பக்கங்கள்

உன்னை நான் பார்க்கையில டர்ங்... ங்... ங் ....க்குது......

இப்பதிவுக்கு மூணு தலைப்புக்கள் தோணுச்சு.

உன்னை நான் பார்க்கையில டர்ங்... ங்... ங் ....க்குது......
கண்ணுக்குள் முள்ளை வைத்து , யார் தைத்ததோ

விழிகளிலோ கருந்திரை, நமக்கோ கண்ணீர் திரை

பர்ஸ்டே இருக்கட்டும் என்று விட்டு விட்டாலும், மீதமுள்ள இரண்டையுமே இங்கு சொல்லி விட்டேன்.

ஒரு வாரம் அடிச்சுப் புடிச்சு வேலை செஞ்சு அப்பாடின்னு டியூட்டி மூடியற நேரம், கன ஜோரா பாட்டு கச்சேரி ஆரம்பம். யூ ஏ ஈ தமிழ்சங்கம் ஏற்பாடு செய்த நம்பிக்கை ஸ்வரங்கள் 2010 எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி. குடும்பமாய் சென்று எங்கள் மாலையை இனிமையாக்கினேன்.
நன்றி.... யூ ஏ ஈ தமிழ்சங்கம்

இந்த இசை நிகழ்ச்சி குழு, வாசக நேயர்கள் அனைவருக்குமே அறிமுகமானவர்கள் தான். ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...’ என தேசிய விருது வாங்கிய தன்னம்பிக்கை தரும் பாடல் ஒன்று உண்டல்லவா. அதில் வாசிக்கும் இசைக்குழுவே. அதில் குளிர் கண்ணாடி தூக்கி தன் கண்ணீர் துடைப்பாரே அவர்தான் ஒருங்கிணைப்பாளர், பெயர் கோமகன். தொடர்ந்து 50 மணி நேரம் இசை நிகழ்ச்சி நட்த்தி கின்னஸ் சாதனையை கிஸ் பண்ணினவர். லேட்டஸ்ட்டா, முருங்கைக்காய் பாக்கியராசுகுட்டி ’முதல் முதலா’ என எடுக்கும் படத்துக்கு இசையமைப்பாளராகவும் இணைந்துள்ளாராம். வெரி குட், வாழ்த்துக்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடலாக ‘கடவுள் உள்ளமே ஓர்... கருணை இல்லமே’ என கச்சேரி தொடங்கியதும். அந்த தேனினும் இனிய குரலில் அந்த பாடகி பாடத்துவங்க கட்டுப்பாடு இல்லாது நமக்கு கண்ணீர் வழிகிறது. அவர்கள் விழிகளிலோ கருந்திரை, நமக்கோ கண்ணீர் திரை. எதற்கு கண்ணீர். கழிவிரக்கமா. இல்லீங்கோ சாமி சத்தியமா இல்லிங்கோ..... கவலைப்படும் போது மட்டும் நமக்கு கண்ணீர் வருவதில்லை. உணர்ச்சி வயப்படும்போது நம்மை அறியாமல் கண்ணீர் பிரசவிக்கிறது. அது மகிழ்சியாயிருந்தால் கூட.

மைக்கில இன்னும் வால்யூம கூட்டு, எக்கோவ ஏத்து, இப்ப டிரம்ஸ் அடிக்கணும், ஓகே இப்ப பாட தொடங்கலாம் என கண்டக்டர் நின்று கொண்டு கையசைப்பாரே. அப்படி ஒரு வசதி இவர்களுக்கு இல்லை. அதற்கென கையில் ஒரு ஜாலர் வைத்து கொண்டு, சரளமாய் கோமகன் நட்த்தும் ராஜ தர்பார் நம்மை அதிசயிக்க வைக்கிறது. என்ன ஒரு நேர்த்தி, சுலபமாய் சுழன்று வருகிறார் மனிதன்.

எலக்ட்ரானிக் பேட் வாசிக்கும் நண்பர் மட்டும் நம்மை போல் பார்க்க ஊனக் கண் உடையவர். அதிலும் ராஜ ராஜ சோழன் நான் எனும் பாடல் இசை ஆரம்பிக்க, யூ ஏ ஈ தமிழ் சங்கத்தின் தலைவர் ரமேஷ் , தோள் தொட்டு அணைத்து கோமகனை பார்வையாளர்களிடம் அழைத்து வர, உற்சாகமாய் கை குலுக்கி கொண்டு பிசிறில்லாமல் பாடினாரே, அரங்கத்தின் மொத்த பாராட்டும் மழையாய் பொழிந்தது.

இளமை எனும் பூங்காற்று எனும் அற்புத பாடலுக்கு வாருங்களேன் எங்கள் உலகுக்கு. ஒரு சில நிமிடங்கள் எங்கள் பார்வையில்லா உலகுக்கு விசா தருகிறேன் என கோமகன் அரங்கத்தின் அத்தனை விளக்குகளையும் அணைக்க சொல்லிவிட்டு பாட, நமக்கு அந்த இருட்டு உலகின் விலாசம் தெரிகிறது. புது பரிமாணம் தெரிகிறது. இசையின் இன்னொரு முகம் தெரிகிறது, நன்றி கோமகன். அதிலும் விளக்குகள் அணைக்கப் படும் அந்த வேளையில் நம் இதயத்தில் வேல் பாய்ந்த ஒரு வார்த்தை சொன்னார் அவர். ஹாங்.... லைட்டெல்லாம் ஆப் பண்ணியாச்சா என கேட்கும் போது, அப்போ விளக்கு இருக்கா இல்லையான்னு கூட தெரியாதோ, சே என்ன கொடுமை என யோசிக்கும் போது இதயம் வலிக்கிறது.

இயற்கை உபாதைக்கென அடுத்தவர் அழைத்து சென்று விட்டு, வந்து உட்கார வைத்த்தும் அதே இடத்தில் இருந்து கொண்டு அவர்கள் நிகழ்ச்சியை ரசிக்கும் பாங்கு பார்க்கும் போது இப்படி ரசிக்கணுமோ என நம்மை கேள்வி கேட்கிறது.

இளைய தளபதியின் பாடல்கள் நல்ல துள்ளலிசையில் கலகலப்பாக்கி நம்மையும் தாளம் போட வைக்கிறது. என்றாலும் பாடலின் வரிகள் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது. என் உச்சி மண்டையில கிர்ருங்குது என பெண்ணை பார்த்த்தும் தோன்றுவதை சரியாத்தான் சொல்லியிருக்காங்க என்றாலும் வாடா மாப்புள்ளே.... வாழை மரத் தோப்புல வாலிபால் ஆடலாமா எனும் போது... ம்... அதிலும் இவர்கள் பாடும் போது, கொஞ்சம் நெருடுகிறதே.

கச்சேரியின் இடையில் கலகலப்பாய் ஒரு பல் குரல் நிகழ்ச்சி. தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்ற செந்தில். பாவம் கால் இழுத்து இழுத்து வந்து நம்மை கலகலப்பாக்கினார் செந்தில். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என நமக்கு பழமொழிதான் சொல்லப்பட்ட்து. அது செந்திலுக்கு வாழ்வையே கொடுத்திருக்கிறது. அவரது வாய்சில் எத்தனையோ மனிதர்கள், மிருகங்கள், வாத்தியங்கள், மிமிக்கிரியின் மிட்டா மிராசு.

பின்ன ஒரு வாத்தியமும் இல்லாமல், வாயிலேயே கிங்காங் சினிமா டிரைலர் காட்டினா சும்மாவா. அதிலும் பூட்டிய அரங்கத்தினுள், செத்துப் போன அசோகன், எம்.ஜி.யார், கிருபான்ந்த வாரியர், பாக்கு மென்று கொண்டே மூப்பனார் என எல்லாரும் குரலாய் நம் கண் முன் வந்தார்கள். அவர் ஒரு எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிக்கேஷன் இன்ஜினியராம்.

ஈசிஈ படிச்சிருக்காரு ஆனா இரண்டு ஈ பறந்து போச்சு, வெறும் சி மட்டுந்தான் இருக்கு, அதான் சிரிப்பு மட்டுந்தான் இருக்கு. பறந்து போன ஈ பார்வையாளர்கள் வாயில வந்து உக்கார்ந்து கிட்டு நம்மள் சிரிக்க வைக்குது என்ற சொன்ன விளக்கம் சூப்பர். சொன்னது நம்ம ஈரோடு மகேஷ்.

அதாங்க நம்ம சன் டிவி கலக்கப் போவது யாரு மகேஷ். நல்ல மேடை ஆளுமை இருக்கிறது. சாவாசமா, நண்பர்களிடம் பேசுவது போலவே மேடையிலும் பேசினார். மேடையின் முதல் ரோவில் ஒரு பெண்மணி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க. ‘யக்கா நீங்க அடங்க மாட்டீங்களா, ஒரு ஓரமா உக்காருங்க என சொல்லும் அளவுக்கு யதார்த்தம். பாவம் லோக்கல் ஆர் ஜேக்களை அவர் வாரிய வாரு, கொஞ்சம் எல்லை மீறவே, அவர்கள் பாவம் நெளிந்தார்கள். தட்டி கொடுத்து அவர்களையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கலாமே, ஏன் அவர்களை துரத்தணும்.

உடல் குறைகள் இறைவனின் கொடை என்றால், அதை உடை என சொல்லும் அந்த கலைஞர்களின் தன்னம்பிக்கை, முயற்சி நமக்கு ஒரு முன்னுதாரணம். அதிலும் இங்கு உள்ள அனைவரும் நல்ல ஒரு பணியில் உள்ளனர், அந்தா... கிடார் வைச்சிருக்காரே லீட் கிடாரிஸ்ட் அவர் ஒரு யூனிவர்சிட்டி புரபோசர் என சொல்லும் போது, நாம் கடந்து சென்று சாதிக்க வேண்டிய முயற்சிகளை முடுக்கி விடுகிறது.

நல்ல ஒரு நிகழ்ச்சி, வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

 1. அருமையான தொகுப்பு...நிகழ்ச்சிக்கு செல்லாதவர்கள் இதை வாசித்தால் நிகழ்ச்சிக்கு சென்று வந்த அனுபவம் கிடைக்கும்...வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. /// கிளியனூர் இஸ்மத் சொன்னது…
  அருமையான தொகுப்பு...நிகழ்ச்சிக்கு செல்லாதவர்கள் இதை வாசித்தால் நிகழ்ச்சிக்கு சென்று வந்த அனுபவம் கிடைக்கும்...வாழ்த்துக்கள்//


  வாங்க, கிளியனூர் இஸ்மத். மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  நமது யூ ஏ ஈ தமிழ் சங்கத்தின் தலைவரும் இதே கருத்தை சொன்னார்கள். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு