பக்கங்கள்

கனிவான கவனத்திற்கு – (சிறுகதை)

பொம்பள பிள்ளையா இருக்க, அதான் அனுமதிச்சேன்…. உக்காரு..... இப்படி உக்காரு.... அவசரம்ன்னா…. டிக்கட் எடுக்க கூட நேரம் இல்லியா… அட… உக்காரும்மா….

ரயில் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. s4 கோச்சின் உள்ளே, நரைத்திருந்தாலும் டை அடித்த தலையுடன், பொக்கை வாயில் ஒட்டிய பல்லுடன் ஒரு டி.டி.ஈ. அந்த இளம் பெண்ணை பார்த்து சொன்னார். கொஞ்சம் ஜொள்ளிய படி, பேசிக் கொண்டிருந்தார். அவள் … இளம் பெண் என வர்ணிக்கப்பட்டவள், சங்கோஜமாய் அதே பெர்த்தில் அமர்ந்தாள். அழகாக இருந்தாள், தலைமுடி காற்றில் பறக்க தன் வளை கரம் கொண்டு அதை அடக்கி கொண்டே இருந்தாள்.

அருகிலிருந்த பெர்த்திலிருந்து ஆத்மாவும் அவன் இளம் பெண்ணும்  இதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

படிக்கிறீயாம்மா…
ம்…
என்ன படிக்கிற…
சட்டென பேசுவதை நிறுத்தி விட்டு, குரலை உயர்த்தி, நாக்கை துறுத்தி...
யேய்….. போயிக்கிட்டே இரு… என்ன ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்டுல யாவாரம் பண்றீயா…. ஹாங்….
டிடிஈ அவருடைய பதவியின் பலம் காட்டி மிரட்ட, கண் பார்வை இல்லாத குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள் விற்று கொண்டிருந்த ஆள், அவசரம் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அவனது விலகல் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்....வெற்றி புன்னைகையுடன் டிடிஈ திரும்பி அந்த பெண்ணை பார்த்து கொண்டே….


ம்… சொல்லு என்ன படிக்கிற….
காலேஜ்ல அங்கிள்…
பயணச்சீட்டை எழுதிக் கொண்டே, மேலும் தொடர்ந்தார்….


ம்… என்ன பேரு
தீப்தி
வயசு என்ன…
21
இந்தா மைசூர் பாக்கு சாப்பிடு….

அவள் வேண்டாம் என கையால் சொன்னாள்…

ஆத்மா, இந்த பேச்சிலும் டிடிஈயின் நடவடிக்கையிலும் ஒரு அத்துமீறல் இருப்பதை உணர்ந்தான். அந்த பெண்ணின் தயக்கத்திலும், வயசாச்சு எனும் அடையாளம் தந்த சௌகரியத்திலும் ஆண் அத்துமீறுவதும் தெரிந்தது.

இதுவே வேறு மாதிரியாக இருந்தால் சும்மா இருக்கலாம். அதாவது ஆணோ பெண்ணோ இருவருமே மனம் உவந்து பேசிக் கொண்டிருந்தால், கண்டும் காணாதது மாதிரி இருக்கலாம்... ஆனால் இப்போது அப்படி இல்லையே...


சரி, இப்போது என்ன செய்வது. …. இதை வெறுமனே பார்த்து கொண்டு இருக்க கூடாதே... என்ன செய்வது..... இங்கு நடப்பதை நிறுத்த வேண்டும், அந்த பெண்ணை காக்க வேண்டும், அதே நேரத்தில் இந்த சூழ் நிலையின் அமைதியும் கெடாமல் பார்க்க வேண்டும்... 


இங்கு நடப்பது... ஒரு விரும்பத் தகாதது... ஒரு வன்முறை… ஒரு குற்றம்…. ஆண் / அல்லது அதிகாரம் அரங்கேற்றும் அடக்கு முறை…

ஐம்பது வயசானாலும் இப்படி அலையச் சொல்லும் ஆணின் தேவைகளை குறைசொல்வதா… அவன் தேவைகள் துரத்தும் பரிதாபத்தை நினைப்பதா... அல்லது தன்னை பாதுகாக்க பெண் படும் அவஸ்தையை நினைத்து வருந்துவதா…. என ஆத்மா ஒரு நிமிடம் குழம்பினான்.

