பக்கங்கள்

ஆன்மிக அல்வா – (பகுதி – 1)

ஆழப்புலைல நம்ம அப்புண்ணி நாயர் கையில ஆக்ஸ் ஆயில் பாட்டில  வச்சி தடவிக்கிட்டுருந்தாராம், இதென்ன கலாட்டா என வியந்து நம்ம வேங்கிட்டு வெள்ளந்தியா கேட்டாராம், ஐயா அப்புண்ணியைய்யா, ஏன்யா இப்படி பாட்டில தடவுறீங்கன்னு.

அதுக்கு நம்ம அப்புண்ணி சொன்னாராம், டாக்டர் தான் சொல்லியிருக்காரு தலைவலிச்சா இத தடவுங்கன்னு !!! எப்பூடி.... பாட்டில தொறக்காம, தைலத்த எடுக்காம, வெறும் பாட்டில்ல படம் பார்க்க முடியுமா. மூடி கழட்டாம எப்படி தலை வலி போகும்.


ஆம் நம் வாசக நண்பர்களே!! ஆன்மீகம் எனும் தொடர் எழுத உச்சேதித்ததும், சில ஆரம்ப கேள்விகள் என்னை அப்படி மூடி கழட்ட வைத்தது. அறியாத வயதில் ஆழமாய் சில நம்பிக்கைகள் நம்முள் செதுக்கப் பட்டிருக்கின்றன. நம் அடையாளமாய் பதிந்த இந்த முத்திரை பிரிக்க முடியாது நாமாகவே ஆகி, நம்முள் ஒட்டித் தான் இருக்கிறது.

மொழி, மதம், இனம், சிந்தனை என பல அடுக்குகளில் நிரவி இருக்கின்றன. சமூகமும் நம் குடும்பமும் போட்டி போட்டு கொண்ட வரைந்த சித்திரமல்லவா நாம்.

ஆனால் இன்று நம் முறை. நம்மை நாம் ஆழமாய் பார்த்து, நமது நல்லது கெட்ட்து தெரிந்து நம் வாழ்வை சீராக்க முயலும் முயற்சி இது. தன் சிலையை நாமே செதுக்கும் நிலை.

சில தகவல்களின் மூலமாய் நம்மை நம் அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளவும், சில தகவல்கள் சேர்க்கவும், நம் வாழ்வை வளமாக்கவும் இத்தொடர் அமைய வேண்டும் எனும் என் நம்பிக்கை இலக்கை அடையட்டும்.

வாருங்கள் ஒரு நடுத்தர வர்க்கத்தின் மெயின் ஹாலுக்கு போவோம், அங்கு நடக்கும் சம்பாஷனையை உற்று கேட்போமே.

டாடி, குழுந்தை எப்படி உண்டாகுது.

கணீர் குரலில் எட்டு வயது செல்ல மகன் கேட்க, பதில் யோசிக்கும் போது கொஞ்சம் திணறிப் போனார் தர்மலிங்கம்.

வார இறுதியில், ஒய்வு போர்வையை விலக்காமல் ஒருச்சாய்ஞ்சு படுத்து கொண்டிருக்கும் என்னை படுத்துறானே... படுபாவிப்பய. ஏண்டா அலர்ட்டா இருக்கிறப்போ இந்த மாதிரியெல்லாம் கேக்கக் கூடாதா. கேட்டுப் புட்டான், என்ன செய்யலாம்.

சீ போடா இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் என அவர் வேலையை எளிதாக்கி அவனுக்கு இந்த சப்ஜெக்டில் ஆர்வம் தூண்ட மனதில்லை. அப்படி செய்தால் ‘ஏய் ஏதோ பெரிய விசயம் இருக்குடா இதுல’ என ஒரு மெமரி கொடி (Flag) அவன் அனாவசியாய் வைத்துக் கொள்வான்.

சரி லெட் மீ டெல் த ட்ரூத், இதுதான் இப்படித்தான் என மருத்துவம் அறைகுறையாய் கண்டுபிடித்ததை சொல்ல்லாம், அவனுக்கு புரியுமா. சந்தேகந்தான்.

ஆண் பெண் எனும் கூடலில் சைடு வாங்கி கூட்ஸ் வண்டி விட்டாலும் விடுவான். கொதிக்கும் டீயை கோப்பையோடு அவனுக்கு புகட்டுவது போல் ஆகிவிடும். யப்பாடி, வாய், நாக்கு வயிறு எல்லாம் வெந்துல்ல போகும். மொல்லமா ஊதி ஊதி குடிச்சு, கொஞ்சம் கொஞ்சமா காலப்போக்கில அவனுக்கு அந்த சமாச்சாரம் புரிவது நல்லதாச்சே.

புரிஞ்சுக்குற பக்குவம் உடலுக்கும் மனசுக்கும் வர்ற வரைக்கும் சொல்லாம இருக்கிறது நல்லதாச்சே. அதெல்லாம் ஒகே, ஆனா இப்ப என்ன செய்வது, பதில் சொல்லியாகணுமே.

ஆங்... இது சரியாயிருக்கும்.

அது ராஜா, கடவுள் ப்ளெஸ் பண்ணி, நமக்கு பிள்ளை கொடுப்பாரு.

ஒற்றை வரியில் சொல்லி முடித்தார். ஓ அப்படியா, மகன் தலையசைத்தான். ஏதோ அரைகுறையாய் புரிந்திருக்கும், அவனது கேள்வியின் அப்போதைய தாகம் தீர்ந்திருக்கும், நகர்ந்து விட்டான்.

கேள்வி கேட்ட நொடியில் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்த்தால் கிடைத்த கொஞ்சம் அவகாசத்தில் அவசரமாய் அவர் சொன்ன பதில் அச் சூழலுக்கு சரி என பட்டது. நாளை அவன் வளர்ந்து பெரியவனாகும் போது கூட, அந்த பதில் பொருத்தமாகவும் இருக்க கூடும். அப்பாடா, இப்பதைக்கு தலை தப்பியது.

சொன்ன அந்த கடவுள் பதிலில் நமக்கே தெளிவு கொஞ்சம் குறைவே. எனினும், அந்த பதிலில் சௌகரியம் உண்டு. மிக எளிது. எது வரையறுக்க முடியவில்லையோ, எது தெரிய/ தெளிய முடிவில்லையோ அப்போது கையை உயர்த்தி மேலே காட்டி கடவுளப்பா என சொல்வது ஈசி.

பிரச்சனை பெரிசாக நம்மிடம் பூச்சாண்டி காட்டும் போது ஹூம் என ஒரு நீண்ட பெறுமூச்செரிந்து எல்லாம் இறைவன் செயலப்பா என சொல்வதில் நம் கவலைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது.

மேற்கூரிய சம்பவம் நம் சிந்தையில் ஒரு கேள்வியை பூக்கிறது. ஒரு வேளை, விளக்கிச் சொல்லும் வியாக்கியானம் வேண்டாம் என நம் முன்னோர் நினைத்ததால் கடவுளிசம் தோன்றியதா, அல்லது கடவுள் எனும் அவசியம் ஏன் வந்தது.

நீயூக்ளியர் பிஸிக்ஸின் நேவியர் ஸ்டோக்ஸ் இகுவேஷன் சால்வ் பண்ண உட்கார்ந்தால் எப்படி மண்டை காய்கிறது. இல்லாத தூக்கம் எல்லாம் அடித்து பிடித்து வருகிறது. சே சாய்ஸில் இந்த கொஸ்டினை விட முடியுமா என திட்டம் வட்டமடிக்குது. வாழப் போற எழுபது எம்பது வயசுல எவ்வளவு தான் தெரிஞ்சுக்குறது, இந்த உலகத்து விசயம் எல்லாம் கத்துக்க முடியுமா, கரையேற முடியுமா.

