பக்கங்கள்

தனிமை (சிறுகதை)

அண்ணாச்சி… நீரோட்டம் இந்த பக்கமாவா இருக்கு…
ஹாங்… இங்கிட்டு பாவ நாசம், அங்கிட்டு திருச்செந்தூர்…

கேள்வி கேட்ட, நாதன், நாற்பதுகளின் மத்திய வயதில் இருந்தான், அவன் ஒரு இயற்கை நேசி. திருநெல்வேலி பூர்வீகம், இப்போது பொழப்பின் காரணமாக, அமெரிக்காவில் இருக்கிறான். அமெரிக்காவில் வெற்றிகரமான பிசினஸ் மேன். பங்கு சந்தை பற்றி அனைத்தும் அறிவான், ஃபண்டுகளிடையே பல்லாங்குழியே ஆடுவான். எளிமை, ஆழம், ரௌத்திரம், தத்துவம், நக்கல் என கலவையான களேபரமான குணாதிசயங்கள். வீடு, பெண்டாட்டி, குழந்தை குட்டிகள் ஊர்வன, ஓடுவன நீந்துவன என இன்றைய உலக தராசில், காம்பேர்ட் இண்டெக்ஸில் அவன் முண்ணனியில் இருப்பான். கையில் சொளவு போல ஐ பேடை எடுத்து அவன் அமுக்க துவங்கினால் அவனியெல்லாம் அத்துபடி… ஆனால் இன்று கையில் செலவுக்கு மட்டும் காசு எடுத்து கொண்டு, ஆண்டிப்பண்டாரம் மாதிரி, தாமிரபரணியில் குளித்து கொண்டிருக்கிறான்.

அத்தனை அமெரிக்க பளபளப்புக்கள், ஆடம்பரங்கள் இவைகளின் நடுவில் அவன் அனாதையாகவே உணர்கிறான். அவைகள் அவனுக்கு அன்னியமாகவே தெரிகின்றன. In an effort to understand market sensitivity, we have made slighter adjustments…………. என அவன் பேசுவான் ஆனால் உள்ளுக்குள் ஒட்டாது.

என்றோ வாசித்த லிண்டா குட்மேன் சொன்ன அவனைப்பற்றிய சித்தாந்தம் அவன் வரையில் சரி என பட்டது… என்னதான் கூட்டத்தில் சகஜமாக இருந்தாலும், தனிமையை விரும்பும் நபர் விர்கோ.. நால்வர் மத்தியில் இருக்கும் போது, அவர்கள் சங்கோஜமாகவே இருப்பார்கள் என வாசித்ததும் பிடித்தது.

இப்போது, அவன் இருப்பது, திருநெல்வேலியில். குளித்து கொண்டிருக்கிறான். பக்கத்தில் இருப்பவரிடம் தொடர்பில் இருக்க, அவர்கள் இருவரையும் தாமிரபரணியின் நீர் இணைந்திருந்தது.

காலில் ஆற்று மீன் சுதந்திரமாக விளையாடியது. ஆரம்பத்தில் பயம், மீன் வந்து தொட்ட போது, ஒரு மாதிரியாக இருந்தது. குட்டிப் பல் வைத்து, மீன்கள் மொய்க்க தொடங்கிய போது, பெரும் அவஸ்தையாக இருந்தது. கால் மாற்றி, கால் மாற்றி நின்றான். மீன்கள் விடுவதாக இல்லை, வெளியில் போய் விடலாமா என எண்ண வைக்கும் அளவுக்கு மீன்கள் தொல்லை…. மனதில் கவிதை ஓடியது…

ஆத்து மீனு கடிக்கையிலே…. ஐலேசா… ஐலேசா….
ஆத்துக்காரி உன் நினைப்பு…….. ஹை…. லேசா… ஹை லேசா…
குறுகுறுப்பு கூசுது …. ஐலேசா… ஐலேசா…
நாஞ்செய்யும் குறும்பு கஷ்டம் இப்ப புரியுது… ஜலேசா..ஜலேசா…

கவிதை வரியை மனதிற்குள் சொன்னவுடன், நாதன் வெட்கப்பட்டான். ஹூம்… குறுகுறு மீசையை வைத்து கொண்டு ஆடும் ஆட்டம் … கொஞ்சம் குறைச்சுக்கணும் என யோசித்தான். அதே நினைப்பில் கூடுதலாய் வெட்கப்பட்டான். அருகில் குளித்து கொண்டிருந்த அதே ஆளிடம்,,,,

இது என்ன மீனு
ஹாங்.. .கெண்டை..
ஓ… பயங்கரமா கடிக்குது…
ஆங்…
ஏன் உங்கள கடிக்காதோ…
லேசாய் சிரித்தபடி…. நாளாச்சுல்ல …. பழகிருச்சு…

நாதன் மீண்டும் உள்ளுக்குள் சென்றான். இன்னொரு பாட்டு வரியை சேர்த்தான்…

ஆரம்பத்தில் அவஸ்தை தானே …. தில்லே லோ லேலோ…
அத்தான் இப்ப அது இன்னும் வேணும் . ஜில்லேலோ… லேலோ….

குளித்தான்,  நன்றாக குளித்தான்… தண்ணீருக்குள் மூழ்கி, மூச்சு முட்டும் வரை அங்கேயே இருந்தான். அதே தண்ணீரை குடம் குடமாக குடித்தான். ஒன்றிரண்டு எப்பங்களை சத்தம் போட்டு விட்டான். குளிர்ந்த நீரும், ஓடும் நீரும், அவனை சுத்தப்படுத்த…. இன்னும் இன்னும் என குளித்துக் கொண்டிருந்தான்.

அண்ணாச்சி… டிபன் இங்க எங்க நல்லாருக்கும்…
பஸ் ஸ்டாண்டுல…
இல்ல… இல்ல…….. பெரிய ஹோட்டல் வேண்டாம்… மெஸ் மாதிரி…. வீட்டு சாப்பாடு நல்ல கை மணத்தில…..  நாதன் நினைத்த போதே அவனை கேட்காமல் நாக்கு வாய்க்குள் மிதந்தது.
ஓ… சைவாள் மெஸ் இருக்குது…
எங்க
வாங்க காமிச்சிட்டு போறேன்…

அதனாலேயே குளித்து முடித்து விட்டு, வெளி வந்தான். முதுகுப் பையில் தூவாலை எடுத்து, தலை துவட்டி விட்டு, உலர் உடுப்பில் புகுந்தான்… ஈர ஜட்டியை பிழிந்து, தலைமேல் தொப்பி போல அணிந்து கொண்டான். அவன் கணக்கு, ரோடு எட்டும் போது, ஜட்டி காய்ந்து விடும்…. அவரோடு இணைந்து நடக்க துவங்கினான். மெல்லிய விசாரிப்புக்கள், பரிமாறல்கள்,

நாதன் தன் முழு அடையாளங்களையும் சொல்லாமல்…………. அதே நேரம் பொய்யும் சொல்லாமல் டிப்ளோமேட்டிக்காக பேசி வந்தான்….

தம்பிய பாத்தா இங்கன மாதிரி தெரியலியே
ஏங்க…… உங்கூருங்க எனக்கு……… என் பாஜை தெரியலியா
ஹே….. பாஷை சரி, ஆனா பாக்ஸர் ஜட்டில போடுறீக…
ரிடைல்ல, பாக்ஸர் இங்க வரைக்கும் வந்துருச்சு. இல்லியா…
சரக்கு இருக்கு... ஆனா வாங்க தம் வேண்டாமா... தம்பி என்ன ஜோலி
ம்… ஒரு மாதிரி வியாபாரம், இண்டர்னெட்டுல
எந்தூருல
நம்மூர்ல இல்ல……… உலகம் பூரா……. சோறு கண்ட இடம் சொர்க்கமா…
ஆமாமா…… இப்பத்தான் இண்டர்னெட் வந்து உலகம் சுருங்கி போச்சுல்லியா…

அந்த காலை இனிமையாகவே இருந்தது. புத்துணர்ச்சியோடு நடந்தது நாதனுக்கு உவப்பாக இருந்தது.

அந்த மெஸ்ஸை அடைந்ததும், இதுதான்… என சொல்லி விட்டு, என அவர் முன் திண்ணையில் அமர்ந்து கொண்டார். நாதன் உள் சென்று மேசையில் அமர்ந்ததும்… இலை பரிமாறிய ஆள், என்ன பிள்ளைவாள் சாப்பிடலையா… என கேட்க, இல்ல ரூமுக்கு போயிட்டு வந்து சாப்பிடுகிதேன்…

மெஸ்சின் உரிமையாள ஆச்சி வந்தாள். இலையை நாதனுக்கு போட்டுவிட்டு… ஆவி பறக்க இட்லி வைத்தாள்…

நாதனுக்கு இடித்தது… அவரும் இங்குதான் சாப்பிடுகிறாரா… குடும்பம் என்னாச்சு……. ரூமுக்கு போயிட்டு வர்றேன்னா… அப்ப வீடு இல்லியா.. அது என்னாச்சு… உப கேள்விகளை கொடுத்து விட்டு பகுத்தறிவு, பருப்பு சாம்பாருக்கு சென்று விட்டது……….. நாதனும் ததாஸ்து…………
ஆச்சி சொன்னாள்………. ஏய்யா… கருப்பட்டி காப்பி தரட்டா…… உள்ள வாங்க… அவருக்கு சரி என தோன்றி இருக்க வேண்டும்… சரி காப்பி கொடுங்க… உள் நுழைந்து என் அருகில் அமர்ந்தார்…

எப்படி
ம்…. உன்னதம்…….. டிவைன்…..
சாப்பாட்டுல கை மணம்தான்……. மனசு வைச்சாத்தான் இம்மாதிரி அமையும்… அன்போட அக்கறையோட சமைச்சாத்தான் இது வரும்… அண்ணாச்சி தான் சொன்ன சொல்லிலேயே மூழ்கி தன்னை தொலைத்திருந்தார்….சுவையில் மூழ்கி இருந்த நாதன்……… அவரை உற்று நோக்கினான்…

ம்... ரூமுக்கு வந்திட்டு போறியளா…
இல்ல….
துணி கிணி மாத்த வேண்டாமா…
சரியாச்சு……. அவசியம் இல்ல….. அப்புறமா பாப்போம்….

இங்கதனதான் பழைய இரும்பு வியாவாரம் செய்யுறேன்…
எனக்கு குலத் தொழில் வேற….என் பொஞ்சாதி செத்து போயி, எட்டு வருசமாச்சு….. முதல்ல முழு குடிகாரனா இருந்தேன்… கண்ணு மண்ணு தெரியாம குடிப்பேன்… ஏதாவது போக்கு புகலு வேண்டாமா… அப்புறம் எங்க அண்ணன் பாத்து தான் இங்க வந்து சேத்து விட்டாங்க…
இப்ப குடிக்கது இல்ல…….. வெறும் சிகரெட்டுத்தான்……. தினப்படி ஒரு பாக்கெட்ட ஊதி தள்ளி புடுவேன்.
என்ன செய்ய சொல்றீக….. போர் அடிக்குதில்லையா…. இப்பத்தான் செம்பகம் அக்கா… இப்படியே இருந்தா நீரு வெளங்க மாட்டீரு…… ஒரு கல்யாணம் கட்டிக்கும்ன்னு சொல்றா… வயசாயிப் போச்சு.. இப்ப 44 ஆச்சு… இன்னும் ஒரு 30 -40 வருசம் வாழ்ந்து தொலைக்கணுமே… கிழவனும் இல்லாம, குமரனும் இல்லாம இப்படி ஆயிப் போச்சு… போற வரைக்கும் மாராசி, நல்லாத்தான் இருந்துச்சு வாழ்க்கை… அப்பப்ப முட்டிக்கும், சண்டை போடுவோம், அப்புறம் சேந்துக்குவோம்… இப்படி.. புள்ள பொறக்கல…. என்னவோ வியாதி சொன்னாங்க…… அவளே போயிட்டா அப்புறம் எதுக்கு பேரு…

இப்ப கல்யாணஞ் செஞ்சு என்ன செய்யுறது…….. அதெல்லாம் செரிச்சு போச்சு… இப்ப தேட்டம் வேற மாதிரியால்ல இருக்குது… சரி, கட்டிக்கிடுதேன்… என்னை மாதிரி … இப்படி ஒரு வயசுல…….. போக்கிடம் புகலிடம் இல்லாததா இருந்தா சொல்லுங்க கட்டுக்கிடுவோம்ன்னு சொல்லியிருக்கேன்…

இப்ப, ராயல் டாக்கீசுல ஓடுற சினிமாவ நீங்க ஒரு தடவ பாக்க மாட்டீங்க… அப்படி ஒரு மழுங்கின ஃப்ளேடு… ஆனா நான் ஒம்போது தடவ பாத்திட்டேன்… இன்னிக்கு கூட ராத்திரி தூக்கம் வரலேண்னா போ வேண்டியது தான்…

என்னத்த செய்ய சொல்றீரு…….. காசு பணத்த வைச்சு புழுங்கியா திங்க முடியும்… நேரம் அதுபாட்டுக்கு அவுத்து போட்டு கிடக்குது…… சாயங்காலம் 7 மணிக்கு கடைய சாத்திட்டா என்ன செய்யுறது…………… அதுக்குத்தேன்…. சரி போனா போகுதுன்னு கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டேன்…

அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை… எங்கள் இருவரின் பிரச்ச்னையுமே ஒன்றுதான். தனிமை….

அவர் வெறுக்கும் தனிமை……. நான் தேடும் தனிமை….. நான் வெறுக்கும் கடமை குடும்பங்கள், அவர் தேடுகிறார்……………

ஏதாவது செய்ய வேண்டும், வாழ்வதற்கு அர்த்தம் வேண்டும் என்பது எங்கள் இருவருக்கும் பொதுவானது. ஆனால் தேடும் திசை புதிது….  இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள்…..

4 கருத்துகள்:

 1. சாப்பாட்டுல கை மணம்தான்……. மனசு வைச்சாத்தான் இம்மாதிரி அமையும்… அன்போட அக்கறையோட சமைச்சாத்தான் இது வரும்…

  அருமையான எழுத்து நடை. வாழ்த்துகள் திரு Lawrance Prabhakar. எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். நன்கு எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. இக்கரைக்கு அக்கரை பச்சை..
  இருப்பதை அனுபவிக்காமல் இல்லாதவைக்கு ஏங்குவது மனித இயல்பு !!
  ஒல்லியாக இருப்பவன் குண்டாக விரும்புகிறான்..
  குண்டாக இருப்பவன் ஒல்லியாக விரும்புகிறான்..
  மாணவனாய் இருக்கும்போது வேலை கிடைத்து உழைக்க விரும்புகிறான்..
  வேலை கிடைத்த பிறகு மாணவப்பருவத்தை நினைத்து ஏங்குகிறான்..
  நிகழ்கால வாழ்வை வாழ்வதே அர்த்தமானது தான்.

  அர்த்தம் தேடி அலைவதாக - இருப்பதை விட்டு பறப்பதைத் தேடி - நிகழ்காலத்தைத் தொலைக்கும் இருவரை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 3. ஆத்து மீனு கடிக்கையிலே…. ஐலேசா… ஐலேசா….
  ஆத்துக்காரி உன் நினைப்பு…….. ஹை…. லேசா… ஹை லேசா…
  குறுகுறுப்பு கூசுது …. ஐலேசா… ஐலேசா…
  நாஞ்செய்யும் குறும்பு கஷ்டம் இப்ப புரியுது… ஜலேசா..ஜலேசா…
  ஆரம்பத்தில் அவஸ்தை தானே …. தில்லே லோ லேலோ…
  அத்தான் இப்ப அது இன்னும் வேணும் . ஜில்லேலோ… லேலோ….


  அவர் வெறுக்கும் தனிமை……. நான் தேடும் தனிமை….. நான் வெறுக்கும் கடமை குடும்பங்கள், அவர் தேடுகிறார்……………

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி.........திரு.. Rathnavel Natarajan சார்.......

  //// சாப்பாட்டுல கை மணம்தான்……. மனசு வைச்சாத்தான் இம்மாதிரி அமையும்… அன்போட அக்கறையோட சமைச்சாத்தான் இது வரும்…////

  அனுபவ பூர்வமா நான் உணர்ந்தது சார் இது......எங்க ஆச்சி நல்லா சமைப்பாங்க....... அவங்க உடல் நலம் சரியில்லாமல் போக, நான் சமைக்கிறேன் என களத்தில் இறங்கி... நீங்க சொல்லுங்க ஆச்சி...... அதே மாதிரி நான் சமைக்கிறேன்...... என ஆரம்பித்து...... சமைத்திருக்கிறேன்....

  சமைத்து முடித்த பின்.......எனக்கே... நான் சமைச்சது பிடிக்கல............ ஆச்சி நல்லாவே இல்லியே.... ஏன் அப்படி என்றேன்...

  இல்லடா ராசா........ நல்லாத்தேன்..... இருக்குது...... உடம்பு சரியில்லன்னதும்... நான் சமைக்கிறேன்னு ஆம்பிள நீ அடுப்படிக்கு வந்தியே, அந்த அன்போட ருசி எனக்கு தெரியுது.... அப்பவே கொழம்பு ருசியாச்சு..... என்றார்கள் கண்ணில் நீருடன்....

  இதே கேள்வியை இன்னொரு நாள், ஆச்சி ஜாலி மூடில் இருந்த போது கேட்டேன்.... ஏன் ஆச்சி உங்க கை பக்குவம் எப்படி கொண்டு வர்றதுன்னு....

  அதுக்கு அடிச்சாங்க பாருங்க ஒரு கமெண்ட்டு......

  ‘ஹாங்........ ஓடுற பாம்ப பிடிச்சு உருவு........... கைமணம் பத்திக்கும்ன்னு.......’

  ///// அருமையான எழுத்து நடை. வாழ்த்துகள் திரு Lawrance Prabhakar. எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். நன்கு எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.////////

  மிக்க நன்றி சார்........ தங்கள் பாராட்டுதலுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைக்கும்...... நிச்சயம் எழுதுகிறேன்... எழுத கற்று கொள்கிறேன்... இன்னும் இன்னும் என நிறைய கற்றுக் கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு