இறைவன் இருக்கின்றாரா !!!!


ஒரு ஒரு இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள். உடனே காப்பாத்து.

கட்டளை போல் மனதில் தோன்றியது. கண் முழித்து திரும்பி பார்க்க, ஆலயத்தில் அத்தனை பேரும் பிரார்த்தனையில் மூழ்கியிருந்த்னர். எப்படி இது. மறுபடி கண் மூட, அதே குரல். திடுக்கிட்டு விழித்தேன். என்ன இது. தலை உலுக்கி ஆலயம் விட்டு என் மருத்துவமனை வந்தேன்.

பார்க்க வேண்டிய நோயாளிகள் என பெரிய கியூ ஒரு புறம், எனது ஆலோசனை கேட்க என உதவியாளர் சில மறு புறம். எனக்கு மட்டும் வேலை ஓடவில்லை. அந்த குரல் திரும்ப திரும்ப கேட்கிறது. மேசையில் உள்ள ஸ்டெதஸ்கோப்பை தோளில் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். பார்வை பட்ட இடத்தில், மார்சுவரி. பிணவறையின் முன் கூட்டம் கூட்டமாய் ஆட்கள். ஏதோ செலுத்தப்பட்டவன் போல் நான் நடக்கத் தொடங்கினேன். ஏழை பணக்கார பாகுபாடின்றி உடல்கள் சேமிக்கும் இடம். கலைந்த தலையுமாய் கண்ணில் நீருமாய் உறவுகளின் கூட்டம்.

கூட்டம் கடந்து மார்சுவரியின் முன்னறைக்கு வந்தேன். பதட்டமாய் அட்டெண்டர் ஓடி வந்தான். என்னை எதிர் பார்த்திருக்க மாட்டான். என்ன சார் நீங்க வந்திருக்கீங்க. அவனுக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை. மெளவுனமாய் நகர்ந்து உள் சென்றேன். எனை தொடர்ந்து அவனும் வந்தான். நீண்ட அறையில் வரிசையாய் மேசைகள், அடுக்கி வைக்கப்பட்ட உடல்கள். ஆசிரியர் காவலர் எனும் அடையாளம் இல்லை. பொதிந்த துணி மூட்டையில் லேபள் ஒட்டி பெயர். அமைதியாய் நடந்து ஒவ்வொரு மேசையாய் கடந்தேன். சட்டென நின்றேன். ஏன் நின்றேன் என எனக்கே தெரியவில்லை. கண் மூட அந்த குரல் கேட்ட்து. ஒரு இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள். உடனே காப்பாத்து.

நான் நின்றதை பார்த்த்தும் அவன் சொன்னான் ‘இது பூட்ட கேஸ் சார். வீட்டுல தீ பட்டு ஆக்ஸிடெண்ட். நேத்து கொணாந்தாங்க’. கை அனிச்சையாய் ஸ்டெத் எடுத்து உடலின் மார்பில் கொடுத்தேன். அமைதி. தலைக்கு மேல் சுழலும் பேன் சத்தம் கரக்... கரக்.... என கேட்ட்து. கை, கால் என தீ படாத இடங்களை தேடி தேடி பொருத்தினேன். நகர முடியாமல், சுற்றி சுற்றி வந்தேன். எனது தவிப்பு எனக்கே புரியவில்லை. அட்டெண்டெண்ட் கலவரமானான். ‘ரிலேஷனா.... சார்...’ என்னவென்று சொல்வது, மண்டைக்குள் கேட்கும் குரல் இவனுக்கு புரியுமா.... திரும்ப திர்மானித்து நடந்தேன். கால் பகுதி போர்வையின் முடிச்சுக்குள் அடங்காது வெளியில் இருந்த்து. வெண் நிற பாதம். சட்டென ஸ்டெத் காலில் வைத்தேன். லப்... டப்.... பதறிப் போனேன். எதிர்பார்க்கவில்லை. நம்பிக்கை இல்லாதவனாய் மறுபடி கேட்டேன். துல்லியமாய் தாள் லயத்தோடு இதயத் துடிப்பு. பரபரப்பானேன். அடுத்த சில நிமிடங்களில் மளமள வென நிறைய காரியம் நடந்த்து.

அவசர சிகிச்சை பிரிவுக்கு மாறுதல். சிகிச்சை. அவசரப்பட்டு இறந்த்தாய் சொன்ன மருத்துவர் மேல் புகார். எப்படி ரீயாக்ட் பண்ண வேணும் என தெரியாத உறவுகளின் நன்றி. நெஞ்சு நிமிர்த்தி எனது அடுத்த பணி செய்ய விரைவாய் நடந்தேன்.

பின் குறிப்பு :
இது கதை அல்ல. நிஜம்.
மண்ணெண்ணை ஸ்டவ் பத்த வைத்த போது விபத்தில் சிக்கி, மரணத்தை முத்தமிட்டு பின் மீண்டு வந்தவர்.

மார்சுவரியில் உடல் என மேற்குறிப்பிட்டு நான் சொன்னது என் நண்பர்.