எல்லா குளத்துலயும் இறங்கி தண்ணி குடிக்காம, வீட்டு குழாயில தண்ணீ குடிச்சு தாகம் தீர்த்தா போறாது என நம் நலன் கருதி முடிவெடுத்தார்கள் முதாதையர்கள்.... என தத்துவம் சொல்கிறார் நம்ம முள்ளுக்காட்டு மூக்கு நோண்டி சித்தர்.

கடவுள் பற்றியும், ஆன்மீகம் பற்றிய நம் விவாத்த்திற்கு அடிப்படையாய் மனித ஜனத்தொகையையும் மதங்களை பற்றியும் இன்றைய நிலவரப்படி, United Nations தகவல் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா. மனிதர்களை பற்றிய தகவலில் தொடங்கினால் நம் கருத்துக்களும் நீரோட்டம் போல அமையுமல்லவா.

இன்றைய நிலவரப்படி நாம் கண் இமைக்கும் ஒவ்வொரு நொடியிலும் அதாவது ஒவ்வொரு செகண்டிலும் 4 புதிய மனித உயிர்கள் இப்பூமியில் பிறக்கின்றன. அதே ஒரு நொடியில் 2 உயிர்கள் இவ்வுலகை விட்டு மறைகின்றன.

அடேயப்பா நெசமாலுமா. நல்ல தகவலாவில்ல இருக்கு. வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது எனும் திரைப்பாடல் நம்ம TMS குரல்ல பாடுதே . சினிமா தியேட்டர்ல மார்னிங் ஷோ பார்க்க டிக்கட் வாங்கினா ஷோ முடியுற வரைக்கும் தான் விடுவாங்க, அப்புறம் நம்ம இடத்த காலி பண்ணினாதான் மார்ட்டினி ஆளுங்க உள்ள வரவும் அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கும். யேயப்பா.... இந்த விளையாட்டு ரொம்ப பெரிசாவும் புதிராவும்ல இருக்கு.

பூமியில் மொத்தம் 226 நாடுகள் உள்ளன, இதில் 50% மனித உயிர்கள் 10 நாடுகளில் வாழ்கின்றனர். சீனா, இந்தியா, யூ.எஸ். இந்தோனேஷியா, பிரேசில், பாக்கிஸ்தான், வங்காள தேசம், நைஜீரியா, ரஷ்யா, ஜப்பான். அவ்வளவுதான். மிச்சமா இருக்கிற 216 சொச்ச நாடுகள்ல ஜனத்தொகை பாக்கி 50%.

பத்து நாடுன்னு பேசுனோமே, அதுலயும் ஒரு சுவாரசியமான தகவல். மொத்த ஜனத்தொகையில் 1/5 பகுதி சீனர்கள். அதாவது ஒரே நாட்டிலேயே அத்தனை பேரு இருக்காங்க. ஆத்தாடி சீனர்கள் சிலுப்பிகிட்டு தான் அலையுறாங்க.

மொத்த மனித எண்ணிக்கையில் நூற்றில் 60% ஆசியாவை சேர்ந்தவர்கள்.
இந்த தகவல்கள் எல்லாம் நல்லாயிருக்கு ஆனா போற ரூட்டுதான் புரியல என்பவருக்கு. மனிதர்களை அவர்கள் வாழும் இடங்களை தெரிந்து கொண்ட நாம் படிப்படியாய் அவர்களின் வாழ்வியல் முறைக்கும், மதங்கள் துளிர்த்த விதமும் புரிய ஏதுவாயிருக்குமல்லவா.

செய்யலாமே, நம் விவாதம் தொடரும் முன் இப்பகுதியில் சொன்னவற்றை அசை போடவும், ஆராயவும் நேரம் எடுப்போமா, கொஞ்சம் இடைவெளி கொடுப்போமா.

அன்புடன் அடுத்த பகுதியில் சந்திப்போம்.


தொடரும். ....

ஆன்மிக அல்வா – புத்தம் புதிய தொடர்

இதோ உங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து படைக்க ஒரு புத்தம் புதிய தொடர்.
வேற ஆள பாரு, முடியாது, மாட்டேன் போ என ரொம்ப காலமாய் அடம் பிடித்து வந்தார் இத்தொடரின் ஆசிரியர். பெருமுயற்சியின் பேரின் ஒரு தொடர் எழுத ஒப்புதல் தந்துள்ளார் நம் அன்பிற்குறிய படுக்காளியானந்தா.

இவர் இருபது வருடத்துக்கு முன்னமே இமயமலையை புகைப்படத்தில் பார்த்து பழகியவர். மட்ச, மிச்ச, சொச்ச ஆசனங்கள் எல்லாம் இவருக்கு அத்துபடி. அதிலும் *சர்வாங்கஸானாவில் தினமும் 8 மணி நேரத்துக்கும் மேலாக ஆழ் நித்திரை தியானத்தில் இருக்கும் பெரிய டகால்டி சித்தர். (*சர்வாங்கஸானா என்பது தரையில் தலை, முதுகு, பிருஷ்டங்கள், பாத குதிகால், எல்லாம் தொட்டுக்கொண்டு மோட்டு வளையில் ஓடும் ஃபேன் பார்த்து கண் மூடும் கஷ்டமான தேக நிலை)

தொடரின் முன்னுரை :

முன்னுரைன்னும் சொல்ல்லாம் அல்லது ஏன் இந்த விபரீத யோசனை என யோசிக்கும் தங்கள் சிந்தனைக்கு ஒரு தன்னிலை விளக்கம்.

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி கண்டு அதிர்ந்தேன். ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி (ஒரு பள்ளியில் டீச்சராய் இருக்கலாம்) ஒரு சன்னியாசியின் பாதத்தில் விழுந்து அழுது புலம்பி கொண்டிருந்தார். பார்த்து வெகு நேரமாகியும் அந்த தாக்கம் என்னை விட்டு அகலவில்லை. எதனால் ...ஏன் .... இந்த காட்சி என்னுள் தங்கிவிட்ட்தே. நிகழ்ச்சி என்னவோ சாமியாரை பற்றி சேனல் புலம்பிய நிகழ்ச்சி பதிவு.

அந்த சாமியாரை பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவர் டகால்டியா, நல்லவனா எனும் சிந்தனை கூட சைடில் தான் நிற்கிறது .

அக்காட்சியின் மூலம், ஆணி வேர் ; அந்த பெண்ணும் அழுகையும் அவ்வுணர்ச்சியும் என எனக்கு பட்ட்து.

அந்த பெண் என்னை கவர்ந்தார். என் தாய் போல் இருந்தார். என் நெருங்கிய நண்பனின் தாய் போலவும் இருந்தார். அவரது அழுகை நிஜம், கண்ணீருக்கு ஒப்பனையில்லை. என்னை காப்பாத்தேன் எனும் முழக்கத்தில் முரண் இல்லை.

இவர் மட்டும் இல்லை, உள்ளுக்குள் உருகும் உயிர்களாய்தான் நாம் எல்லோருமே உள்ளோம். அன்றாடம் நாம் காணும் மனிதர்கள் அனைவருக்கும் சோதனைகள், துன்பங்கள் சூழ்கின்றன.

என்னால் முடியவில்லை, தாங்க முடியவில்லை. இயலவில்லை. ஏதோ ஒரு சக்தி நம்மை காப்பாத்தாதா என ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கம் எனக்கு முக்கியமாய் படுகிறது. அந்த மனித மனத்தின் நினைப்பை பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்யும் வியாபாரிகளை விட்டுவிட்டு, வேருக்கு செல்ல வேண்டும்.

முடியுமா, என்னால் அவர்களின் நிலைக்கு உதவ முடியுமா, பல் இடுக்கில் மாட்டியிருக்கும் உணவு துணுக்கை நீக்கும் சிறு துரும்பாய் இத்தொடர் அமையுமா. மனித வாழ்வின் முக்கியமான மூல ஆதாரமான இவ்வுணர்ச்சியை அல்ச முடியுமா.

வாழும் கொஞ்ச காலம் தெளிவும் திடமும் பெற முடியுமா. பறந்து பறந்து நாம் சேகரித்த ஆன்மீக விடயங்களை கொஞ்சம் அலசலாமா.

முயற்ச்சிக்கிறேன்.

ஆன்மீகம் என்பது என்ன, அதன் நோக்கம் என்ன. மனித வாழ்வில் ஆன்மிகம் என்றால் என்ன, அது அவசியமா, அதன் சாதக பாதகங்கள் என்ன, என்மதம் உன்மதம் என நடக்கும் குடுமிபுடி சண்டையை தவிர்க்க அன்றில் தகர்க்க முடியுமா.

எல்லோருக்கும் பொதுவாய், எளிதாய் ஒரு முடிவு எடுக்க ஒரு பார்மூலா தர முடியுமா எனும் கேள்விகளின் படையெடுப்பே இத்தொடர்.

அப்படி ஒரு சிக்கலான விசயத்தை அலசுவதே இத்தொடரின் நோக்கம்.

என்ன திடிரென்று ஆன்மீகம் எனக் கேட்டால், மனித வாழ்வை பாதிக்கும் விசயங்களும், மனித வாழ்வின் சிந்தைகளும் என்னை கவர்கின்றன.

ஆங் ஓகே... ஆன்மிகம் நல்லது, அதிருக்கட்டும் தலைப்பில அது என்ன அல்வா.

அல்வா ஒரு நல்ல ஸ்வீட், அதன் டேஸ்ட் சூப்பர், வாயில வைச்சா வழுக்கிக்கிட்டு போகும். சுவையான விருந்து மட்டுமல்ல, உடலுக்கு மருந்தும் கூட. அதே அல்வாவுக்கு டவுள் மீனீங் உண்டு. ஒருவரை ஏமாத்தி அப்பிட் ஆவுறது அதன் இன்னொரு அர்த்தம். ஆன்மீகம் அல்வாவாகவும் அவனியில் உண்டு என அறிந்தால் போதுமானது.

இதை படித்து விட்டு தங்கள் எண்ணங்கள் தெரியவும் வேண்டுகிறேன்.

படிக்க எளிமையாகவும், சுவாரசியமாகவும் இத் தொடரை கொண்டு செல்ல எண்ணமுண்டு. தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை பயனுள்ளவனாக்க வேண்டுகிறேன்.


தொடர் விரைவில் ஆரம்பம்

துபாய் நிகழ்ச்சி - தினமலரில்

யூ ஏ ஈ தமிழ்சங்கத்தின் தலைவர் திரு ரமேஷ் பேசுகிற முதல் சில நிமிடங்களில் நம் அன்பையும் மரியாதையும் ஒரு சேர சம்பாதிப்பவர்.

பின்ன துபாய் பேங்க்கில் வேலை செஞ்சா சும்மாவா, அங்க பேங்கில் சேமிப்பு இவர் தமிழ்சங்க சாதிப்பு.

தற்செயலாய் நம் வலைமனையில் பதிவு செய்த்தை மின்ன்ஞ்சலில் அனுப்ப, அதை சங்கத்தின் வலைமனையிலும்

பின்னர் தினமலருக்குமென திசை திருப்பி விட்டார்.

என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சுறா திரை விமர்சனம்

இளைய தளபதி விஜயின் 50வது படம் சுறா.
அவர் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்
இவர் படத்துக்கு விமர்சனம் தேவையில்லை - சொல்வது படுக்காளி

பின்ன என்னங்க, நம்ம வீட்டு கடைக்குட்டி, 3 வயது வாண்டு, விஜய் வேட்டைக்காரன் பட விளம்பரத்த பார்த்துட்டு அதே மாதிரி கைய கால தூக்கி போஸ் கொடுத்துச்சு. இப்ப சுறா விளம்பரம் பார்த்துப்புட்டு கண்டிப்பா சுறா போணும்ங்கும். எஸ்கேப்பே கிடையாது, குடும்ப சகிதமா போய் விழாவ சிறப்பிக்கணும்.

இன்று மின்னஞ்சலில் வந்த இந்த படத்தின் கதை கீழே இருக்கு.

சுறாவின் கதை என்ன. ஓப்பனிங் சாங் பாடி விட்டு, ஒரு ஒப்பனிங் ஃபைட்டும் முடித்து விட்டு, உட்காரும் விஜய் கிட்ட, மிக்கிட்டான் விபத்தில் சிக்கிட்டான் என்கிறார்கள். யார் அந்த மிக்கிட்டான். அவர் விஜயின் சீன தேசத்து நண்பர். அடித்து பிடித்து மருத்துவமனை வருகிறார்.

மிக்கிட்டான் முனங்கிக் கொண்டே சொல்கிறார். "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் திக்கித் திணறி சொல்கிறார். என்னவாய் இருக்கும் என குனிந்து கேட்கிறார் விஜய். ஒன்றும் புரியவில்லை, இன்னும் கொஞ்சம் என காதை சீன நண்பரின் வாயருகே கொண்டு செல்ல, சைலன்ஸ். டோட்டல் சைலன்ஸ். என்ன ஆச்சு. சீன நண்பர் இறந்து விட்டார். அதிரடியாய் தொடங்குகிறது படம்.

விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். போரடிக்காமல் இருக்க வழியில் 6 குத்துப் பாட்டு 3 பைட்டு போடுகிறார்.

கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை

கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"தமிழ் ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க, அவங்கள அந்த தெய்வந்தான் காப்பாத்தணும்"

IPL ன் டேஞ்சர் ரூட்

டிவியில் கிரிக்கெட்டு ஓடினால்.... அது லைவா இல்லையா!!!......  என்று கூட பார்க்காமல், நாம் டைவ் அடிப்போம். அப்படி ஒரு ஈடுபாடு. இருக்கிற வேலய ஈசியா கிடப்புல போடுற அளவுக்கு அதுல ஒரு ஈடுபாடு... என்னவோ தெரியல...  பச்ச புல்லும்... அந்த கோமணம் மாதிரி பிட்சும், நடுவுல ஸ்டம்பும், பேட்ஸ்மேன், பௌலர் என பார்த்ததுமே குஷியாகி விடுகிறோம்.

கிரிக்கெட் எங்களின் மதம்..... என ஃபீல் பண்ணும் ஒரு கூட்டம் உண்டு... ஒரு  ரசிகர் இப்படி கூட சிலேடையாய் சிலாகித்திருக்கிறார். கடவுள் கிரிக்கெட்டு விளையாட ஆசைப்பட்டார் டெண்டூல்கராய் மண்ணில் பிறந்தார் என.... கிரிக்கெட்டை உயிருக்கும் மேலாய் என டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு எடுத்துக் கொள்ளும்... ரசிகர்கள் கூட்டமும் இங்கு உண்டு.

தமிழ் திரையுலகம் கூட மொக்கையாய் ஒரு படம் எடுத்து விட்டு அது ஓடவில்லை யென்றால் ஹூம்... IPL நடக்கும் போது நாம என்ன செய்யுறது... டிவியில மேட்ச் ஓடும் போது தியேட்டருக்கு யார் வருவா........  யாரு நம்ம கூத்துக்கு வருவா என குன்சாக குறை சொல்லி... கும்மியடிக்கும். வீட்டில் உள்ள பெண்கள்... இல்லத்தரசிகள் கூட சலித்து கொள்கிறார்கள்.... ஹூம்.. நல்லா கண்டுபிடிச்சாங்கய்யா இந்த விளையாட்ட, என்ன இருக்குதோ தெரியல.. இந்த விளையாட்டுல... ம்...  வீட்டுல நிம்மதியா ஒரு சீரியல் பார்க்க முடியுதா என சீரியஸாய் புலம்புகிறார்கள்.

சரி என்ன இந்த கிரிக்கெட்டு.. எப்போ தொடங்கியது...  என பார்த்தால். இதன் தொடக்கம் அல்லது ஆ..ரம்பம்... 16ம் நூற்றாண்டு. லண்டனை சுத்தியுள்ள நாடுகளில் இருந்து மட்டை என குறிக்கும் டச்சு மொழியின் கிரிக் என அழைக்கப்பட்ட நாமகரணமே.

இது ஆரம்பத்தில் பச்ச புள்ள விளையாட்டுதான். பெரியவங்க யாரும் மட்டைய தொடல. அப்புறம் தான் பெரியவங்களும் கையில எடுத்தாங்களாம்.... அதுவே பின்னர், சூதாட்டமாய் உறுவெடுத்தது. (அப்பவே தொடங்கிட்டாங்களா.....) சூது என்று வந்த பின்னால சும்மா இருக்க முடியுமா....  பெரிசுங்க எல்லாம் களத்தில் குதித்து, ஸ்டாராங் டீம் எல்லாம் உறுவாக்கி கனகச்சிதமா நடந்துச்சு இந்த விளையாட்டு...

இரண்டு போர்களின் காரணமாய் 19ம் 20 நூற்றாண்டின் சில வருடங்களில் இந்த விளையாட்டு காணாமலும் போயிருந்தது. பின்னர் வெள்ளைக்காரன் விளையாடினான்.  சூரியன் அஸ்தமிக்காத ராஜ்யம் என வெள்ளைக்காரன் நாடு இருந்ததாலேயே.. இந்த விளையாட்டு... அவன் போன இடத்துக்கெல்லாம் இதுவும் சென்றது.. அதனாலேயே கிரிக்கெட்டு...  உலகெங்கும் வைரஸ் போல்  பரவியது.

இந்த கிரிக்கெட்டில் இரண்டு குழுக்கள் உண்டு. விளையாடுற மொத்த பயலுவவும் உள்ள வந்துருங்க... பந்த பொறுக்கி போடுங்க.. என தொடங்கிய விளையாட்டு... குளிர் காலம் போய், வெயில் அடிக்கும் போது.. அதில் சுகமாய் நிற்க.. என உருவாக்கப்பட்டதாகவும் ஒரு செவி வழிச் செய்தி உண்டு...

ஆரம்பத்தில் இது ஜெண்டில் மேன் கேம், மிச்ச எல்லா விளையாட்டுக்கும், இந்த விளையாட்டுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், இதில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. யேய்.. யாரும் செயிக்கல.. யாரும் தோக்கல... ம்... ஒக்கே....

முதலில் கொண்ட டெஸ்ட் வடிவத்தில் இந்த விளையாட்டில்... ஏறக்குறைய எல்லா மேட்சும் டிராதான். ஆனால் இன்று காலம் மாறி விட்டது.. பாஸ்ட்.. பாஸ்ட்.. என வேகமாகி விட்ட உலகில்... கிரிக்கெட்டின் வடிவமும் மாறி விட்டது... அந்த ஐந்து நாள் பொறுமை எல்லாம் இல்லாது ... சீக்கிரம் முடிங்கப்பா... சோலி இருக்குதுல்ல என சொல்ல ஆரம்பித்ததே.. என்று இந்த விளையாட்டு.. விளையாடுவது என்கிறதை...  விட்டு விட்டு... பார்த்து ரசிக்க துவங்கினோமோ அன்றிலிருந்து...

அதிலும்... லேட்டஸ்ட் நிலவரப்படி... விளையாட்டை துவங்கிய சில மணிகளில் பெட்டியை கட்டும் நூதன் டொண்டி டொண்டி என வடிவமைத்து விட்டோம். இந்த வடிவத்தில்.. தொடங்குறதும் தெரியாது.. முடியுறதும் தெரியாது...

டிவி நம்மை அறுக்கும்..... ஆனால் டிவியில் அறுப்பது போல் ஒரு சுவையான காட்சி இந்தியன் திரைப்பட்த்தில் வரும்.

அதில் கமல்ஹாசன், ஒரு கொலை செய்வார், அதை லைவ்வாய் டிவியில் ரிலே செய்வதுதான் ஐடியா. பேச வேண்டிய வசனம் பேசிவிட்டு, கமல் இப்படி சொல்வார்... “சரி இதுக்கு மேல, கர்ப்பிணி பெண்கள், இதய நோய் உள்ளவங்க எல்லாம் வேற சேனலுக்கு போயிடுங்க” என சொல்லிவிட்டு கொல்லி விடுவார்.


அதுபோல், IPLன் சில மேட்சுக்கும் சொல்லலாம் சாலப் பொருத்தம். இல்லேண்ணா பாருங்களேன், கடைசி ரெண்டு ஓவர்ல 30 ரன் அடிக்கணும். என எக்குத்தப்பாய் ஒரு டென்ஷனை கொடுத்து விடுகிறது இந்த வடிவம்...

ஒரு ஆட்டத்தில... அடிச்சுப் புட்டாரு நம்ம சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவர் தோனி. பந்து பறக்கும் போது.. நமக்கு பரபரன்னு இருக்குது.... நமக்கு மட்டுமா... அவர் அடிச்சு முடிச்சதும் எல்லைக்கோட்டில இருந்து ஓடி வந்த.... அவர் பாய்ஸெல்லாம் பார்க்கணுமே. ................அதிலேயும் நம்ம முரளி ஓடி வந்தத பார்க்கும் போது யேயப்பா............., என்ன உணர்ச்சியப்பா சாமி.... என கேட்கத் தோணுது.

 IPL நல்லாத்தான் இருக்குது.. இந்த புது வடிவமும் நல்லாத்தான் இருக்குது.. ஆனா  IPL முளைச்சு இன்னும் மூணு இலை விடல, அதுக்குள்ள இந்திய பாராளுமன்றம் போய், மூணு நாள் வேலைய மொடக்கிருச்சு.... நம்ம IPL. அது மட்டுமா இந்த IPL ஐய்யனார் வாங்கின முதல், மந்திரி பதவி காவு நம்ம சசி தரு. திரு திருன்னு முழிக்கிறார்.........., ஏண்டா இந்த துபாய் சுனந்தா அழகு கலை நிபுணர்கிட்ட காதல் வலையில விழுந்தோம்ன்னு.

பாய்ஸ் சித்தார்த்தும், வெங்கடேசும் டெக்கானின் சியர், அவர்கள் மட்டுமா, ஒரு பெரிய கேங்கே எல்லைக் கோட்டுக்கு அப்பால இருந்துகிட்டு பிலிம் காட்டுது. பூரா சினிமா இண்டெஸ்டிரியுமே பலாப்பழத்த மொய்க்கிற மாதிரி.............. பணம் இருக்குது புகழ் இருக்குதுன்னதும் இங்கனக்குள்ளயும் வந்திருச்சு.

அமெரிக்காவில படிக்கிற காலத்தில டிரக் அடிச்சு, துப்பாக்கி முனையில வழிப்பறி கேஸ்ல மாட்டிக்கிட்ட மோடி மஸ்தான் தான் இன்னிக்கு IPL சேர்மன். இந்த விசயமெல்லாம் ஊழல் குப்பைய கிண்டினவுடன வெளிய வருது.

நேத்து மேட்சில ஜெவிச்சவுடனே தோனிய கூப்பிட்டு கேட்டாங்க, தம்பி, தங்கக் கம்பி.. பிச்சுல பின்னிட்ட...  பிச்சுமணி, அடேயப்பா பிச்சு உதறிட்டியேப்பான்னு கேக்குறாங்க...

தோனி...  அத்தனை சந்தோசத்திலேயும் அமைதியா சொன்னாரு... பின்ன  நம்ம தோனியில்லையா,.......  ”சந்தோசங்க, ஆனா எப்பவுமே இப்படி அடிக்க முடியாதுங்க. இவ்வளவு காசு செலவழிச்சு ஸ்பான்ஸர்ஸ் படுற சிரமத்துல அட்லீஸ்ட் செமி பைனல்ஸ் வரைக்குமாவது வந்துரணும். அதை செஞ்சுப்புட்டேன், அதுக்கப்புறம் ஒண்ணும் சொல்ல முடியாது. நாலுமே நல்ல டீமுதான், யாராவது ஒரு ஆளு பிரமாதமா விளையாடிட்டாலோ, அல்லது ஒரு ஓவர் ஓவர்பிலிம் காட்டிட்டாலோ போதும் மேட்ச் பீச்சாயிரும்ன்னு பாந்தமா சொன்னாரு.

ரொம்ப கரெக்ட் சார்.

விளையாட்டு என்பதும்... அதில் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையும் என்பதையும்... பார்க்கும்... பக்குவம் நம்மை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறது...

நல்ல வேளை இது வரை விளையாடும் அணிகளுக்கிடையே போட்டியும் பொறாமையும் பாதிக்கும் அளவில் இல்லை. ஆரம்ப நாட்கள் தானே என்று சொல்லவும் வேண்டியும் இருக்கிறது...  ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்பு உண்டு. .................அப்படி எடுக்கும் போது டேஞ்சர்...........!!!!!!!!!!!!!!

மிதமிஞ்சிய வெறுப்பு சில சமூக விரோதிகளுக்கு வேலை கொடுக்கும். பணமும், பாலியலும் தன் சேட்டையை தொடங்கும். கோட்ச் கொலைகள், தில்லுமுல்லுகள், பாலியல் குற்றச்சாட்டு என அசிங்கமாய் வளரும் (சில /மிச்ச கவுண்டி விளையாட்டை போல்) இது பாதை மாறாமல் இருத்தல் அவசியம்.

இன்று அரசியலை பதம் பார்த்திருக்கும் இந்த விளையாட்டு விபரீதமாக கூடாது. வினையாக்க கூடாது. எச்சரிக்கை.

ஆனாலும் என்னவோ.. நாம் அனைவருமே பொறுப்பானவர்கள்.. ஆழமாய் சிந்திப்பவர்கள்.. நம்மை கூறு போடும் விஷயங்களை நாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை... ஆம்.... ஒரு லிமிட்டை தாண்டும் போது.. அது நம்மை பாதிக்கும் என்பதை உணரும் போது.. அதை சட்டை செய்யாமல்... விலக்கும்... குணம் உள்ளவர்கள்...

 IPL அப்படி ஒரு டேஞ்சர் ரூட் போகாமல் நாம் திசை திருப்ப வேண்டும்...

உன்னை நான் பார்க்கையில டர்ங்... ங்... ங் ....க்குது......

இப்பதிவுக்கு மூணு தலைப்புக்கள் தோணுச்சு.

உன்னை நான் பார்க்கையில டர்ங்... ங்... ங் ....க்குது......
கண்ணுக்குள் முள்ளை வைத்து , யார் தைத்ததோ

விழிகளிலோ கருந்திரை, நமக்கோ கண்ணீர் திரை

பர்ஸ்டே இருக்கட்டும் என்று விட்டு விட்டாலும், மீதமுள்ள இரண்டையுமே இங்கு சொல்லி விட்டேன்.

ஒரு வாரம் அடிச்சுப் புடிச்சு வேலை செஞ்சு அப்பாடின்னு டியூட்டி மூடியற நேரம், கன ஜோரா பாட்டு கச்சேரி ஆரம்பம். யூ ஏ ஈ தமிழ்சங்கம் ஏற்பாடு செய்த நம்பிக்கை ஸ்வரங்கள் 2010 எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி. குடும்பமாய் சென்று எங்கள் மாலையை இனிமையாக்கினேன்.
நன்றி.... யூ ஏ ஈ தமிழ்சங்கம்

இந்த இசை நிகழ்ச்சி குழு, வாசக நேயர்கள் அனைவருக்குமே அறிமுகமானவர்கள் தான். ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...’ என தேசிய விருது வாங்கிய தன்னம்பிக்கை தரும் பாடல் ஒன்று உண்டல்லவா. அதில் வாசிக்கும் இசைக்குழுவே. அதில் குளிர் கண்ணாடி தூக்கி தன் கண்ணீர் துடைப்பாரே அவர்தான் ஒருங்கிணைப்பாளர், பெயர் கோமகன். தொடர்ந்து 50 மணி நேரம் இசை நிகழ்ச்சி நட்த்தி கின்னஸ் சாதனையை கிஸ் பண்ணினவர். லேட்டஸ்ட்டா, முருங்கைக்காய் பாக்கியராசுகுட்டி ’முதல் முதலா’ என எடுக்கும் படத்துக்கு இசையமைப்பாளராகவும் இணைந்துள்ளாராம். வெரி குட், வாழ்த்துக்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடலாக ‘கடவுள் உள்ளமே ஓர்... கருணை இல்லமே’ என கச்சேரி தொடங்கியதும். அந்த தேனினும் இனிய குரலில் அந்த பாடகி பாடத்துவங்க கட்டுப்பாடு இல்லாது நமக்கு கண்ணீர் வழிகிறது. அவர்கள் விழிகளிலோ கருந்திரை, நமக்கோ கண்ணீர் திரை. எதற்கு கண்ணீர். கழிவிரக்கமா. இல்லீங்கோ சாமி சத்தியமா இல்லிங்கோ..... கவலைப்படும் போது மட்டும் நமக்கு கண்ணீர் வருவதில்லை. உணர்ச்சி வயப்படும்போது நம்மை அறியாமல் கண்ணீர் பிரசவிக்கிறது. அது மகிழ்சியாயிருந்தால் கூட.

மைக்கில இன்னும் வால்யூம கூட்டு, எக்கோவ ஏத்து, இப்ப டிரம்ஸ் அடிக்கணும், ஓகே இப்ப பாட தொடங்கலாம் என கண்டக்டர் நின்று கொண்டு கையசைப்பாரே. அப்படி ஒரு வசதி இவர்களுக்கு இல்லை. அதற்கென கையில் ஒரு ஜாலர் வைத்து கொண்டு, சரளமாய் கோமகன் நட்த்தும் ராஜ தர்பார் நம்மை அதிசயிக்க வைக்கிறது. என்ன ஒரு நேர்த்தி, சுலபமாய் சுழன்று வருகிறார் மனிதன்.

எலக்ட்ரானிக் பேட் வாசிக்கும் நண்பர் மட்டும் நம்மை போல் பார்க்க ஊனக் கண் உடையவர். அதிலும் ராஜ ராஜ சோழன் நான் எனும் பாடல் இசை ஆரம்பிக்க, யூ ஏ ஈ தமிழ் சங்கத்தின் தலைவர் ரமேஷ் , தோள் தொட்டு அணைத்து கோமகனை பார்வையாளர்களிடம் அழைத்து வர, உற்சாகமாய் கை குலுக்கி கொண்டு பிசிறில்லாமல் பாடினாரே, அரங்கத்தின் மொத்த பாராட்டும் மழையாய் பொழிந்தது.

இளமை எனும் பூங்காற்று எனும் அற்புத பாடலுக்கு வாருங்களேன் எங்கள் உலகுக்கு. ஒரு சில நிமிடங்கள் எங்கள் பார்வையில்லா உலகுக்கு விசா தருகிறேன் என கோமகன் அரங்கத்தின் அத்தனை விளக்குகளையும் அணைக்க சொல்லிவிட்டு பாட, நமக்கு அந்த இருட்டு உலகின் விலாசம் தெரிகிறது. புது பரிமாணம் தெரிகிறது. இசையின் இன்னொரு முகம் தெரிகிறது, நன்றி கோமகன். அதிலும் விளக்குகள் அணைக்கப் படும் அந்த வேளையில் நம் இதயத்தில் வேல் பாய்ந்த ஒரு வார்த்தை சொன்னார் அவர். ஹாங்.... லைட்டெல்லாம் ஆப் பண்ணியாச்சா என கேட்கும் போது, அப்போ விளக்கு இருக்கா இல்லையான்னு கூட தெரியாதோ, சே என்ன கொடுமை என யோசிக்கும் போது இதயம் வலிக்கிறது.

இயற்கை உபாதைக்கென அடுத்தவர் அழைத்து சென்று விட்டு, வந்து உட்கார வைத்த்தும் அதே இடத்தில் இருந்து கொண்டு அவர்கள் நிகழ்ச்சியை ரசிக்கும் பாங்கு பார்க்கும் போது இப்படி ரசிக்கணுமோ என நம்மை கேள்வி கேட்கிறது.

இளைய தளபதியின் பாடல்கள் நல்ல துள்ளலிசையில் கலகலப்பாக்கி நம்மையும் தாளம் போட வைக்கிறது. என்றாலும் பாடலின் வரிகள் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது. என் உச்சி மண்டையில கிர்ருங்குது என பெண்ணை பார்த்த்தும் தோன்றுவதை சரியாத்தான் சொல்லியிருக்காங்க என்றாலும் வாடா மாப்புள்ளே.... வாழை மரத் தோப்புல வாலிபால் ஆடலாமா எனும் போது... ம்... அதிலும் இவர்கள் பாடும் போது, கொஞ்சம் நெருடுகிறதே.

கச்சேரியின் இடையில் கலகலப்பாய் ஒரு பல் குரல் நிகழ்ச்சி. தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்ற செந்தில். பாவம் கால் இழுத்து இழுத்து வந்து நம்மை கலகலப்பாக்கினார் செந்தில். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என நமக்கு பழமொழிதான் சொல்லப்பட்ட்து. அது செந்திலுக்கு வாழ்வையே கொடுத்திருக்கிறது. அவரது வாய்சில் எத்தனையோ மனிதர்கள், மிருகங்கள், வாத்தியங்கள், மிமிக்கிரியின் மிட்டா மிராசு.

பின்ன ஒரு வாத்தியமும் இல்லாமல், வாயிலேயே கிங்காங் சினிமா டிரைலர் காட்டினா சும்மாவா. அதிலும் பூட்டிய அரங்கத்தினுள், செத்துப் போன அசோகன், எம்.ஜி.யார், கிருபான்ந்த வாரியர், பாக்கு மென்று கொண்டே மூப்பனார் என எல்லாரும் குரலாய் நம் கண் முன் வந்தார்கள். அவர் ஒரு எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிக்கேஷன் இன்ஜினியராம்.

ஈசிஈ படிச்சிருக்காரு ஆனா இரண்டு ஈ பறந்து போச்சு, வெறும் சி மட்டுந்தான் இருக்கு, அதான் சிரிப்பு மட்டுந்தான் இருக்கு. பறந்து போன ஈ பார்வையாளர்கள் வாயில வந்து உக்கார்ந்து கிட்டு நம்மள் சிரிக்க வைக்குது என்ற சொன்ன விளக்கம் சூப்பர். சொன்னது நம்ம ஈரோடு மகேஷ்.

அதாங்க நம்ம சன் டிவி கலக்கப் போவது யாரு மகேஷ். நல்ல மேடை ஆளுமை இருக்கிறது. சாவாசமா, நண்பர்களிடம் பேசுவது போலவே மேடையிலும் பேசினார். மேடையின் முதல் ரோவில் ஒரு பெண்மணி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க. ‘யக்கா நீங்க அடங்க மாட்டீங்களா, ஒரு ஓரமா உக்காருங்க என சொல்லும் அளவுக்கு யதார்த்தம். பாவம் லோக்கல் ஆர் ஜேக்களை அவர் வாரிய வாரு, கொஞ்சம் எல்லை மீறவே, அவர்கள் பாவம் நெளிந்தார்கள். தட்டி கொடுத்து அவர்களையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கலாமே, ஏன் அவர்களை துரத்தணும்.

உடல் குறைகள் இறைவனின் கொடை என்றால், அதை உடை என சொல்லும் அந்த கலைஞர்களின் தன்னம்பிக்கை, முயற்சி நமக்கு ஒரு முன்னுதாரணம். அதிலும் இங்கு உள்ள அனைவரும் நல்ல ஒரு பணியில் உள்ளனர், அந்தா... கிடார் வைச்சிருக்காரே லீட் கிடாரிஸ்ட் அவர் ஒரு யூனிவர்சிட்டி புரபோசர் என சொல்லும் போது, நாம் கடந்து சென்று சாதிக்க வேண்டிய முயற்சிகளை முடுக்கி விடுகிறது.

நல்ல ஒரு நிகழ்ச்சி, வாழ்த்துக்கள்.

மனங்கனிந்த வாழ்த்துக்கள்
எனக்கு ரெண்டும் ஓகே...

யாரு குத்தினாலும் அரிசி வெள்ளையாகணும் அம்புட்டுதேன். ஆனா இந்த கொண்டாட்டத்துல என்ன செய்யணும் எப்படி செய்யணும்ன்னும் யாராவது சொன்னா தேவல.

எகிறுதுங்கோ... பட்ஜெட் எகிறுதுங்கோ...

வருசா வருசம் உன் செலவு ஜாஸ்தியாயிட்டே போகுது. போனால் போகுது இந்த வருசத்துக்கு இவ்வளவு தான் கொடுப்பேன் அதுக்கு மேல ஒரு பைசா இல்ல. ஒரே வருசத்துல 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி இந்திய ரூபாய செலவழிச்சு முடிச்சுருடா. என்னது ஒரு லட்சம் கோடியா, ஒரு வருசத்துலயா.... இத யாரு சொன்னா, யாரு செலவழிக்கப் போறான்னு கேள்வி நமக்கு வருதுல்லயா.

வேற யாருமில்ல சொன்னது நம்ம சிவகங்கை சீமையின் சீமைத்துறை சிதம்பரம், கேட்ட்து நம்ம இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவ செலவழிப்பு.

அடேயப்பா, சைபர் ஜாஸ்தியாவில்ல இருக்கு, ஏதாவது செய்யக்கூடாதான்னு பொதுஜனம் கேட்டா. என்ன செய்யுறதுங்க, பக்கத்து நாடுகள் சும்மாவா இருக்குன்னு ஒரு குண்ட போடுறார் நம்மாளு. செலவு ஜாஸ்தியாவுதுன்னு உட்டுபுட்டா, பெரிய பிரச்சனையாயிடும். சரிதேன், வேற வழியில்ல எத்தனை உசிரத்தான் பலி கொடுக்கிறது என நாம் சமாதானம் சொன்னாலும், அமௌண்ட் அப்பிட் ஆக்குதுங்க. மனசு கேக்குறதில்ல, இது நியாயமா,

நம்மள மாதிரியே பக்கத்து நாட்டு பங்காளிக்கும் இவ்வளவு செலவு இருக்கும்ல. இப்படி ஒரு பெரிய தொகைய செலவழிச்சு நம்ம வாழ்க்கைய நாமளே அல்லவா பாழாக்கிக்கிறோம்.

நாடுகள் சமாதானமா போயிட்டா எவ்வளவு நல்லது. எம்புட்டு மிச்சம், எத்தனை வளர்ச்சி திட்டங்கள் செய்யலாம்ன்னு சொல்லாம இருக்க முடியல.

உன் வீட்டுல நாட்டுல நீ நல்லாயிரு, நான் என் வீட்டுல நாட்டுல நல்லா இருக்கேன்.

சும்மா பாதுகாப்பு பாதுகாப்புன்னு எவ்வளவு தண்டம் அழுகுறது. தினம் தினம் தீபாவளின்னு புஸ்வானம் வெடிக்க வேண்டியிருக்கே.

எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

நேத்து கோவிலுக்கு நடுஇரவு ஜெபம் சென்றோம். உறக்கத்தை உதறி விட்டு பாதி ராத்திரி கோவிலுக்கு வருவது சுக அனுபவமே.

வானத்து நட்சத்திரங்கள் சில, பூமிக்கு வெக்கேஷேனுக்கு வந்து கோவிலின் வெளிச்சுவரில் குந்திக் கொண்டிருந்தது. குந்திக் கொண்டிருப்பது சும்மா இல்லாமல் தும்மிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் குதூகலமாய் இருந்தது. தூங்கத் தயாராய் கண்கள் மட்டும் சொருவிக் கொண்டு நிற்க, பள பள உடையுடன் கும்பல் கும்பலாய் விசுவாசிகள். அவர்கள் நடுவே, சுறுசுறுப்பாய் சில வாலெண்டியர்கள் ஆண்களும் பெண்களுமாய். பார்வையாளர்களை விட வா(லெ)லிண்டியர்களின் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தி.

பேமிலியா வந்திருக்கீங்களா, எங்க உங்க ஒய்பு, அவங்களா சரி... சரி... சின்ன புள்ள இருந்தா லெப்ட்ல போங்க, இல்லன்னா ரைட்டுல என நம்மை மேய்ந்து கொண்டிருந்தார் அந்த நல்ல மேய்ப்பன்,. கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையில் அதை இணைத்திருந்த சிவப்பு பட்டையில் சார்ஜா கோவிலின் பணக்காரத்தனம் தெரிந்தது.

பண்டிகைன்னா மட்டும் கோவிலுக்கு போகும் பெஸ்டிவல் கிறிஸ்டியன்களால் கோவில் கொஞ்சம் திமிறி சிரமப் பட்டு கொண்டிருந்தது. க்ளோஸ்ட் சர்க்யூட் புரோக்ஜனில் பூஜை வெளி திட்டில் தெரிந்தது. எந்திரிச்சு போக வசதியா இருக்கும், இங்கயே இருப்போம் என ஒரு நற்சிந்தனை கும்பல் அங்கேயே பட்டறை போட்டது.

சே, அப்பாவும் அம்மாவும் சர்ச்சில எவ்வளவு இன்வால்வ்ட்டா இருப்பாங்க, நாமும் நம் குடும்பமும் இது மாதிரி கோவில் பூனையா இருக்கணுமே என மனம் அவசர திட்டமிட்டது. காசா பணமா திட்டம் தான் திகு திகுன்னு வருமே, செயலாக்கம்தேன் திரு திருன்னு முழிக்கும். அது பத்தி நமக்கென்ன கவலை, அத பின்னாடி பார்ப்போம்.

கோவிலின் உள்ளே, ஏசி குளிர் நல்லா போர்வை மாதிரி போர்த்துச்சு. காங்கிரிட்டு மேடையில் கொப்பும் குலையுமா மஞ்சப் பூ பூத்திருந்துச்சு. மூக்க உறிஞ்சு எப்படியாவது மோப்பம் புடிக்கலாம்ன்னா ஹூம்.. ஹூம்... பேப்பர் பூ மாதிரி பார்க்கத்தேன் பவுசு, ஸ்மெல்லு ஸ்மைலுதேன் என பல்லிளித்தது.

சைடு பூரா மறைச்சு பெரிய டெக்கரேஷன. கருப்பு கலர் மலை பேப்பர்ல, அங்க இங்க பூத்த வாடின செடி. ஏ நல்லாதேம்ல இருக்கு டெக்கரேஷன் அசத்திப்புட்டாங்களே என அடிமனம் கூவியது. நட்ட நடு செண்டர் மையத்தில , தெர்மகோல் பாறை வட்ட வடிவத்துல அடைச்சு இருந்துச்சு. ஆங்... அந்த தெர்மகோல் திறந்து உள்ள இருக்குற உயிர்த்த சேசு தெரிவாரு. ஐடியா நல்லா இருக்கே. நாமளும் வீட்டுல இதமாதிரி செய்ய பார்க்கணும். அது சரி குடில் வைக்கிறது கிறிஸ்துமஸ் தான, ஈஸ்டருக்கும் அலவ்ட்டா... அலர்ட்டா யோசிக்கணும்.

அலம்பலா டிரஸ் பண்ணிக்கிட்டு விளம்பரம் படம் எடுக்கப் போறாங்களோ என ஐயப்படும் வகைகளில் ஐயாக்களும் அம்மா மார்களும். இண்டெர்வியுக்கா வந்திருக்காக இம்பரஸ் பண்ணிரதுக்கு என கேக்கலாம்ன்னு தோணுது சில கோட்டு போட்ட கனவான்கள பார்க்கும் போது.

சுத்தமா, உங்களுக்கு சௌகரியமா ஏதாவது உடுத்துனா என்ன. ஏன், என்ன மாதிரி ஒரு டீ சர்ட்டோ அரை கை சட்டையோ போட்டா போதாது. சமூக அங்கிகாரத்துக்கு இங்கயும் கடை விரிக்கணுமா என நான் கேட்டால், ‘ஏண்டா ஊரோட ஒத்து வாழேன் என சில நல்ல இதயங்கள் வாளெடுக்கும்.

பூசையின் முன்னுரை ஒரு கிரகஸ்தனின் குரலில் தொடங்கியது. பரவாயில்லையே, மக்களை முன்னிறுத்தி நல்லாதான் நட்த்துறாங்க கோவில என ஷொட்டு சொட்டு சொட்டாய் வழிந்தது.

முந்தி பூசை வேற மாதிரி இருக்குமே. இப்ப புதுசாவில்ல இருக்கு. ஆல்பாவும் ஒமேகாவும் என மெழுகுவத்தில கோடு போடுவாரே எங்க அது. இந்த இரவிலேதான், இந்த இரவிலேதான்னு ராகம் போட்டு போட்டு வாசகமா வாசிப்பாங்களே எங்கே அது. தீர்த்தம் மந்திரிப்பாங்களே எங்க அது என சில பூசையின் பிர்காக்களை காணவே இல்லை. இப்ப மாத்திட்டாங்களோ, நமக்கு சொல்லவே இல்ல. ஆடிக்கும் அம்மாவாசைக்கும் அங்கனக்குள்ள போனா அப்படித்தேன்.

பிரசங்கத்துல பெரிய வெடி பத்த வைச்சாரு நம்ம சாமியாரு. மக்களே, மக்களின் மக்களே, பெருங்குடி மக்களே, பூசை முடிஞ்சதும் குடிக்கப் போற மக்களே. 1986 ல Last Temptation of Jesus படம் பார்த்துருக்கீங்களா, இல்ல Da vinci Code நாவல் படிச்சுருக்கீங்களா, படமாவது பார்த்துருக்கீங்களா, சரி கேமரூன் படம் The Last Tomb of Jesus அதாவது பாத்துருக்கீங்களான்னு கேள்விய தூக்கி நம்மகிட்ட வீசுனாரு. ஒண்ணும் விளங்கல.

சாமியார் பாராட்டினாரு. பரவாயில்லையேப்பா, இவ்வளவும் கேட்ட பின்னாலயும் நீங்க கோவிலுக்கு வந்திருக்கீங்களே உங்கள பாராட்டணும். நீங்க எத நம்புறீங்க, இந்த வேத புத்தகத்தையா, அல்லது அந்த கதைகளையா என கேட்டாரு. என்ன பதில் சொல்றது எனக்கு புரியல. பைபிள தான் நம்புறோம் என சிலர் குரல் கொடுதாங்க.

என்னுடைய பகுத்தறிவு கொஞ்சமே கொஞ்சம் முழிச்சு, ஒரு கேள்வி கேட்ட்து. சரிப்பா, வெள்ளி கிழமை சேசு, சிலுவையில செத்தாரு. கூடி இருந்தவங்க எல்லாம், ஆமா செத்துட்டாருன்னு சொல்லி அவரோட உடம்ப கல்லறையில வைச்சுட்டு போயிட்டாங்க. அப்புறமா வந்து பார்த்தப்போ அங்க உடம்பு இல்ல. அவரு உயிர்தெழுந்துட்டாரு.

அப்படின்னா என்னதான் நடந்துச்சு. ஆவியை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன் என சிலுவை மரத்தில் தொங்கிய படி யேசு கொடுத்த உயிரை தந்தை திரும்ப கொடுத்து விட்டாரா. அந்த உயிர் திரும்பி புதைக்கப்பட்ட உடலில் புகுந்து கொண்டதா.

இது புதுமை அல்லவா. அற்புதம் தானே, மிகவும் நல்லதல்லவா. இத வைச்சே விட்டத பூரா புடிச்சு புடலாமே. மக்கள பூரா அவர் வசம் திருப்பி புடலாமே, அத ஏன் விட்டுட்டாரு.

அப்படி திரும்ப கிடைத்த உடலையும் உயிரையும் ஏன் உடனிருந்த சீடர்களே அடையாளம் காண முடியாமல போனது. கை கால்களின் ஆணி காயத்தை காண்பித்து தன்னை அவர் அறிமுகம் செய்தாரே. அதன் பின்னர் ஏன் நாற்பது நாளில் இந்த அற்புத மரணம் வென்ற உடலும் உயிரும் ஏன் வானகம் செல்ல வேண்டும்.

கேள்வியின் வேர்கள், கொஞ்சம் கிளை விட அது போகும் திசை பார்த்து நான் விழித்தேன். பயந்தேன். இது தேவையா, விடை காண முடியுமா, விடை கிடைக்குமா. விடை தெரிந்தால் கூட விடை புரிந்தால் கூட பயன் உணடா.

‘டாடி வீட்டுக்கு போவோமா, பசிக்குது, தூக்கம் வருது’ செல்ல மகள் என் கை சுரண்டி கூப்பிட. ஐய்யோ, மணி 12 ஆச்சே, நாளைக்கு ஆபிஸுக்கு போணுமே. ஆமா அந்த கஸ்டமர் கடிப்பானோ. சே இந்த வண்டி பார்க்கிங்கில இருந்து வெளிய எடுக்க முடியலயே. இனிமே வண்டிய விடும் போது எடுக்கறதுக்கு தோதா விடணும்.

இப்ப வீட்டுக்கு போற வழியில எங்க ஈஸ்டர் எக் கிடைக்கும்.

கேள்விகளும் கடமைகளும் சிந்தனையை ஆக்கிரமிக்க கோவிலில் கேட்க ஆரம்பித்த கேள்வி ஏங்கோ புதைந்து போனது.

தலைவன் நமக்கு கிடைப்பாரா

பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் வந்தாச்சு.

அவங்க செயிப்பாங்கன்னு தெரியுமப்பா, அது எதிர்பார்த்த்துதான. திமுக ஜெயிக்கும் என்றுதான் நான் அப்பவே சொன்னேனே என எல்லோரும் சொல்கிறார்கள். என்றாலும் இந்த முடிவில் யாருமே எதிர்பார்க்காதது இரண்டு நிகழ்ந்திருக்கிறது.

ஒன்று. அதிமுக வின் டெப்பாஸிட் காந்தி கணக்கில் எழுதப்பட்டதும், சீனியர் கட்சிகளால் தீண்டாமை அறிவிக்கப்பட்ட பா.ம.க. ரேஸில் இரண்டாம் இடத்திற்கு வந்ததும்.

இது எப்படி நடந்தது, அதிமுக தேர்தல் பணி சுணக்கம், அது வன்னியர் இடுப்புப் பட்டை (பெல்ட்), விஜயகாந்த் கலகல என எத்தனை காரணங்கள் நாம் கேட்டாலும் தெளிவான ஒரு காரணத்தை சொல்ல முடியவில்லை. என்றாலும் இத்தனைக்கும் காரணமானவர் ஒருவர் உண்டு.

அவர் சாமான்யன்தான், ரேஷன் கடை கியூவில் 5 வதாய் நின்று கொண்டிருக்கிறார். பொதுஜனம்.

ஹலோ... மிஸ்டர் பொதுஜனம், உங்களப்பத்தி தான் ஊரு உலகம் எல்லாம் பேச்சு. காசு வாங்கிகிட்டு நீக்க ஓட்ட விக்கிறீங்கன்னு. நீங்க காசு வாங்குறீங்க, அது சட்டப்படி குற்றம். அநேகமா இது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நம்புறோம்.

வாங்கின காசுக்கு சூடம் அடிச்சு சத்தியம் செஞ்சு உங்களுக்குத்தேன் ஓட்டுப் போடுறேன் என சொல்லிவிட்டு ரகசிய ஓட்டளிப்பு தானே செய்கிறீர்கள். அட்டைப் பெட்டி தடுப்புக்கு பின்னால போய், அமுக்குறது நீங்கதான.

சாமிக்கும் சத்தியத்துக்கும் கொடுக்குற மருவாதைய, நம்பிக்கைய நம்ம சட்ட்த்துக்கும் எப்போ கொடுப்பீங்க. ஒரு நாள் வாங்குற காசுல எவ்வளவு காலம் வண்டியோட்டலாம். மனசாட்சிக்கு வஞ்சகமில்லாம வாங்கின காசுக்கு ஓட்டு போடுறீங்க என சில அரசியல் கட்சிகள் சொல்லுது. ஆனா மெய்யாலுமே அங்கனக்குள்ள என்ன நடக்குதுன்னு என்னைப் போல பொது ஜனத்துக்கு தெரியவே இல்லை. உங்கள பத்தி விளக்கமா விவரமா சொல்ல ஒரே ஒருத்தருக்கு முடியும்ன்னு நம்புறோம். ம்... அவரு பேர நாம சொல்றதுக்கு நமக்கு இல்லீங்களே அஞ்சாத நெஞ்சம்.

அங்கய்க்கும் இங்கய்க்கும்மா கட்சி தாவி தாவி ஜம்பு அரசியல் பண்ணுற ஐயாகுட்டிய போன தேர்தல்ல தோக்க வைச்சீங்க. இப்ப, . தைலாபுரம் விட்டு போயஸ் வரை போயி பேரம் பேச வைச்சிட்டீங்க. தோள்ல துண்ட மாட்டிக்கிட்டு தோட்டம் தோட்டமா போப்போறாரு

யம்மா, தாயி, இது உங்களுக்கே நல்லா இருக்கா, காச வாங்கிகிட்டு வாக்களிக்கிறார்கள் என எத்தனை காலம் சொல்லப் போகிறோம்.

குலை குலையா மந்திரிக்கா, கொள்ள அடிச்சவன் எங்க இருக்கான் கோபால புரத்துல குடியிருக்கான்ன்னு கும்மியடிச்சிக்கிட்டு ஒரு கூட்டம் உங்க பின்னால வந்துச்சு. ஆனா நீங்களோ,

குத்தடி குத்தடி ஜைலக்கா, குனிஞ்சு குத்தடி சசியக்கா, தொங்குதைய்யா டோலாக்கு, லீவு விடுறா கட்சிக்குன்னு அரசியல் பண்ணாம ரெஸ்ட் எடுக்குறீங்க.

ஜாதகம் ஜோசியம்ன்னு நம்பிக்கிட்டு, நம்ப வேண்டிய நல்ல தலைவர்கள மதிக்காம மிதிச்சா எப்படி. ரூட்ட மாத்துங்க, நிர்வாக திறமையும், ஆளுமையும் நிறைந்த தங்களை மூட நம்பிக்கையும், மனித நம்பிக்கையின்மையும் முடக்கலாமா.

நாட்டு நலனில் அக்கறையும், தொலை நோக்கு பார்வையும், ஆளுமையும், அன்பும் கொண்ட ஒரு தலைவன் நமக்கு கிடைப்பாரா.