பக்கங்கள்

வானொலி நாடக அனுபவம்

வானொலி நாடகம் என்பது கலையின் தனி வடிவம். ஊடகத்தின் ஒரு உட்பிரிவு. அதற்கு கதை வசனம் எழுதுவது ஒரு விதமான சவால். ஏனெனில் எல்லா விஷயங்களையும் வசனமாகவே சொல்ல வேண்டும்.

ஒரு கிராமம் என்பதை …… திரைப்படமாக, காட்சியாக சொல்லும் போது, 20 வினாடிகளில் ஒரு குளம், ஒரு வயல், ஒரு வீடு என படம் பிடித்து…. மிகவும் எளிமையாக சொல்லி விடலாம்.

அதே கிராமத்தை…. கதையாக எழுதும் போது, இரு பத்திகளில் வரிந்து வரிந்து எழுதி விடலாம்… ஆனால் ஒரு கிராமம் என்பதை வானொலியில் வெறும் ஒலியாக சொல்லும் போது…………. ஹூம்…. கொஞ்சம் கடினம் தான்…. என்ன செய்யலாம்….. முன்னுரை ஒன்றை அமைக்கலாம்…. எப்படி… ’பச்சை புல் போர்த்திய வயல்களும் நீர் நிறைந்த குளங்களும் அடங்கிய ஒரு அழகிய கிராமமே நம் கதை நடக்கும் ஊர்………. ‘ என சொல்லலாம்…..


முன்னுரை என பிண்ணனிக்குரலாக ஒலிக்க செய்வது ஒரு மிக பழைய உத்தி, அதுவும் இல்லாமல் வீரியம் குறைந்த ஒரு அணுகுமுறை. வேறு வழியே இல்லாத போது முன்னுரை எனும் உத்தியை வைக்க வேண்டும், இல்லாமல் அதை தவிர்த்து, கேட்கும் நேயர்களின் மனதில் இந்த கிராமத்தை எப்படி காட்சியாக வரைவது என எப்போதும் சிந்திப்பேன்… முயலுவேன்….

காட்சிகள், பின்புலங்கள் மாத்திரம் அல்ல….. கதாபாத்திரங்களுக்கும் இதே சவால்தான்.

பேசுவர் யார், அவரின் குணாதிசயம் என்ன, அவர் யாருடன் உரையாடுகிறார், அவருக்கும் இவருக்குமான உறவு என்ன, எங்கே பேசுகிறார்கள் வீட்டிலா ரோட்டிலா, எப்போது பேசுகிறார்கள் பகலிலா அல்லது இரவிலா என எல்லா பரிமாணங்களையும் வசனங்களில் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு கீழுள்ள உரையாடல்களை கவனியுங்களேன்.


( காலிங் பெல் ஒலி…………………………….. )
பெண் குரல்
வர்றேன்...வர்றேன்... ஆபிஸ் போயிட்டு வந்தா, இவ்வளவு என்ன அவசரம்... (கதவு திறக்கப்படும் ஓசை) .... அதான் வர்றேன்ல… அதுக்குள்ள என்னங்க….
ஆண் குரல்
எங்க இவ்வளவு நேரம்….
பெண் குரல்
பின்னால துணி காயப் போட்டுக்கிட்டு இருந்தேன்…
ஆண் குரல்
ஓ….. சரி…. புள்ளைங்க எங்க
பெண் குரல்
ரெண்டும் டியூஷன் போயாச்சு…
ஆண் குரல்
ஓஹோ… சின்னவளுக்கு இருமல் இருந்துச்சே… அப்படியுமா டியூஷன் அனுப்பிச்ச……

இந்த உரையாடல்களை கேட்டவுடன் 10 வினாடிகளுக்குள் எத்தனை தகவல்கள் வருகிறதென பார்ப்போம்


  • 1.   அலுவலகத்துக்கு செல்லும் புருஷன்…….. அவனுடைய வீட்டுக்கு வருகிறான்
  • 2.   மனைவி – ஹோம் மேக்கர். வீட்டு வேலை செய்து கொண்டு பிசியாக இருக்கிறாள்.
  • 3.   அவர்களுக்கு 2 பிள்ளைகள்
  • 4.   சின்ன பெண்ணுக்கு உடல் சரியில்லை
  • 5.   காட்சி நடப்பது வீட்டில்
  • 6.   காட்சி நடப்பது ஒரு மாலையில்

இப்படி ஒரு உரையாடலின் ஊடே தகவல்களை தர வேண்டும். இயல்பாகவும் இருக்க வேண்டும், சுவாரசியமும் செய்ய வேண்டும், அதே நேரம், கேட்கும் நேயர்களுக்கு எந்த குழப்பமும் இல்லாமல்………. கேள்வியே கேட்காத தெளிவில், விஷயங்களை சொல்ல வேண்டும்.

வசனங்கள் எழுதி முடித்து விட்டு, நாமே ஒரு நேயராக இருந்து கொண்டு, கண் கொத்தி பாம்பாக எல்லாம் புரிகிறதா, தகவல்கள் திணிக்கப்பட்டு செயற்கையாக இருக்கிறதா என கவனமாக பார்க்க வேண்டும். மிகவும் சுவாரசியமான பணி இது.

உதாரணத்துக்கு, ரகசியம் நாடகத்தில், ஒரு குடும்பத்தில் நடைபெறும் புருஷன் பெண்டாட்டியின் பிரச்சனையையே கையாள தீர்மானித்தேன். சரி  சொல்லும் குடும்பமும் சுவாரசியமாய் இருக்கட்டுமே என ஒரு அறிமுக காட்சி எழுதினேன்.

கதையில் சொல்லப்படும் குடும்பத்தை நேயர்களுக்கு பிடிக்க வேண்டும், இல்லையெனில் கதையில் பேசப்படும் பிரச்சனை உணர்வு பூர்வமாக உரைக்காது… அதனால் நேயர்கள் தன்னை தொடர்பு படுத்தி இந்த குடும்பத்துடன் இணைய வேண்டும் என சுவாரசியமாக அமைத்த அந்த காட்சி, இரு குழந்தைகள் டிவி ரிமோட்டுக்கு சண்டை செய்வது போல், தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் குறித்து பேசுவது போல், காட்சி அமைத்து எழுதி எடுத்து சென்றேன். கடைசியில் தூரப் போட வேண்டியதாயிற்று. 

ஆம், ஆல் இந்தியா ரேடியோ இயக்குனர் என்னிடம் ‘ சீன் நல்லா இருக்கு, ஆனா சார், குழந்தை நட்சத்திரங்கள் நம் நிலையத்தில் இப்போது இல்லை, எனவே அந்த கதா பாத்திரங்களை தவிர்க்க முடியுமா என்றார்….

‘அதற்கென்ன சார், செய்தால் போயிற்று என காட்சியை மாற்றியமைத்தேன். பிள்ளைகளை……. பாவம்….. டியூஷனுக்கு அனுப்பி விட்டு, கணவன் மனைவியை கல்யாண அனிவர்சரி கொண்டாடும் படி காட்சியை மாற்றி அமைத்து எழுதினேன்…. கணவன் மனைவியின் அன்னியோன்யத்தையும் அன்பையும் கொண்டு, கேட்கும் நேயர்களுக்கு…. பிடிக்கும் விதமாக மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று.

வானொலி நாடகங்கள் ஒரு வித்தியாசமான தளம். அதன் நிறை குறை அறிந்து உணர்ந்து ரசித்தால் அது தரும் இன்பம் அலாதியானது.

வானொலி நாடகங்கள் இன்று குறைந்து போயின. அதற்க்கான நேயர் வட்டமும் சுருங்கியதாகவே இருப்பது துரதிருஷ்டம்.

ஆடியோ பாட் காஸ்டிங் என மேலை நாட்டில் பிரபலமான இந்த வடிவம் இன்னும் தமிழ் கூறும் நல்லுலகில் மவுசு குறைந்தே உள்ளது. பட்டிமன்றங்கள் என ஒரு சில தோன்றி ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், பின்னர் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் அவைகளும் கூட இன்று ஒலி ஒளி வடிவத்திலேயே சுணங்கி விட்டது.

எது எப்படியோ…. என்னை வளர்த்த இந்த கலை வடிவம் எப்போதுமே எனக்கு பிடிக்கும். வரும் காலத்தில் ஒலி வடிவ இந்த கலை வடிவம் இன்னும் மேன்மை பெறட்டும் என ஆசிக்கிறேன்.

தலை கால் புரியவில்லை (இதை கவிதை என சொல்லலாமோ !!!)

ஒரு மரண ஊர்வலம்
நின்று
வழி விட்டது….

நெத்தியில் விளக்கு பரிதவிக்க
அலறி நெருங்கும்
ஆம்புலன்ஸூக்காக….

கிடைத்த கேப்பில்
சர்ரென
புகுந்து புயலாய்
சென்றது
டூ வீலர்…..

(வாசிக்கும் போது உள்ள நிகழ்வு கோர்வை…………. ஒரு விதம்....
கீழேயிருந்து மேலே படித்தால் இன்னொரு அர்த்தம்…. அதுதானோ வாழ்க்கை)


இந்த சிந்தனைக்கு தலைப்பு வைக்க எண்ணி, இரண்டை யோசித்தேன்… சர்வைவல் (அல்லது) பிரையாரிட்டி…………. பின்னர்……. ஆங்கிலத்தை அன்னியமாக்கி என் நிலையையே தலைப்பாக்கினேன்… 

மர்மச் சாவும் - மனிதனின் பீதியும்

(இட்லி வடை இணைய தளத்தில் பதிவிட்டது)

 தம்பா விமான நிலையம் ஒரு மர்மத்துக்கு வித்திட்டது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் தம்பா விமான நிலையம்  முந்தைய நாள் வரை அமைதியாக இருந்தது, கலகலப்பாக இருந்தது…. ஆனால் அன்று அதே விமான நிலையத்தை கலவரமும், பயமும் மழை மேகம் போல சூழ்ந்து கொண்டது.

விமான நிலைய சிப்பந்தி தான் முதலில் அதை கவனித்தார்.

தூரத்தில் இருந்து பார்த்த போது, பிரதான ஓடுதளத்தில் குப்பைகள் சில இருந்தன. தொலை நோக்கு கருவியின் உதவியோடு, அருகில் பார்த்த போது கொஞ்சம் விபரிதமாக பட்டது. அவைகள் பறவைகள். ஒன்றல்ல இரண்டல்ல சில நூறு பறவைகள். அதுவும் கொத்து கொத்தாய் செத்து இருந்தன. 

மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. தன் மேலதிகாரிக்கு இதை தெரிவித்து விட்டாலும் கூட, இன்னும் அந்த சிப்பந்தி அதை குறித்து யோசித்து கொண்டுதான் இருந்தான். இது குறித்து அஞ்சினான்.

இந்த செய்தி கேட்டு, அந்த ஏர்போர்ட் பரபரப்பானது. இந்த மர்ம சாவு குறித்து பல வித ஊகங்கள், பல சிந்தனைகள் என்றாலும் எதுவும் ஒரு ஆணித்தரமான காரணத்துக்கு இட்டு செல்லவில்லை. பல திசைகளில் இதன் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன. அனைவரும் இது குறித்து கவலையானார்கள். இந்த மர்ம சாவு, தொடர்கதையாக நீண்டது. அது அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியது.

சம்பவம் நடந்து இருவாரங்களான பின் முதல் முறையாக, இன்று அதன் காரணம் பௌதியல் ரீதியாக விளக்கப்பட்டது.

பூமியின் வட துருவம் தன் நிலையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து விட்டது.

பூமியின் பரப்பில் உள்ள மின் காந்த தன்மையை நிச்சயிப்பது இந்த இரு துருவங்களில் இருக்கும் காந்த சக்தியே. 

துருவங்களின் இடம் சற்றே நகர்வதால், இரு துருவங்களில் இருக்கும் எதிர் எதிர் காந்த சக்தி மாற்றம் அடைகிறது. அதன் விளைவாக சில மாறுதல்கள் பூமியில் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. காந்த மின் அலை மாற்றம்,  ஸோலார் விண்ட் எனப்படும் சக்தியிலும் மாறுதல் கொண்டு வருகிறது. இச்சக்தி பூமியில் உள்ள பல அடிப்படைகளுக்கு அஸ்திவாரம்.

ஏன் பிரபஞ்சத்தில் உள்ள சில விஷ வாயுக்களை பூமியின் பரப்பில் வர விடாமல் தடுக்கும் ஒரு தடுப்பு சுவராக கூட இந்த சக்தி செயல்படுகிறது.

சமீபத்தில் வட துருவத்தில் ஏற்பட்ட சிறு இட மாறுதலே இந்த குழப்பங்களுக்கு காரணம். அப்படியென்றால், துருவங்கள் இப்படியெல்லாம் மாறுமா, பொதுக்குழு செயற்குழு கூட்டாமல் தாந்தோன்றியாய் பூமி முடிவெடுக்குமா என யோசிப்பவருக்கு… இல்லையாம் ஒவ்வொரு 1000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படி இடம் மாறுவது இயல்பாம். 1000 வருசத்துக்கு ஒருதடவை இப்படி ஆக்ஸில் அசைஞ்சு கொடுக்கிறது பைலாவில இருக்காம்… என்ன இப்படி மாறும் போது, சில விஷ வாயு கசிவு இருக்குமாம்,…

இப்போதைக்கு தம்பா விமான நிலையத்தின் பிரதான ஓடுதளத்தை மட்டும் ஒரு வாரம் மூடிவிட்டு, மாறிய வட துருவத்தை அனுசரித்து சில மார்க்கிங்கை மாற்றி வண்ணம் தீட்டி, நிலைமையை சரி செய்து விட்டார்கள். இதனால் பயணிகளுக்கோ, விமானத்துக்கோ எந்த ஆபத்தும் இல்லை எனவும் உத்திரவாதம் தந்துவிட்டதால், நாமும் பெருமூச்செறிந்து வரும் வாரத்திற்கு சினிமா டிக்கெட் கிடைக்குமா என நெட்டில் துளாவலாம்…. ஃபேஸ் புக்கில் லைக் போடலாம்.

அறிவியல் காட்டிய சில விளக்கங்கள் கேட்டு நம் மனம் ஆறுதல் அடைகிறது. சரி என சாதாரணமானாலும், ஒரு விசயத்தில் நாம் உஷாராக இருப்பது அவசியம். எது, உலகம் குறித்தா… காந்த சக்தி குறித்தா…. அல்ல அல்ல….. உலகம் முடிகிறது எனவே மனந்திரும்புங்கள் என பெந்தே கோஸ்தே வாதிகளும்,சில யோகா குருமார்களும் சாமியார்களும், நம்மிடையே இதுபற்றி சொல்லி கிலி உண்டாக்கி தத்தம் கல்லா நிரப்பலாம்.