வெற்றிகரமான சாப்ட்வேர் நிறுவனத்தின் ஸ்தாகபர்.
வலைப் பதிவர்.
அவர் வாழ்வு எனக்கு சொல்லிய பாடம் தாக்கம் பகிர்ந்து கொள்ள பெறுமை கொள்கிறேன்.

http://www.stonebridgeinfolinks.com/

கம்யூனிச கடுகு – விவாத விருட்சம் – மேலும் விரிகிறது


கம்யூனிசத்தில் தொடங்கி, யூதத்தில் பயணிக்கிறது நம் பதிவின் பின்னூட்டங்கள்.
தகவல் பட்டரையாக பட்டையை கிளப்புகிறது.

நன்றி திரு ஜோ பாஸ்கர்,

பெயரில்லா வினாவிற்கு விரிவாக விளக்கமாக விடையளிக்க ஆழமாமாகச்சிந்திக்க அலசி ஆராய வாய்ப்பளித்த உங்களுக்கும் படுக்காளிக்கும் ஆச்சிக்கும் எனது நன்றிகள்.

வினாவிற்கு குறும் பதில் :

இயேசு கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை துவக்கினார். அவர் பிறப்பால் யூதர். ஆனால் முழுக்க முழுக்க யூத மத பழக்க வழக்கங்களையும் கொள்கைகளையும் எதிர்த்து, போதித்து, செயலாற்றி அதன் காரணமாக யூதர்களால் கொலை செய்யப்ப்பட்டவர்.

1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது.
2. யூதர்கள் அன்றும் இன்றும் என்றும் கிறிஸ்துவை கிறிஸ்துவத்தை எதிர்ப்பவர்கள்.
3. இயேசு தானே கிறிஸ்துவத்தை நிறுவி, அதன் கொள்கைகளை வகுத்து, செயல் பாடுகளை விளக்கி தனக்குப்பின் ஒரு தலைவரையும் நியமித்து அவருக்கு சாவியை வழங்கி அந்தப்பாறையின் மீது திருச்சபையை கட்டி வளர்ப்பவரும் அவரே.

விரிவான பதில் :

1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது :பன்னிரண்டு வயதிலேயே தாய் தந்தையை தவித்து தேட விட்டு விட்டு யூத மத அறிஞர்களோடு எதிர் வாதம் புரிந்தவர் இயேசு.

"கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல்" - இது யூத மத நெறி. "எதிரிக்கும் அன்பு செய் - ஓர் கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" - இது இயேசுவின் நெறி.
ஒய்வு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற சட்டத்தை எதிர்த்தவர். "விபச்சாரம் செய்பவளை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்" - யூத சட்டம். "உங்களில் பாவம் இல்லாதவன் அவள் மீது முதல் கல் எறியட்டும்" என்று மன்னிப்பது இயேசு. மதலேன் மரியாளை மனமார மன்னித்த மனிதாபிமானி இயேசு.
"யூத இனம் தவிர மற்ற இனங்களெல்லாம் தாழ்த்தபபட்டவை; அவர்கள் தீண்டத்தகாதவர்கள்" - இது யூதம். ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்த சீர் திருத்தவாதி இயேசு.
ஒருவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் முடிக்கலாம். அதே போல் ஒரு பெண்ணும் குழந்தை இல்லாமல் ஒரு கணவன் இறந்தால் அவன் சகோதரர்களே அவளை மணக்கலாம். இது போன்றவற்றை எதிர்த்துக்குரல் எழுப்பியவர் இயேசு.
மீட்பர் ஒருவர் வருவார் விடிவு தருவார் என்று இன்னும் எதிர் பார்த்த்துக்கொண்டிருக்கிறது யூதம். தானே அந்த மீட்பர் மெசியா என்கிறார் இயேசு.
குருக்கள் மன்னர்களுக்கு சமமானவர்கள் - வரை முறை களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் - எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் - இது யூதம். ஆனால் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு உங்களில் தலைவனாக விரும்புபவன் எல்லோருக்கும் வேலையாளாக இருக்கட்டும் என்றவர் இயேசு.

தொழு நோயாளிகளை ஊருக்குள்ளேயே அனுமதிக்காமல் நீக்கி வைத்தது யூதம் - அவர்களை தேடி சென்று பாவங்களை மன்னித்து ஊர்க்குளத்தில் குளிக்க்கச்சொல்லி குணமாக்கி சமுதாயத்தில் சேர்த்துக்கொண்டவர் இயேசு. ஒவ்வொருவன் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும் அவனது பாவமே காரணம். அதை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு - இது யூதம். தானே பாவங்களை மன்னித்து குணமளித்து யுத்தத்தை குட்டியது இயேசு.

ரோமைப் பேரரசு யூதர்களின் எதிரி எனவே வரி கட்டக்கூடாது என்றனர் சில யூதர். ஆனால் "சீசருக்குரியதை சீசருக்கும் இறைவனுக்குரியத்தை இறைவனுக்கும் கொடு" என்றவர் இயேசு.
யூத மதத்தின் மையமும் மிகவும் புனிதமனதுமான எருசலேம் ஆலயத்தை இடித்து விடுங்கள் - அதை மூன்றே நாளில் மீண்டும் கட்டி எழுப்புவேன் - என்றவர் இயேசு.யூதர்களின் எருசலேம் ஆலயம் முழவதும் இடிந்து விடும் - ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் கூட நிற்காது என்று கணித்துச்சொன்னவர் இயேசு.

கம்யூனிச கடுகு – விவாத விருட்சம்


தகவல் பரிமாற, தர்கிக்க, என தரமாக நம் வலைப்பதிவு வளர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஆச்சி படுக்காளி, அஞ்சரைப்பெட்டியில் கம்யூனிசத்தை தாளித்ததை, பின்னூட்டம் இட்ட திரு. ஜோ பாஸ்கர் அவர்களது எண்ணத்த்தை ஒரு பதிவாக்கி நேயர்களுக்கு அளிக்க, அதில் பின்னூட்டமாய் இன்னொரு கருத்து முத்து வந்தது. அதையும் இங்கு பதித்து இருக்கிறேன். தனிப் பதிவாய்.

தெரிய வேண்டும் என தேடலும், சக மனித மரியாதையும், மனித நேயமும் தமிழ் தொண்டுமாய் கைகள் பற்றி நாம் நடக்க வேண்டிய தூரம் இன்னும் உண்டு.


திரு. ஜோ பாஸ்கர் சொன்னது

// தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .//

பெயரில்லா சொன்னது...
உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன், கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை பரப்ப சொன்னாரா? அவர்தான் இந்த மதத்தை தொடங்க சொன்னாரா? உங்கள் கருத்து எந்த அளவுக்கு சரி? நான் படித்த வரையில் அவர் கடைசி வரை யூதர் என்று தான் சொல்லபட்டிருந்தது எது உண்மை? அவரை தூற்றியவர்கள் தான் பின்னர் கட்சி மாறி அவற்றின் பெயரால் கிறிஸ்துவத்தை பரப்பினார்கள் என்பது எந்த அளவுக்கு சரி? தயவு செய்து விளக்கம் தரவும். ( இது விவாதத்திற்கு அல்ல உண்மையில் ஒரு கருத்து பரிமாற்றதிர்க்காகத்தான் கேட்கிறேன்)

மர தமிழன்:

அடங்கியிருக்கும் சுவாரஸ்யமான சில கேள்விகளை நாம் மதத்தையும், கடவுளையும் தள்ளி வைத்து ஆராய்ந்தால் ஒருவேளை கடவுள் எங்கே இருக்கிறார் என்பது புலப்பட்டாலும் ஆச்சர்யமில்லை!!

இனிப்பு கண்ணா இனிப்பு !!!



இட்லி வடை ; வலை உலகில் அபிமானமும் வாசகரின் அன்பும் பெற்று, அரசியல், சினிமா, இலக்கியம் என ரவுண்டு கட்டி அடிக்கும் கலகல பதிவு மனை. ஒரு செய்தியும் அதன் தொடர்புடைய சிந்தையும் நான் எழுதி தர பிரசுரித்து உள்ளார்கள். படித்து நல்ல சில பின்னூட்டங்களும் வந்துள்ளன. இட்லி வடைக்கும் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும் சமர்பித்து கொள்கிறேன்.

இதை சாதிக்க உதவிய நண்பர் கோபி அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வில், இந்தியாவிலேயே இனிமை ஜாஸ்தி உள்ளவர்கள் .... கேரளாதான் என சொல்கிறது அறிக்கை. இது ரொம்ப பழைய மேட்டராச்சே, நம்ம பாட்டுக்கு ஒரு தலைவன் பாரதி சொன்னதுதானே,சேர நாட்டிள‌ம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்பது தானே என நினைப்பவருக்கு, இல்லைங்க இது வேற‌ ரூட். மேட்டர் வேற.

இது புதுசு கண்ணா புதுசு.

நாடெங்கும் ஆய்வு செய்ததில், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள‌ நோயாளிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களில் முதல் இடம்
கேரளாவுக்கு.

எனக்கு சுகர் இருக்குங்க, என பெருமையாய் போன தலைமுறையில் சொன்னது, அல்லது அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாய் பார்த்தது எல்லாம் பரணில் தேடி தூசி தட்டாமல் இன்றைக்கு பார்த்தால். அதெல்லாம் நாப்பது வயசுல சகஜமய்யா என பழகிக் கொண்டது இந்த தலைமுறை. (ஒரு விழா மேடையில் கவிஞர் வாலி அவர்கள் தலைமை ஏற்க வருகை தந்த கலைஞர் அவர்களை பார்த்து இப்படி சொன்னது நினைவுக்கு வருகிறது...தலைவா நீ பாப்புலர் ஃபிகர் உன்னை கண்டவுடன் ஏறுது என் ஷுகர்)

நீரழிவு எனும் சுத்த தமிழ் வார்த்தை கேட்டவுடன் பக் என பயமாய் இருக்கிறது. ஏதோ ஒரு பேரழிவு போல பூச்சாண்டி காட்டுகிறது. அதையே ஆங்கில மொழி மாற்றம் சாதாரணமாக்கி விடுகிறது. சக்கரை நோய், ஹும்... ரத்தத்திலா, யூரினிலா என சகஜமாக்கி விடும். கிராமத்தில் இப்படி சொல்வதை வெறுமே ஆங்கிலத்தில் சுகர்ங்க என ஸ்டைலாய் ஸ்வீட்டாய் சொல்லும் போது இன்னும் சூப்பர்.

அவருக்கு கன்னாபின்னான்னு சுகர். அசந்து படுத்தார்னா எறும்பு வந்து மொய்க்குது’ இனிப்பை கண்ணால கூட பாக்கக்கூடாது. என கண்டிப்புடன் கண்ணாடி தூக்கி விட்டு மாமி சொல்லி விட்டு நகர. சுகர் தான்... ஆனா கண்ட்ரோல்ல இருக்கு. அடிக்கடி சாப்பிடக் கூடாது, அப்பப்ப சாப்பிடலாம் தப்பில்ல என அசடு வழிந்து பச்சப் பிள்ள மாதிரி கேக்கிறார் நம்ம அப்புராணி மாமா, ஒரே ஒரு ஜாங்கிரியை... இந்த புரட்டு புரட்டுதே இது என்ன வியாதி.

வியாதி இல்ல. ஒரு சின்ன குறைபாடு. இன்சுலீன் எனும் த‌க்கூனுண்டு சமாச்சாரம் ரத்தத்தில குளுக்கோஸ் அளவை சமமாக்கி, தேவையானதை எடுத்துக்கிட்டு, போலாம் ரைட் என கழிவுக்கு அனுப்பி விட்டுவிட்டு, உடம்புக்கு வைச்சுக்கோ நீ என கொடுப்பது. சில சமயங்களில் கோவிச்சுக்குட்டு, மாட்டேன் போ தரமாட்டேன்னு தகராறு பண்ணுறதால உடம்புலயே இருக்க வேண்டிய ஸ்வீட் மெலடிஸ் கழிவாய் போறது தான் பிரச்சனை. இது அன்றி, சர்க்கரையை ரத்தத்திலேயே வைத்து கொள்வது (உடன்பிறப்புகளை இதய‌த்துல மட்டும் இடம் கொடுத்து), ப்ளட் ஷுகர்...

உணவு பழக்கம் முக்கிய வில்லன்னாலும், வேலை பளு, ஸ்ட்ரெஸ், போதிய ஓய்வின்மை இதெல்லாம் சைடு வில்லன். சில சமயம், இந்த சைட் வில்லன் பண்ற சேட்டை, மெயின் வில்லனின் சேட்டையை விட ஜாஸ்தினு நாம ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சுட்டோம்.

நிற்க.... தொடங்கின மேட்டர் கேரளாவுக்கு வந்தால். ஏன் கேரளாவில ஷூகர் கம்ப்ளைண்ட் ஜாஸ்தியாச்சுன்னு கேட்டா, அளவுக்கதிகமான தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகம் என காரணம் காட்டுகிறது ரிப்போர்ட். இதப் பத்தி நம்ம "பாலக்காட்டு சேட்டன் திரு மாரார்" கிட்ட கேட்டதுக்கு அவர் பரைஞ்சது என்னன்னா ‘தானா வளர்ர தென்னைமெரம். அதுல புடுங்கி எண்ண எடுத்தா என்ன ஏன் புடுங்கிங்கீறீங்கங்கறார்.

அங்கன பரைஞ்சாலே இந்தியாவிலே 95 சதவிகிதத்துக்கு மேலா எழுத்தறிவு, படிப்பறிவு உள்ளது கேரளாவில தான். தினசரி நியூஸ் பேப்பர் படிச்சுட்டே P.hd வாங்குற அளவுக்கு அறிவு ரோடெல்லாம் கொட்டிக் கிடக்குது. அந்த கேந்தியில லேசா தல சுத்துன உடன, ஒண்ணுக்கு மேலா ஒண்ணுக்கு போனவுடன ஓடிப் போய் டாக்டர பாக்கிற வினை எல்லாம் தான், இது மாதிரி பர்ஸ்டா வருது.

கலகலப்பா ஒரு பதிவு இருக்கும்யா, பாடிகார்டு முனிக்கு ஒரு கடிதம் இருக்கும்யா, என நகைச்சுவை தேடி வரும் இட்லி வடை வாசகர்களுக்கு வாங்கய்யா, உடம்ப நல்லா பாத்துக்கோங்க, நல்லவங்க கெடச்சா வந்து பழகுங்கய்யா...முடிஞ்சா சீனிய குறைங்க, டென்ஷன குறைங்க, உடற்பயிற்சி செஞ்சு, நல்லா கெதியா இருங்க என சொல்ல ஆசையும் அக்கரையும் உண்டுங்கோ.......ஷூகர்னு கேட்டாலே சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது இல்ல..

(லாரன்ஸ் / படுக்காளி.ப்ளாக்ஸ்பாட்.காம்) + அனுப்பிய நண்பர் R.Gopiக்கு நன்றி

http://idlyvadai.blogspot.com/2009/11/blog-post_5056.html

கம்யூனிச கடுகு !!!! நேர் வினை.


நுனிப்புல் மேய்ந்து நான் செல்ல, ஆழமாக உழுது அக்கினிக் குஞ்சாய் சில வைரப் பூக்கள், நிமிர்ந்த நன்னடையில்/ எழுத்தில் மின்னுகிறது. தங்கள் பார்வைக்கு இதோ.

நன்றி: திரு. ஜோ பாஸ்கர்.

அருமையான பதிவு.

சோஷியலிசம், கம்யூனிசம் இரண்டுமே மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை தான்.இந்தியா ஒரு சோஷியலிசக் குடியரசு. திருவள்ளுவரின் திருக்குறள் சோஷியலிசத்தை அடிப்படையாகக் கொண்டவை. புத்தன் ஒரு பொதுவுடமைப் பிரியர்.

பெரியார் ஒரு கருப்புச்சட்டைக் கம்யுனிஸ்ட். அண்ணா ஒரு சோஷியலிசவாதி.புரட்சித்தலைவர் பாடல்களும் கொள்கைகளும் வசனங்களும் ஆட்சி நெறிமுறைகளும் சிந்தனைகளும் சோஷியலிச வெளிப்பாடுகள். பராசக்தி காலத்து கருணாநிதி பிச்சைக்காரர்களை மாளிகைக்கு கொண்டு வந்த பொதுவுடைமைவாதி. (இப்போது பழுத்த முதளாளித்துவவாதி).

இயேசு கிறிஸ்து முழுக்க முழுக்க ஒரு பொதுவுடைமைவாதி. பணக்காரனை சொத்து அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கச்சொன்ன புரட்சிக்காரர். ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைவதை விட பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினம் என்ற போராளி.

கோவிலிலே வியாபாரம் செய்தவர்களை சாட்டையால் பின்னியெடுத்த தீவிரவாதி.

தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .

சந்தேகமே இன்றி இயேசு கிறிஸ்து ஒரு பொதுவுடைமைவாதி.

படுக்காளிக்கும் ஆச்சிக்கும் ஒரு வேண்டுகோள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் பொதுவுடைமை கொள்கைக்குள் அடங்காத, எனக்கு புரியாத இரண்டு விடயங்களை தயவு செய்து விளக்குங்களேன்.

ஓன்று. "இருப்பவனுக்கு மேலும் கொடுக்கப்படும். இல்லாதவனிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும்" .

இரண்டாவது. ஊதியம் பற்றிய உவமை: முதலாளி காலையில் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மதியம் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மாலையில் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். நாளின் முடிவில் சம்பளம் வழங்கும் பொது எல்லோருக்கும் ஒரே சம்பளம் வழங்குகிறார்.

காலையிலிருந்தே வேலை செய்தவர்கள், மாலையில் வேலைக்கு வந்து சில மணி நேரங்களே வேலை செய்தவர்களும் தங்களைப் போன்றே சம்பளம் வாங்குவதை எதிர்த்து போர்குரல் எழுப்பும்போது சம்பளம் கொடுப்பது தனது விருப்பம் என்றும் காலையில் வேலைக்கு சேர்ந்தவர் ஒத்துக்கொண்ட சம்பளம் அவருக்கு கிடைக்கும் பொது அடுத்தவர் சம்பளத்தைப் பற்றி கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை இல்லை என்கிறார்.

இது காலையில் சேர்ந்தவருக்கு இழைக்கப்படும் அநீதியா ?
மாலையில் சேர்ந்தவருக்கு வழங்கப்படும் தாராளமா ?

செய்தித்தாள் சொல்லாத கதை


சுவாரசியம் இல்லாம, மேம்போக்காய் தினசரியில் நாம் வாசிக்கும் செய்தியின் உள் சென்று பார்த்தால் இப்படி இருக்குமோ எனும் கற்பனையே இந்த கதை.
உண்மைச் சம்பவம் என சொல்ல எல்லா வசதிகள் இருந்தாலும், கற்பனை கதை என குறிப்பிடுவது குற்றமில்லை.

செய்தித்தாள் சொல்லாத கதை

கதை : ஜனனி
குளிர் காற்று மென்மையாய் அந்த இடத்தில் படர்ந்தது.
இரண்டு நாட்களாய் பெய்த மழையில் முற்றம் நனைந்து ஈரமாய் இருந்தது. நண்பகல் நேர சூரியன், தன் முழு வெப்பம் காட்டாது சீதோசனத்தோடு தோற்றுப் போயிருந்தான்.
தென்னை மர நிழல் தாண்டி, தாழ்வாரத்தில் கட்டில். பெரிசுகள் சிலர் நெருக்கி அமர்ந்திருக்க, மாதவன் வீட்டின் முன் மனிதர்கள் கூட்டம் சிறு சிறு குழுக்களாய். மாமா வந்தாச்சு, பெரியப்பா இன்னும் வரல. என்பதாய் சில குரல்கள். தெளிவில்லாத பேச்சுக் குரல்களின் நடுவே கனத்த அமைதி இருந்தது.

தரையில் சிந்திக் கிடந்த ரோஜா இதழ்களை புறம் தள்ளி சன்னல் ஊடே பார்த்தாள் கமலம். உறங்காத கண்கள் பார்வையை சற்று மங்கல் ஆக்கியது. பார்வை பட்ட இடம் ஒட்டாமல் மனசு, சுழன்று சுழன்று ஒரே சிந்தனையை சங்கிலியாய் சிந்தித்த்து. சட்டென வாழ்வு திசை திரும்பி விட்டதே. ஏதேதோ கனவுகள், என்னென்னவோ திட்டங்கள். எல்லாம் ஒரு நொடியில் மாறி விட்டதே. ஏன் இப்படி. எனக்கு மட்டும் ஏன் இப்படி. செத்து தொலைக்கலாம், அது பரவாயில்லை.
தொண்டை வரண்டு, வாய் புளித்த்து. சே...என்ன நினைப்பு இது. கேசவன் எனும் அந்த பிஞ்சு மகன் என்னை விட்டால் என்ன செய்வான். அவன் எப்படி தாங்குவான்.

எப்படியும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

விளக்கு கம்பத்தை பிடித்து கொண்டு சிறுவர்கள் சுற்றி வந்து விளையாடுவ‌து தெரிந்தது. யாரோ தன் தோள் தொட்டதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் கமலம். உறவினர் பெண். ஆதரவாய் தோள் தொட்டவள், குடி என்பதாய் சைகை காட்டி விலகினாள். கடுங்காப்பி, கருப்பட்டி இனிப்பில். எடுத்து கவிழ்த்து கொண்டாள். காய்ந்து இருந்த தொண்டையில் உஷ்ணமாய் பரவியது. நல்ல இதம். கொஞ்சம் ஆறுதல்.

புடவைத் தலைப்பால் வாய் துடைத்தாள். பழைய புடவை, லேசான அழுக்கு நாத்தம். கண்ணையும் வாயையும் அழுத்தி துடைத்தாள். விளக்காத பல்லை, அதே புடவைத் தலைப்பால் துடைத்தாள். மீண்டும் திரும்பி சன்னல் பார்க்க, தூரத்தில் ரங்கண்ணா. மூன்று மாதம் முன்பு அவர் வீட்டுக்கு சென்றது நினைவுக்கு வந்த்து.

‘தொழில்ல தீடீர்னு கெடுபிடி, என்ன செய்யுறதுன்னே தெரியல. இரண்டு நாள்ல மூணு லட்சம் கட்டலேன்னா, குடும்பத்தோட சாவ வேண்டியதுதான்’ அழுகையும் புலம்பலுமாய் மாதவன் வெடித்த போது. ‘வெள்ளிக்கிழமையும் அதுவுமா, என்னலே வெறுவாய்க்கலம் கெட்ட வார்த்த சொல்ற. வாய கழுவுலே. வாழ்க்கைன்னா அப்படித்தான்.
பணம் தானேலே, மூணு லட்சந்தானே. நாளைக்கு வீட்டுக்கு வா, அத்தாச்சிக்கிட்ட கொடுத்துட்டு போறேன்’ ஆதரவாய் சொன்ன வார்த்தையில் உருகினான் மாதவன்.

வார்த்தை வராமல் கண்ணில் நீர் மல்கி நிற்க, கமலம் அருகில் வந்து அவன் கை பிடித்து கண் அசைத்தாள். ரங்கண்ணா நல்லவன். சொன்ன மாதிரியே செய்தான். மூணு லட்சம். அய்யோ! இன்னைக்கு திருப்பி கேப்பானே. மாட்டான். ஆனா எப்போ கேப்பான். யேயப்பா... மூணு லட்சம் எப்படி செய்வேன்.

’மதினி மாதவன் பாஸ் புக் எங்க இருக்கு’ குரல் கேட்டு எழுந்தாள். இடுப்பு தடவி அல்மாரி சாவி எடுத்து திறந்தாள். கேசவன் சாப்பிட்டு இருப்பானா, தெரியலயே! உள் நோக்கி குரல் உய்ர்த்தி ‘யக்கா! கேசவனுக்கு ஏதாவது கொஞ்சம் ஊட்டி விடுங்க’ கம்மிய குரல் இருமல் வேறு தொல்லை செய்ய, பாதியில் இருமலாய் அந்த வாக்கியத்தை முடித்தாள்.

மனம் மட்டும் குமுறியது. ‘ராஸ்கல்!!! குடிச்சுட்டா லாரி ஓட்டுரது. ஒரு குடும்பத்தை சீரழிச்சுட்டானே. அவன் மட்டும் கையில் கிடைச்சான். அப்படியே!!!....’

சற்று முன் உட்கார்ந்து இருந்த அதே இட்த்தில் மறுபடி அமர்ந்தாள். என்ன செய்யுறது. தெரியல. வெறுமை. விரக்தி. இது கனவா. ஒரு வேளை கனவாய் இருக்க கூடாதா. எவ்வளவு நல்லா இருக்கும். சே! இரண்டு நாளா ஒண்ணும் ஓட மாட்டேங்குது, எப்போ கண்ணன் ஓடி வந்து சொன்னானோ, அப்ப ஆஸ்பத்திரிக்கு ஓடினது. அப்பல இருந்து.

‘அம்மா!’ கேசவன் கை சுரண்டி கூப்பிட்டான். தலை திருப்பி என்ன என்பதாய் மவுனமாய் கேட்டாள். அப்பா எப்ப எந்திரிப்பாரு. இரண்டு நாளா தூங்கிறாரே, எதுவுமே சாப்பிடலியேமா. அழுகை பொங்கியது. நெஞ்சு அடைத்த்து. யாரோ உறவின் முறை அவள் தோள் அணைத்து கதறினாள் ‘சாவுற‌ வயசா மாதவா. குத்துக் கல்லா நான் இருக்கேன், குத்து விளக்கு நீ போயிட்டியே. அப்பன் சாவு தெரியாத வயசுல பிள்ள’

கமலம் மாதவன் உடல் பார்த்தாள். ரோஜா மாலை பெட்டியை நிரப்பி இருந்த்து. மாலையில் இருந்து ஒரு எறும்பு அவன் உயிரற்ற உடலில் ஊர்ந்து கொண்டு இருந்தது. பின்னே அதனை தொடர்ந்து சில...வரிசையாய்...எந்த அசைவும் இல்லாது உடல். துக்கம் தொண்டையை அடைக்க, சட்டென கை நீட்டி அதை தட்டி விட்டாள்..

மாதவன் உடலில் விழுந்தாள். சில்லிட்ட உடல். சற்றே சுருங்கிய தோல். இல்லை. இது மாதவன் இல்லை. முந்தா நாள் பார்த்த என் மாதவன் இல்லை இது. அவனை இனி பார்க்க மாட்டேன். மூன்று வருடங்களில் எத்தனை நிகழ்வுகள். சந்தோசம், உரிமை. நிறைவான குடித்தனம்.

பெத்த அப்பனிடம் கூட இருபது வயதில் தயங்கி கேட்ட காசை, அவன் பையில் கையை விட்டு கல்யாணமான மூன்றே நாளில் எடுத்தேனே. அவன் பிரச்சனைக்காக உருகினேனே. என் இத்தனை சீக்கிரம் போனாய் மாதவா. கோர்வை இல்லாத உணர்வுகள். யம்மா!! யம்மா!! என வெற்று வார்த்தையாய் புலம்பல். அழுது வீங்கிய கண்கள் என கமலம் கதறினாள்.

செய்தி: (நேற்றைய தேதி)

திருச்சி :
நேற்று நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்தில் இருவர் மரணம் அடைந்தனர். இறந்தவர்கள் விவரம் மாதவன் (வயசு 29) மீரான் சாகிப் (வயசு 53)


கதை முடியும் முன் இவரையும் சந்தித்து விடுங்களேன் :

கண் திறந்து அவன் பார்த்தான். தொடர்ந்து குடித்ததில் நாக்கு தடித்து சுவை விட்டு இருந்தது. மெதுவாய் எழுந்து உட்கார தலை சுற்றியது. ஓவ் என அடி வயிற்றில் இருந்து வெற்று காற்று வாந்தி போல் வந்த்து. மூச்சு இரைத்தது. கண்கள் மூடி தலை உலுப்பினான்.

பக்கவாட்டு சாலையில் இருந்து சட்டென அந்த டிவிஎஸ் வந்த்தும் டொம் எனும் ஓசையும் கேட்க, பிரேக்கை மிதித்து குதித்து இறங்கினான். நல்ல மழை. அலங்கோலமாய் கிடந்த அந்த டிவிஎஸ் குறிவைத்து ஓடினான். செத்துருப்பானோ. வேகம் அதிகமோ. இல்லயே ஒரு 50 – 60 தான இருக்கும். ஸ்கிட் ஆயிருக்கும். குடித்திருக்க கூடாது, உடல் வலின்னு சொல்லி.... தப்பு.

வண்டியை நெருங்கி பார்த்தான். மார்புப் பகுதியில் வண்டி ஏறிய தடம் தெரிய, அந்த பகுதி கூழாகி இருந்த்து. ஐயையோ!! மனம் பதறியது. இரண்டு கையும் அனிச்சையாய் தலை பின்னால் சென்றது. வாய் சே! என்றது. அசைவு இருக்குதா என பார்க்க, குனிந்த போது பெரிய மீசை தெரிந்த்து. இல்லை செத்து விட்டான்.

சுற்று முற்றும் பார்த்து, ஆளில்லா அந்த தெருவில் மீண்டும் லாரி வந்து ஏறி விரைவாய் செலுத்தினான். படபடப்பு அடங்கி முதலில் பார்த்த சாராயக் கடையில் குடிக்க ஆரம்பித்தவன். இரண்டு நாளாய் குடிக்கிறான்.

சே! அந்த மீசை, அந்த சத்தம் தாங்கவே முடியல. எவ்வளவு உதறினாலும் போறதில்ல. குடிச்சா தேவல. வாய் கொப்பளித்து விட்டு சாராயம் மீண்டும் குடித்தான். அமிலம் போல் இறங்கி குமட்டிக் கொண்டு வந்த்து. வயிற்று சாராயம் தன் முகம் காட்ட, சற்று நேரத்தில் உடல் தளர்ந்து அந்த சுவரில் சரிந்தான். மெல்லமாய் முகம் இருக்கம் தளர்த்தியது.

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 28/10/09


வழக்கமாக செய்யும் அஞ்சாறு தானியங்களை எடுத்து தாளிக்காமல், வெறும் க்டுகை மட்டும் எடுத்து..... சாரி கம்யூனிஸம் மட்டும் எடுத்து தாளித்து உள்ளோம்.

படுக்காளி : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
நம் உலகின் கதவு திறக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஆச்சி : என்னடா பாட்டெல்லாம் பலமாயிருக்கு
படுக்காளி : ஆச்சி நான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்
ஆச்சி : 16 வயதினிலேல மயிலு ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேங்கிற மாதிரி இருக்குடா. ஏண்டா மீன் திங்க ஆசை வந்தா தூத்துக்குடி போ வேண்டியதுதான ஏன் வங்காளம் அல்ல கேரளா போன.
படுக்காளி : வங்காள நொங்கா ஒண்ணும் புரியல
ஆச்சி : பேன விட்டுபுட்டு ஈர பிடிக்குர பாரு. கம்யூனிச சிவப்புக் கொடி அங்க மட்டுந்தானடா படபடக்குது.
படுக்காளி : இல்ல ஆச்சி, நேத்து ஒரு சினிமா பாத்தேன், அதுல இருந்து தான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.
ஆச்சி : உன்ன சொல்லி குத்தம் இல்ல. புஸ்தகம் படிச்சுட்டு தானே பூரா பயலும் கம்யூனிஸம் பேசுறான்.
ஆமா இது பழங் கஞ்சியாச்சேடா, இப்போ எதுக்கு அதே வேக வைக்கிற.
படுக்காளி : ஆச்சி! இந்த மேசையில, அந்த சாக்பீஸ்ல உழைப்பு இருக்கு. மேசையில் இருந்து உழைப்ப எடுத்துட்டா மரத் தூள், சாக் பீஸ்ல இருந்து உழைப்பு எடுத்துட்டா வெறும் தூள்.
ஆச்சி : தூள் டக்கர்டா..... கிளாப்ஸ் அள்ளியிருக்குமே....

வெட்கத்தில் படுக்காளி நெளிய, ஆச்சி இடைமறித்து

ஆச்சி : அட அரை வேக்காடு, ஒரு காலத்தில சமூகம் பணம், ஜாதி, மதம்னு சொல்லி அடக்கி வைச்சாங்க. இப்போ எங்கடா இருக்கு. முதல் தலை முறை தொழில் அதிபர் ஓராயிரம் பேர் இப்ப இருக்கானேடா. இன்போசீஸ் மூர்த்தி, மைக்ரோசாப்ட் கேட்ஸ்னு அப்பன் பணத்தில் இல்லாம் தன் உழைப்புல முதலாளி ஆனானேடா.
படுக்காளி : அப்போ கம்யூனிசம் இன்னைக்கு இல்லையா
ஆச்சி : வெறுமன கொட்டாவி விட்டுட்டு முதலாளி போற கார், அவன் பங்களா எல்லாம் பாக்காம, கிட்ட போயி அவன் பொறுப்புணர்ச்சி, தில், திட்டமிடல் உழைப்பு இதெல்லாம் பார்த்தா நீயும் தொழில் அதிபர் தான்.
படுக்காளி : அப்போ கம்யூனிசம் வேஸ்டா.
ஆச்சி : அத யாருடா சொன்னா, நல்ல விசயம், நம்ம யேசு கிறிஸ்து சொன்ன அடிப்படை.
படுக்காளி : யேசு கிறிஸ்துன்னா!!! இந்த கிறிஸ்துவ மதம் உண்டாக்கினாரே அவரா
ஆச்சி : ஆமடா,

படுக்காளி : ஆச்சி, அவர் கடவுள். கடவுள் எப்படி கம்யூனிஸ்ட் ஆவார்.
ஆச்சி : நல்லா கேட்டுக்க. ‘வானத்து பறவைகளை பாருங்கள். அது விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. ஆயினும் உங்கள் வானகத் தந்தை அவற்றை போஷிப்பதில்லையா. எதை உண்போம், எதை குடிப்போம் எதை உடுத்துவோம் என அது குறித்து நீங்கள் கவலை பட வேண்டாம்.
படுக்காளி : ஆங்... ஆச்சி, இத நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சொல்லி இருக்காரு
ஆச்சி : என்ன்ன்னு
படுக்காளி : ‘மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்’
ஆச்சி : அதே தாண்டா. சமமான சமுதாயம் ஆன்மீகமா கம்யூனிசான்னு நீயே டிசைட் பண்ணு
படுக்காளி : ஆச்சி கம்யூனிசம் காத்து மாதிரி
ஆச்சி : ஏண்டா காணாம போச்சுக்கிறியா
படுக்காளி : இல்ல ஆச்சி, எங்கும் நிறைந்து இருக்கு. பில் கேட்ஸ்லயும் இருக்கு, பைபிள்லயும் இருக்கு, சினிமாவிலயும் இருக்கு. கம்யூனிசம் பேசினா, எல்லாரும் என்ன பிஸ்துன்னுவாங்க. கை தட்டெல்லாம் சல்லிசா கிடைக்கும்.

அதனால..... ஆச்சி நான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.

ஆச்சி : விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதை ராமனுக்கு சித்தப்பனான்னு ! கிளம்பிட்டியாடா....

சமர்ப்பணம்:

என் பதினைந்து வயதில் தொடங்கி மேடை நாடகம், ரேடியோ நாடகம் என என் கைபிடித்து இது தான் நடிப்பு, இது தான் கதை, வசனம் என பாடம் சொல்லிக் கொடுத்த என ஆசான் முல்லை எம். பெர்க்மான்ஸ் அவர்களை இந்த தருணத்தில் வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.

‘வாடுவதற்கா இந்த மலர்கள்’ எனும் மேடை நாடகத்தில் நான் கிறிஸ்துவ பாதிரியார். குண்டடிபட்டு அடைக்கலமாய் வரும் நக்ஸலைட் திவிரவாதியுடன் நடக்கும் விவாதம் விதைத்த்தே இந்த பதிவின் வித்து அல்லது மூலம்.