பெண்ணை சீண்டி பார்க்கவும் அல்லது சீட்டி அடிக்கவும் ஏன் ஆண் துணிகிறான். எப்போதும் பெண்ணை ஒரு இணை அல்லது துணை என நினைக்கும் மன நிலைக்கு ஏன் இப்படி அடிக்கடி வருகிறான். வயசு வித்தியாசம் உரைக்கவில்லையோ...


சரி, இது நடக்காமல் இருக்க என்ன வேண்உம்...… அவளை தன் பெண் என பார்க்கும் பக்குவம் வேண்டும். பெண்ணை பார்க்கும் விதத்தில் தான் இப்படி மாறுபாடு நடக்கிறது. ஐம்பது வயசு ஆண், அன்னையை பார்ப்பது போல், தான் பெற்ற பிள்ளையை பார்ப்பது போல் ஒரு 20 வயசு பெண்ணை ஏன் பார்க்க முடியாமல் தவிக்கிறான். இப்படி யோசிக்கிறான். ஏன் இப்படி இருக்கிறான்.

ம்…. மெட்ராஸ்ல எங்க போறம்மா….


பயணச் சீட்டை கொடுத்து கொண்டே, அந்த கேள்வி கேட்க, ஆத்மா கொஞ்சம் கோபம் கொண்டான். அந்த பெண்ணோ, அமைதியாக….
ஹாங்… அத தெரிந்து என்ன பண்ணப் போறீங்க அங்கிள் என பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள்….

ஆத்மா சந்தோசமானான். மனசுக்குள் எம்.ஜி.ஆர். வந்தார். பெண்ணுக்கு இங்கனம் அநீதி நடக்கும் போது, அத்துமீறுபவனை அடித்து நொருக்கும் வாத்தியார் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எந்த நிலையிலும் பெண்ணை மதிக்கும் எம்.ஜி.யாரின் திரை பிம்பங்கள் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ஹூம்.. சரி அத்துமீறல் முடிந்து விட்டது. ஆனால் குற்றம் செய்தவன் சும்மா இருக்கலாமா... இன்றும் இப்படி ஒரு அநீதி நடக்கும் போது நாம் சும்மா விடுவதா…. ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்.

சரி எப்படி தொடங்கலாம் தாக்குதலை என யோசிக்கும் போது…. சந்தர்ப்பம் அதுவாகவே வாய்த்தது… ஆத்மாவின் பெண்ணை நோக்கி மைசூர் பாக்கை நீட்டினார் டிடிஈ….

வேண்டாம் என மகள் மறுக்க, டிடிஈ… விடுவதாக இல்லை....


சாப்பிடும்மா… நல்லா இனிப்பா இருக்கும்….

தெரியாதவங்க கொடுத்தா வாங்க கூடாதுன்னு டாடி சொல்லியிருக்காங்க….

ஹா…ஹா…. அதிர்ந்து…. கொஞ்சம் அதிகப்படியான சத்தத்தில் ஆத்மா சிரித்தான். ஊ...ஊ... என அதிர அதிர சிரித்தான். டிடிஈ… கொஞ்சம் அவமானப் பட்டார். 


அந்த அதிரடி பதிலால் என்ன செய்வது என தெரியாமல் முழித்தார்… அவரது தன்மானம் காயப்பட்டது… மற்றொரு சந்தர்ப்பமாக இருந்தால் ஆத்மா உள் நுழைந்து அவரை சமனப்படுத்தியிருப்பான்… ஆனால் இன்றோ அடித்து நொறுக்க வேண்டிய தருணம்… ஆத்மா அவன் பங்குங்கு… ஓங்கி கை நீட்டி இன்னும் வலுவாக அடித்தான்…..


விட்டுறும்மா….. தாத்தாவ தொந்தரவு செய்யாதம்மா…. தாத்தாவுக்கு நிறைய வேலையிருக்கும்…

தாத்தா எனும் வார்த்தை பிரயோகத்தில் அவர் இன்னும் அதிகமாய் காயம்பட்டார். அவரது முகச் சோர்வு வெளிப்பட்டது. ஆத்மா குஷியானான்.

சட்டையை பிடித்து நாலு அப்பு அப்புவதை விட மனசை காயப்படுத்துவது இன்னும் வன்முறை அல்லவா.. அவரது வயசும் நிலையும் இடித்துரைக்கப்பட, டிடிஈ தலை குனிந்தார். அவரது மன ஓட்டம் ஆத்மாவுக்கு புரிந்தது….

குட்… நல்லது… இனியாவது இப்படி இவன் செயல் படாமல் இருக்க வேண்டும்… இன்னொரு சந்தர்ப்பத்தில் இப்படி முயற்சி செய்யும் போது… அல்லது செயல் படும் போது இடித்துரைக்காதா என்ன…. ம்… நிச்சயம் செய்யும்….

டிடிஈ, தன் காகிதங்களை எடுத்து கொண்டு… தன் ரிப்போர்ட் எழுத துவங்கினார்….

சூழ் நிலையின் ஆழம் புரியாத மகளோ….. கேள்வி கேட்டாள்…

தாத்தா என்ன செய்யுறார்….
ம்.. தாத்தா ஹோம் ஓர்க் எழுதுறாரு … கரெக்ட்டா ஹோம் ஓர்க் எழுதலேண்ணா அவங்க சார்…. தாத்தாவ அடிப்பாரு…. இப்படி நம்மளோட பேசினாலோ, அல்லது செய்ய வேண்டிய வேலைய செய்யலேண்ணாலோ…. தாத்தாவுக்கு அடி கிடைக்கும்…..

டிடிஈ வார்த்தைளின்றி அமைதியாக இருந்தார். அவரது மௌனம்…. ஆத்மாவுக்கு பிடித்தது… வண்டி ஒரு ஊரின் ஸ்டேஷனை நெருங்கிய போது… ஒலிபெருக்கியில் ஒரு குரல் ஒலித்தது…..

பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

ஆத்மா….. அந்த அறிவிப்பில் ஒலித்த குரலில் ஈர்க்கப்பட்டான்… அந்த குரலில் அந்த நிகழ்வில் தன்னை நுழைத்தான்…. அவனது மனதில் இருந்த வரிகளை அந்த ஒலிபெருக்கி பெண் வாசித்தாள்….

பயணிகளின் கனிவான கவனத்திற்கு… வண்டி எண்…. 40 அல்லது 50 வயசு….. வண்டியின் பெயர் சபலக் கேஸ்கள்…. ஐம்பது வயசிலும் ஆட்டம் போட நினைக்கும் சில ரிட்டையர்டு…. ரிஜெக்டட்டு கேசுகள்… சம்சாரம் எனும் மனைவியிடம் மட்டுமே காதல் செய்து…. மற்றவர்களை எல்லாம்…. அன்னைகள், தன் பெண்கள் எனும் உண்மை உணர்ந்து மனித நேயம் கற்றுக் கொள்ளும் எனவும்… இந்த மாறுதல் இன்னும் சில நிமிடங்களில் வந்து சேரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது….

ஆத்மா வாய்விட்டு சிரித்தான்… அந்த சிரிப்பில் அர்த்தம் மிளிர்ந்தது…..


மின் வண்டி சிறிய குலுக்கல்களுடன் ஓட ஆரம்பித்தது. இன்னொரு கண் காணாத வியாபாரி, பாஸ் கவர் விற்று கொண்டு அவர்களை கடந்தான். டிடிஈ அமைதியாக தன் காகிதத்தில் மூழ்கி இருந்தார்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக