பக்கங்கள்

கோணக்கால்…(சிறுகதை) பகுதி 1

(உண்மை தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனை சிறுகதை)

காந்தி தன் கையில் இருந்த டெலிகிராமை பார்த்து கொண்டிருந்தார்.  இன்னொரு கையில் சார்லி சாப்ளினின் புகைப்படம்… குனிந்த படி கொஞ்சம் குழப்பமான ஆனால்…. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சுற்றியிருந்தவர்கள் அமைதியுடன் அவர் பதிலுக்கு காத்திருக்க, தன் தலையை உயர்த்தி தெளிவான குரலில் சொன்னார்…  ‘தேவையில்லை. அவரில் பார்க்க என்ன இருக்கிறது. அவசியமில்லை’, அவரை பார்க்க நான் விரும்பவில்லை, அவர் ஒரு கூத்தாடிதானே’

மூரியல் லெஸ்டர் அப்போது தான் உள்ளே வந்தார். காந்தி சொன்னதை இவரும் கேட்டார்… ஆழமான ஒரு பார்வையோடு .. பாபு, என்ன இது… இவரை பார்க்க சம்மதம் இல்லை என யாராவது சொல்வார்களா.. திரையரங்கத்துக்கு சென்று அவரை பார்க்க வரிசை கட்டி நிற்கும் போது… ஒரு முறை பார்க்க மாட்டேனா என உலகே ஏங்கும் போது…. நீங்கள் இப்படி சொல்லலாமா…. இன்றைய தேதியில் இந்த உலகத்தின் ஹீரோ இவர்தான்.

அப்படியா…. என குழந்தையின் லாவகத்தில் சொன்னார் காந்தி. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு இன்னும் ஆழமாய் கேட்டார், அதில் இருந்த அழகு மூரியலை கவர்ந்தது.

பின்னே, சந்தேகமே இல்லாமல்… அவரை திரையில் பார்க்க அனைவரும் விரும்புகிறார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை. எத்தனை கவலைகளை கொண்டு உள்ளே சென்றாலும் நம்மை சிரிக்க வைத்து சிலிர்க்க வைத்திடுவார்.

அப்படியா மெத்த மகிழ்ச்சி…. ஆனால், என் கவலைகளை போக்கி கொள்ள, நான் திரையரங்கத்தை 
நாடுவதில்லை. திரையில் தெரியும் மாயப் பிம்பங்களை உண்மை என நம்பும் எளிய மனது எனக்கு இல்லை. ஜோடிக்கப்பட்ட புனை ஆளுமையை உண்மை என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை, அதனால் தான் இவரை ஒரு முறை கூட பார்த்ததில்லை.

மூரியல்.. காந்தியின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்தார். சரி, என்ன சொன்னால் ஏற்றுக் கொள்வார் என அவசரமாய் யோசித்து, அடக்கமான குரலில் தொடர்ந்தார். இருக்கட்டும் பாபு, உங்கள் கருத்து புரிகிறது, ஆனால் ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி, வட்ட மேசை மா நாட்டுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெஸ்ட் எண்ட் ஹோட்டலுக்கு செல்லாமல் நீங்கள் ஏன் இந்த கிங்க்ஸி ஹாலை தேர்ந்தெடுத்தீர்கள்.

ம்…. காந்திக்கு புரிந்தது. எளிய கேள்விதான், என்றாலும் அது இட்டுச் செல்லும் பாதையும் இலக்கும் புரிந்தது. மூரியல் தன்னை வாதிட்டு வெல்ல கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது புரிந்ததும். தன் பொக்கை வாய் காட்டி …. பதில் சொல்லும் முன் ஆழமாய் பார்த்து விட்டு தொடர்ந்தார். தாங்கள் என்ன நினைத்து இங்கு வந்து தங்க முடிவு செய்தீர்களோ, எப்படி வெஸ்ட் எண்ட் வேண்டாம் கிங்க்ஸியே போதும் என நினைத்தீர்களோ அதே காரணத்துக்காகத்தான்.

ம்… அப்படியானால் உங்களைப் போல் என்னைப்போல் சாப்ளினும் ஒரு ஏழைகளின் பங்காளன். தேடிச் சென்று ஏழைகளிடமே தன் சுயம் தேடுகிறார். எளிமை விரும்பி, பகட்டுக்களும் பளபளப்புக்களையும் விட்டு விலகி செல்ல விருப்பம் உள்ளவர். அவர் ஒரு நடமாடும் சோகக் கழஞ்சியம் எனவும் சொல்லலாம். உலகத்தின் அத்தனை சாத்தான்களாலும் சபிக்கப்பட்டு, தோல்வியின் கனம் புரிந்தவர், ஏழையின் பசி புரிந்தவர் அதனால்தான் அவரால் அடுத்தவரை சிரிக்க வைக்க வேண்டியதன் அவசியமும் சூட்சமமும் புரிகிறது.

திரைத்துறை சார்ந்தவரானாலும் அவர் மேன்மையானவர். பளபளப்பும் படாபடமும் விரும்பாதவர். இந்த சந்திப்பு எங்கே நிகழ்கிறது என பாருங்கள். நம் நண்பர் டாக்டர் கட்டியால் வீட்டில் சந்திக்கிறோம். டாக்டர் கட்டியால் யார், ஒரு சமூக புரட்சியாளர் அல்லவா, கம்யூனிசத்தின் ரியல் தத்துவம் அவரிடம் அல்லவா இருக்கிறது. ஒரு சமூதாயத்தையே, குடும்பமாக மாற்ற முடியுமா, அதன் அங்கத்தினர் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியுமா…. பொது உணவிடம், உறங்குமிடம், இருப்பிடம் கழிப்பிடம் எல்லாம் செய்ய முடியுமா என எண்ணும் பரந்த நோக்குடைய அவரது வீட்டில்.

மேலும்…. கூத்தாடி தானே…. திரைத்துறை தானே, கோமாளிதானே என சொல்லி அவரை தீண்டத்தகாதவராக நாம் சொல்வது முறையா… பொருளாதாரத்திலோ… அல்லது செய்யும் தொழிலிலோ ஏற்ற தாழ்வு இல்லை என சொல்லி விட்டு, கோமாளிதானே என சொல்வது எந்த வகையில் சேர்த்தி….

காந்தி, தலை உயர்த்தி மூரியலின் கண்களை ஊடுருவி பார்த்தார். அதில் ஆழ்ந்த அர்த்தம் தெரிந்தது. அந்த சம்பாஷணையின் ஆழம் புரிந்தது,. காந்தி சிரிக்க,, அங்கே மனித நேயம் மிளிர்ந்தது.

22 செப்டம்பர் 1931

குளிர் இன்னும் பனியாகவில்லை… லண்டனின் தெருக்கள் அழகு கூட்டி, அந்த காலை வேளைக்கு இனிமை சேர்த்திருந்தது. மெல்லிய குலுக்கலுடன் அந்த சொகுசு கார் சாலையில் விரைந்து கொண்டிருந்தது. காந்தி தன் மேல் போர்த்தியிருந்த துண்டை இறுக்கமாய் மூடிக் கொண்டார். மெல்லிய குலுக்கலுடன் வாகனம் நின்ற இடம் மனிதர்களின் தலைகள் நிறைந்து இருந்தது. அது மூரியலின் வீடு.

அங்கங்கே, குழு குழுவாய் மக்கள் தரையில் சாய்ந்திருந்தனர். மது அப்படி அவர்களை சாய்த்திருந்தது, அவர்கள் உடுத்திய உடையில், ஏழ்மையும் குளிருக்கு பக்குவமான கம்பளியும் இருந்தது. சவரம் செய்யாத அவர்கள் முகங்களில், மொழி கொச்சையாகவும் பச்சையாகவும் இருந்தது. காந்தி அருகிலிருந்தவரை கேட்டார்…. இவர்கள் யார்…
மூரியலின் விருந்தினர்கள்.

ஓ… இவர்களை கொண்டுதான் சமதர்ம சமுதாயம் படைக்க முயல்கிறாரா… கேட்டவர் தலை குனிந்தார். காந்தி தொடர்ந்தார். சொல்லக் கூடாதா…. குடியின் தீமை பற்றி…. அருகிலிருந்த இன்னொருவர் சொன்னார், எவ்வளவோ சொல்லியாயிற்று… இங்கு தாங்க முடியாத குளிர், மேலும் மூரியலின் அமைப்பால், எல்லாம் பொது… அதனால் செலவுகள் குறைவு. அதனாலேயே தேவைகளும் குறைவாயிற்று. சம்பாதிக்கும் தேவையும் குறைந்து போனதால், செய்ய பெரிசாய் வேலை இல்லாததால் சோம்பி இப்படி ஆகிவிட்டார்கள்.

அந்த பதில் காந்தியை யோசிக்க வைத்தது. உழைக்க வேண்டாம் என சொன்னால், தேவைகளை இலவசமாக வாரி வழங்கினால்…. சமூகம் எங்கு சென்று விடும் எனும் நிதர்சனம் அவருக்கு சுட்டது… எண்ணங்களுடேனேயே… அவர் நடந்து மூரியலின் வீட்டினுள் பிரவேசித்தார்.
மூரியல் வீட்டினுள் சார்ளி சாப்ளினை தேடி காந்தியின் கண்கள் அலைந்தன. சரோஜினி நாயுடு தான் முதலில் காந்தியின் கண்ணில் தென்பட்டார். வணக்கம் தெரிவித்து விட்டு மேலும் பார்த்த போது, நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு கணவானை கண்டார். இவர்கள் காட்டிய சார்லி சாப்ளினின் அந்த புகைப்படத்துக்கும் நேரில் இவரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே.
புகைப்படத்தில் கோமாளி, இப்போதோ கணவான் அல்லது ஜெண்டில் மேன்…

இந்த எண்ணங்களுடனேயே, காந்தி மெல்ல நடந்து வந்து, சாப்ளின் அருகில் இருந்த தரையில் அமர்ந்து கொண்டார்.

                                                       அடுத்த பகுதியில் நிறைவு பெறும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக