பக்கங்கள்

பயங் கொள்ளல் ஆகாது பாப்பா

பதிவுக்கு பொருத்தமாய் இருந்ததால் பாரதியின் வரியை இரவல் வாங்கி விட்டேன். இல்லாமல் முதல் வரிக்கும் இதற்கும் சிநானப் பிராப்தி கூட இல்லை. மேலும் மூன்றாவது நான்காவது வரி தெரிந்து படித்து புரிந்து செய்யப்பாட்டு வினை ஆனால், ஆகும் டேமேஜுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

’சங்கர சங்கர சம்போ
இங்கே சாப்பிடாத பிள்ளை உண்டோ’

அடிக்குரல்ல இப்படி பாடிக்கிட்டு அழுக்கா வீடு வீடா ஒரு சாமியார் சுத்துவாரு. அவருக்கு, மண்டையிலும் தொண்டையிலும் கொண்டை. கக்கத்தில ஒரு துணி பை வைச்சிருப்பாரு அதுல சாப்பிடாத பிள்ளைய பிடிச்சிட்டு போயிருவாறு. சீக்கிரம் சாப்பிட்டுறு ராஜா.....

என்று ஆச்சி பயந்த மாதிரி நடித்துக் கொண்டே சொல்ல, எச்சி முழுங்கி விட்டு அரக்கப் பரக்க பார்த்து விட்டு படுக்காளி நானும் சத்தமில்லாமல் சாப்பிடுவேன். அப்போது வயது நான்கு இருக்கலாம்.

என்னை மட்டும் அல்ல, இந்த சங்கர சங்கர சம்போ சாமியார், மூன்று நான்கு தலைமுறையாய் எங்கள் குடும்பத்தை மட்டுமே டார்கட் பண்ணி, சுற்றி சுற்றி வருகிறார். சந்தோசமான ஒரு தருணத்தில் அப்பா அம்மா, ஆச்சி எல்லாம் சொன்னது. எந்த ஊருக்கு நாங்கள் சென்றாலும், ஏன் விமானம் ஏறி, சென்றால் கூட, சாமியாரும் விசா வாங்கி அங்கும் வந்து விடுவார். வயசு கொஞ்சம் பெரிதானதும் நானும் தேடு தேடு என்று தேடினேன். ஹுகும் கிடைக்கவே இல்லை. அந்த நாள் வரை. எந்த நாள் ????

பயங்காட்டும் பதவிக்கு படுக்காளியும் வந்த போது. அதாவது நான் தகப்பனாகி பிள்ளைக்கு அமுதூட்ட பணித்த போது. சும்மா இருக்குமா நம்ம புத்தி. என் பணி குழப்பமாய் சிந்திப்பதே என்று சூளுரைத்து விட்டு இதை பத்தி யோசித்த்து.

இது சரியா. ஒரு சோறு ஊட்டுறதுக்கு பிள்ளைய பயங்காட்டலாமா.

சுத்தி முத்தி பார்த்தேன். அக்கம் பக்கத்து வீட்டெல்லாம். காக்கா காட்டி, இரவில் நிலவ காட்டி கவனத்தை சிதறடித்து கவளத்தை ஊட்டும் ஒரு வகை தாயார்கள். ஆட் காட்டி விரலை வாய்க்குள் திணித்து பிளந்து மற்ற விரல்களில் உள்ள உணவை திணிக்கும் வன்முறை கோஷ்டிகளாய் சில தாய்மார்கள். என இரண்டு வகை பார்த்தேன்.

மூன்றாவதாக ஒரு புது முறை நான் பரிசோதித்து பார்த்தேன். பகுத்தறிவு வழி.

உண்ணும் நோக்கம் பயன்பாடு என்ற விசயத்தை சொல்லுதல். ம்கும்... வேலைக்கு ஆக வில்லை. பகுத்தறிவு பப்பு வேகவில்லை. பொறுமையும் இல்லை. சரி ஏன் வீண் வேலை என்று காலம் காலமாய் செய்ததை செய்தேன். வந்தார் நம்ம சங்கர சங்கர சம்போ சாமியார். அதே கொண்டை மண்டையிலும் தொண்டையிலும். அதே பை கம்கூட்டிலே. கை மேல் பலன். சட்டி சோறும் காலி, அடுத்தடுத்த நாளும் வேலை ஈசி.

நண்பர் கூட சொன்னார். ‘என் பையன், சேட்டை. தாங்க முடியாதப்போ இப்படி சொல்லுவேன். ”கூப்பிட்டுர வேண்டியது தான்”. ‘யார... கந்தசாமியவா...’ என பையன் பதிலுரைப்பான்.

கோழி தூவல் பறக்க, சுவரில் கால் பதிக்கும் கந்தசாமி, காற்றில் பறந்து பறந்து வரும் முகமூடி, நண்பரின் மகனுக்கு பீதி.

பயங்காட்டுவது எளிமையானது. நோக்கம் நல்லது என்றாலும் பசு மரத்து ஆணியாய் ஒரு பய உணர்ச்சி நல்லதா. அஞ்சுவது அஞ்சாமை பேதமை, என வள்ளுவர் வாய் மொழிந்தாலும் யாருக்கும் எதற்கும் அச்சமில்லை எனும் மனித ரவுத்திரம் நம் பிள்ளைகளுக்கு நல்லதோ.

2 கருத்துகள்:

  1. நல்ல ஆழமான சிந்தனை.

    பட்டுக்கோட்டையார் சொன்னார்:

    வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று

    விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க - உன்

    வீரத்தைக்கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க - அந்த

    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

    வேடிக்கையாகக்கூட நம்பி விடாதே - நீ

    வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தது வெம்பி விடாதே

    சின்னப்பயலுக்கும் (சின்னமயிலுக்கும்) சொன்ன இந்த சேதியை புரிந்து கொள்ளும் வயது வரும் வரை நீங்கள் பயம் காட்டுங்கள். பயன் கிட்டும். பின்னர் அவர்களே உங்களுக்கு "அச்சமில்லை அச்சமில்லை" சொல்லித்தருவார்கள்

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள். நீங்களே சொன்ன பின் வேறு என்ன.

    பயங் காட்டுவோம், பயன் கிட்டும்.

    வருகைக்கும் அருமையான தத்துவ வரிகளுக்கும் மிக்க நன்றி.

    படுக்காளி

    பதிலளிநீக்கு