பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 17/11/09

கல கல வென சிரித்தபடி படுக்காளி உள்ளே வர, புகைப்பட்த்தில் இருந்து ஆச்சி எட்டிப் பார்த்தார்.

ஆச்சி : என்னடா, கடுகு வெடிச்ச மாதிரி ஒரு சிரிப்பு, சொல்லிட்டு சிரிச்சா, நாங்களும் சிரிப்போம்ல.

படுக்காளி : ரோட்டுல ஒரு சுவாரசியம், ரெண்டு லவ்வர்ஸ் வாயால பேசாம கண்ணால பேசிக்கிட்டு இருந்தாங்க,
ஆச்சி : எது, நம்ம கமல்ஹாசன் பேசும் படம் மாதிரி.... ரோட்டில பராக்கு பார்த்தியா, மேல சொல்லு
படுக்காளி : அந்த பஸ் ஸ்டாப்புல, நான், அந்த லவ்வர்ஸ் பஸ்ஸுக்காக காத்துக்கிட்டு இருக்கோம். எங்கள கடந்து போன ஒரு ஆசாமி சத்தம் போட்டு தனியா சிரிச்சுக்கிட்டே போனாரு.

ஆச்சி : ஐயோ... பாவம்,

படுக்காளி : நானும் அப்படித்தான் நினைச்சேன், ஆனா அந்த பொண்ணு கண்ண சுழற்றி, இட்து பக்கம் காட்டி அந்த லவ்வர பார்த்துச்சு. லவ்வர் பையன் திரும்பி பார்த்தான். நானும் அங்க என்ன இருக்குன்னு பார்த்தேன். அது ஒரு பேங்க் ஏடிஎம். ஒண்ணும் புரியல. திரும்பி அந்த பையன பார்த்தேன். அவன் வாய் விட்டு சிரிச்சான்.
ஆச்சி : என்னடா இது, எனக்கும் தட்டல, உனக்கும் முட்டல , லவ்ஸ் மூடுல இருந்தாத்தான் விளங்குமோ

படுக்காளி : மறுக்கா பார்த்தா புரிஞ்சுது, OUT OF ORDER என ஏடிஎம் ல ஒட்டி இருந்துச்சு. ஓஹோ... குறுக்கால நடந்து போனவன் புத்தி OUT OF ORDER ன்னு நினைச்சு சிரிச்சாங்களோ, இது தானான்னா நான் நினைக்க, இல்லயாம், தரி...கின... தோம்...இனிம தான் இருக்கு
ஆச்சி : ரைட்டு விடுறா வண்டிய
படுக்காளி : இப்ப அந்த பொண்ணு சிரிச்சா
ஆச்சி : பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிச்சா போச்சு
படுக்காளி : எவ சிரிச்சா
ஆச்சி : ஏல, பழமொழி கேட்டா ரசிக்கணும், துளாவாத,
படுக்காளி : வாய் விட்டு சிரிச்சுக்கிட்டே அந்த பொண்ணு கண்ண தூழாவி, இன்னும் கீழ காட்டுச்சு, அங்கன ஒரு நோக்கியா ப்ளூ டூத் விளம்பரம்.
ஆச்சி : இப்ப புரியதுடா. போனவன் தானா சிரிக்கல, நீலப் பல் தான் பல் காட்டுச்சுங்கிறா.
படுக்காளி : காதல் ரொம்ப இனிமையானது ஆச்சி
ஆச்சி : இல்லயா பின்ன, பேசாத மொழிகளும், தூது இலக்கியமும் தனி ரகம்
படுக்காளி : என்னது ஆச்சி தூதுவளையா.... செடிதான
ஆச்சி : மரம், இடுப்பு வேட்டிய இட்லி தூணியாக்குவடா நீ. எம்.ஜீ.யார் பாடுவாரே

பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது

படுக்காளி : ஆ...அதுவா. நம்ம தெக்கச்சி தமிழச்சி பாடுவாளே.

மேகத்த தூது விட்டா, திசை மாறிப் போகும்னு,
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்னு

ஆச்சி : அதேதாண்டா, தமிழ் இலக்கியத்துல தூதுக்குன்னு ஒரு பிரிவு வைச்சு ரசிச்ச காலம் உண்டு. இப்போ தூத தூக்கிட்டாங்களேடா....

படுக்காளி : வெக்கப்படுற ஆணும் பெண்ணும் நேரடியா பேசாம, ஏதாவது ஒண்ணுகிட்ட தொங்கிகிட்டு இருந்த காலம் அது. இப்போ எல்லாம் வெக்கம் விட்டுப் போச்சு

ஆச்சி : இருக்கலாம்டா, இன்னிக்கு உள்ள நவ நாகரிக யுவதிகிட்ட அச்சம், மடம், நாணம், பயிற்பு எல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்கிறது. அதுவும் இல்லாம, தொடர்பியல்ல எங்கேயோ போயிட்டோம். நிலவ தூது விடுற நேரத்தில எஸ். டி. டி. யோ ஐ.எஸ்.டி. யோ போட்டா போறாது.

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை குனிஞ்சாச்சோ.... நல்லது தானே, வெக்கம் இல்லாம, துணிச்சலா, பெண் இருந்து புட்டா, ஆரோக்கியந்தானடா......

படுக்காளி : ஆச்சி, நம்ம அஞ்சரைப்பெட்டி, ஏடிஎம் ல தொடங்கி, தூத தொட்டுட்டு பெண்ணடிமைல வந்து நிக்குது எக்ஸ்பிரஸ் மாதிரி. தூது இலக்கியத்த தூக்கிட்டாங்க, அதுக்கு காரணம் இரண்டு, ஒண்ணு வெக்கம் விட்டு போனது, இன்னொன்னு தொடர்பியல் வளர்ச்சி.

ஆச்சி : இருந்துட்டு போட்டுமே.... ஆடு மேச்சா மாதிரி அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரி.... நகைச்சுவையோட சில நல்லதையும் யோசிச்சா நல்லதுதானேடா....

இறைவன் இருக்கின்றாரா !!!!

ஒரு ஒரு இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள். உடனே காப்பாத்து.

கட்டளை போல் மனதில் தோன்றியது. கண் முழித்து திரும்பி பார்க்க, ஆலயத்தில் அத்தனை பேரும் பிரார்த்தனையில் மூழ்கியிருந்த்னர். எப்படி இது. மறுபடி கண் மூட, அதே குரல். திடுக்கிட்டு விழித்தேன். என்ன இது. தலை உலுக்கி ஆலயம் விட்டு என் மருத்துவமனை வந்தேன்.

பார்க்க வேண்டிய நோயாளிகள் என பெரிய கியூ ஒரு புறம், எனது ஆலோசனை கேட்க என உதவியாளர் சில மறு புறம். எனக்கு மட்டும் வேலை ஓடவில்லை. அந்த குரல் திரும்ப திரும்ப கேட்கிறது. மேசையில் உள்ள ஸ்டெதஸ்கோப்பை தோளில் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். பார்வை பட்ட இடத்தில், மார்சுவரி. பிணவறையின் முன் கூட்டம் கூட்டமாய் ஆட்கள். ஏதோ செலுத்தப்பட்டவன் போல் நான் நடக்கத் தொடங்கினேன். ஏழை பணக்கார பாகுபாடின்றி உடல்கள் சேமிக்கும் இடம். கலைந்த தலையுமாய் கண்ணில் நீருமாய் உறவுகளின் கூட்டம்.

கூட்டம் கடந்து மார்சுவரியின் முன்னறைக்கு வந்தேன். பதட்டமாய் அட்டெண்டர் ஓடி வந்தான். என்னை எதிர் பார்த்திருக்க மாட்டான். என்ன சார் நீங்க வந்திருக்கீங்க. அவனுக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை. மெளவுனமாய் நகர்ந்து உள் சென்றேன். எனை தொடர்ந்து அவனும் வந்தான். நீண்ட அறையில் வரிசையாய் மேசைகள், அடுக்கி வைக்கப்பட்ட உடல்கள். ஆசிரியர் காவலர் எனும் அடையாளம் இல்லை. பொதிந்த துணி மூட்டையில் லேபள் ஒட்டி பெயர். அமைதியாய் நடந்து ஒவ்வொரு மேசையாய் கடந்தேன். சட்டென நின்றேன். ஏன் நின்றேன் என எனக்கே தெரியவில்லை. கண் மூட அந்த குரல் கேட்ட்து. ஒரு இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள். உடனே காப்பாத்து.

நான் நின்றதை பார்த்த்தும் அவன் சொன்னான் ‘இது பூட்ட கேஸ் சார். வீட்டுல தீ பட்டு ஆக்ஸிடெண்ட். நேத்து கொணாந்தாங்க’. கை அனிச்சையாய் ஸ்டெத் எடுத்து உடலின் மார்பில் கொடுத்தேன். அமைதி. தலைக்கு மேல் சுழலும் பேன் சத்தம் கரக்... கரக்.... என கேட்ட்து. கை, கால் என தீ படாத இடங்களை தேடி தேடி பொருத்தினேன். நகர முடியாமல், சுற்றி சுற்றி வந்தேன். எனது தவிப்பு எனக்கே புரியவில்லை. அட்டெண்டெண்ட் கலவரமானான். ‘ரிலேஷனா.... சார்...’ என்னவென்று சொல்வது, மண்டைக்குள் கேட்கும் குரல் இவனுக்கு புரியுமா.... திரும்ப திர்மானித்து நடந்தேன். கால் பகுதி போர்வையின் முடிச்சுக்குள் அடங்காது வெளியில் இருந்த்து. வெண் நிற பாதம். சட்டென ஸ்டெத் காலில் வைத்தேன். லப்... டப்.... பதறிப் போனேன். எதிர்பார்க்கவில்லை. நம்பிக்கை இல்லாதவனாய் மறுபடி கேட்டேன். துல்லியமாய் தாள் லயத்தோடு இதயத் துடிப்பு. பரபரப்பானேன். அடுத்த சில நிமிடங்களில் மளமள வென நிறைய காரியம் நடந்த்து.

அவசர சிகிச்சை பிரிவுக்கு மாறுதல். சிகிச்சை. அவசரப்பட்டு இறந்த்தாய் சொன்ன மருத்துவர் மேல் புகார். எப்படி ரீயாக்ட் பண்ண வேணும் என தெரியாத உறவுகளின் நன்றி. நெஞ்சு நிமிர்த்தி எனது அடுத்த பணி செய்ய விரைவாய் நடந்தேன்.

பின் குறிப்பு :
இது கதை அல்ல. நிஜம்.
மண்ணெண்ணை ஸ்டவ் பத்த வைத்த போது விபத்தில் சிக்கி, மரணத்தை முத்தமிட்டு பின் மீண்டு வந்தவர்.

மார்சுவரியில் உடல் என மேற்குறிப்பிட்டு நான் சொன்னது என் நண்பர்.

வெற்றிகரமான சாப்ட்வேர் நிறுவனத்தின் ஸ்தாகபர்.
வலைப் பதிவர்.
அவர் வாழ்வு எனக்கு சொல்லிய பாடம் தாக்கம் பகிர்ந்து கொள்ள பெறுமை கொள்கிறேன்.

கம்யூனிச கடுகு – விவாத விருட்சம் – மேலும் விரிகிறது

கம்யூனிசத்தில் தொடங்கி, யூதத்தில் பயணிக்கிறது நம் பதிவின் பின்னூட்டங்கள்.
தகவல் பட்டரையாக பட்டையை கிளப்புகிறது.

நன்றி திரு ஜோ பாஸ்கர்,

பெயரில்லா வினாவிற்கு விரிவாக விளக்கமாக விடையளிக்க ஆழமாமாகச்சிந்திக்க அலசி ஆராய வாய்ப்பளித்த உங்களுக்கும் படுக்காளிக்கும் ஆச்சிக்கும் எனது நன்றிகள்.

வினாவிற்கு குறும் பதில் :

இயேசு கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை துவக்கினார். அவர் பிறப்பால் யூதர். ஆனால் முழுக்க முழுக்க யூத மத பழக்க வழக்கங்களையும் கொள்கைகளையும் எதிர்த்து, போதித்து, செயலாற்றி அதன் காரணமாக யூதர்களால் கொலை செய்யப்ப்பட்டவர்.

1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது.
2. யூதர்கள் அன்றும் இன்றும் என்றும் கிறிஸ்துவை கிறிஸ்துவத்தை எதிர்ப்பவர்கள்.
3. இயேசு தானே கிறிஸ்துவத்தை நிறுவி, அதன் கொள்கைகளை வகுத்து, செயல் பாடுகளை விளக்கி தனக்குப்பின் ஒரு தலைவரையும் நியமித்து அவருக்கு சாவியை வழங்கி அந்தப்பாறையின் மீது திருச்சபையை கட்டி வளர்ப்பவரும் அவரே.

விரிவான பதில் :

1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது :பன்னிரண்டு வயதிலேயே தாய் தந்தையை தவித்து தேட விட்டு விட்டு யூத மத அறிஞர்களோடு எதிர் வாதம் புரிந்தவர் இயேசு.

"கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல்" - இது யூத மத நெறி. "எதிரிக்கும் அன்பு செய் - ஓர் கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" - இது இயேசுவின் நெறி.
ஒய்வு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற சட்டத்தை எதிர்த்தவர். "விபச்சாரம் செய்பவளை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்" - யூத சட்டம். "உங்களில் பாவம் இல்லாதவன் அவள் மீது முதல் கல் எறியட்டும்" என்று மன்னிப்பது இயேசு. மதலேன் மரியாளை மனமார மன்னித்த மனிதாபிமானி இயேசு.
"யூத இனம் தவிர மற்ற இனங்களெல்லாம் தாழ்த்தபபட்டவை; அவர்கள் தீண்டத்தகாதவர்கள்" - இது யூதம். ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்த சீர் திருத்தவாதி இயேசு.
ஒருவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் முடிக்கலாம். அதே போல் ஒரு பெண்ணும் குழந்தை இல்லாமல் ஒரு கணவன் இறந்தால் அவன் சகோதரர்களே அவளை மணக்கலாம். இது போன்றவற்றை எதிர்த்துக்குரல் எழுப்பியவர் இயேசு.
மீட்பர் ஒருவர் வருவார் விடிவு தருவார் என்று இன்னும் எதிர் பார்த்த்துக்கொண்டிருக்கிறது யூதம். தானே அந்த மீட்பர் மெசியா என்கிறார் இயேசு.
குருக்கள் மன்னர்களுக்கு சமமானவர்கள் - வரை முறை களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் - எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் - இது யூதம். ஆனால் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு உங்களில் தலைவனாக விரும்புபவன் எல்லோருக்கும் வேலையாளாக இருக்கட்டும் என்றவர் இயேசு.

தொழு நோயாளிகளை ஊருக்குள்ளேயே அனுமதிக்காமல் நீக்கி வைத்தது யூதம் - அவர்களை தேடி சென்று பாவங்களை மன்னித்து ஊர்க்குளத்தில் குளிக்க்கச்சொல்லி குணமாக்கி சமுதாயத்தில் சேர்த்துக்கொண்டவர் இயேசு. ஒவ்வொருவன் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும் அவனது பாவமே காரணம். அதை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு - இது யூதம். தானே பாவங்களை மன்னித்து குணமளித்து யுத்தத்தை குட்டியது இயேசு.

ரோமைப் பேரரசு யூதர்களின் எதிரி எனவே வரி கட்டக்கூடாது என்றனர் சில யூதர். ஆனால் "சீசருக்குரியதை சீசருக்கும் இறைவனுக்குரியத்தை இறைவனுக்கும் கொடு" என்றவர் இயேசு.
யூத மதத்தின் மையமும் மிகவும் புனிதமனதுமான எருசலேம் ஆலயத்தை இடித்து விடுங்கள் - அதை மூன்றே நாளில் மீண்டும் கட்டி எழுப்புவேன் - என்றவர் இயேசு.யூதர்களின் எருசலேம் ஆலயம் முழவதும் இடிந்து விடும் - ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் கூட நிற்காது என்று கணித்துச்சொன்னவர் இயேசு.

கம்யூனிச கடுகு – விவாத விருட்சம்

தகவல் பரிமாற, தர்கிக்க, என தரமாக நம் வலைப்பதிவு வளர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஆச்சி படுக்காளி, அஞ்சரைப்பெட்டியில் கம்யூனிசத்தை தாளித்ததை, பின்னூட்டம் இட்ட திரு. ஜோ பாஸ்கர் அவர்களது எண்ணத்த்தை ஒரு பதிவாக்கி நேயர்களுக்கு அளிக்க, அதில் பின்னூட்டமாய் இன்னொரு கருத்து முத்து வந்தது. அதையும் இங்கு பதித்து இருக்கிறேன். தனிப் பதிவாய்.

தெரிய வேண்டும் என தேடலும், சக மனித மரியாதையும், மனித நேயமும் தமிழ் தொண்டுமாய் கைகள் பற்றி நாம் நடக்க வேண்டிய தூரம் இன்னும் உண்டு.


திரு. ஜோ பாஸ்கர் சொன்னது

// தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .//

பெயரில்லா சொன்னது...
உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன், கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை பரப்ப சொன்னாரா? அவர்தான் இந்த மதத்தை தொடங்க சொன்னாரா? உங்கள் கருத்து எந்த அளவுக்கு சரி? நான் படித்த வரையில் அவர் கடைசி வரை யூதர் என்று தான் சொல்லபட்டிருந்தது எது உண்மை? அவரை தூற்றியவர்கள் தான் பின்னர் கட்சி மாறி அவற்றின் பெயரால் கிறிஸ்துவத்தை பரப்பினார்கள் என்பது எந்த அளவுக்கு சரி? தயவு செய்து விளக்கம் தரவும். ( இது விவாதத்திற்கு அல்ல உண்மையில் ஒரு கருத்து பரிமாற்றதிர்க்காகத்தான் கேட்கிறேன்)

மர தமிழன்:

அடங்கியிருக்கும் சுவாரஸ்யமான சில கேள்விகளை நாம் மதத்தையும், கடவுளையும் தள்ளி வைத்து ஆராய்ந்தால் ஒருவேளை கடவுள் எங்கே இருக்கிறார் என்பது புலப்பட்டாலும் ஆச்சர்யமில்லை!!

இனிப்பு கண்ணா இனிப்பு !!!


இட்லி வடை ; வலை உலகில் அபிமானமும் வாசகரின் அன்பும் பெற்று, அரசியல், சினிமா, இலக்கியம் என ரவுண்டு கட்டி அடிக்கும் கலகல பதிவு மனை. ஒரு செய்தியும் அதன் தொடர்புடைய சிந்தையும் நான் எழுதி தர பிரசுரித்து உள்ளார்கள். படித்து நல்ல சில பின்னூட்டங்களும் வந்துள்ளன. இட்லி வடைக்கும் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும் சமர்பித்து கொள்கிறேன்.

இதை சாதிக்க உதவிய நண்பர் கோபி அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வில், இந்தியாவிலேயே இனிமை ஜாஸ்தி உள்ளவர்கள் .... கேரளாதான் என சொல்கிறது அறிக்கை. இது ரொம்ப பழைய மேட்டராச்சே, நம்ம பாட்டுக்கு ஒரு தலைவன் பாரதி சொன்னதுதானே,சேர நாட்டிள‌ம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்பது தானே என நினைப்பவருக்கு, இல்லைங்க இது வேற‌ ரூட். மேட்டர் வேற.

இது புதுசு கண்ணா புதுசு.

நாடெங்கும் ஆய்வு செய்ததில், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள‌ நோயாளிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களில் முதல் இடம்
கேரளாவுக்கு.

எனக்கு சுகர் இருக்குங்க, என பெருமையாய் போன தலைமுறையில் சொன்னது, அல்லது அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாய் பார்த்தது எல்லாம் பரணில் தேடி தூசி தட்டாமல் இன்றைக்கு பார்த்தால். அதெல்லாம் நாப்பது வயசுல சகஜமய்யா என பழகிக் கொண்டது இந்த தலைமுறை. (ஒரு விழா மேடையில் கவிஞர் வாலி அவர்கள் தலைமை ஏற்க வருகை தந்த கலைஞர் அவர்களை பார்த்து இப்படி சொன்னது நினைவுக்கு வருகிறது...தலைவா நீ பாப்புலர் ஃபிகர் உன்னை கண்டவுடன் ஏறுது என் ஷுகர்)

நீரழிவு எனும் சுத்த தமிழ் வார்த்தை கேட்டவுடன் பக் என பயமாய் இருக்கிறது. ஏதோ ஒரு பேரழிவு போல பூச்சாண்டி காட்டுகிறது. அதையே ஆங்கில மொழி மாற்றம் சாதாரணமாக்கி விடுகிறது. சக்கரை நோய், ஹும்... ரத்தத்திலா, யூரினிலா என சகஜமாக்கி விடும். கிராமத்தில் இப்படி சொல்வதை வெறுமே ஆங்கிலத்தில் சுகர்ங்க என ஸ்டைலாய் ஸ்வீட்டாய் சொல்லும் போது இன்னும் சூப்பர்.

அவருக்கு கன்னாபின்னான்னு சுகர். அசந்து படுத்தார்னா எறும்பு வந்து மொய்க்குது’ இனிப்பை கண்ணால கூட பாக்கக்கூடாது. என கண்டிப்புடன் கண்ணாடி தூக்கி விட்டு மாமி சொல்லி விட்டு நகர. சுகர் தான்... ஆனா கண்ட்ரோல்ல இருக்கு. அடிக்கடி சாப்பிடக் கூடாது, அப்பப்ப சாப்பிடலாம் தப்பில்ல என அசடு வழிந்து பச்சப் பிள்ள மாதிரி கேக்கிறார் நம்ம அப்புராணி மாமா, ஒரே ஒரு ஜாங்கிரியை... இந்த புரட்டு புரட்டுதே இது என்ன வியாதி.

வியாதி இல்ல. ஒரு சின்ன குறைபாடு. இன்சுலீன் எனும் த‌க்கூனுண்டு சமாச்சாரம் ரத்தத்தில குளுக்கோஸ் அளவை சமமாக்கி, தேவையானதை எடுத்துக்கிட்டு, போலாம் ரைட் என கழிவுக்கு அனுப்பி விட்டுவிட்டு, உடம்புக்கு வைச்சுக்கோ நீ என கொடுப்பது. சில சமயங்களில் கோவிச்சுக்குட்டு, மாட்டேன் போ தரமாட்டேன்னு தகராறு பண்ணுறதால உடம்புலயே இருக்க வேண்டிய ஸ்வீட் மெலடிஸ் கழிவாய் போறது தான் பிரச்சனை. இது அன்றி, சர்க்கரையை ரத்தத்திலேயே வைத்து கொள்வது (உடன்பிறப்புகளை இதய‌த்துல மட்டும் இடம் கொடுத்து), ப்ளட் ஷுகர்...

உணவு பழக்கம் முக்கிய வில்லன்னாலும், வேலை பளு, ஸ்ட்ரெஸ், போதிய ஓய்வின்மை இதெல்லாம் சைடு வில்லன். சில சமயம், இந்த சைட் வில்லன் பண்ற சேட்டை, மெயின் வில்லனின் சேட்டையை விட ஜாஸ்தினு நாம ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சுட்டோம்.

நிற்க.... தொடங்கின மேட்டர் கேரளாவுக்கு வந்தால். ஏன் கேரளாவில ஷூகர் கம்ப்ளைண்ட் ஜாஸ்தியாச்சுன்னு கேட்டா, அளவுக்கதிகமான தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகம் என காரணம் காட்டுகிறது ரிப்போர்ட். இதப் பத்தி நம்ம "பாலக்காட்டு சேட்டன் திரு மாரார்" கிட்ட கேட்டதுக்கு அவர் பரைஞ்சது என்னன்னா ‘தானா வளர்ர தென்னைமெரம். அதுல புடுங்கி எண்ண எடுத்தா என்ன ஏன் புடுங்கிங்கீறீங்கங்கறார்.

அங்கன பரைஞ்சாலே இந்தியாவிலே 95 சதவிகிதத்துக்கு மேலா எழுத்தறிவு, படிப்பறிவு உள்ளது கேரளாவில தான். தினசரி நியூஸ் பேப்பர் படிச்சுட்டே P.hd வாங்குற அளவுக்கு அறிவு ரோடெல்லாம் கொட்டிக் கிடக்குது. அந்த கேந்தியில லேசா தல சுத்துன உடன, ஒண்ணுக்கு மேலா ஒண்ணுக்கு போனவுடன ஓடிப் போய் டாக்டர பாக்கிற வினை எல்லாம் தான், இது மாதிரி பர்ஸ்டா வருது.

கலகலப்பா ஒரு பதிவு இருக்கும்யா, பாடிகார்டு முனிக்கு ஒரு கடிதம் இருக்கும்யா, என நகைச்சுவை தேடி வரும் இட்லி வடை வாசகர்களுக்கு வாங்கய்யா, உடம்ப நல்லா பாத்துக்கோங்க, நல்லவங்க கெடச்சா வந்து பழகுங்கய்யா...முடிஞ்சா சீனிய குறைங்க, டென்ஷன குறைங்க, உடற்பயிற்சி செஞ்சு, நல்லா கெதியா இருங்க என சொல்ல ஆசையும் அக்கரையும் உண்டுங்கோ.......ஷூகர்னு கேட்டாலே சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது இல்ல..

(லாரன்ஸ் / படுக்காளி.ப்ளாக்ஸ்பாட்.காம்) + அனுப்பிய நண்பர் R.Gopiக்கு நன்றி

http://idlyvadai.blogspot.com/2009/11/blog-post_5056.html

கம்யூனிச கடுகு !!!! நேர் வினை.

நுனிப்புல் மேய்ந்து நான் செல்ல, ஆழமாக உழுது அக்கினிக் குஞ்சாய் சில வைரப் பூக்கள், நிமிர்ந்த நன்னடையில்/ எழுத்தில் மின்னுகிறது. தங்கள் பார்வைக்கு இதோ.

நன்றி: திரு. ஜோ பாஸ்கர்.

அருமையான பதிவு.

சோஷியலிசம், கம்யூனிசம் இரண்டுமே மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை தான்.இந்தியா ஒரு சோஷியலிசக் குடியரசு. திருவள்ளுவரின் திருக்குறள் சோஷியலிசத்தை அடிப்படையாகக் கொண்டவை. புத்தன் ஒரு பொதுவுடமைப் பிரியர்.

பெரியார் ஒரு கருப்புச்சட்டைக் கம்யுனிஸ்ட். அண்ணா ஒரு சோஷியலிசவாதி.புரட்சித்தலைவர் பாடல்களும் கொள்கைகளும் வசனங்களும் ஆட்சி நெறிமுறைகளும் சிந்தனைகளும் சோஷியலிச வெளிப்பாடுகள். பராசக்தி காலத்து கருணாநிதி பிச்சைக்காரர்களை மாளிகைக்கு கொண்டு வந்த பொதுவுடைமைவாதி. (இப்போது பழுத்த முதளாளித்துவவாதி).

இயேசு கிறிஸ்து முழுக்க முழுக்க ஒரு பொதுவுடைமைவாதி. பணக்காரனை சொத்து அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கச்சொன்ன புரட்சிக்காரர். ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைவதை விட பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினம் என்ற போராளி.

கோவிலிலே வியாபாரம் செய்தவர்களை சாட்டையால் பின்னியெடுத்த தீவிரவாதி.

தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .

சந்தேகமே இன்றி இயேசு கிறிஸ்து ஒரு பொதுவுடைமைவாதி.

படுக்காளிக்கும் ஆச்சிக்கும் ஒரு வேண்டுகோள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் பொதுவுடைமை கொள்கைக்குள் அடங்காத, எனக்கு புரியாத இரண்டு விடயங்களை தயவு செய்து விளக்குங்களேன்.

ஓன்று. "இருப்பவனுக்கு மேலும் கொடுக்கப்படும். இல்லாதவனிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும்" .

இரண்டாவது. ஊதியம் பற்றிய உவமை: முதலாளி காலையில் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மதியம் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மாலையில் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். நாளின் முடிவில் சம்பளம் வழங்கும் பொது எல்லோருக்கும் ஒரே சம்பளம் வழங்குகிறார்.

காலையிலிருந்தே வேலை செய்தவர்கள், மாலையில் வேலைக்கு வந்து சில மணி நேரங்களே வேலை செய்தவர்களும் தங்களைப் போன்றே சம்பளம் வாங்குவதை எதிர்த்து போர்குரல் எழுப்பும்போது சம்பளம் கொடுப்பது தனது விருப்பம் என்றும் காலையில் வேலைக்கு சேர்ந்தவர் ஒத்துக்கொண்ட சம்பளம் அவருக்கு கிடைக்கும் பொது அடுத்தவர் சம்பளத்தைப் பற்றி கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை இல்லை என்கிறார்.

இது காலையில் சேர்ந்தவருக்கு இழைக்கப்படும் அநீதியா ?
மாலையில் சேர்ந்தவருக்கு வழங்கப்படும் தாராளமா ?