பக்கங்கள்

மக்ரோன் (சிறுகதை) - நிறைவு பகுதி


சிந்தியா டீச்சரின் வெண்ணுடையும், குங்குமம் தொலைத்த நெற்றியும், தளர்ந்த முகமும் கண்ட அதிர்ச்சியில் செந்தில், கசாலியிடம் குனிந்து காதோரன் கேட்டான்,

எப்படா கல்யாணமாச்சு, புருஷன் எப்படி செத்தார்…
எனக்கு என்னடா தெரியும்,
எனக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் போது, கல்யாணம்ல்லாம் ஆகலியே…..
அதெல்லாம் சரி… பூவ விட்டுட்டு, பிஸ்கட் பாக்கெட்ட மட்டும் கொடுத்து சமாளிச்சுட்டு போயிருவோம்…
மெல்லிய நடையில் நண்பர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். முன் கூடம் தாண்டி, ஹாலுக்குள் அமர்ந்தனர்.

செந்தில், அங்கிருக்கும் மேஜையை பார்த்தான். இது போலவே அலங்கரிக்கப்பட்ட ஒரு மேசை விரிப்பில் தான் அவன் டியூஷன் படித்திருக்கிறான். எவ்வளவு விரைவாய் காலங்கள் செல்கின்றன. இப்போது தான் படித்தது போல் இருக்கிறது. அதற்க்குள் தான் எத்தனை மாறுதல்கள்.

‘நீ யூஎஸ் ல இருக்கிறேன்னு கேள்விப்பட்டேன்… ஆர் யூ இன் ஃபாங்கிங்..
ம்… டிரெஷரி…
நல்லது… டூவெல்… மை விஷ்ஷஸ்… கல்யாணமாயிருச்சா
ம்…. ஒரு பையன் இருக்கான்
கூட்டிட்டு வரல
அடுத்த தடவ கண்டிப்பா….
உன் பேரு கசாலிதான, என்ன ஞாபகமிருக்கா, நேஷனல் டேப்ரிக்கார்டர் கொடுத்தது நீதான….
டீச்சர், அது எங்க அண்ணனாயிருக்கும். டேப்ரிக்கார்டர் நல்லாயிருக்குதுல்ல… என்ன இப்ப கேசட்டுத்தான் கிடைக்கிறதுல்ல…. அதுனால என்ன சிடி ப்ளேயர் வாங்கிக்கோங்க… என்ன வேணும்னாலும் இனிம வாங்க… இது கடையோட கார்டு, ஒரு பல வண்ண விசிட்டிங்க் கார்டு எடுத்து கசாலி கொடுத்தான்.
ஓ… கண்டிப்பா…. ஒரு நிமிசம் இருங்க, குடிக்க எடுத்துட்டு வர்றேன்….
சட்டென திரும்பி உள் சென்றார். செந்திலுக்கு கொஞ்சம் அவஸ்தை. கசாலியிடம் திரும்பி, வந்திருக்கவே வேண்டாமோ… என குசுகுசுத்தான்…
ஏம்ல,
இல்ல… அவங்கள நல்லவிதமா பாத்தது, இப்படி பாக்கும்போது மனசுக்கு ஒரு மாதிரியா இருக்குது… பழைய நினைவுலயே இருந்திருக்கலாம்ன்னு…. என சொல்லிவிட்டு வீட்டை பார்த்தான். அதே சுத்தம், ஒவ்வொரு பொருட்களும் அதே இடத்தில் இருந்த நேர்த்தி…. நாற்காலியின் முன் இருந்த குட்டி மேசையில் ஒரு புத்தகம்….

கசாலி வாசித்தான்…………. யேசு கல்லா குலுக்குகிறார்….
செந்தில் சட்டென திரும்பி பார்த்து…. அடப்பாவி, சரியா படிறா…. யேசு கல்வாரி குழுமத்தினர்..... சரியா வாசிடா…

சாரிப்பா… இங்கிலிஷ்ன்னா கோர்வையா வாசிச்சுருவேன்… இது தமிழ்… அதுவும் போக இது புரியாத தமிழ்.. அதுதான்… என கூறிக் கொண்டே… புத்தகத்தின் உள்ளே திருப்பினான்…. பளபளவென வண்ணத்தில் ஒரு குடும்பத்தின் குரூப் ஃபோட்டோ… அதன் கீழ் அச்சிடப்பட்டு இருந்த வாசகம்.. சகோ. கூல் குதோகரன் மற்றும் குடும்பத்தினர் என ஒரு ஃபோட்டோ இருந்தது. 8 பேர், காமிராவை பார்த்து வசிகரமாய் சிரித்தபடி விலை உயர்ந்த ஆடையில் மின்னினார்கள்.

அற்புத சுகமளிக்கும் கூட்டம் 18ம் தேதி, இளைஞர்களின் எழுப்புதல் கூட்டம் 25 தேதி உபவாசக் கூட்டம் 28ம் தேதி, பிசாசு ஓட்டும் கூட்டம் 30ம் தேதி, என அட்டவணை இட்ட ஒரு குறிப்பு இருந்தது. புத்தகத்தை மூடி விட்டு கசாலி பின் நகர்ந்து இருந்தான்.

ஒரு தட்டில், சில பிஸ்கெட்டுகள், இரு கோப்பை தேனீர் என டீச்சர் வந்தார்.
ஐய்யோ.. இதெல்லாம் எதுக்கு…. என கூறிக்கொண்டே, பையினுள் கைவிட்டு, மல்லிகை பூவை கவனமாக தவிர்த்து விட்டு பிஸ்கெட்டை மட்டும் எடுத்து நீட்டியவாறு சிரித்தான் செந்தில்.

தேங்க்ஸ்… அடுத்த முறை வரும் போது குடும்பத்தையும் கூட்டிகிட்டு வா…
டீச்சர், விட்டா அவன் புள்ளைக்கு உங்களையே டியூசன் சொல்லி கொடுக்க சொல்லுவான்…. சிரித்தபடி சொன்னான் கசாலி. தேனீரை ஒரு முடக்கில் குடித்து விட்டு, சரி கிளம்பலாம் என்பதாய் நண்பர்கள் இருவரும் எழ…. ஒருவர் வீட்டுக்குள்: வந்தார்…..சிரித்தபடி வந்தவர், சிந்தியா டீச்சர் அருகில் சென்று, அவரது தோளில் கை போட்டு அமர்ந்தார்.

செந்தில், கசாலி இருவரும் அமைதியாய் சோபாவில் மறுபடியும் அமர்ந்தனர். டீச்சர் சிரித்தபடி… ம்…… இது என்னோட ஸ்டூடண்ட்… பேரு செந்தில்,இப்ப யு எஸ்ல இருக்கான்… என சொல்லிவிட்டு, செந்தில் பக்கம் திரும்பி, ஹீ இஸ் மை ஹஸ்பண்ட்… பீட்டர் என்றார். செந்திலுக்கு அதிர்ச்சி… திரும்பி கசாலியை பார்த்தான். கசாலி அதிர்ச்சியில் வாய் திறந்து இருந்தது. செய்வதறியாது நின்றான். பின்னர். வாயை சட்டென மூடி… குட்டீவினிங் சார்…. உங்கள பாத்திருக்கேன் என்றான்

செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. என்ன செய்வது, எதை கேட்பது என புரியாமல்… நேரடியாய் கேட்க சங்கோஜப்பட்டு கொண்டு, எதை எதையோ பேசிக்கொண்டிருந்தான். பீட்டரின் வேலை, தூத்துக்குடியின் சீதோஷணம் என ஏதேதோ…. ஆனால் எப்படி கேட்பது என மட்டும் புரியவில்லை.


சரி கிளம்புறேன் டீச்சர், இன்னிக்கு மாதா கோவிலுக்கு போகணும்… திருநாள் இல்லியா…. நீங்க வரல… வாங்க ஒண்ணா போயிரலாம், டிராப் பண்றேனே…

டீச்சர் பதில் சொல்லாது, ஒரு நிமிடம் மௌனமாய் இருந்துவிட்டு பின்னர் மெதுவாக... இல்ல நாங்க இப்ப அங்க போறதில்ல
என்ன டீச்சர், நான் யுஎஸ்ல இருந்து இங்க வந்ததே இந்த திருவிழா பாக்கத்தான்…. வரலேங்கிறீங்களே…
இல்ல…. நீ போயிட்டு வா… நாங்க இப்ப ஆர்.சி கோவிலுக்கு போறதில்ல….

கோவிலுக்கு போறதில்லேண்ணா,
இல்ல இப்ப நாங்க பிலீவர்…
ஓஹோ… ???? அப்படின்னா
இது ஒரு பிரிவு… எங்க சபை வந்து பிரதர்…. கூல் குதோகரன் சபை.

ஓ… இவர்தான் மாதாவ பாக்க கூடாதுன்னு சொன்னாரா….????? மேசையில் இருந்த புத்தகத்தை விரித்து புகைப்படத்தை காண்பித்து பின்னர் மேசையில் வைத்தான் செந்தில். 
ஆமா… மாதா கூட என்ன சண்டை…..அவங்க என்ன தப்பு பண்ணாங்க

இல்ல….. விக்கிர ஆராதனை செய்யுறதில்ல. ஒரு சிலைய அல்லது சுருவத்த வணங்கிறதில்ல…
டீச்சர், நீங்க எனக்கு கத்துக் கொடுத்த ஆசிரியர். ஒரு ஆசானா உங்கள மதிக்கிறேன், ஆனா சில உலக விஷயங்கள நீங்க சரியா புரிஞ்சிக்கலையோன்னு நினைக்கிறேன். உங்களுக்கு எப்படி இத சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல. ஆனா நீங்க இன்னும் இத பத்தி சரியா யோசிக்கணும்ன்னு மட்டும் தோணுது. 

நான் என் ஃப்ரெண்ட் கசாலி, அவங்க ஃபேமிலி எல்லாருமே நாங்க இப்ப கோவிலுக்குத்தான் போறோம். ஏன் இன்னிக்கு தூத்துக்குடியில மத வித்தியாசம் இல்லாம, எல்லோருமே கை கூப்பி…. அம்மா…மாதான்னு தான் இந்த கோவில்ல கூம்பிடப் போறோம். அதை செய்யுறதால எங்க மத நம்பிக்கையோ அல்லது மரியாதையோ நாங்க இழக்கிறதில்லையே…

ஏன் வேளாங்கன்னியில கூட எல்லா மதத்தினரும் வர்றாங்க… இஸ்லாம் சகோதரர்கள் கூட, ஈசா கடவுளின் தூதர்ன்னு கிறிஸ்த்தவத்த ஒத்துக்கிறாங்க…. ஐயப்ப சாமிக்கு மாலை போடுறவங்க கூட தர்க்கா வழிபட்டுத்தான் போறாங்க… இப்படி இருக்கும் போது, உங்க மதத்துக்குள்ளயே நீங்க சண்டை போடுறதும், போகாம இருக்கிறதும்… எனக்கு தப்பா தோணுதே.
ஆன்மீகம் என்னிக்குமே ஒற்றுமைய தான் கத்துக் கொடுக்கணும். அது பிரிவினை வாத்தையோ, அல்லது ஏற்ற தாழ்வுகளையோ சொல்லுச்சுன்னா அங்க ஆன்மீகம் இல்ல… வியாபாரம் இருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும்…

உங்கள முதல் முதல்ல பாத்தப்போ, நீங்க விதவையோன்னு தப்பா நினைச்சேன்… வாங்கிட்டு வந்த பூவ கூட மறைச்சேன். ஏன் இந்த சமுதாய முரண்பாடு… தமிழ் நாட்டுல விதவைகளுக்கே அப்படி ஒரு அடையாளம் இருக்க கூடாதுன்னு போறாடுனவர் பெரியார்… 

கசாலி உங்களோட பழைய தோற்றத்த பாத்துட்டு நீங்க பிராமின்னு நினைச்சிருக்கான்… சமூகத்தில இதுபோல மனிதனா.... வெறும் மனிதனா வாழுறதுதான ஆரோக்கியம். இப்படி அடையாளங்களினால, சமூக முரண்பாடுகளா வாழுறதோ… இல்ல தனக்குன்னு ஒரு அடையாளத்த வரிஞ்சு வைச்சிக்கிறதோ ஆரோக்கியமில்லியே…  

டீச்சர் நீங்க எதனால பூ வைக்கிறதில்ல… பொட்டு வைக்கிறதில்லை…..
எங்க சபையில நாங்க யாரும் வைச்சுக்கிறதில்ல….
அதான் எதனால, தயவுசெஞ்சு சொல்லுங்களேன்… நான் தெரிஞ்சுக்கிறேன்.
பூ, நகை இதெல்லாமே சாத்தான்… இதுக்கு மயங்கி அடிமையாயிட்டா நாம பரலோக ராஜ்யமே போக முடியாது.

ஒத்துக்கிறேன் டீச்சர், பூ நகை இந்த மாதிரி விஷயங்களுக்கு, புற அழகுக்கு அடிமையாயிட்டா, நாம வாழ்க்கை சிக்கலாயிரும். அது நெஜம்தான். ஆனா அளவான அழகான விஷயங்களின் ரசனைய தப்புன்னு எப்படி சொல்லலாம். பேராசை இல்லாத மனசு இருந்தா போதாதா…  

நீங்களே சொல்லுங்க… மல்லிகை பூவில நல்ல மணம் இருக்குது, அதை மதத்தின் பெயரால ஏன் ஒதுக்கணும்.

சரி பூவ விடுங்க…நகை…. நகை போடுறது எதனால…. அழகுக்காக மட்டுமா... இல்லையே…. ஏதாவது அவசரத்துக்காக, பொருளாதார தேவைக்காக, நம்மோட ஒரு வித சேமிப்புதானே இந்த நகை. ஒரு அவசரத்துக்கு அடகு வைச்சு பணம் புரட்டத்தானே நகை போடுறோம். அதனால தான் அத பெண்கள் அணிய ஆரம்பிச்சாங்க. பேராசை கூடாது தான்,  நகை சேக்குறதே வாழ்க்கைன்னு திசை மாறிட கூடாது தான், ஆனா பாதுகாப்புன்னு சொல்லி, நம்ம சேப்ட்டிக்காக ஒரு நகைய போடுறதுல தப்புல்லியே…

இல்ல, உலகத்தோட இச்சைகள் சாத்தான் உங்கள பிடிச்சிருக்கு… அந்த ஆசை தான் உங்கள படுகுழியில தள்ளிடும்…

சரி, ஒக்கே....  நகை வேண்டாம், பூ வேண்டாம், ஆனா நார்மலா இருக்கலாமே… இப்படி வெள்ளை உடையும், உங்கள பாத்ததும் தெரிஞ்ச்சுக்கிற மாதிரி ஏன் இந்த கோலம். மனுசங்க எல்லாமே ஒண்ணுதான, மனிதர்கள்ல நான் இந்த சாதி நான் இந்த மதம்ன்னு அடையாளங்கள் உருவாக்கி கொள்றது சரியா….

எங்க சபைதான் சரியான பாதை. இதில சேராதவங்க எல்லாம் அழிஞ்சுருவாங்க… பிரதர்…. கூல் குதோகரன் சபை.

எனக்கு தெரியல டீச்சர், சமூக சீர்திருத்தம் செய்யுறதையோ, ஆன்மீக உணர்வை மேலோங்க செய்வதையோ செய்ய வந்த மாதிரி தெரியல இந்த… பிரதர்…. கூல் குதோகரன் பாக்கும் போது.. பரம்பரை பரம்பரையா குடும்பம் குடும்பமா ஆசி வழங்க இவங்களுக்கு யாரு அனுமதி தந்ததுன்னு எனக்கு தெரியல…

இன்னிக்கு நான் தூத்துக்குடி வந்திருக்கேன்னா… அதுக்கு முதல் காரணம் திருவிழா கொண்டாடுற இந்த கிறிஸ்த்தவ மாதா… அடுத்தது… என்ன வரச் சொல்லி கூப்பிட்ட இஸ்லாம் சமூகத்து கசாலி… வந்த நானோ திருச்செந்தூர் முருகனை இஷ்ட தெய்வமா வரிச்சிக்கிட்ட நான் ஒரு வேறு குழு…

இந்த கசாலி கூப்பிட்டு, செந்தில் நான் வந்தது …….. இங்கயிருக்கிற பனிமய மாதாவ பாக்குறதுக்கு. இதுல தான் உண்மையான அன்பும் சகோதரத்துவமும் இருக்குது. நாங்களே பிரிவு பார்க்காம மாதாவ அன்பா பாக்குறோம் நீங்க ஏன் உங்களுக்குள்ள பிரிஞ்சு இருக்கீங்க…


டீச்சர், நாளைக்கு என் பேரு கொண்ட திருச்செந்தூர் போறோம்… கசாலிதான் கார் ஓட்டுறான். நிச்சயமா இன்னிக்கு நான் மாதா கோவில் போய் கும்பிட்டதால, நாளைக்கு நான் மதம் மாற போறதில்ல… கசாலியும் அவன் மதத்த விடப் போறதில்ல…. சரியான புரிதல் இருந்தா இன்னும் வாழ்க்கை சுகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்…

பைக்குள் கைவிட்டு, பூவை வெளியில் எடுத்தான். டீச்சர், இந்த பூவை நீங்க வைச்சிக்கிட்டாலும் சரி, இல்லேண்ணா ஜீசஸ்கிட்ட கொடுத்தாலும் சரி, நீங்க பயமில்லாம, சுதந்திரமா அன்பா ஆக்கபூர்வமா இருக்கணும்ன்னு தான் உங்க ஸ்டூடண்ட் ஆசைப்படுவேன்... என சொல்லிவிட்டு வெளி வந்தான். கசாலி வந்து அவனை அணைத்து கொண்டு தோளைக் இறுக்கினான். அந்த வலியில் மனிதமும் மத நல்லிணக்கமும் பளிச்சிட்டது.

4 கருத்துகள்:

 1. இரண்டாம் பகுதியை படிக்கும் முன்பாகவே முடிவை முதலில் எழுதி விட்டேனோ என்று நினைக்கிறேன்... அவ்வளவு அருமை... இன்று ஒரு கிறிஸ்தவன் மற்றொருவனை பார்க்கும் போது R u a Believer (நீ இரட்சிக்கப்பட்டவனா) என கேட்கும்போது மனது வலிக்கிறது. ஏனென்றால் இரட்சிப்பு என்பதே பலருக்கு இங்கே தெரியவில்லை... இரட்சிப்பு என்பது பாவத்தில் இருந்து விடுதலை என்றால் முழுக்கு ஞானஸ்நானம் பெற்ற அனைவருமே பாவத்தில் இருந்து விடுதலை பெற்றவர்களா.... அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 2. அருமையான பளிச் கதை. இன்றைய நிலையை வெகு கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டும் மகத்தான கதை. நல்ல நடை. ஆழ்ந்த சிந்தனை. மத நல்லிணக்கத்துக்கு இதைவிட சிறப்பாக அடித்தளம் அமைக்க முடியாது. உள்ளத்துக்குள் ஊடுருவிச் சென்று உலுக்கும் உன்னதமான படைப்பு !! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றி... நன்றி... திரு. Vas Charles

  ////.. இன்று ஒரு கிறிஸ்தவன் மற்றொருவனை பார்க்கும் போது R u a Believer (நீ இரட்சிக்கப்பட்டவனா) என கேட்கும்போது மனது வலிக்கிறது. ஏனென்றால் இரட்சிப்பு என்பதே பலருக்கு இங்கே தெரியவில்லை.../////

  வாவ்... மிக சரியான ஒரு உணர்வு... தங்கள் மனமும் சிந்தனையும் நன்கு புரிகிறது...

  இப்படி கேட்கும் மனிதர்களை பார்க்கும் போதும், அவர்களின் பயங்களை பார்க்கும் போதும்... அவர்களின் வாழ்க்கைப்புரிதலை பார்க்கும் போதும்... அவர்களின் பணம் சுரண்டப்படுவதை பார்க்கும் போதும்........ எனக்கு வலிக்கிறது....

  //// இரட்சிப்பு என்பது பாவத்தில் இருந்து விடுதலை என்றால் முழுக்கு ஞானஸ்நானம் பெற்ற அனைவருமே பாவத்தில் இருந்து விடுதலை பெற்றவர்களா.... /////


  வாவ்............. அருமையான கருத்து....

  ///// அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்....//////////// மிக்க நன்றி... மிக்க நன்றி...........

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி... திரு... JoeBasker

  /// இன்றைய நிலையை வெகு கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டும் மகத்தான கதை. நல்ல நடை. ஆழ்ந்த சிந்தனை./////

  இதை எதிர்பார்த்துத்தானே இயங்கினேன்... என்ன தவம் செய்தேன் இங்கனம் பாராட்டுப் பெற... மிக்க நன்றி...

  //// மத நல்லிணக்கத்துக்கு இதைவிட சிறப்பாக அடித்தளம் அமைக்க முடியாது. உள்ளத்துக்குள் ஊடுருவிச் சென்று உலுக்கும் உன்னதமான படைப்பு !! வாழ்த்துக்கள்./////

  கதையின் கரு வாசகர்களை சென்றடையுமா எனும் என் சந்தேகத்தை தங்கள் வார்த்தைகள் தவிடுபொடியாக்கின.......... மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு