பக்கங்கள்

விதை - குறும்படம்

விதை என்ற சொல்லில் அற்புதம் உண்டு. மொழியின் அமைப்பில், அந்த ஒரே வார்த்தை… ஒரு பொருளாகவும், ஒரு செயலாகவும்…..2 இன் 1 ஆக இருக்கிறது.

அதுவே…. தான், செயல்படும் விதத்தில் இன்னும் ஆச்சரியமாய் இருக்கிறது. தன்னை மாற்றி, ஒரு தாவரமாக, மரமாக வளர்ந்து நிற்கும் ஆற்றலும் அதற்குள்ளே உள்ளது. என்றாலும் விதை தன் வித்தை காட்ட சில தேவைகள் உண்டு. நிலம், நீர், வளம் இன்ன பிற.


யேசு அவரது போதனைகள், பற்றி கூறும் போது, விதை குறித்து ஒரு குட்டி உவமானக் கதை சொல்லுவார். விதைகள் சிதறி பல்வேறு நிலங்களில் விழுந்தது. முதலாவதாக பாறையிலும், பாலைவனத்திலும் விழுந்தவை. அவை நீர் இல்லாமல், வளர இயலாமல் காய்ந்து போனது. அதுவே சில விதைகள் புதர்களுக்குள் விழுந்தன. விதைகள் துளிர்த்தாலும் பக்கத்தில் உள்ள புதர்கள் அவற்றை வளர விடாமல் தடுத்து விட்டன. நல்ல நிலத்தில் விழுந்தவை மாத்திரம், வளர்ந்து பன் மடங்கு பலன் தந்தது என சொன்னார்.


ஒரு ஆழமான சிந்தனையை விதைக்க, எங்கள் குழு மீண்டும் ஒரு குறும்படம் வாயிலாக வருகிறது. கதை வடிவமோ, அல்லது தொழில் நுட்பமோ எங்கள் கருத்தை சொல்லும் வாகனமே. நாங்கள் சொல்ல விரும்பிய கருத்து பரவலாய் சென்றடைந்தால் மிகப் பெரிய ஆக்கபூர்வமான தாக்கம் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் சமர்பிக்கிறோம்.

http://www.youtube.com/watch?v=AVkN6gtF33U


தங்கள் ஆலோசனையும் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

மிதக்கும் அதிசயம்... உங்களாலும் முடியும்!!!

சின்னஞ்சிறு வயதில் நீரில் மிதக்கும் மனிதர்களை பற்றிய செய்தி கேட்டிருக்கிறேன். ஸ்ரீரங்கத்து அரங்க நாதனின் வரலாறில் நீர் மேல் நடப்பான் பற்றி படித்த போது ஆரம்பித்தது, பைபிளில் யேசு, கடல் நீரில் நடந்து வருவதாகவும் வாசிக்க கேட்டேன்.

நடைமுறையில் நீரில் மிதப்பது சாத்தியமில்லை என பெர்மூடாஸ் ட்ரையங்குள் ரீதியில் மனதில் தோன்றியதால் கதை, பேண்டஸி என முத்திரை குத்தப்பட்டு, அன்றைய காலக் கட்டாயத்தில், அது நினைவில் பதிக்கப் பட்டது.

காலம் சற்று சுழன்றோட, அதே நீரில் மிதக்கும் தகவல் வேறு ரூபத்தில் வந்தது. தாடி மீசை வைத்திருந்த ஒரு சாமியார், ஆற்றில் மிதந்து கொண்டிருப்பது போல், புகைப்படத்தில் பார்த்த போது, சற்று அதிர்ந்து போனேன். இதெல்லாம் கற்பனை என நான் நினைத்திருந்தது, இறங்கி வந்து, சாத்தியம், ஆனால் மகான்களுக்கும், யோகிகளுக்கும் மட்டுமே சாத்தியம் என ஆனது.

பின்னர், சென்ற முறை விடுமுறை சென்ற போது, அண்ணன் மகன்…. வெகு அனாசியமாக நீச்சல் குளத்தில், இதையே செய்து காட்டிய போது, வியப்பும் ஆச்சரியமும் என்னுள் மேலோங்கியது. அவனோ, சித்தப்பு, இது ஈசிதான் என எனக்கு செய்முறை விளக்கம் சொல்லி தந்தான். உடனே முயன்றேன், முடியவில்லை.

பின்னர் ஒரு நாளில் தனியனாய் இருந்த போது, ஆழம் குறைந்த கடலில் இதை பரிசோதித்தேன். கால்கள் அகற்றி நிற்க வேண்டும், வயிற்று பகுதியை முன்னுக்கு தள்ளி, தோள் விரித்து, நெஞ்சு நிமிர்த்தி, தலை பின்னுக்கு தள்ளி உடலை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

எந்த தசையிலும் பிடிப்பு இல்லாமல், ஒரு தியானம் செய்யும் உடல் நிலையில் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…. என கட்டளை கொடுத்து கொண்டே இருந்தேன். அப்போது அந்த அதிசயம் நடந்தது. என் வயிற்று பகுதி மெதுவாக மேலேழுந்து, கடலின் வெளியே நீர் மட்டத்துக்கு உயர்ந்தது. கால்கள் கூட லேசாய் மேல் நோக்கி நகர்ந்தது.

சட்டென்று பகுத்தறிவோ!!!.... என்னவோ முழித்தது… என்னது நான் மிதக்கிறேனா. இப்படி ஒரு கேள்வியை எனக்குள் தூக்கி போட்டது. அந்த நினைவின் தாக்கத்தில், அந்த ஒரு நொடியில், அந்த ஒரு நினைப்பில் சட்டென்று நீருக்குள் அமிழ்ந்தேன்….. அடடா…. என மனம் சலித்து கொண்டாலும். மீண்டும் செய்வோம்…. என முயற்சி கட்டளை இட்டது.

இப்போது, எதிர்பார்ப்பு, இருப்பதால், உடல் தளரும் வினை கொஞ்சம் சிரமமானது. நேரம் அதிகரித்து கொண்டே இருக்க, உடல் இலகுவாவதில் தாமதம் உள்ளதால், மிதக்க முடியவில்லை.

சரி, எதிர்பார்ப்பை உதறுவோம், என சொல்லி, சிந்தனையை வெக்கேஷன் அனுப்பி விட்டு. செய்ய வேண்டிய வேலை ஒன்றும் இல்லை, எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை. சும்மா இரு…. அமைதியாய் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… என சொல்ல துவங்கினேன். சட்டென வயிறு உயர, கால்கள் உயர, மிதக்க துவங்கினேன். முந்தைய அனுபவம் தந்த நினைவால், சிந்தனையை கட்டுக்குள் வைத்திருந்து, உடலை முடிந்த வரை ரிலாக்ஸ்டாக வைத்திருக்க… யெஸ்… என்னால் மிதக்க முடிந்தது.

கைகள் விரித்தேன். கால்கள் சற்று விரித்தேன். மிக சரியாக உடல் ஒரு தக்கை போல், நீரில் மிதக்க துவங்கியது. அப்படியே சில நிமிடங்கள் படுத்திருந்தேன்.

கற்பனை என நான் நினைத்தது, மகான்களுக்கு மட்டுமே முடியும் என எண்ணியது, என்னைப் போல் சாமான்யனுக்கும் முடியும் என உணர்ந்த போது, கான்பிடன்ஸ் மின்னியது.

என்ன இது விந்தை. மனித உடலை வெறுமே ரிலாக்ஸ் செய்தால் இப்படியும் நடக்குமா. அப்படியென்றால், நீரில் மூழ்கி உயிர் விடுவது, பயத்தினால் தானா.

நான்…. எனது….. என்னை காப்பாற்றுவேன்…. என நாமே நினைத்து கொள்ளும் தகிடுதத்தம் தானா …!!!! நம்மை கொல்கிறது. நடப்பது நடக்கட்டும் என இருந்தால் நம்மால் அதிசயங்கள் செய்ய முடியுமோ….

தெரிந்து கொண்ட சில தகவல்களை சொல்லும் ஆர்வத்தில் இந்த பதிவு எழுதியுள்ளேன், என் முயற்சி ஒரு 2 அல்லது மூன்று மணி நேரத்தில் முடிந்திருக்கும். அடுத்த முறை தண்ணீருக்கு செல்லும் போது, முயற்சித்து பாருங்கள். உங்களாலும் முடியும்….

ஆம்… நம் மனித சக்தியின், மர்மங்களும் மகோன்னதங்களும் !!!! நம்மால் இன்னும் உணர பட வேண்டியதே….

சிந்தனையில் விருத்தி

”என்னா… பிரில்லியண்ட் திங்கிங்….!!! சும்மா சொல்ல கூடாது திங்கிக்குல நீ கிங்குடா…..”

”அடேயப்பா……. அவன் ரொம்ப பிரில்லியண்ட்”

இப்படி, சொல்லும் வார்த்தைகள் நாம் அன்றாட வாழ்வில் கேட்பது தானே. வியப்பாய் வெளியிடும்.... ஒரு நுண்ணிய குணம்… இண்டெலிஜண்ட்டு…………!!!!

புத்திசாலியா இருந்தா சூப்பர், காசு பணம் கூட எப்ப வேணும்னா சம்பாதிச்சிரலாம், ஆனா புத்தி இல்லேண்ணா வேலைக்காவாது. ரொம்ப அவசியம் என நம்மால் பகுக்கப்பட்ட ஒரு குணாதிசயம் இந்த இண்டெலிஜந்து.

புத்திசாலித்தனத்துக்கு, அர்த்தம் சொல்ல முடியுமா???

புத்திசாலித்தனத்தை விளக்க முடியுமா ???? இதை புரிந்து தெளிந்து, நம்மால் அதை மேம்படுத்த முடியுமா, என சிந்திப்பதே இந்த பதிவு.

டாட்டா ஒரு பேட்டியில்.... உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன ????? என கேட்க, ஒரிறு வினாடிகள் யோசித்து விட்டு அமைதியாய் சொன்னார் ‘தகவல்கள்’

முதலில்... என்னது தகவல்களா, !!!! அதுவா வெற்றி தேடித்தரும்…. சே… சே… அது இல்லீங்க... என நாம் தள்ளினாலும், ஆற அமர யோசிக்கும் போது, நமக்கு தகவல்களின் அவசியம் புரியும். கற்று, கேட்டு கருதி நாம் சேகரிக்கும் தகவல்களின் அளவே, நம் வெற்றியை நிர்ணயிக்கிறது என்பது மிகையல்ல.

என்றாலும், தகவல்கள் மிகுந்திருப்பது அல்ல.... புத்திசாலித்தனம்.

உதாரணத்துக்கு.... ஒரு கல்லூரியின் பேராசிரியராய் !!! ஒருவர் இருப்பார். மாணவர்களும் சக ஆசிரியர்களும் ஒரு சேர பிரமித்து, அவர் புத்திசாலி என ஒத்துக் கொள்வர்.

கல்லூரியில் பிரில்லியண்ட் என முத்திரை குத்தப்பட்ட குமார சாமி.... வீட்டிலே மனைவியிடம் அதை பெறாமல் இருக்கலாம். மனைவியிடம் மொத்தும் குத்தும் வாங்கலாம். ”உங்களுக்கு ஏதாவது தெரியுதா, இந்த வீட்டுல நான் மட்டும் இல்லாங்காட்டி சிரிப்பா சிரிச்சுப்புடும்” என மணந்தவள் மடக்கலாம். வீடு பத்தி, உறவு பற்றி, அல்லது சிக்கனம், சேமிப்பு பொருளாதாரம் பற்றி அவருக்கான தகவல்களும் புத்திசாலித்தனமும் குறைவாக இருக்கலாம்.

புத்திசாலித்தனம் என்பது நம், சிந்தையின் வெளிப்பாடு. வெளிப்படும் சிந்தனை, பரவலான அங்கீகாரம் பெற்று..... பாராட்டப்பட்டால் புத்திசாலி.

பரவலான அங்கீகாரம் தருவது, சமூகம் என்பதால், சக மனிதன் என்பதால்... நாம் வாழும் காலம் என்பது மிகப் பெரிய தளமாக இருக்கிறது.

சண்டை போடுவதில் மிக வலுவான ஆயுதம் எது, என ஒரு கேள்வி வந்த போது, அஹிம்சை தான் ..... போராடுவதின் மிக பலமான ஆயுதம் என காந்தி சொன்னார், அது அன்றைய காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடை பிடிக்க பட்டது.

அவரே… ஒரு ஆயிரம் வருசங்களுக்கு முந்தி பிறந்திருந்து, இதே வார்த்தையை சொல்லியிருந்தால்..... முப்பதிரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணுற்றாறு காயங்களை ..... ஆபரணமாக !!!! பூண்டிருந்த விஜயாலய சோழர் காலத்தில் எடுபட்டிருக்குமா… சந்தேகம்தான்.

காலம், அங்கீகாரம்..... படைக்கும் வேள்வியே .....புத்திசாலித்தனம்!!! எனும் போது, புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போமா.

சிந்தனையை மூன்று படிவங்களாக பிரித்து அதை ஆராய்வோமே... மூன்று நிலைகள் தான் ஒரு சிந்தனை வெளிப்பாடு.

1. புரிதல் 2. அலசுதல் 3. அறிவித்தல்

இந்த மூன்று நிலைகளை இன்னும் ஆழமாய் பார்க்க, வாசக தோழமையே ஒரு பிரச்சனையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

பிரச்சனையை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்.??? அது கழுத்தை நெருக்கும் கயிறாக !!!சிந்திக்கிறோமா, அல்லது.... காலை வருடும் பயிராக சிந்திக்கிறோமா.

நான் எடுக்கும் இந்த முடிவு ..... என்ன விளைவுகள் ஏற்படுத்தும் !!! என கவனம் கொள்கிறோமா, அல்லது வருவது வரட்டும் என ஈசியாக இருக்கிறோமா.... எனும் மெமரி இன்பர்மேஷன் ஃப்ளாக்கே (Flag) புத்திசாலித்தனத்தின் முதல் படி. சுருக்கமாக சொல்வதென்றால் நம் சிந்திப்பில் முனைப்பு இருக்கிறதா, ஏனோதானா என முயல்கிறோமா அல்லது ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் யோசிக்க துவங்குகிறோமா என்பதே..... புத்திசாலித்தனத்திற்கான பாதை.

முனைப்பு இல்லாத முயற்சியால், இலக்கை எட்ட முடியாது. நம்மை புத்திசாலி எனும் ஊருக்கு கொண்டு போய் சேர்க்கும் டிக்கெட், வாங்க வேண்டியது முதல் படியில் தான். முதல் படி எடுத்து வைத்து, நம் சிந்தனை செலுத்தும் பாதை ..... அடுத்து வருவது அலசுதல் கட்டத்துக்கு.

நம் பிரச்சனையின் தீர்வுகள் என்ன என்ன, எப்படி சமாளிக்கலாம், என நாம் தேடும் இடம் நம் நினைவுகளே... தகவல்கள் ஆற்றும் மிக பெரிய பணி இங்குதான்.

இது மிக முக்கியமான ஒரு கட்டம். இப்படி இருக்குமோ, இப்படி செய்யலாமோ, இப்படி செய்தால் இப்படி ஆகி விடுமோ என நமக்குள் நடக்கும் ஒரு கருத்து மோதல்கள்.

முதலில் நம் முந்தைய அனுபவங்களை தேடுவோம், இது போல் எப்போதேனும் நடந்ததா.... இல்லை வேறு யாருக்கேனும் நடந்து, அவர்கள நமக்கு சொன்னது.... தகவல்களாய் இருக்கிறதா என நாம், சல்லடை போட்டு தேடுவோம். சில சமயம் புத்தக தகவல்களாகவோ, கதையாகவோ, கூட இந்த தகவல்கள் நமக்குள் இருக்கலாம். இந்த நிலையில் நாம் எவ்வளவு அலசுகிறோம் என்பதே புத்திசாலித்தனம்.

பல கோணங்கள் சிந்திக்கப் படுகிறதா... பல பரிமாணங்கள் பார்க்கப் படுகிறதா..... இப்படி பரந்து விரியும் சிந்தனையின் விசுவரூபம் தான் ஒரு புத்திசாலித்தன யோசனை.... என குறிக்கப் படுகிறது.

வீக்கான, குட்டி சிந்தனைகள் நம்மை முட்டாள் என முடிவு கட்டி விடுகிறது....

எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதும், எவ்வளவு ஆழமாய் இந்த நிலையில் சஞ்சரிக்கிறோம் என்பதுமே புத்திசாலி எனும் முத்திரை வாங்கும் குணம் கொண்டது. அவசரப் பட்டு, கொஞ்சம் மட்டுமே சிந்தித்த சிந்தனை பலன் இல்லை.

அப்படி நம்மை புல் ஸ்டாப் போட வைக்கும் சக்தியே இந்த மூன்றாம் நிலை. முதல் இரண்டு நிலைகளையும் நிற்க வைப்பதே இந்த அறிவித்தல் நிலை. போதும்... இது சரியா இருக்கும் .... இப்படி செய்தால் போதுமானது என நாம் சிந்திக்கிறோம் அல்லவா, அதுவே இந்த நிலை.

இந்த அறிவித்தல் ஒன்று வார்த்தையாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படலாம்.

நிறைய சமயங்களில், அறிவிப்பதில் நாம் அவசரப் படுவோம். ஓகே… முடிஞ்சுருச்சு…. யோசிச்சாச்சு, இனிம அறிவிக்கப் போகிறேன் என ஒரு முடிவெடுக்கும் போதே, நாம் முதல் இரண்டு நிலைகளை மூடி விடுவோம். அனேகமாக இந்த மூன்றாம் நிலை வந்த பின்பு முதல் இரு நிலைகளுக்கு திரும்பி செல்வது கடினம். செல்ல முடியாது என்பதில்லை, போவதில் நடைமுறை சிரமம் என்பது மட்டும் நிதர்சனம்.

நம்மால் புரிந்து கொள்ள வேண்டியதும், மிக முக்கியமானதும் ஒன்றே. வேகம் மிக அவசியம் என்றாலும், வேகம் மட்டும் முக்கியமில்லை, விரிந்து பரவும் அடர்த்தியே முக்கியம். பல தளங்களில் விரிந்து, பல கோணங்களை தரிசித்து, ஒரு நினைவு வெளி வருமானால் அதுவே புத்திசாலித்தனம் எனும் முத்திரை குத்தப் படுகிறது.