பக்கங்கள்

சிறுகதை - எதிரொலிகள்....

எனக்கு கவிதைகள் மேல் ஒரு சிறு கோபம் உண்டு்…..

கவிதையின் குணங்கள் அப்படி. அதன் இயல்பு அப்படி. ஒரே நேரத்தில் ஒரு மனிதனை கவிழ்த்து போடும் வலு அதற்கு உண்டு…. ஒரு வரியில், ஒரு மொந்தை கள்ளை அளி(ழி)(விழ்)த்து, மேகத்தில் அலைய விடும் வினயமும் உண்டு, சுடு நீராய் கண்ணீரை பிரசவித்து, ரத்தம் சுண்ட நரம்புகள் புடைக்க உணர்வை தூண்டும் தூண்டிலும் உண்டு…

கவிதை மேலுள்ள கோபத்தில் கவிதையை திட்டி கவிதை எழுதினேன்….

கவிதை கண் ராவி 

கவிதை கண்ணாடிகள் போல.......     முன் வந்து நிற்கும் உருவம் காட்டும் முகமூடி.......

மொட்டை வார்த்தைகளை   மொட்டாய் பூக்கும் பூச்செடி

நம்மில் இருந்து அர்த்தத்தை களவாடும்,    அற்புத விளக்கு பூதம்........

ஓஹோ… கவிதைகளில் இப்படி ஒரு அவஸ்தை இருக்கிறதோ….. ஒவ்வொரு வாசகருக்கும்... கவிதைகள் பிரதிபலிக்கும் அர்த்தம் வேறு வேறாய் இருக்கிறதோ… ஆங்… கட்டுரைகள் செல்லக் குட்டிகள்: என்ன ஆசிரியர் சொல்கிறாரோ, அதை அப்படியே பிரதிபலிக்கும் என நான் கருதியதுண்டு.

கதைகளை கட்டுரையின் குடும்பம் (சேம் ஃபேமிலி) என நினைத்திருந்தேன்… அவை வேற்று சாதி என்பது எனக்கு நேற்று புரிந்தது….!!!! கதைகள் கூட பூனை போல், புனைவுகளை பிரசவிக்கும் என இப்போது தெரிந்து கொண்டேன்….

சமீபத்தில் எழுதிய தனிமை கதை எதை பற்றி பேசுகிறது என இரு கருத்துக்கள் சொல்லப்பட்டன, ஆனால் அவைகள் நான் நினைத்தவை அல்ல…. !!!! இந்த தனிமை கதையின் ஒற்றை வரி என்னவோ என கேட்ட போது, இரு கருத்துக்கள் வந்தன…

1.   இக்கரைக்கு அக்கரை பச்சை… இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பது என ஒற்றை வரி தாக்கமாக ஒருவர் சொல்ல
2.   சம்சாரத்துக்கும், சாமியாருக்கும் நடக்கும் போராட்டத்தில், சம்சாரம் வெல்வதாக இன்னொரு தாக்கமும் சொல்லப்பட …..

நான் கொஞ்சம் திகைத்தேன்… மேற்கூரிய இரண்டுமே மிக நல்ல கருத்துக்கள், ஆம், இக்கதையின் கொள்வுகளாக கொள்ளக்கூடியது என்றாலும் நான் சொல்ல வந்ததை, தெளிவாக சொல்லி விடலாமே என அமர்ந்தேன்… 

நான் சொல்ல விளைந்தது…….. Breathing space பற்றி………….

இது ஒரு நுண்ணிய விஷயம். இதை புரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும் மிகுந்த அவசியம் இருக்கிறது… அதிலும் குறிப்பாய் உறவுகளிடத்தில் உரசல்கள் ஏற்பட முக்கிய காரணி இந்த Breathing space தான்.

நீ என் பொண்டாட்டி தான, அப்ப உனக்கு வர்ற மெயில் பூராத்தையும் எனக்கு காட்டு என்பது, வன்முறை. என் புருசன் தான நீ, அப்ப வீட்டுக்கு வந்ததில இருந்து, என்னை சுரண்டிகிட்டே இரு, என மூக்குக்குள் விரல் விட்டு ஆட்டினாலும் வன்முறை.

அன்பு அமைதியானது, ஆர்ப்பாட்டம் இல்லாதது, ஆக்கபூர்வமானது….. அது அடுத்தவரை உரிமைப் படுத்த நினைக்காது… ஒரு மௌனம், ஒரு பேசாத வார்த்தை இவைகள் தான் அன்பின் அடித்தளம்.

எனக்காக நீ அழலாம், இயற்கையில் நடக்கும், ஆனால் எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் …………

உறவில் வெகு ஜன பிரச்சனையே இதுதான்… ஏன் எங்கிட்ட சொல்லல, ஏன் எங்கிட்ட மறைச்ச என நம் எதிர்பார்ப்புக்கள் அத்துமீறலையே பிரசவிக்கின்றன. அன்பை பிரதிபலிப்பதில்லை. சொன்னத கேட்டுட்டு, ஜடமாய் இருப்பது அல்ல உறவு.

ஆனால் நம்மில் பலர், காஸ்ட்ட்லி எல்.சி.டி. மாதிரி காட்டிக் கொள்ள ஒரு பொம்பள, எனும் ரீதியில் தான் பெண்டாட்டியை நடத்துகிறது.

இக்கதையில் வரும் நாயகன் நாதன், மூச்சு விட….!!!! நேரமில்லாமல் உழைக்கிறான். தன்னுள் ஆழ சென்று, தன் சுய விருப்பு வெருப்புக்களை அவதானிக்க முடியாமல் தவிக்கிறான். அதனாலேயே அதில் அன்னியத்தை உணர்கிறான். அந்த அழுத்தத்தில் தன் அடிப்படையை உரசுகிறான்.

ஆத்து மீனில் கூட, அவன் ஆம்படையாளை நினைக்கிறான். கவிதை எழுதுவதை விரும்புகிறான். நயம் இட்லி சாம்பாரை விரும்புகிறான். அவன் தன் மனித இயல்பாய் இருக்கிறான்….. அல்லது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான், அந்த நாதனை ஒரு மாதம் ஃபண்ட் மார்க்கெட் பக்கம் போகாமல் இருக்க சொல்லி, தாமிரபரணியில் மீன் பிடிக்க சொன்னால்…. துள்ளி எழுந்து ஓடி விடுவான்….

அப்படியென்றால் அவன் தேவை என்ன… அவன் விரும்புவது எதை… தனிமையை… தன்னுள் சென்று தனக்கு இதமானது எது.. தான் விரும்புவது எது என கேட்பதை… அபாயகரமாக, அவனுக்கு இந்த சமூகம் அதை தரவில்லை.. அதனாலேயே ஓடி ஓடி எதையோ தேடுகிறான்… அவனுக்கு தேவையானது அவனது வீட்டிலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது… என்ன ஒரு அசௌகரியம்… அது அவனுக்கு கைக்கு அருகில் இருந்தும், சுயம் விளக்கம் கிடைக்காததால், அர்த்தம் கிடைக்கவில்லை… என அலைகிறான்.

உறவுகள் தான் நம்மை உலவ வைப்பது, உழல வைப்பது. தன்னைப் போல, உறவில் தெளிவு கொண்டு, துணை தேடும் அந்த திரு நெல்வேலி அண்ணாச்சியில் தெளிவு பெறுகிறான் என கதை அமைத்தேன்... 

மனித இயல்பு என்றும் மாறுவதில்லை…

ஹா…ஹா…. உண்மை இதுதான்…. கூடி வாழும் இயல்பினனே மனிதன்……….. எக்காரணத்தை சொல்லியும், தனிமை தேடுபவன் மிருகமே……….. நிரந்தர தனிமை தேடுபவன் மிருகமே... அது என்லைட்மெண்டே ஆனாலும் கூட……………..!!!!!  போ.. தனியாக போய், தனக்குள் இரு... பின்னர் வா என்பதே மனித வாழ்க்கை என்பது என் ஸ்கூல் ஆப் தாட்...

சுய தேடல் மறுதலிக்கப்படும் போது, மதம் கொள்ளும் மடமை நம்முள் இருக்கிறது…. அது தவறான சில தாக்கிதுகளை சொல்கிறது.

சரி…… இப்போதாவாவது நான் சொல்ல நினைத்ததை சொன்னேனா… அல்லது… குட்டையை இன்னும் குழப்பி விட்டேனா….

யப்பா….. முடியல… இப்பவே கண்ண கட்டுதே………………………….. குட்டை குளப்பி குட்டையை குளப்பி........ மீன் கண்டு பிடித்து...... சரியாக மீன் பிடிக்கும் போது, அது கை நழுவி செல்வதை சொன்ன கதையே கீழ்க்காணும் சல்ஃபா கதை...

நம் ஆளுமையை தீர்மானிக்கும் கருத்துக்கள்..... நம்முள் கருதுகளாகத்தான் நுழைகின்றன.... இந்த கருதுகள் எந்த சூழலிலும், எந்த காலகட்டத்திலும் தலை குப்புற வீழும் சாத்தியங்கள் இருப்பதால்... நாம் மாறத்தயாராய் இருக்கிறோமா.... மாற்றத்தை உடுத்தி கொள்ள ரெடியா என்பதே சல்ஃபா...


பெந்தே கோஸ்தேயும் எல் ஐ சி ஏஜெண்டும்

(கிறிஸ்த்தவம் என்றதும்....... ஸ்தோத்திரம்… வெண்ணுடை…. நகையணியா நங்கைகள் என ஒரு மாயத்தோற்றம் இன்று நிலுவையில் இருக்கிறது. சினிமாக்கள் கூட அதை சொல்கிறது... அது உண்மையல்ல... அவர்கள் ஒரு பிரிவு... இன்னும் சொல்லப்போனால் அவர்கள் கிறிஸ்த்தவர்களே அல்ல.. வியாபாரிகள்...வெள்ளந்திகளின் கூ(த்து)ட்டு கும்மாளம்... அவர்களை பற்றி.... )

அந்த டே ஒரு சண்டே…… அப்பாடி, இன்னிக்கு லீவுதானே… ஆபிஸ் தான் போ வேண்டாமே, அரக்க பரக்க வேலை செய்ய வேண்டாமே என சோம்பேறித்தனத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு, படுத்தும் படுக்காமலும் டிவி முன்னால் இருந்து கொண்டு, டிவி பார்த்தும் பார்க்காமலும் குடும்பத்தோடு சுணங்கி கொண்டு…. வீட்டில் இருந்த சமயத்தில்,….. வாசலில் சந்தடி கேட்டது…. 

மதிக்கத்தக்க நடுத்தர வயதில் இருவர் டிப் டாப் உடையில் வீட்டின் முன்னால் எண்ட்ரீ கொடுத்தனர்.




யார் இவர்கள். உள்ளே அனுமதிக்கலாமா, நாட்டு நடப்பு சரியில்லையே…. வெளியிலேயே வைத்து பேசி அனுப்பி விடுவதுதான் நல்லது… யாரோ சேல்ஸ் மேனோ… சோஷியல் சர்வீஸோ…. யாராக இருக்கும்…. என சிந்தனையோடே எழுந்து வந்து..... யாருங்க என கேட்டேன்….

ஒருவர் ஆரம்பித்தார். சார், நீங்க ஃப்ரீயா…!!!??? தொந்தரவு இல்லியே
(இது என்னங்க கேள்வி, தலையும் புரியாம வாலும் சொல்லாம…. எனக்கு என்ன ஞான திருஷ்டியா… இதுக்கு என்ன பதில் சொல்றது) என மண்டைய சொறிந்து கொண்டே… சொல்லுங்க சார், யார் நீங்க என்ன வேணும்….

ஜெஸ்ட் ஒரு ஃபைவ் மினிட்ஸ் உங்ககிட்ட பேசணும் அவ்வளவுதான்….
சரளமான ஆங்கிலமும், சுமாரான சட்டை பேண்டும், முகத்தில் இருந்த அமைதியும் நல்லவர் என முத்திரை குத்த தகுதியான முக அமைப்பும், சரி… என சொல்லி, கேட்டை திறந்து முற்றத்தில் அவர்களை அனுமதித்து, நிற்க வைத்தே பேச தொடங்கினேன்….

உங்களை ரட்சிக்கவும், உங்களை புனிதமாக்கவும், சொஸ்தமாக்கவும் நீங்கள் பாவத்திலிருந்து விடுபடவும் நான் வந்திருக்கிறேன்… தேவனாகிய யேசு கிறிஸ்து…. என தொடங்கியவர்….. ஒரு ஐந்து நிமிடங்கள் நிற்காமல் பேசினார். என்னை ஈடுபடுத்தவோ பேசவோ அனுமதிக்காமல் அவரே பேசினார்.

ஆ…ஆங்… புரிந்து கொண்டேன்… இது பெந்தே கோஸ்தே… வியாதி… ஐயாம் சாரி பெந்தோகோஸ்தேவாதி….

ஐய்யோ… நமக்கு பிடிக்காத விசயம் அல்லவா பேசப் போகிறார். அதிகம் நான் பேசக் கூடாதே… சும்மாவே சாமியாடுவேன்…. இந்த மாதிரி கடுப்படிச்சா கர்ண கொடுரமா பேசுவேனே… நல்லபடியாய் அவரை சிரித்த வாக்கிலேயே திருப்பி அனுப்ப வேண்டுமே…  காயப்படுத்தாமல் இவரை எப்படி திருப்பி அனுப்புவது என்பதை குறித்து யோசிக்க துவங்கினேன்…. அவர் சொன்னதை ஊம் …ஊம் கேட்டு, ஒக்கே… பைன் எனும் வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு ஒரு மாதிரி….. ஒரே மாதிரி பேசினேன்.
இறுதியாக, ரொம்ப நன்றி சார், நீங்க வந்ததுக்கு. உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் எல்லா நலமும் பெருகட்டும் என மனதார வாழ்த்தி …. போயிட்டு வாங்க சார் என்றேன்…..

அவர் ஒரு நோட்டீஸை கையில் திணித்து அடுத்த வாரம் சர்ச்சுக்கு வாங்க என்றார்.

ஒக்கேங்க என சிரிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தேன். அவர் நகர்ந்தாலும், நான் நகர்ந்தாலும் இந்த நிகழ்வின் நினைவு மட்டும் அகலவில்லை.

என்னோடு வந்து பேசிய அவரை பார்க்கும் போது பாவமாக இருந்தது. போங்கள் போய் நற்செய்தியை பாவிகளுக்கு சொல்லுங்கள் என எவனோ ஏவி விட வந்த அம்பு இது. இப்படி அனுப்பும் போது... அலர்ட்டாய் சொல்வார்கள்...  அவர்கள் ஒருவேளை வெளியில் துரத்தி அவமானப்படுத்தலாம்… அப்போது நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள் என.... எது எப்படியோ... எவனோ கொம்பு சீவி விட்டுருக்கிறான். இந்த வளர்ந்து கெட்ட குழந்தையும் பாவம் என் வீட்டில் வந்து நிற்கிறது.

வந்த இந்த புண்ணியவான் ஏன் தன்னை பாவி என நம்புகிறான். அவன் செய்த பாவத்தினால் கேடு என நம்புகிறான்.... பாவம் என்ன பாகற்காயா காய்த்து தொங்குவதற்கு.. பாவம் என்பதே உன்னை நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட பொறி... 

பாவம் பற்றி என்றுணர்வாயோ.... பாவம்.. ஆனால் வந்தவனோ... தெளிவாக  அவனது எல்லா உலக துன்பங்களுக்கும் அவன் பாவம் செய்ததனாலேயே என நினைக்கிறான். 

என்ன கொடுமை இது.... வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், இன்ப துன்பம் விரவி கிடக்கும், வந்தால், ஏன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாய்.

அந்தோ பாவம்... 

இந்த பெந்தோ கோஸ்தே மார்க்கத்தில் வந்து, சில விஷயங்கள் செய்தவுடன் தான்.... தான் பரிசுத்தம் ஆகிவிட்டதாக நம்புகிறாய். இப்போது மட்டும் என்ன வாழ்வு டாப் கியரிலா செல்லப் போகிறது. அப்படியும் இப்படியும் இடைஞ்சல் தரத்தானே போகிறது.
சரி உன்னளவில் நீ என்ன வேணுமென்றாலும் சொல்லிக் கொள். 

ஆனால் என்னை ஏன் பாவி என முத்திரை குத்தினாய்… அவன் சர்ச்சுக்கு, அவன் கும்பிடப் போகும் இடத்துக்கு நான் போகாததாலேயே, மிக சௌகரியமாக என்னை பாவி என்கிறான். என்னையும் அவனைப் போலவே செய்ய சொல்லுகிறான். அவன் இடத்துக்கு நானும் போனால் நான் தூய்மையானவனா…

அவன் மதம் மட்டும் தான் கடவுளின் பாதையாம், மற்ற எல்லாமே சாத்தான்களாம். அப்படி சொல்வதை அவன் நம்புகிறான். ஏன்… இப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்தான். கையை தட்டி, உரக்க பாடி, மனதில் இருக்கும் குறைகளையும் அழுத்தங்களையும் வாய் விட்டு கதறி அழுவது நல்லது. அ[ப்படி செய்கையில் மனதின் பாரம் குறைந்து, புத்துணர்ச்சியும் அமைதியும் வரும். இது பற்றி எனக்கு தெரியும்….மன இயலின் நுணுக்கங்களும், மனித இயல்பின் தன்மையும் அறிந்தவனே நான். சூப்பியிசத்தின் நுண்ணிய பயிற்சிகளை முயற்சித்து இருக்கிறாயா... அல்லது கபாலாவின் பயிற்சிகள் அறிந்திருக்கியா....  இப்படி நீ மட்டும் செய்வது தான் உயர்ந்தது என ஏன் நினைக்கிறாய் என்பது மட்டும் புரியவில்லை..

பெந்தே கொஸ்தே என்பது இன்றைய சமூகத்தில் உள்ள ஒரு மன வியாதி.

ஏன் இத்தனை கடினமான வார்த்தை சொல்கிறேன் என்றால். ஒரு ஆன்மீக வாதி உள்ளத்தில் பகை கொள்ள மாட்டான். உள்ளத்தில் பயம் கொள்ள மாட்டான்... ஆன்மீக வாதி அன்பானவன். ஆக்கபூர்வமானவன். இன்னொரு மதத்தையோ இன்னொரு மார்க்கத்தையோ நல்லதில்லை என சொல்வது அரசியல் சித்து விளையாட்டு.

தூய வெள்ளையில் உடை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்…. சரி ஒக்கே…. தங்க நகைகளை தூக்கி போட்டு விட்டு, மூழியாய் இரு… என்பது எந்த விதம் என புரியவில்லை. சரி, இவர்களாய் உருவாக்கி கொண்ட அடையாளங்கள் ஓக்கே, கொள்கைகளும் சகித்து கொள்ளலாம்… ஆனால் மருத்துவமனை செல்ல வேண்டாம். இறைவன் இருக்கிறான், நானே குணப்படுத்துகிறேன்……. சுத்திகரிப்பு, ஆவியின் பெருங்கொடை என அவர்கள் தூக்கி பிடித்து கொண்டு வருவது கொஞ்சம் நெருடுகிறது.

பெந்தேகோஸ்தே எனும் அமைப்பு, நாடு நகரமெல்லாம் புற்றீசல் போல் பரவி கிடக்கிறது. இந்த வியாபாரிகள்,

மனதிற்குள் கில்ட் இருப்பவர்களையும் கழுத்தில் தங்க நகை கில்ட் இருக்கிறவர்களையும் தேடிக் கண்டுபிடித்து, … அதாவது தப்பு செஞ்சிட்டேனா… தப்பு செய்கிறேனோ… என தடுமாறும் நபர்களாக தேடிப்பிடித்து, அவர்களுக்கு ஆறுதல் தந்து கொஞ்சம் அருகதை யாக்கி, அவர்கள் வேல்யூவை உசத்தி விட்டு, பின் அவர்களை தூண்டில் புழுவாக்கி காசு பார்க்கும் வித்தை தெரிந்த சில வியாபாரிகள் செய்யும் தகிடுதத்தம்.

எல்லா தினகரன்களும், திரவியங்களும் ஓலைக் கொட்டகையில் ஆரம்பித்து, பின் நாகரீக ஜெப வீட்டில் குடியேறி விட்டார்கள். தேவ அழைப்பு என சொல்லி உண்டியல் குலுக்கி செழித்து வாழ்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் தேடி வந்து ஆறுதல் பெற்று போவது மகிழ்ச்சியே… என்றாலும் இவர்கள் ஆற்றுவது ஆன்மீக பணி அல்லது சேவை என தோன்றாமல் ஒரு வணிகம் போலத்தான் நடக்கிறது.

அது என்ன குனகரன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இறைவன் ஒரு சேனலை தொடங்கி ஆசிர்வாதத்தை அள்ளி தெளிக்கிறார் எனும் சூட்சமம் புரியவில்லை. 


கல்வாரி ஏசு…. காலுக்குள்ள சூசு….. 
என மேற்கத்திய சங்கீதத்துடன், ஆடிப்பாடும் முனகரனின் பேத்தி செய்யும் ஆன்மீக சேவை எந்த பிரிவு என்பது புடிபடவில்லை…

கிறிஸ்தவர்களில் மிதவாதப் போக்கும், சார்ந்திருக்கும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காத ஒரு பிரிவு ஒன்று உண்டு. இவர்கள் ஆர்.சி, எனும் பிரிவு. இவர்களை பற்றி விளக்க ஒரு தகவல்.

இந்த ஆர்.சி. பிரிவை சார்ந்த கிறிஸ்த்தவ பெண்கள், முகம் நிறைந்து மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள், நெற்றி நிறைக்க குங்குமம் இடுவார்கள், தலை நிறைந்து மல்லிகை பூ சூட்டி, பல வண்ணங்களில் பட்டாடை உடுப்பார்கள். ஞாயிற்று கிழமைகளில் கோவில் செல்வதும், பண்டிகை காலங்களில் வழிபடுவதும், பின் சமூக பரிமாணத்தில் வாழ்வதும் மட்டுமே இவர்கள் கிறிஸ்தவர்களாக செய்வார்கள். முக்கியமாக மதம் மாற்றுகிறேன் நான் என கிளம்ப மாட்டார்கள். பொங்கல் தீபாவளி என எல்லா திருவிழாக்களும் கொண்டாடுவார்கள்.

ஏன் என கேட்டேன். எளிமையாக சொன்னார்… பொங்கல்….. தமிழர் திரு நாள். அவ்வளவுதானே, அதில் என்ன பிரச்சனை. அன்றைய தினம் காலை எழுந்து பொங்கல் செய்து, குளித்து புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் மகிழ்ந்திருப்பார்கள். சரி, பொங்கல் தமிழர் திருநாள், தீபாவளி எப்படி எனக் கேட்ட போது,

அது இந்த மண்ணின் திருவிழா. அண்டை வீட்டு சகோதரன் கொண்டாடும் போது நாமும் கலந்து கொள்வதில் என்ன தவறு என கேட்டு. தீபாவளி அன்று காலை எழுச்சியும், எண்ணை குளியலும், வடையோடு சாப்பாடும், வெடியும் புது துணியும் என இவர் கொண்டாடுகிறார்.

இவரின் இத்தகைய தெளிவு என்னை மகிழ்ச்சியாக்குகிறது. தவறு என எனக்கு படவில்லை. வாழ்வை கொண்டாட்டம் என பகுப்பதிலோ, மாற்று மார்க்கங்களை அதனதன் நம்பிக்கையோடு விடுவதிலோ முதிர்ச்சியும் பரந்த மனதுமே இருக்கிறது.

அடையாளங்களை துறந்து மனித நேயம் மின்னும் ஒரு ஆரோக்கிய சமுதாயத்துக்கு நாம் வழி செய்ய வேண்டும். நாம் சார்ந்த மதத்தில் நம்பிக்கையும் அடுத்தவர் மதத்தில் மரியாதையும் கொண்டு வழி விலகி நின்று அணுகுவது சாலச் சிறந்தது.

மதத்தின் பெயரால் வியாபாரம் நடத்தும் விஷமக்காரர்களை இனம் கண்டு அவர்களிடத்தில் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருப்பது நலம்.
எப்படி எல் ஐ சி ஏஜெண்ட்டுக்களை பார்த்து பயந்து ஓடினோமோ அது போல் இன்றும் பெந்தே கோஸ்தே பொன்ற பெரு வியாதியஸ்தர்களை பார்த்து பயந்து ஓட வேண்டியிருக்கிறது.

தனிமை (சிறுகதை)

அண்ணாச்சி… நீரோட்டம் இந்த பக்கமாவா இருக்கு…
ஹாங்… இங்கிட்டு பாவ நாசம், அங்கிட்டு திருச்செந்தூர்…

கேள்வி கேட்ட, நாதன், நாற்பதுகளின் மத்திய வயதில் இருந்தான், அவன் ஒரு இயற்கை நேசி. திருநெல்வேலி பூர்வீகம், இப்போது பொழப்பின் காரணமாக, அமெரிக்காவில் இருக்கிறான். அமெரிக்காவில் வெற்றிகரமான பிசினஸ் மேன். பங்கு சந்தை பற்றி அனைத்தும் அறிவான், ஃபண்டுகளிடையே பல்லாங்குழியே ஆடுவான். எளிமை, ஆழம், ரௌத்திரம், தத்துவம், நக்கல் என கலவையான களேபரமான குணாதிசயங்கள். வீடு, பெண்டாட்டி, குழந்தை குட்டிகள் ஊர்வன, ஓடுவன நீந்துவன என இன்றைய உலக தராசில், காம்பேர்ட் இண்டெக்ஸில் அவன் முண்ணனியில் இருப்பான். கையில் சொளவு போல ஐ பேடை எடுத்து அவன் அமுக்க துவங்கினால் அவனியெல்லாம் அத்துபடி… ஆனால் இன்று கையில் செலவுக்கு மட்டும் காசு எடுத்து கொண்டு, ஆண்டிப்பண்டாரம் மாதிரி, தாமிரபரணியில் குளித்து கொண்டிருக்கிறான்.

அத்தனை அமெரிக்க பளபளப்புக்கள், ஆடம்பரங்கள் இவைகளின் நடுவில் அவன் அனாதையாகவே உணர்கிறான். அவைகள் அவனுக்கு அன்னியமாகவே தெரிகின்றன. In an effort to understand market sensitivity, we have made slighter adjustments…………. என அவன் பேசுவான் ஆனால் உள்ளுக்குள் ஒட்டாது.

என்றோ வாசித்த லிண்டா குட்மேன் சொன்ன அவனைப்பற்றிய சித்தாந்தம் அவன் வரையில் சரி என பட்டது… என்னதான் கூட்டத்தில் சகஜமாக இருந்தாலும், தனிமையை விரும்பும் நபர் விர்கோ.. நால்வர் மத்தியில் இருக்கும் போது, அவர்கள் சங்கோஜமாகவே இருப்பார்கள் என வாசித்ததும் பிடித்தது.

இப்போது, அவன் இருப்பது, திருநெல்வேலியில். குளித்து கொண்டிருக்கிறான். பக்கத்தில் இருப்பவரிடம் தொடர்பில் இருக்க, அவர்கள் இருவரையும் தாமிரபரணியின் நீர் இணைந்திருந்தது.

காலில் ஆற்று மீன் சுதந்திரமாக விளையாடியது. ஆரம்பத்தில் பயம், மீன் வந்து தொட்ட போது, ஒரு மாதிரியாக இருந்தது. குட்டிப் பல் வைத்து, மீன்கள் மொய்க்க தொடங்கிய போது, பெரும் அவஸ்தையாக இருந்தது. கால் மாற்றி, கால் மாற்றி நின்றான். மீன்கள் விடுவதாக இல்லை, வெளியில் போய் விடலாமா என எண்ண வைக்கும் அளவுக்கு மீன்கள் தொல்லை…. மனதில் கவிதை ஓடியது…

ஆத்து மீனு கடிக்கையிலே…. ஐலேசா… ஐலேசா….
ஆத்துக்காரி உன் நினைப்பு…….. ஹை…. லேசா… ஹை லேசா…
குறுகுறுப்பு கூசுது …. ஐலேசா… ஐலேசா…
நாஞ்செய்யும் குறும்பு கஷ்டம் இப்ப புரியுது… ஜலேசா..ஜலேசா…

கவிதை வரியை மனதிற்குள் சொன்னவுடன், நாதன் வெட்கப்பட்டான். ஹூம்… குறுகுறு மீசையை வைத்து கொண்டு ஆடும் ஆட்டம் … கொஞ்சம் குறைச்சுக்கணும் என யோசித்தான். அதே நினைப்பில் கூடுதலாய் வெட்கப்பட்டான். அருகில் குளித்து கொண்டிருந்த அதே ஆளிடம்,,,,

இது என்ன மீனு
ஹாங்.. .கெண்டை..
ஓ… பயங்கரமா கடிக்குது…
ஆங்…
ஏன் உங்கள கடிக்காதோ…
லேசாய் சிரித்தபடி…. நாளாச்சுல்ல …. பழகிருச்சு…

நாதன் மீண்டும் உள்ளுக்குள் சென்றான். இன்னொரு பாட்டு வரியை சேர்த்தான்…

ஆரம்பத்தில் அவஸ்தை தானே …. தில்லே லோ லேலோ…
அத்தான் இப்ப அது இன்னும் வேணும் . ஜில்லேலோ… லேலோ….

குளித்தான்,  நன்றாக குளித்தான்… தண்ணீருக்குள் மூழ்கி, மூச்சு முட்டும் வரை அங்கேயே இருந்தான். அதே தண்ணீரை குடம் குடமாக குடித்தான். ஒன்றிரண்டு எப்பங்களை சத்தம் போட்டு விட்டான். குளிர்ந்த நீரும், ஓடும் நீரும், அவனை சுத்தப்படுத்த…. இன்னும் இன்னும் என குளித்துக் கொண்டிருந்தான்.

அண்ணாச்சி… டிபன் இங்க எங்க நல்லாருக்கும்…
பஸ் ஸ்டாண்டுல…
இல்ல… இல்ல…….. பெரிய ஹோட்டல் வேண்டாம்… மெஸ் மாதிரி…. வீட்டு சாப்பாடு நல்ல கை மணத்தில…..  நாதன் நினைத்த போதே அவனை கேட்காமல் நாக்கு வாய்க்குள் மிதந்தது.
ஓ… சைவாள் மெஸ் இருக்குது…
எங்க
வாங்க காமிச்சிட்டு போறேன்…

அதனாலேயே குளித்து முடித்து விட்டு, வெளி வந்தான். முதுகுப் பையில் தூவாலை எடுத்து, தலை துவட்டி விட்டு, உலர் உடுப்பில் புகுந்தான்… ஈர ஜட்டியை பிழிந்து, தலைமேல் தொப்பி போல அணிந்து கொண்டான். அவன் கணக்கு, ரோடு எட்டும் போது, ஜட்டி காய்ந்து விடும்…. அவரோடு இணைந்து நடக்க துவங்கினான். மெல்லிய விசாரிப்புக்கள், பரிமாறல்கள்,

நாதன் தன் முழு அடையாளங்களையும் சொல்லாமல்…………. அதே நேரம் பொய்யும் சொல்லாமல் டிப்ளோமேட்டிக்காக பேசி வந்தான்….

தம்பிய பாத்தா இங்கன மாதிரி தெரியலியே
ஏங்க…… உங்கூருங்க எனக்கு……… என் பாஜை தெரியலியா
ஹே….. பாஷை சரி, ஆனா பாக்ஸர் ஜட்டில போடுறீக…
ரிடைல்ல, பாக்ஸர் இங்க வரைக்கும் வந்துருச்சு. இல்லியா…
சரக்கு இருக்கு... ஆனா வாங்க தம் வேண்டாமா... தம்பி என்ன ஜோலி
ம்… ஒரு மாதிரி வியாபாரம், இண்டர்னெட்டுல
எந்தூருல
நம்மூர்ல இல்ல……… உலகம் பூரா……. சோறு கண்ட இடம் சொர்க்கமா…
ஆமாமா…… இப்பத்தான் இண்டர்னெட் வந்து உலகம் சுருங்கி போச்சுல்லியா…

அந்த காலை இனிமையாகவே இருந்தது. புத்துணர்ச்சியோடு நடந்தது நாதனுக்கு உவப்பாக இருந்தது.

அந்த மெஸ்ஸை அடைந்ததும், இதுதான்… என சொல்லி விட்டு, என அவர் முன் திண்ணையில் அமர்ந்து கொண்டார். நாதன் உள் சென்று மேசையில் அமர்ந்ததும்… இலை பரிமாறிய ஆள், என்ன பிள்ளைவாள் சாப்பிடலையா… என கேட்க, இல்ல ரூமுக்கு போயிட்டு வந்து சாப்பிடுகிதேன்…

மெஸ்சின் உரிமையாள ஆச்சி வந்தாள். இலையை நாதனுக்கு போட்டுவிட்டு… ஆவி பறக்க இட்லி வைத்தாள்…

நாதனுக்கு இடித்தது… அவரும் இங்குதான் சாப்பிடுகிறாரா… குடும்பம் என்னாச்சு……. ரூமுக்கு போயிட்டு வர்றேன்னா… அப்ப வீடு இல்லியா.. அது என்னாச்சு… உப கேள்விகளை கொடுத்து விட்டு பகுத்தறிவு, பருப்பு சாம்பாருக்கு சென்று விட்டது……….. நாதனும் ததாஸ்து…………
ஆச்சி சொன்னாள்………. ஏய்யா… கருப்பட்டி காப்பி தரட்டா…… உள்ள வாங்க… அவருக்கு சரி என தோன்றி இருக்க வேண்டும்… சரி காப்பி கொடுங்க… உள் நுழைந்து என் அருகில் அமர்ந்தார்…

எப்படி
ம்…. உன்னதம்…….. டிவைன்…..
சாப்பாட்டுல கை மணம்தான்……. மனசு வைச்சாத்தான் இம்மாதிரி அமையும்… அன்போட அக்கறையோட சமைச்சாத்தான் இது வரும்… அண்ணாச்சி தான் சொன்ன சொல்லிலேயே மூழ்கி தன்னை தொலைத்திருந்தார்….சுவையில் மூழ்கி இருந்த நாதன்……… அவரை உற்று நோக்கினான்…

ம்... ரூமுக்கு வந்திட்டு போறியளா…
இல்ல….
துணி கிணி மாத்த வேண்டாமா…
சரியாச்சு……. அவசியம் இல்ல….. அப்புறமா பாப்போம்….

இங்கதனதான் பழைய இரும்பு வியாவாரம் செய்யுறேன்…
எனக்கு குலத் தொழில் வேற….என் பொஞ்சாதி செத்து போயி, எட்டு வருசமாச்சு….. முதல்ல முழு குடிகாரனா இருந்தேன்… கண்ணு மண்ணு தெரியாம குடிப்பேன்… ஏதாவது போக்கு புகலு வேண்டாமா… அப்புறம் எங்க அண்ணன் பாத்து தான் இங்க வந்து சேத்து விட்டாங்க…
இப்ப குடிக்கது இல்ல…….. வெறும் சிகரெட்டுத்தான்……. தினப்படி ஒரு பாக்கெட்ட ஊதி தள்ளி புடுவேன்.
என்ன செய்ய சொல்றீக….. போர் அடிக்குதில்லையா…. இப்பத்தான் செம்பகம் அக்கா… இப்படியே இருந்தா நீரு வெளங்க மாட்டீரு…… ஒரு கல்யாணம் கட்டிக்கும்ன்னு சொல்றா… வயசாயிப் போச்சு.. இப்ப 44 ஆச்சு… இன்னும் ஒரு 30 -40 வருசம் வாழ்ந்து தொலைக்கணுமே… கிழவனும் இல்லாம, குமரனும் இல்லாம இப்படி ஆயிப் போச்சு… போற வரைக்கும் மாராசி, நல்லாத்தான் இருந்துச்சு வாழ்க்கை… அப்பப்ப முட்டிக்கும், சண்டை போடுவோம், அப்புறம் சேந்துக்குவோம்… இப்படி.. புள்ள பொறக்கல…. என்னவோ வியாதி சொன்னாங்க…… அவளே போயிட்டா அப்புறம் எதுக்கு பேரு…

இப்ப கல்யாணஞ் செஞ்சு என்ன செய்யுறது…….. அதெல்லாம் செரிச்சு போச்சு… இப்ப தேட்டம் வேற மாதிரியால்ல இருக்குது… சரி, கட்டிக்கிடுதேன்… என்னை மாதிரி … இப்படி ஒரு வயசுல…….. போக்கிடம் புகலிடம் இல்லாததா இருந்தா சொல்லுங்க கட்டுக்கிடுவோம்ன்னு சொல்லியிருக்கேன்…

இப்ப, ராயல் டாக்கீசுல ஓடுற சினிமாவ நீங்க ஒரு தடவ பாக்க மாட்டீங்க… அப்படி ஒரு மழுங்கின ஃப்ளேடு… ஆனா நான் ஒம்போது தடவ பாத்திட்டேன்… இன்னிக்கு கூட ராத்திரி தூக்கம் வரலேண்னா போ வேண்டியது தான்…

என்னத்த செய்ய சொல்றீரு…….. காசு பணத்த வைச்சு புழுங்கியா திங்க முடியும்… நேரம் அதுபாட்டுக்கு அவுத்து போட்டு கிடக்குது…… சாயங்காலம் 7 மணிக்கு கடைய சாத்திட்டா என்ன செய்யுறது…………… அதுக்குத்தேன்…. சரி போனா போகுதுன்னு கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டேன்…

அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை… எங்கள் இருவரின் பிரச்ச்னையுமே ஒன்றுதான். தனிமை….

அவர் வெறுக்கும் தனிமை……. நான் தேடும் தனிமை….. நான் வெறுக்கும் கடமை குடும்பங்கள், அவர் தேடுகிறார்……………

ஏதாவது செய்ய வேண்டும், வாழ்வதற்கு அர்த்தம் வேண்டும் என்பது எங்கள் இருவருக்கும் பொதுவானது. ஆனால் தேடும் திசை புதிது….  இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள்…..