பக்கங்கள்

புதினமும் புதிருமே…. இந்த பூவுலகம்….

கல்லில் செதுக்கிய சிலையை விட………..

டேங்கர் லாரி, பாம் எனும் நீண்ட சத்தத்துடன் இடது பக்கமாய் கடந்து சென்றது. நவீன் அந்த திடிர் முந்துதலில் லேசாக திணறினான். என்ன அவசரம்… அதுவும் இல்லாமல் ஓவர் டேக் செய்யும் போது ஏன் இப்படி பப்பரப்பேன்னு ஹார்ன் அடித்து செல்ல வேண்டும். அமைதியாய் செல்ல முடியாதா….

ம்… என்ன செய்து கொண்டிருந்தோம்… எதையோ வாசித்து கொண்டிருந்தோம்…. ஆங்… ஆட்டோவின் முதுகில் ஏதோ எழுதியிருந்தது, 

அதை வாசித்து கொண்டிருந்தோம்…. அது சரி, அம்மாவிடம் சொன்னால் அடிப்பாள், ரோட்டுல பைக் ஓட்டும் போது, கவனம் எங்கேயும் போகக் கூடாது, பார்த்து ஓட்டணும் என்பாள். ம்… அவளுக்கு என்ன தெரியும். கவனம் சிதைப்பதுதானே இங்கே சக பயணிகள் வேலை. என்னவோ எதுவோ…. ம்…. சே, ஒரு விசயத்தை கோர்வையா சிந்திக்க முடியுதா….. சரி ஏதோ வாசித்து கொண்டிருந்தேனே…. அது என்ன..


பார்வையால் அந்த ஆட்டோவை துளாவி, மீண்டும் பிடித்து... படித்தபோது

கல்லில் செதுக்கிய சிலையை விட
கருவில் சுமந்த தாயை வணங்கு….

களுக்கென உணர்வு ஒரு பந்தாய் சுருண்டு, அழுகையும் இளகிய மனமுமாய் உணர்வு வெளிப்பட்டது. உடல் தளர்ந்து, கண்கள் நீரை சுரக்க தயாரானது. மீண்டும், அம்மாவை மனம் நினைத்தது. ம்… அம்மாவை நினைத்தாலே சுகம்.

அம்மா நம் உயிரினத்தில் அனேகமாய் எல்லாருக்கும் பிடிக்கிறது. தாய் என்பது பாதுகாப்பு, நிம்மதி, அன்பு, அரவணைப்பு….. இன்னும் மேலாய்… 

என்னை உண்டாக்கியவள் எனும் உபரித்தகவல் உயிரை உரசுகிறது. என்னையே படைத்தவள், என்னை அழிக்க மாட்டாள், என்னை விரும்புவாள் அன்பு செய்வாள் என்னும் நம்பிக்கை....., பின்னர், படைக்கும் வல்லமை உடையவளானதால், என் இயலாமையை விரட்டுவாளோ... எனக்கும் உதவுவாளோ…. எனும் நப்பாசை.

அம்மா… அல்லது தாய் என சொல்லும் அந்த கணமே புனிதமாகவும், அமைதியாகவும் அன்பாகவும் தோன்றும் விந்தை இன்னும் வியப்பாகவே இருக்கிறது… 


உடலின் அரசன் இந்த உருண்டை மண்டை மாதிரி, நம் உணர்வுகளின் அரசன் இந்த தாய்ப்பாசம் எனவும் தோன்றுகிறது.

அது சரி, அங்கே என்ன வாசித்தோம்… கல்லில் செய்த சிலையை விட…….
ஓஹோ…. எழுதியவன் என்ன சொல்கிறான். ஹாங்…. தெய்வம் பற்றி சொல்கிறோனோ… தெய்வத்தை வணங்காதே என சொல்லுகிறான். அது சரி பகுத்தறிவு பேசுகிறான்….

அது ஏன், அம்மாவையும் தெய்வத்தையும் இங்கு பேசுகிறான். அம்மாவை வணங்கு என அதை மட்டும் சொல்லலாம், அது  நேர்த்தியானது, வழக்காடல்களுக்கு அப்பாற்ப்பட்டது…. ம்… சாமியை கும்பிடாதே… அம்மாவை மட்டும் கும்பிடு என்றால்….

அது வாதம் தானே... வீண் வம்புதானே…. எப்படி எப்படி… தாய்குலங்களோடு கூட்டணி, தெய்வத்துக்கு டாட்டாவா….

இது ஒரு சேட்டை., அம்மாவை தாய்ப்பாசத்தை வைத்துக் கொண்டு, தன் கருத்தை திணிக்கும் தில்லாலங்கடி.

சரி, அம்மாவை வணங்கு என அறிவுரை சொன்னவன், வணங்குதலுக்கு வரவேற்ப்பு கொடுக்கிறான். கும்பிடு என குரல் கொடுக்கிறான். வணங்கு ஆனால் அம்மாவை மட்டும் என்கிறான், தெய்வத்தை அல்ல என்கிறான். 


உருவாக்கியவரை வணங்கு என ஒற்றை வரியில் சொல்லிவிட்டால் பொல்லாப்பில்லை.... உருவாக்கியவருக்கு ஒரு கோவில் கட்டி கும்பிடு என்பதிலும் தவறில்லை.


அவரவருக்கு ஒரு தாய், அத்தனை தாய்க்கும் ஒவ்வொரு கோவில் கட்டமுடியாதே… ம்… வேண்டாம் கோவில் கட்டாதே… கட்டாமல் மனசுக்குள் வணங்கு என்கிறானோ, இருக்கலாம்.

வணங்குவதில் தவறில்லை எனும் போது அது தாய் என்றால் என்ன, தெய்வம் என்றால் என்ன. அதுவும் போக, ஒருவரை அல்லது ஒன்றை மட்டும் வணங்கத்தான் வேண்டும் என என்ன சட்டம். தன்னை, மண்ணை, விண்ணை, அன்னையை, ஏன் அனைவரையுமே வணங்கலாமே….

வணங்குதலும் ஓகே, அம்மாவும் ஓகே என்றால், அப்புறம் ஏன் ஒன்றை வணங்கவேண்டும், அல்லது சாமி என்பதை மட்டும் வணங்காதே எனும் வியாக்கியானம்.

கல்லில் ஒரு உருவம் செதுக்கியதற்கு காரணம்....  மழை வெயிலுக்கு தப்பும் என நினைத்து தானே…  கல்லை வணங்குததால் தாழ்ச்சி என ஏன் கலர் கொடுக்க வேண்டும்... கல்லில் செய்ததால் அதன் குணத்தை மட்டும் எடுத்து கொண்டு, கல் மண் என ஏளனம் பேசுகிறீர்கள். அதில் நுண்ணரசியல் நுரையிரல் தெரிகிறதே...

வழிபாடே தவறு என்றால் அது ஒரு தர்க்கம். அறிவில் துளாவி, ஆழத்துக்கு செல்லும் ரீதியான வாதம்.

சரி, தாயை ஏன் வணங்க வேண்டும். மரியாதை நிமித்தம் மட்டுமா, 

வணங்கினால் மட்டும் போதுமா. ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் போகாத கடன் அல்லவா அது. எதைக் கொடுத்து அதை சரி செய்ய முடியும். 


தாய்க்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் எல்லாம் சொல்லாது, தாயை போய் கும்பிடு கல்லை கும்பிடாதே என ