வெளிப்பாடல்லவா ஆகும்…..

ஏன் குழப்புகிறாய், பட்சி என்ன சொல்கிறது. உள்ளுணர்வு என்ன சொல்கிறது… அதைக் கேள். டாக்டர் தூகல் கண்கள் மேல் நோக்கி செருக, உடல் கொஞ்சம் தன் வசம் இழக்க, தன்னுள் ஆழ்ந்தார்…. சில நொடிகள் கடந்தது… அவசியமில்லை, குழம்ப தேவையில்லை. குழப்பமில்லை, முழித்திருக்கலாம். மரணம் இன்னும் சில மணிகளில் நடக்கும் ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லியது, தூகல் தன் இருக்கை விட்டு எழுந்தார், அந்த வார்டின் சமீபத்தில் நடையும் ஓட்டமுமாய் வந்தார். அவரது ஐந்து அசிஸ்டெண்டுகளும் முகமன் கூற… அமைதியாய் அவர்களை பார்த்தார்….. ஆழமாய் அவர்களை ஊடுருவி பார்த்தார். அந்த அர்த்தப் பார்வையின் அமைதி அவர்களுக்கு புரிந்தது.

அந்த அமைதியின் அர்த்தம் அவர்களுக்கு தெரிந்தது, மற்றும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது. அவர்களும் அமைதியானார்கள். எதிர் கேள்விகள் கேட்காமல் தத்தம் இருக்கைக்கு நகர்ந்தார்கள். அவர்கள் செய்ய வேண்டிய பணியின் அவசியமும் அவசரமும் புரிந்தது. அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தங்கள் வேலைகளில் இன்னும் சிரத்தையாய் ஆழமாய் துவங்கினார்கள்.
தூகல் படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். படுக்கையில் இருந்த நோயாளியை பார்த்தார். கண்கள் பாதி திறந்தும், மூடியும் ஒரு தூக்க நிலையில் போர்வை புதைப்புக்குள் இருக்கும் அவனை பார்த்தார். திறந்திருந்த பாதிக் கண்களில் ஜீவன் குறைந்து இருந்தது. பளிங்கு போல் பளபளப்பாகவும் நீர் கோர்த்தும் இருந்தது.

இவன் இறக்க போகிறான், தன் வாழ்வை முடித்து இந்த உலகை விட்டு செல்ல இருக்கிறான். இன்னும் சில மணி நேரத்தில் அது நடக்கும். அவன் மட்டும் தான் சாகப் போகிறான். அவனுக்கு, அவனது வாழ்க்கையில் பெரிய மாறுதல், ஆனால் உலகம் மாறப் போவதில்லை. சூரியன் மாறப்போவதில்லை, இங்குள்ள இயக்கங்கள் மாறப் போவதில்லை. நான் நாளையும் உயிரோடு இருப்பேன்…. இவன் மட்டும் இங்கு இருக்க மாட்டான்.

இல்லை மரணம் கொடியது… மனித வாழ்க்கையில் அவசியமற்றது. எப்படியாவது வெல்லப்பட வேண்டியது. முடியுமா… முடியும்… எப்பாடு பட்டாவது இதை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

இன்றைய என் ஆராய்ச்சி அதன் முதல் படி.

டொம்….. பலத்த ஓசையுடன் இயந்திரம் சத்தமிட்டது…. அளவுகோலின் பக்கத்தில் இருந்த உதவியாளன் ஓடி வந்து ‘டாக்டர் எடை….. ஒரு அவுன்ஸ் குறைந்துள்ளது’ டாக்டர் தூகல் அர்த்தப் பார்வையுடன் … ம்… நாம் எதிர்பார்த்தது தான் உணவுக் குழாய், மூச்சுக் குழாயிலுள்ள நீர்ப்பதம் கடைசி நேரத்தில் ஆவியாகி விடும். அதனால் தான் இந்த எடை குறைவு… இன்னும் தீவிரமாய் கவனியுங்கள்…

அவன் நகர தூகல் தன் பார்வையை படுக்கையை நோக்கி செலுத்தினார். படுக்கை விரிப்பு அசையவில்லை….. படுத்திருந்த நோயாளியின் காதுகள் அந்த அறையின் ஒலியை உள் வாங்கி கொண்டு அமைதியாய் இருந்தது…

                                                                             (தொடரும்….)

·        ****  நம் கண்ணின் நடுவில் கருப்பு மணி – கண்மணி…. வெளிச்சத்துக்கு ஏற்ப விரிந்தும் சுருங்கியும் பார்வையை நமக்கு வழங்குவது. இது தன்னிச்சையாக மூளையின் செயல்பாட்டில் இல்லாமல் இயங்குவது. மரணம் சம்பவிக்கும் அந்த கடைசி நேரங்களில், இது விரிந்தும் நிலைபெற்றும் இருக்கும். அதனால் தான் கண்ணில் டார்ச் அடித்து பார்த்து மரணத்தை டாக்டர் கன்பர்ம் செய்வார்.

(Bliss Please ..... )…ப்ளிஸ் பிளீஸ்….

முன்னிரவு சுமார் 7 மணி இருக்கலாம். ரிலாக்ஸ்டாக பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் எதிரில் பார்த்த காட்சியில் லேசாய் அதிர்ந்தேன், அட்ரெனிலின் கொஞ்சம் அதிகப்படியாய் சுரக்க, இரத்தம் சற்று டாப் கியரில் ஓடியது, உடல் பரபரத்தது. எச்சரிக்கை உடலெங்கும் பரவ, வண்டியை திருப்பி விடலாமா என யோசித்தேன்.

பார்த்தது இதைத்தான். சென்னை புற நகர் ஒதுக்குப் புறமான அந்த சாலையில் நிறைய மனித தலைகளும் கூட்டமும். கும்பல் கும்பலாய் ஆட்கள். சுமார் 200 பேர் இருக்கலாம். 

அடர்ந்த அமைதி அங்கு குடி கொண்டிருந்தது, சிறு சிறு குழுக்களாய் பிரிந்து குசு குசு குரலில் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்க வேண்டும், ஒருவேளை ஏதேனும் கலவரம்… தெரியவில்லை.

ஹூம், கூட்டம் பார்த்ததும் ஏன் இப்படி சிந்திக்கிறது… என்ன செய்வது, தினச் செய்திதாள்கள் புரட்டும் போது, நம்மை புரட்டி போடும் செய்திகள் தானே அதிகம். அவைகள் நமக்கு சொல்லும் சேதிகள் எல்லாம் அப்படி…. எங்கு பார்த்தாலும்… கலை…கள்ளை…. (சாரி, கொ என்பதையே முதல் எழுத்தாக கொள்ள வேண்டும்…. என்னவோ…. அதை சொல்ல விருப்பமில்லாததால்… க வோடு நிறுத்தி விட்டேன்)

என்ன இது, என்ன கூட்டம், என்னதான் நடக்கிறது என ஆரம்ப பார்வை பார்த்து கொண்டு இருக்கும் போதே, நான் ஓரளவு சூழலுக்குள் வந்து விட்டேன், திரும்பி போக இயலாத தூரத்தில் நான் வந்து விட்டேன். சரி விரைவாக கடந்து சென்று விடலாமோ எனவும் யோசிக்க… அப்படி செய்யவிடாமல் கியூரியாசிட்டி கிடுக்கிப் பிடி பிடித்து கிணிகிணிக்கிறது. அங்க என்னதான் நடக்குது என ஆர்வம், என்னை அங்கும் இங்கும் பார்வையை செலுத்த வைத்தது.

கூடியிருக்கும் மக்களின் முகங்களை பார்த்தேன், ஏறக்குறைய அனைவரின் முகங்களிலும் பரபரப்பு இல்லை, படபடப்பு இல்லை, ஒருவித அமைதி, மற்றும் ஒரு புன்னகை. அந்த புன்னகை எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. சரி எதுவும் அசம்பாவிதம் இல்லை, சந்தோசம்…. இருந்தாலும் என்னதான் நடக்கிறது. ஆர்வம், என்னை பிராண்டியது.

ஒரு தேனீர் கடையில் டீ குடிப்பதாய் சாக்கு காமித்து விட்டு, என்ன நடக்கிறது என வேவும் பார்க்கும் ஆசையில் பைக்கை ஓரம் கட்டினேன்.

அழுக்கு தேனீர் கடையில், சாக்குகளே திரைச்சீலைகள். ஓய்யாரமாய் ஒரு பாய்லர், அந்த தேனீர் கடையின் காஸ்ட்லியான இன்வெஸ்ட்மெண்ட்…. ஆணி புடுங்கிக் கொண்டதால் ஆடும் மர பெஞ்சுகளே நம் சிம்மாசனம். வியாபாரம் ஜரூராய் நடக்கிறது. கடையிலும் ஆரவாரம் இல்லை, அமைதிதான். அதிகம் பேச்சு இல்லை…. 

ஆழமாய் என்னருகில் தேனீர் கடையில் இருந்த ஆளை பார்க்கிறேன். மெலிந்த கருத்த சவரம் செய்யப்படாத முகம். எண்ணையை என் அருகில் கொண்டு வராதே என அடம் பிடித்த தலை. போடாத சட்டையில் தெரிந்த மார்பில் வெள்ளை ரோம புற்புதர். இடுப்பு வேட்டியை ஒரு தாயத்து இறுக்கிய அருணாக் கொடி இழுத்து பிடித்து இருந்தது.

கண்கள் மட்டும் பரபரத்து இருக்க, தலையை அடிக்கடி திருப்பி உயர்த்தி, ஒரு இருட்டு சந்தின் திசையில் பார்த்து கொண்டிருந்தார். என் பார்வையை சற்று திருப்பி அவரை விடுத்து மற்றவர்களை பார்க்க, அனைவரின் பார்வையும் அனேகமாய் அந்த இருட்டு சந்தின் மேலேயே இருக்கிறது.

சற்று நேரத்தில் ஆள் அரவம் தெரிந்தது. கால் சட்டை இன் செய்யப்படாத சட்டை போட்டு, ஒரு இளம் வயதினன் மெலிந்த தேகத்தில் விரைந்த நடையில் வந்தான். வந்தவன் நேரே என் அருகில் இருக்கும் மூத்தவர் இடம் வந்து சுற்றி முற்றும் பார்த்து விட்டு, சட்டை தூக்கி விட்டு, வயிறை ஒரு எக்கு எக்கி, பேண்ட்க்குள் இருந்து ஒரு பாட்டிலை வெளியில் எடுத்தான்.

அது கொல்கண்டா பிராந்தியின் ஒரு குவார்டர் பாட்டில். பெரிசின் முகம் மலர்ந்தது, மீசைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காவி ஏறிய பற்கள் விரிந்து காற்றோடு காரசாரமாய் பேசியது. படக்கென அந்த பாட்டிலை வாங்கி பெரிசு தன் வேட்டியை தூக்கி அதனுள் மறைத்து வைத்தார். வைத்த போது… கிளிங்…. பாட்டிலோடு பாட்டில் உரசும் சத்தம் கேட்டது… ஓஹோ.. பெரிசு இன்று பெரிய ஸ்டாக்கிஸ்ட் தான். அடடா….. மழைடா… அடமழைடா….

பாட்டிலை கொடுத்த இளையவன், மெதுவாய் நகர்ந்து ஒரு கும்பலோடு நின்று கொண்டான். அப்போது கவனிக்கும் போது அந்த கும்பலில் இருந்தவர்கள் அனைவரும்…. வெள்ளை வேட்டி கட்டி, அதே வெள்ளை நிற சட்டை போட்டு, கஞ்சி போட்ட உடுப்பில் மிடுக்காய் இருந்தனர். கறுத்து குண்டாய் ஆரவாரமாய் நின்றனர். நிற்கும் தோரணையிலேயே அவர்கள் அரசியலின் பிரிவை சார்ந்தவர் என்பது புரிந்தது.

ஒன்றும் ஒன்றும் மூன்று என என் மனம் கணக்கு கூட்டியது. உள்ளாட்சி தேர்தல், ஓட்டுக்கு நோட்டு போல, குளி….. சாரி…. குழி…..ஐய்யோ… சாரி….குலி….. ம்… அப்பப்பா…. குபி….. ஹூம்,,,, இல்ல…. குடி மக்களை குஷிப்படுத்தும் திருவிழா என்பது புரிந்தது. பாட்டில் வினியோகம் செய்யும் சடங்கு….. அப்பாடி பரவாயில்ல, பாதி கப் டீ தீரும் முன்னே மேட்டரு புரிஞ்சுருச்சு, இனி நிம்மதியா போகலாம் என பட்டதால் டீயின் சுவையில் நான் அமிழ்ந்தேன்….

அந்த சூழல் எனக்கு விசித்திரமாய் பட்டது. ஜன நாயகம் ஒரு போதையில் விலை போகிறதே என ஆற்றாமை ஒரு புறம். தினம் தினமா குடுப்பான், இப்படி ஆடிக்கும் அம்மாவாசைக்கும் கொடுக்கிறத பெரிசா ஏன் நினைக்கணும்…. என சில ஆற்றாமைகள் முட்டி மோதினாலும்….  அந்த அடித்தட்டு மக்களின் முகங்களும் சந்தோசங்களும் மனதில் மலரை விதைக்கிறது. அப்பா… என்ன ஒரு மகிழ்ச்சி, ஒரு வேளை எப்போதும் பட்டை சாராயம் அருந்துபவனை இந்த உசத்தி சரக்கு உசுப்பி விட்டதோ….

குடிப்பது என்பது ஒரு ‘ஒளித்து செய்யப் படவேண்டிய செயலாகவே’ இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது. அறிஞர் அண்ணா சொன்னது போல், குடிப்பதை பாவம் என்று கருதும் நாடு எங்கள் நாடு. குடித்தேன் என சொல்ல கூச்சப்படும் நாடு எங்கள் நாடு.

அப்படி ஒரு ஒளித்து செய்யப்பட வேண்டிய செயல் என பகுக்கப் பட்டதால் அதற்கு ஒரு கிசுகிசு போல் ஒரு மவுஸ் வந்து அந்த உணர்வுக்கு ஒரு டிப்ளோமேட்டிக் ஸ்டேடஸ் வந்து விட்டது. அழுக்கு தீரவும் களைப்பு தீரவும் குளிக்கிறோம்…. அதைப்பற்றி அகமகிழ்ந்து அக்கம் பக்கம் யாரும் பெருமை பேசுவதில்லையே……… இன்னிக்கு நான் மூணு ரவுண்டு சோப் போட்டேன்… இரண்டு தடவ ஷாம்பு போட்டு, ஜம்முன்னு ரிவர்ஸ்ல ஷேவ் பண்ணேன்… என யாரும் புளகாங்கிதம் அடைவதில்லையே..

அந்த சூழலை பார்க்கிறேன், வயது வித்தியாசம் இல்லாமல், பெரியவரும் இளவயதினரும்…. அங்கே மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அதிகம் பேசாமல், மனமும் கண்களும் பரபரத்து, மனம் வரப் போகும் போதையை எண்ணி இப்போதே மகிழ தொடங்கி விட்டது.
இந்த நிகழ்வு சில கேள்விகள் கேட்க தூண்டியது. எதற்காக குடிக்கிறார்கள்.

  1. 1.     உடல் சோர்வு, களைப்பு, உபாதை இதிலிருந்து தற்காலிகமாக விடைபெற
  2. 2.     மன அழுத்தம், கவலைகள் இதிலிருந்து தப்பித்து கொள்ள
  3. 3.     பரவச, பறக்கும் ஒரு நிலை அடைய
  4. 4.   பலத்துடன், சிந்தனை ஒருமைப்பட, இயல்பு தரிசிக்க…. சில அரிய செயலாற்ற

(போதை தலைக்கேறியதால் மேலே உள்ள நம்பரை (Font) பாருங்கள்... )
இவ்வளவு தானே…. இதற்காகத்தானே நம் மனித குலம் குடிக்கிறது, குடிக்க துடிக்கிறது. 
இத்தனைக்கும் தீ போன்ற தித்திப்பில்லாத ஒரு கசப்யின் சுவை, உள்ளுக்குள் இறங்கும் காட்டம், காலையில் எழுந்தால் வரும் ஹேங்க் ஓவர் என எத்தனை இடர்கள் இருந்தாலும், கிடைக்கும் மேற்கூரிய சில காரணங்களுக்காகத்தானே இந்த குடி… ஆங்…. புடி…..அடி….ஒரு ரவுண்ட்…..

சரி, இந்த நாலையும் பெற வேறு எளிய வழி இருக்கிறதா…. இல்லை…. எளிய வழி இல்லை, ஆனால் ஒரு வழி இருக்கிறது. தியானமும் யோகமும் இதை தரும் வல்லமை பெற்றது. போதையை விட ஆழமான நிலைக்கும் ஆரோக்கியமான பக்கவிளைவுகளையும் கொடுக்க கூடிய சக்தி கொண்டது.

என்ன ஒரு கஷ்டம்… குடிப்பதை போல் எளிதாய் இந்த நிலை அடைய முடியாது. கையில ஒரு கிளாச எடுத்தோமா….. நமக்கு தோதான ஒரு மிக்ஸிங் போட்டோமா…. மொடக் மொடக்குன்னு குடிச்சோமா,…. குடிச்ச சில நிமிசத்தில சிந்தனை மட்டுப்பட்டு, மூளை தயங்கி இயங்கி ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். பரவசம் படர்ந்து விடும், அழுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள் தூங்கி கொள்ள, மனம் துவண்டு விடும். உடல் கட்டுப்பாடுகள் தளர்த்தி இலகுவாகி விடும்.

இதே டண்டணக்காவ மெடிடேட் பண்ணி கொண்டு வர ரொம்ப கஷ்டம், யூனிவர்சலா எல்லோருக்கும் ஒர்க் அவுட் ஆகிற மாதி ஒரு பார்மூலாவும் மெடிடேஷன்ல இப்ப இல்ல…. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு மாதிரி. ஆண்டவா…. ஹட யோகா… மந்திர ஜெபா… ராஜ யோகா, கிரியா யோகா…. இப்படி பல ரூட்டு…

இன்னிக்கு தேதியில மெடிடேஷன் எப்படி இருக்குது. ஒண்ணுக்கு பாதி பேர் டவுட்டாவே இருக்காங்க. இல்ல இந்த தியானம்ங்கிறது ஏதாவது இருக்கா, அல்ல வெறும் பம்பாத்தா என ஆரம்ப கட்ட கேள்வியில் நிற்க வைத்தது ஆன்மீகத்தின் முதல் கோளாறு. பயங்கர அட்வென்ஜரசா இருக்கணும், அது மட்டுமில்லாம ஏதோ ஒரு பாதையில கத்துக்கிட்ட பயிற்சிகள மாசக் கணக்கா, வருசக் கணக்கா உடும்புப் பிடி பிடிச்சு செய்யணும். இப்படி பல சேலஞ்சஸ்.

எல்லோருக்கும் ஒத்து வரக்கூடிய எளிமையான அதே நேரம் கண்டிஷனா கம்பிளீட் ப்ளிஸ் (BLISS) வர ….. ஃப்ளீஸ் ஒரு வழி சொல்லுங்களேன்….

ஐய்யா… ஆசிரம அல்டாப்புக்களே…. ஆன்மீகம் விற்பவரே…. ஐயாம் சாரி…. ஆன்மீக விற்பன்னர்களே… காசு பணம் பின்னால போகாம, பொம்பள பின்னால போகாம….. சட்டுன்னு எளிமையா எல்லோருக்கும் தோதுப்படுகிற மாதிரி ரிலாக்ஸேஷனுக்கு ஒரு டெக்னிக்க கண்டுபிடிங்களேன்… உலகமே உங்கள கைய எடுத்து கும்பிடும்….

முடிக்கும் முன்…. 
படுக்காளி ஒரு டவுட்டு… இந்த பதிவில ஒரு இடத்தில… ‘ஒண்ணும் ஒண்ணும் மூணு’ என ஒரு கணக்கு சொல்லியிருக்கிறாயே…. அதென்ன ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா, இல்ல உன்னோட கணக்கே அந்த ரேஞ்சுதானா என எண்ணியிருப்பவர்களுக்கு…. இது ஒரு பயன்பாடு… 

நான் கேட்டு ஆச்சரியப்பட்ட ஒரு ஆச்சி சொல்…. நான் பெற்ற ஆச்சரியம் பெருக இவ்வையகம்….

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது தீர்மானமாய் சொல்ல முடிகிற, நம் கண்ணுக்கு முன்னால் இருக்கிற தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்கள். அப்படி இல்லாமல், மறைந்திருக்கும் சில மேட்டர்களும் சேர்த்தால் தான் ஒரு அர்த்தம் வரும் எனும் ஒரு நிலை வரும் போது…. சீக்ரெட்டான ஒரு ஒண்ணையும் கண்ணுக்கு தெரியும் இரண்டையும் கூட்டி, ஒண்ணும் ஒண்ணும் மூணு என சொல்லும் கணக்கில் தான் சூட்சமம் இருக்கிறது.