பக்கங்கள்

கண்ணுக்கு மை அழகு


அன்று….

அபாயம், ஆபத்தானது, ராசியில்லாதது என வர்ணிக்கப்படும் அந்த சாலை சந்திப்பை என் பைக் நெருங்கிக் கொண்டிருந்தது. பாத்துப் போம்மா…. வாரத்துக்கு ஒரு ஆக்சிடெண்ட் எப்படியும் நடந்துருது, கண் மண் தெரியாம லாரியும் பஸ்ஸூம் போகுது. ரோடு கிராஸ் பண்ணும் போது கவனம்… நீ ரொம்ப ஜாக்கிரதையா போகணும்மா என அம்மாவின் அன்புக் குரல் மனதில் கேட்டது. அது எப்போதுமே என்னை சுதாரிக்க செய்யும் ஒரு நினைவு சிப்பி.

இன்றும் கவனத்தோடும், கவலையோடும் நான் அதை அடைந்தேன். சிக்னலின் பச்சைக்காக, நான் நிற்க வேண்டியதாயிற்று. கண்ணையும் தலையையும் சுற்றி, அங்கிருக்கும் சூழலை பார்க்க துவங்கினேன். 

பரவசம் முகத்தில் கொப்பளிக்க, வாயெல்லாம் பல்லாய் ஒரு இளைஞன் என்னருகில் பைக்கில் நின்றிருந்தான். 

இவன் சந்தோசத்துக்கு எது காரணமாக இருக்கும். ம். ஒன்றுதான் இருக்க முடியும். வேறென்ன சாத்தியம், ஏதெனும் காதல் சார்ந்த உணர்வாகத்தான் இருக்க வேண்டும். இல்லாமல் வேறு எது இத்தகைய சந்தோசம் கொடுக்க போகிறது. என சிந்தித்து கொண்டே, மீதமுள்ளவர்களை பார்த்தேன்.

பட்ஜெட்டில் துண்டு விழந்ததை பற்றி கவலைப்படும் நடுத்தர வர்க்கம். தன் வழுக்கையை மறைக்க, காதோர கிருதா முடியை, தலையின் குறுக்கே படர விட்டு, மறைத்திருந்தார். காற்றுக்கு என்ன பொறாமையோ. அம்முடியின் காதை பிடித்து திருகி, மறுபடியும் காது பக்கமே கொண்டு வைத்தது. நம்மவர் சட்டென, அதை மீண்டும் தலையின் குறுக்கே வைத்தார்.

இப்படி ஒரு சாமான்ய கூட்டத்தில் அவர், என் கருத்தை கவர்ந்தார்.

கையில் நெடிய குச்சியுடன் அதை உயர்த்தி பிடித்தவாறு, காதை அங்குமிங்கும் திருப்பி வரும் சத்தங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார். அவருக்கு பார்வையில்லை. நான் அதிர்ந்தேன். அவரருகில் துணைக்கு யாரும் இருப்பார்களா என ஆராய்ந்தேன். இல்லை எவருமில்லை. அவர் தனியாகத்தான் இருந்தார்.

இப்போதும், கையை ஆட்டிய வண்ணம், தலையை அங்குமிங்கும் அசைத்து கொண்டு ஒலியின் மீதே கவனம் கொண்டிருந்தார்.

சிவப்பு விளக்கு மறைந்து, பச்சை ஒளிர்விட்டது. வண்டிகள் எல்லாம் அவசரம் அவசரமாக கியர் மாற்றி, இன்ஜினை உறும விட்டு, லேசாக நகரத் துவங்கின. அந்த சத்தங்களின் சங்கீதத்தில் நம்மவர் உஷாரானார். அவசரம் அவசரமாக, கையை உயர்த்தி, அவரது குச்சி தெரியும் வண்ணம், ஆட்டிக் கொண்டு, விரைவாக நடக்க துவங்கினார். நான் பதறினேன். இரு விழி இருந்தும் கூட,, நமக்கு இவ்வளவு பயம் இருக்கிறதே. இங்கு விபத்தில் சிக்கியவர்கள் கூட, கொஞ்சம் அசட்டையாக இருந்ததால் தானே அவர்களுக்கு விபத்து நடந்தது.

