பக்கங்கள்

பக்கோடா… (சிறுகதை)

பக்கோடா… (சிறுகதை)
ஆசிரியர். புன்னைக் கூத்தன்.

இளம் வயதில்… அதாவது கல்லூரி நாட்களில், பள்ளி நாட்களில் நான் கொண்டிருந்த அதே உடல் வலிவும், மனவலிவும் இப்போது இல்லையே… அது மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டா….


கேள்வி கேட்டவன் புன்னைக் கூத்தன். சுமார் ஐம்பது வயசு சர்ட்டிபிக்கேட்டிலும்… ஒரு நாற்பத்தைந்து வயது தோற்றத்திலுமாய் இருந்தான். கேள்வி கேட்கப்பட்ட ஆசாமி, கேள்வியில் மூழ்கி தலை குனிந்தபடி ஒரு நொடி யோசித்தார். பின்னர் தலை உயர்த்தி, பு கூத்தனை பார்த்தார். பார்த்த ஆசாமி தன் முகத்தை, தாடி மீசையில் தன்னை தொலைத்திருந்தார். அவர் சாமியார் என சொல்லிக் கொள்ளும்படியாகவும் இருந்தார்.


ம்… உணவு கட்டுப்பாடு
அதெல்லாம் கஷ்டம், சாப்பாடு கண்ட்ரோல் பண்ண மாட்டேன்…
சரி, உடல் பயிற்சி….
ஹூகும்.. அதெல்லாம் முடியாது. இன்னும் ஒரு அரை மணி நேரம் கூட கொடுத்தாலும் தூங்கதுக்கு யூஸ் பண்ணுவேன்.
ஆசாமி கொஞ்சம் சலித்தார், என்னப்பா, நீ மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை என்றால் எப்படி. ம். ஒன்றும் செய்ய மாட்டாய், ஆனால் மாறுதல் நடக்க வேண்டும் அவ்வளவுதானே. சரி இதையாவது செய்…
ஹாங்… சொல்லுங்க சாமி…


உன்னை பெரியவன் என்று நினைக்காதே, உனக்கு இப்போதுதான் இருபது வயசு என மனதார ஏற்றுக் கொள். பு.கூத்தன் குஷியானான், மகிழ்ச்சி கொப்பளிக்க ஓக்கே சாமி என்றான்.


அது சுலபம் இல்லை.. 20 என ஏற்றுக்கொண்டாய் என்றால், முப்பது வயதில் உன்னை விட சின்னவன் ... யாராவது ஒருவன் உனக்கு அறிவுரை கூறினால் அமைதியாய் அதை கேட்கவும் ஏற்றுக் கொள்ளவும் உன்னால் முடிய வேண்டும்.


சாமி சொல்லவும் அதில் இருக்கும் உள்குத்து புரிந்து, புன்னை தலை கவிழ்ந்தான்.


அன்று இள வயதில் உனக்கு வாழ்வை பற்றிய தீர்மானங்களும் புரிதலும் குறைவு. ஆனால் இன்றோ, எல்லாவற்றையும் ஒரு தீர்மானத்துடனேயே தான் அணுகுகிறாய். எனவே, எல்லாம் தெரிந்ததாய் நினைக்கும் உன் குணத்தை தூரப்போடு. ஓஹோ இப்படி செய்யலாமோ என ஆர்வத்துடன் வாழ்… இளமையாய் வலுவுடன் இருப்பாய்… அதாவது உன் ஆச்சரிய குறிகளை கேள்விக் குறியாய் மாற்று… மனம் ஒத்து இதை மட்டும் நீ கடை பிடித்தால், உன் அகம் குறையும், உன் ஈடுபாடு அதிகரிக்கும்.
சாமி, இது நல்லாருக்கு. முயற்சி செய்கிறேன். 


அப்புறம் இன்னொரு கேள்வி. கதை எழுதுவது எப்படி….


கேள்வி கேட்டுவிட்டு புன்னைக்கூத்தன் ஆர்வமாய் அவரை பார்த்தான்.
ம்.. உன் பெயர் என்னவென்று சொன்னாய்…
கூத்தன்… புன்னைக் கூத்தன்…
என்னது புன்னைக் கூத்தனா, நீயா புன்னைக் கூத்தன்…
ஆம்.. சாமி, நாந்தான்… நானே தான் புன்னைக் கூத்தன்….


அது சரி, நீ புன்னைக் கூத்தன் என்றால், நீதான் பெரிய இலக்கியவாதி ஆச்சே, பெரிய எழுத்தாளனாச்சே.. நீ ஏம்பா கதை எழுதுறத பத்தி ஏங்கிட்ட கேக்குற….


சாமி, உங்ககிட்ட உண்மைய சொல்றேன்… என் பேரு ராஜமாணிக்கம். இந்த புன்னைக்கூத்தன்னு ஒருத்தர் அழகாக கதை எல்லாம் எழுதுவாரு. நான் அத அப்படியே கட் பேஸ்ட் காப்பி பண்ணி, என் பேர்ல என் ப்ளாக்ல போட்டுருவேன்… நான் தான் புன்னைக் கூத்தன்னு டமாரம் அடிச்சு, இன்னிக்கு வரைக்கும் எல்லாரும் நம்பிக்கிட்டு இருக்காங்க… ப்ளாக்குக்கு புனை முகம் போதுமே… ப்ரோபைலில் ஒரு போட்டோ, வாயில் வந்த பேரு, எல்லாம் போட்டு நாமளே டமாரம் அடிச்சுக்க வேண்டியதுதானே…. வெப் வரைக்கும் நான் புன்னைக்கூத்தன்… என் நண்பர்கள் வட்டத்துல நான் புன்னைக் கூத்தன்…. என்ன ஒரே ஒரு சிக்கல்…. மேடையில ஏறி, மைக் போட்டு சொல்ல முடியாது.. அவ்வளவுதான்…


அது சரி, அப்ப அப்படியே… இப்பவும் இருக்க வேண்டியதுதானே…. நீ எதுக்கு கதை எழுத கத்துக்கணும்.


இல்ல சாமி, எனக்கு கதை எழுத ஆசை, ஆனா கதை எழுத வர மாட்டேங்குது.. நானும் எழுத்தாளனாகணும்ன்னு ஒரு கனவு. எவ்வளவோ முயற்சி செய்தேன்.. ஒண்ணும் நடக்கல.. அதான்..


எதுக்குப்பா நீ கதை எழுதணும்…


சாமி, பேர் வாங்கணும், பிரபலமாகணும்… என்ன மாதிரி யாரும் இல்லேண்ணு இந்த உலகம் சொல்லணும். நான் எங்கேயாவது, போனா என்னை ஒரு அறிவு ஜீவியா எல்லோரும் மதிக்கணும்.


பாத்தியா…. உன் கோளாறு அங்கல்ல இருக்குது. சமூக அக்கறையும், ஏதாவது கருத்து சொல்லணுன்னும் ஆசைப்படறவங்க தேர்ந்தெர்டுத்துக்குற ஒரு வழிதான் இலக்கியம்… கூட்டம் கூட்டி, பவர் காட்ட நாம என்ன பவர் ஸ்டார்ரா….


இலக்கியம் என்பதை கலாச்சாரத்தின் அஸ்திவாரம் எனலாம். ஒரு சமூகத்தில் மாறுதல் நிகழும் முன் கற்பனையாய் கதையாய், கட்டுரையாய் இந்த மாறுதல் நிகழும் தளமே இலக்கியம். மனித நேயம் இதுதாம்பா அதோட ஆணி வேர்… சம்பாத்தியம், பிரபலம் இதெல்லாம் வழியில இருக்கிற செடிகள் அவ்வளவுதான்….



நீ நல்ல மனுசனா, மனித நேசம் உள்ளவனா மாறு, இந்த உலகத்துக்கு ஏதாவது சொல்ற மெசேஜ்ல உன் கதை கட்டுரை கவிதை எல்லாம் ஜொலிக்கும் தானாவே…


பு கூத்தன் எழுந்து நடக்க துவங்க, சாமி உரக்க கூப்பிட்டார். இங்க வா, இதையும் கேட்டுட்டு போ…


சாமி கை நீட்டி, பக்கோடா பொட்டணத்தை பு கூத்தனை நோக்கி நீட்டினார். இந்தா இந்த ஒரு பக்கோடாவ புடி…. பக்கோடாவில உனக்கு கதை எழுத நான் சொல்லித்தாரேன்.. இத மட்டும் ஸ்ட்ராங்கா பிடிச்சுக்கோ…


சாமி, பக்கோடாவில கதை எழுதுற சூட்சமமா… கலக்குறீங்க.. சொல்லுங்க….
பக்கோடா பொட்டணத்தை பிரித்தவுடன் காரம் மணம் குணம் எல்லாம் இருக்கும் என நம்பவைக்கும் சில மணங்கள் வரவேண்டும். ஊசின நாற்றமோ… நல்லா இருக்காதுன்னோ தோணக்கூடாது…. ஷார்ட்டா பர்ஸ்ட் இம்ப்ரெஷனே கெடாமல் பார்த்துகொள்…


உன் கதையும் பக்கோடா பொட்டலத்த பிரிச்ச மாதிரி, முதல் ஒண்ணு ரெண்டு பாராவிலயே களை கட்டிடணும்…. முதல் வரியில ஒரு ஈர்ப்பு எப்படியாவது கொண்டு வந்துரணும்…


அப்புறம் சாப்பிடும் போது அங்கங்கே.. நல்ல பச்சை மிளகாயும், சுவை கூட்டும் திருப்பங்களும் இருக்கிறதா என பார்த்துக் கொள்.


ஒரு வாய் சாப்பிட்டவுடனேயே அந்த சுவையில, மயங்கி, அடுத்த அடுத்த எடுக்க வைக்கிற அந்த ப்ளோ வரணும் அத நினைப்பில வைச்சுக்கோ… அகலமான ஒரு தளத்துல ஆரம்பிச்சு, கிளைமேக்ஸ் நெருங்கிறப்போ சுரு சுருன்னு ஆழமா போய் நிக்கணும்…


பு கூத்தன் பிரமித்து, வைச்சிக்கிறேன் சாமி, என்னோட வாழ்க்கையில இன்னிக்கு நிறைய கத்துக்கிட்டேன்… ஒரு சந்தேகம்.. உங்களுக்கு இவ்வளவு தெரியுதே… நீங்களே ஏன் கதை எழுத கூடாது…


ம்… நாந்தான்.. எழுதுறேனே…
அப்படியா… .சூப்பர், என்ன பேர்ல எழுதுறீங்க…
ம்… புன்னைக் கூத்தன்..


பு கூத்தன் அமைதியானான்…


ஆசாமி தொடர்ந்தார். ராஜா… மாணிக்கம்… உன்னை பற்றி தெரிந்ததால் தான் உன்னை வரவழைத்து உனக்கு கதை எழுத கற்று கொடுத்தேன்.. இனி நீயே கதை எழுது… ஆல் த பெஸ்ட் என சிரித்து அங்கிருந்து நகர்ந்தார்.
பு கூத்தன் தன் ப்ளாக்கில் முதல் கதை எழுதினான்… தலைப்பு எழுதினான் … பக்கோடா…..


(இனி ஸ்கிரோல் செய்து கதையின் முதல் வரியில் தொடங்கி வாசிக்கலாம்…. செயின் ஜெயபாலு மாதிரி…. சுத்தி சுத்தி முடிவே இல்லாத ஒரு கதை இது)…. )