பக்கங்கள்

வொய் திஸ் கொலைவெறி….

ஒரு அலுவலக நாளின் தினக் கூத்து முடிந்து, வீடு நோக்கி கார் ஓட ஆரம்பித்தது. இயற்கை காற்று நல்லது என ஃப்ரெஷ்னசுக்காக சன்னல் திறந்தேன், காற்று அடம் பிடித்து சன்னல் வழியாக உள் நுழைந்தது… அடித்து பிடித்து காற்று வந்ததால், வேகமும் கொஞ்சம் இரைச்சலும் ஜாஸ்தியாக இருந்தது.

அன்று அது எனக்கு அசௌகரியமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆசை… ஒவ்வொரு நினைப்பு, இன்று என்னவோ காதும் மனசும் கொஞ்சம் அமைதி தேடியது. சரி என பொத்தானை நிமிண்டி, சன்னலை மூடி விட்டு, குளிர்விப்பான் (ஏசியை) ஓட விட்டேன்…. 

அதுவரை ஆன் செய்திருந்தாலும்… சத்தம் குறைவாக இருந்த எப்.எம். மூடிய காருக்குள் தன் பிரசன்னம் காட்டி, ஒலியை பரவ விட்டது.

தனுஷ், ஒரு ரெண்டு மூணு பாட்டில் (தத்துவம் உண்டாக்குபவனை -சாராயத்தை) கவுத்திவிட்டு, லவ் பெயிலியர் மூடில், தனக்குள்ளே புலம்பி புலம்பி பாட ஆரம்பித்தார்.

வொய் திஸ் கொலைவெறி, கொலைவெறி டி….

பாடல் கேட்ட உடனேயே, விருவிருவென காட்சிகள் விரிகிறது. இந்த பாட்டுக்கு முந்தின சீன் என்னது. இதுக்கு முந்தினதுக்கு முந்தின சீன்ல…. ஒரு பொண்ணு இவன தொங்க விட்டுட்டு போயிருச்சு, இதுக்கும் முந்தின சீன்ல இவன் சுருதி ஏத்திட்டான், கடகடவென கப்பு கப்புன்னு செப்பியது இந்த பாடலின் வலிமை. கப்பை கப்புன்னு கைல பிடிச்சு, பீலீங்கை உணர்ந்தது தான் இந்த பாட்டின் முதல் வெற்றி. அந்த தள்ளாட்டமும், வாத்திய ஒலியும், சோகமும் விரக்தியும் ஒரேயடியாய் இணைந்து ஒலிக்கிறது.

இந்த தமிழ்..!!!???? திரைப்பட பாடல் ‘கொலைவெறி’ யா இருக்குது. வெளியான கொஞ்ச நாள்ல கோடி சனம் வலையில கேட்டுட்டு ரசிக்கிறாங்க. யூ டுயூப்பு கூட அவார்டு கொடுக்குறாங்க…  தேசிய முண்ணனி செய்தி சேனல்ல கூட இத ஒரு செய்தியா சொல்றாங்க.. ஜப்பான்ல ஒரு குரூப்பு, ஐரோப்பா ஒரு அலம்பு என சலம்பு சலம்புகிறார்கள். சல்மான் ரூஷ்டி, அமிதாப்பு, புது அப்பா அபிஷேக்கு எல்லாம் சிலாகிக்குறாங்க… ஜாவத் அக்தார் நா காமராசன், அப்துல் ரகுமான் எல்லாம் கோபப்படுறார், இங்கனக்குள்ளே கூட ‘சே இதென்ன’ கூத்து என ஒரு கும்பல். ஆக கூடி, குறுகிய காலத்தில் கும்மியடிச்சு குலவைய கூட்டின ஸ்கூப் ஸாங் இது….

வாழ்த்துக்கள்… இப்படி ஒரு வெகு ஜன ரசனையை உண்டாக்கின பாடலுக்கு சொந்தக்காரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த பாடல் ரசிகர்கள் கோடி சனம் ஸ்டடிஸ்டிக்ஸ்ல ஆந்திரா, கர் நாடகம், அதுக்கு பின்னால தான் தமிழ் நாடு… அதே மாதிரி, நகரங்களின் வரிசையில் கூட, சென்னை பின்னால தான் இருக்குது…. அப்ப இந்த பாடல் ரசிச்சவுங்க யாருன்னு ஆராய்ஞ்சா அல்லது பீராய்ஞ்சா தலையெல்லாம் கிருகுருன்னு வருது…..

சரி, அப்படி என்னதான் இருக்குது இந்த பாட்டிலன்னு கேக்க இணைத்த போது, (இப்படித்தான் எல்லோரும் கேட்டிருப்பாங்களோ) பாடல்ல, ஒரு சுண்டி இழுக்கக் கூடிய ஒரு கொக்கி இருக்குது…. அது Poetical என சொல்ல முடியாவிட்டாலும் Phonetical…. அந்த கொலை வெறி…. கொலைவெறி….  எனும் வார்த்தை பதம் தான் மேஜிக். இந்த வார்த்தை ஒலிக்கும் போது உண்டாகும் ஓசை சுவாரசியமானது.

தில்லிக்கு முதல் முறையாய் போயிருந்த போது, சாலையில் ஒரு ஜரூரான வியாபாரம் பார்த்தேன். மக்கள் எல்லாம் விரும்பி வாங்கி கொண்டிருந்தனர். ‘குலகுறி…குலகுறி…’ என கூவிக் கூவி விற்றவர் தோளில் தாம்பாளம் வைத்து கொண்டு என்ன விற்கிறார் என ஆவல் உந்தியது. அருகில் பார்த்த போது, தேங்காய் சில் அல்லது பத்தை…. துண்டுகளாக்கிய தேங்காய்க்கா இந்த கிராக்கி… அட நம்மூர்ல ரோட்டுல கிடக்குற, சிதறு காய்க்கா இவ்வளவு மவுசு என தோன்றியது.

அன்றைக்கு.. குலகுறி… என அந்த ரோட்டில் கேட்ட போதே இந்த குலகுறி எனும் வார்த்தை மனதை கவர்ந்தது. அத்தனை ரோட்டு ஓசை சந்தடியிலும் காதுக்கு இனித்தது.

ஒரு பாடல் பிரபலமாக எத்தனையோ சங்கதிகள் உண்டு. இசை, ஓசை, ஒலி, உருவகம், உணர்வு என எத்தனை எத்தனையோ எலிமெண்டுகள்.

எது எப்படியோ, மொழிகளை கடந்து இந்த பாடல் பிரபலமாகி இருக்கிறது. தமிழ் தெரிந்த நல்லோர் தாண்டி, ஹார்ட்டு, மூனு, வொயிட்டு என ஆங்கில பதங்கள் புண்ணியத்தில் எல்லா மொழி மக்களையும் அடைந்திருக்கிறது. காசு எல்லாம் வேண்டாம், சொம்மாவே கேளுங்க என சந்தைப்படுத்திய வைரல் மார்க்கெட்டிங் பாதையில்…. போதையில் மொதந்து, தள்ளாடி தடுமாறி, ஏக்கத்துடன் பாடும் போது ஒரு கிக் நமக்கே வருகிறது. காதலும் போதையும் எப்பவும் விக்க கூடிய சரக்கு என்பது நிருபணமாகிறது.

என்றாலும், இந்த அங்கிகாரமும் பிரபலமும் பெற்ற பாட்டில்(Bottle) பாட்டில் மரியாதை இல்லையே, கலாச்சாரம் இல்லியே, ஆக்கபூர்வம் இல்லியே எனும் போது லேசாய் வலிக்கிறது…

திருவளர் செல்வியோ, நான் தேடிய தலைவியோ, பண்பாடும் குலமகளோ… 

என காதலியை அழைக்கும் போது காதலின் மீதும், காதலியின் மீதும், காதலன் மீதும் மரியாதை வருகிறது. உறவில் மரியாதை தானே நம்பிக்கை வளர்க்கும் முதல் படி.

யே.. வாடி …வாடி என் கியூட் பொண்டாட்டி 

என கூப்பிடும்போது அன்போடு, அன்னியோன்யத்தோடு சேர்ந்து கொஞ்சம் வக்கிரம் வந்து விடுகிறது. எல்லா வெரைட்டியும் இருக்கணும்ங்க என சொன்னாலும், அல்லது சிலது சைவம் சிலது அசைவம் என பகுத்தாலும், எப்பவும் இல்லாம எப்பவாவது இப்படி இருக்கணும்ங்க எனும் வாதம் சொத்தையானது. மரியாதை எனும் பரிமாணம் தொக்கித்தானே நிற்கிறது.

வாடி வாடி என அழைக்கும் புருஷனை பொண்டாட்டி என்ன செய்வாள், பழகும் தமிழே, பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா….. என்றா அழைக்க முடியும்…. அவளும் அவன் லெவலுக்கு இறங்கி வந்து வாடா…வாடா…. வந்து கடிச்சுட்டு போடா ……. எனத்தானே சொல்ல முடியும்…. இது எங்கே கொண்டு செல்கிறது. ஒரு சமூகம் தரம் தாழ்ந்து தரை வரை சென்று…. டகர டகர…. என ஓசை எழுப்பும் தரைடிக்கெட் தகர டப்பா போலத்தான் இருக்கிறது.

விற்கிறது என்பதற்க்காக இதை செய்யலாமா, இந்த பாடலின் வெற்றி நமக்கு தரப் போவது என்ன. நாங்க இத விட பீல் பண்ற பாட்டு எழுதுறோம் என ஒரு குரூப்பு கோடம்பாக்கத்துல கிளம்புமோ என நினைக்கும் போதே…. பீதியாய் இருக்கிறது…..

உய்ய என் உள்ளத்துள் , ஓங்காரமாய் ----(ஓம்காரமாய்) உள்ள மெய்யே… (உடலே / உண்மையே)

என ஒலிக்கும் ஒலியில் ஆழம் உண்டு பயன் உண்டு, சமூகமாற்றமுண்டு, அந்த ஒலியில், அதிர்வில் ஆன்மீகமுண்டு. 


பண்டைய திரைப்பாடல்கள் சில பாடங்கள் போலல்லவா நமக்கு உதவியது….

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
ஒன்றும் தெளியாமல் போனாலே வேதாந்தம்

என நச்சுன்னு இரண்டே வரியில் பாடம் நடத்திய பாட்டு எப்படி இருக்குது. தமிழின் பயன்பாடு அன்னிய ஆக்கிரமிப்பால் கொஞ்சம் மூச்சு முட்டி முழிக்கத்தான் செய்கிறது.

மலர் மிசை ஏகினான், மானடி சேர்ந்தார் 
நிலமிசை நீடு வாழ்வார்

என சுத்த தமிழில் இன்று சொன்னால், இன்றைய தலைமுறை அன்னிய மொழி போல் பார்க்கும் அவலம் அல்லவா நிகழ்ந்து விடும்….. நம் தாய் மொழியே பயன்பாட்டில் பாடாய் பட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் மொழி வளர்ப்பதும் அவசியமே. கலைத்துறை அதை தன் கடமையாய் கொள்ளுதல் நலம். வெற்றி பெறாலும் கூட இந்த மாதிரி கொலைவெறி வார்த்தைகளினால் பாதிப்பே மிஞ்சும். இந்த நவ நாகரீக நச்சுக்கள்…. கழிசடைகள் எல்லாம் இக்கால இலக்கியம் ஆகி விடுமோ என எண்ணும் போது பதறுகிறது…. அதிலும் கூட,

தமிழ் இனம் எத்தனை தொன்புடையது. தமிழ் மொழி உலகிற்கு அல்லது ஏன் இந்தியாவுக்கே கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது… ஆனால் இன்று…????? இந்த சில்லறை சில்வண்டுகள் நம் அடையாளம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

பெண்ணை போற்றுவோம், காதலை மதிப்போம், இன்னும் பொறுப்பாவோம்,

உன்னை வேண்டாம் என ஒரு பெண் சொன்னாள் என்றால், என்ன அர்த்தம். ஆணுக்குத்தான் இந்த தொல்லை…. ஒரு பெண்ணை பார்ப்பதும் உடன் காதல் வயப்படுவதும், பார்த்ததும் பரவச நிலை அடைவதும், பொருந்தாத உறவை போற்றி பொங்குதலும். பின்னர், இயலாமை இமயமாகி என்ன செய்வது என அறியாமல் திகைப்பதும்….. பாட்டில் கவுத்திவிட்டு அவளை குறை சொல்வதும்….

பெண், இங்கனம் மனம் கவர்ந்தவன் கிடைக்காத தருணத்தில் என்ன செய்வாள். ஆண்டாளாகும் ஆகிருதி இங்கே சராசரியாய் இல்லை…உன்னை வேண்டாம் என ஒரு பெண் சொன்னாள் என்றால், என்ன அர்த்தம். நம்மை உதறி விட்டால் என்ன அர்த்தம். உன்னுள் குறை என்று அர்த்தம். அந்த பெண்ணினுள்.. கொலைவெறி என நாம் ஏன் உணரவேண்டும், நம்முள் உள்ள குறையை அவள் குறை என சொல்லுவது பொறுப்பில்லாத தனம் அல்லவா.

தன்னிகரில்லா தலைவர்களை நம் காவியங்களில் கொள்வோம். மரியாதையை நம் ஆயுதமாக்குவோம்…. இன்னும் பொறுப்பாய் நம் பிரதி நிதிகள் கலைத்து’றையில் செயலாற்ற மன்றாடுவோம்….

2 கருத்துகள்:

 1. படுக்காளி அண்ணே...

  ஏதோ இந்த தனுஷ் ஒரே ஒரு கொலவெறி பாட்டு பாடினதுக்கே இம்புட்டு வெறியாவுறீங்களே...

  எண்ட்ர பக்கத்து வூட்டுல “இசைக்குருவி ஏகலைவன்”னு ஒரு இசை இம்சை இருக்கு... அது பண்ற தொல்லைய என்னான்னு சொல்றது? அவரே ட்யூன் போட்டு, அவரே பாட்டு எழுதி அவரே பாடி... நல்ல வேளை அவரே நடிப்பேன்னு மட்டும் சொல்லல...

  நேத்து கூட இந்த பாட்டை ராத்திரி 10 மணில இருந்து விடியற்கார்த்தால வரைக்கும் பாடிட்டு இருந்தாரு... எண்ட்ர ஏரியாவுல எல்லார் காதுலயும் நிரந்தரமா பஞ்சு... உபயம் அண்ணன் ஏகலைவன்..


  வாங்கிக்கோ…. வச்சுக்கோ
  ஒனக்கா…. எனக்கா ….. ஜனக்கா …. குணுக்கா…..
  இசையா…. கவிதையா…..
  இப்படி போட்டு ஆட்டு !!! அப்படியே சுவத்துல மாட்டு.... !!!!
  அஜக்தா…. புஜக்தா…. நஜக்தா….

  ஊரே திரண்டு வந்து என்னா மேட்டர்னு கேட்கணும் வந்தா, பின் வாசல் வழியா பக்கத்து ஊர்க்கு ஓடி போயிட்டார்....

  பதிலளிநீக்கு
 2. உன்னை வேண்டாம் என ஒரு பெண் சொன்னாள் என்றால், என்ன அர்த்தம். நம்மை உதறி விட்டால் என்ன அர்த்தம். உன்னுள் குறை என்று அர்த்தம். அந்த பெண்ணினுள்.. கொலைவெறி என நாம் ஏன் உணரவேண்டும், நம்முள் உள்ள குறையை அவள் குறை என சொல்லுவது பொறுப்பில்லாத தனம் அல்லவா - Y this kolaveri ungalukku enga PASANGA mela....

  cdhurai

  பதிலளிநீக்கு