அப்படி இருக்கும் போது, பார்வை இல்லாத இவர் எப்படி இங்கனம் செய்கிறார். இவர் சாலையை கடந்து விடுவாரா என்ற பதைபதைப்புடன், என்னால் மேற்கொண்டு வண்டியை செலுத்த முடியாமல் சாலையை கடந்து, ஓரமாய் நிறுத்தினேன்.

நான் நினைத்த அதே தவறு நடந்தது. 

அச்சாலையிலே மொத்தம் 3 டிராக்குகள். ஆனால், அவரோ, ஒரு இரண்டரை டிராக்குகள் கடந்ததுமே, கோணத்தை மாற்றி, நடக்க துவங்கினார். அதாவது அவரது கணக்கிலே சாலையை கடந்தாயிற்று, இனி சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கொண்டு நடந்து கொண்டிருந்தார். ஆனால் உண்மை என்னவோ அவர் இன்னும் சாலையை கடக்காமலேயே, வாகனங்கள் போகும் திசையில் நடக்க துவங்கினார். என்ன சிக்னலின் புண்ணியத்தில், இப்போது அச்சாலையில் வாகனங்கள் இல்லை.

பச்சை விளக்கு மறைந்து, ஆம்பர் ஒளிர் விட்டது. இதயம் படபடவென துடித்தது, இரத்தம் தாறுமாறாக ஓடி, எனக்குள் பதறியது. அடடா, இப்போ சிக்னல் விழுந்தால், அடுத்த திசையின் வண்டிகள் வரத்துவங்குமே….. அந்த நினைப்பு சுர்ரென குத்தியதும், வண்டியை விட்டு குதித்து, அவரை நோக்கி ஓடினேன். அவர் கையை பற்றி, ’இங்க…இங்க… ரோடு இங்க இருக்கு’ என சொல்லி விட்டு..... அவரையும் இழுத்துக் கொண்டு விரைவாக சாலையின் ஓரத்தில் வந்து விட்டேன்.

நல்ல வேளை அடுத்த திசை வண்டிகள் வரும் முன்னே, நாங்கள் இருவரும் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம்.

எனக்குள் கொஞ்சம் கோபம் வந்தது. ’என்ன சார் இது, யாரும் துணைக்கு வரலியா..’ 

குரல் கேட்ட திசை நோக்கி திரும்பி பார்த்து, அமைதியாக ஒரு சிரிப்புடன், ’இல்ல சார், நான் எப்பவுமே தனியாத்தான் வருவேன்.’ அதில் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. என் கோபம் இன்னும் துளிர் விட்டது. ’என்னத்த தனியா, பாதி ரோடு கிராஸ் பண்ணி, ரோட்டுக்கு குறுக்க நடந்தீங்க… ’ என்றேன்.

என் கோபம் அவருக்கு புதியதாய் இருந்தது,. ஒரு வேளை புதிராக கூட இருக்கலாம். என்னை பார்த்து…!!!! சிரித்து விட்டு, கைகளை நீட்டி துளாவினார்.

என்ன தேடுகிறார்…….. ஓ… அவர் என்னை தேடுகிறார் என தெரிந்து என் கைகளை அவரின் குறுக்காக நீட்டினேன். என் முழங்கை அவர் கையில் பட்டது. அதை தொட்டு, பின்னர் தொடர்ந்து, என் உள்ளங்கையை அடைந்தார். அவரது கையை என் கை மேல் வைத்து, கை குலுக்கினார்.

பின் அதே சிரிப்புடன் ‘ரொம்ப கோபப்படுவீங்களோ….’ நான் அமைதியாக நின்றிருந்தேன். அவரே தொடர்ந்தார் ‘இல்ல, கை கெட்டியா இருக்கு, ஆனா அமுக்கினா சாப்ட்டா இருக்குது. உங்களுக்கு இளகின மனசு ஆனா சுருக் சுருக்குன்னு கோபம் வந்துரும் இல்லியா.

இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. ஆனால் என் இறுக்கம் குறைந்திருந்தது. இன்னும் சிரிக்க முடியவில்லை என்றாலும் இதயம் என்னவோ, கோபத்தை தொலைத்து இருந்தது. நான் அவரது கையை மெதுவாக அழுத்தி, ஹூம்… பாத்து சார்… கவனம்… என சொல்லி என் கையை விடுவித்து கொண்டேன்.

எங்க போகணும், நான் வேணும்ன்னா டிராப் பண்றேன் என்றேன். பாங்க் போகணும், பஸ் ஸ்டாப்பு பக்கத்துல ஒரு சப்வே வரும் அது பக்கத்துல விட்டுறுங்க என்றார். சரி ஏறிக்கோங்க என என் இரு சக்கர வாகனத்தின் அருகில் கூட்டி கொண்டு வந்து, அதை தொட்டு காட்டினேன். பின் இருக்கையை தொட்டதுமே, ம்… புல்லட்டா, நல்ல வண்டி என்றார். நான் கொஞ்சம் வியந்தேன். அமர்ந்ததும் வண்டியை இயக்கி மெதுவாக ஓட்டினேன். கொஞ்சம் உயரம் குறைவா இருக்கே என்றார். 

நான் ”இது தண்டர் பேர்டு புதிய வண்டி, பழைய புல்லட் போல இல்லாமல் இது கொஞ்சம் உயரம் குறைவு” என்றேன். ஓஹோ… ஆனா இன் ஜின் சத்தம் பாக்கும் போது, பழசாயிருந்ததே என்றார்.

நான் துணுக்குற்றேன். பழைய புல்லட் சத்தம் தரும் அந்த சைலன்சரை நான் விரும்பி மாட்டிக் கொண்டேன், அல்லது புதிய பைக்கில் பழைய மாடல் சைலன்சராக மாற்றி இருந்தேன். அவரது கணிப்பும் கணக்கும்…. எனக்கு ஆச்சரியம். இத்தனை நுண்ணிய புலனும், நினைவுமா……

பேச்சின் ஊடே..... தான் ஒரு இசைக்கலைஞன் என்றும், கீ போர்ட்டு வாசிக்கிறேன். வாங்கிய சம்பளத்தை வங்கியில் போடவே போகிறேன் என்றார். தனியா போறீங்களே… நான் மறுபடியும் முதலில் இருந்து தொடங்கினேன்.

”இருவந்தைஞ்சு வருசமா போறேன். ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல” என்றார். என் விழிகள் வியப்பில் விரிந்ததை அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. வர வேண்டிய இடம் வந்ததும் வண்டியை மெதுவாக்கி, சரி பாக்கலாம் என்றேன்.

அவர் இறங்கி கொண்டு, சொன்னார்……….. ரொம்ப தேங்க்ஸ்…

நடக்க துவங்கியவர், சின்ன தயக்கத்துடன் நின்று, பின் திரும்பி, என்னை நெருங்கி நின்றார். நான் … சொல்லுங்க என்றதும்… பேசாமல் இருந்து விட்டு, அமைதியான சில நொடிகளுக்குப் பின் சொன்னார்…. ரொம்ப கவலைப்படாதீங்க, நீங்க நினைக்கிற அளவுல இது கஷ்டம் இல்ல. இந்த உலகத்தில நிறைய நல்லவங்க இருக்காங்க…. எனக்கு ஒண்ணுமே ஆகாது. கை குச்சியை மேலே ஆட்டி நான் நடந்தா, யாராயிருந்தாலும் மெதுவா போயிடுவாங்க…. நான் வர்றேன்…

அவர் சென்றார். நான் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். அவரது செல்லும் பாதையில் சற்று தூரத்தில் கொஞ்சம் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. நான் கொஞ்சம் பதறினேன். அவரோ சாதாரணமாக நடந்து, அந்த தண்ணீர் இருக்கும் இடத்தை அடைந்தார். தண்ணீர் மேலே மிதித்து, நடந்து சென்றார். அளவான பதட்டம் இல்லாத நடையிலேயே அவர் நடந்ததால், பாதிப்பு ஒன்றுமே இல்லை….

தண்ணீர் முடிந்ததும், நிலப்பரப்பில் கால்களை தரையில் பலம் கொண்டு உதைத்து பின்னர் நடக்க துவங்கினார்.

ஒரிறு அடிகள் அவர் நடந்த போது, இன்னொன்றை கவனித்தேன்…

அவரின் முன்னே, ஒரு பெண் யாரோடோ, செல்லுலாரில் பேசிய படி கவனக்குறைவாகவே நடந்து கொண்டிருந்தார். இங்கிருந்தபடி நான் லேசாய் பதறினேன்…. அவரோ, அந்த குரலை கணித்து ஒரு அரையடி இடைவெளி உண்டாக்கி, நகர்ந்து முன்னேறினார். பார்வையில்லாத அவரால் அந்த சாலையில் ஒரு பிரச்சனையும் இல்லை. சற்று தொலைவில் சப்வேயில் அவர் தலை மறைந்தது.

நான் அங்கேயே நின்றிருந்தேன். உலகம் அசைந்து கொண்டுதான் இருந்தது. எல்லோருக்கும் அவசரம். சிலர் நடந்தும், சிலர் விரைந்தும், சிலர் நின்றுமாக ஏதோ ஒரு வேலையிலேயே இருந்தார்கள். நான் மட்டும் எதுவும் செய்யாமல், ஒன்றும் நினைக்காமல் அப்படியே உறைந்து நின்றேன்.

இதில் பரிதாபம் இல்லை. வேண்டுமென்றால் என்னை பார்த்து கொஞ்சம் பரிதாபப்பட்டேன். அவர் கூறிய சில வார்த்தைகள் இன்னும் என்னுள் எதிரொலிக்க வண்டியை இயக்கி நகர்ந்தேன்….

கொஞ்சம் தொலைவிலே… சாலையோரத்தில் இளைஞர்களின் கூட்டம்….. காலை 10 மணிக்கே என்ன அப்படி கூட்டம் என கேள்வியோடு முன்னேறியபோது……….. நொளைய தளபதியின் ஒரு புதிய திரைப்படத்து போஸ்டர்கள் தெரிந்தது. எனக்கு புரிந்தது.

கூடியிருக்கும் கூட்டம், சந்தோசத்துடன் ஆர்வமாக நின்றிருந்தது. அவர்கள் ஆதர்சன படம் பார்க்க முன் பதிவு செய்ய இப்போழுதே வந்ததும் புரிந்தது. அந்த கும்பலில் இருந்த ஒருவன் ரசித்து அவன் நண்பனிடம் சொன்ன வார்த்தை என்னை இழுத்தது…..

‘பார்க்க கியூட்டா, சிக்குன்னு நம்ம தலைவண்டா… அங்க பாரு கீரோயினியை, மைதா மாவு உருண்டைடா, உடம்பு நழுவுற மாதிரியே ஒரு சூப்பர் டிரஸ்…….. ஆஹா, காண கண் கோடி வேண்டும்டா……..’’

எனக்குள் ஏதோ பிசைந்தது. ஒரு நிலை கொள்ளாமை. ஒரு ஆற்றாமை.

இறைவன் கொடுத்த இரு கண்களை கொண்டு நாம் என்ன செய்திருக்கிறோம்… என்ன செய்து கொண்டிருக்கிறோம்….. என ஒரு கேள்வி குடைந்தது.

கண் பார்த்து சொன்ன சேதிகளினால் நாம் பதட்டப்படத்தானே செய்கிறோம், சக மனிதரை நம்பும் அவர் எங்கே… கண் இருந்தும் அங்குமிங்கும் அலைபாயும் நம் கவனம் எங்கே… இந்த கண்களினால் ஆன பயன் குறைவோ… என மேலும் சில கேள்விகள் பாய………………….

என் டூவீலர் மிதமான வேகத்தில் நகர்ந்தது. நீங்க நினைக்கிற அளவுல இதுல கஷ்டம் இல்ல……. எனும் வார்த்தை என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அவர் சொன்னது சரிதானோ… ’