பக்கங்கள்

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி....

‘கோணக்கால்’ - பகுதி 2

காந்தி மெல்ல நடந்து வந்து, சாப்ளின் அருகில் இருந்த தரையில் அமர்ந்து கொண்டார்.

சாப்ளின் தலை நிமிர்ந்து, காந்தியை பார்த்தார். அவரது தோற்றம் பற்றியும் கொள்கை பற்றியும் நிறைய கேட்டிருந்ததால் அதிர்ச்சி இல்லை. ஒற்றை, துணியில் அதுவும் வெள்ளை துணியில் தன்னை போர்த்திய மனிதன் இயல்பாய், தரையில் அமர்ந்து இருக்கும் தன்மை அவருக்கு புதுசு. இதுவரை பழகாதது.
என்றாலும் காந்தியின் அந்த பார்வையும், மனதை ஊடுருவும் கண்களும், உள்ளுக்குள் யோசிக்கும் ஆழமும் சாப்ளினை அசைத்தது. 

சாப்ளின் தொடங்கினார், என்னை தேடி கண்டு கொள்வதில் கடினம் இருந்ததோ…..

மெல்லிய குரலில் காந்தியும்… ஆம்…. இல்லை….. என பதிலுரைத்து விட்டு கைகள் மடக்கி வாயை பொத்தி கொண்டார். உங்கள் திரைப்படங்கள் பார்த்ததில்லை, புகைப்படம் பார்த்தேன், மூக்குக்கு கீழே, மண்டிய குட்டி மீசையும், யூ வடிவ தொப்பியும்… பின்னர் கோணக்காலும்…. ஆனால் நிஜத்தில் ….

நான் ஒரு மனிதன்…. சட்டென சொன்னார் சாப்ளின். நிஜத்தில் நான் ஒரு சராசரியானவன், சாமான்யன், நிலையிலும், நினைப்பிலும் ஏன்….. உயரத்திலும். பாருங்களேன்… என்னை மிலிட்டரியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.  பட்டாளத்தில் சேர நான் தயாரானாலும் என் உடல் என்னை டிஸ்குவாலிபை செய்து விடுகிறது. என் உயரம் 5 அடி 5 அங்குலமே… இந்த நாட்டை பொறுத்த மட்டில் நான் குள்ளமானவன். சராசரி என் நாட்டு பிரஜைகளின் கணக்கில் நான் பலவீனன்…… இது எப்படி இருக்கிறது… என்றாலும் நிஜத்தில்… வாழ்வில் போர் புரிந்து கொண்டுதான் இருக்கிறேன்….. துப்பாக்கி இல்லாமல்…

சற்று இடைவெளி விட்டு… உங்களைப்போல…..

மௌனம் சிறிது நேரம் அங்கு நிலைத்தது. நீங்களோ, லெனினோ போரட்டம் செய்ய வேண்டும் என் துடிப்பதில்லை. மாறாக  நீங்கள் சார்ந்த சமூகமும், சூழ்நிலையும் போராட்டம் செய்ய தூண்டுகிறது… என்னைப் போல…..

வெந்ததை திங்கலாம், விதி வந்தால் சாகலாம் என வெட்டி கதை பேசும் சாமான்ய வாழ்க்கை நமக்கு விதிக்கப்படவில்லை…

சரி, என்ன போராட்டம், எதற்காக போராடுகிறீர்கள்… காந்தி அறிந்து கொள்ளும் ஆவல் குரலில் குழைந்து இருக்க கேட்டார்.

வேதனைகளும் வலியும் நிறைந்த இந்த உலகை நான் வெல்லுவேன்…. என் துன்பத்துக்கப்பால், நான் ஆசைப்படுகிற….. சிரிப்பையும் கும்மாளத்தையும் என் பார்வையாளருக்கு பரிசளிப்பேன்… அந்த முயற்ச்சியிலேயே… என்னை இனம் கொள்வேன்.. இதுவே என் இலக்கு….

காந்தி திகைத்தார், இவ்வளவு எளிமையாய் தெளிவாய் வாழும் சாப்ளினின் வாழ்வு அவருக்கு ஆச்சரியம் தந்தது…. மிக நேர்த்தியாய் பேசுகிறீர்கள்….

அப்படியா…. மிக்க நன்றி. நான் அதிகம் பேசுவதில்லை… பேச்சை குறை, செயலை பெருக்கு என்பதை ஆதரிக்கிறேன்…. ஏன் என் படங்களை பாருங்களேன்… என் படங்கள் உணர்வுகளை பேசும்… வசனம் பேசாது. என்னை என் திரைப்படங்கள் அடையாளம் காட்டும், ஏனெனில் என் படத்துக்கான எண்ணமும் வடிவமும் என்னால் உருவாக்கப்படுவதே.

ஆம். ஆச்சரியம்… இன்றைய திரை உலகம் ஒரு குழுவாய் இயங்கும் போது, நீங்கள் மட்டும் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்கிறீர்களாமே…. அதனாலேயே நிறைய நேரமும் பண விரயமும் செய்வதாய் சொல்கிறார்கள்…. திரை ஆக்கம், இயக்கம், நடிப்பு என்பது மட்டுமல்லாமல்….. உங்கள் ஆடை வடிவமைத்தது நீங்களாமே… உங்களுக்கென ஒரு அடையாளம் தர, கால் விரிந்த பேண்டும், இறுகிய சட்டையும், தொப்பியும் பின் ஒரு கைத்தடியும்.

ஆம், உணர்வுகள் வெளிப்பட ஒரு உடல், உடல் மொழி வேண்டும், அந்த உடல் உணர்வுகளை உந்திச் செல்லும் உக்திக்கென நானே வடிவமைத்து கொண்ட வடிவம் இது ….

ஆம்… சார்லி… ஒத்துக் கொள்கிறேன்… கைத்தடி நல்ல ஒரு துணை. இப்போது எனக்கு அவசியமில்லை, எனக்கு வயதாகும் போது உபயோகிப்பேன்….. சிரித்தபடி சொன்ன காந்தி முகத்தில் சிரிப்பு கரைய… மேலும் சொன்னார்….  அதை நானும் என் அடையாளமாக கொள்கிறேன்…

ஹா….ஹா….. அப்படியென்றால் ஏழ்மையும் …கைத்தடியும் நம்மை இணைக்கும் சங்கிலிகளா..

இருவரும் சிரிப்பில் கரைந்தனர்.  உங்களையும், என்னையும் இணைக்க முடியுமா என்ன… நீங்கள் வேறு.. நான் வேறு.. நம் திசைகள் வேறு… பயணம் வேறு… சாப்ளின் சொல்ல இடைமறித்து காந்தி சொன்னார்….

எனக்கு அங்கனம் தோன்றவில்லை… என் ஆன்மீக சிந்தை உங்களையும் என்னையும் வெகு அருகில் காண்கிறது… மேலும் காந்தி தொடர்ந்தார், நீங்களும் எங்கள் நாட்டில் தயாராகும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். சாப்ளின் சற்று பின்னோக்கி நகர்ந்து, எங்கே இருக்கிறது உங்கள் உடை….. உடையே இல்லையே…. பாதி உடல் தெரிகிறதே…

இப்போது இன்னும் பலமாக சிரித்தார்… பின் சிரிப்பு அடங்கி… நீங்கள் அணியாத ஆடை எதை சொல்கிறது. எளிமையையா அல்லது இயந்திர எதிர்ப்பையா… சரியாக சொல்லுங்கள்… இயந்திரத்துக்கு நீங்கள் எதிரியா.

காந்தி இந்த கேள்வியில் கொஞ்சம் யோசித்தார். நிதானமாய் சொல்ல துவங்கினார்,… இல்லை, நிச்சயமாய் இல்லை…. ஆனால் இயற்கையை காதலிக்கிறேன். நூல் நூற்பதும், பருத்தி உடைகளும் இயற்கையானவை. பாலியஸ்டர் இழைகள் இந்த சூழலை பாழாக்கும். இன்னும் போக, பிரிட்டிஷ் அரசு என்ன செய்கிறது, பளபளப்பான உருவாக்கத்தால் பாசாங்கு காட்டி, ஒரு நாட்டை அடிமை படுத்த அல்லவா முயல்கிறது., அதை எதிர்க்கிறேன்… அரசியல் காரணத்துக்காகவும் பின்னர் இயற்கைக்கு எதிரானதாலும்….

சாப்ளின் அமைதியானார். காந்தி தொடர்ந்தார்…. நீங்கள் யார், சினிமா கதா நாயகனா, இல்லை போர் வீரரா---- சாப்ளின் கையை தூக்கி தலையை வகிடில் தடவியபடி சொன்னார், உலகப் போர் என்னை சிதைத்து விட்டது. முதல் உலகப் போரின் தாக்கம் என்னை இரண்டாம் உலகப் போருக்கு ஒப்புதல் தரவில்லை.. போராட்டங்களும், போர்களும் ஒரு தீர்வு என என்னால் கொள்ள முடியவில்லை. .
இந்திய நாட்டு சூழலே…. போராட்டத்திற்குள் உங்களை தள்ளி விட்டது, இல்லையென்றால் 

உங்களின் பாரிஸ்டர் படிப்பும், கூரிய அறிவும், வாதத் திறமையும் உங்களை இன்னொரு ஊருக்கு கூட்டிச் சேர்த்து இருக்குமல்லவா.  நீங்கள் மட்டும் இல்லை, லெனின் பற்றியும் நான் இவ்விதமே கருதுகிறேன். உங்களை இப்படி ஒரு நிலைக்கு கொணர்ந்தது சூழலே…
குடும்பச் சூழலும் வயிற்றுப் பசிக்காக பொழைப்பு தேடவும் எனக்கும் ஒரு இக்கட்டு வந்ததல்லவா. அது போல…

காந்தி கேட்டார், வாழ்வு ஏன் நமக்கென ஒரு வகிடு எடுக்கிறது. ஒரு பரிபூரண சமுதாயம் உருவாகிட வழி உண்டா….  சாப்ளின்…!!!! அப்படி யென்றால் வாழ்வின் கொடுமை எது. எதை எதிர்த்து நாம் போரிட வேண்டும்.

சாப்ளின் அமைதியானார்…

இருக்கலாம்… புன் முறுவல் முகத்தை அலங்கரிக்க தொடர்ந்தார்… ஒருவேளை நாம் இறைவனோ… அதனால் தான் உலகின் இன்னொரு வடிவம் உருவாக்க முயலுகிறோமோ…

காந்தி அமைதியானார்…. சாப்ளின் அந்த மௌனத்தை கலைத்து… நாம் போராடும் எதிரி, நாமே… ஏற்ற தாழ்வு இல்லாத சமதர்ம சமூகம் அமைக்க எது தடையாய் இருக்கிறதோ அதை…
அது மதமா…. பொருளாதாரமா….. அல்லது பூகோளமா… எல்லைக் கோடா… எதுவாயினும்… அதை உடைக்க வேண்டும். பசி இங்கு இல்லாத நிலை வேண்டும்.

காந்தி, அமைதியாய் இருந்த போது சாப்ளின் தொடர்ந்தார்…. சரி, நம் போராட்டம் என்னவாகும். சமமான சமுதாயம், ஏற்ற தாழ்வுகள் இல்லாத நிலை உருவாகுமா.

காந்தி இன்னும் அமைதியாகவே இருந்தார்… அவரது பார்வை சுழன்று சன்னலுக்கும் அதற்கப்பாலும் சென்றது… சன்னலுக்கு அப்பாலே…. மித மிஞ்சிய போதையில் ஒருவன் தரையில் விழுந்தான். தரையில் விழுந்தவனை பார்த்து, இன்னொருவன் சிரித்தான். ஒரு குழவாய் சில பேர் கூடி நின்று விழுந்தவனை பார்த்து சிரித்தார்கள்.

காந்தி, திரும்பி சாப்ளினை பார்த்தார்…

சிரிப்பு ஒரு வரப்பிரசாதம். சிரிக்க வைப்பது கடினம் என்றாலும் அது ஒரு கலை. சிரிப்பில் இறைவன் இருப்பதாய் எனக்கு படுகிறது என்றார்..

சாப்ளின், காந்தியின் பதிலில் இருந்த உணர்வை புரிந்தார்… பிரியும் கட்டம் வந்தது என உணர்ந்தார். தன் கையை நீட்டி…. சிரித்து… என் படங்களை பாருங்கள் என்றார்.

காந்தி விழித்து, சாப்ளினை பார்த்து விட்டு, வெளியிலும் பார்த்து விட்டு….ம்… என்ற போது, மூரியல் உள் நுழைந்தார். காந்தி அவசரமாய் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பினார்.

அவர்கள் சம்பாஷணைகள், கேள்விகள் விடை காணப்படவில்லை… முடிவுகள் எடுக்கப்படாமல், சில செயல்களின் ஒப்புதல் பெறாமல் சிந்தனை அனாதையானது…. காந்தி தன் தாய் நாட்டு சுதந்திரம் வாங்கி, அரசியல் புள்ளிகள் வரைந்த கோலத்தின், வடிவம் வரும் போது இறந்து போனார்…. கனவுகள்… சமதர்ம சமுதாயம் எனும் திட்டங்கள்… முற்றுப் பெறாமலேயே நின்றது…

 முற்றும்…
நண்பருக்கு நன்றி.

நண்பர் … செல்வா அவர்கள் ‘காந்தியும் சாப்ளினும் ஒரு முறை சந்தித்து கொண்டார்கள்… தெரியுமா’ என கேட்டார்… தெரியாது என்ற என் பதிலுரையை தொடர்ந்து, ‘இந்த நிகழ்வு வரலாற்றில் நடந்திருந்தாலும், அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதற்க்கான குறிப்பு எங்குமே இல்லை. உங்கள் கற்பனை கொண்டு யோசியுங்களேன்… ‘ என சொன்னார்.

நண்பர் சொல்மிக்க மந்திரமில்லை என சொன்னதை செய்து விட்டேன்… இந்த தகவலை பகிர்ந்து, என்னை எழுத தூண்டிய நண்பருக்கு மிக்க நன்றி…. தேங்க்ஸ் செல்வா…. 

கோணக்கால்…(சிறுகதை) பகுதி 1

(உண்மை தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனை சிறுகதை)

காந்தி தன் கையில் இருந்த டெலிகிராமை பார்த்து கொண்டிருந்தார்.  இன்னொரு கையில் சார்லி சாப்ளினின் புகைப்படம்… குனிந்த படி கொஞ்சம் குழப்பமான ஆனால்…. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சுற்றியிருந்தவர்கள் அமைதியுடன் அவர் பதிலுக்கு காத்திருக்க, தன் தலையை உயர்த்தி தெளிவான குரலில் சொன்னார்…  ‘தேவையில்லை. அவரில் பார்க்க என்ன இருக்கிறது. அவசியமில்லை’, அவரை பார்க்க நான் விரும்பவில்லை, அவர் ஒரு கூத்தாடிதானே’

மூரியல் லெஸ்டர் அப்போது தான் உள்ளே வந்தார். காந்தி சொன்னதை இவரும் கேட்டார்… ஆழமான ஒரு பார்வையோடு .. பாபு, என்ன இது… இவரை பார்க்க சம்மதம் இல்லை என யாராவது சொல்வார்களா.. திரையரங்கத்துக்கு சென்று அவரை பார்க்க வரிசை கட்டி நிற்கும் போது… ஒரு முறை பார்க்க மாட்டேனா என உலகே ஏங்கும் போது…. நீங்கள் இப்படி சொல்லலாமா…. இன்றைய தேதியில் இந்த உலகத்தின் ஹீரோ இவர்தான்.

அப்படியா…. என குழந்தையின் லாவகத்தில் சொன்னார் காந்தி. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு இன்னும் ஆழமாய் கேட்டார், அதில் இருந்த அழகு மூரியலை கவர்ந்தது.

பின்னே, சந்தேகமே இல்லாமல்… அவரை திரையில் பார்க்க அனைவரும் விரும்புகிறார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை. எத்தனை கவலைகளை கொண்டு உள்ளே சென்றாலும் நம்மை சிரிக்க வைத்து சிலிர்க்க வைத்திடுவார்.

அப்படியா மெத்த மகிழ்ச்சி…. ஆனால், என் கவலைகளை போக்கி கொள்ள, நான் திரையரங்கத்தை 
நாடுவதில்லை. திரையில் தெரியும் மாயப் பிம்பங்களை உண்மை என நம்பும் எளிய மனது எனக்கு இல்லை. ஜோடிக்கப்பட்ட புனை ஆளுமையை உண்மை என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை, அதனால் தான் இவரை ஒரு முறை கூட பார்த்ததில்லை.

மூரியல்.. காந்தியின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்தார். சரி, என்ன சொன்னால் ஏற்றுக் கொள்வார் என அவசரமாய் யோசித்து, அடக்கமான குரலில் தொடர்ந்தார். இருக்கட்டும் பாபு, உங்கள் கருத்து புரிகிறது, ஆனால் ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி, வட்ட மேசை மா நாட்டுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெஸ்ட் எண்ட் ஹோட்டலுக்கு செல்லாமல் நீங்கள் ஏன் இந்த கிங்க்ஸி ஹாலை தேர்ந்தெடுத்தீர்கள்.

ம்…. காந்திக்கு புரிந்தது. எளிய கேள்விதான், என்றாலும் அது இட்டுச் செல்லும் பாதையும் இலக்கும் புரிந்தது. மூரியல் தன்னை வாதிட்டு வெல்ல கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது புரிந்ததும். தன் பொக்கை வாய் காட்டி …. பதில் சொல்லும் முன் ஆழமாய் பார்த்து விட்டு தொடர்ந்தார். தாங்கள் என்ன நினைத்து இங்கு வந்து தங்க முடிவு செய்தீர்களோ, எப்படி வெஸ்ட் எண்ட் வேண்டாம் கிங்க்ஸியே போதும் என நினைத்தீர்களோ அதே காரணத்துக்காகத்தான்.

ம்… அப்படியானால் உங்களைப் போல் என்னைப்போல் சாப்ளினும் ஒரு ஏழைகளின் பங்காளன். தேடிச் சென்று ஏழைகளிடமே தன் சுயம் தேடுகிறார். எளிமை விரும்பி, பகட்டுக்களும் பளபளப்புக்களையும் விட்டு விலகி செல்ல விருப்பம் உள்ளவர். அவர் ஒரு நடமாடும் சோகக் கழஞ்சியம் எனவும் சொல்லலாம். உலகத்தின் அத்தனை சாத்தான்களாலும் சபிக்கப்பட்டு, தோல்வியின் கனம் புரிந்தவர், ஏழையின் பசி புரிந்தவர் அதனால்தான் அவரால் அடுத்தவரை சிரிக்க வைக்க வேண்டியதன் அவசியமும் சூட்சமமும் புரிகிறது.

திரைத்துறை சார்ந்தவரானாலும் அவர் மேன்மையானவர். பளபளப்பும் படாபடமும் விரும்பாதவர். இந்த சந்திப்பு எங்கே நிகழ்கிறது என பாருங்கள். நம் நண்பர் டாக்டர் கட்டியால் வீட்டில் சந்திக்கிறோம். டாக்டர் கட்டியால் யார், ஒரு சமூக புரட்சியாளர் அல்லவா, கம்யூனிசத்தின் ரியல் தத்துவம் அவரிடம் அல்லவா இருக்கிறது. ஒரு சமூதாயத்தையே, குடும்பமாக மாற்ற முடியுமா, அதன் அங்கத்தினர் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியுமா…. பொது உணவிடம், உறங்குமிடம், இருப்பிடம் கழிப்பிடம் எல்லாம் செய்ய முடியுமா என எண்ணும் பரந்த நோக்குடைய அவரது வீட்டில்.

மேலும்…. கூத்தாடி தானே…. திரைத்துறை தானே, கோமாளிதானே என சொல்லி அவரை தீண்டத்தகாதவராக நாம் சொல்வது முறையா… பொருளாதாரத்திலோ… அல்லது செய்யும் தொழிலிலோ ஏற்ற தாழ்வு இல்லை என சொல்லி விட்டு, கோமாளிதானே என சொல்வது எந்த வகையில் சேர்த்தி….

காந்தி, தலை உயர்த்தி மூரியலின் கண்களை ஊடுருவி பார்த்தார். அதில் ஆழ்ந்த அர்த்தம் தெரிந்தது. அந்த சம்பாஷணையின் ஆழம் புரிந்தது,. காந்தி சிரிக்க,, அங்கே மனித நேயம் மிளிர்ந்தது.

22 செப்டம்பர் 1931

குளிர் இன்னும் பனியாகவில்லை… லண்டனின் தெருக்கள் அழகு கூட்டி, அந்த காலை வேளைக்கு இனிமை சேர்த்திருந்தது. மெல்லிய குலுக்கலுடன் அந்த சொகுசு கார் சாலையில் விரைந்து கொண்டிருந்தது. காந்தி தன் மேல் போர்த்தியிருந்த துண்டை இறுக்கமாய் மூடிக் கொண்டார். மெல்லிய குலுக்கலுடன் வாகனம் நின்ற இடம் மனிதர்களின் தலைகள் நிறைந்து இருந்தது. அது மூரியலின் வீடு.

அங்கங்கே, குழு குழுவாய் மக்கள் தரையில் சாய்ந்திருந்தனர். மது அப்படி அவர்களை சாய்த்திருந்தது, அவர்கள் உடுத்திய உடையில், ஏழ்மையும் குளிருக்கு பக்குவமான கம்பளியும் இருந்தது. சவரம் செய்யாத அவர்கள் முகங்களில், மொழி கொச்சையாகவும் பச்சையாகவும் இருந்தது. காந்தி அருகிலிருந்தவரை கேட்டார்…. இவர்கள் யார்…
மூரியலின் விருந்தினர்கள்.

ஓ… இவர்களை கொண்டுதான் சமதர்ம சமுதாயம் படைக்க முயல்கிறாரா… கேட்டவர் தலை குனிந்தார். காந்தி தொடர்ந்தார். சொல்லக் கூடாதா…. குடியின் தீமை பற்றி…. அருகிலிருந்த இன்னொருவர் சொன்னார், எவ்வளவோ சொல்லியாயிற்று… இங்கு தாங்க முடியாத குளிர், மேலும் மூரியலின் அமைப்பால், எல்லாம் பொது… அதனால் செலவுகள் குறைவு. அதனாலேயே தேவைகளும் குறைவாயிற்று. சம்பாதிக்கும் தேவையும் குறைந்து போனதால், செய்ய பெரிசாய் வேலை இல்லாததால் சோம்பி இப்படி ஆகிவிட்டார்கள்.

அந்த பதில் காந்தியை யோசிக்க வைத்தது. உழைக்க வேண்டாம் என சொன்னால், தேவைகளை இலவசமாக வாரி வழங்கினால்…. சமூகம் எங்கு சென்று விடும் எனும் நிதர்சனம் அவருக்கு சுட்டது… எண்ணங்களுடேனேயே… அவர் நடந்து மூரியலின் வீட்டினுள் பிரவேசித்தார்.
மூரியல் வீட்டினுள் சார்ளி சாப்ளினை தேடி காந்தியின் கண்கள் அலைந்தன. சரோஜினி நாயுடு தான் முதலில் காந்தியின் கண்ணில் தென்பட்டார். வணக்கம் தெரிவித்து விட்டு மேலும் பார்த்த போது, நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு கணவானை கண்டார். இவர்கள் காட்டிய சார்லி சாப்ளினின் அந்த புகைப்படத்துக்கும் நேரில் இவரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே.
புகைப்படத்தில் கோமாளி, இப்போதோ கணவான் அல்லது ஜெண்டில் மேன்…

இந்த எண்ணங்களுடனேயே, காந்தி மெல்ல நடந்து வந்து, சாப்ளின் அருகில் இருந்த தரையில் அமர்ந்து கொண்டார்.

                                                       அடுத்த பகுதியில் நிறைவு பெறும் .....

படம், பட்டாசு, பட்சணம்.... என பட்டய கிளப்புவோம் !!!

தீபாவளி…. பேர சொன்னதுமே சும்மா அதிருதில்ல…. யெஸ். மனசும் உணர்வும் இணைந்து ஒரு உற்சாக அனுபவம் பெருகிறது. இந்து, சமணம், சீக்கியம் என பல பிரிவுகளாலும், தீபங்களின் திருவிழா என எல்லா இந்தியராலும் உற்சாகமாக கொண்டாடப்படும் திருவிழா.

இந்த நல்ல நாளில் நாமனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். படம், பட்டாசு, பட்சணம் என பட்டய கிளப்புவோம். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


குடும்பமாய் இணைந்திருந்து, நல் உறவு ஏற்படுத்தி, அக்கம் பக்கம் சூழ அன்பாய் இந்த விழாவை கொண்டாடுவோம். நமக்குண்டான பிரிவுகளில் இருந்து விலகி, ஒற்றுமை தழைக்க கொண்டாட்டத்தில் கலந்திடுவோம்.

இந்த தீபாவளியை மாற்றம் தரும் திரு நாளாய் கொண்டாட வேண்டுமென்றால் தொடர்ந்து சிந்திக்கலாம், இல்லையா பட்டிமன்றமும், பந்தியும் தயாராக உள்ளது, அங்கே போயி விடுவோம் என முடிவெடுக்கலாம்,

நரகாசுர வெற்றி

இதுதானே சொல்லப்படும் கதை.

பூமித் தாய்க்கு பிறந்த நரகன், தன் வலிமையால் இந்த உலகை வென்றான், உலகம் அனைத்தையும் தன் கீழ் கொணர்ந்தான். தன் பேராசையால் வானுலகையும் தேவர்களையும் கூட வெல்ல நினைத்தான். அப்போதுதான் அவனை அழிக்க வேண்டிய கட்டாயம் வந்தது.

கிருஷ்ணரும் சத்ய பாமாவும் இணைந்து நரகாசுரனை எதிர் கொண்டனர். ஆவேசமாய் நரகாசுரன் போர் புரிந்தாலும், நம்ம கிருஷ்…!!!!, அன்புடனும் அனாயசத்துடனும் போர் புரிந்தார். கிளைமாக்சாக சுதர்சன சக்ரா எனும் ஆயுதத்தில் நரகாசுரன் வீழ்த்தப்பட்டான்.

காந்தி, மகாபாரதம் படித்து விட்டு சொல்வார். இது ஏதோ கதையாகவோ, புராணமாகவோ மட்டும் பார்க்க என்னால் முடியவில்லை. 100 சகோதரர்களை 5 ஆட்கள் கொல்வார்கள் என்பதெல்லாம் இதிகாசம் அல்ல,  நம்மைப் பற்றி நமக்கு விளக்க ஏற்படுத்தப்பட்ட விளக்க சாரங்கள் (Metaphors) மட்டுமே என்பார்.

அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு மேலே கூறியுள்ள கதையை வாசித்தால், நரகாசுரன் நமக்குள் தான், கிருஷ்ணரும் நமக்குள் தான். போரும் நமக்குள் தான், வெற்றியும் தீபாவளியும் கூட நமக்குள் தான்.

நான் தான் வலியவன், என்னால் இந்த உலகை  வெல்ல முடியும்…. என நினைத்து அதில் முயன்று வெற்றியும் பெற்றான் நரகன். உலகம் அவன் வசம் ஆனது. ஆனால் இறைவனையே வெல்ல முடியும் என நினைத்தான்…. வெற்றி பெற முடியாமல் அவன் தோற்றுப்போனான்….

உலகை வெல்லும் நம் அனைவரின் பயணத்திலும் இந்த அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நரகனாகி நாமும் நரகனாக வாழ வேண்டியிருக்கலாம்.

நரகனின் தொடக்கம் உலகை வெல்லும் வலுவில் ஒரு பயணம், ஒரு மூர்க்கமான பயணம்… உலகை வென்றதும், கைக்கு கீழே உலகம் வந்ததும், அதன் பின் வேறு ஒரு தேடல் தொடங்கும். இறை தேடலும் அதையும் வெல்லுவேன் என முயலுவதும் அடுத்த படி… இறைத்தேடல் தொடங்குவது இயல்பு என்றாலும். அந்த தேடலிலும் பலம் சேர்க்கவும், பரிமளிக்கவும் முயல்வது அன்றி, இறையின் இயல்பை பின்னுக்கு தள்ளிவிட்டு மனிதர்களை விட நான் மேலானவன் எனக் காட்ட சில பளபளப்புக்களையே விரும்புவோம்…  

அந்த பலத்தில் மயங்காதும், வெற்றி பெற வேண்டும் என எண்ணாமலும் எளிமையை ஏற்றுக் கொண்டு பணிவுடன் இருக்க வேண்டிய அவசியம் நமக்கு நரகாசுரன் கதை வழியாக சொல்லப்படுகிறது.

இன்று சில நிமிடங்கள் இது குறித்து யோசிக்கலாம். சில எளிய செயல் திட்டம் தீட்டலாம். ஒரு மாற்றம் தரும்…., முடிவில்லா மகிழ்வு தரும்….. ஒரு சில போர்கள் செய்யலாம்.
1.   
  1. உலகையே ஆழ்வேன் என சொல்லும் நரகனை நமக்குள் தேடுவோம்.
  2. 2.   உலகை வென்ற பின், வானுலகை கூட விட்டுவைக்க மாட்டேன் என எகிறும் நரகனையும் நமக்குள் தேடுவோம்.
  3. 3.   இந்த நரகனை அழிக்க, எந்த கிருஷ்ணரும், எந்த சத்ய பாமாவும் நமக்குள் இணைய வேண்டும் என தேடுவோம்
  4. 4.   சுதர்சன சக்ரா எது என இனம் கண்டு கொள்வோம்….
  5. 5.   உக்கிரமான அந்த போர் – தீபாவளி சண்டை….  எது என புரிவோம்
  6. 6.   போரின் முடிவில், வெற்றியின் கொடி….. வரிசையாய் பூத்து நிற்கும் தீபங்களை நாடுவோம்.
இந்த வருட தீபாவளி நம் எல்லோருக்கும் ஆசிர்வாதமான ஆச்சரியமான அற்புதங்கள் நிகழ வாழ்த்துக்கள். 

சிவம் மைனஸ் 21 கிராம் = சவம் (சிறுகதை )அன்பு வாசக தோழமைக்கு வணக்கம்… நாம் அறிந்திருக்க வேண்டிய சில தகவல்களை கதையின் வடிவமாய் இங்கு சமர்ப்பிக்கிறேன். அன்புடன் உங்கள் கருத்து அறியவும் ஆவலாக உள்ளேன்… 

(பகுதி – 1)


யெஸ்…. இன்று அவன் நிச்சயம் இறந்து விடுவான்.

தன் மெல்லிய குரலில் ஆழப்பார்வையுடன் அவர் சன்னமாக சொன்னார். சொன்னவர் மீசையிலும் தாடியிலும் தன் முகத்தை தொலைத்து இருந்தார். அந்த மருத்துவ மனையின் சுவர்களுக்கு காதுகள் இருந்தால் கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை.  நகரத்தின் ஒதுக்குப்புறமான அந்த இன்ஸ்டிடுயூட்டின் மருத்துவமனை… அமைதியான இருளில், அங்கங்கு ஓளிரும் செயற்கை குழல் விளக்கை சட்டை செய்யாமல் கருப்பாகவே இருந்தது.

டாக்டர். தூகல், செய்தி கேட்டு நிமிர்ந்தார். கேட்ட செய்தியை மனதில் வாங்கி யோசிக்க துவங்கினார், உடல் பரபரத்தது… செய்தி சொன்னவரை அணுகி, இன்னும் நெருக்கமாய் அமர்ந்து கொண்டு, ஷூவர்…. கேள்வியில் சம்பிரதாயமே இருந்தது. மனம் விரைவாக செய்ய வேண்டிய செயல்களை பற்றியே யோசித்தது.

ஆம். பல்ஸ் குறைந்து விட்டது. ** விழித்திரை விரிக்க துவங்கி விட்டது. இன்னும் சில மணிகளில் இருக்கலாம். நிச்சயமாய் சொல்ல முடியாதே,,,, ஆனாலும்….  ஒன்று மட்டும் நிச்சயம் இன்று அவன் இறந்து விடுவான். தூகல் தன் கை கடிகாரத்தை பார்த்தார். இரவு மணி 11.30 என காட்டியது. குளிர் காற்று ஒன்று சன்னலின் இடையில் மறைக்கப்பட்ட திரைச்சீலையை தள்ளி விட்டு டாக்டர் தூகலின் முகத்தை வருடியது.

அசையக் கூடாது ஒரு நிமிடம், ஒரு கணம் அசையக் கூடாது. படுக்கையின் அருகிலேயே இருந்து கண் கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேளை மரணம் தாமதித்தால், ஐந்தாறு மணி நேரங்கள் ஆகி விட்டால், விடிந்து விட்டால் என்ன செய்வது….., என் விழிப்புணர்வுக்கு 24 மணி நேரம் இல்லையே. போன முறை நடந்த தவறு இம்முறை நடக்க கூடாது. என்ன செய்யலாம்.

கண் மூடி, சுவாசத்தை கவனித்தார். வேகம்…. சின்ன சின்ன இடைவெளியில் மூச்சு… பிரிக்குவென்ஸி கம்மி. இதயம் துடிப்பது உயர்ந்த சத்தத்தில் கேட்டது. ரத்தம் துரித கதியில் ஓடிக் கொண்டிருக்கிறது, மனம் உணர்வுகளின் பாதையில் அல்லவா தறி கெட்டு ஓடுகிறது. அறிவின் பாதையில் சென்றால்தானே நல்லது. உணர்ச்சியின் பாஷையில் அல்லவா, எமோஷனலாக அல்லவா இப்போது சிந்தித்து கொண்டிருக்கும்… இப்போது எடுக்கும் முடிவு பகுத்தறிவாகாதே… உணர்வின் வெளிப்பாடல்லவா ஆகும்…..

ஏன் குழப்புகிறாய், பட்சி என்ன சொல்கிறது. உள்ளுணர்வு என்ன சொல்கிறது… அதைக் கேள். டாக்டர் தூகல் கண்கள் மேல் நோக்கி செருக, உடல் கொஞ்சம் தன் வசம் இழக்க, தன்னுள் ஆழ்ந்தார்…. சில நொடிகள் கடந்தது… அவசியமில்லை, குழம்ப தேவையில்லை. குழப்பமில்லை, முழித்திருக்கலாம். மரணம் இன்னும் சில மணிகளில் நடக்கும் ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லியது, தூகல் தன் இருக்கை விட்டு எழுந்தார், அந்த வார்டின் சமீபத்தில் நடையும் ஓட்டமுமாய் வந்தார். அவரது ஐந்து அசிஸ்டெண்டுகளும் முகமன் கூற… அமைதியாய் அவர்களை பார்த்தார்….. ஆழமாய் அவர்களை ஊடுருவி பார்த்தார். அந்த அர்த்தப் பார்வையின் அமைதி அவர்களுக்கு புரிந்தது.

அந்த அமைதியின் அர்த்தம் அவர்களுக்கு தெரிந்தது, மற்றும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது. அவர்களும் அமைதியானார்கள். எதிர் கேள்விகள் கேட்காமல் தத்தம் இருக்கைக்கு நகர்ந்தார்கள். அவர்கள் செய்ய வேண்டிய பணியின் அவசியமும் அவசரமும் புரிந்தது. அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தங்கள் வேலைகளில் இன்னும் சிரத்தையாய் ஆழமாய் துவங்கினார்கள்.
தூகல் படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். படுக்கையில் இருந்த நோயாளியை பார்த்தார். கண்கள் பாதி திறந்தும், மூடியும் ஒரு தூக்க நிலையில் போர்வை புதைப்புக்குள் இருக்கும் அவனை பார்த்தார். திறந்திருந்த பாதிக் கண்களில் ஜீவன் குறைந்து இருந்தது. பளிங்கு போல் பளபளப்பாகவும் நீர் கோர்த்தும் இருந்தது.

இவன் இறக்க போகிறான், தன் வாழ்வை முடித்து இந்த உலகை விட்டு செல்ல இருக்கிறான். இன்னும் சில மணி நேரத்தில் அது நடக்கும். அவன் மட்டும் தான் சாகப் போகிறான். அவனுக்கு, அவனது வாழ்க்கையில் பெரிய மாறுதல், ஆனால் உலகம் மாறப் போவதில்லை. சூரியன் மாறப்போவதில்லை, இங்குள்ள இயக்கங்கள் மாறப் போவதில்லை. நான் நாளையும் உயிரோடு இருப்பேன்…. இவன் மட்டும் இங்கு இருக்க மாட்டான்.

இல்லை மரணம் கொடியது… மனித வாழ்க்கையில் அவசியமற்றது. எப்படியாவது வெல்லப்பட வேண்டியது. முடியுமா… முடியும்… எப்பாடு பட்டாவது இதை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

இன்றைய என் ஆராய்ச்சி அதன் முதல் படி.

டொம்….. பலத்த ஓசையுடன் இயந்திரம் சத்தமிட்டது…. அளவுகோலின் பக்கத்தில் இருந்த உதவியாளன் ஓடி வந்து ‘டாக்டர் எடை….. ஒரு அவுன்ஸ் குறைந்துள்ளது’ டாக்டர் தூகல் அர்த்தப் பார்வையுடன் … ம்… நாம் எதிர்பார்த்தது தான் உணவுக் குழாய், மூச்சுக் குழாயிலுள்ள நீர்ப்பதம் கடைசி நேரத்தில் ஆவியாகி விடும். அதனால் தான் இந்த எடை குறைவு… இன்னும் தீவிரமாய் கவனியுங்கள்…

அவன் நகர தூகல் தன் பார்வையை படுக்கையை நோக்கி செலுத்தினார். படுக்கை விரிப்பு அசையவில்லை….. படுத்திருந்த நோயாளியின் காதுகள் அந்த அறையின் ஒலியை உள் வாங்கி கொண்டு அமைதியாய் இருந்தது…

                                                                             (தொடரும்….)

·        ****  நம் கண்ணின் நடுவில் கருப்பு மணி – கண்மணி…. வெளிச்சத்துக்கு ஏற்ப விரிந்தும் சுருங்கியும் பார்வையை நமக்கு வழங்குவது. இது தன்னிச்சையாக மூளையின் செயல்பாட்டில் இல்லாமல் இயங்குவது. மரணம் சம்பவிக்கும் அந்த கடைசி நேரங்களில், இது விரிந்தும் நிலைபெற்றும் இருக்கும். அதனால் தான் கண்ணில் டார்ச் அடித்து பார்த்து மரணத்தை டாக்டர் கன்பர்ம் செய்வார்.

(Bliss Please ..... )…ப்ளிஸ் பிளீஸ்….

முன்னிரவு சுமார் 7 மணி இருக்கலாம். ரிலாக்ஸ்டாக பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் எதிரில் பார்த்த காட்சியில் லேசாய் அதிர்ந்தேன், அட்ரெனிலின் கொஞ்சம் அதிகப்படியாய் சுரக்க, இரத்தம் சற்று டாப் கியரில் ஓடியது, உடல் பரபரத்தது. எச்சரிக்கை உடலெங்கும் பரவ, வண்டியை திருப்பி விடலாமா என யோசித்தேன்.

பார்த்தது இதைத்தான். சென்னை புற நகர் ஒதுக்குப் புறமான அந்த சாலையில் நிறைய மனித தலைகளும் கூட்டமும். கும்பல் கும்பலாய் ஆட்கள். சுமார் 200 பேர் இருக்கலாம். 

அடர்ந்த அமைதி அங்கு குடி கொண்டிருந்தது, சிறு சிறு குழுக்களாய் பிரிந்து குசு குசு குரலில் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்க வேண்டும், ஒருவேளை ஏதேனும் கலவரம்… தெரியவில்லை.

ஹூம், கூட்டம் பார்த்ததும் ஏன் இப்படி சிந்திக்கிறது… என்ன செய்வது, தினச் செய்திதாள்கள் புரட்டும் போது, நம்மை புரட்டி போடும் செய்திகள் தானே அதிகம். அவைகள் நமக்கு சொல்லும் சேதிகள் எல்லாம் அப்படி…. எங்கு பார்த்தாலும்… கலை…கள்ளை…. (சாரி, கொ என்பதையே முதல் எழுத்தாக கொள்ள வேண்டும்…. என்னவோ…. அதை சொல்ல விருப்பமில்லாததால்… க வோடு நிறுத்தி விட்டேன்)

என்ன இது, என்ன கூட்டம், என்னதான் நடக்கிறது என ஆரம்ப பார்வை பார்த்து கொண்டு இருக்கும் போதே, நான் ஓரளவு சூழலுக்குள் வந்து விட்டேன், திரும்பி போக இயலாத தூரத்தில் நான் வந்து விட்டேன். சரி விரைவாக கடந்து சென்று விடலாமோ எனவும் யோசிக்க… அப்படி செய்யவிடாமல் கியூரியாசிட்டி கிடுக்கிப் பிடி பிடித்து கிணிகிணிக்கிறது. அங்க என்னதான் நடக்குது என ஆர்வம், என்னை அங்கும் இங்கும் பார்வையை செலுத்த வைத்தது.

கூடியிருக்கும் மக்களின் முகங்களை பார்த்தேன், ஏறக்குறைய அனைவரின் முகங்களிலும் பரபரப்பு இல்லை, படபடப்பு இல்லை, ஒருவித அமைதி, மற்றும் ஒரு புன்னகை. அந்த புன்னகை எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. சரி எதுவும் அசம்பாவிதம் இல்லை, சந்தோசம்…. இருந்தாலும் என்னதான் நடக்கிறது. ஆர்வம், என்னை பிராண்டியது.

ஒரு தேனீர் கடையில் டீ குடிப்பதாய் சாக்கு காமித்து விட்டு, என்ன நடக்கிறது என வேவும் பார்க்கும் ஆசையில் பைக்கை ஓரம் கட்டினேன்.

அழுக்கு தேனீர் கடையில், சாக்குகளே திரைச்சீலைகள். ஓய்யாரமாய் ஒரு பாய்லர், அந்த தேனீர் கடையின் காஸ்ட்லியான இன்வெஸ்ட்மெண்ட்…. ஆணி புடுங்கிக் கொண்டதால் ஆடும் மர பெஞ்சுகளே நம் சிம்மாசனம். வியாபாரம் ஜரூராய் நடக்கிறது. கடையிலும் ஆரவாரம் இல்லை, அமைதிதான். அதிகம் பேச்சு இல்லை…. 

ஆழமாய் என்னருகில் தேனீர் கடையில் இருந்த ஆளை பார்க்கிறேன். மெலிந்த கருத்த சவரம் செய்யப்படாத முகம். எண்ணையை என் அருகில் கொண்டு வராதே என அடம் பிடித்த தலை. போடாத சட்டையில் தெரிந்த மார்பில் வெள்ளை ரோம புற்புதர். இடுப்பு வேட்டியை ஒரு தாயத்து இறுக்கிய அருணாக் கொடி இழுத்து பிடித்து இருந்தது.

கண்கள் மட்டும் பரபரத்து இருக்க, தலையை அடிக்கடி திருப்பி உயர்த்தி, ஒரு இருட்டு சந்தின் திசையில் பார்த்து கொண்டிருந்தார். என் பார்வையை சற்று திருப்பி அவரை விடுத்து மற்றவர்களை பார்க்க, அனைவரின் பார்வையும் அனேகமாய் அந்த இருட்டு சந்தின் மேலேயே இருக்கிறது.

சற்று நேரத்தில் ஆள் அரவம் தெரிந்தது. கால் சட்டை இன் செய்யப்படாத சட்டை போட்டு, ஒரு இளம் வயதினன் மெலிந்த தேகத்தில் விரைந்த நடையில் வந்தான். வந்தவன் நேரே என் அருகில் இருக்கும் மூத்தவர் இடம் வந்து சுற்றி முற்றும் பார்த்து விட்டு, சட்டை தூக்கி விட்டு, வயிறை ஒரு எக்கு எக்கி, பேண்ட்க்குள் இருந்து ஒரு பாட்டிலை வெளியில் எடுத்தான்.

அது கொல்கண்டா பிராந்தியின் ஒரு குவார்டர் பாட்டில். பெரிசின் முகம் மலர்ந்தது, மீசைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காவி ஏறிய பற்கள் விரிந்து காற்றோடு காரசாரமாய் பேசியது. படக்கென அந்த பாட்டிலை வாங்கி பெரிசு தன் வேட்டியை தூக்கி அதனுள் மறைத்து வைத்தார். வைத்த போது… கிளிங்…. பாட்டிலோடு பாட்டில் உரசும் சத்தம் கேட்டது… ஓஹோ.. பெரிசு இன்று பெரிய ஸ்டாக்கிஸ்ட் தான். அடடா….. மழைடா… அடமழைடா….

பாட்டிலை கொடுத்த இளையவன், மெதுவாய் நகர்ந்து ஒரு கும்பலோடு நின்று கொண்டான். அப்போது கவனிக்கும் போது அந்த கும்பலில் இருந்தவர்கள் அனைவரும்…. வெள்ளை வேட்டி கட்டி, அதே வெள்ளை நிற சட்டை போட்டு, கஞ்சி போட்ட உடுப்பில் மிடுக்காய் இருந்தனர். கறுத்து குண்டாய் ஆரவாரமாய் நின்றனர். நிற்கும் தோரணையிலேயே அவர்கள் அரசியலின் பிரிவை சார்ந்தவர் என்பது புரிந்தது.

ஒன்றும் ஒன்றும் மூன்று என என் மனம் கணக்கு கூட்டியது. உள்ளாட்சி தேர்தல், ஓட்டுக்கு நோட்டு போல, குளி….. சாரி…. குழி…..ஐய்யோ… சாரி….குலி….. ம்… அப்பப்பா…. குபி….. ஹூம்,,,, இல்ல…. குடி மக்களை குஷிப்படுத்தும் திருவிழா என்பது புரிந்தது. பாட்டில் வினியோகம் செய்யும் சடங்கு….. அப்பாடி பரவாயில்ல, பாதி கப் டீ தீரும் முன்னே மேட்டரு புரிஞ்சுருச்சு, இனி நிம்மதியா போகலாம் என பட்டதால் டீயின் சுவையில் நான் அமிழ்ந்தேன்….

அந்த சூழல் எனக்கு விசித்திரமாய் பட்டது. ஜன நாயகம் ஒரு போதையில் விலை போகிறதே என ஆற்றாமை ஒரு புறம். தினம் தினமா குடுப்பான், இப்படி ஆடிக்கும் அம்மாவாசைக்கும் கொடுக்கிறத பெரிசா ஏன் நினைக்கணும்…. என சில ஆற்றாமைகள் முட்டி மோதினாலும்….  அந்த அடித்தட்டு மக்களின் முகங்களும் சந்தோசங்களும் மனதில் மலரை விதைக்கிறது. அப்பா… என்ன ஒரு மகிழ்ச்சி, ஒரு வேளை எப்போதும் பட்டை சாராயம் அருந்துபவனை இந்த உசத்தி சரக்கு உசுப்பி விட்டதோ….

குடிப்பது என்பது ஒரு ‘ஒளித்து செய்யப் படவேண்டிய செயலாகவே’ இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது. அறிஞர் அண்ணா சொன்னது போல், குடிப்பதை பாவம் என்று கருதும் நாடு எங்கள் நாடு. குடித்தேன் என சொல்ல கூச்சப்படும் நாடு எங்கள் நாடு.

அப்படி ஒரு ஒளித்து செய்யப்பட வேண்டிய செயல் என பகுக்கப் பட்டதால் அதற்கு ஒரு கிசுகிசு போல் ஒரு மவுஸ் வந்து அந்த உணர்வுக்கு ஒரு டிப்ளோமேட்டிக் ஸ்டேடஸ் வந்து விட்டது. அழுக்கு தீரவும் களைப்பு தீரவும் குளிக்கிறோம்…. அதைப்பற்றி அகமகிழ்ந்து அக்கம் பக்கம் யாரும் பெருமை பேசுவதில்லையே……… இன்னிக்கு நான் மூணு ரவுண்டு சோப் போட்டேன்… இரண்டு தடவ ஷாம்பு போட்டு, ஜம்முன்னு ரிவர்ஸ்ல ஷேவ் பண்ணேன்… என யாரும் புளகாங்கிதம் அடைவதில்லையே..

அந்த சூழலை பார்க்கிறேன், வயது வித்தியாசம் இல்லாமல், பெரியவரும் இளவயதினரும்…. அங்கே மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அதிகம் பேசாமல், மனமும் கண்களும் பரபரத்து, மனம் வரப் போகும் போதையை எண்ணி இப்போதே மகிழ தொடங்கி விட்டது.
இந்த நிகழ்வு சில கேள்விகள் கேட்க தூண்டியது. எதற்காக குடிக்கிறார்கள்.

  1. 1.     உடல் சோர்வு, களைப்பு, உபாதை இதிலிருந்து தற்காலிகமாக விடைபெற
  2. 2.     மன அழுத்தம், கவலைகள் இதிலிருந்து தப்பித்து கொள்ள
  3. 3.     பரவச, பறக்கும் ஒரு நிலை அடைய
  4. 4.   பலத்துடன், சிந்தனை ஒருமைப்பட, இயல்பு தரிசிக்க…. சில அரிய செயலாற்ற

(போதை தலைக்கேறியதால் மேலே உள்ள நம்பரை (Font) பாருங்கள்... )
இவ்வளவு தானே…. இதற்காகத்தானே நம் மனித குலம் குடிக்கிறது, குடிக்க துடிக்கிறது. 
இத்தனைக்கும் தீ போன்ற தித்திப்பில்லாத ஒரு கசப்யின் சுவை, உள்ளுக்குள் இறங்கும் காட்டம், காலையில் எழுந்தால் வரும் ஹேங்க் ஓவர் என எத்தனை இடர்கள் இருந்தாலும், கிடைக்கும் மேற்கூரிய சில காரணங்களுக்காகத்தானே இந்த குடி… ஆங்…. புடி…..அடி….ஒரு ரவுண்ட்…..

சரி, இந்த நாலையும் பெற வேறு எளிய வழி இருக்கிறதா…. இல்லை…. எளிய வழி இல்லை, ஆனால் ஒரு வழி இருக்கிறது. தியானமும் யோகமும் இதை தரும் வல்லமை பெற்றது. போதையை விட ஆழமான நிலைக்கும் ஆரோக்கியமான பக்கவிளைவுகளையும் கொடுக்க கூடிய சக்தி கொண்டது.

என்ன ஒரு கஷ்டம்… குடிப்பதை போல் எளிதாய் இந்த நிலை அடைய முடியாது. கையில ஒரு கிளாச எடுத்தோமா….. நமக்கு தோதான ஒரு மிக்ஸிங் போட்டோமா…. மொடக் மொடக்குன்னு குடிச்சோமா,…. குடிச்ச சில நிமிசத்தில சிந்தனை மட்டுப்பட்டு, மூளை தயங்கி இயங்கி ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். பரவசம் படர்ந்து விடும், அழுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள் தூங்கி கொள்ள, மனம் துவண்டு விடும். உடல் கட்டுப்பாடுகள் தளர்த்தி இலகுவாகி விடும்.

இதே டண்டணக்காவ மெடிடேட் பண்ணி கொண்டு வர ரொம்ப கஷ்டம், யூனிவர்சலா எல்லோருக்கும் ஒர்க் அவுட் ஆகிற மாதி ஒரு பார்மூலாவும் மெடிடேஷன்ல இப்ப இல்ல…. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு மாதிரி. ஆண்டவா…. ஹட யோகா… மந்திர ஜெபா… ராஜ யோகா, கிரியா யோகா…. இப்படி பல ரூட்டு…

இன்னிக்கு தேதியில மெடிடேஷன் எப்படி இருக்குது. ஒண்ணுக்கு பாதி பேர் டவுட்டாவே இருக்காங்க. இல்ல இந்த தியானம்ங்கிறது ஏதாவது இருக்கா, அல்ல வெறும் பம்பாத்தா என ஆரம்ப கட்ட கேள்வியில் நிற்க வைத்தது ஆன்மீகத்தின் முதல் கோளாறு. பயங்கர அட்வென்ஜரசா இருக்கணும், அது மட்டுமில்லாம ஏதோ ஒரு பாதையில கத்துக்கிட்ட பயிற்சிகள மாசக் கணக்கா, வருசக் கணக்கா உடும்புப் பிடி பிடிச்சு செய்யணும். இப்படி பல சேலஞ்சஸ்.

எல்லோருக்கும் ஒத்து வரக்கூடிய எளிமையான அதே நேரம் கண்டிஷனா கம்பிளீட் ப்ளிஸ் (BLISS) வர ….. ஃப்ளீஸ் ஒரு வழி சொல்லுங்களேன்….

ஐய்யா… ஆசிரம அல்டாப்புக்களே…. ஆன்மீகம் விற்பவரே…. ஐயாம் சாரி…. ஆன்மீக விற்பன்னர்களே… காசு பணம் பின்னால போகாம, பொம்பள பின்னால போகாம….. சட்டுன்னு எளிமையா எல்லோருக்கும் தோதுப்படுகிற மாதிரி ரிலாக்ஸேஷனுக்கு ஒரு டெக்னிக்க கண்டுபிடிங்களேன்… உலகமே உங்கள கைய எடுத்து கும்பிடும்….

முடிக்கும் முன்…. 
படுக்காளி ஒரு டவுட்டு… இந்த பதிவில ஒரு இடத்தில… ‘ஒண்ணும் ஒண்ணும் மூணு’ என ஒரு கணக்கு சொல்லியிருக்கிறாயே…. அதென்ன ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா, இல்ல உன்னோட கணக்கே அந்த ரேஞ்சுதானா என எண்ணியிருப்பவர்களுக்கு…. இது ஒரு பயன்பாடு… 

நான் கேட்டு ஆச்சரியப்பட்ட ஒரு ஆச்சி சொல்…. நான் பெற்ற ஆச்சரியம் பெருக இவ்வையகம்….

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது தீர்மானமாய் சொல்ல முடிகிற, நம் கண்ணுக்கு முன்னால் இருக்கிற தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்கள். அப்படி இல்லாமல், மறைந்திருக்கும் சில மேட்டர்களும் சேர்த்தால் தான் ஒரு அர்த்தம் வரும் எனும் ஒரு நிலை வரும் போது…. சீக்ரெட்டான ஒரு ஒண்ணையும் கண்ணுக்கு தெரியும் இரண்டையும் கூட்டி, ஒண்ணும் ஒண்ணும் மூணு என சொல்லும் கணக்கில் தான் சூட்சமம் இருக்கிறது. 

இடம் பொருள் ஏவல்….


கிரிக்கெட்டு கிரவுண்ட்டு… மெனக்கெட்டு ஒரு பத்து பேரு வெளாடிக் கிட்டுருந்தாங்க…. ஓடி வந்த பந்த ஓங்கி அடிச்சாரு நம்ம பேட்ஸ் மேன்… மைக் ஹஸி,.. 

இந்த மைக் ஹஸி … சிக்ஸர் அடிக்கும் போது தோனி சிரிச்சா….கை தட்டுனா அது ஐபிஎல்…. அதே சிக்ஸர… அதே… மைக் ஹஸி அடிக்கும் போது தோனி மண்டைய சொறிஞ்சா…. ஒண்ணுமே நடக்காதது மாதிரி பச்சைப் புள்ள மாதிரி மூஞ்ச வைச்சிக்கிட்டா அது இண்டெர் நேஷனல் மேட்ச்…. எப்படி….

ஒரே சமாச்சாரம்…. ஒரே ஆக்‌ஷன் எப்படி பாதாளத்துக்கும் ஆகாயத்துக்குமா மாறிப்போகுதுல்ல…. இதத்தான் ரெபரென்ஸ் என சொல்லலாம். 

தமிழ்ல சொல்லுங்க சார்…. என்பவருக்கு… தமிழ்ல சொன்னா டாக்ஸ் பிரீ இல்லேண்ணாலும் இன உணர்வு அதிகமாக!!!??? இருப்பதால்...... இடம் பொருள் ஏவல்….  

ஒரு தேசத்துக்கு கேப்டனா இருக்கும் போதும், தேர்வுக்கு கேப்டனாக இருக்கும் போதும் என நிலை மாறி விடுகிறது. அதனாலேயே தோனி மைக் ஹஸி வெளாடும் போது ஹம் கிசி….ஹம் கிசி…. கம் நஹி… நஹி…. என சொல்ல வேண்டியிருக்கிறது. சரி இதெல்லாம் ஒகே…  இன்னிக்கு அதுக்கு என்ன என்பவருக்கு…

இன்னிக்கு காலைல பேப்பர் வாசிச்சப்போ, முதல் பக்கத்துல உங்கள கவர்ந்து பின்னர் கலகலத்துப் போன ஒரு ஓட்டப் பந்தய நீயூஸ்தான்…. CERN ல் நடந்து முடிந்த ஓட்டப் பந்தய போட்டியிலே… மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற நம் அண்ணனா அக்காவா… சரி ஏதோ ஒண்ணு…. நம்ம  நீயூட்டிரினாஸ் ரேஸ்ல ஜெயிச்சு வெற்றி கோப்பைய தட்டி சென்றிருக்கிறது. லைட்ட முந்தினத லைட்டா நினைச்சுக்காதீங்கன்னு முதல் பக்கத்தில விலாவரியா படிச்சோம் இல்லியா… ஹா…ஹா… ஐன்ஸ்டின் தியரி ஆப் ரிலேடிவிட்டு தப்பாய் போச்சு…  போச்சு… இனிம நாமெல்லாம் நினைச்சோம்ன்னா, டைம் டிராவல் பண்ணலாம்,… சட்டை பேண்ட் ரெடி பண்ணிக்கோங்க எனும் ரீதியில் படிச்ச செய்தி பற்றித்தான் பேசுறோம்….


அட இல்லீங்க… சரியா விளங்கல…. இன்னும் எளிமையா சொல்லுங்க என குல்லா வைச்ச குப்புசாமி கேட்டதனால… அவருக்கு, சொல்லுவோமா ……

காரமான ஒரு பொருளுக்கு நாமாக வைத்த பெயர் மிளகாய், ஜில்லுன்னு குடிக்கிற பானகத்துக்கு நாம வைச்சிக்கிட்டது ஜிகர்தண்டா,.. இல்லாம இந்த பொருளுக்கும் பெயருக்கும் என்ன உறவு… ஒண்ணும் கிடையாது, அது மாதிரித்தேன் இன்னிக்கு நாம வைச்சிகிட்டு இருக்கிற எல்லா அறிவியல் கண்டுபிடிப்புக்களுமே நமக்கு நாமே எழுதிக் கொண்ட வியாக்கியானங்கள் தான்.

உதாரணத்துக்கு இத எப்படி அளக்கிறதுன்னு நாம கண்டுபிடிச்ச யூனிட் சிலது இருக்குது.

பிரியாணிய அரை பிளேட், கால் பிளேட்டுன்னு சாப்பிட்டுருக்கோம், இதே பிரியாணிய வட நாட்டுல கிலோ கணக்கில சொல்லி திராசுல தூக்கிடுவாங்க…. தேங்காய எவ்வளவு குண்டுன்னு பார்க்காம குத்துமதிப்பா ஒரு சைசு பார்த்துட்டு வெறுமனே எண்ணிக்கையாய் விலை பேசுறவங்க நாம… ஆனா, கட் அண்ட் ரைட்டா நிறுத்து கிலோவில சொல்றவங்க இருக்காங்க… இது பரவாயில்ல, தயிர திரவமா இல்ல திடமா என தீர்மானம் பண்ணாம கிலோவுலயும் லீட்டராகவும் பேரம் பேசுறாங்க…. இப்ப சொன்ன விசயம் என்னன்னா பொருள வாங்குறதுக்கு நாமளா உண்டாக்கிட்ட ஒரு யூனிட்டு அவ்வளவுதான். நம்ம சௌகரியமும் நடைமுறையும் கலந்து ஒரு தினுசா ஓடிக் கிட்டு இருக்கிறதுதான் நம்ம வாழ்க்கையும் அறிவியலும்.

இந்த ரேஞ்சுல மாஸ், டைம் என நாம் உருவாக்கி கொள்ள சில ரெபரென்ஸ்களை கையாண்டோம். மைக் ஹஸி தோனி என சொன்ன உதாரணத்தையும் இங்கு நினைவில் கொள்ளுதல் நல்லது.


காற்றில்லா வெற்றிடத்தில் ஒளியின் வேகம் நிரந்தரமானதே, எனவும் அதுவே மிச்ச எல்லாவற்றிலும் வேகமானது எனவும் உணரப்பட்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளே இன்று நிலுவையில் உள்ள நமது மாஸ் மற்று டைம்கள்…

சரி இன்னிக்கு இந்த நியூட்ரானிக்ஸ் கண்டுபிடிப்பால், என்ன பிரயோஜனம், என்ன மாதிரி மாற்றங்கள் நிகழும்,

மங்காத்தா பார்ட்டி போய், சோனா பக்கத்தில் உட்கார்ந்து அவரை பாதுகாப்பாய் கூட்டி வந்து விட முடியுமா…. 7ம் அறிவின் இசை வெளியீட்டு விழா சூப்பரா இருந்துச்சு, சிக்குன்னு போய், படத்த பார்த்துட்டு வந்துட்டுடட்டுமா என டைம் டிராவல் பற்றிய டைம் பாஸ்… எலிமண்டரி ஸ்கூல் சிந்தனைகளை கொஞ்சம் தூர வைத்து விட்டு பார்த்தால்,

இன்று ஒளியின் வேகத்தை மிஞ்சக் கூடிய ஒன்று நம்மால் கண்டுபிடிக்கப்பட்டால் நாம் இதுவரை சொல்லிக் கொண்டிருந்த  நிறைய அறிவியல் வியாக்கியானங்கள் மாற்றப்பட வேண்டி வரும். நம் வாழ்க்கை முறையில் நிறைய மாறுதல் செய்ய வேண்டியிருக்கலாம். வாழ்க்கை இன்னும் சிக்கலாகக் கூடிய சாத்தியக் கூறுகளே நிறைய உள்ளன,

இன்னிக்கு புதுசா ஒண்ணு கண்டுபிடிச்சோம்ன்னா அதுக்கு என்ன அர்த்தம் என்றால், நான் இதுவரை இதுபற்றி தெரியாமல் இருந்திருக்கிறேன் எனும் அறியாமையை உணர்ந்து கொள்கிறோம் என்பார்கள், மாற்றங்கள் தவிர்க்க முடியாதது.

அடுத்த வீட்டில் கார் வாங்கும் போது… இல்ல நான் இன்னும் மாட்டு வண்டியில தான் போவேன் என அடம் பிடிக்க இயலாது. முன்னேற்றங்களும் மாற்றங்களும் வரும் போது அதில் பயணிக்க நம்மை தயாராக்க வேண்டியது நம் கடமையே. அதுவரை எளிமையாய் சில விசயங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

அரைகுறை இறைவன்...!!!

சேட்டை ஜாஸ்தியாயிருச்சுடா, இறைவனை பத்தியே குறையா…. அரை குறை..!!! என அவசர தீர்மானம் போட வேண்டாம். இறைவன் என இங்கே சொன்னது ஒரு வார்த்தை பிரயோகமே. இறை என சொல்லும் போது, அதன் சில குணங்களை மட்டும் எடுத்து கொண்டேன். இறைவன் என்பதில் நிறைவானவன் / முழுமையானவன் அன்றின் படைக்கும் வல்லமை பெற்றவன் எனும் இரு குணாதிசயங்கள் மட்டுமே விவாதிக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.


ஓகோ அது சரி, அப்ப சரி, ஆனால்…. அரைகுறை என்கிறாயே….. அது என்ன எனும் கேள்விக்கு, இறையும் இல்லாமல் விலங்கும் இல்லாமல்…. இரு குணங்களும் சரி விகிதத்தில் கலந்த துர்பாக்கியசாலி…. நம்மைப் பற்றித்தான் எழுதுகிறேன். மனிதர்களைப் பற்றித்தான்.

உயிரினங்களை பிரிக்கும் போது, அதன் அறிவு வகையை கொண்டு பிரித்தால், ஒவ்வொரு அறிவாக ஏறும் படிக்கட்டில் 5 அறிவுகளை கொண்டு விலங்குகளும், 6 வது அறிவை கொண்டு நாமும் நிற்கிறோம். சரி அஞ்சுக்கும் ஆறுக்கும் இடையில் என்ன வித்தியாசம்….

அதை எளிமையாய் சொல்லுவோமா எனும் சிந்தனைக்கு நாம் ஒரு திரைப்பாடலை கடன் வாங்குவோம்.

நம் தமிழக முதல்வர் ஜெ.. அவர்கள் ஆனந்தமாய் ஆடிப்பாடும் ஒரு பாடலில் இப்படி ஒரு வரி வருகிறது.

மரத்தில் படரும் கொடியே, உன்னை படைத்தவரா அங்கு படர விட்டார்.

பாய்ந்து செல்லும் நதியே, உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்…

ஆஹா… இரு வரிகளில் எவ்வளவு ஆழமான ஒரு விடயம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வரிகள் சொல்வது, படைத்தவர் படைப்போடு நிறுத்தி விட்டார். அவர் வாழவோ… வாழும் முறையையோ…, பாதை சொல்லவோ முயலவில்லை. உயிரினங்கள் தங்களுக்குள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே வாழ்க்கை அமைகிறது எனும் சித்தாந்தம் இங்கு மிளிர்கிறது.

’மரத்த வைச்சவன் தண்ணீர் ஊற்றுவான்’

என இன்னொரு கவிஞர் சொல்கிறாரே…. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என கேட்டிருக்கிறோமே… அது எப்படி…..

அது அப்போ….. எது சரி…. என நமக்குள் எழும் கேள்வியே…. இப்பதிவின் ஆணி வேர்.

வடிவேலு சொல்வாரே…. ‘உக்கார்ந்து யோசிப்பாங்களோ…!!!!’ ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ…!!!’ என கேட்பாரே.. அது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனி பலம். சிந்தித்து சில விசயங்களை படைப்பது அல்லது மாற்றுவது….. நம்மால் சாத்தியம். நம்மால் மட்டுமே சாத்தியம்.

படைப்பு எனும் போது எத்தனையோ உண்டு. வீடு… குடும்பம், குழு, சமூகம், கம்பெனி, இலக்கியம், அறிவியல் கண்டுபிடிப்பு, இப்படி எத்தனையோ…..

ஒரு சின்ன வேண்டுகோள், இந்த படைப்பை பற்றியும் அதன் பரிமாணம் பற்றியும் எழுதலாம். ஆனால் வெறும் பதிவு…. நீ நீ நீ ண்ண்ண்ண்டு…. கட்டுரை போலாகிவிடும். எனவே ஒரு நிமிடம் வாசிப்பதை நிறுத்தி விட்டு படைப்பை பற்றியும் அதில் நமக்குள்ள பலம் பற்றியும் கொஞ்சம் நீங்களே யோசித்து விடுங்கள்.

பசியாற மட்டுமே விலங்குகள் உண்ணுகின்றன. ஆனால் நாமோ பசி மட்டுமல்லாது, ருசியும் வேண்டும் என நிர்பந்திக்கிறோம். உண்மைதானே. ஆம்…. அது ஏன்…..

நமக்கு பசியும் ஆற வேண்டும் பின்னர், அது ருசியாகவும் இருக்க வேண்டும். அதற்கு காரணம், நம்மால் ருசி என உணரப்பட்டால், அது ஒரு வித மகிழ்ச்சியை நம்மின் உள்ளுக்குள் ஏற்படுத்தும். ஒரு நிறைவை நமக்குள் உண்டாக்கும். அந்த மகிழ்ச்சியை நிறைவை நாம் அனுபவிப்பவர்கள். அதை வேண்டும் இன்னும் இன்னும் வேண்டும் என ஆசிப்பவர்கள்.

அதனால் தான் உண்ணுதல் மட்டுமல்லாது நம் எல்லா செய்கையையிலும் இந்த இன்பம் துய்த்தல் எனும் செயல் பாடு உண்டு. உன்னைப் போல் யாரேனும் உண்டா…. என நமக்கு தரப்படும் சமூக அங்கீகாரத்துக்காக நம் உயிரையும் கொடுக்க சித்தமாகிறோம்.

விலங்குகளுக்கு உணவு தேவைப்பட்டால், சக உயிரை கொல்ல உரிமையும் தார்மீக அனுமதியும் இருக்கிறது. பழிவாங்கும் உணர்ச்சி கூட இயல்பு என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் மனிதனுக்கு அப்படியில்லை. உயிரை கொல்வது பாவம், பழிவாங்குவது மிருக குணம் என அறிவுரை வழங்கப்படுகிறது.

அவன் இயல்பு விலங்கின் குணமே. விலங்கின் குணத்தோடு அரை குறையாய் அமைக்கப்பட்ட இறை குணமும் அவனுக்கு உண்டு. அவனுக்கும் பசி உண்டு, வன்மம் உண்டு, பகை உணர்ச்சி உண்டு. என்றாலும் அதன் மேல் படிமானம் மனம் சமைத்த நடைமுறை சட்டதிட்டங்கள் கலாச்சாரமாக, வேல்யூ சிஸ்டமாக அவனை வழி நடத்தும்.

பாதி மிருக இயல்பும், பாதி இறை குணமும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதாலேயே அவனுக்கு இந்த தொல்லை. இந்த வாழ்வியல் துன்பம். மிருக வழியா, இறை வழியா என அவன் தன் பாதை தேர்ந்தெடுத்து செல்வதிலும், அந்த தீர்மானிக்கும் திறனிலுமே அத்தனை கோளாறுகளும்.

ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் என குழப்பங்களும், மன தயக்கங்களும் அவனை வாட்டும்.

அன்பிற்குரியவர்களே…. இப்பதிவில் சொல்லப்படுவது ஒரு எளிய ஆனால் ஆழமான தகவல். இந்த தகவல் அதன் அர்த்தத்தில் புரியப்பட்டால், நம் மனித வாழ்வில் நிம்மதி வரும், இனிமை வரும். தயக்கங்கள் அகலும். தெரியுமப்பா, எனக்கு …. என தன்னம்பிக்கை வரும். நம்மை பகுத்து நம் செயல்திறனும், சிந்தனை ஓட்டமும் புரியும்.

ஆம்… இது ஒரு டிப் ஆப் த ஐஸ்பெர்க்தான். இதன் நுனி பிடித்து கொஞ்சம் சிந்தித்தால் ஒரு சில ஆழமான விசயங்கள் தொட முடியும். அந்த தேடல் பயணத்தின் ஆரம்பத்தில் தான் நானும் இருக்கிறேன். தயவு கூர்ந்து தங்களுக்கு தோன்றியதை என்னுடன் பகிர்ந்தால் எனக்கும் மற்றவருக்கும் உதவியாய் இருக்கும்.

குமரி முதல் காஞ்சி வரை...

கண் இமைக்கும் நொடியில் இங்கு எதுவும் நடக்கும்

ஆம்… சட்டப் பேரவை தேர்தல் எண்ணிக்கை நேற்று துவங்கி முதல் சில மணி நேரத்தில், அதிமுக முன்னிலை என தெரிந்த உடனேயே, போயஸ் தோட்டம் களை கட்டியது. தொண்டர்கள், அரசின் உயர் அதிகாரிகள், ஊடகங்கள் என சாலையை நிறைத்து, மனித தலைகள் படை எடுக்கவும், அந்த ஏரியாவே கல கல என ஆனது. உற்சாகம் எங்கும் பரவ, பட்டாசுகள் உச்சஸ்தாயியில் சப்திக்க, இனிப்புக்கள் இலவசமாய் வினியோகிக்கப்பட, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரத்தத்தின் ரத்தங்கள் மகிழ, பரவசம் அங்கு உச்சத்தில் இருந்தது. அறிவாலயம் அமைதியாய் ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. தோல்வியில் அமைதி வருமோ….

கருத்துக் கணிப்புக்கள் இம்முறையும் பல் இளிக்க, வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாய் குமரி முதல் காஞ்சி வரை ஒரே சிந்தனைக் கோட்டில் இணைந்தனர்.

கூட்டணி ஆட்சி தான் என எல்லோரும் அபிப்பிராயப்பட, வாக்காளர்களோ சூப்பர் ஸ்டார் போல, அதிரடி முடிவெடுத்தார்கள்.

அதிமுக தனிப் பெரும்பாண்மை என்பதும். தேமுதிக எதிர்கட்சி என்பதும் எதிர்பாராத திருப்பங்கள்.

திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதும், மதிப்பிற்குறிய அமைச்சர்கள் தோற்றதும் பெரிய சோதனைகளே. ஓட்டுக்கு நோட்டு எனும் திட்டமும், இலவச சிலுமிசங்களும் பாய் போட்டு படுத்து, மூஞ்சி மூடி கிடப்பதும்…. பல்கலை கழகத்தில் ஆய்வு பாடத் திட்டமாகமே சேர்க்கலாம்.

காங்கிரஸ், பா.ம.க. நிராகரிக்கப்படும் என எதிர்பார்த்தது உண்மை, ஆனால் இத்தனை வீரியமான அடி என்பது யாரும் எதிர்ப்பார்க்காததே.

மதிமுக இந்த சூறாவளியில் சிக்கி சிதைந்து போனது ஆச்சரியமே. ஜெ போட்ட 160 சீட் கணக்கும், அவரது அதிரடி அணுகுமுறையும்… அவசியமோ, என நினைக்கவும் வைத்த தேர்தல் ரிசல்ட் இது.

வெற்றியின் தருணத்தில் ஜெ. தந்த பேட்டி, மிகவும் பிரமாதம். அடக்கமாகவும், பொறுப்பாகவும், திடமாகவும் பேசினார். ஒரு கட்டத்தில் தத்துவார்த்தமாக கூட பேசினார்.

‘முயற்சி ஒன்று தானே முக்கியம். இது நடக்குமா… எப்படி முடியும் என்ன வாகும் என மலைத்து நிற்காமல், முயல வேண்டும் அல்லவா…. என அவர் சொன்னது, அவரது ஆழ் மனத்தின் ஓட்டத்தை பிரதிபலித்தது. ஆனால் அவர் பால்கனியில் நடக்கும் போது, ஏனோ தெரியவில்லை, பழைய வேகம் கொஞ்சம் மிஸ்ஸிங். வயதோ, அல்லது ஏதோ சோர்வோ ஒன்று அவரிடம் தெரிந்தது. நல்ல உடல் பலத்துடன், (மன பலம் தான் எக்கச் சக்கம் இருக்கிறதே) அவர் நல்லாட்சி தரட்டும்.

சட்டசபை தேர்தல் – 2011

 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, சுடச்சுட நடந்த மாஜி மந்திரி கைது, திமுகவுக்கு மிகப் பெரிய சவால். காலம் காலமாக, பூசப்பட்ட ஊழல் சாயம் இன்னும் வண்ணப்பட்டது.

- தேமுதிக வையும் இணைத்து இருமுனை போட்டி, ஆளும் கட்சியின் பலவீனம் என களம் அமைத்ததில் அம்மாவுக்கு சாதகம்.

- என்றாலும் தேர்தலின் வெற்றி வாய்ப்புக்களின் சாதக பாதகம் மாறி மாறி வருவது நமக்கே திணறுகிறது.

- கூட்டணிகள் அமைப்பதிலே இரு கழகங்களும் மூச்சு வாங்கி, திணறியதை பார்க்கும் போது, ஒன்று நிச்சயம் ஆனது. ஒரு தலைமையின் கீழ் தமிழகத்தை கொண்டு வரும் ஆளுமை (எம்.ஜி.ஆர் – மேஜிக்) ஆப்செண்ட் என்பது. அல்லது தனி பலம் நீர்த்து போனது.

- கூட்டணி அமைத்ததில், திமுக வுக்கு ஒரு பரவலான பரிதாப பலம் கிடைத்தது…. ஐய்யோ பாவம் இந்த வயசுல என்ன பாடு படுத்துறாங்க. 63 என ஒரேயடியா கேக்குதே காங்கிரஸ், வேற வழியில்லாம கொடுத்துட்டாங்க திமுக, என அனுதாபம் கிடைத்தது.

- கிடைத்த தொகுதியில் வேட்பாளர் அமைக்காம, கொடும்பாவி எரிக்கிறதுலயே முனைப்பா இருக்கிற காமராஜ் ஆட்சி அமைப்பவர்கள் அடப்பாவமே ரேஞ்சு.

- அதே வேளையில் அம்மா அணியில் அது ஒரு சருக்கு. யாரையும் கலந்தாலோசிக்காமல், அதிரடி 160 வேட்பாளர்களை அறிவித்து, மூன்றாம் அணி என ஊடகத்துக்கு தீனியும் தந்து, திமுகவுக்கு, காப்பிக்கு சீனியும் தந்தார் ஜெ. இன்னும் இந்தம்மா மாறலப்பா என பொது ஜனத்துக்கு அவலும் தந்தார்.

- மூம்முனை போட்டி… ஒரு வேளை ஏற்பட்டு இருந்தால், பேசாமல் எலெக்ஷன் வைக்காமல், ஜம்ன்னு ஸ்கூட் அடித்து, நாமளே ரிசல்ட் டிக்ளேர் செய்திருக்கலாம். அது அவர்களுக்கும் புரிந்ததால், அவசர அவசரமாக சமரசம் செய்து, ஒரணியில் லாவணி பாடினார்கள்.

- சொன்னத கேட்டுட்டு பொட்டி பாம்பா இருந்தாரே நம்ம வைகோ, அவர கழட்டி விட்டுட்டாங்களே என, பொது ஜனம் பீல் பண்ண வைத்து, தன்னை பலவீனமாக்கினார் அம்மா. இந்த 6-7% ஓட்டு எங்க போகுங்கிறது மிகப் பெரிய மில்லியன் டாலர் கொஸ்டின்… மதிமுக வாக்கு யாருக்கு என்பது நமக்கு தெரியாதது பெரிசுல்ல, சம்பந்த பட்டவங்களுக்காவது தெரியுமா…

- கூட்டணி பேரம், தொகுதி அறிவிப்பு எனும் கும்மாளத்திலேயே நேரம் விரயமானதால், மனுத் தாக்குதலில், பிரச்சாரத்துக்கு போவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் முக்கிய காரண கர்த்தா தேர்தல் கமிஷன். அப்படின்னாலும், அப்பாடி வாக்காளர் தப்பித்தார்.

- டிவி, இண்டெர் நெட், மொபைல் என தொழில் நுட்பங்கள் மாறியதால் பிரச்சாரம் இவ்வளவு பண்ணினா போதும் என ஆகி விட்டதோ.? பாஸ்ட் புட் பிரச்சாரம்.

- தேர்தல் அறிக்கையில் கிரைண்டர் இலவசம், உங்க வீட்டுல கிரைண்டர் இருக்குதோ, அப்ப என்ன செய்யுறது… ம்….. கிரைண்டர் இல்லேண்ணா மிக்ஸி, என்பது போன்ற ஆப்ஷன் அதகளம் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

- ஆடு கொடுப்போம், அதற்கு அகத்திக் கீரை கொடுப்போம் எனும் பாணியில்…. வைச்சுக்கோ ஃபேனு… இருக்கிறேன் உனக்கு நானு…. என அன் அபிசியலா மைனாரிட்டி ஐய்யாவோட தேர்தல் அறிக்கைய எடிட் செய்து, எடக்கு மடக்கு செய்தும்… நகைப்புக்குறிய இலவசம் அறிவித்தும்…. தேர்தல் அறிக்கை எனும் உன்னத விசயத்தை தரந்தாழ்த்தினார் ஜெ.

- டிவி கொடுத்தாச்சு, மிக்சி கிரைண்டரும் காத்தாடியும் கொடுத்தாச்சு… அடுத்த தேர்தல்ல என்ன அறிவிப்பு வரும்ன்னு எதை நினைச்சாலும் காமெடியாத்தான் இருக்கு. நாட்டோட நிலை, வீட்டுக்கு போடுற பட்ஜெட் மாதிரியில்ல இருக்கு.

- கலகலப்புக்கும், காமெடிக்கும்ன்னே சில ஆளுங்க அரசியல் பண்ணுவாங்க இல்லையா, அவங்களுக்கு இந்த தேர்தலோட அட்ரஸ் காணாம போயிடும் போல இருக்கு.

- யாரு எந்த அணியில இருக்காங்க, எவருக்கு ஓட்டு போடுறதுன்னு பொதுஜனத்துக்கு கன்புயூஷன் கண்டிஷனா இருக்கும்ன்னு தோணுது.

- ரெண்டும் சரியில்ல, ஆனா இருக்குறதுல எது ஓகே எனும் நிலைக்கு மிஸ்டர். பொது ஜனம் தள்ளப்பட்டிருக்கிறார்.

- அறுதிப் பெரும்பாண்மை கிடைக்காதுன்னு கழகங்களே முடிவு செஞ்சுட்ட மாதிரி தெரியுது. பொது ஜனத்துக்கென்ன…. கலக்குங்க.

- இருந்தாலும் முடிவுக்கு பின்னும், இன்னும் அஞ்சு வருசத்துக்கும் பரபரப்பா பேசுற லெவல்ல, முடிவு அமையும்ன்னு தான் தோணுது.