பக்கங்கள்

இந்த உலகத்திலயே இல்ல…

குமாரு பிறந்தவுடன் அம்மா சொன்னாள்…. 
ஏன் புள்ள எம்புட்டு அழகு. 
அவன மாதிரி அழகு……. இந்த உலகத்திலயே இல்ல… 

படிக்கப் போன போது… 
ஆசிரியை சொன்னார்….
ஏலே…. பாடத்த கேக்காம அங்க என்ன செய்யுற… நீ இந்த உலகத்திலயே இல்ல


சில வருடங்களுக்கு முன், குமாரை சந்தித்த போது அவனே சொன்னான்…
டே…ழேய்……….. மச்சான்…. செம போதை … நான் இந்த உலகத்திலயே இல்ல…


இன்று அஞ்சலி சுவரொட்டியில் வாசகம் சொல்கிறது……..
குமார்……. இந்த உலகத்திலயே இல்ல……

டாக்டரின் மருத்துவ அறிக்கை சொல்கிறது………….
குமார் அதி தீவிர போதை பழக்கம், இந்த உலகத்திலயே இல்ல………….

                                                                                                                     நன்றி………. டாஸ்மாக்….மக்ரோன் – 2 (சிறுகதை)

(மக்ரோன் கதையின் இரண்டாம் பாகம்…. இதோ உங்களுக்காக….

ஏன் இந்த விபரீதம், எதற்காக இரண்டாம் பாகம் என்றால், தெரியாமல் நடந்து விட்டது. முதலிலேயே சொல்லி விடுவோம்... இரண்டாம் பாகம் எனும் போது முதல் பாகத்தின் கதை தொடர்ச்சி இல்லை. இன்னும் சொல்லப்போனால் இப்பகுதியின் இலக்கும் பாதையுமே வேறு வேறு. கதை மாந்தர்கள், கதை களம் இரண்டையும் முதல் பாகத்தில் இருந்து கடன் வாங்கி விடலாம், வேலை சுலபம் என்றே தொடங்கினேன்.

பின்னர் ஒரு யோசனை, ஏன் நான் லினியராக சொல்லக் கூடாது, முதல் பாகத்தில் இருக்கும் வெற்றிடங்களை பிடித்து அதில் கொஞ்சம் ஈயம் பூசினால் நல்லதாயிற்றே… என ஒரு பரிசோதனை முயற்சி)

தூத்துக்குடி விமான நிலையம் சுத்தமாக இருந்தது. இரவல் வாங்கிய இயற்கையும், குழி தோண்டி நட்டு வைக்கப்பட்ட மரங்களுமாய் மினுங்கியது. மேல் தட்டு பயணிகள் அவசரம் அவசரமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரைகுறையாக ஃபோனில் கட்டளையிட்டார்கள்.

சுடச் சுட, அப்போது இறங்கிய விமானத்தில் இருந்து செந்தில் நடந்து வந்தான். பலமான காற்றில், தலைமுடியை பறக்க விட்டு, அதை ரசித்த வாறும் நடந்து வந்தான். குதியும் குலுக்கலும் அவன் நடையில் பின்னி இருந்தது. நடையில் ஒரு பலம் ஒரு உத்வேகம் இருப்பதை உணர்ந்தான். நம்மூர் காத்து பட்டவுடன சிலுத்துக்குச்சோ… தனக்குள் தன்னைப்பற்றி நினைத்து கொண்டான்.

கசாலி எங்கேயிருப்பான், ஏர்போர்ட் வருவதாக சொன்னானே… வந்திருப்பான்…  நிச்சயம் வந்திருப்பான், ஈமெயில் எழுதி கூப்பிட்டவன், ஃபோனில் … வாறியா… வா..வா…. எல்லாத்தையும் நான் பாத்துக்கிடுதேன்.. உன்ன ராசா மாதிரி கவனிக்க நான் காரண்டி… என்றானே…  சாரி, டிராபிக் ஜாம், என்றோ இல்ல வரும் போது வர்ற வழியில, ஒரு வேலை…… என்றோ சால்ஜாப்பு சொல்லாமல், சொன்ன நேரத்துக்கு வரும் நேர்மை கசாலியிடம் உண்டு. எங்கேயிருப்பான், அது சரி எப்படியிருப்பான். அவனை பார்த்தே ஒரு 10 வருடம் ஆகிவிட்டது. ஃபோட்டோ அனுப்பியிருந்தான், என்றாலும் கூட நேரில் பார்க்க ஒரு 10 வருட இடைவெளி என்பது அதிகம் தான்.

பார்வையாளர்களின் வரிசையில் கண்களை ஓட விட்டான். ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் தெரிந்த முகங்களாக பட்டது. இத்தனை பேரை எனக்கு தெரியுமா எனும் சந்தேகம் கூட துளிர்த்தது. இவர்… இவர்… பேர் தெரியல, ஆனா இவர்…… அவரே தான் என அவசர தீர்மானங்கள் அனிச்சையாய் வந்தது. அங்கு இரண்டாம் தூணுக்கு அருகில் அவன். கசாலி…. கசாலி மரைக்காயர்….. அவனே தான்… ஐய்யோ குண்டாயிட்டான்… அடப்பாவி….
அவனருகில் சென்று… கசாலி…………..என குரல் கொடுத்தான்… ஒரு கணம் திகைத்து கசாலி சிரித்தான். அந்த பார்வையில் ஒரு ஆச்சரியமும் திகைப்பும் இருந்தது. செந்தில் அவனை நெருங்கி கட்டிக் கொண்டான்…. கசாலி கை வளைத்து… கைக்கு எட்டிய செந்திலின் தோள் ஓரத்தை பற்றிக் கொண்டான்.

ஏ,….வெளுத்திட்டியே… ஃபேர் அண்ட் லவ்லி நெறையா போடுவியோ’ அப்பாவியாய் ஒரு அன்பு தொனிக்க கசாலி கேட்க… செந்தில் கசாலியை விடுவித்து அந்த நகைச்சுவையை ரசித்தான்…. காற்று அவர்கள கடந்து சென்றது. காற்றோடு கூட ஒரு காக்கி சட்டையும் வர, செந்தில் மெதுவாக நகர்ந்து, சுற்றி வந்து கசாலியுடன் இணைந்து கொண்டான்.
தப்பா நினைச்சுக்காத… பழைய ஸ்கூல் சேக்காளிதான, நம்ம செந்தில்தானன்னுட்டு…….. ஏல,,,, வால.. மக்கா… அப்படியெல்லாம் கூப்பிட்டு புட்டேன்.. ஆனா இங்க வந்து பாத்தா, அது தப்புன்னு தோணுது. நீ பெரிய ஆபிசர், வெள்ளைக்காரன் கண்ணுல விரல விட்டு ஆட்டுற ஆளு. மரியாத இல்லாம பேசுனது தப்பு. என்ன மன்னிச்சுரு…

செந்தில், கசாலியை ஆழமாய் பார்த்தான். மெதுவான குரலில் சொன்னான். ஏல… நீ என்னோட வாடிக்கையாளராவோ, அல்லது என்னோட கம்பெனி ஆளா இருந்தா நீ சொல்றது சரி. ஆனா நீ யார்… என் ஃப்ரெண்டு. உனக்கும் எனக்கும் உறவே நட்பு அதனாலதான். என்னேரமும் நான் பேங்கர் இல்ல… ஆபிஸ் போகும் போது நான் பேங்கர்… என் மகள் கிட்ட விளையாடும் போது நான் விளையாட்டுக்காரன்… உன்கூட உன் ஃப்ரெண்டு… இத பாரு..  நீ நீயா இரு.. நான் நானா இருக்கேன்… நான் தெளிவா இருக்கேன்.. நீ குழம்பாம என்னையும் குழப்பாம இருந்தா அதே சரியானதுதான்… போவோமா….

கசாலி, பேச்சொன்றும் வராமல்… மன்னிச்சுரு மக்கா.. நீ சொன்னது சரிடே… கரெக்ட்டா சொன்ன… ஹாங்.. என்ன செய்யுறது.. வெளிய தெருவு போவாம, உலகம் தெரியாம, நீ பேசுற மாதிரி சொல்லவும் வரல… நீ ரோசிக்கிற மாதிரி நினைக்கவும் தெரியல… வா..
இருவரும் அருகில் இருந்த உணவகத்துக்கு பேசிக் கொண்டே நடந்தனர். அவர்களோடு தேமே என்று டிராலியும் அதில் அடம் பிடித்து இடம் பிடித்த லக்கேஜூம் சென்றது. நண்பர்கள் அன்பில் உருகி, கைகள் இணைத்தவாறு நடந்தனர். இத்தனை வருசத்து கதைகளை உடனே பேசி கொள்ளும் ஆர்வம் இருவரிடத்திலும் இருந்தது.

தூத்துக்குடிக்கு அந்த உணவகம் பெரியதுதான். கண்ணாடி முகப்பும், கருப்பு குளிர் கண்ணாடியும் வரவேற்க்க… பாதையோரத்தில் வளர்க்கப்பட்ட க்ரோட்டன்ஸ் செடிகள் பச்சையை கண்களில் காட்டி பசுமையாக குளுமை என ஏமாற்றிக் கொண்டிருந்தன. காலியான ஒரு மேசை இருக்கையில் அமர்ந்து, இரு காப்பி என ஆர்டர் செய்தார்கள்.

அவர் எப்படியிருக்கார்…..இவர்…பேரு என்ன… யே அவன் எங்கயிருக்கான்………… ஐய்யய்யோ…………. அப்படியா.. நெசமாவா………… ஹா...ஹா..சூப்பர்.. இப்படி பல கேள்விகள் பல பதில்கள். தத்தம் கதைகள் பேசி, நேரம் போவதே தெரியாது மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பேரர் வந்து காப்பியை வைத்து விட்டு… சென்றார்… ஏதோ ஒரு பதட்டத்தில் இருந்தார். 60 வயதை தாண்டிய தோற்றமும், பேண்ட் சட்டை தலையில் ஃபேரர் தொப்பி என பூசி விட்ட நகரத்து பூச்சும் ஓட்டாமல் இருந்தார். கசாலி தேனீரை சாஸரில் கவுத்தி, அசைக்க துவங்கினான். எதிர் திசையில், செந்தில், தேனீரை மூக்கின் அருகில் கொண்டு வந்து, கண்களை மூடி நுகர்ந்தான், பின் மெல்லிய இதழ்களை கோப்பையின் ஓரத்தில் வைத்து, சத்தம் வராது, உறிஞ்சினான்… இனிப்பு இல்ல… சர்ர்கரை கலக்கவில்லை…
எதிர்ப்புறம் இருந்த கசாலியும் இனிப்பு இல்லாத ஏமாற்றத்தில், நிமிர்ந்து… ஏலெ… செந்தில். அதுக்குத்தான் உன்ன மாதிரி ஆளுங்களோட வரக் கூடாது. பாரு, ஒண்ணும் கேக்கவும் இல்ல கொள்ளவும் இல்ல… அவனா நினைச்சுக்கிட்டு சுகர் பேஷண்ட்டுன்னு சீனி போடாம வச்சுருக்கான்…
செந்தில் டக்கென மறுத்தான்... யாரு.. என்னைப் பாத்துட்டு... போடா… உன்ன பாத்து, உன் உடம்ப பாத்துத்தான் சினீ இல்லாம கொடுத்திருக்கான். எனக்கென்னடா ஜம்முன்னு வைச்சிருக்கேன் பாரு… நோ சுகர்.. நோ பி.பி..

கசாலி அதிர்ந்து கூப்பிட்டான்.. அண்ணாச்சி, சீனி இல்ல… காப்பியில…
பேரர் அதே பதட்டத்தோடு, கூடுதலாய் நடுக்கத்தோடு வந்தார். … இருங்க இருங்க… இந்தாங்க என ஒரு கோப்பையை மேசையில் வைத்தார். கோப்பையில் சீனி இருந்தது. செந்தில் ஏனோ எரிச்சலானான். இது என்ன முறை. என்ன பதட்டம், வேலை செய்வதில் கவனம் வேண்டாமா.. என்ன சொல்கிறோம் என்பதை கேட்க கூட இல்லாமல், இதென்ன நாகரீகம்.
சட்டென தன்னை அடக்கி கொண்டான். நீ வந்த இடம் வேறு, இது வரை நீ இருந்த இடம் வேறு. வேறுபாடுகள் உணர்ந்து உன்னை காத்து கொள்ள வேண்டியது அவசியம், என தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டான்.

ஆமா, இன்னிக்கு சாயங்காலமா தேர் ஓடும்
இல்லல.. நாளைக்குத்தான் தேரு, இன்னிக்கு ஒரு பூசைதான்..
ஓ…
ஏ.. பொருட்காட்சி போட்டுருக்காங்க…. போவோம்ல… டெல்லி அப்பளம் சூப்பராயிருக்குது…
சட்டென பேரர் வந்து, மேசையில் இருந்த சீனிக் கோப்பையை எடுத்து நகர துவங்கினார். செந்திலுக்கு கோபம் பீறிட்டது.

ஒரு நிமிசம், யாரக் கேட்டு, இந்த மேசையில இருந்தத எடுக்குறீங்க…
அவர் தடுமாறினார். சீனி போட்டிருப்பீங்கன்னு…

போட்டோமா.. நீங்க பாத்தீங்களா… அப்புறமும் என்ன இது, எங்க மேசையில இருந்து ஒரு பொருள எடுக்கும் போது என்கிட்ட கேக்க வேண்டாமா…

கோபத்தில் செந்திலின் ரத்தம் வேகமாக ஓடியது, காது விடைத்தது, குரல் உயர்ந்தது, கைகளும் கால்களும் படபடத்தன… வார்த்தைகளும் குரலும் தடித்தன. கசாலி சூழ் நிலை பார்த்து, போங்க.. வைச்சுட்டு போங்க … அப்புறம் பாக்கலாம என அவரை அனுப்பி விட்டான்…செந்திலை திரும்பி பார்த்தான்…
வெளங்காதவனே… ஏம்ல இப்படி ஆடுற… அவன் செஞ்ச தப்புக்கு நீ இப்ப போட்ட ஆட்டம்…. உன் உடம்ப இல்ல புடிக்கும்… கைய பாரு, இன்னும் நடுங்குது… பிபி.. இல்லியா… நம்மூரில நல்ல டாக்டர்கிட்ட காட்டு.. ஏண்டா…ஏண்டா… ஏன் இப்படி…

செந்தில் தலை குனிந்தான்… சட்டென தலை நிமிர்ந்து… தெரியுது.. தெரியுதுடா… இவ்வளவு கோபம் இவ்வளவு பதட்டம் அவசியமில்லேன்னு… ஆனா நடந்துருது… இந்த வேகம்… இந்த முனைப்பு… இந்த உணர்ச்சி சில நேரம் சரியாயிருந்திருக்கு….. வேலையில என் கோவத்த பாத்திட்டு…கீழ வேலை செய்யுறவன் ஓடிப்போயிருவான். அடுத்த வேளை ஒழுங்கா செய்வான்… ஆனாலும் இந்த கோபம், இந்த சத்தம்…. சில நேரத்தில எனக்கு அவசியமில்லைன்னு தோணுது…

அமெரிக்காவில இப்படி எல்லாம்………. ராவா…….. பச்சையா கோவமும்… உணர்ச்சியும் இல்லாமத்தான் நிறைய பேர் இருக்காங்க… எங்க ஆபிசுல ஒரு தடவ, ஒருத்தன், எங்க கம்பெனிக்கு துரோகம் செஞ்சுகிட்டு, நல்ல புள்ள மாதிரி பம்மி கிட்டுருந்தான். என் கூட இருந்தவன், எனக்கு கீழ வேலை செய்யுறவன்… நல்லா சிரிச்சு சிரிச்சு பேசி, அந்த ராஸ்கல வெளிய அனுப்பினான்…. நான் மட்டும் பேசியிருந்தேன்… அவன கிழிச்சிருப்பேன்…

எனக்கு ஆசையா இருக்கும்… ஒரு டிப்ளோமாட்டிக்கா… ஒரு நறுவிசா.. கோவமே இல்லாம இருக்கணும்ன்னு… ஆனா முடியறதில்ல…

ஒரு மௌனம்... கசாலி செந்திலை தேற்றும் விதமாய்... சரி விடு… இதுக்கெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சா அப்புறம் வாழவே முடியாது. ஏல… குத்தமும் குறையும் இல்லாம இருக்க நாம என்ன மிஷினா… மனுசன்ல… மனுசன்…. ஜாலியா இரு… கமான் போலாம்… வா….

கசாலி நகர, செந்தில் அம்மேசை அருகிலேயே நின்றிருந்தான். பில் வைதிருந்த அட்டையை பார்த்தான். தன் பர்சில் இருந்து இன்னும் பணம் எடுத்து, செந்தில் அதிகப்படியாய் ஒரு 20 ரூபாய் தாளை பில் ஒளிந்திருந்த சிவப்பு தோல் பையில் வைத்தான். ஏதோ அவனுக்கு தெரிந்த சாரி கேட்கும் வழி…

மறு நாள் காலை செந்திலுக்கு புத்துணர்ச்சியாய் புலர்ந்தது. காக்கைகளின் சத்தமும், முரட்டு குளிர் காற்றும் இதமாக இருந்தது. சிந்தியா டீச்சர் பற்றிய கனவு கலைந்திருந்தது. மல்லிகை பூவை அவர் வைத்திருப்பாரா இல்லை படத்துக்கு போட்டிருப்பாரா என ஆவல் தோன்றியது. ம்.. இப்படி ஒரு சீன்ல, அல்லது ஒரு டயலாக்குல திருந்துற மாதிரி சினிமாவுல தான் நடக்கும்… நெஜ வாழ்க்கையில திருத்துறதுங்கிறது ரொம்ப கஷ்டம்…. காற்று அவன் மேலே பிடிவாதமாய், அழுத்தமாய் பட பட வென அடித்து வீசியது.

குட்மார்னிங்… கையில் கொடுக்கப்பட்ட தேனீர் சுவைத்தபடி கேட்டான். நம்மூர்ல காத்து எப்பவும் இப்படித்தான் அடிக்குமில்ல..

கசாலி, சிரித்தபடி.... ஏல... செந்திலு... ஆடிக்காத்து… அம்மி குழவிய தூக்கும்ன்னு கேட்டதில்ல… அது சரி… அம்மு கிழவின்னு சொல்லியிருந்தா நீ நினைவுல வச்சிருப்ப…
செந்தில் அக்கேலியை ரசித்து சிரித்து... போடா.... அரிசிக் குருணை…. உன் திருவாய தொறந்தாலே இப்படித்தானால… மூடு… காலையில மூட கெடுக்காம கிளம்பு… தங்கத்தேர் ஓடப்போகுதில்லா… சீக்கிரம் குளிச்சுட்டு வா… என மீதி கோப்பையை வாயில் கவிழ்த்து விட்டு அவசரமாக இறங்கினான்.

கோவில் இருக்கும் அந்த பகுதி கூட்டத்தில் திமிறிக் கொண்டிருந்தது. மனித தலைகள், எங்கு பார்த்தாலும் மனித தலைகள். குடும்பங்கள் புத்தாடை அணிந்து, சிரிப்பு மேக்கப்பை அதிகப்படியாய் போட்டிருந்தார்கள். இளம் ஆண்கள் கூட்டமாய் தோளில் கை போட்ட வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். காரணம் எதுவும் இல்லாமல் சத்தமாய் சிரித்தார்கள். பெண்கள் அலங்காரத்துக்கு மெனக்கெட்டது தெரிந்தது. அதே கலர் வளையல், அதே கலர் செருப்பு என கடை கடையாய் ஏறி இறங்கி இருப்பது… அவர்களை ஏற இறங்க பார்த்தால் தெரிந்தது.குழந்தைகள் சில கூட்டம் கண்டு மெரிசலாகி, உச்ச ஸ்தாயியில் ராகம் பாடிக் கொண்டிருந்தார்கள். அவற்றின் அழுகை நிறுத்த, அப்பா விசிறி வீச, அம்மாக்களோ செவிட்டில் அடித்து கொண்டிருந்தார்கள்… பேசாம இரு…பேசாம இரு…. என … இதிலெல்லாம் மசியாமல், குழந்தைகள் கண்டு கொள்ளாமல் அதே உச்ச ஸ்தாயியில் பாடி கொண்டிருந்தார்கள்.

தேர் தங்கம் போல தகதகத்தது. பார்த்த அந்த கணத்தில் செந்திலுக்கு புல்லரித்தது. கண்கள் நீர் சொறிந்தன. வயிற்றில் கேவல் வந்தது. ஏங்கி ஏங்கி மூச்சு உஷ்ணமாய் வந்தது. சிலைகளுக்கு சக்தி உண்டா… தூத்துக்குடியில் எத்தனையோ முருகன் கோவில்கள், முருகன் சிலைகள். என்றாலும், திருச்செந்தூர் முருகன் சிலை தானே அந்த சக்தி… திருப்பதி, மெக்கா, வேளாங்கன்னி என சில இடங்கள் மட்டும் தானே இப்படி. அதனால் தானே அங்கே கூட்டம் கூடுகிறது.

அப்படியென்றால் ஒரு இடத்துக்கோ ஒரு பொருளுக்கோ என்ன நடக்கிறது…. கண்களில் இருந்து நீர் வழிந்து கன்னத்தில் ஓடியது… அருகில் ஒரு குரல் கேட்டது… அம்மா… தாயே…. செந்தில் சட்டென திரும்பி பார்த்தான்…
யார் என தெரியவில்லை… அருகில் இருக்கும் அனைவருமே.. ஒரு பக்தியில், ஒரு வேண்டுதலில், ஒரு கண் மூடிய நிலையில் இருந்தனர்.
53 அடி உயர, தேருக்கு முன் இரு வடக் கயிறுகள். தேரை இழுத்து செல்ல அமைக்கப்பட்ட கயிறுகள். ஒவ்வொன்றும் ஒரு முழங்கை சைசில். சுமாராக 50 – 60 மீட்டர்கள் ஏறக்குறைய 150 அடிகளுக்கும் மேல் நீண்டிருந்தது. அத்தேரின் முன்னால் ஒரு 1000 பேர்… இவ்வடத்தை இழுக்க ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார்கள். அத்தனையும் மனித தலைகள். ஆர்வமாய் அதே நேரம் அமைதியாய்.
அதே போல் தேரின் பின்னாலும் இரு வடங்களும் 1000 பேர்களும். தேர் நகர ஆயத்தங்கள் செய்யப்படுவது தெரிந்தது. சக்கரங்களின் திசை மாற்ற கூர் கட்டைகளுடன் இருவர் தேருக்கு இருபுறமும்.

தேர் நகர தயாராகவே… பிரார்த்தனைகள் சொல்லப்பட…. தேரின் மீதிருந்த மனிதர் தன் கையில் உள்ள் கொடியை அசைத்தார். அது பச்சை கொடி….
அவ்வளவுதான். அத்தனை மனிதர்களும் ஒரே குரலாய்… ஒலித்து கொண்டு நகரத்துவங்கினார்கள். கடல் அலைபோல, மனிதர்களின் தலை அசைந்தது.

ஹேய்…ஹேய்…ஹேய்..ஹேய்… என ஒரே நேரத்தில் 2000 பேர் குரல் கொடுத்த போது, ஈரக்குலையில் புல்லரித்தது. வாய் அனிச்சையாய் மாதாவே என கூவியது. கண்கள் நீரை முட்டியது. கன்னத்து மயிர்கள் எழுந்து நின்றன…. தேர் தன் நிலையில் இருந்து ஒரிறு அடிகள் அசைந்து அடுத்து காட்டப்பட்ட சிகப்பு கொடியில் நின்றது…

சத்தம் அடங்கியது… மனிதர்கள் அடுத்த கட்டளைக்காக நின்றார்கள்…. படிப்படியாக ஒரு சில அடிகளாக தேர் நகர்ந்து நகர்ந்து வருவது பார்த்த போது புரிந்தது.

ஊர் கூடி தேர் இழுத்தது போல்………. எனும் வாசகம் எத்தனை ஆழமானது என… ஆம், தேர் நகர்வது என்பது, ஒரு சக்தி… மனித சக்தி… ஒருங்கிணைக்கப்பட்ட மனிதர்களின் மாண்பு… தன்னை மறந்து, கட்டளைக்கு பணிந்து, உச்ச கட்ட வலிமை காட்டி, உணர்வை கூட்டி, நமக்கு நாமே நடத்தி கொள்ளும் ஒரு யாகம், ஒரு பயிற்சி…

கூட்டத்தில் ஒரு குரலும்…. அதற்கு பதிலுமாக ஒரு பாடல் ஒலித்தது….

யாரு வர்றா தேரிலே
நம்ம மாதா வர்றா தேரிலே
எந்த மாதா
பனிமய மாதா…


மறுபடியும் மறுபடியும் ஒலிக்க, அந்த பாடல் செந்திலை என்னவோ செய்தது… செந்தில் சட்டென திரும்பி பார்த்தான். ஒரு 8 வயசு சிறுவன்… கை கூப்பி அழுது கொண்டு, மாதாவே… மாதாவே… மரியே வாழ்க என கூவிக் கொண்டிருந்தான்.. அவன் கைகள் இருகி, கண்கள் மூடி, கால்கள் பரப்பி, நின்று கொண்டிருந்த நிலை பார்த்ததும் செந்திலுக்குள் ஒரு மின்னல் வெட்டியது…

 சட்டென புரிந்தது…. எனக்கு கிடைத்த இந்த மூர்க்கம், இந்த ரா பவர் எங்கிருந்து, இங்கிருந்து தான்… ஆம், இந்த வலிவு, இந்த துணிவு, இந்த அர்ப்பணிப்பு இவற்றின் சாரமே… என் ஆட்டம், என் உணர்வு…
எதையும் சாதிக்கும் வல்லமை தருவது இதுவே… எத்தனை சோதனைகள் வந்தாலும், என்ன கஷ்டம் வந்தாலும்… ஹேய்…ஹூ… என கத்தி, உடலில் மனதிலும் வருமே ஒரு சக்தி அது இதுதான்..

இந்த தேர் இழுக்கும் சமயத்தில் என் மனமும் உடலும் ஒரு வித்தியாசமான அதிர்வில் இயங்குகிறது. அது தனி மனிதனின் உச்ச கட்ட மனவெழுச்சி… உணர்வெழுச்சி… உத்வேகம்…. எனர்ஜி…
கண் மூடி, செந்தில் நின்று கொண்டிருந்தான். கூட்டம் அவனை கடந்து சென்றது. பலர் இடித்து பலர் மிதித்து சென்றும் கூட செந்தில் அசையாது நின்றிருந்தான். மனம் ஒரு நிலையில் இருந்தது….

சற்று நேர அமைதியில் கண் திறந்த போது, கசாலி… சொன்னான்….. யப்பா… பயங்கரமா இருக்குதுல்ல… இன்னும் ஒரு வருசத்துக்கு உண்ணாம உறங்காம என்னால வேலை செய்ய முடியும்… அப்படி ஒரு பவர்… செந்தில் பேசவில்லை… அவன் பேச ஆசைப்படவில்லை… அமைதியானான்.
அவனுக்கான பதில் கிடைத்தது… அவன் ஊக்கம், அவன் அதீத செயல்பாடு எங்கிருந்து வந்தது எனும் ஆழம் தெரிந்து கொண்டான்…
கசாலி தொடர்ந்தான்… ஹப்பாடி.. என்ன ஒரு தேர்… ம்.. அடுத்தா பாக்கணும்ன்னா இன்னும் 5 வருசம் போகணும்… சும்மா சொல்லக் கூடாது எவ்வளவு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்குது… இனி எப்போ ஓடுமோ... 13 வருசமோ அல்லது 5 வருசமோ தெரியாது....

பட்டென நெத்தியில் அடித்தது போல் இருந்தது செந்திலுக்கு… கசாலியை உற்று பார்த்தான்… ஓ… தேர் வருசா வருசம் ஓடாது இல்ல.... 
கசாலி சொன்னான், கிழிஞ்சுது... ஒவ்வொரு வருசமும் தேர் ஓடுச்சுன்னா என்னாகிறது.... நீதான் பாக்கிறல்ல... எவ்வளவு ஜனம், எவ்வளவு உழைப்பு.. எவ்வளவு பணம்,......

செந்தில், கண்கள் மின்னியது. கசாலியை தோளில் தட்டி, தன் பாராட்டுதலை சொன்னான்... எப்பவாவது 5-10 வருசத்துக்கு ஒரு முறை தேர் இழுத்தால் போதுமானது… தினம் தினம் இழுத்தால் அதற்கு பெயர் தேர் இல்லை... நான் தான் விவரம் இல்லாமல், எல்லா நேரத்திலும் எல்லா செய்ல்களிலும் தேர் இழுக்கவும்… முனைப்பு காட்டவும் உத்வேகம் காட்டவும் முயன்றிருக்கிறேன்…

தேர் இழுக்கும் வலிவு, பெரிதாய் சாதிக்கும் முனைப்பு என அதே உத்வேகத்தை..... வாழ்க்கையில் தினசரி காட்ட முயல்வதே என் பிரச்சனைகளுக்கான காரணமோ…

அக்கேள்வியின் தாக்கம் தந்த விளைவில் மனம் நெகிழ்ந்தது…

கசாலி மெல்ல நெருங்கி வந்து தோள் தொட்டு அணைத்து… வால… போவோம்… என்றான்.

செந்தில் அமைதியாய் அவனை பின் தொடர்ந்தான்…. சற்று தொலைவில் ஒரு பூட்டிய வீட்டின் படியில் அந்த 8 வயசுப் பையன் உட்கார்ந்து இருந்தான். அமைதியாக தேர் செல்லும் திசையில் அவன் கண்கள் இருந்தது. செந்திலுக்கு தன்னையே சிறுவனாய் பார்க்கும் நினைவு வந்தது…

மக்ரோன் (சிறுகதை) - நிறைவு பகுதி


சிந்தியா டீச்சரின் வெண்ணுடையும், குங்குமம் தொலைத்த நெற்றியும், தளர்ந்த முகமும் கண்ட அதிர்ச்சியில் செந்தில், கசாலியிடம் குனிந்து காதோரன் கேட்டான்,

எப்படா கல்யாணமாச்சு, புருஷன் எப்படி செத்தார்…
எனக்கு என்னடா தெரியும்,
எனக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் போது, கல்யாணம்ல்லாம் ஆகலியே…..
அதெல்லாம் சரி… பூவ விட்டுட்டு, பிஸ்கட் பாக்கெட்ட மட்டும் கொடுத்து சமாளிச்சுட்டு போயிருவோம்…
மெல்லிய நடையில் நண்பர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். முன் கூடம் தாண்டி, ஹாலுக்குள் அமர்ந்தனர்.

செந்தில், அங்கிருக்கும் மேஜையை பார்த்தான். இது போலவே அலங்கரிக்கப்பட்ட ஒரு மேசை விரிப்பில் தான் அவன் டியூஷன் படித்திருக்கிறான். எவ்வளவு விரைவாய் காலங்கள் செல்கின்றன. இப்போது தான் படித்தது போல் இருக்கிறது. அதற்க்குள் தான் எத்தனை மாறுதல்கள்.

‘நீ யூஎஸ் ல இருக்கிறேன்னு கேள்விப்பட்டேன்… ஆர் யூ இன் ஃபாங்கிங்..
ம்… டிரெஷரி…
நல்லது… டூவெல்… மை விஷ்ஷஸ்… கல்யாணமாயிருச்சா
ம்…. ஒரு பையன் இருக்கான்
கூட்டிட்டு வரல
அடுத்த தடவ கண்டிப்பா….
உன் பேரு கசாலிதான, என்ன ஞாபகமிருக்கா, நேஷனல் டேப்ரிக்கார்டர் கொடுத்தது நீதான….
டீச்சர், அது எங்க அண்ணனாயிருக்கும். டேப்ரிக்கார்டர் நல்லாயிருக்குதுல்ல… என்ன இப்ப கேசட்டுத்தான் கிடைக்கிறதுல்ல…. அதுனால என்ன சிடி ப்ளேயர் வாங்கிக்கோங்க… என்ன வேணும்னாலும் இனிம வாங்க… இது கடையோட கார்டு, ஒரு பல வண்ண விசிட்டிங்க் கார்டு எடுத்து கசாலி கொடுத்தான்.
ஓ… கண்டிப்பா…. ஒரு நிமிசம் இருங்க, குடிக்க எடுத்துட்டு வர்றேன்….
சட்டென திரும்பி உள் சென்றார். செந்திலுக்கு கொஞ்சம் அவஸ்தை. கசாலியிடம் திரும்பி, வந்திருக்கவே வேண்டாமோ… என குசுகுசுத்தான்…
ஏம்ல,
இல்ல… அவங்கள நல்லவிதமா பாத்தது, இப்படி பாக்கும்போது மனசுக்கு ஒரு மாதிரியா இருக்குது… பழைய நினைவுலயே இருந்திருக்கலாம்ன்னு…. என சொல்லிவிட்டு வீட்டை பார்த்தான். அதே சுத்தம், ஒவ்வொரு பொருட்களும் அதே இடத்தில் இருந்த நேர்த்தி…. நாற்காலியின் முன் இருந்த குட்டி மேசையில் ஒரு புத்தகம்….

கசாலி வாசித்தான்…………. யேசு கல்லா குலுக்குகிறார்….
செந்தில் சட்டென திரும்பி பார்த்து…. அடப்பாவி, சரியா படிறா…. யேசு கல்வாரி குழுமத்தினர்..... சரியா வாசிடா…

சாரிப்பா… இங்கிலிஷ்ன்னா கோர்வையா வாசிச்சுருவேன்… இது தமிழ்… அதுவும் போக இது புரியாத தமிழ்.. அதுதான்… என கூறிக் கொண்டே… புத்தகத்தின் உள்ளே திருப்பினான்…. பளபளவென வண்ணத்தில் ஒரு குடும்பத்தின் குரூப் ஃபோட்டோ… அதன் கீழ் அச்சிடப்பட்டு இருந்த வாசகம்.. சகோ. கூல் குதோகரன் மற்றும் குடும்பத்தினர் என ஒரு ஃபோட்டோ இருந்தது. 8 பேர், காமிராவை பார்த்து வசிகரமாய் சிரித்தபடி விலை உயர்ந்த ஆடையில் மின்னினார்கள்.

அற்புத சுகமளிக்கும் கூட்டம் 18ம் தேதி, இளைஞர்களின் எழுப்புதல் கூட்டம் 25 தேதி உபவாசக் கூட்டம் 28ம் தேதி, பிசாசு ஓட்டும் கூட்டம் 30ம் தேதி, என அட்டவணை இட்ட ஒரு குறிப்பு இருந்தது. புத்தகத்தை மூடி விட்டு கசாலி பின் நகர்ந்து இருந்தான்.

ஒரு தட்டில், சில பிஸ்கெட்டுகள், இரு கோப்பை தேனீர் என டீச்சர் வந்தார்.
ஐய்யோ.. இதெல்லாம் எதுக்கு…. என கூறிக்கொண்டே, பையினுள் கைவிட்டு, மல்லிகை பூவை கவனமாக தவிர்த்து விட்டு பிஸ்கெட்டை மட்டும் எடுத்து நீட்டியவாறு சிரித்தான் செந்தில்.

தேங்க்ஸ்… அடுத்த முறை வரும் போது குடும்பத்தையும் கூட்டிகிட்டு வா…
டீச்சர், விட்டா அவன் புள்ளைக்கு உங்களையே டியூசன் சொல்லி கொடுக்க சொல்லுவான்…. சிரித்தபடி சொன்னான் கசாலி. தேனீரை ஒரு முடக்கில் குடித்து விட்டு, சரி கிளம்பலாம் என்பதாய் நண்பர்கள் இருவரும் எழ…. ஒருவர் வீட்டுக்குள்: வந்தார்…..சிரித்தபடி வந்தவர், சிந்தியா டீச்சர் அருகில் சென்று, அவரது தோளில் கை போட்டு அமர்ந்தார்.

செந்தில், கசாலி இருவரும் அமைதியாய் சோபாவில் மறுபடியும் அமர்ந்தனர். டீச்சர் சிரித்தபடி… ம்…… இது என்னோட ஸ்டூடண்ட்… பேரு செந்தில்,இப்ப யு எஸ்ல இருக்கான்… என சொல்லிவிட்டு, செந்தில் பக்கம் திரும்பி, ஹீ இஸ் மை ஹஸ்பண்ட்… பீட்டர் என்றார். செந்திலுக்கு அதிர்ச்சி… திரும்பி கசாலியை பார்த்தான். கசாலி அதிர்ச்சியில் வாய் திறந்து இருந்தது. செய்வதறியாது நின்றான். பின்னர். வாயை சட்டென மூடி… குட்டீவினிங் சார்…. உங்கள பாத்திருக்கேன் என்றான்

செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. என்ன செய்வது, எதை கேட்பது என புரியாமல்… நேரடியாய் கேட்க சங்கோஜப்பட்டு கொண்டு, எதை எதையோ பேசிக்கொண்டிருந்தான். பீட்டரின் வேலை, தூத்துக்குடியின் சீதோஷணம் என ஏதேதோ…. ஆனால் எப்படி கேட்பது என மட்டும் புரியவில்லை.


சரி கிளம்புறேன் டீச்சர், இன்னிக்கு மாதா கோவிலுக்கு போகணும்… திருநாள் இல்லியா…. நீங்க வரல… வாங்க ஒண்ணா போயிரலாம், டிராப் பண்றேனே…

டீச்சர் பதில் சொல்லாது, ஒரு நிமிடம் மௌனமாய் இருந்துவிட்டு பின்னர் மெதுவாக... இல்ல நாங்க இப்ப அங்க போறதில்ல
என்ன டீச்சர், நான் யுஎஸ்ல இருந்து இங்க வந்ததே இந்த திருவிழா பாக்கத்தான்…. வரலேங்கிறீங்களே…
இல்ல…. நீ போயிட்டு வா… நாங்க இப்ப ஆர்.சி கோவிலுக்கு போறதில்ல….

கோவிலுக்கு போறதில்லேண்ணா,
இல்ல இப்ப நாங்க பிலீவர்…
ஓஹோ… ???? அப்படின்னா
இது ஒரு பிரிவு… எங்க சபை வந்து பிரதர்…. கூல் குதோகரன் சபை.

ஓ… இவர்தான் மாதாவ பாக்க கூடாதுன்னு சொன்னாரா….????? மேசையில் இருந்த புத்தகத்தை விரித்து புகைப்படத்தை காண்பித்து பின்னர் மேசையில் வைத்தான் செந்தில். 
ஆமா… மாதா கூட என்ன சண்டை…..அவங்க என்ன தப்பு பண்ணாங்க

இல்ல….. விக்கிர ஆராதனை செய்யுறதில்ல. ஒரு சிலைய அல்லது சுருவத்த வணங்கிறதில்ல…
டீச்சர், நீங்க எனக்கு கத்துக் கொடுத்த ஆசிரியர். ஒரு ஆசானா உங்கள மதிக்கிறேன், ஆனா சில உலக விஷயங்கள நீங்க சரியா புரிஞ்சிக்கலையோன்னு நினைக்கிறேன். உங்களுக்கு எப்படி இத சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல. ஆனா நீங்க இன்னும் இத பத்தி சரியா யோசிக்கணும்ன்னு மட்டும் தோணுது. 

நான் என் ஃப்ரெண்ட் கசாலி, அவங்க ஃபேமிலி எல்லாருமே நாங்க இப்ப கோவிலுக்குத்தான் போறோம். ஏன் இன்னிக்கு தூத்துக்குடியில மத வித்தியாசம் இல்லாம, எல்லோருமே கை கூப்பி…. அம்மா…மாதான்னு தான் இந்த கோவில்ல கூம்பிடப் போறோம். அதை செய்யுறதால எங்க மத நம்பிக்கையோ அல்லது மரியாதையோ நாங்க இழக்கிறதில்லையே…

ஏன் வேளாங்கன்னியில கூட எல்லா மதத்தினரும் வர்றாங்க… இஸ்லாம் சகோதரர்கள் கூட, ஈசா கடவுளின் தூதர்ன்னு கிறிஸ்த்தவத்த ஒத்துக்கிறாங்க…. ஐயப்ப சாமிக்கு மாலை போடுறவங்க கூட தர்க்கா வழிபட்டுத்தான் போறாங்க… இப்படி இருக்கும் போது, உங்க மதத்துக்குள்ளயே நீங்க சண்டை போடுறதும், போகாம இருக்கிறதும்… எனக்கு தப்பா தோணுதே.
ஆன்மீகம் என்னிக்குமே ஒற்றுமைய தான் கத்துக் கொடுக்கணும். அது பிரிவினை வாத்தையோ, அல்லது ஏற்ற தாழ்வுகளையோ சொல்லுச்சுன்னா அங்க ஆன்மீகம் இல்ல… வியாபாரம் இருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும்…

உங்கள முதல் முதல்ல பாத்தப்போ, நீங்க விதவையோன்னு தப்பா நினைச்சேன்… வாங்கிட்டு வந்த பூவ கூட மறைச்சேன். ஏன் இந்த சமுதாய முரண்பாடு… தமிழ் நாட்டுல விதவைகளுக்கே அப்படி ஒரு அடையாளம் இருக்க கூடாதுன்னு போறாடுனவர் பெரியார்… 

கசாலி உங்களோட பழைய தோற்றத்த பாத்துட்டு நீங்க பிராமின்னு நினைச்சிருக்கான்… சமூகத்தில இதுபோல மனிதனா.... வெறும் மனிதனா வாழுறதுதான ஆரோக்கியம். இப்படி அடையாளங்களினால, சமூக முரண்பாடுகளா வாழுறதோ… இல்ல தனக்குன்னு ஒரு அடையாளத்த வரிஞ்சு வைச்சிக்கிறதோ ஆரோக்கியமில்லியே…  

டீச்சர் நீங்க எதனால பூ வைக்கிறதில்ல… பொட்டு வைக்கிறதில்லை…..
எங்க சபையில நாங்க யாரும் வைச்சுக்கிறதில்ல….
அதான் எதனால, தயவுசெஞ்சு சொல்லுங்களேன்… நான் தெரிஞ்சுக்கிறேன்.
பூ, நகை இதெல்லாமே சாத்தான்… இதுக்கு மயங்கி அடிமையாயிட்டா நாம பரலோக ராஜ்யமே போக முடியாது.

