பக்கங்கள்

சிவம் மைனஸ் 21 கிராம் = சவம் (சிறுகதை )அன்பு வாசக தோழமைக்கு வணக்கம்… நாம் அறிந்திருக்க வேண்டிய சில தகவல்களை கதையின் வடிவமாய் இங்கு சமர்ப்பிக்கிறேன். அன்புடன் உங்கள் கருத்து அறியவும் ஆவலாக உள்ளேன்… 

(பகுதி – 1)


யெஸ்…. இன்று அவன் நிச்சயம் இறந்து விடுவான்.

தன் மெல்லிய குரலில் ஆழப்பார்வையுடன் அவர் சன்னமாக சொன்னார். சொன்னவர் மீசையிலும் தாடியிலும் தன் முகத்தை தொலைத்து இருந்தார். அந்த மருத்துவ மனையின் சுவர்களுக்கு காதுகள் இருந்தால் கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை.  நகரத்தின் ஒதுக்குப்புறமான அந்த இன்ஸ்டிடுயூட்டின் மருத்துவமனை… அமைதியான இருளில், அங்கங்கு ஓளிரும் செயற்கை குழல் விளக்கை சட்டை செய்யாமல் கருப்பாகவே இருந்தது.

டாக்டர். தூகல், செய்தி கேட்டு நிமிர்ந்தார். கேட்ட செய்தியை மனதில் வாங்கி யோசிக்க துவங்கினார், உடல் பரபரத்தது… செய்தி சொன்னவரை அணுகி, இன்னும் நெருக்கமாய் அமர்ந்து கொண்டு, ஷூவர்…. கேள்வியில் சம்பிரதாயமே இருந்தது. மனம் விரைவாக செய்ய வேண்டிய செயல்களை பற்றியே யோசித்தது.

ஆம். பல்ஸ் குறைந்து விட்டது. ** விழித்திரை விரிக்க துவங்கி விட்டது. இன்னும் சில மணிகளில் இருக்கலாம். நிச்சயமாய் சொல்ல முடியாதே,,,, ஆனாலும்….  ஒன்று மட்டும் நிச்சயம் இன்று அவன் இறந்து விடுவான். தூகல் தன் கை கடிகாரத்தை பார்த்தார். இரவு மணி 11.30 என காட்டியது. குளிர் காற்று ஒன்று சன்னலின் இடையில் மறைக்கப்பட்ட திரைச்சீலையை தள்ளி விட்டு டாக்டர் தூகலின் முகத்தை வருடியது.

அசையக் கூடாது ஒரு நிமிடம், ஒரு கணம் அசையக் கூடாது. படுக்கையின் அருகிலேயே இருந்து கண் கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேளை மரணம் தாமதித்தால், ஐந்தாறு மணி நேரங்கள் ஆகி விட்டால், விடிந்து விட்டால் என்ன செய்வது….., என் விழிப்புணர்வுக்கு 24 மணி நேரம் இல்லையே. போன முறை நடந்த தவறு இம்முறை நடக்க கூடாது. என்ன செய்யலாம்.

கண் மூடி, சுவாசத்தை கவனித்தார். வேகம்…. சின்ன சின்ன இடைவெளியில் மூச்சு… பிரிக்குவென்ஸி கம்மி. இதயம் துடிப்பது உயர்ந்த சத்தத்தில் கேட்டது. ரத்தம் துரித கதியில் ஓடிக் கொண்டிருக்கிறது, மனம் உணர்வுகளின் பாதையில் அல்லவா தறி கெட்டு ஓடுகிறது. அறிவின் பாதையில் சென்றால்தானே நல்லது. உணர்ச்சியின் பாஷையில் அல்லவா, எமோஷனலாக அல்லவா இப்போது சிந்தித்து கொண்டிருக்கும்… இப்போது எடுக்கும் முடிவு பகுத்தறிவாகாதே… உணர்வின் வெளிப்பாடல்லவா ஆகும்…..

ஏன் குழப்புகிறாய், பட்சி என்ன சொல்கிறது. உள்ளுணர்வு என்ன சொல்கிறது… அதைக் கேள். டாக்டர் தூகல் கண்கள் மேல் நோக்கி செருக, உடல் கொஞ்சம் தன் வசம் இழக்க, தன்னுள் ஆழ்ந்தார்…. சில நொடிகள் கடந்தது… அவசியமில்லை, குழம்ப தேவையில்லை. குழப்பமில்லை, முழித்திருக்கலாம். மரணம் இன்னும் சில மணிகளில் நடக்கும் ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லியது, தூகல் தன் இருக்கை விட்டு எழுந்தார், அந்த வார்டின் சமீபத்தில் நடையும் ஓட்டமுமாய் வந்தார். அவரது ஐந்து அசிஸ்டெண்டுகளும் முகமன் கூற… அமைதியாய் அவர்களை பார்த்தார்….. ஆழமாய் அவர்களை ஊடுருவி பார்த்தார். அந்த அர்த்தப் பார்வையின் அமைதி அவர்களுக்கு புரிந்தது.

அந்த அமைதியின் அர்த்தம் அவர்களுக்கு தெரிந்தது, மற்றும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது. அவர்களும் அமைதியானார்கள். எதிர் கேள்விகள் கேட்காமல் தத்தம் இருக்கைக்கு நகர்ந்தார்கள். அவர்கள் செய்ய வேண்டிய பணியின் அவசியமும் அவசரமும் புரிந்தது. அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தங்கள் வேலைகளில் இன்னும் சிரத்தையாய் ஆழமாய் துவங்கினார்கள்.
தூகல் படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். படுக்கையில் இருந்த நோயாளியை பார்த்தார். கண்கள் பாதி திறந்தும், மூடியும் ஒரு தூக்க நிலையில் போர்வை புதைப்புக்குள் இருக்கும் அவனை பார்த்தார். திறந்திருந்த பாதிக் கண்களில் ஜீவன் குறைந்து இருந்தது. பளிங்கு போல் பளபளப்பாகவும் நீர் கோர்த்தும் இருந்தது.

இவன் இறக்க போகிறான், தன் வாழ்வை முடித்து இந்த உலகை விட்டு செல்ல இருக்கிறான். இன்னும் சில மணி நேரத்தில் அது நடக்கும். அவன் மட்டும் தான் சாகப் போகிறான். அவனுக்கு, அவனது வாழ்க்கையில் பெரிய மாறுதல், ஆனால் உலகம் மாறப் போவதில்லை. சூரியன் மாறப்போவதில்லை, இங்குள்ள இயக்கங்கள் மாறப் போவதில்லை. நான் நாளையும் உயிரோடு இருப்பேன்…. இவன் மட்டும் இங்கு இருக்க மாட்டான்.

இல்லை மரணம் கொடியது… மனித வாழ்க்கையில் அவசியமற்றது. எப்படியாவது வெல்லப்பட வேண்டியது. முடியுமா… முடியும்… எப்பாடு பட்டாவது இதை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

இன்றைய என் ஆராய்ச்சி அதன் முதல் படி.

டொம்….. பலத்த ஓசையுடன் இயந்திரம் சத்தமிட்டது…. அளவுகோலின் பக்கத்தில் இருந்த உதவியாளன் ஓடி வந்து ‘டாக்டர் எடை….. ஒரு அவுன்ஸ் குறைந்துள்ளது’ டாக்டர் தூகல் அர்த்தப் பார்வையுடன் … ம்… நாம் எதிர்பார்த்தது தான் உணவுக் குழாய், மூச்சுக் குழாயிலுள்ள நீர்ப்பதம் கடைசி நேரத்தில் ஆவியாகி விடும். அதனால் தான் இந்த எடை குறைவு… இன்னும் தீவிரமாய் கவனியுங்கள்…

அவன் நகர தூகல் தன் பார்வையை படுக்கையை நோக்கி செலுத்தினார். படுக்கை விரிப்பு அசையவில்லை….. படுத்திருந்த நோயாளியின் காதுகள் அந்த அறையின் ஒலியை உள் வாங்கி கொண்டு அமைதியாய் இருந்தது…

                                                                             (தொடரும்….)

·        ****  நம் கண்ணின் நடுவில் கருப்பு மணி – கண்மணி…. வெளிச்சத்துக்கு ஏற்ப விரிந்தும் சுருங்கியும் பார்வையை நமக்கு வழங்குவது. இது தன்னிச்சையாக மூளையின் செயல்பாட்டில் இல்லாமல் இயங்குவது. மரணம் சம்பவிக்கும் அந்த கடைசி நேரங்களில், இது விரிந்தும் நிலைபெற்றும் இருக்கும். அதனால் தான் கண்ணில் டார்ச் அடித்து பார்த்து மரணத்தை டாக்டர் கன்பர்ம் செய்வார்.

2 கருத்துகள்:

 1. தலைவா....

  நான் இந்த விளையாட்டுக்கு வரல... ஒண்ணுமே புரியல தலீவா... நீங்க கடைசியில கண்ணின் கருப்பு மணி - கண்மணி பத்தி எழுதி இருக்கறத தவிர...

  பதிலளிநீக்கு
 2. //// R.Gopi சொன்னது… தலைவா....நான் இந்த விளையாட்டுக்கு வரல...////

  பிரபஞ்ச இயங்கு விதிகள்...
  சிந்தனையின் முரணியக்கம்....
  யோகாத்மா தரிசனம்....
  பரிணாமவாத தர்க்கியங்கள்....

  இது பற்றி சொல்ல நினைத்தேன்.

  ‘புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாய் பல்விருகமாய் பறவையாய் பாம்பாய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்.... எல்லா பிறப்பும் பிறந்திழைத்தேன்’

  ஜி.... ஆன்மாவ பத்தி, எதுனாச்சும் ஒரு கதை விட்டா.... ஏதாவது தேறுமான்னு முயற்சி பண்ணேன் தலை.. ஒப்பேறலையோ... சாரி தலை.. இன்னும் டிரை பண்றேன்...

  பதிலளிநீக்கு