பக்கங்கள்

சிதறால் - முற்றத்து முல்லை பூ

காலை 7 மணி. நாகர்கோவிலை வந்தடைந்த பஸ்…. புஸ்…. என காற்று விட்டு அமைதியானது. விட்டது என்னவோ ஏர் லாக்கின் டிஸ்சார்ஸ் என்றாலும்… மனிதர்களை போல் எனக்கும் பயணக்களைப்பு உண்டு பெருமூச்சு உண்டு என சொல்லியதோ என தோன்றியது. இறங்கியதும் இன்றைய பயண நோக்கை குறித்த திட்டமிடலில் இறங்கினேன்.

'ஐய்யா… இங்கிட்டு சிதறால் போகணும் எப்படிங்க’ 
சிற்றுண்டி உண்ட உணவகத்திலேயே விசாரிக்க துவங்கிய போது….
என்னது, சிதறாலா…. அப்படிண்ணா
அதுதாங்க ஒரு சமண கோவில் உண்டில்லீங்களா… அதுதான்…
சமணம்ன்னா….
ம்…. அது கிறிஸ்துவமும் இஸ்லாமும் இந்து மதமும் இருக்கதுக்கு முன்னால தமிழ் நாட்டில புத்தமும் சமண மதமும் இருந்துச்சுல்லியா. அப்ப உள்ள கோவில்ங்க… இந்த மார்த்தாண்டம் பக்கத்தில இருக்கே

அதெல்லாம் தெரியாது, இருங்க, மார்த்தாண்டத்துல உள்ள மாஸ்டர் இருப்பாரு அவரையே கேப்போம்
(மசாலா) மாஸ்டர் வந்து மலையாளத்தனமாக சிரித்தார், சிரித்த பற்களில் தெரிந்த அந்த வெற்றிலையின் சிவப்பு வண்ணம் வசிகரமாயிருந்தது. சிதறால் என்றதும் ஆமாங்க ஒரு மலைக் கோவில் இருக்குது, பகவதி அம்மன் கோவில் என்றார். யாரும் போறதில்லீங்க, நீங்க, பே வாட்ச் போங்க, சூப்பராயிருக்கியூம்….
நல்லதுங்க…. பேயப் போய் பாக்கிறேங்க என சொல்லிவிட்டு, அவரை ஏன் நாம் காயப்படுத்த வேண்டும்… என அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தேன்…

சிதறால்…. உள்ளூர் வாசிகளால் அங்கீகரிக்கப்படாததும், நிறைய பேர்களால் அறியப்படாமலும் இருந்தாலும், நான் தீர்மானமாய் செல்ல உத்தேசித்த காரணத்தை மனம் ஆராய்ந்தது.

வலைத்தளத்தில் ஒரு ஜெமோ கட்டுரையும், கூகிள், விக்கி இன்ன பிற இத்யாதிகளும் என்னை தளர்வாய் தீர்மானமாய் பயணத்திட்டம் அமைக்க அழைத்ததை வியந்தேன். இன்றைய இந்த தொழில் நுட்பங்களை ஆவிச் சேர்த்து கட்டிக் கொண்டேன். மனம் கனிய முத்தமிட்டேன். அவைகளும் வெட்கத்தால் கொஞ்சம் நெளிந்தன.

நாங்கள் மார்த்தாண்டம் வந்திறங்கி, ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டோம். ஒரு 7-8 கிலோ மீட்டர் என்பதால் நூறு – இறு நூறுக்குள் நிற்கும் என்பதாலும் பேருந்தை விடுத்து மூன்று சக்கரங்களிலேயே முயற்ச்சிக்கலாம் என திட்டம். 

ஆட்டோ ஓட்டுனர் கூட ஆர்வமாய், எங்கிருந்தோ எங்க ஊருக்கு வந்திருக்கிறீர்கள், கிலோ மீட்டருக்கு 8 ரூபா கொடுங்க’ என வாஞ்சையோடு கிளம்பினார். அருகில் இருந்த இன்னொரு ஆட்டோ ஓட்டுனர் சொன்னார் ‘நியாயமா கேப்பாரு போங்க’ என்றார் அந்த பேச்சில் இருந்த உண்மையையும், எளிமையையும் என்னால் எளிதில் உணர முடிந்ததால் ஒஹோ ஒக்கே என்றேன்.

ஆட்டோ குளிர்ந்த காற்றோடு, குறுகிய பாதைகளில் விரைந்தது. வழியெங்கும் இயல்பான இறுக்கமான உடலுடன் கொஞ்சம் கரிய நிறத்துடனான மனிதர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில்.... ஆண்களும் பெண்களும் ஆரோக்கியமான ஒரு உடல் கொண்டிருப்பதாக எப்போதுமே எனக்கு படும், இன்றும் அங்கனமே.

ஆட்டோ, சென்ற பாதையில் தண்ணீர் நிறைந்தோட ஒரு ஆறு… தண்ணீரை பார்த்ததுமே... எனக்கும் எங்கள் வீட்டு கடைக்குட்டிக்கும் சபலம். ஒரு குளியல் போட்டால் எப்படி.

பத்து நிமிசந்தான போயிட்டு வாங்க என ஓட்டுனர் உத்தரவு தர, குஷியோடு போய், ஆற்றில் விழுந்தோம். ஆஹா… சுத்தமான தண்ணீர், குளிர்ந்து எங்களை குளிப்பிக்க, குளிர்விக்க, ஒரு வித்தியாசமான உணர்வை உணர்ந்தோம். தண்ணீருக்குள் மூழ்கும் போது, மூச்சுமுட்டாமல், இயல்பாய் இனிமையாய் தண்ணிருக்குள் இருக்க முடிந்தது. ஏன் இப்படி, ஒரு வேளை தண்ணீர் அதிக குளிர் இல்லாமல் இருப்பதால் உடல் சமனமாக இருக்கிறதோ… தெரியவில்லை.
நல்ல ஒரு புத்தணர்ச்சி குளிப்புக்கு பின் சிதறால் மலைமுகட்டின் அடிவாரம் அடைந்தோம். 5 ரூபாயில் குடித்த நன்னாரி சர்பத் வேறு இன்னும் இனித்து கொண்டிருந்தது. இந்த ஊரு தண்ணி …. சும்மாவே இனிக்கும் அதிலும் எலிமிச்சையின் புளிப்பும், நன்னாரியின் இனிமையும் சேர்ந்து , வழக்கத்திற்கு அதிகமாக மிக உயரமான கண்ணாடி கோப்பை நிறைத்த ஒரு இனிய பானகம் இவ்வளவு சல்லிசு விலையில்… இனிக்காதா பின்னே…

மலைப் பாதை ஆரம்பிக்கும் இடத்தில், தகவல் பலகைகளை பார்த்தேன். இந்த இடத்தை பற்றிய குறிப்புக்கள் இருக்குமோ எனும் ஆர்வத்தில் ஓடி ஓடி சென்று பார்த்தாலும் எல்லாம், அரசின் பாதுகாக்கப்பட்ட இடம் என்னும் தகவல் பலகை மாத்திரமே. மலைப்பாதையில் ஏறத் துவங்கினோம்.

மிக அகலமாக, மிக வசதியாக நீண்ட படிகள் கொண்டு சாவதானமாக ஏற வசதியாய் அமைக்கப்பட்ட பாதை. ஆனாலும் ஒரு விசித்திரமான அனுபவம் எனக்கு….

ஆம், அதென்ன விசித்திரமான அனுபவம்….. ஏறாதே, ஏறாதே… என தடுக்கும் விதமாய் ஏற சிரமமான ஒரு பாதை. இத்தனைக்கும் ஒரு 10-15 நிமிடம் நடக்கக் கூடிய தூரம் தான் மொத்த குன்றுக்குமே. எதனால் இப்படி, காற்றா…. மலைக்குன்றின் அமைப்பா, இல்லை இன்றைய என் பயணக் களைப்பா… தெரியவில்லை. என்றாலும் ஒரு கடினம் போல, தடுத்து நிறுத்துவது போல்… கஷ்டம் தர மலை ஏறத்துவங்கினோம். ஒரு ஐந்து நிமிட நடையில் மூச்சு வாங்க, கால்கள் கொஞ்சம் கெஞ்ச… நின்று கொஞ்சம் ஆசுவாசப் படுத்தினோம். திரும்பி நடந்து வந்த பாதை பார்த்த போது வாய்…. அனிச்சையாய் சொன்னது… வாவ்…. அமேசிங்…. ஆம் அப்படி அற்புத காட்சி…. அழகு கொளிக்கும்… ஜொலிக்கும் …. என்ன ஒரு காட்சி…

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மலை முகடுகள் நிறைந்து இருக்க நம்மை சுற்றிலும் பசுமை, பசுமை… பின்னர் மலைத் தொடர்கள், பின்னர் மேகம்… இது என்ன, உலகை படைக்க மட்டும் சொன்னால்… சொன்னதோடு சேர்த்து….  ஆண்டவன் வந்து இங்கு ஓரமாக ஒரு ஓவியத்தை வரைந்து விட்டு, சென்று விட்டானே…..

மலை ஏறி, பாதி தூரத்தில் சிறிதே இளைப்பாற வசதியாய், ஒரு தளம் இருக்கிறது. அங்கிருந்து சுற்றிப் பார்க்க…. மலைமுழுதும் சுற்றிப்பார்க்க வசதி உண்டு. தூரத்தில் தெரியும் இருப்பு பாதை அதில் சென்ற ஒரு தொடர் ரயில்….. ஒளிந்து கொண்டிருந்த சாலையில் ஓடிய ஒர் வண்டி, வளப்பமாய் ஓடிய ஒரு ஆறு, அதன் பாதை …. இதற்கெல்லாம் ஊடாக தெரியும் மேற்கு தொடர்ச்சி மலையின் குன்று முகடுகள்….. 360 கோணங்களில் பார்க்க ஒரு சிறந்த ஓவியம். உயிருள்ள ஓவியம்.

இயற்கை… ஒரு இனிமை…. அது தரும் சுகம் அலாதியானது. அதை ரசிக்க நாம் கொஞ்சம் மனதை மாற்ற வேண்டி வரும். பே வாட்ச்சில் போனால் வருவது போல், உடனே தொற்றிக் கொள்ளும் உணர்வு அல்ல இது.
இயற்கையை ரசிக்க கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

பேச்சை குறைக்க வேண்டும். அமைதியாக, காற்றை கொஞ்சம் அனுமதிக்க வேண்டும், சுற்றுப்புற மணத்தை நுகர வேண்டும், உடல் எங்கனம் உணருகிறது என பார்க்க வேண்டும். கண்களை அதன் போக்கில் விட்டு, அது சொல்லும் சேதியை கொஞ்சம் ஆற அமர உணர வேண்டும். மனதை கொஞ்சம் கெஞ்சி கூத்தாடி… அய்யா அரசே என சீராட்டி….  சிந்தனையை கொஞ்சம் மட்டுப் படுத்தி, தனக்கு தெரிந்த விஷயங்களையே மறுபடியும் மறுபடியும் புலம்பாமல், அமைதியாய் இருக்க சொல்லி விட்டு…. சும்மா நிற்க வேண்டும்… நின்றால் நாம் இயற்கை ரசிக்க ஆரம்பிப்போம் என நினைக்கிறேன்.

சற்று நேர ஓய்வில் உடலும் மனமும் கொஞ்சம் வித்தியாசமாக தான் ஆனது. அந்த சுத்த காற்றில் உடல் மனம் இரண்டுமே கொஞ்சம் இலகுவாகி நம்மை அழுத்தி பிடித்திருக்கும் பிரச்சனையின் பிடுங்கல்கள், நாந்தான் பெரிசு… நீயெல்லாம் எனக்கப்புறந்தேன் எனும் கூக்குரலும் கொஞ்சம் மட்டுப்பட, மனம் ஒரு குழந்தையை போல் அதென்ன, இதென்ன…. ஐ… ஆ…. என கூக்குரலிடும் நிலை லேசாய் எட்டி பார்த்தது.

இன்னும் ஒரு 5 நிமிட நடையில் குன்றின் மேல் ஏறிவிடலாம். அடர்ந்த ஒரு மரம் அதனடியில் கற்களால் ஆன வாசல் நிலை. எளிமையும் வேலைப்பாடுகளும் அறவே இல்லாத ஒரு வாசல்…. அது காட்டும் பாதை….. வாவ்… இரு மலைகளின் நடுவில் குகை போல் தெரியும் ஒரு பாதை…. மனம் குதூகலிக்கிறது… அடேயப்பா, கதைகளில் நாம் கேட்டு, மனதில் உருவாக்கி கொண்ட ஒரு மர்மம் தொனிக்கும் அழகு போல அல்லவா இருக்கிறது…..

மெல்ல அதன் அருகில் நகர்ந்து அந்த கல் தூணை கட்டிப் பிடித்து கொண்டேன்… கண்களை மூடிக் கொண்டேன். கட்டிப்பிடி வைத்தியம் கன ஜோராக இருந்தது. தோளின் இரு பகுதிகளும் வளைத்து அணைத்ததில் கொஞ்சம் விரிந்து ,….. சடக்…. என ஒரு சொடக்கு விழுந்தது. விழுந்த சொடக்கின் புண்ணியத்தில்… இன்னும் கொஞ்சம் மார்பு விரிய…. காற்று இன்னும் கொஞ்சம் புகுந்தது. கொஞ்சம் அதிகப்படியான அந்த காற்றினால் என் மூச்சு இன்னும் நீளமானது. கண்கள் சொல்லாமலேயே மூடியது. நாசிகள் அந்த தூய்மைகாற்றையும், குளிரையும் ஒரு சேர அனுமதிக்க, மூச்சில் மட்டுமே மனம் லயித்தது. சிந்தனை கூட லேசாய் மட்டுப்பட்டது. சிறு குழந்தை போல் கண்கள் நீரைப் பிரசவித்தன. அந்த ஒரிறு சொட்டு நீரில் காற்று பட இன்னும் குளிர்ந்தது. மேனியெங்கும் புல்லரித்தது.

அதற்குள் எங்களவர் அனைவரும் வந்தடைய….. ஆங்… கல்லை கட்டிக்கிட்டு என்ன செய்யுறீங்க…. இதை விளக்கவோ…. வியாக்கியானம் தருவதோ….. குறிப்பாய் பேசினாலோ….. மிகவும் செயற்க்கையாக இருக்கும். வேண்டுமானால் இப்படி எழுதி தீர்க்கலாம்…. கொஞ்சம் புரியும்…. எனவே டிராக் மாற்றி டகால்டினேன்….

‘இல்ல இப்படி ஒரு ஐதீகம்…. இந்த கல் தூணைக் கட்டிக்கிட்டு எதையாவது நினைச்சிக்கிட்டா நடக்குமாம்..
‘எது…. நடக்கும்… இந்த கல் தூணா.


ஒரு நகைச்சுவையில் கரைந்து விட்டு அந்த கல்வாசல் காட்டிய குகை பாதையில் இறங்கினோம்… இறங்கிய வாக்கில் இடது பக்கம் தலை திருப்ப, அப்படியே வாய் பிளந்து நின்றோம்… அந்த பாறையில் சமண சிற்பங்கள்…

மனதை கொள்ளை கொள்ளும் அழகிய சிற்பங்கள்… அருகில் வந்து சிற்பங்களை ரசித்து விட்டு கோவிலுள் பிரவேசித்தோம்…

பகவதி அம்மனும், பகவான் மகாவீரரும்… அழகாக கூட்டணி அமைத்து ஒரே கோவிலுனுள் அமைந்து இருக்கிறார்கள்… அர்ச்சகரும் ஒருவரே… அவரும் பேண்ட் சர்ட் அணிந்து நம்மை போல் இருந்தார்… ஆ…. சூப்பரு… கொண்டை, தொப்பை…. பஞ்சகச்சம் இல்லாமல்…. வாங்கோண்ணா…. எடுத்துங்கோங்கண்ணா என சொல்லாமல்… எந்த ஊரு… எப்படியிருக்குது என சகஜமாக பேசினார்….. அதிலிருந்த புதுமை நன்றாக இருந்தது

வரலாறு கேட்ட போது, நான்காம் நூற்றாண்டில் ஒரு சமண தலமாகவும், மருந்துகள் விளைவிக்கும் இடமாகவும் இந்த மலைமுகடு இருந்ததாகவும், கோவில் புடைப்புக்கள் என எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாய் இயற்க்கையாய் ஒரு வழிபாட்டுத்தலம் என அந்த காலத்தின் சுவடுகளை காண்பித்தார். பின்னர் 12ம் நூற்றாண்டில் மார்த்தாண்டத்தின் மன்னர் வர்மா…. இங்கு பகவதி அம்மனையும் பிரதிஷ்டை செய்து, கோவிலை விரிவு படுத்தி தூண்கள் அமைத்து குகைக் கோவிலாகவும் உண்டாக்கியதாகவும் சொன்னார்.

பிராமிய எழுத்துக்களில் இருக்கும் கல்வெட்டு ஒன்றை பார்த்தோம்… அது முதலாம் நூற்றாண்டின் அமைக்கப்பட்டது எனவும் வலையில் வாசித்தேன்…. வரலாறோ…. ஆய்வோ… ஆழமாக செய்யாமல்… நகர்ந்தோம்…
கோவிலை விட்டு வெளியில் நகர்ந்து அங்கிருந்த ஒரு நீர்த்திவலையின் அருகில் அமர்ந்து சும்மா இருந்தது சுகம்…. ஏழவே மனமில்லாமல்…. எழுந்தோம்….

மலையும், காட்சிகளும், உணர்வும் இன்னும் மனதை நிறைக்க ஒரு நிறைவுடன் சிறு குழந்தை போல் தாவிக் குதித்து ஓடி இறங்கினோம்….
ஆட்டோ ஓடத்துவங்கியது.....

கோவில் பார்த்த பரவசமோ, இல்லை அமைதியோ, அப்படியே நாங்கள் இருக்க, ஓட்டுனர் கேட்டார்….
‘எப்படிங்க இருந்துச்சு…
‘சூப்பர்…. சூப்பர்…. பிரமாதம்…. ரொம்ப நல்லாயிருந்துச்சு,
‘இங்கதான் பொறந்ததே, இருக்கிறதும் இங்க தான்… ஆனா… நான் இன்னும் பார்க்கல…. சும்மாவா பெரியவங்க சொன்னாங்க… ‘முற்றத்து முல்லைக்கு மணம் இல்லைன்னு’… பாருங்க எங்க இருந்தோ வந்து நீங்க பார்த்துட்டு போறீங்க…. அவசியம் அடுத்தாப்புல நான் பாப்பேங்க….’

 நான் ஆட்டோவில் சரிந்து உட்கார்ந்து கொண்டேன்…. பேச ஏனோ தோன்றவில்லை…. மனம் அமைதியாக இருந்தது…. அவர் பார்ப்பேன் என சொன்னது எனக்கு பிடித்தது….