ஒத்துக்கிறேன் டீச்சர், பூ நகை இந்த மாதிரி விஷயங்களுக்கு, புற அழகுக்கு அடிமையாயிட்டா, நாம வாழ்க்கை சிக்கலாயிரும். அது நெஜம்தான். ஆனா அளவான அழகான விஷயங்களின் ரசனைய தப்புன்னு எப்படி சொல்லலாம். பேராசை இல்லாத மனசு இருந்தா போதாதா…  

நீங்களே சொல்லுங்க… மல்லிகை பூவில நல்ல மணம் இருக்குது, அதை மதத்தின் பெயரால ஏன் ஒதுக்கணும்.

சரி பூவ விடுங்க…நகை…. நகை போடுறது எதனால…. அழகுக்காக மட்டுமா... இல்லையே…. ஏதாவது அவசரத்துக்காக, பொருளாதார தேவைக்காக, நம்மோட ஒரு வித சேமிப்புதானே இந்த நகை. ஒரு அவசரத்துக்கு அடகு வைச்சு பணம் புரட்டத்தானே நகை போடுறோம். அதனால தான் அத பெண்கள் அணிய ஆரம்பிச்சாங்க. பேராசை கூடாது தான்,  நகை சேக்குறதே வாழ்க்கைன்னு திசை மாறிட கூடாது தான், ஆனா பாதுகாப்புன்னு சொல்லி, நம்ம சேப்ட்டிக்காக ஒரு நகைய போடுறதுல தப்புல்லியே…

இல்ல, உலகத்தோட இச்சைகள் சாத்தான் உங்கள பிடிச்சிருக்கு… அந்த ஆசை தான் உங்கள படுகுழியில தள்ளிடும்…

சரி, ஒக்கே....  நகை வேண்டாம், பூ வேண்டாம், ஆனா நார்மலா இருக்கலாமே… இப்படி வெள்ளை உடையும், உங்கள பாத்ததும் தெரிஞ்ச்சுக்கிற மாதிரி ஏன் இந்த கோலம். மனுசங்க எல்லாமே ஒண்ணுதான, மனிதர்கள்ல நான் இந்த சாதி நான் இந்த மதம்ன்னு அடையாளங்கள் உருவாக்கி கொள்றது சரியா….

எங்க சபைதான் சரியான பாதை. இதில சேராதவங்க எல்லாம் அழிஞ்சுருவாங்க… பிரதர்…. கூல் குதோகரன் சபை.

எனக்கு தெரியல டீச்சர், சமூக சீர்திருத்தம் செய்யுறதையோ, ஆன்மீக உணர்வை மேலோங்க செய்வதையோ செய்ய வந்த மாதிரி தெரியல இந்த… பிரதர்…. கூல் குதோகரன் பாக்கும் போது.. பரம்பரை பரம்பரையா குடும்பம் குடும்பமா ஆசி வழங்க இவங்களுக்கு யாரு அனுமதி தந்ததுன்னு எனக்கு தெரியல…

இன்னிக்கு நான் தூத்துக்குடி வந்திருக்கேன்னா… அதுக்கு முதல் காரணம் திருவிழா கொண்டாடுற இந்த கிறிஸ்த்தவ மாதா… அடுத்தது… என்ன வரச் சொல்லி கூப்பிட்ட இஸ்லாம் சமூகத்து கசாலி… வந்த நானோ திருச்செந்தூர் முருகனை இஷ்ட தெய்வமா வரிச்சிக்கிட்ட நான் ஒரு வேறு குழு…

இந்த கசாலி கூப்பிட்டு, செந்தில் நான் வந்தது …….. இங்கயிருக்கிற பனிமய மாதாவ பாக்குறதுக்கு. இதுல தான் உண்மையான அன்பும் சகோதரத்துவமும் இருக்குது. நாங்களே பிரிவு பார்க்காம மாதாவ அன்பா பாக்குறோம் நீங்க ஏன் உங்களுக்குள்ள பிரிஞ்சு இருக்கீங்க…


டீச்சர், நாளைக்கு என் பேரு கொண்ட திருச்செந்தூர் போறோம்… கசாலிதான் கார் ஓட்டுறான். நிச்சயமா இன்னிக்கு நான் மாதா கோவில் போய் கும்பிட்டதால, நாளைக்கு நான் மதம் மாற போறதில்ல… கசாலியும் அவன் மதத்த விடப் போறதில்ல…. சரியான புரிதல் இருந்தா இன்னும் வாழ்க்கை சுகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்…

பைக்குள் கைவிட்டு, பூவை வெளியில் எடுத்தான். டீச்சர், இந்த பூவை நீங்க வைச்சிக்கிட்டாலும் சரி, இல்லேண்ணா ஜீசஸ்கிட்ட கொடுத்தாலும் சரி, நீங்க பயமில்லாம, சுதந்திரமா அன்பா ஆக்கபூர்வமா இருக்கணும்ன்னு தான் உங்க ஸ்டூடண்ட் ஆசைப்படுவேன்... என சொல்லிவிட்டு வெளி வந்தான். கசாலி வந்து அவனை அணைத்து கொண்டு தோளைக் இறுக்கினான். அந்த வலியில் மனிதமும் மத நல்லிணக்கமும் பளிச்சிட்டது.

மக்ரோன் (சிறுகதை)

(மக்ரோன் என்பது, தென் தமிழகத்து தூத்துக்குடி ஊரில் கிடைக்கும் ஒரு பேக்கிரி வகை இனிப்பு. என்ன அதில் ஸ்பெஷல் என்றால், தூத்துக்குடியை விட்டு வேறு எங்கும் இதை தயாரிக்க முடியாது….... முக்குக்கு முக்கு இருக்கும் லாலா கடை லட்டு மாதிரி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியாத ஒரு அதிசயம் இந்த ஸ்வீட்.

வீம்பாக…!!! செய்தால், செய்தது மக்ரோனாய் இருக்காது. அவ்வளவுதான்.

மக்ரோனைப்பற்றிய சரித்திர கதை இல்லை. இக்கதைக்கும் மக்ரோனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.  இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கூட மக்ரோன் சாப்பிடாது. இக்கதை தூத்துக்குடியில் நடப்பதால் இப்பெயர், வேறு வகையில் எதுவும் சேர்த்தியில்லை)


தூத்துக்குடி விமான நிலையம், வரவிருக்கும் ஒரு விமானத்துக்காக பரபரப்புடன் இருந்தது. விட்டால் ஆளையே அடித்து செல்லும் பலத்துடன் காற்று வீசிக் கொண்டிருந்தது. காற்றுக்கு கொஞ்சம் சேட்டை அதிகம் தான். ஆட்களின் உடைக்குள் புகுந்து பலவந்தமாய் பலூன் செய்து விளையாடி கொண்டிருந்தது.


தரையிறங்க போகும் விமானத்துன் உள்…. சாண்டி ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தான். சன்னலுக்கு வெளியில் தூத்துக்குடி சிறு நகரமாய் அவன் கண்களில் பட்டது.

அவன் சொந்த ஊர் தூத்துக்குடி, பிறந்ததும் படித்ததும் இங்குதான். இப்போது அவன் அமெரிக்காவில் இருக்கிறான். Vice president – Treasury operations என ஒரு முண்ணனி வங்கியில் உத்தியோகம்.அவன் துறையில் அவன் புலி. வெற்றிகரமானவன். அவன் சிந்தனையையும் செயல்பாடும் கண்டு அவன் வங்கியும், சக வங்கிகளும் பெருமூச்சுடன் ஆச்சரியப்படுகிறார்கள். 

களத்தில் இறங்கி அவன் வேலை செய்யும் முனைப்பு பார்த்து…’ஏன் … ஏன் இப்படி மூர்க்கமாய் இருக்கிறாய் என கை பிசைந்து கொண்டு கேட்பார்கள். ஆம், அவன் உணர்ச்சியும், வேகமும் அவன் முடிவெடுக்கும் பாங்கும்….. அவனுக்கே சில சமயம் பிரமிப்பாய் இருக்கும்…. ஒரு போர் வீரன் போல், பல திசைகளில் சுழன்று, எதிரிகளுக்கு தயவு தாட்சண்யம் பாராமல் இவன் எடுக்கும் முடிவுகள், இவன் தந்திரங்கள், இவன் செயல்முறை எல்லாம்……….. மூர்க்கமும் வேகமும் விரைவும் ஆனவை.  நருவிசு, டிப்ளோமட்டிக் என்பதெல்லாம் இவனுக்கு அன்னியம்.

போய், வேறு ஆளாக பார்க்கச் சொல், இன்னும் 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன், இல்லையென்றால் அந்த அலுவலகத்தை பூட்டி சாவியை எனக்கு அனுப்பு… என மான்சேஸ்ட்டர் நகர வீதிகளில் இவன் கத்தியதை பார்த்து அந்த வெள்ளைக்காரன் அலறிப் போனான். மூன்று வருடங்களாய் நொண்டியடித்து கொண்டிருந்த பிரச்சனையை தலைவலியை….. ஒரே மீட்டிங்கில், இவன் பேசியே முடிக்க… நிர்வாகம் பேச்சு மூச்சு இல்லாமல் உறைந்தது. சாண்டி, சாண்டி என கொண்டாடியது. ஆனால் அவன் அமைதியாக இதையெல்லாம் எதிர் கொண்டான்.

என்ன வேண்டும், பணம், பதவி, பங்களா, சொகுசு என்று பசப்பியபோது, அமைதியாக என் வேலையில் சுதந்திரம் வேண்டும் என மட்டும் கேட்டு, தன் மதிப்பை இன்னும் உயர்த்திக் கொண்டான், சாண்டி….
அதென்ன சாண்டி, பேர் புதிராக இருக்கிறதே என தோன்றுகிறதா. வேறொன்றுமில்லை அவன் பெயர் செந்தில் முருகன். வெள்ளைக்காரனுக்கு வாயில் நுழையாத காரணத்தால், செந்தில் சாண்டியானான்…. நமக்கு செந்தில்தான் வாயில் வருமே, பின் என்ன செந்தில் என்றே சொல்லி அவனை தொடருவோம்.

செந்தில், தன் நாற்பது வயதின் முதுமைகள் ஆக்கிரமிக்காமல் கவனமாய் தன்னை பாதுகாத்திருந்தான். உலர் நீல சட்டையும், கருப்பு கால் சட்டையும், இட்டாலியன் ஷூவும்….. மிடுக்காக அணிந்திருந்தான். அதே விமானத்தின் 5 பி இருக்கையில் அமர்ந்திருந்த அப்புராணி, இவன் சட்டையையும் ஷூவையுமே பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டார். பணிப்பெண் வந்து விளம்பிய பலகாரத்தை கூட தவிர்த்தார்.

செந்தில் தன் சட்டைப்பையில் இருந்து அந்த காகிதத்தை வெளியெடுத்தான். அது ஒரு ஈமெயில் பிரிண்ட் அவுட். அவன் பதவிக்கும் செயல்முறைக்கும் மிகவும் வித்தியாசமான ஒரு செயலிது. பிரிண்ட் அவுட் எடுத்து படிக்கும் விதத்தில் அத்தனை முக்கியமானதா நமக்கு படவில்லை என்றாலும்… அவனுக்கு அது அதிசயம். ஆம், பிரிண்ட் அவுட் எடுத்து, பலமுறை படித்தும் கூட… அவன் ஒவ்வொரு முறை படித்ததும் சந்தோசம் அடைகிறான். ஏனெனில் அந்த கடிதத்தில் இருக்கும் உரிமையும் உண்மையும் அவனுக்கு இனிக்கிறது..

ஏலெய்… மக்கா….
இப்படி ஒரு முகமன், அவனுக்கு புதியது தான். ரெஸ்பெக்ட்டட் சார் என அழைத்து எழுதப்பட்ட கடிதங்கள் தராத உற்சாகத்தை இந்த ஏலே மக்கா கொடுத்தது. ஏனெனில் இக்கடிதம் எதையும் எதிர்பார்த்து எழுதப்படவில்லை, இதில் எந்த போலி வாசகமும் இல்லை, எந்த உட்பொருளோ, மறைந்த அஜெண்டாவோ இல்லாமல் இருந்தது.

ஏலேய் மக்கா….
எப்படியிருக்க…
நம்மூரில மாதா கோவில் திருநாள் வருது. நோட்டிஸ் பாத்தவுடனே இந்த மெயில போடுதேன். இந்த வருசம் ஸ்பெஷல் என்னான்னா. ‘தங்கத் தேர்’ இருக்குது. அதென்ன தங்கத்தேர், அதில என்ன விசேஷம்ன்னு, நான் விசாரிச்சேன், அவங்க சொன்னாங்க, கோவில்ல நடுவுல இருக்குமே, அந்த மாதா சுருபம், அது பயங்கர பவர்…. அந்த சுருவத்த, தேர்ல வைச்சு, ஊருக்குள்ள கொண்டு வர்றது தான் விசேஷமாம். சாமிய ஊருக்குள்ள கொண்டு வர்றதுக்காகத்தான் இந்த பழக்கமாம்.

இன்னொரு முக்கியமான விஷயம். இது உண்மையா என்னன்னு தெரியாது, சில பேர் சொல்றாங்க இந்த தடவத்தான் லாஸ்ட்… இதுதான் தேர் எடுக்கிற கடைசி வருசம்ன்னு…. என்னவோ இப்ப கோவில் பசலிக்கா ஆயிருச்சாம், அதனால அடிக்கடி இப்படி சுருவத்த எடுக்க கூடாதுன்னு… என்னவோ கட்டளையாம்.

ஏ… மக்கா… நல்ல சான்ஸ்… இந்த திருவிழாவுக்கு நீ வாயேன். ரொம்ப நாளாச்சுல உன்ன பாத்து. சோலியிருந்துச்சுன்னா விட்டுரு… இல்லேண்ணா வா….
இவன்
கசாலி மரைக்காயர்.

முக்கியம் என செந்திலுக்கு தோன்றியதால்…. அலுவலக முக்கிய வேலைகளை கூட ஒத்தி வைத்துவிட்டு ஒரு ஐந்து நாள் விடுமுறையில் செந்தில் தூத்துக்குடி வருகிறான். 

விமானம் உயரம் குறைத்து, வேகம் குறைத்து, தூத்துக்குடியில் இறங்கும் வண்ணமாய் பறந்தது.கிரிச்சென ஓசையுடன் தரை தொட்டது.  சர்…….. எனும் அதிக ஓசையுடன் விசையுடனும் காற்றின் அதி இரைச்சலுடன், தரையில் விமானம் ஓடத் துவங்கியது. தன்னையறியாமல், செந்திலுக்கு புல்லரித்தது, முன்னங்கைகளில் ரோமம் குத்திட்டு நின்றது, கழுத்து, காதுக்கு கீழ், அடிமார்பு என முடிகள் எழுந்து நின்றது. கண்கள் சொல்லாமலேயே நனைந்தன. உள்ளம் கிளர்ந்தது. அடிவயிற்றில் ஒரு கேவல் எழுந்தது. மூச்சு நின்று தன் தாள லயத்தை மாற்றியது. மனம் அசுர பலம் கொண்டு, தன்னம்பிக்கை உடலெங்கும் பரவியது. உடல் இலகுவாய் கனம் இழந்தது. மனம் புத்துணர்ச்சியாய் சிறு குழந்தை போல் துள்ளியது.

என்ன …என்ன இது, ஏன் இப்படி நடக்கிறது. எனக்கு சம்மதமில்லாமல், நான் அனுமதிக்காமல் இப்படி ஒரு மாறுதல். எனக்குள் என்ன நடக்கிறது. என் உணர்வுகளுக்கு ஏன் இந்த அதிகப்பிரசங்கித்தனம். அமைதியாய் இருக்கலாமே, ஆர்ப்பாட்டம் இல்லாமல், இருக்காமல் இது என்ன சேட்டை. பலகாலம் பார்க்காத சொந்த ஊர் இவ்வளவு இனிப்பா, இத்தனை வாஞ்சை உண்டா இந்த ஊர்ப்பாசம்…. நினைவுகளூடே செந்தில் விமான நிலையத்தின் உள் நடந்தான். பார்க்கும் மனிதர்களிலெல்லாம் அவனுக்கு அன்பு தோன்றியது. எல்லோரும் தெரிந்தவர்கள் போலவும் ஒரு கிளர்ச்சி. அனைவரும் அவனை அன்போடு பார்ப்பதாய் ஒரு பிரமை.
தடுப்புக் கைபிடியின் பின்புறம், நண்பன்…. கசாலி நின்று கொண்டிருந்தான். பள்ளித்தோழன், ஒன்றிலிருந்து 12 வரை படித்தவன். இப்போது குண்டாக இருந்தான். சட்டை அவனை சரியாக மூடமுடியாமல் பிதுங்கி கொண்டு நின்றது.

இருவரும் கை குலுக்கினர். ஒரு நிமிடம் தாமதித்து, செந்தில் கசாலியை கட்டி கொண்டான். அந்த தழுவுதலில் செந்தில் இன்பம் உணர்ந்தான். கசாலிதான் தொடங்கினான்
‘ஏ,….வெளுத்திட்டியே… ஃபேர் அண்ட் லவ்லி நெறையா போடுவியோ’
செந்தில் வாய்விட்டு சிரித்தான். எவ்வளவு நாளாச்சு இப்படி மனமும் உடலும் ஒரு சேர சிரித்து, என உபரியாய் சிந்தித்தான்.

‘தேங்ஸ்டா… மெயில் போட்டு கூப்பிட்டதுக்கு..ஏல… நீ குண்டாயிட்ட….. ஸ்கூல்ல படிக்கிறப்ப மெலிஞ்சிருப்ப ஆமா எங்க வேல செய்யுற’
‘ஏ.. மக்கா நீயும் ஃபாரின் தான்… நானும் ஃபாரின் தான். நீ அங்க போய் சம்பாதிக்கிற, நான் இங்க இருந்துக்கிட்டு, ஃபாரின் சாமானா வித்து பொழைக்கிறேன்… ஏ ரெண்டு வேரும் ஒண்ணுதாம்ல’ அப்பா கடையில தான் இருக்கேன்…

இருவரும் சிரிப்பில் இணைந்தபடி, வெளி வந்தனர். சூடு தோலை பதம் பார்த்தது. கண்களும் இத்தனை வெளிச்சத்துக்கு பழகாமல், சிரமப்பட்டது. இதையெல்லாம் பெரிசாய் எண்ணாமல், நண்பர்கள் அன்பில் உருகி, கைகள் இணைத்தவாறு நடந்தனர். இத்தனை வருசத்து கதைகளை உடனே பேசி கொள்ளும் ஆர்வம் இருவரிடத்திலும் இருந்தது. அவர் எப்படியிருக்கார்…..இவர்…பேரு என்ன… யே அவன் எங்கயிருக்கான்………… ஐய்யய்யோ…………. அப்படியா.. நெசமாவா………… ஹா...ஹா..சூப்பர்.. இப்படி பல கேள்விகள் பல பதில்கள். தத்தம் கதைகள் பேசி, நேரம் போவதே தெரியாது மகிழ்ச்சியில் திளைத்தனர். அன்று மாலையில்,

’திருநாளைக்கு வந்துட்டு, இப்படி திண்ணயில படுத்திருக்க…. சோம்பேறிக் கூவ, வா… கோயிலுக்கு போவோம்’
கசாலி செந்திலை எழுப்பினான்.
‘வம்புதானல உனக்கு, நானால சொன்னேன்… இன்னொரு அரை பிளேட் பிரியாணி அப்புறம் மட்டன் சுக்கான்னு ….. வேஸ்ட் பண்ணக் கூடாதேன்னு அத்தனையும் நாந்தான தின்னேன்… என்ன செய்யுறது கண்ண கட்டுது. உனக்கென்ன தினம் இப்படி தின்னு தின்னு பழகிட்ட...’
செந்தில் ஒரு நிமிடம் யோசித்தான். என்ன பேசுகிறேன். என்ன மொழி, இப்ப மட்டும் என் வெள்ளைக்கார கிளையண்டோ, பாசோ பார்த்தா ஃப்ரீஸ் ஆயிருவான். ஏன் என் மனைவி குழந்தைகள் கூட அதிசயிப்பார்கள். கசாலி தொடர்ந்தான்….

’அடப்பாவி, இம்பூட்டோண்டு பிரியாணி சாப்பிட்டதுக்கு இப்படி சலிச்சிக்கிற. சாயந்திரம் புரோட்டோ கடைல உனக்காகச் ஸ்பெஷலா சொல்லி வச்சிருக்கேன்ல… சிலோன் வீச்சும், சிக்கன் கொத்தும்’
செந்திலுக்கு இப்போதே சுவை மனதில் ஓடியது.
’எங்க ஆழ்வார்லயா..’
‘இப்ப அவன் சரியில்லலே… இப்ப புசுதா ஒரு பய நம்ம சத்திரம் கிட்ட கடை போட்டிருக்கான்… கோயிலுக்கு போயிட்டு அப்புறமா போவோம்…’


‘ரைட்டுல, ஏ மக்கா… ஒரு ஆள பாக்கணும். நம்ம டீச்சர், சிந்தியா டீச்சர பாக்கணும்.. அதே வீடுதான’
கசாலி சட்டென யோசித்தான். ‘யார கேக்குற நீயு. எனக்கு புரியலியே’
‘எங்க பழைய வீட்டுக்கு பக்கத்துல இங்கிலிஷ் டீச்சர்…..’
’ஓ…. சரி சரி… நம்ம ஐயர் டீச்சர்…’
’என்னது ஐயரா….. யேய்…. அவங்க கிறிஸ்ட்டியன்’
‘கிஸ்ட்டின்னா… செவப்பா இருப்பாங்களே’
’ஏல…. ஏண்டா…. என்னடா இது’
‘சாரி…சாரி…. நல்லா லட்சுமிகரமா மல்லிப்பூ வைச்சு, பெரிசா பொட்டு வைச்சு, மஞ்ச தேய்ச்சு குளிச்சு பாக்க அப்படியே அய்யராட்டமா இருக்கும்..
‘ம்… அவங்க பேரு சிந்தியா…. பிரில்லியண்ட் டீச்சர்….. என்ன நாலேஜ்… அவங்க இங்கிலிஷ் வெள்ளைக்காரனுக்கு கூட தெரியாது. இன்பாக்ட் என்னோட இன்னைய ஆங்கிலத்துக்கு அவங்கதான் அஸ்திவாரமே’

’சரி..சரி… அவங்க… இப்ப புரியுது.. இப்ப புரியுது…. பெரிய டச்சு இல்லல…. எப்பவோ கடைசியா ஜவுளிக்கடையில் பாத்தேன்…. அதுக்கென்ன மக்கா போனா போச்சு. கண்டுபிடிச்சுரலாம்’

நண்பர்கள் இருவரும் சிந்தியா டீச்சர் வீடு தேடி அந்த பகுதி வந்தனர். ஒரு கடையில் நிறுத்தி, பிஸ்கட் பாக்கெட்டும், பழங்களும் வாங்கி கொண்டனர். பூக்கடையில் ஓரத்தில் இருந்த மல்லிப்பூ வாசம் மூக்கை வருட… டீச்சர் விரும்பி சூடும் அந்த பூவை சேர்த்து வாங்கி கொண்டான் செந்தில்,
பகுதியில் விசாரித்து, சிந்தியா டீச்சரின் வீட்டை அடைந்து, முன் கேட் திறந்து உள் நுழைந்த போது, கண்ட காட்சியில் அதிர்ந்தனர்.

டீச்சர், இத்தனை நாள் இடைவெளியில் மிகவும் தளர்ந்திருந்தார். 40 வயசு பெரிசில்லையே… ஏன் இவங்க இப்படியிருக்காங்க…

சிந்தியா டீச்சர், வெள்ளை சேலையிலும், பொட்டு இல்லாத நெற்றியுமாய் கண்களில் கருவட்டங்களுடன் சாவி எடுத்து வந்து கதவு திறந்தார். உள்ள வா… நல்லாயிருக்கியா…. குட் டூ சீ…யூ……….. கம் இன் என்றார்… செந்திலுக்கு ஏதோ போலிருந்தது. கையில் உள்ள பையை முதுகுக்கு பின்னால் நகர்த்தி, மறைத்து கொண்டு கனத்த மனசுடன் உள் நுழைந்தான்.
                                                       தொடரும்..........

குப்பை (சிறுகதை)

(அன்பிற்கும், பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய வாசக தோழமைக்கு வணக்கம்… உங்களுக்கும் எனக்கும் சௌகரியமான ஒரு தலைப்பை இக்கதைக்கு வைத்துள்ளேன்….அது என்ன............கதை படித்து முடிந்தவுடன்… கதை எப்படியிருக்கு… என்ன கதை…. என யாராவது கேட்டா….ஹும்..குப்பை என நீங்கள் சொல்லலாம்…. என்னிடம் யாராவது, ‘என்ன எழுதியிருக்கிற….???? என கேட்டால் குப்பை கதை எழுதியிருக்கிறேன் என சொல்லலாம்… ரொம்ப வசதி… சரி இனி கதைக்கு செல்வோமா)

நம் கதை நடக்கும் ஊரில்…. காலை இன்னும் தன் கணக்கை தொடங்கவில்லை, விடியாத காலை… விடிகாலை,… ஃப்ளீஸ் விடியேன் காலை…. என வேண்டுமானால் சொல்லலாம். மிதமான குளிர், மெல்லிய காற்றுடன் இணைந்து, மெலிதாக வருடிக் கொண்டிருந்தது.

மாதவன் அப்போது தான் விழித்தான். இரவு தூக்கம் முழுமையாக கிடைத்ததால், காலை எழும் போது புத்துணர்ச்சியாகவே இருந்தது.
சன்னல் வழியே வெளியில் பார்த்த போது, மனைவி குனிந்து கோலம் போடுவது தெரிந்தது. இந்த கோணத்தில் அவள் மிக அழகாக இருப்பதாக பட்டது. போர்வையை உதறி… மெல்லிய நடையில் முற்றம் வந்தான்.

அவன் வரும் சத்தம் கேட்டு, வாசுகி சிரித்தபடி, காப்பி தரட்டா என எழ முற்பட்டாள்…. அவசரமாக நிறுத்தி, இல்ல முடிச்சுரு… அவசரம் இல்ல அப்புறம் குடிக்கலாம் என்றான். திண்ணையில் இருந்து, சுவரில் சரிந்து, தோள்களை குறுக்கி, கை இரண்டையும் கால்களுக்கிடையே கொடுத்து, இருந்தான்.அவன் உட்கார்ந்திருந்த விதத்தை உட்கார்ந்து என எழுதுவதோ, அல்லது படுத்தான் என சொல்லுவதோ… பொருட் குற்றமாகி விடும். முகம் மலர்ந்து இருந்தது. கண்கள் குருகுருவென வாசுகியை மேய்ந்தது… 

அந்த நேரத்தில்… சிவபூஜையில் கரடி… சாரி…!!! எதித்தாத்து ஏகாம்பரம் மாமா குரல் வந்தது…

‘மாதவன் சார் … மாதவன் சார்……’
மனதிற்குள் மாதவன் மருகினான்… குருகுரு பார்வையை மாமா பாத்திருப்பாரோ… சே… இன்னும் கொஞ்சம் உஷாரா இனி இருக்கணும்..
‘குட் மார்னிங்… சொல்லுங்க சார்….’
‘கவனிக்கிறீங்களா….’
‘ஹாங்… ஆமா சார்… சொல்லுங்க..
‘இல்ல ஒரு வாரமாச்சு… குப்பை எடுக்கிற பையன் வரவேயில்லை… பிக் ப்ராப்ளம் சார்… குப்பை சேர்ந்து வீடே நாறுது… நம்ம வார்டுல தான் இந்த பிரச்சனையே… 6 வது வார்டு இப்படியில்ல, டெய்லி குப்பை வண்டி அங்க போகுது… அக்கம் பக்கம் எல்லா வார்டும் சரியாயிருக்குது.. நம்ம வார்டு மட்டும் தான் பிரச்சனையே… நம்ம கவுன்சிலர் வேஸ்ட்… ஒரு பவர்சும் காட்டுறதில்ல’

வாசுகி மெல்லமாக எழுந்து உள் சென்றாள்…
மாமா தொடர்ந்து பேசினார், 4 வது வார்டு குப்பை பையன் நடுங்கிறான்… காலைல அவன கூப்பிட்டு கேட்டேன்… கவுன்சிலர் கோவிச்சுக்கிடுவார் சார்ன்னு..  நடுங்கி என்கிட்ட பேசாமலே ஓடுறான்… அப்படின்னா என்ன அர்த்தம்….
பலவீனமாக, சிரித்த முகம் மாறாமல்… கோணாமல்… ஆர்வமாய் கேட்கும் பாவனையில் மாதவன் அவரை பார்த்துக் கொண்டே கேட்டான்… கரெக்ட்டு சார்…

சும்மா விடக் கூடாது… நான் ரெண்டு மாதிரி இதுக்கு யோசிச்சு இருக்கேன்…. எத செய்யலாம்… கரெக்ட்டா சொல்லுங்க…

உள்ளுக்குள் காப்பி கலக்கும் சத்தம் கேட்டது….. சூடான காப்பி என்பது மாதவன் எப்போதும் விரும்புவது… உடனே சென்றால்.. சூடாக குடிக்கலாம், இவர் பேச்சை முடித்து நம்மை பேக் செய்து அனுப்ப நேரம் எடுத்தால்… காப்பி…. க்க்க்க்க்க்க்க்க்க்காப்ப்பியாகத்தான் இருக்கும்…

வயதில் பெரியவர் வேறு. அசப்பில் மதிக்க கூடிய மாமாவின் சாயலோடு இருக்கிறார். முகம் வெட்டி பேச, நம் கலாச்சாரம் என்றுமே சொல்லிக் கொடுத்ததில்லை… மாமா தொடர்ந்தார்…

‘சார்… மாதவன் சார்… சொல்லுங்க ரெண்டு வழி வச்சிருக்கேன்… ஒண்ணு மொட்டை….
ஹா…………த்தூ………… காறி எச்சிலை தூற துப்பினார். மாதவன் யாருக்கு என கேட்க நினைத்தான், அவரே தொடர்ந்தார்… மொட்டை பெட்டிஷன்… க்ளீனா போட்டுரணும்… பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்டுக்கு… சுகாதார அமைச்சருக்கு…. சிசி டூ முதல்வர்… மொட்டை பெட்டிஷன பாத்தவுடனே ஹோல் ஆபிசே பதறிடும்… உடனே சொல்யூஷன் கிடைச்சுறும்… உடனே நடவடிக்கை எடுத்துறுவாங்க…
அடுத்தது… இன்னொரு ஐடியா…. நம்ம குப்பை வண்டி, அங்க குளத்துக்கிட்ட தான் இருக்குது… யாருக்கும் சொல்லாம, அந்த வண்டிய தள்ளிட்டு வந்து, இங்க வைச்சிடணும்…. அவன் வண்டிய தேடி அலையோ அலைன்னு அலைஞ்சு.. இங்க வந்து அதை எடுக்கட்டும்…. ரெண்டுமே ஓர்க் அவுட் ஆகிற ஐடியாக்கள் தான்…. பெருமிதமாய் சிரித்தார்.

ஏன் இப்படி விபரீதமாக சிந்திக்கிறார்…. பார்க்க சாதுவாக இருந்தாலும் இந்த பாய் பாய்கிறாரே…. அவரது அப்புராணி முகத்துக்கு பின் இப்படி ஒரு சிந்தனை கூட இருக்கிறதா… கொஞ்சம் ஆச்சரியத்துடன் மாதவன் சிந்தித்தான்….
சரி இவருக்கு என்ன பதில் சொல்வது, ரெண்டில் எந்த ஆப்ஷன் சரியென சொல்வது.. ரெண்டுமே திராபை என சொல்லலாமா… வேண்டாம்… அவரை காயப்படுத்த வேண்டாம் அவர் காயம் படாமல் அவர் ஆயுதத்தை மடக்கி வைக்க என்ன சொல்லலாம்… எப்படி சொல்வது, காலையில் உணர்ந்த மாலதியின் அழகும்…. புத்துணர்ச்சி காலையும், சூடான காப்பியும் கூட லேசாய் மறந்து போனது…

வாழ்க்கையை ஏன் இப்படி சிக்கல் ஆக்கணும்… ஏன் இப்படி போராடணும்… அடுத்தவன ஏன் இப்படி இம்சிக்கணும்….

மெதுவான குரலில் மாதவன் சொன்னான், ‘சார், களமறிந்து போராடணும்… திட்டமிட்டு செயல்படணும்… எதிராளி பலம் பலவீனம் தெரியணும்… 

அதனால முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். பத்து நாள் வரலேண்ணா, ஒரு வேளை, குப்பை வண்டிக்காரன் உடம்பு சரியில்லையோ, அல்லது ஊருக்கு எங்கயாவது அவசரமா போயிட்டானோ…. அத தெரிஞ்சுக்கணும்…

அது மட்டுமில்ல, நீங்க சொல்ற மாதிரி பயமில்லாம இருக்கான்னா, ஏன்னு யோசிக்கணும்…. ஒருவேளை கவுன்சிலருக்கு உறவாய் இருக்கலாம்… என்ன ஏதுன்னு தெரியாம நாம எதுவும் செய்யக் கூடாது…. அவசரப்படாதீங்க… உங்களுக்கு தெரியாததா…

மாதவன் மெதுவாய் நகர்ந்து உள் சென்றான்… இவர் யோசிப்பாரா… ஏதேனும் மாறுதல் அவருக்குள் நடக்குமா… ஒரு குப்பை விஷயத்தில் கூட இப்படி குதர்க்கமாய் கூருரமாய் சிந்திக்கும் இவரை என்ன செய்வது…
ஒரு 60 வயசு ஆகிறது… இவரை இனிமேல் வளைத்து திருத்த முடியுமா…

யப்பா….நல்ல வேளை…. இப்படி சொல்லலேண்ணா, ஒரு வேள குப்ப வண்டிய யாருக்கும் தெரியாம தள்றதுக்கு நம்மளயும் கூப்பிட்டுருப்பாரு… இல்ல மொட்டை காய்தம் எழுதுறதுக்கு வார்த்தை கேட்டுருப்பாரு என பலவிதமாய் யோசித்த படி… காப்பி சூடா இருக்குதா என பார்க்க அடுப்படி நோக்கி நடந்தான்…

பின் நடந்த அனைத்துமே…. மாதவனின் அன்றாட வாழ்க்கை காரியங்கள். இக்கதைக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவை. அதனால் அத்தனையையும் விட்டு விடுவோம்.

அன்று இரவில் மாதவன் முழு நாள் செய்த வேலை பழுவில் நன்கு உறங்கினான்…. எண்ணை கத்திரிக்காய் ரசித்து சாப்பிட்டான், ஏப்பம் தூக்கலாய் வந்தது… அதில் கத்திரிக்காயின் மணம் கூட இருந்தது… தூக்கத்தில் ஒரு கனவு கண்டான்….

மானேஜர், அவன் ஃபைலை அவனிடம் திருப்பி கொடுத்தார்… திட்டினார்… ஏன் இப்படி கவனக் குறைவாக வேலை செய்கிறாய்… மாதவனுக்கு புரியவில்லை… எல்லாம் சரியாகத்தானே செய்தோம், ஒன்றுக்கு இரு முறை சரி பார்த்தோமே… என்ன தவறு என யோசித்து படி ஃபைலை திறந்தான்…

பைல் முழுக்க குப்பை…. ஒரு வாரக் குப்பை… யாரும் அள்ளாத குப்பை… ஆபிஸே நாற்றமெடுத்தது…  நாற்றம் குப்பென ஆபிஸெங்கும் பரவியது….. ஓவ் என யாரோ சப்தமிட்டார்கள்… பார்த்தால் சப்தம் வந்த திசையில், ஸ்டெனோ ரிசப்ஷனில் கோலம் போட்டு கொண்டிருந்தாள். கோலம் அழகாக இருந்தது.

ஃபைனான்ஸ் ஹெட் அங்கிருந்து வேக வேகமாக வந்தார்…. ஃபைல் குப்பை, மானேஜர் மாதவன் எல்லோரையும் பார்த்தார்….. கோபத்தில் பல் கடித்தார்…. இடி இடியென சிரித்தார்… என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க…. சும்மா விட மாட்டேன்… என்னை என்ன ஒண்ணும் தெரியாதவன்னு நினைச்சீங்களா…  ‘ரெண்டு சாய்ஸ் இருக்குது… ஒண்ணு ஹெட் ஆபிஸுக்கு மொட்டை கடிதம் எழுதப் போறேன்… அல்லது…. இந்த ஃபைல யாருக்கும் தெரியாம…. தூக்கிகிட்டு போய்… என் கப்போர்டுல வைச்சுருவேன்…. ஜாக்கிரத என்றார்…

மாதவன் குரல் உயர்த்தினான்… பொறுமையை விட்டான்… நிறுத்துங்க சார்…. உங்க வயசுக்கு மரியாத கொடுத்து பேசாம இருக்கேன்… அசப்புல மலேசியா மாமா மாதிரி இருக்கீங்களேன்னு நினைச்சா…. அதிகம் பேசுறீங்களே… ஏன் சார், ஏன்.. இப்படி குதர்க்கமா யோசிக்கிறீங்க… இந்தா பாருங்க… குப்பை வண்டி வரலேண்ணா, என்ன… குடியா முழுகிப் போச்சு… ஏன் இப்படி சத்தம் போடுறீங்க….

மிஸ்டர் மாதவன், ஹௌ இர்ரெஸ்ப்பான்சிபிள்…பொறுப்பில்லாம அக்கறையில்லாம பேசுறீங்க.. எனக்கென்ன வந்துச்சுன்னு எல்லாரும் பேசாம இருக்கிறதாலதான் இப்படி நாறுது… இப்படியே எல்லாரும் போனா யாருதான் பூனைக்கு மணி கட்டுறது…

சார், குப்பை வண்டி வரலயா… மூணு நாள் பாத்திட்டு…. வொய்ப கூப்பிட்டு, சரி, குப்பை ரொம்ப சேந்து போச்சு… ஒரு ப்ளாஸ்டிக் பையில போட்டு கொடு, ஆபிஸ் போற வழியில குப்பைய போட்டுறேன்.. அந்த லெவல்ல தான் இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்க தயார்… குப்பை வண்டிக்காரன சேஸ் பண்ணி, அவனுக்கு மெம்மோ கொடுக்கிற லெவல்ல யோசிக்க நான் தயாரில்ல…  நீங்க இதை செய்யுங்க…

வெரிகுட்….அப்ப, நான் செக்க ஆட்டுவேன்… எள்ள ஆட்டுவேன்… எண்ணை வழியும் போது மட்டும் நீங்க வந்து டின்னோட நிப்பீங்க…. அதான உங்க லாஜிக்… நீங்க மட்டுமில்ல இந்த உலகமே… நோவாம நோம்பி…

சார், சமூகத்த திருத்துறது உங்க வேலைன்னா அத செய்யுங்க… செய்யாத என்ன மாதிரி ஆள விடுங்க… நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி எங்ககிட்ட தவில் வாசிக்காதீங்க…

சொன்னா பொத்துகிட்டு வருதே…. சுரக்காய்க்கு உரம் வெக்காம சுண்டலிக்கு மட்டும் பல் பிரஷ் பண்ணுவீங்களா..

சார், நல்லா கேட்டுக்கோங்க… நல்லா சாப்பிடணும், நல்லா தூங்கணும்… என் பொண்டாட்டிய ரசிக்கணும்…. இதுதான் என் வாழ்க்கை… இதுதான் என் பிரையாரிட்டி… சமூகத்த திருத்துறதோ, சமூகத்துக்கு ஹெல்ப் பண்றதோ இல்ல என் ஸ்கோப்.. புரிஞ்சுதா…

கோலம் போட்டு கொண்டிருந்த ஸ்டெனோ… எழுந்து உரத்த குரலில்…. கை தட்டினாள்… அவள் கையில் இருந்த கோல மாவு புகை மாதிரி பரவியது. ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைத்து… சூப்பர் என்பது போல் மாதவனிடம் காட்டினாள்.. பின் அந்த இரு விரல்களையும் வாய்க்குள் வைத்து…. அவள் வாய்க்குள் வைத்து…. விர்…விர்… என விசில் ஊதினாள்….

விர்…விர்… விசில் சத்தம் காதை பிளந்தது…

மாதவன் தூக்கம் கலைந்து விழித்தான்.. விர்…விர்… விசில் சத்தம் காதை பிளந்தது… என்ன இது, கனவில் தானே… விர்…விர்… விசில் சத்தம் காதை பிளந்தது…

அருகில் படுத்திருந்த வாசுகி, அடித்து பிடித்து எழுந்தாள்… குப்பை வண்டிக்காரன் வந்துட்டான்… அவன் விசில் சத்தம் கேக்குது… சாரி நீங்க தூங்குங்க… அவள் சென்றாள்…

சன்னல் வழி மாதவன் பார்த்தான்… குப்பை வண்டிக்காரன் புது சட்டை அணிந்திருந்தான்… அவன் ஏன் வரவில்லை… எதனால் ஒரு வாரம் வரவில்லை…தெரியவில்லை…. ம்… தெரியவே போவதில்லை….. இவனும் கேட்க மாட்டான்… இதெல்லாம் தெரிந்து கொள்ள முயன்றால் வாழவே முடியாது.

எதிர் வீட்டு மாமா குப்பை வந்து கொட்டினார். இனி அவர் இது பற்றி பேச மாட்டார் என மாதவன் நினைத்தான். மாதவன் சொல்ல நினைத்ததையும் அவரிடம் சொல்ல மாட்டான். கனவில் சொன்னதோடு சரி.
எதிர் வீட்டு மாமாவிடம் தான் உணர்ந்ததை, தான் நினைத்ததை சொல்லப் போவதே இல்லை… உபயோகிக்காத பொருட்களை குப்பை என்கிறோம்… உபயோகிக்காத சிந்தனையையும், சொல்லையும் குப்பை என சொல்லலாமா…

வாசலில் வாசுகி அதே போல் குனிந்து கோலம் போட்டு கொண்டிருந்தாள்… குப்பை வண்டி பையன், குப்பைகளை வாரிக் கொட்டிக் கொண்டிருந்தான்… வாயில் அவன் வைத்திருந்த விசில் விர்…விர்… என காதை குடைந்தது…