பக்கங்கள்

ஒலியொழி – வழிவலி

உஷ்….
எனும் ஒலியின் அர்த்தம்
அமைதி

சத்தத்தின் மரணம்
அமைதி
அமைதியில்
பூக்கும் கூர்மை

இரு எதிர் துருவங்கள்
ஒலியும் அமைதியும்
எது சிறந்தது
என இருவருக்கும் போட்டி… நமக்குள்ளே !!!

அமைதியை அழிக்க
ஒலியால் முடியும்
ஒலியை அழிக்க…. ????

சரி விடுங்கள்.... 
அமைதியை
படைக்கத்தான் முடியுமா


சத்தமின்றி இருத்தல்
.... அமைதி
அவ்வளவுதான்.....

ஒலி
என்னுடையது
என மார் தட்டலாம்
அமைதிக்கு காரணகர்த்தா யார்…

அமைதியை உருவாக்க முடியாது
அமைதியோடு
வேண்டுமானால் இணையலாம்….

பெரும் அமைதிதான் 
இறையோ ????
கூச்சல்களுக்கு கூடாரம் இல்லையோ...

அமைதியை அனுமதித்தால் நிம்மதி
புரிந்து கொண்டால் ஆன்மீகம்.

கண்ணுக்கு மை அழகு


அன்று….

அபாயம், ஆபத்தானது, ராசியில்லாதது என வர்ணிக்கப்படும் அந்த சாலை சந்திப்பை என் பைக் நெருங்கிக் கொண்டிருந்தது. பாத்துப் போம்மா…. வாரத்துக்கு ஒரு ஆக்சிடெண்ட் எப்படியும் நடந்துருது, கண் மண் தெரியாம லாரியும் பஸ்ஸூம் போகுது. ரோடு கிராஸ் பண்ணும் போது கவனம்… நீ ரொம்ப ஜாக்கிரதையா போகணும்மா என அம்மாவின் அன்புக் குரல் மனதில் கேட்டது. அது எப்போதுமே என்னை சுதாரிக்க செய்யும் ஒரு நினைவு சிப்பி.

இன்றும் கவனத்தோடும், கவலையோடும் நான் அதை அடைந்தேன். சிக்னலின் பச்சைக்காக, நான் நிற்க வேண்டியதாயிற்று. கண்ணையும் தலையையும் சுற்றி, அங்கிருக்கும் சூழலை பார்க்க துவங்கினேன். 

பரவசம் முகத்தில் கொப்பளிக்க, வாயெல்லாம் பல்லாய் ஒரு இளைஞன் என்னருகில் பைக்கில் நின்றிருந்தான். 

இவன் சந்தோசத்துக்கு எது காரணமாக இருக்கும். ம். ஒன்றுதான் இருக்க முடியும். வேறென்ன சாத்தியம், ஏதெனும் காதல் சார்ந்த உணர்வாகத்தான் இருக்க வேண்டும். இல்லாமல் வேறு எது இத்தகைய சந்தோசம் கொடுக்க போகிறது. என சிந்தித்து கொண்டே, மீதமுள்ளவர்களை பார்த்தேன்.

பட்ஜெட்டில் துண்டு விழந்ததை பற்றி கவலைப்படும் நடுத்தர வர்க்கம். தன் வழுக்கையை மறைக்க, காதோர கிருதா முடியை, தலையின் குறுக்கே படர விட்டு, மறைத்திருந்தார். காற்றுக்கு என்ன பொறாமையோ. அம்முடியின் காதை பிடித்து திருகி, மறுபடியும் காது பக்கமே கொண்டு வைத்தது. நம்மவர் சட்டென, அதை மீண்டும் தலையின் குறுக்கே வைத்தார்.

இப்படி ஒரு சாமான்ய கூட்டத்தில் அவர், என் கருத்தை கவர்ந்தார்.

கையில் நெடிய குச்சியுடன் அதை உயர்த்தி பிடித்தவாறு, காதை அங்குமிங்கும் திருப்பி வரும் சத்தங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார். அவருக்கு பார்வையில்லை. நான் அதிர்ந்தேன். அவரருகில் துணைக்கு யாரும் இருப்பார்களா என ஆராய்ந்தேன். இல்லை எவருமில்லை. அவர் தனியாகத்தான் இருந்தார்.

இப்போதும், கையை ஆட்டிய வண்ணம், தலையை அங்குமிங்கும் அசைத்து கொண்டு ஒலியின் மீதே கவனம் கொண்டிருந்தார்.

சிவப்பு விளக்கு மறைந்து, பச்சை ஒளிர்விட்டது. வண்டிகள் எல்லாம் அவசரம் அவசரமாக கியர் மாற்றி, இன்ஜினை உறும விட்டு, லேசாக நகரத் துவங்கின. அந்த சத்தங்களின் சங்கீதத்தில் நம்மவர் உஷாரானார். அவசரம் அவசரமாக, கையை உயர்த்தி, அவரது குச்சி தெரியும் வண்ணம், ஆட்டிக் கொண்டு, விரைவாக நடக்க துவங்கினார். நான் பதறினேன். இரு விழி இருந்தும் கூட,, நமக்கு இவ்வளவு பயம் இருக்கிறதே. இங்கு விபத்தில் சிக்கியவர்கள் கூட, கொஞ்சம் அசட்டையாக இருந்ததால் தானே அவர்களுக்கு விபத்து நடந்தது.

அப்படி இருக்கும் போது, பார்வை இல்லாத இவர் எப்படி இங்கனம் செய்கிறார். இவர் சாலையை கடந்து விடுவாரா என்ற பதைபதைப்புடன், என்னால் மேற்கொண்டு வண்டியை செலுத்த முடியாமல் சாலையை கடந்து, ஓரமாய் நிறுத்தினேன்.

நான் நினைத்த அதே தவறு நடந்தது. 

அச்சாலையிலே மொத்தம் 3 டிராக்குகள். ஆனால், அவரோ, ஒரு இரண்டரை டிராக்குகள் கடந்ததுமே, கோணத்தை மாற்றி, நடக்க துவங்கினார். அதாவது அவரது கணக்கிலே சாலையை கடந்தாயிற்று, இனி சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கொண்டு நடந்து கொண்டிருந்தார். ஆனால் உண்மை என்னவோ அவர் இன்னும் சாலையை கடக்காமலேயே, வாகனங்கள் போகும் திசையில் நடக்க துவங்கினார். என்ன சிக்னலின் புண்ணியத்தில், இப்போது அச்சாலையில் வாகனங்கள் இல்லை.

பச்சை விளக்கு மறைந்து, ஆம்பர் ஒளிர் விட்டது. இதயம் படபடவென துடித்தது, இரத்தம் தாறுமாறாக ஓடி, எனக்குள் பதறியது. அடடா, இப்போ சிக்னல் விழுந்தால், அடுத்த திசையின் வண்டிகள் வரத்துவங்குமே….. அந்த நினைப்பு சுர்ரென குத்தியதும், வண்டியை விட்டு குதித்து, அவரை நோக்கி ஓடினேன். அவர் கையை பற்றி, ’இங்க…இங்க… ரோடு இங்க இருக்கு’ என சொல்லி விட்டு..... அவரையும் இழுத்துக் கொண்டு விரைவாக சாலையின் ஓரத்தில் வந்து விட்டேன்.

நல்ல வேளை அடுத்த திசை வண்டிகள் வரும் முன்னே, நாங்கள் இருவரும் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம்.

எனக்குள் கொஞ்சம் கோபம் வந்தது. ’என்ன சார் இது, யாரும் துணைக்கு வரலியா..’ 

குரல் கேட்ட திசை நோக்கி திரும்பி பார்த்து, அமைதியாக ஒரு சிரிப்புடன், ’இல்ல சார், நான் எப்பவுமே தனியாத்தான் வருவேன்.’ அதில் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. என் கோபம் இன்னும் துளிர் விட்டது. ’என்னத்த தனியா, பாதி ரோடு கிராஸ் பண்ணி, ரோட்டுக்கு குறுக்க நடந்தீங்க… ’ என்றேன்.

என் கோபம் அவருக்கு புதியதாய் இருந்தது,. ஒரு வேளை புதிராக கூட இருக்கலாம். என்னை பார்த்து…!!!! சிரித்து விட்டு, கைகளை நீட்டி துளாவினார்.

என்ன தேடுகிறார்…….. ஓ… அவர் என்னை தேடுகிறார் என தெரிந்து என் கைகளை அவரின் குறுக்காக நீட்டினேன். என் முழங்கை அவர் கையில் பட்டது. அதை தொட்டு, பின்னர் தொடர்ந்து, என் உள்ளங்கையை அடைந்தார். அவரது கையை என் கை மேல் வைத்து, கை குலுக்கினார்.

பின் அதே சிரிப்புடன் ‘ரொம்ப கோபப்படுவீங்களோ….’ நான் அமைதியாக நின்றிருந்தேன். அவரே தொடர்ந்தார் ‘இல்ல, கை கெட்டியா இருக்கு, ஆனா அமுக்கினா சாப்ட்டா இருக்குது. உங்களுக்கு இளகின மனசு ஆனா சுருக் சுருக்குன்னு கோபம் வந்துரும் இல்லியா.

இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. ஆனால் என் இறுக்கம் குறைந்திருந்தது. இன்னும் சிரிக்க முடியவில்லை என்றாலும் இதயம் என்னவோ, கோபத்தை தொலைத்து இருந்தது. நான் அவரது கையை மெதுவாக அழுத்தி, ஹூம்… பாத்து சார்… கவனம்… என சொல்லி என் கையை விடுவித்து கொண்டேன்.

எங்க போகணும், நான் வேணும்ன்னா டிராப் பண்றேன் என்றேன். பாங்க் போகணும், பஸ் ஸ்டாப்பு பக்கத்துல ஒரு சப்வே வரும் அது பக்கத்துல விட்டுறுங்க என்றார். சரி ஏறிக்கோங்க என என் இரு சக்கர வாகனத்தின் அருகில் கூட்டி கொண்டு வந்து, அதை தொட்டு காட்டினேன். பின் இருக்கையை தொட்டதுமே, ம்… புல்லட்டா, நல்ல வண்டி என்றார். நான் கொஞ்சம் வியந்தேன். அமர்ந்ததும் வண்டியை இயக்கி மெதுவாக ஓட்டினேன். கொஞ்சம் உயரம் குறைவா இருக்கே என்றார். 

நான் ”இது தண்டர் பேர்டு புதிய வண்டி, பழைய புல்லட் போல இல்லாமல் இது கொஞ்சம் உயரம் குறைவு” என்றேன். ஓஹோ… ஆனா இன் ஜின் சத்தம் பாக்கும் போது, பழசாயிருந்ததே என்றார்.

நான் துணுக்குற்றேன். பழைய புல்லட் சத்தம் தரும் அந்த சைலன்சரை நான் விரும்பி மாட்டிக் கொண்டேன், அல்லது புதிய பைக்கில் பழைய மாடல் சைலன்சராக மாற்றி இருந்தேன். அவரது கணிப்பும் கணக்கும்…. எனக்கு ஆச்சரியம். இத்தனை நுண்ணிய புலனும், நினைவுமா……

பேச்சின் ஊடே..... தான் ஒரு இசைக்கலைஞன் என்றும், கீ போர்ட்டு வாசிக்கிறேன். வாங்கிய சம்பளத்தை வங்கியில் போடவே போகிறேன் என்றார். தனியா போறீங்களே… நான் மறுபடியும் முதலில் இருந்து தொடங்கினேன்.

”இருவந்தைஞ்சு வருசமா போறேன். ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல” என்றார். என் விழிகள் வியப்பில் விரிந்ததை அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. வர வேண்டிய இடம் வந்ததும் வண்டியை மெதுவாக்கி, சரி பாக்கலாம் என்றேன்.

அவர் இறங்கி கொண்டு, சொன்னார்……….. ரொம்ப தேங்க்ஸ்…

நடக்க துவங்கியவர், சின்ன தயக்கத்துடன் நின்று, பின் திரும்பி, என்னை நெருங்கி நின்றார். நான் … சொல்லுங்க என்றதும்… பேசாமல் இருந்து விட்டு, அமைதியான சில நொடிகளுக்குப் பின் சொன்னார்…. ரொம்ப கவலைப்படாதீங்க, நீங்க நினைக்கிற அளவுல இது கஷ்டம் இல்ல. இந்த உலகத்தில நிறைய நல்லவங்க இருக்காங்க…. எனக்கு ஒண்ணுமே ஆகாது. கை குச்சியை மேலே ஆட்டி நான் நடந்தா, யாராயிருந்தாலும் மெதுவா போயிடுவாங்க…. நான் வர்றேன்…

அவர் சென்றார். நான் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். அவரது செல்லும் பாதையில் சற்று தூரத்தில் கொஞ்சம் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. நான் கொஞ்சம் பதறினேன். அவரோ சாதாரணமாக நடந்து, அந்த தண்ணீர் இருக்கும் இடத்தை அடைந்தார். தண்ணீர் மேலே மிதித்து, நடந்து சென்றார். அளவான பதட்டம் இல்லாத நடையிலேயே அவர் நடந்ததால், பாதிப்பு ஒன்றுமே இல்லை….

தண்ணீர் முடிந்ததும், நிலப்பரப்பில் கால்களை தரையில் பலம் கொண்டு உதைத்து பின்னர் நடக்க துவங்கினார்.

ஒரிறு அடிகள் அவர் நடந்த போது, இன்னொன்றை கவனித்தேன்…

அவரின் முன்னே, ஒரு பெண் யாரோடோ, செல்லுலாரில் பேசிய படி கவனக்குறைவாகவே நடந்து கொண்டிருந்தார். இங்கிருந்தபடி நான் லேசாய் பதறினேன்…. அவரோ, அந்த குரலை கணித்து ஒரு அரையடி இடைவெளி உண்டாக்கி, நகர்ந்து முன்னேறினார். பார்வையில்லாத அவரால் அந்த சாலையில் ஒரு பிரச்சனையும் இல்லை. சற்று தொலைவில் சப்வேயில் அவர் தலை மறைந்தது.

நான் அங்கேயே நின்றிருந்தேன். உலகம் அசைந்து கொண்டுதான் இருந்தது. எல்லோருக்கும் அவசரம். சிலர் நடந்தும், சிலர் விரைந்தும், சிலர் நின்றுமாக ஏதோ ஒரு வேலையிலேயே இருந்தார்கள். நான் மட்டும் எதுவும் செய்யாமல், ஒன்றும் நினைக்காமல் அப்படியே உறைந்து நின்றேன்.

இதில் பரிதாபம் இல்லை. வேண்டுமென்றால் என்னை பார்த்து கொஞ்சம் பரிதாபப்பட்டேன். அவர் கூறிய சில வார்த்தைகள் இன்னும் என்னுள் எதிரொலிக்க வண்டியை இயக்கி நகர்ந்தேன்….

கொஞ்சம் தொலைவிலே… சாலையோரத்தில் இளைஞர்களின் கூட்டம்….. காலை 10 மணிக்கே என்ன அப்படி கூட்டம் என கேள்வியோடு முன்னேறியபோது……….. நொளைய தளபதியின் ஒரு புதிய திரைப்படத்து போஸ்டர்கள் தெரிந்தது. எனக்கு புரிந்தது.

கூடியிருக்கும் கூட்டம், சந்தோசத்துடன் ஆர்வமாக நின்றிருந்தது. அவர்கள் ஆதர்சன படம் பார்க்க முன் பதிவு செய்ய இப்போழுதே வந்ததும் புரிந்தது. அந்த கும்பலில் இருந்த ஒருவன் ரசித்து அவன் நண்பனிடம் சொன்ன வார்த்தை என்னை இழுத்தது…..

‘பார்க்க கியூட்டா, சிக்குன்னு நம்ம தலைவண்டா… அங்க பாரு கீரோயினியை, மைதா மாவு உருண்டைடா, உடம்பு நழுவுற மாதிரியே ஒரு சூப்பர் டிரஸ்…….. ஆஹா, காண கண் கோடி வேண்டும்டா……..’’

எனக்குள் ஏதோ பிசைந்தது. ஒரு நிலை கொள்ளாமை. ஒரு ஆற்றாமை.

இறைவன் கொடுத்த இரு கண்களை கொண்டு நாம் என்ன செய்திருக்கிறோம்… என்ன செய்து கொண்டிருக்கிறோம்….. என ஒரு கேள்வி குடைந்தது.

கண் பார்த்து சொன்ன சேதிகளினால் நாம் பதட்டப்படத்தானே செய்கிறோம், சக மனிதரை நம்பும் அவர் எங்கே… கண் இருந்தும் அங்குமிங்கும் அலைபாயும் நம் கவனம் எங்கே… இந்த கண்களினால் ஆன பயன் குறைவோ… என மேலும் சில கேள்விகள் பாய………………….

என் டூவீலர் மிதமான வேகத்தில் நகர்ந்தது. நீங்க நினைக்கிற அளவுல இதுல கஷ்டம் இல்ல……. எனும் வார்த்தை என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அவர் சொன்னது சரிதானோ… ’ 

வானொலி நாடக அனுபவம்

வானொலி நாடகம் என்பது கலையின் தனி வடிவம். ஊடகத்தின் ஒரு உட்பிரிவு. அதற்கு கதை வசனம் எழுதுவது ஒரு விதமான சவால். ஏனெனில் எல்லா விஷயங்களையும் வசனமாகவே சொல்ல வேண்டும்.

ஒரு கிராமம் என்பதை …… திரைப்படமாக, காட்சியாக சொல்லும் போது, 20 வினாடிகளில் ஒரு குளம், ஒரு வயல், ஒரு வீடு என படம் பிடித்து…. மிகவும் எளிமையாக சொல்லி விடலாம்.

அதே கிராமத்தை…. கதையாக எழுதும் போது, இரு பத்திகளில் வரிந்து வரிந்து எழுதி விடலாம்… ஆனால் ஒரு கிராமம் என்பதை வானொலியில் வெறும் ஒலியாக சொல்லும் போது…………. ஹூம்…. கொஞ்சம் கடினம் தான்…. என்ன செய்யலாம்….. முன்னுரை ஒன்றை அமைக்கலாம்…. எப்படி… ’பச்சை புல் போர்த்திய வயல்களும் நீர் நிறைந்த குளங்களும் அடங்கிய ஒரு அழகிய கிராமமே நம் கதை நடக்கும் ஊர்………. ‘ என சொல்லலாம்…..


முன்னுரை என பிண்ணனிக்குரலாக ஒலிக்க செய்வது ஒரு மிக பழைய உத்தி, அதுவும் இல்லாமல் வீரியம் குறைந்த ஒரு அணுகுமுறை. வேறு வழியே இல்லாத போது முன்னுரை எனும் உத்தியை வைக்க வேண்டும், இல்லாமல் அதை தவிர்த்து, கேட்கும் நேயர்களின் மனதில் இந்த கிராமத்தை எப்படி காட்சியாக வரைவது என எப்போதும் சிந்திப்பேன்… முயலுவேன்….

காட்சிகள், பின்புலங்கள் மாத்திரம் அல்ல….. கதாபாத்திரங்களுக்கும் இதே சவால்தான்.

பேசுவர் யார், அவரின் குணாதிசயம் என்ன, அவர் யாருடன் உரையாடுகிறார், அவருக்கும் இவருக்குமான உறவு என்ன, எங்கே பேசுகிறார்கள் வீட்டிலா ரோட்டிலா, எப்போது பேசுகிறார்கள் பகலிலா அல்லது இரவிலா என எல்லா பரிமாணங்களையும் வசனங்களில் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு கீழுள்ள உரையாடல்களை கவனியுங்களேன்.


( காலிங் பெல் ஒலி…………………………….. )
பெண் குரல்
வர்றேன்...வர்றேன்... ஆபிஸ் போயிட்டு வந்தா, இவ்வளவு என்ன அவசரம்... (கதவு திறக்கப்படும் ஓசை) .... அதான் வர்றேன்ல… அதுக்குள்ள என்னங்க….
ஆண் குரல்
எங்க இவ்வளவு நேரம்….
பெண் குரல்
பின்னால துணி காயப் போட்டுக்கிட்டு இருந்தேன்…
ஆண் குரல்
ஓ….. சரி…. புள்ளைங்க எங்க
பெண் குரல்
ரெண்டும் டியூஷன் போயாச்சு…
ஆண் குரல்
ஓஹோ… சின்னவளுக்கு இருமல் இருந்துச்சே… அப்படியுமா டியூஷன் அனுப்பிச்ச……

இந்த உரையாடல்களை கேட்டவுடன் 10 வினாடிகளுக்குள் எத்தனை தகவல்கள் வருகிறதென பார்ப்போம்


  • 1.   அலுவலகத்துக்கு செல்லும் புருஷன்…….. அவனுடைய வீட்டுக்கு வருகிறான்
  • 2.   மனைவி – ஹோம் மேக்கர். வீட்டு வேலை செய்து கொண்டு பிசியாக இருக்கிறாள்.
  • 3.   அவர்களுக்கு 2 பிள்ளைகள்
  • 4.   சின்ன பெண்ணுக்கு உடல் சரியில்லை
  • 5.   காட்சி நடப்பது வீட்டில்
  • 6.   காட்சி நடப்பது ஒரு மாலையில்

இப்படி ஒரு உரையாடலின் ஊடே தகவல்களை தர வேண்டும். இயல்பாகவும் இருக்க வேண்டும், சுவாரசியமும் செய்ய வேண்டும், அதே நேரம், கேட்கும் நேயர்களுக்கு எந்த குழப்பமும் இல்லாமல்………. கேள்வியே கேட்காத தெளிவில், விஷயங்களை சொல்ல வேண்டும்.

வசனங்கள் எழுதி முடித்து விட்டு, நாமே ஒரு நேயராக இருந்து கொண்டு, கண் கொத்தி பாம்பாக எல்லாம் புரிகிறதா, தகவல்கள் திணிக்கப்பட்டு செயற்கையாக இருக்கிறதா என கவனமாக பார்க்க வேண்டும். மிகவும் சுவாரசியமான பணி இது.

உதாரணத்துக்கு, ரகசியம் நாடகத்தில், ஒரு குடும்பத்தில் நடைபெறும் புருஷன் பெண்டாட்டியின் பிரச்சனையையே கையாள தீர்மானித்தேன். சரி  சொல்லும் குடும்பமும் சுவாரசியமாய் இருக்கட்டுமே என ஒரு அறிமுக காட்சி எழுதினேன்.

கதையில் சொல்லப்படும் குடும்பத்தை நேயர்களுக்கு பிடிக்க வேண்டும், இல்லையெனில் கதையில் பேசப்படும் பிரச்சனை உணர்வு பூர்வமாக உரைக்காது… அதனால் நேயர்கள் தன்னை தொடர்பு படுத்தி இந்த குடும்பத்துடன் இணைய வேண்டும் என சுவாரசியமாக அமைத்த அந்த காட்சி, இரு குழந்தைகள் டிவி ரிமோட்டுக்கு சண்டை செய்வது போல், தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் குறித்து பேசுவது போல், காட்சி அமைத்து எழுதி எடுத்து சென்றேன். கடைசியில் தூரப் போட வேண்டியதாயிற்று. 

ஆம், ஆல் இந்தியா ரேடியோ இயக்குனர் என்னிடம் ‘ சீன் நல்லா இருக்கு, ஆனா சார், குழந்தை நட்சத்திரங்கள் நம் நிலையத்தில் இப்போது இல்லை, எனவே அந்த கதா பாத்திரங்களை தவிர்க்க முடியுமா என்றார்….

‘அதற்கென்ன சார், செய்தால் போயிற்று என காட்சியை மாற்றியமைத்தேன். பிள்ளைகளை……. பாவம்….. டியூஷனுக்கு அனுப்பி விட்டு, கணவன் மனைவியை கல்யாண அனிவர்சரி கொண்டாடும் படி காட்சியை மாற்றி அமைத்து எழுதினேன்…. கணவன் மனைவியின் அன்னியோன்யத்தையும் அன்பையும் கொண்டு, கேட்கும் நேயர்களுக்கு…. பிடிக்கும் விதமாக மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று.

வானொலி நாடகங்கள் ஒரு வித்தியாசமான தளம். அதன் நிறை குறை அறிந்து உணர்ந்து ரசித்தால் அது தரும் இன்பம் அலாதியானது.

வானொலி நாடகங்கள் இன்று குறைந்து போயின. அதற்க்கான நேயர் வட்டமும் சுருங்கியதாகவே இருப்பது துரதிருஷ்டம்.

ஆடியோ பாட் காஸ்டிங் என மேலை நாட்டில் பிரபலமான இந்த வடிவம் இன்னும் தமிழ் கூறும் நல்லுலகில் மவுசு குறைந்தே உள்ளது. பட்டிமன்றங்கள் என ஒரு சில தோன்றி ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், பின்னர் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் அவைகளும் கூட இன்று ஒலி ஒளி வடிவத்திலேயே சுணங்கி விட்டது.

எது எப்படியோ…. என்னை வளர்த்த இந்த கலை வடிவம் எப்போதுமே எனக்கு பிடிக்கும். வரும் காலத்தில் ஒலி வடிவ இந்த கலை வடிவம் இன்னும் மேன்மை பெறட்டும் என ஆசிக்கிறேன்.

தலை கால் புரியவில்லை (இதை கவிதை என சொல்லலாமோ !!!)

ஒரு மரண ஊர்வலம்
நின்று
வழி விட்டது….

நெத்தியில் விளக்கு பரிதவிக்க
அலறி நெருங்கும்
ஆம்புலன்ஸூக்காக….

கிடைத்த கேப்பில்
சர்ரென
புகுந்து புயலாய்
சென்றது
டூ வீலர்…..

(வாசிக்கும் போது உள்ள நிகழ்வு கோர்வை…………. ஒரு விதம்....
கீழேயிருந்து மேலே படித்தால் இன்னொரு அர்த்தம்…. அதுதானோ வாழ்க்கை)


இந்த சிந்தனைக்கு தலைப்பு வைக்க எண்ணி, இரண்டை யோசித்தேன்… சர்வைவல் (அல்லது) பிரையாரிட்டி…………. பின்னர்……. ஆங்கிலத்தை அன்னியமாக்கி என் நிலையையே தலைப்பாக்கினேன்… 

மர்மச் சாவும் - மனிதனின் பீதியும்

(இட்லி வடை இணைய தளத்தில் பதிவிட்டது)

 தம்பா விமான நிலையம் ஒரு மர்மத்துக்கு வித்திட்டது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் தம்பா விமான நிலையம்  முந்தைய நாள் வரை அமைதியாக இருந்தது, கலகலப்பாக இருந்தது…. ஆனால் அன்று அதே விமான நிலையத்தை கலவரமும், பயமும் மழை மேகம் போல சூழ்ந்து கொண்டது.

விமான நிலைய சிப்பந்தி தான் முதலில் அதை கவனித்தார்.

தூரத்தில் இருந்து பார்த்த போது, பிரதான ஓடுதளத்தில் குப்பைகள் சில இருந்தன. தொலை நோக்கு கருவியின் உதவியோடு, அருகில் பார்த்த போது கொஞ்சம் விபரிதமாக பட்டது. அவைகள் பறவைகள். ஒன்றல்ல இரண்டல்ல சில நூறு பறவைகள். அதுவும் கொத்து கொத்தாய் செத்து இருந்தன. 

மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. தன் மேலதிகாரிக்கு இதை தெரிவித்து விட்டாலும் கூட, இன்னும் அந்த சிப்பந்தி அதை குறித்து யோசித்து கொண்டுதான் இருந்தான். இது குறித்து அஞ்சினான்.

இந்த செய்தி கேட்டு, அந்த ஏர்போர்ட் பரபரப்பானது. இந்த மர்ம சாவு குறித்து பல வித ஊகங்கள், பல சிந்தனைகள் என்றாலும் எதுவும் ஒரு ஆணித்தரமான காரணத்துக்கு இட்டு செல்லவில்லை. பல திசைகளில் இதன் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன. அனைவரும் இது குறித்து கவலையானார்கள். இந்த மர்ம சாவு, தொடர்கதையாக நீண்டது. அது அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியது.

சம்பவம் நடந்து இருவாரங்களான பின் முதல் முறையாக, இன்று அதன் காரணம் பௌதியல் ரீதியாக விளக்கப்பட்டது.

பூமியின் வட துருவம் தன் நிலையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து விட்டது.

பூமியின் பரப்பில் உள்ள மின் காந்த தன்மையை நிச்சயிப்பது இந்த இரு துருவங்களில் இருக்கும் காந்த சக்தியே. 

துருவங்களின் இடம் சற்றே நகர்வதால், இரு துருவங்களில் இருக்கும் எதிர் எதிர் காந்த சக்தி மாற்றம் அடைகிறது. அதன் விளைவாக சில மாறுதல்கள் பூமியில் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. காந்த மின் அலை மாற்றம்,  ஸோலார் விண்ட் எனப்படும் சக்தியிலும் மாறுதல் கொண்டு வருகிறது. இச்சக்தி பூமியில் உள்ள பல அடிப்படைகளுக்கு அஸ்திவாரம்.

ஏன் பிரபஞ்சத்தில் உள்ள சில விஷ வாயுக்களை பூமியின் பரப்பில் வர விடாமல் தடுக்கும் ஒரு தடுப்பு சுவராக கூட இந்த சக்தி செயல்படுகிறது.

சமீபத்தில் வட துருவத்தில் ஏற்பட்ட சிறு இட மாறுதலே இந்த குழப்பங்களுக்கு காரணம். அப்படியென்றால், துருவங்கள் இப்படியெல்லாம் மாறுமா, பொதுக்குழு செயற்குழு கூட்டாமல் தாந்தோன்றியாய் பூமி முடிவெடுக்குமா என யோசிப்பவருக்கு… இல்லையாம் ஒவ்வொரு 1000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படி இடம் மாறுவது இயல்பாம். 1000 வருசத்துக்கு ஒருதடவை இப்படி ஆக்ஸில் அசைஞ்சு கொடுக்கிறது பைலாவில இருக்காம்… என்ன இப்படி மாறும் போது, சில விஷ வாயு கசிவு இருக்குமாம்,…

இப்போதைக்கு தம்பா விமான நிலையத்தின் பிரதான ஓடுதளத்தை மட்டும் ஒரு வாரம் மூடிவிட்டு, மாறிய வட துருவத்தை அனுசரித்து சில மார்க்கிங்கை மாற்றி வண்ணம் தீட்டி, நிலைமையை சரி செய்து விட்டார்கள். இதனால் பயணிகளுக்கோ, விமானத்துக்கோ எந்த ஆபத்தும் இல்லை எனவும் உத்திரவாதம் தந்துவிட்டதால், நாமும் பெருமூச்செறிந்து வரும் வாரத்திற்கு சினிமா டிக்கெட் கிடைக்குமா என நெட்டில் துளாவலாம்…. ஃபேஸ் புக்கில் லைக் போடலாம்.

அறிவியல் காட்டிய சில விளக்கங்கள் கேட்டு நம் மனம் ஆறுதல் அடைகிறது. சரி என சாதாரணமானாலும், ஒரு விசயத்தில் நாம் உஷாராக இருப்பது அவசியம். எது, உலகம் குறித்தா… காந்த சக்தி குறித்தா…. அல்ல அல்ல….. உலகம் முடிகிறது எனவே மனந்திரும்புங்கள் என பெந்தே கோஸ்தே வாதிகளும்,சில யோகா குருமார்களும் சாமியார்களும், நம்மிடையே இதுபற்றி சொல்லி கிலி உண்டாக்கி தத்தம் கல்லா நிரப்பலாம்.


கனிவான கவனத்திற்கு – (சிறுகதை)

பொம்பள பிள்ளையா இருக்க, அதான் அனுமதிச்சேன்…. உக்காரு..... இப்படி உக்காரு.... அவசரம்ன்னா…. டிக்கட் எடுக்க கூட நேரம் இல்லியா… அட… உக்காரும்மா….

ரயில் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. s4 கோச்சின் உள்ளே, நரைத்திருந்தாலும் டை அடித்த தலையுடன், பொக்கை வாயில் ஒட்டிய பல்லுடன் ஒரு டி.டி.ஈ. அந்த இளம் பெண்ணை பார்த்து சொன்னார். கொஞ்சம் ஜொள்ளிய படி, பேசிக் கொண்டிருந்தார். அவள் … இளம் பெண் என வர்ணிக்கப்பட்டவள், சங்கோஜமாய் அதே பெர்த்தில் அமர்ந்தாள். அழகாக இருந்தாள், தலைமுடி காற்றில் பறக்க தன் வளை கரம் கொண்டு அதை அடக்கி கொண்டே இருந்தாள்.

அருகிலிருந்த பெர்த்திலிருந்து ஆத்மாவும் அவன் இளம் பெண்ணும்  இதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

படிக்கிறீயாம்மா…
ம்…
என்ன படிக்கிற…
சட்டென பேசுவதை நிறுத்தி விட்டு, குரலை உயர்த்தி, நாக்கை துறுத்தி...
யேய்….. போயிக்கிட்டே இரு… என்ன ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்டுல யாவாரம் பண்றீயா…. ஹாங்….
டிடிஈ அவருடைய பதவியின் பலம் காட்டி மிரட்ட, கண் பார்வை இல்லாத குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள் விற்று கொண்டிருந்த ஆள், அவசரம் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அவனது விலகல் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்....வெற்றி புன்னைகையுடன் டிடிஈ திரும்பி அந்த பெண்ணை பார்த்து கொண்டே….


ம்… சொல்லு என்ன படிக்கிற….
காலேஜ்ல அங்கிள்…
பயணச்சீட்டை எழுதிக் கொண்டே, மேலும் தொடர்ந்தார்….


ம்… என்ன பேரு
தீப்தி
வயசு என்ன…
21
இந்தா மைசூர் பாக்கு சாப்பிடு….

அவள் வேண்டாம் என கையால் சொன்னாள்…

ஆத்மா, இந்த பேச்சிலும் டிடிஈயின் நடவடிக்கையிலும் ஒரு அத்துமீறல் இருப்பதை உணர்ந்தான். அந்த பெண்ணின் தயக்கத்திலும், வயசாச்சு எனும் அடையாளம் தந்த சௌகரியத்திலும் ஆண் அத்துமீறுவதும் தெரிந்தது.

இதுவே வேறு மாதிரியாக இருந்தால் சும்மா இருக்கலாம். அதாவது ஆணோ பெண்ணோ இருவருமே மனம் உவந்து பேசிக் கொண்டிருந்தால், கண்டும் காணாதது மாதிரி இருக்கலாம்... ஆனால் இப்போது அப்படி இல்லையே...


சரி, இப்போது என்ன செய்வது. …. இதை வெறுமனே பார்த்து கொண்டு இருக்க கூடாதே... என்ன செய்வது..... இங்கு நடப்பதை நிறுத்த வேண்டும், அந்த பெண்ணை காக்க வேண்டும், அதே நேரத்தில் இந்த சூழ் நிலையின் அமைதியும் கெடாமல் பார்க்க வேண்டும்... 


இங்கு நடப்பது... ஒரு விரும்பத் தகாதது... ஒரு வன்முறை… ஒரு குற்றம்…. ஆண் / அல்லது அதிகாரம் அரங்கேற்றும் அடக்கு முறை…

ஐம்பது வயசானாலும் இப்படி அலையச் சொல்லும் ஆணின் தேவைகளை குறைசொல்வதா… அவன் தேவைகள் துரத்தும் பரிதாபத்தை நினைப்பதா... அல்லது தன்னை பாதுகாக்க பெண் படும் அவஸ்தையை நினைத்து வருந்துவதா…. என ஆத்மா ஒரு நிமிடம் குழம்பினான்.

பெண்ணை சீண்டி பார்க்கவும் அல்லது சீட்டி அடிக்கவும் ஏன் ஆண் துணிகிறான். எப்போதும் பெண்ணை ஒரு இணை அல்லது துணை என நினைக்கும் மன நிலைக்கு ஏன் இப்படி அடிக்கடி வருகிறான். வயசு வித்தியாசம் உரைக்கவில்லையோ...


சரி, இது நடக்காமல் இருக்க என்ன வேண்உம்...… அவளை தன் பெண் என பார்க்கும் பக்குவம் வேண்டும். பெண்ணை பார்க்கும் விதத்தில் தான் இப்படி மாறுபாடு நடக்கிறது. ஐம்பது வயசு ஆண், அன்னையை பார்ப்பது போல், தான் பெற்ற பிள்ளையை பார்ப்பது போல் ஒரு 20 வயசு பெண்ணை ஏன் பார்க்க முடியாமல் தவிக்கிறான். இப்படி யோசிக்கிறான். ஏன் இப்படி இருக்கிறான்.

ம்…. மெட்ராஸ்ல எங்க போறம்மா….


பயணச் சீட்டை கொடுத்து கொண்டே, அந்த கேள்வி கேட்க, ஆத்மா கொஞ்சம் கோபம் கொண்டான். அந்த பெண்ணோ, அமைதியாக….
ஹாங்… அத தெரிந்து என்ன பண்ணப் போறீங்க அங்கிள் என பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள்….

ஆத்மா சந்தோசமானான். மனசுக்குள் எம்.ஜி.ஆர். வந்தார். பெண்ணுக்கு இங்கனம் அநீதி நடக்கும் போது, அத்துமீறுபவனை அடித்து நொருக்கும் வாத்தியார் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எந்த நிலையிலும் பெண்ணை மதிக்கும் எம்.ஜி.யாரின் திரை பிம்பங்கள் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ஹூம்.. சரி அத்துமீறல் முடிந்து விட்டது. ஆனால் குற்றம் செய்தவன் சும்மா இருக்கலாமா... இன்றும் இப்படி ஒரு அநீதி நடக்கும் போது நாம் சும்மா விடுவதா…. ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்.

சரி எப்படி தொடங்கலாம் தாக்குதலை என யோசிக்கும் போது…. சந்தர்ப்பம் அதுவாகவே வாய்த்தது… ஆத்மாவின் பெண்ணை நோக்கி மைசூர் பாக்கை நீட்டினார் டிடிஈ….

வேண்டாம் என மகள் மறுக்க, டிடிஈ… விடுவதாக இல்லை....


சாப்பிடும்மா… நல்லா இனிப்பா இருக்கும்….

தெரியாதவங்க கொடுத்தா வாங்க கூடாதுன்னு டாடி சொல்லியிருக்காங்க….

ஹா…ஹா…. அதிர்ந்து…. கொஞ்சம் அதிகப்படியான சத்தத்தில் ஆத்மா சிரித்தான். ஊ...ஊ... என அதிர அதிர சிரித்தான். டிடிஈ… கொஞ்சம் அவமானப் பட்டார். 


அந்த அதிரடி பதிலால் என்ன செய்வது என தெரியாமல் முழித்தார்… அவரது தன்மானம் காயப்பட்டது… மற்றொரு சந்தர்ப்பமாக இருந்தால் ஆத்மா உள் நுழைந்து அவரை சமனப்படுத்தியிருப்பான்… ஆனால் இன்றோ அடித்து நொறுக்க வேண்டிய தருணம்… ஆத்மா அவன் பங்குங்கு… ஓங்கி கை நீட்டி இன்னும் வலுவாக அடித்தான்…..


விட்டுறும்மா….. தாத்தாவ தொந்தரவு செய்யாதம்மா…. தாத்தாவுக்கு நிறைய வேலையிருக்கும்…

தாத்தா எனும் வார்த்தை பிரயோகத்தில் அவர் இன்னும் அதிகமாய் காயம்பட்டார். அவரது முகச் சோர்வு வெளிப்பட்டது. ஆத்மா குஷியானான்.

சட்டையை பிடித்து நாலு அப்பு அப்புவதை விட மனசை காயப்படுத்துவது இன்னும் வன்முறை அல்லவா.. அவரது வயசும் நிலையும் இடித்துரைக்கப்பட, டிடிஈ தலை குனிந்தார். அவரது மன ஓட்டம் ஆத்மாவுக்கு புரிந்தது….

குட்… நல்லது… இனியாவது இப்படி இவன் செயல் படாமல் இருக்க வேண்டும்… இன்னொரு சந்தர்ப்பத்தில் இப்படி முயற்சி செய்யும் போது… அல்லது செயல் படும் போது இடித்துரைக்காதா என்ன…. ம்… நிச்சயம் செய்யும்….

டிடிஈ, தன் காகிதங்களை எடுத்து கொண்டு… தன் ரிப்போர்ட் எழுத துவங்கினார்….

சூழ் நிலையின் ஆழம் புரியாத மகளோ….. கேள்வி கேட்டாள்…

தாத்தா என்ன செய்யுறார்….
ம்.. தாத்தா ஹோம் ஓர்க் எழுதுறாரு … கரெக்ட்டா ஹோம் ஓர்க் எழுதலேண்ணா அவங்க சார்…. தாத்தாவ அடிப்பாரு…. இப்படி நம்மளோட பேசினாலோ, அல்லது செய்ய வேண்டிய வேலைய செய்யலேண்ணாலோ…. தாத்தாவுக்கு அடி கிடைக்கும்…..

டிடிஈ வார்த்தைளின்றி அமைதியாக இருந்தார். அவரது மௌனம்…. ஆத்மாவுக்கு பிடித்தது… வண்டி ஒரு ஊரின் ஸ்டேஷனை நெருங்கிய போது… ஒலிபெருக்கியில் ஒரு குரல் ஒலித்தது…..

பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

ஆத்மா….. அந்த அறிவிப்பில் ஒலித்த குரலில் ஈர்க்கப்பட்டான்… அந்த குரலில் அந்த நிகழ்வில் தன்னை நுழைத்தான்…. அவனது மனதில் இருந்த வரிகளை அந்த ஒலிபெருக்கி பெண் வாசித்தாள்….

பயணிகளின் கனிவான கவனத்திற்கு… வண்டி எண்…. 40 அல்லது 50 வயசு….. வண்டியின் பெயர் சபலக் கேஸ்கள்…. ஐம்பது வயசிலும் ஆட்டம் போட நினைக்கும் சில ரிட்டையர்டு…. ரிஜெக்டட்டு கேசுகள்… சம்சாரம் எனும் மனைவியிடம் மட்டுமே காதல் செய்து…. மற்றவர்களை எல்லாம்…. அன்னைகள், தன் பெண்கள் எனும் உண்மை உணர்ந்து மனித நேயம் கற்றுக் கொள்ளும் எனவும்… இந்த மாறுதல் இன்னும் சில நிமிடங்களில் வந்து சேரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது….

ஆத்மா வாய்விட்டு சிரித்தான்… அந்த சிரிப்பில் அர்த்தம் மிளிர்ந்தது…..


மின் வண்டி சிறிய குலுக்கல்களுடன் ஓட ஆரம்பித்தது. இன்னொரு கண் காணாத வியாபாரி, பாஸ் கவர் விற்று கொண்டு அவர்களை கடந்தான். டிடிஈ அமைதியாக தன் காகிதத்தில் மூழ்கி இருந்தார்…..

திருவக்கரை - ஊமை மரத்தின்... ரகசியம்!!!

அன்று வார இறுதி, ஓய்வு நாள். ஆத்மா படுக்கையில் நெளிந்தான், அபி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள்.

எந்திரிக்கிற மாதிரி உத்தேசம் இருக்கா, இல்ல…. மட்டையா….
அபி, வீக்கெண்டுல கொஞ்சம் வீங்கி கிடக்கலாம்ல.. அதுசரி, நீ திட்டுறீயா, இல்ல புலம்புறீயா….
ஆங்…. ரெண்டும் இல்ல…. இப்படி அற்புதமா கிடைச்ச மனுச வாழ்க்கைய… அற்ப்பமா… தூங்கி தூங்கியே பொழுத கழிக்கிறீயேன்னு ஆத்தாமை….. வேறென்ன…
நான் என்ன கல்லாலமரமா….கோடி வருசம் வாழறதுக்கு…..
அபி, அந்த வார்த்தை பிரயோகத்தில் சுவாரசியமானாள்…
என்னது… என்ன சொன்ன…
ஹாங்…. கோடி வருசம் வாழ முடியாதுன்னு சொன்னேன்…
அதில்ல… என்னவோ கல்லான்னியே….
ஓ… அதுவா… அது தெரியாதா உனக்கு…. நீ மெட்ராஸ் கேர்ள்தான… அப்புறம் ஏன் கல்லால மரம் பத்தி ஏங்கிட்ட கேக்குற… சரி சொல்றேன் கேளு…..


உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு
அது ஆச்சி, கோடி வருசங்களுக்கு மேல…
ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது…. அதுவும் சென்னைக்கு பக்கத்துல ஒரு 100 கிலோ மீட்டர் தொலைவில..
அப்படியா..


ம்… பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட தெரியாம ஒரு கிராமத்துக்குள்ள இன்னும் இருக்குது… இத்தனைக்கும் இந்த மரங்கள நீ பார்க்கலாம், ஃபோட்டா எடுத்துக்கலாம்…. ஏன் தொட்டுக் கூட பாக்கலாம்…
ம்… வெரி இண்ட்ரஸ்ட்டிங்… மரம் மனுசன மாதிரி மக்கி போகாதில்ல…
ம்.. மக்கி போகாதுன்னு சொல்ல முடியாது… ஏன் பெட்ரோல் அப்படி மக்கினதுதான… அண்டர் கிரவுண்டுல ஆக்சிஜன் கிடைக்காம பிட்டிரைஃபைட்டு ஆனா இந்த கல்லாலமரம் …………. அதாவது மரம்………. இப்ப கல் ஆயிருச்சு…
வாட்… கல்லாச்சா…


யெஸ்… மரம் ஒரு ஆர்க்கானிக் காம்பணெண்ட் இல்லியா… அதனோட தன்மைகள் சுத்தமா போயி, இப்ப சில்லிக்கான் செல்களா இருக்குது…..
ஆத்மா… என் செல்லமே… ஆர்வத்தை தூண்டி விட்டாய்… 100 கிமி தானே சொல்கிறாய்… போவோமா… நம் பைக்கில் சென்றால் அற்புதமாக இருக்கும்…
ம்… 100 ன்னேன்… ஸ்பஷ்ட்டமா சொன்னா ஒரு 100 -130 கிமி… இருக்குமே..
பைக்கில நானும் பின்னால உக்காரும் போது, 30 கூடினா என்ன…. வாயேன் வேணுன்னா, திரும்பி வந்ததும்…. உன் கால் பிடிச்சு தர்றேன்….
20ம் நூற்றாண்டின் புதுமைப்பெண்ணே… வா யூகங்களை தாண்டி சென்ற மரங்களை தரிசிப்போம்… கம்மான் கெட் ரெடி…


போர்வையை உதறி, ஆத்மா சுருசுருப்பானான்.


மணி 8 இருக்கும் போது, அவர்களின் இருசக்கர வாகனம் வண்டலூரை தொட்டது. சோம்பேறித்தனமான சென்னை சாலைகள் இன்னும் விடியாத புண்ணியத்தில் டிராபிக் பிரச்சனை இல்லாமல் வண்டி வேகமாய் நகர்ந்தது. திருச்சி நோக்கி செல்லும் சாலையில், மேல்மருவத்தூர் தாண்டி, மதுராந்தகம் கடந்து, பாண்டிச்சேரி சாலையில் பயணித்து, இதோ திருவக்கரை எனும் ஊரை இலக்கிட்டு காற்றாய் நகர்ந்தது.
திருவக்கரை இதுதான் இந்த கல்லால மரம் இருக்கும் இடத்து ஊரின் பெயர். வக்கர காளியம்மன் எனும் கோவில் அலங்கரிக்கும் ஊர் கூட இதுதான்.


ஆகம விதிப்படி அமைக்கப்படாத ஒரு கோவில் உண்டு என்றால் ….. கோவில்ன்னா இப்படி இருக்கணும் என்ற விதிக்கு …. சொன்னதற்கு நேர் மாறாக கோவில் அமைக்கப்பட்டது இங்காகத்தான் இருக்க வேண்டும்.
மூலவர் என சொல்லப்படும் கோவிலின் சாமி சிலைக்கு எதிரில் நந்தி அமைப்பது ஒரு ஆகம விதி. ஆனால்………. இங்குள்ள கோவிலில் நந்தி திரும்பி கொண்டிருக்கும். எல்லா கோவில்களிலும் இடம் வலமாய் சுற்றி வந்தால் இங்கு மாறி சுற்ற வேண்டி வரும்.


ஆதிச்ச சோழனால் கட்டப்பட்டு, மாணிக்க வாசகரால் பாடப்பட்ட இத்தலம், இன்றும் மக்களின் பெருங்கூட்டத்தால் அம்மாவாசை பௌர்ணமிக்கு திணறுகிறது. சில கிரகங்களின் வக்கிர பார்வைக்கு இந்த கோவில் வந்து எலிமிச்சை மாலை சாத்தினால் பரிகாரம் உண்டு என நம்பப் படுகிறது. மிக பிரசித்தியான தலம்.இக்கோவிலின் உள்ளே, குண்டலினி சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் இருக்கிறது, அந்த இடத்தில் தியானம் செய்ய அமர்ந்தால் மனம் ஒருமைப்படுவதை வியக்காமல் இருக்க முடியாது… எப்படி எப்படி.. இப்படி என மனம் மிரள வைக்கும் ஒரு அதிர்வை எளிதில் உணரலாம்… பிரணவ மந்திர மூம்மூர்த்திகளும் ஒரே சிவலிங்கத்தில் இருப்பது உலகிலேயே இங்குதான்.
ம்… இந்த கோவில் ஏன் இப்படி இருக்கிறது….. சொல்வதற்கு ஆதாரமில்லை என்றாலும்… இக்கோவில் நாட்டார் வழிபாடு செய்யப்பட்டு பின்னர் சிவ வழிபாடு… அரக்கனை அழித்தது… என அரசியலாகி மாற்றப்பட்டது……… என உள்ளுணர்வு சொல்லும்….


கல்லால மரம் இந்த ஊரில் இருப்பதும்…. இவ்வூரின் கோவில் வக்கிர சித்தரிப்புக்கும் ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும். ஒரு ஆழ்ந்த தொடர்பும் இருக்க வேண்டும். அதில் இருக்கும் ஒரு ரகசிய தொடர்ப்பில் ஏதோ ஒரு சுவாரசியம் இருக்க வேண்டும்… என்றாலும் ஆழமான ஆராய்ச்சி செய்யும் யாராவது செய்ய வேண்டிய பணி இது….


சமீபத்திய சாலை மேம்பாட்டினால் வழுக்கி கொண்டு ஓடும் சாலைகள் இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் இருப்பது பெரிய ஆறுதல். ஆத்மாவும் அபியும் அலுங்காமல் குலுங்காமல் அந்த இடம் வந்து சேர்ந்தார்கள். ஊரின் ட்டோப்போகிராபி கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. சம தளம் அற்று, அங்குமிங்குமாய் உயர்வு தாழ்வு இருக்கும் ஓர் மண் தளம். கொஞ்சம் பாறைகள், கொஞ்சம் குன்றுகள் என்றாலும் வளப்பமான மரங்களும் நம்மை வரவேற்க்கும்.


சுற்றி வேலி அமைக்கப்பட்டு, அந்த பூங்கா அழகுடனும் அமைதியாகவும் இருந்தது. அதனுள் தான் அந்த கல்லாலமரம் இருக்கிறது.


அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு, பொது மக்களுக்காக திறந்து விடப்பட்ட சிறு நிலப்பரப்பு ரகசியங்களை தரிசிக்க சொல்லி நம்மை வரவேற்க்கும்.
நுழைந்த உடனேயே சிவப்பு வண்ணத்தில் மரம் கண்ணுக்கு படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல…. நிறைய நிறைய மரத் துணுக்குகள்…. அதில் ஒரு நீண்ட கல்லால மரம் இருக்கிறது. அதன் நீளம் சுமார் 50 அடி….
‘இந்த மரத்தோட வயசு 3,000 கோடி வருசமா….


அபி அந்த மரத்தை வருடினாள். மயிர்க்கால்கள் குத்திட்டன. ஏய்… மரமே உன் வயது கோடிகளிலா… கொஞ்சம் பேசேன்.. நீ பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. நீ எப்படி வாழ்ந்தாய்… நீ வாழ்ந்த காலத்தில் பூமி எப்படி இருந்தது.


உன் காலத்தில் எல்லாம் இங்கு சமுத்திரமாமே… அப்படியா… ஐஸ் ஏஜ் என சொல்கிறார்களே அப்படி என்றால் எப்படி…. நீ வாழ்ந்த காலத்தில் மனிதனே இல்லையாமே…. டைனோசர் எனும் ராட்சத விலங்குகள் தானாமே அப்படியா… புராணங்கள் சொல்வதை கேட்டு, இங்குள்ள வாயிற் காப்போன் சொல்கிறார்… ‘அந்த காலத்தில இங்கு வாழ்ந்தவர் பூரா அரக்கர்கள் என்று….’ அப்படியா….


யார் யார் இங்கு வசித்தார்கள். உனக்கு தெரியும் உண்மையை உரக்க சொல்லேன்…


ஆத்மா அந்த அமைதியை கலைத்தான்…


கல்லாகி போன இந்த மரங்கள் இங்குள்ளவை அல்ல…. அதன் வேர்களோ, இலைகளோ அல்லது, அதன் ஒடிந்த கிளைகளோ இங்கு இல்லை… இவையெல்லாம் எங்கிருந்தோ இங்கு வந்து கொட்டப்பட்டிருக்கிறது… எப்போது… எந்த காலத்தில்………….


பதில் சொல்லாது அபியை பார்த்தான்.


ம்… 2 கோடி வருசங்களுங்கு முன்னால்… இப்படி 2 கோடி வருசங்களுக்கு இங்கு வந்து கொட்டியவர்கள் யார்… மனிதனா…. அரக்கனா…. அல்லது டைனோசரா….
ஹா….ஹா…


18ம் நூற்றாண்டில் ஒரு ஐரோப்பியர் கண்டுபிடித்து இப்படி கல்லாகி போன ஒரு மரத்தின் துண்டுகள் இங்கே கொட்டி கிடப்பது பற்றி கண்டுபிடித்து எழுத…. ஆராய்ச்சி குழு இங்கே வந்து 100 வருசமாக ஆராய்ச்சி செய்ததில் நாம் கண்டுபிடித்தது இவ்வளவே…
1.   இந்த கல் மரத்தின் தன்மையில் ஆர்கானிக் இல்லை இல்லவே இல்லை… முழுக்க முழுக்க சிலிக்கான் தன்மைகளே உள்ளன.
2.   இந்த கல் மரத்தின் ஆயூள் 3000 கோடி வருசம்
3.   இந்த கல் மரம் இந்த பகுதியை சேர்ந்தது அல்ல, எங்கோ இருந்ததை யாரோ கொண்டு கொட்டி வைத்திருன்ந்தார்கள்…
4.   கொண்டு கொட்டிய வருசம்…. 2 கோடி வருசங்கள்
5.   யார் கொண்டு வந்து கொட்டியது………. ஏன் இங்கு வந்து கொட்டி வைத்தார்கள்… என்ன செய்வதாக உத்தேசம்…. ம்…ஹூம்.. தெரியவில்லை… அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை
6.   10 வருடங்களுக்கு முன்னால் இங்கு வந்து ஐரோப்பாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பத்தடி தோண்டி, மணல்களை சேகரித்து சென்றிருக்கிறது. சேகரித்த மண் தங்கம் போல மின்னியதாகவும் … ஆராய்ச்சியின் தகவல் பற்றி ஏதும் தெரியவில்லை எனவும் தகவல்கள்.கேள்விகள் ஓராயிரம் உண்டு, விடைகள் சொல்லத்தான் யாருமில்லை…. வெறும் 2000 வருசத்து சரித்திரமே தரிகிணத்த்தோம்… போட்டு… தெளிவாகத் தெரியாமல் விழிக்கின்ற சிறு புல் நாம்… நம் முன்னோர்களை பற்றியோ, இந்த பூமியை பற்றியோ எதுவும் அறியாத சிறு பாலகர்கள் நாம்…


எல்லாம் எமக்கு தெரியும்… என இறுமாப்பு கொள்ளும் நம் இன்றைய ஈகோவை பார்த்து பல் இளிக்கவாவது இந்த திருவக்கரைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளலாம்…


அமைதியாக ஆத்மாவையும் அபியையும் சுமந்து கொண்டு சாலையில் விரைந்தது பைக். திருச்சி சென்னை சாலையில் திரும்பியதும் ஆத்மா சொன்னான்…


ம்… இவ்வளவு ஆர்வமா…. பூமியின் வரலாறை தெரிந்து கொள்ள இத்தனை ஆவலா…. அப்படியென்றால் நீ அங்கு நிச்சயம் செல்ல வேண்டும்……..
இன்று வேண்டாம், அடுத்த முறை அங்கு செல்லலாம். திருச்சிக்கு அருகில் பெரம்பலூர் பக்கத்தில்…. அங்கு சென்றால் அதிர்ச்சி ஆகி விடுவாய்…


அபி திரும்பி அவனை பார்த்தாள்….


என்ன இருக்கிறது அங்கே….


ம்… முட்டை ….. டைனோசர் முட்டை….


என்ன கதை விடுகிறாய்… ஜூராசிக் பார்க் சினிமாவில் விட்டு புளுகு மூட்டை எனவல்லவா அந்த முட்டையை பற்றி நினைத்தேன்…


ஆத்மா பலத்த சிரிப்புடன் சொன்னான்…. ஹா…ஹா… இல்லை, ஆயிரக்கணக்கில் டைனோசர் முட்டைகள் இருக்கும் திருச்சிக்கு அருகில் அடுத்த முறை செல்வோம்… அதுவரை… 

குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….

கல்லூரியில்……. பெண்ணுக்கு சீட் கிடைக்குமா என விசாரித்து விட்டு சீனுவாசன் தன் காரில் நகரத்துக்கு திரும்ப துவங்கினார். ஊரின் வெளியே ஒய்யாரமாய் அமைந்திருந்த ஒரு கல்லூரியின் கேம்பஸ் அது…. கிளம்பிய காரில், டேப் சுழல ஆரம்பித்தது. பாடல் காரை நிறைத்தது.

என்னவோ ஏதோ….
எண்ணம் திரளுது கனவில்
எனும் பாடல் உயர்தர ஸ்டிரீயோவில் ஒலிக்க….. அவர் மனம் ஒரு வரியில் ஸ்தம்பித்தது…
ஓ…  ஒ….
குவியமில்லா….
குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….
ஓ… ஓ….
உருவமில்லா…..
உருவமில்லா ஒரு நாளை…

ஹப்பா… என்ன ஒரு வார்த்தை கோர்வை இது…. என்ன வலிமையான சொற்கள்… என்ன நுணுக்கமான நுண்ணியமான ஒரு வார்த்தை….
Unfocussed Visual Illusion….. Shapeless Tommorrow…………….

குவியம்… எப்போதோ பள்ளியில் பிசிக்கிஸில் படித்தது… குவியம் இல்லா …. எனும் இரு வார்த்தைகள் இணைந்து …. குவியமில்லா என கேட்கும் போது இனிக்கிறதே…

Unfocussed Visual Illusion … அதிலும் அந்த காட்சிப் பேடை….
ஆஹா… இப்படி ஒரு மொழிபெயர்ப்பை இது வரை கேட்டதில்லையே சமீபத்தில் உணர்வு இங்கனம் உணர்ந்ததில்லையே….

என்ன ஒரு ஆழமான சொற்பதம்… அற்புதமான மொழியின் வீச்சு என சிந்தனை ஓடிக் கொண்டிருந்த போது அவர்களை கவனித்தார். கல்லூரி இளைஞர்கள். பயணப் பொதிகளுடன் சாலை ஓரத்தில் வரப்போகும் பேருந்துக்காக காத்திருந்தனர். காரை மெல்லமாக்கி, அவர்கள் அருகில்வர, சன்னலை திறந்து…

சிட்டிக்குத்தான்னா, வாங்க ஏறிக்கோங்க…. டிராப் பண்றேன்…. என்றார்.
அவர்கள் மகிழ்ச்சியாய் ஏறி அமரும் அந்த தருணத்தில், இக்கல்லூரியை குறித்தும்…. படிப்பு வசதிகள் என அனைத்தும் குறித்து அத்தனையும் விசாரிக்கலாமே என மனம் குறிப்பு கொடுக்க கை நீட்டி, டேப் ரிக்கார்டரை அணைத்து விட்டு… பேச துவங்கினார்…

அவர்கள் பேசிய ஆரம்ப பேச்சுக்கள் சீனுவாசனுக்கும் அவர் பெண்ணுக்கு மட்டுமே உபயோகமானதால், நமக்கு தேவையானது வரும் வரைக்கும்……….. பாஸ்ட் ஃபார்வேர்ட்டு செய்து கேட்போமா…..

ஆமா தம்பி அடுத்ததா என்ன படிக்க போறீங்க…
பி.ஹை.டி… பண்ணனும் சார், டாக்ட்டரேட் வாங்கணும், ஆனா இப்பவே செய்யணுமா என்ன செய்யணும்ன்னு குழப்பமா இருந்துச்சு… ம்… யோசிச்சுக்கிட்டு இருக்கேன்….

சீனுவாசன் தலை திருப்பி அவர்களை பார்த்தார்…. முனைவராகும் முயற்ச்சியில் உள்ள இளம் குருத்தை பார்த்த போது மனம் மகிழ்ச்சியானது… இன்றைய தலைமுறையின் சிந்தனையும் வேகமும் பார்த்த போது, மனம் அடுத்த தலைமுறை குறித்த ஆக்கபூர்வம் பற்றி சிந்தித்து…. பெருமிதப்பட்டது….

நல்லது தம்பி…. நல்ல விசயம் தான செஞ்சுருங்க… எனக்கு எப்பவும் ஏதாவது குழப்பம் இருந்துச்சுன்னா இந்த 5 வொய்… எனும் அணுகுமுறை கொண்டு முயற்ச்சிப்பேன்…. அப்ப தெளிவாயிடும்…

அதென்ன சார், 5 வொய்…
பழைய முறைதான் தம்பி, எளிமையானது தான். வொய்… வொய்ன்னு…. 5 தடவை … நொய்… நொய்..ன்னு கேள்வி கேக்குறது…. மெல்லிய சிரிப்பு காரில் பரவ அனைவரும் இலகுவாகினர்.
இப்ப உங்க விசயத்தையே கேப்போமே….

வொய்… நீங்க டாக்ட்டரேட் பண்ணனும்…. பதில் சொல்லுங்க….
ம்….. எல்லாரையும் விட நான் பெரிசாகணும்… அங்கீகாரம் வேணும்… ஈசியா வேலை கிடைக்கும்….

ஓ… ஒக்கே… வொய்… நீங்க எல்லாரையும் விட பெரிசாகணும்…. இது ரெண்டாவது வொய்....


ஆமா... நீங்க ஏன் பெரிசாகணும்.... ஏன் சின்னவங்களா இருந்தா என்ன குறைஞ்சு போச்சு…. ஏன் ஒரு கருணாநிதி அல்லது ஜெயலலிதாவ விட நாம செயல் குறைவும் சிந்தனை குறைவும் ஆளுமைக் குறைவும் உள்ளவங்கத்தான… அதனால நாம என்ன குறைஞ்சு போயிட்டோம்…. பொறந்த எல்லாருமே தலைவராக முடியுமா…. ஏன் நம்ம அடுத்தவங்கள விட பெரிசா ஆகியே ஆகணும்….

சீனுவாசனின் இந்த கேள்வியால் அமைதி அங்கே அலற ஆரம்பித்தது… அவரே அதை கலைத்தார்.

ம்… இந்த முனைவராகும் முயற்ச்சியில்… நான் என்னை உணர வேண்டும்…. சில கருத்துக்கள் பற்றிய தெளிவு வேண்டும்….. ஒரு ஆய்வு வேணும்… ஒரு ஆழ்ந்தறிதல் வேணும்…. இந்த மனித குலத்துக்கு என்னால் ஏதும் அறிவு சார்ந்த எண்ணத்தை விட முடியணும்மான்னு……….  நீங்க சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்குமே… இல்லியா தம்பி….

உங்களுக்கு பிடிச்ச கார் எது…..
ம்.. டயோட்டா…. கரோலா….
ஓ…  நல்ல கார் அது…. ஆமா அது ஏன் பிடிக்கும்…. வொய்...!!!

ம்… தம்பி லேசாக விழித்தான்….
டயோட்டா பிடிக்கதுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்…. ஆனா அது உங்களோட உள்ளுக்குள்ள இருந்து வரணும்… வந்தா நீங்க புத்திசாலி….

அடுத்த வீட்டுக்காரரு…. உங்களுக்கு பிடிச்ச ஒரு மனுசரு… இவங்கல்லாம் ஒட்டுறதால மட்டும் டயோட்டா பிடிச்சா தப்பு…. இப்படி… அடுத்தவங்கள் பார்த்து வராம… உங்க உள்ளுக்குள்ள இருந்து வர்றத பாருங்களேன்…

ஓரு கார் வாங்கணும், சரி என்னென்ன கார் இருக்குது..எல்லா கார்களோட தன்மைகளும் என்ன என்ன..… கார்ன்னா என்ன…. அதை அலசி ஆராய ஒரு பத்து விசயங்கள்…. இன்ஜின்… அதனோட செயல்திறன்… மைலேஜ்… உக்காரக் கூடிய இருக்கைகள், வண்டியோட கம்பர்ட், ஆப்டர் சேல்ஸ் சர்வீஸ்… இப்படி, பல தளங்களில் யோசிச்சு, அப்புறமா உங்களுக்கு இதுதான் பிடிக்கும்ன்னு சொன்னா நல்லது.

ஒரு வேளை, இது மாதிரி ஆராய்ஞ்சு, உங்களுக்கு பிடிச்ச கார் என்னவா வேணும்னா இருக்கலாம்… ம்… அது ரோல்ஸ் ராயாக் கூட இருக்கலாம் …… தப்பே இல்லை… உங்களுக்கு தோணனும்… எனக்கு இதுதான் வேணும்ன்னு …. அப்படி தோண்றது தான் ஆழமான சிந்தனை, ஆணித்தரமான லட்சியம்…


ம்… இது மாதிரியான சிந்தனைகள் தான் தன் இலக்கை அடைஞ்சே தீரும்….. இல்லாம அடுத்தவனுக்காக யோசிக்கிறது வெறுமனே நம்ம நேரத்தத்தான் வீணாக்கும் இல்லியா தம்பி…

கார் இப்போது முழுக்க அமைதியானது… சீனுவாசன் மனதிற்குள் சிந்தித்தார்… கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ…. பாவம் சின்ன பசங்கதான…. இன்னும் பட்டு தெளிய காலமிருக்கே…,.ம்…

தம்பி… ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுருங்க…. மனசுக்கு தோணுச்சு பேசிட்டேன்...., மனசுல வைச்சிக்காதீங்க…

கார் அவர்களை இறக்கிவிடும் இடத்தை நெருக்க… தம்பி அவசரமாய் மறுத்தான்.

ஐய்யய்யோ…. இல்ல சார், நீங்க சொன்னது நல்லா இருந்துச்சு… யோசிக்க வைச்சிது.. இன்னும் நிறைய விசயம் உங்ககிட்ட பேசணும்… டெலிஃபோன் நம்பர் தருவீங்களா…

சீனுவாசன் நெகிழ்ந்தார்…. கண் லேசாய் கண்ணீரை நிரப்பியது… மனம் விம்மி தளர்ந்தது… எண்ணை கொடுத்து விட்டு அவர்களை இறக்கி விட்டு, காரை செலுத்தினார். மனம் கனிந்தது. சந்தோசம் வந்தது. உற்சாகம் கொடுத்த ஊக்கத்தில்…. பாடல் கேட்போமே என டேப்பை ஒலிக்க விட்டார்…. விட்ட இடத்திலிருந்து பாடல் ஒலித்தது... 


ஆனால் அது இப்போது உருவாக்கிய அர்த்தத்தை... நிகழ்ச்சி தொடர்பில் சீனுவாசன் அதிர்ந்தார்.... இசை அதையறிமால் ஒலித்தது.... ஸ்பீக்கர் அதன் இயல்பாய் அதிர்ந்தது...

ஓ…  ஒ….
குவியமில்லா….
குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….
ஓ… ஓ….
உருவமில்லா…..
உருவமில்லா ஒரு நாளை…  
ஓ….ஓ….
அரைமனதாய்
விடிகிறது என் காலை….. !!!!