பக்கங்கள்

அரைகுறை இறைவன்...!!!

சேட்டை ஜாஸ்தியாயிருச்சுடா, இறைவனை பத்தியே குறையா…. அரை குறை..!!! என அவசர தீர்மானம் போட வேண்டாம். இறைவன் என இங்கே சொன்னது ஒரு வார்த்தை பிரயோகமே. இறை என சொல்லும் போது, அதன் சில குணங்களை மட்டும் எடுத்து கொண்டேன். இறைவன் என்பதில் நிறைவானவன் / முழுமையானவன் அன்றின் படைக்கும் வல்லமை பெற்றவன் எனும் இரு குணாதிசயங்கள் மட்டுமே விவாதிக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.


ஓகோ அது சரி, அப்ப சரி, ஆனால்…. அரைகுறை என்கிறாயே….. அது என்ன எனும் கேள்விக்கு, இறையும் இல்லாமல் விலங்கும் இல்லாமல்…. இரு குணங்களும் சரி விகிதத்தில் கலந்த துர்பாக்கியசாலி…. நம்மைப் பற்றித்தான் எழுதுகிறேன். மனிதர்களைப் பற்றித்தான்.

உயிரினங்களை பிரிக்கும் போது, அதன் அறிவு வகையை கொண்டு பிரித்தால், ஒவ்வொரு அறிவாக ஏறும் படிக்கட்டில் 5 அறிவுகளை கொண்டு விலங்குகளும், 6 வது அறிவை கொண்டு நாமும் நிற்கிறோம். சரி அஞ்சுக்கும் ஆறுக்கும் இடையில் என்ன வித்தியாசம்….

அதை எளிமையாய் சொல்லுவோமா எனும் சிந்தனைக்கு நாம் ஒரு திரைப்பாடலை கடன் வாங்குவோம்.

நம் தமிழக முதல்வர் ஜெ.. அவர்கள் ஆனந்தமாய் ஆடிப்பாடும் ஒரு பாடலில் இப்படி ஒரு வரி வருகிறது.

மரத்தில் படரும் கொடியே, உன்னை படைத்தவரா அங்கு படர விட்டார்.

பாய்ந்து செல்லும் நதியே, உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்…

ஆஹா… இரு வரிகளில் எவ்வளவு ஆழமான ஒரு விடயம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வரிகள் சொல்வது, படைத்தவர் படைப்போடு நிறுத்தி விட்டார். அவர் வாழவோ… வாழும் முறையையோ…, பாதை சொல்லவோ முயலவில்லை. உயிரினங்கள் தங்களுக்குள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே வாழ்க்கை அமைகிறது எனும் சித்தாந்தம் இங்கு மிளிர்கிறது.

’மரத்த வைச்சவன் தண்ணீர் ஊற்றுவான்’

என இன்னொரு கவிஞர் சொல்கிறாரே…. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என கேட்டிருக்கிறோமே… அது எப்படி…..

அது அப்போ….. எது சரி…. என நமக்குள் எழும் கேள்வியே…. இப்பதிவின் ஆணி வேர்.

வடிவேலு சொல்வாரே…. ‘உக்கார்ந்து யோசிப்பாங்களோ…!!!!’ ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ…!!!’ என கேட்பாரே.. அது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனி பலம். சிந்தித்து சில விசயங்களை படைப்பது அல்லது மாற்றுவது….. நம்மால் சாத்தியம். நம்மால் மட்டுமே சாத்தியம்.

படைப்பு எனும் போது எத்தனையோ உண்டு. வீடு… குடும்பம், குழு, சமூகம், கம்பெனி, இலக்கியம், அறிவியல் கண்டுபிடிப்பு, இப்படி எத்தனையோ…..

ஒரு சின்ன வேண்டுகோள், இந்த படைப்பை பற்றியும் அதன் பரிமாணம் பற்றியும் எழுதலாம். ஆனால் வெறும் பதிவு…. நீ நீ நீ ண்ண்ண்ண்டு…. கட்டுரை போலாகிவிடும். எனவே ஒரு நிமிடம் வாசிப்பதை நிறுத்தி விட்டு படைப்பை பற்றியும் அதில் நமக்குள்ள பலம் பற்றியும் கொஞ்சம் நீங்களே யோசித்து விடுங்கள்.

பசியாற மட்டுமே விலங்குகள் உண்ணுகின்றன. ஆனால் நாமோ பசி மட்டுமல்லாது, ருசியும் வேண்டும் என நிர்பந்திக்கிறோம். உண்மைதானே. ஆம்…. அது ஏன்…..

நமக்கு பசியும் ஆற வேண்டும் பின்னர், அது ருசியாகவும் இருக்க வேண்டும். அதற்கு காரணம், நம்மால் ருசி என உணரப்பட்டால், அது ஒரு வித மகிழ்ச்சியை நம்மின் உள்ளுக்குள் ஏற்படுத்தும். ஒரு நிறைவை நமக்குள் உண்டாக்கும். அந்த மகிழ்ச்சியை நிறைவை நாம் அனுபவிப்பவர்கள். அதை வேண்டும் இன்னும் இன்னும் வேண்டும் என ஆசிப்பவர்கள்.

அதனால் தான் உண்ணுதல் மட்டுமல்லாது நம் எல்லா செய்கையையிலும் இந்த இன்பம் துய்த்தல் எனும் செயல் பாடு உண்டு. உன்னைப் போல் யாரேனும் உண்டா…. என நமக்கு தரப்படும் சமூக அங்கீகாரத்துக்காக நம் உயிரையும் கொடுக்க சித்தமாகிறோம்.

விலங்குகளுக்கு உணவு தேவைப்பட்டால், சக உயிரை கொல்ல உரிமையும் தார்மீக அனுமதியும் இருக்கிறது. பழிவாங்கும் உணர்ச்சி கூட இயல்பு என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் மனிதனுக்கு அப்படியில்லை. உயிரை கொல்வது பாவம், பழிவாங்குவது மிருக குணம் என அறிவுரை வழங்கப்படுகிறது.

அவன் இயல்பு விலங்கின் குணமே. விலங்கின் குணத்தோடு அரை குறையாய் அமைக்கப்பட்ட இறை குணமும் அவனுக்கு உண்டு. அவனுக்கும் பசி உண்டு, வன்மம் உண்டு, பகை உணர்ச்சி உண்டு. என்றாலும் அதன் மேல் படிமானம் மனம் சமைத்த நடைமுறை சட்டதிட்டங்கள் கலாச்சாரமாக, வேல்யூ சிஸ்டமாக அவனை வழி நடத்தும்.

பாதி மிருக இயல்பும், பாதி இறை குணமும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதாலேயே அவனுக்கு இந்த தொல்லை. இந்த வாழ்வியல் துன்பம். மிருக வழியா, இறை வழியா என அவன் தன் பாதை தேர்ந்தெடுத்து செல்வதிலும், அந்த தீர்மானிக்கும் திறனிலுமே அத்தனை கோளாறுகளும்.

ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் என குழப்பங்களும், மன தயக்கங்களும் அவனை வாட்டும்.

அன்பிற்குரியவர்களே…. இப்பதிவில் சொல்லப்படுவது ஒரு எளிய ஆனால் ஆழமான தகவல். இந்த தகவல் அதன் அர்த்தத்தில் புரியப்பட்டால், நம் மனித வாழ்வில் நிம்மதி வரும், இனிமை வரும். தயக்கங்கள் அகலும். தெரியுமப்பா, எனக்கு …. என தன்னம்பிக்கை வரும். நம்மை பகுத்து நம் செயல்திறனும், சிந்தனை ஓட்டமும் புரியும்.

ஆம்… இது ஒரு டிப் ஆப் த ஐஸ்பெர்க்தான். இதன் நுனி பிடித்து கொஞ்சம் சிந்தித்தால் ஒரு சில ஆழமான விசயங்கள் தொட முடியும். அந்த தேடல் பயணத்தின் ஆரம்பத்தில் தான் நானும் இருக்கிறேன். தயவு கூர்ந்து தங்களுக்கு தோன்றியதை என்னுடன் பகிர்ந்தால் எனக்கும் மற்றவருக்கும் உதவியாய் இருக்கும்.

குமரி முதல் காஞ்சி வரை...

கண் இமைக்கும் நொடியில் இங்கு எதுவும் நடக்கும்

ஆம்… சட்டப் பேரவை தேர்தல் எண்ணிக்கை நேற்று துவங்கி முதல் சில மணி நேரத்தில், அதிமுக முன்னிலை என தெரிந்த உடனேயே, போயஸ் தோட்டம் களை கட்டியது. தொண்டர்கள், அரசின் உயர் அதிகாரிகள், ஊடகங்கள் என சாலையை நிறைத்து, மனித தலைகள் படை எடுக்கவும், அந்த ஏரியாவே கல கல என ஆனது. உற்சாகம் எங்கும் பரவ, பட்டாசுகள் உச்சஸ்தாயியில் சப்திக்க, இனிப்புக்கள் இலவசமாய் வினியோகிக்கப்பட, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரத்தத்தின் ரத்தங்கள் மகிழ, பரவசம் அங்கு உச்சத்தில் இருந்தது. அறிவாலயம் அமைதியாய் ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. தோல்வியில் அமைதி வருமோ….

கருத்துக் கணிப்புக்கள் இம்முறையும் பல் இளிக்க, வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாய் குமரி முதல் காஞ்சி வரை ஒரே சிந்தனைக் கோட்டில் இணைந்தனர்.

கூட்டணி ஆட்சி தான் என எல்லோரும் அபிப்பிராயப்பட, வாக்காளர்களோ சூப்பர் ஸ்டார் போல, அதிரடி முடிவெடுத்தார்கள்.

அதிமுக தனிப் பெரும்பாண்மை என்பதும். தேமுதிக எதிர்கட்சி என்பதும் எதிர்பாராத திருப்பங்கள்.

திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதும், மதிப்பிற்குறிய அமைச்சர்கள் தோற்றதும் பெரிய சோதனைகளே. ஓட்டுக்கு நோட்டு எனும் திட்டமும், இலவச சிலுமிசங்களும் பாய் போட்டு படுத்து, மூஞ்சி மூடி கிடப்பதும்…. பல்கலை கழகத்தில் ஆய்வு பாடத் திட்டமாகமே சேர்க்கலாம்.

காங்கிரஸ், பா.ம.க. நிராகரிக்கப்படும் என எதிர்பார்த்தது உண்மை, ஆனால் இத்தனை வீரியமான அடி என்பது யாரும் எதிர்ப்பார்க்காததே.

மதிமுக இந்த சூறாவளியில் சிக்கி சிதைந்து போனது ஆச்சரியமே. ஜெ போட்ட 160 சீட் கணக்கும், அவரது அதிரடி அணுகுமுறையும்… அவசியமோ, என நினைக்கவும் வைத்த தேர்தல் ரிசல்ட் இது.

வெற்றியின் தருணத்தில் ஜெ. தந்த பேட்டி, மிகவும் பிரமாதம். அடக்கமாகவும், பொறுப்பாகவும், திடமாகவும் பேசினார். ஒரு கட்டத்தில் தத்துவார்த்தமாக கூட பேசினார்.

‘முயற்சி ஒன்று தானே முக்கியம். இது நடக்குமா… எப்படி முடியும் என்ன வாகும் என மலைத்து நிற்காமல், முயல வேண்டும் அல்லவா…. என அவர் சொன்னது, அவரது ஆழ் மனத்தின் ஓட்டத்தை பிரதிபலித்தது. ஆனால் அவர் பால்கனியில் நடக்கும் போது, ஏனோ தெரியவில்லை, பழைய வேகம் கொஞ்சம் மிஸ்ஸிங். வயதோ, அல்லது ஏதோ சோர்வோ ஒன்று அவரிடம் தெரிந்தது. நல்ல உடல் பலத்துடன், (மன பலம் தான் எக்கச் சக்கம் இருக்கிறதே) அவர் நல்லாட்சி தரட்டும்.

சட்டசபை தேர்தல் – 2011

 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, சுடச்சுட நடந்த மாஜி மந்திரி கைது, திமுகவுக்கு மிகப் பெரிய சவால். காலம் காலமாக, பூசப்பட்ட ஊழல் சாயம் இன்னும் வண்ணப்பட்டது.

- தேமுதிக வையும் இணைத்து இருமுனை போட்டி, ஆளும் கட்சியின் பலவீனம் என களம் அமைத்ததில் அம்மாவுக்கு சாதகம்.

- என்றாலும் தேர்தலின் வெற்றி வாய்ப்புக்களின் சாதக பாதகம் மாறி மாறி வருவது நமக்கே திணறுகிறது.

- கூட்டணிகள் அமைப்பதிலே இரு கழகங்களும் மூச்சு வாங்கி, திணறியதை பார்க்கும் போது, ஒன்று நிச்சயம் ஆனது. ஒரு தலைமையின் கீழ் தமிழகத்தை கொண்டு வரும் ஆளுமை (எம்.ஜி.ஆர் – மேஜிக்) ஆப்செண்ட் என்பது. அல்லது தனி பலம் நீர்த்து போனது.

- கூட்டணி அமைத்ததில், திமுக வுக்கு ஒரு பரவலான பரிதாப பலம் கிடைத்தது…. ஐய்யோ பாவம் இந்த வயசுல என்ன பாடு படுத்துறாங்க. 63 என ஒரேயடியா கேக்குதே காங்கிரஸ், வேற வழியில்லாம கொடுத்துட்டாங்க திமுக, என அனுதாபம் கிடைத்தது.

- கிடைத்த தொகுதியில் வேட்பாளர் அமைக்காம, கொடும்பாவி எரிக்கிறதுலயே முனைப்பா இருக்கிற காமராஜ் ஆட்சி அமைப்பவர்கள் அடப்பாவமே ரேஞ்சு.

- அதே வேளையில் அம்மா அணியில் அது ஒரு சருக்கு. யாரையும் கலந்தாலோசிக்காமல், அதிரடி 160 வேட்பாளர்களை அறிவித்து, மூன்றாம் அணி என ஊடகத்துக்கு தீனியும் தந்து, திமுகவுக்கு, காப்பிக்கு சீனியும் தந்தார் ஜெ. இன்னும் இந்தம்மா மாறலப்பா என பொது ஜனத்துக்கு அவலும் தந்தார்.

- மூம்முனை போட்டி… ஒரு வேளை ஏற்பட்டு இருந்தால், பேசாமல் எலெக்ஷன் வைக்காமல், ஜம்ன்னு ஸ்கூட் அடித்து, நாமளே ரிசல்ட் டிக்ளேர் செய்திருக்கலாம். அது அவர்களுக்கும் புரிந்ததால், அவசர அவசரமாக சமரசம் செய்து, ஒரணியில் லாவணி பாடினார்கள்.

- சொன்னத கேட்டுட்டு பொட்டி பாம்பா இருந்தாரே நம்ம வைகோ, அவர கழட்டி விட்டுட்டாங்களே என, பொது ஜனம் பீல் பண்ண வைத்து, தன்னை பலவீனமாக்கினார் அம்மா. இந்த 6-7% ஓட்டு எங்க போகுங்கிறது மிகப் பெரிய மில்லியன் டாலர் கொஸ்டின்… மதிமுக வாக்கு யாருக்கு என்பது நமக்கு தெரியாதது பெரிசுல்ல, சம்பந்த பட்டவங்களுக்காவது தெரியுமா…

- கூட்டணி பேரம், தொகுதி அறிவிப்பு எனும் கும்மாளத்திலேயே நேரம் விரயமானதால், மனுத் தாக்குதலில், பிரச்சாரத்துக்கு போவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் முக்கிய காரண கர்த்தா தேர்தல் கமிஷன். அப்படின்னாலும், அப்பாடி வாக்காளர் தப்பித்தார்.

- டிவி, இண்டெர் நெட், மொபைல் என தொழில் நுட்பங்கள் மாறியதால் பிரச்சாரம் இவ்வளவு பண்ணினா போதும் என ஆகி விட்டதோ.? பாஸ்ட் புட் பிரச்சாரம்.

- தேர்தல் அறிக்கையில் கிரைண்டர் இலவசம், உங்க வீட்டுல கிரைண்டர் இருக்குதோ, அப்ப என்ன செய்யுறது… ம்….. கிரைண்டர் இல்லேண்ணா மிக்ஸி, என்பது போன்ற ஆப்ஷன் அதகளம் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

- ஆடு கொடுப்போம், அதற்கு அகத்திக் கீரை கொடுப்போம் எனும் பாணியில்…. வைச்சுக்கோ ஃபேனு… இருக்கிறேன் உனக்கு நானு…. என அன் அபிசியலா மைனாரிட்டி ஐய்யாவோட தேர்தல் அறிக்கைய எடிட் செய்து, எடக்கு மடக்கு செய்தும்… நகைப்புக்குறிய இலவசம் அறிவித்தும்…. தேர்தல் அறிக்கை எனும் உன்னத விசயத்தை தரந்தாழ்த்தினார் ஜெ.

- டிவி கொடுத்தாச்சு, மிக்சி கிரைண்டரும் காத்தாடியும் கொடுத்தாச்சு… அடுத்த தேர்தல்ல என்ன அறிவிப்பு வரும்ன்னு எதை நினைச்சாலும் காமெடியாத்தான் இருக்கு. நாட்டோட நிலை, வீட்டுக்கு போடுற பட்ஜெட் மாதிரியில்ல இருக்கு.

- கலகலப்புக்கும், காமெடிக்கும்ன்னே சில ஆளுங்க அரசியல் பண்ணுவாங்க இல்லையா, அவங்களுக்கு இந்த தேர்தலோட அட்ரஸ் காணாம போயிடும் போல இருக்கு.

- யாரு எந்த அணியில இருக்காங்க, எவருக்கு ஓட்டு போடுறதுன்னு பொதுஜனத்துக்கு கன்புயூஷன் கண்டிஷனா இருக்கும்ன்னு தோணுது.

- ரெண்டும் சரியில்ல, ஆனா இருக்குறதுல எது ஓகே எனும் நிலைக்கு மிஸ்டர். பொது ஜனம் தள்ளப்பட்டிருக்கிறார்.

- அறுதிப் பெரும்பாண்மை கிடைக்காதுன்னு கழகங்களே முடிவு செஞ்சுட்ட மாதிரி தெரியுது. பொது ஜனத்துக்கென்ன…. கலக்குங்க.

- இருந்தாலும் முடிவுக்கு பின்னும், இன்னும் அஞ்சு வருசத்துக்கும் பரபரப்பா பேசுற லெவல்ல, முடிவு அமையும்ன்னு தான் தோணுது.