பக்கங்கள்

அப்பா அம்மா விளையாட்டு

தொடர் கதை:

“போடா முட்டாள்,நீயெல்லாம் மனுசன்னு பேசுனேன் பார், என் புத்திய செருப்பாலே அடிக்கணும்”
"வாசு, வார்த்தை சரியில்ல, நிதானமா பேசு, இல்லை நான் பேச மாட்டேன், என் கை தான் பேசும்"
கஷ்டப்பட்டு அது வரை அடக்கி இருந்த பொறுமை எல்லை மீற, தன் முன் உள்ள தண்ணீர் கோப்பையை எடுத்து எறிந்தான் வாசு. குறி தவறியது. வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடே அன்றி தாக்குதல் நோக்கம் இல்லாததால், மேசையின் விளிம்பில் பட்டு, நங்கென்று சத்தம் மாத்திரமே வந்தது. எதிர்பாராத அந்த தாக்குதலில் நிலைகுலைந்தாலும், தன்னை உடன் நிறுத்தி ஆவேசமாய் கை முஷ்டி வீசினான் பாஸ்கர். வாசுவின் கன்னத்தில் இடி என இறங்கியது அந்த அடி. அடியின் தாக்குதலால் தன் இருக்கை விட்டு வாசு கீழே விழ, பாஸ்கர் அவனை நோக்கி விரைந்தான். எழும் போது, அவன் இருக்கை துள்ளி விழுந்தது.உணவகம் இந்த சத்தம் கேட்டு அவர்கள் வசம் திரும்பியது. இரண்டு மூன்று பேர், ஓடி வந்தனர். சட்டென பிரிந்து, எசகு பிசகாய் இருவரையுமே பிடித்து கொண்டார்கள். பிடிக்க திமிறிக்கொண்டு கத்தினாலும், ஒரு நிமிடம் உள்ளுணர்வு விழித்தது. இருவருமே சூழ் நிலையின் தீவிரம் அப்போது தான் உணந்தனர். "என்ன சார் இது, பத்து நிமிசத்துக்கு முன்னால தோள்ல கை போட்டுக்கிட்டு வந்தீங்க, அதுக்குள்ள அடிச்சுக்கீட்டீங்களே"
சே! என்ன சிறுபிள்ளைத்தனம், வெட்கத்தில் இருவருமே தலை கவிழ்ந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கவே வெட்கப்பட்டனர். சுற்றியிருந்தோர் சல்லி விலையில் அறிவுரை சொன்னார்கள். சூழ் நிலைக்கு பொருந்தா சில சேதிகளும் சொன்னார்கள். சிலர், பாரதி வார்த்தையில் நெட்டை மரங்களென நின்று புலம்பினர். இருவரும் அசையாது நின்றனர்.

தவறு செய்ததை உணர்ந்ததால் தோள்கள் சரிந்து சுவரோரம் சாய்ந்து நின்றனர். இனி மேல் அடிக்க மாட்டார்கள் என்பது அவர்கள் மவுனத்தில் தெரிந்தது. சண்டை விலக்கி விட்ட பெறுமிதத்தில் கூட்டம் கலைந்து சென்றதும் பாஸ்கர் சொன்னான் "சாரி"

வாசு முன்னேறி அவன் கை பிடித்து பார்வையாலே அதே வார்த்தை சொன்னான். அமைதியாய் இரண்டு பேரும் அமர்ந்தனர். மௌனம் உரக்க கத்திக் கொண்டு இருந்தது.

"நேரம் ஆச்சு, நான் கிளம்புறேன், அனிதாவுக்கு இன்னைக்கு நைட் சிஃப்ட்; கோகிலா ஸ்கூல் விட்டு இன்னேரம் வந்திருப்பா"
"சரி"

வாசு தளர்ந்த நடையில் நடக்க தொடங்க, சிந்தனை சிலிர்த்துக் கொண்டது. சட்டென நம்ப முடியவில்லை. எனக்கும் பாஸ்கருக்குமா இந்த சண்டை. எவ்வளவு அன்னியோன்யமான நண்பர்கள் நாங்கள். கையை உயர்த்தி முடி கோதினான். சடுதியில் நிறைவு பெற்ற அந்த துர்பாக்கிய நிகழ்வில் தோள் சிறிது வலித்தது.

வாசு! என்ற பாஸ்கரின் குரல் கேட்டு நின்று, பின்னர் திரும்பினான். "கோகிலாவுக்கு பிஸ்கட் கொடுத்தனே, அதை எடுக்காம் போயிட்ட, இரு நான் கொண்டு வரேன்" ஒட்டமும் நடையுமாய் பாஸ்கர் விரைந்து வந்தான். வாசு பலவீனமாய் சிரித்து, கை நீட்டி வாங்கிக் கொண்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பாசமான அன்பு தன்னை வெளிப்படுத்தியது. வெளியே வானம் சிணுங்கி தூறல் இட்டது. குளிர் காற்று அவர்கள் இருவருக்கும் இதமாய் இருந்தது. (முற்றும்....)

(என்னடா இது, என்ற தங்கள் குழப்பம் புரிகிறது. மொட்ட தாத்தா குட்டையில விழுந்தார்ங்கிற கதையா. வெள்ளைக் கருவும் இல்லாம, மஞ்சக் கருவும் இல்லாம ஒரு முட்டை. இப்போ மட்டும் இதை எழுதினவன் கையில கிடைச்சான், மவனே சட்னிதான்டி என்கிற தங்கள் பல தரப்பட்ட நினைப்பு புரிகிறது)வேறு ஒன்றும் இல்லை, வார இறுதியில் வீட்டில் சினிமா பார்க்க உட்கார்ந்தோம். எனது செல்ல மகன், குறுந்தட்டை பொருத்திவிட்டு எங்களோடு வந்து அமர்ந்தான். படம் தொடங்கியது. சூப்பர் விறுவிறுப்பில் பிரமாதமாய் கதை நகர்ந்தது. நாங்களும் படத்தில் ஒன்றிப் போக, வந்ததே அந்த திகைப்பு. பார்க்க தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் இடைவேளை வந்தால் எப்படி. பின்னர் தான் புரிந்தது, முதலுக்கு பதில் இரண்டாமது சிடி போட்டால் அப்படித்தான்.

ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் நாங்கள் பார்த்த வரிசையே பெட்டர். இயக்குனரும், எடிட்டரும் கேட்டால் அடிப்பார். அப்போது தான் இந்த பொறி. நாமும் ஒரு கதை இப்படி எழுதினால் என்ன, கிளைமாக்ஸ் முதலில், பின்னர் கதை. அதுவும் இல்லாமல் கொஞ்ச காலமாகவே இது பற்றி எழுத திட்டமிட்டு இருந்தேன். கல்யாணத்தில் எது பெட்டர். லவ்ஸா அல்லது வீட்ஸா (வீட்டில் பார்த்து வைப்பதா)

இன்னொன்று, கதையோ, கட்டுரையோ எழுதும் போது, ஆசிரியர் ஒரு தீர்மானம் எடுத்து விட்டு, அதை நியாயப் படுத்தும் விதமாகவே புத்திசாலித்தனமாய் கோர்வை தயார் செய்வார். அப்படி இல்லாமல், இரண்டையும் பற்றி எந்த பக்கமும் சாராமல், மூர்க்கமாய் வாதாட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். இப்போது எல்லாவற்றையும் சேர்த்து எழுதி விட்டேன். வாருங்களேன் ஒரு சத்திய பிரமாணம் எடுத்து விட்டு செல்வோம். நான் சொல்வதெல்லாம் கப்ஸா. கப்ஸா தவிர வேறு ஒன்றும் இல்லை. இது கதை அல்ல. இரு அபிப்ப்பிராயங்கள்/ எண்ணங்கள் கொண்ட இரண்டு பேரின் காரசார விவாதமே. நான் எந்த பக்கமும் இல்லை. முடிவெடுக்கும் வேலை நான் எடுத்து கொள்ள வில்லை. அல்லது இது தான் சரி என்றெல்லாம் சொல்லப் போவது இல்லை. உங்களுக்கு பிடித்த முடிவை நீங்கள் சார்ந்து கொள்ளுங்கள்.

பகுதி-1

தொடரும் .....கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக