பக்கங்கள்

மக்ரோன் (சிறுகதை)

(மக்ரோன் என்பது, தென் தமிழகத்து தூத்துக்குடி ஊரில் கிடைக்கும் ஒரு பேக்கிரி வகை இனிப்பு. என்ன அதில் ஸ்பெஷல் என்றால், தூத்துக்குடியை விட்டு வேறு எங்கும் இதை தயாரிக்க முடியாது….... முக்குக்கு முக்கு இருக்கும் லாலா கடை லட்டு மாதிரி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியாத ஒரு அதிசயம் இந்த ஸ்வீட்.

வீம்பாக…!!! செய்தால், செய்தது மக்ரோனாய் இருக்காது. அவ்வளவுதான்.

மக்ரோனைப்பற்றிய சரித்திர கதை இல்லை. இக்கதைக்கும் மக்ரோனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.  இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கூட மக்ரோன் சாப்பிடாது. இக்கதை தூத்துக்குடியில் நடப்பதால் இப்பெயர், வேறு வகையில் எதுவும் சேர்த்தியில்லை)


தூத்துக்குடி விமான நிலையம், வரவிருக்கும் ஒரு விமானத்துக்காக பரபரப்புடன் இருந்தது. விட்டால் ஆளையே அடித்து செல்லும் பலத்துடன் காற்று வீசிக் கொண்டிருந்தது. காற்றுக்கு கொஞ்சம் சேட்டை அதிகம் தான். ஆட்களின் உடைக்குள் புகுந்து பலவந்தமாய் பலூன் செய்து விளையாடி கொண்டிருந்தது.


தரையிறங்க போகும் விமானத்துன் உள்…. சாண்டி ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தான். சன்னலுக்கு வெளியில் தூத்துக்குடி சிறு நகரமாய் அவன் கண்களில் பட்டது.

அவன் சொந்த ஊர் தூத்துக்குடி, பிறந்ததும் படித்ததும் இங்குதான். இப்போது அவன் அமெரிக்காவில் இருக்கிறான். Vice president – Treasury operations என ஒரு முண்ணனி வங்கியில் உத்தியோகம்.அவன் துறையில் அவன் புலி. வெற்றிகரமானவன். அவன் சிந்தனையையும் செயல்பாடும் கண்டு அவன் வங்கியும், சக வங்கிகளும் பெருமூச்சுடன் ஆச்சரியப்படுகிறார்கள். 

களத்தில் இறங்கி அவன் வேலை செய்யும் முனைப்பு பார்த்து…’ஏன் … ஏன் இப்படி மூர்க்கமாய் இருக்கிறாய் என கை பிசைந்து கொண்டு கேட்பார்கள். ஆம், அவன் உணர்ச்சியும், வேகமும் அவன் முடிவெடுக்கும் பாங்கும்….. அவனுக்கே சில சமயம் பிரமிப்பாய் இருக்கும்…. ஒரு போர் வீரன் போல், பல திசைகளில் சுழன்று, எதிரிகளுக்கு தயவு தாட்சண்யம் பாராமல் இவன் எடுக்கும் முடிவுகள், இவன் தந்திரங்கள், இவன் செயல்முறை எல்லாம்……….. மூர்க்கமும் வேகமும் விரைவும் ஆனவை.  நருவிசு, டிப்ளோமட்டிக் என்பதெல்லாம் இவனுக்கு அன்னியம்.

போய், வேறு ஆளாக பார்க்கச் சொல், இன்னும் 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன், இல்லையென்றால் அந்த அலுவலகத்தை பூட்டி சாவியை எனக்கு அனுப்பு… என மான்சேஸ்ட்டர் நகர வீதிகளில் இவன் கத்தியதை பார்த்து அந்த வெள்ளைக்காரன் அலறிப் போனான். மூன்று வருடங்களாய் நொண்டியடித்து கொண்டிருந்த பிரச்சனையை தலைவலியை….. ஒரே மீட்டிங்கில், இவன் பேசியே முடிக்க… நிர்வாகம் பேச்சு மூச்சு இல்லாமல் உறைந்தது. சாண்டி, சாண்டி என கொண்டாடியது. ஆனால் அவன் அமைதியாக இதையெல்லாம் எதிர் கொண்டான்.

என்ன வேண்டும், பணம், பதவி, பங்களா, சொகுசு என்று பசப்பியபோது, அமைதியாக என் வேலையில் சுதந்திரம் வேண்டும் என மட்டும் கேட்டு, தன் மதிப்பை இன்னும் உயர்த்திக் கொண்டான், சாண்டி….
அதென்ன சாண்டி, பேர் புதிராக இருக்கிறதே என தோன்றுகிறதா. வேறொன்றுமில்லை அவன் பெயர் செந்தில் முருகன். வெள்ளைக்காரனுக்கு வாயில் நுழையாத காரணத்தால், செந்தில் சாண்டியானான்…. நமக்கு செந்தில்தான் வாயில் வருமே, பின் என்ன செந்தில் என்றே சொல்லி அவனை தொடருவோம்.

செந்தில், தன் நாற்பது வயதின் முதுமைகள் ஆக்கிரமிக்காமல் கவனமாய் தன்னை பாதுகாத்திருந்தான். உலர் நீல சட்டையும், கருப்பு கால் சட்டையும், இட்டாலியன் ஷூவும்….. மிடுக்காக அணிந்திருந்தான். அதே விமானத்தின் 5 பி இருக்கையில் அமர்ந்திருந்த அப்புராணி, இவன் சட்டையையும் ஷூவையுமே பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டார். பணிப்பெண் வந்து விளம்பிய பலகாரத்தை கூட தவிர்த்தார்.

செந்தில் தன் சட்டைப்பையில் இருந்து அந்த காகிதத்தை வெளியெடுத்தான். அது ஒரு ஈமெயில் பிரிண்ட் அவுட். அவன் பதவிக்கும் செயல்முறைக்கும் மிகவும் வித்தியாசமான ஒரு செயலிது. பிரிண்ட் அவுட் எடுத்து படிக்கும் விதத்தில் அத்தனை முக்கியமானதா நமக்கு படவில்லை என்றாலும்… அவனுக்கு அது அதிசயம். ஆம், பிரிண்ட் அவுட் எடுத்து, பலமுறை படித்தும் கூட… அவன் ஒவ்வொரு முறை படித்ததும் சந்தோசம் அடைகிறான். ஏனெனில் அந்த கடிதத்தில் இருக்கும் உரிமையும் உண்மையும் அவனுக்கு இனிக்கிறது..

ஏலெய்… மக்கா….
இப்படி ஒரு முகமன், அவனுக்கு புதியது தான். ரெஸ்பெக்ட்டட் சார் என அழைத்து எழுதப்பட்ட கடிதங்கள் தராத உற்சாகத்தை இந்த ஏலே மக்கா கொடுத்தது. ஏனெனில் இக்கடிதம் எதையும் எதிர்பார்த்து எழுதப்படவில்லை, இதில் எந்த போலி வாசகமும் இல்லை, எந்த உட்பொருளோ, மறைந்த அஜெண்டாவோ இல்லாமல் இருந்தது.

ஏலேய் மக்கா….
எப்படியிருக்க…
நம்மூரில மாதா கோவில் திருநாள் வருது. நோட்டிஸ் பாத்தவுடனே இந்த மெயில போடுதேன். இந்த வருசம் ஸ்பெஷல் என்னான்னா. ‘தங்கத் தேர்’ இருக்குது. அதென்ன தங்கத்தேர், அதில என்ன விசேஷம்ன்னு, நான் விசாரிச்சேன், அவங்க சொன்னாங்க, கோவில்ல நடுவுல இருக்குமே, அந்த மாதா சுருபம், அது பயங்கர பவர்…. அந்த சுருவத்த, தேர்ல வைச்சு, ஊருக்குள்ள கொண்டு வர்றது தான் விசேஷமாம். சாமிய ஊருக்குள்ள கொண்டு வர்றதுக்காகத்தான் இந்த பழக்கமாம்.

இன்னொரு முக்கியமான விஷயம். இது உண்மையா என்னன்னு தெரியாது, சில பேர் சொல்றாங்க இந்த தடவத்தான் லாஸ்ட்… இதுதான் தேர் எடுக்கிற கடைசி வருசம்ன்னு…. என்னவோ இப்ப கோவில் பசலிக்கா ஆயிருச்சாம், அதனால அடிக்கடி இப்படி சுருவத்த எடுக்க கூடாதுன்னு… என்னவோ கட்டளையாம்.

ஏ… மக்கா… நல்ல சான்ஸ்… இந்த திருவிழாவுக்கு நீ வாயேன். ரொம்ப நாளாச்சுல உன்ன பாத்து. சோலியிருந்துச்சுன்னா விட்டுரு… இல்லேண்ணா வா….
இவன்
கசாலி மரைக்காயர்.

முக்கியம் என செந்திலுக்கு தோன்றியதால்…. அலுவலக முக்கிய வேலைகளை கூட ஒத்தி வைத்துவிட்டு ஒரு ஐந்து நாள் விடுமுறையில் செந்தில் தூத்துக்குடி வருகிறான். 

விமானம் உயரம் குறைத்து, வேகம் குறைத்து, தூத்துக்குடியில் இறங்கும் வண்ணமாய் பறந்தது.கிரிச்சென ஓசையுடன் தரை தொட்டது.  சர்…….. எனும் அதிக ஓசையுடன் விசையுடனும் காற்றின் அதி இரைச்சலுடன், தரையில் விமானம் ஓடத் துவங்கியது. தன்னையறியாமல், செந்திலுக்கு புல்லரித்தது, முன்னங்கைகளில் ரோமம் குத்திட்டு நின்றது, கழுத்து, காதுக்கு கீழ், அடிமார்பு என முடிகள் எழுந்து நின்றது. கண்கள் சொல்லாமலேயே நனைந்தன. உள்ளம் கிளர்ந்தது. அடிவயிற்றில் ஒரு கேவல் எழுந்தது. மூச்சு நின்று தன் தாள லயத்தை மாற்றியது. மனம் அசுர பலம் கொண்டு, தன்னம்பிக்கை உடலெங்கும் பரவியது. உடல் இலகுவாய் கனம் இழந்தது. மனம் புத்துணர்ச்சியாய் சிறு குழந்தை போல் துள்ளியது.

என்ன …என்ன இது, ஏன் இப்படி நடக்கிறது. எனக்கு சம்மதமில்லாமல், நான் அனுமதிக்காமல் இப்படி ஒரு மாறுதல். எனக்குள் என்ன நடக்கிறது. என் உணர்வுகளுக்கு ஏன் இந்த அதிகப்பிரசங்கித்தனம். அமைதியாய் இருக்கலாமே, ஆர்ப்பாட்டம் இல்லாமல், இருக்காமல் இது என்ன சேட்டை. பலகாலம் பார்க்காத சொந்த ஊர் இவ்வளவு இனிப்பா, இத்தனை வாஞ்சை உண்டா இந்த ஊர்ப்பாசம்…. நினைவுகளூடே செந்தில் விமான நிலையத்தின் உள் நடந்தான். பார்க்கும் மனிதர்களிலெல்லாம் அவனுக்கு அன்பு தோன்றியது. எல்லோரும் தெரிந்தவர்கள் போலவும் ஒரு கிளர்ச்சி. அனைவரும் அவனை அன்போடு பார்ப்பதாய் ஒரு பிரமை.
தடுப்புக் கைபிடியின் பின்புறம், நண்பன்…. கசாலி நின்று கொண்டிருந்தான். பள்ளித்தோழன், ஒன்றிலிருந்து 12 வரை படித்தவன். இப்போது குண்டாக இருந்தான். சட்டை அவனை சரியாக மூடமுடியாமல் பிதுங்கி கொண்டு நின்றது.

இருவரும் கை குலுக்கினர். ஒரு நிமிடம் தாமதித்து, செந்தில் கசாலியை கட்டி கொண்டான். அந்த தழுவுதலில் செந்தில் இன்பம் உணர்ந்தான். கசாலிதான் தொடங்கினான்
‘ஏ,….வெளுத்திட்டியே… ஃபேர் அண்ட் லவ்லி நெறையா போடுவியோ’
செந்தில் வாய்விட்டு சிரித்தான். எவ்வளவு நாளாச்சு இப்படி மனமும் உடலும் ஒரு சேர சிரித்து, என உபரியாய் சிந்தித்தான்.

‘தேங்ஸ்டா… மெயில் போட்டு கூப்பிட்டதுக்கு..ஏல… நீ குண்டாயிட்ட….. ஸ்கூல்ல படிக்கிறப்ப மெலிஞ்சிருப்ப ஆமா எங்க வேல செய்யுற’
‘ஏ.. மக்கா நீயும் ஃபாரின் தான்… நானும் ஃபாரின் தான். நீ அங்க போய் சம்பாதிக்கிற, நான் இங்க இருந்துக்கிட்டு, ஃபாரின் சாமானா வித்து பொழைக்கிறேன்… ஏ ரெண்டு வேரும் ஒண்ணுதாம்ல’ அப்பா கடையில தான் இருக்கேன்…

இருவரும் சிரிப்பில் இணைந்தபடி, வெளி வந்தனர். சூடு தோலை பதம் பார்த்தது. கண்களும் இத்தனை வெளிச்சத்துக்கு பழகாமல், சிரமப்பட்டது. இதையெல்லாம் பெரிசாய் எண்ணாமல், நண்பர்கள் அன்பில் உருகி, கைகள் இணைத்தவாறு நடந்தனர். இத்தனை வருசத்து கதைகளை உடனே பேசி கொள்ளும் ஆர்வம் இருவரிடத்திலும் இருந்தது. அவர் எப்படியிருக்கார்…..இவர்…பேரு என்ன… யே அவன் எங்கயிருக்கான்………… ஐய்யய்யோ…………. அப்படியா.. நெசமாவா………… ஹா...ஹா..சூப்பர்.. இப்படி பல கேள்விகள் பல பதில்கள். தத்தம் கதைகள் பேசி, நேரம் போவதே தெரியாது மகிழ்ச்சியில் திளைத்தனர். அன்று மாலையில்,

’திருநாளைக்கு வந்துட்டு, இப்படி திண்ணயில படுத்திருக்க…. சோம்பேறிக் கூவ, வா… கோயிலுக்கு போவோம்’
கசாலி செந்திலை எழுப்பினான்.
‘வம்புதானல உனக்கு, நானால சொன்னேன்… இன்னொரு அரை பிளேட் பிரியாணி அப்புறம் மட்டன் சுக்கான்னு ….. வேஸ்ட் பண்ணக் கூடாதேன்னு அத்தனையும் நாந்தான தின்னேன்… என்ன செய்யுறது கண்ண கட்டுது. உனக்கென்ன தினம் இப்படி தின்னு தின்னு பழகிட்ட...’
செந்தில் ஒரு நிமிடம் யோசித்தான். என்ன பேசுகிறேன். என்ன மொழி, இப்ப மட்டும் என் வெள்ளைக்கார கிளையண்டோ, பாசோ பார்த்தா ஃப்ரீஸ் ஆயிருவான். ஏன் என் மனைவி குழந்தைகள் கூட அதிசயிப்பார்கள். கசாலி தொடர்ந்தான்….

’அடப்பாவி, இம்பூட்டோண்டு பிரியாணி சாப்பிட்டதுக்கு இப்படி சலிச்சிக்கிற. சாயந்திரம் புரோட்டோ கடைல உனக்காகச் ஸ்பெஷலா சொல்லி வச்சிருக்கேன்ல… சிலோன் வீச்சும், சிக்கன் கொத்தும்’
செந்திலுக்கு இப்போதே சுவை மனதில் ஓடியது.
’எங்க ஆழ்வார்லயா..’
‘இப்ப அவன் சரியில்லலே… இப்ப புசுதா ஒரு பய நம்ம சத்திரம் கிட்ட கடை போட்டிருக்கான்… கோயிலுக்கு போயிட்டு அப்புறமா போவோம்…’


‘ரைட்டுல, ஏ மக்கா… ஒரு ஆள பாக்கணும். நம்ம டீச்சர், சிந்தியா டீச்சர பாக்கணும்.. அதே வீடுதான’
கசாலி சட்டென யோசித்தான். ‘யார கேக்குற நீயு. எனக்கு புரியலியே’
‘எங்க பழைய வீட்டுக்கு பக்கத்துல இங்கிலிஷ் டீச்சர்…..’
’ஓ…. சரி சரி… நம்ம ஐயர் டீச்சர்…’
’என்னது ஐயரா….. யேய்…. அவங்க கிறிஸ்ட்டியன்’
‘கிஸ்ட்டின்னா… செவப்பா இருப்பாங்களே’
’ஏல…. ஏண்டா…. என்னடா இது’
‘சாரி…சாரி…. நல்லா லட்சுமிகரமா மல்லிப்பூ வைச்சு, பெரிசா பொட்டு வைச்சு, மஞ்ச தேய்ச்சு குளிச்சு பாக்க அப்படியே அய்யராட்டமா இருக்கும்..
‘ம்… அவங்க பேரு சிந்தியா…. பிரில்லியண்ட் டீச்சர்….. என்ன நாலேஜ்… அவங்க இங்கிலிஷ் வெள்ளைக்காரனுக்கு கூட தெரியாது. இன்பாக்ட் என்னோட இன்னைய ஆங்கிலத்துக்கு அவங்கதான் அஸ்திவாரமே’

’சரி..சரி… அவங்க… இப்ப புரியுது.. இப்ப புரியுது…. பெரிய டச்சு இல்லல…. எப்பவோ கடைசியா ஜவுளிக்கடையில் பாத்தேன்…. அதுக்கென்ன மக்கா போனா போச்சு. கண்டுபிடிச்சுரலாம்’

நண்பர்கள் இருவரும் சிந்தியா டீச்சர் வீடு தேடி அந்த பகுதி வந்தனர். ஒரு கடையில் நிறுத்தி, பிஸ்கட் பாக்கெட்டும், பழங்களும் வாங்கி கொண்டனர். பூக்கடையில் ஓரத்தில் இருந்த மல்லிப்பூ வாசம் மூக்கை வருட… டீச்சர் விரும்பி சூடும் அந்த பூவை சேர்த்து வாங்கி கொண்டான் செந்தில்,
பகுதியில் விசாரித்து, சிந்தியா டீச்சரின் வீட்டை அடைந்து, முன் கேட் திறந்து உள் நுழைந்த போது, கண்ட காட்சியில் அதிர்ந்தனர்.

டீச்சர், இத்தனை நாள் இடைவெளியில் மிகவும் தளர்ந்திருந்தார். 40 வயசு பெரிசில்லையே… ஏன் இவங்க இப்படியிருக்காங்க…

சிந்தியா டீச்சர், வெள்ளை சேலையிலும், பொட்டு இல்லாத நெற்றியுமாய் கண்களில் கருவட்டங்களுடன் சாவி எடுத்து வந்து கதவு திறந்தார். உள்ள வா… நல்லாயிருக்கியா…. குட் டூ சீ…யூ……….. கம் இன் என்றார்… செந்திலுக்கு ஏதோ போலிருந்தது. கையில் உள்ள பையை முதுகுக்கு பின்னால் நகர்த்தி, மறைத்து கொண்டு கனத்த மனசுடன் உள் நுழைந்தான்.
                                                       தொடரும்..........

3 கருத்துகள்:

  1. மக்ரோன்,,,, (வாயில் வைக்குமுன் ஒரு பொருட்டாக எண்ணாத ஓர் பலகாரம்... ஆனால் வாயில் வைத்து சிறிது சிறிதாக சுவை இறங்கும்போது ஏற்படும் இன்பம் இருக்கிறதே...) நானும் மக்ரோனின் புகழ் பாட வில்லை. கதையின் நடையைத்தான் சொல்கிறேன் அச்சுவையாக.... உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு முகமதிய நண்பர் எட்டிப் பார்த்து விடுகிறார், என்ன நெருக்கமோ அல்லது பாதிப்போ தெரியவில்லை... ஒன்று புரிந்தது... பனிமயஅன்னை... கசாலி... செந்தில்... சிந்தியா என அனைத்து மதங்களுக்கும் அவள் தாய் என்று...

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி..திரு. Vas Charles

    //// மக்ரோன்,,,, (வாயில் வைக்குமுன் ஒரு பொருட்டாக எண்ணாத ஓர் பலகாரம்... ஆனால் வாயில் வைத்து சிறிது சிறிதாக சுவை இறங்கும்போது ஏற்படும் இன்பம் இருக்கிறதே...) நானும் மக்ரோனின் புகழ் பாட வில்லை. கதையின் நடையைத்தான் சொல்கிறேன்////

    ஆஹா... கதை எழுதற நான் தான்.......... மக்ரோனுன்னு பேர் வைச்சிட்டு காரணம் சொல்லாம போனா......... நீங்களும் மக்ரோன் புகழ் பாடவில்லைன்னு பாட்டு பாடினா................ ஆஹா... கலக்கலோ....கலக்கல்.........

    ////உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு முகமதிய நண்பர் எட்டிப் பார்த்து விடுகிறார், என்ன நெருக்கமோ அல்லது பாதிப்போ தெரியவில்லை... ஒன்று புரிந்தது... பனிமயஅன்னை... கசாலி... செந்தில்... சிந்தியா என அனைத்து மதங்களுக்கும் அவள் தாய் என்று...////

    ஓ.... அப்படி ஒரு முகமதிய நண்பர் எட்டிப் பாக்கிறாரோ.....

    தூத்துக்குடி மாதா கோவிலுக்கு, மத வித்தியாசம் பாராமல் வருவார்கள் என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம்.

    ஏன், தங்கத்தேரின் அலங்காரத்தில் கூட............ கிளிகள்............ கடல் கன்னி என மதங்களை தாண்டித்தானே உருவங்கள் செய்யப்பட்டிருக்கிறது.....

    கதையில் சொன்னது போலவே........ஆன்மீகம் ஒற்றுமையை போதிக்க வேண்டும்....

    எப்போது, ஏற்ற தாழ்வோ...... பிரிவினை வாதமோ...... சண்டைகளையோ ......... செய்ய ஆரம்பித்தால் அது ஆன்மீகம் அல்ல ........... வியாபாரம்... வியாபாரம்........ வியாபாரம்..........

    பதிலளிநீக்கு