பக்கங்கள்

உங்கள் உள்ளங்கையில் குட்டிச் சாத்தான் !!!

ஆச்சி : ….. கருப்பு மைய உள்ளங்கையில தேச்சு, குட்டிச் சாத்தான கொண்டு வர்றதா. ரொம்ப டேஞ்சரான டெக்னிக்காச்சேடா படுக்காளி.

(பக…பக… வென படுக்காளி சிரிக்க, அவனை முறைத்தவாறு ஆச்சி தொடர்ந்தார்) அதுக்கு ஏண்டா, அஞ்சு ஹார்ஸ் பவர் மோட்டார முழுங்கின மாதிரி சிரிக்கிற.

படுக்காளி : இல்ல ஆச்சி, தலைப்ப மட்டும் பார்த்துட்டு தப்பு தப்பா செஞ்ச தாமோதரன் சார் கதை ஞாபகத்துக்கு வந்திச்சி அதான் சிரிச்சேன்.

ஆச்சி : 'சேலை என்ன விலைன்னாளாம் சிங்கப்பூர்க்காரி, அவளுக்கு காஞ்சிவரத்துக்கு டிக்கெட் கொடுத்தானாம் கோவிந்த சாமிங்கிற' மாதிரி. அவல நினைச்சுக்கிட்டு உரல இடிக்கிறேடா. முதல்ல அந்த தலைப்ப மட்டும் பார்த்துட்டு தப்பு தப்பா செஞ்ச தாமோதரன் சார் கதைய சொல்லு கேப்போம்.

படுக்காளி : மதுரை தமுக்கம் பக்கத்துல கமுக்கமா ஒரு பள்ளிக் கூடம், அதுல தாமோதரன் சார்ன்னு ஒரு கணக்கு வாத்தியார். நம்மள்ல நிறைய பேரு நியூஸ் பேப்பர்ல வெறுமனே ஹெட்லைன்ஸ் மட்டும் வாசிச்சுட்டு உள்ள வாசிக்காம போயிறுவோம்ல, அது மாதிரி டெய்லி நீயூஸ் வாசிச்சுட்டு வாசிச்சுட்டு போயிருவாராம் அந்த சார்ரு.

ஒரு நாள் என்ன ஆச்சு, ஏதோ ஒரு நீயூஸ் வாசிச்சுட்டு, கிளாஸ்க்கு போயி டெஸ்ட் போட்டுட்டு எல்லோருக்கும் முட்டை மார்க் போட்டாராம். யாருக்கும் ஒண்ணும் புரியல, ஹெட்மாஸ்டர் அவர்கிட்ட போயி, ஏன் சார் இப்படின்னு கேட்டாராம். அதுக்கு அவரு,

"சார் உங்களுக்கு விசயமே தெரியாதா, நம்ம தமிழக முதல்வர் சொல்லியிருக்காரு, இதுவரைக்கும் இலவசமா டிவி கொடுத்தோம், விவசாய நிலம் கொடுத்தோம். ஆனா இன்னியில இருந்து வாரத்துக்கு அஞ்சு நாளும் பள்ளிகளிலே முட்டை போடுவோம்ன்னு….. கவர்மெண்ட் சொன்னா கேக்கணும்ல சார்ன்னாராம்"

ஆடிப்போன ஹெட்மாஸ்டர், அப்புறமாத்தான் சொன்னாராம் அது முட்டை மார்க் இல்லை சார், சத்துணவுல போடுற, கோழி முட்டைன்னு.

ஆச்சி : கதை நல்லாத்தான் இருக்கு, இது என்ன உன் சொந்த சரக்கு மாதிரி இருக்கு. ம்….. என்னத்தடா செய்யுறது, குட்டிச் சாத்தான், உள்ளங்கைன்னவுடன நமக்கு மனசுல கருப்பு மையும் வெத்தலையுந்தான தோணுது,

படுக்காளி : 1984ல ஒரு சினிமா வந்துச்சே, ‘மை டியர் குட்டிச் சாத்தான் - 3டி’

ஆச்சி : அடேயப்பா, அட்டகாசமான சினிமாடா. அதத்தான் நீ சொல்ல வந்தியா. நம்ம சேர தேசத்து அப்பச்சன், அவர் பாட்டிக்கிட்ட கேட்ட மாயாவி, சாத்தான் அப்படிங்கிற மாயாஜால கதைய சினிமாவா எடுத்தாரு. சூப்பர்…. அந்த நெருப்பு அம்பு நம்ம மேலயே வர்றா மாதிரி இருக்குமே…ஐஸ் கிரிம் நம்ம கண்ணு முன்னால ஒழுகுமே… பிரமாதம். எப்படிறா செய்யுறாங்க இத.

படுக்காளி : அது பல்பிரிச் எபக்ட்ட்ன்னு ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. இன்னொரு வகையில சொல்லணும்னா, நம்ம கண்ணோட ஒரு வகை கோளாறு. இடது கண்ணுல டார்க்கா (கருப்பா) ஒரு கண்ணாடியும் வலது கண்ணுல கொஞ்சம் கம்மியுமா கருப்பு போட்டுட்டா, ஏதோ ரெண்டு மூணு லேயர்ல இருக்கிறா மாதிரி நமக்கு தெரியும்.

ரெண்டு காமிராவ ஒரே நேரத்துல வைச்சு, படம் எடுத்துட்டு, அப்புறமா லேப்ல வந்து ரெண்டு முதல் 8 லேயர் வர்றா மாதிரி பிராசஸ் பண்ணிட்டா, நமக்கு இந்த 3டி எபக்ட் கிடைச்சுறும். ஆனா இந்த டெக்னாலஜி ரொம்ப காஸ்ட்லி. ஏன் நம்ம எந்திரன் படத்துக்கு கூட முடியுமான்னு பார்த்துட்டு அப்புறமா செலவ நினைச்சு உட்டுட்டாங்களாம்.

ஆச்சி : சரி இப்ப உள்ளங்கையிலங்கிறியே அதுக்கென்ன அர்த்தம்.

படுக்காளி : முதன் முதலா, 3டி ஹேண்டி கேம் நம்ம பானோசோனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்காங்க. அட்டகாசமா இருக்குது. நம்ம GITEX எக்ஸிபிஷன்ல அத நேரில பார்த்து, அப்படியே அசந்து போயிட்டேன் ஆச்சி. போதாக்குறைக்கு இதுல HD குவாலிட்டி

வேற. அப்படியே அச்சு குண்டா அசத்தலா இருக்குது. விலையும் பரவாயில்ல, 1400$ அவ்வளவுதான். வளர்ந்து வர்ற தொழில் நுட்பம் ஆச்சரியமா இருக்குது.

ஆச்சி : அடப் போடா… 3டி நல்லா இருந்தாலும் ஒரு கண்ணாடிய போட்டுகிட்டு பார்க்கிறதுக்கு அத்தனை சுளுவா இல்லடா. நம்ம செல்லாத்தா பாட்டி சொல்லுச்சு, கலங்கின கண்ணாடி தொட்டி வழியா பாக்கிற மாதிரியே இருக்குதுன்னு….

படுக்காளி : அதுக்கும் நியூஸ் இருக்குது ஆச்சி, தோஷிபா கம்பெனி கண்ணாடி இல்லாமலேயே 3டி டிவிய சின்ன ஸ்கிரின்ல வெற்றிகரமா செஞ்சுறுச்சு. பெரிய சைசுக்கும், விலை குறைக்கிறதுக்கும் தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. வந்துரும் ஆச்சி, இன்னொரு வருசத்துல அதுவும் வந்துரும்.

ஆச்சி : Full HD, 65” LED ஸ்கிரின்னு ஏற்கனவே பட்டைய கிளப்பிட்டாங்க. இப்ப 3டியும் வந்திருச்சுன்னா, தியேட்டர் போய் யாரு படம் பார்ப்பாங்கடா.

படுக்காளி : மாற்றம் ஒன்று தானே மாறாதது ஆச்சி.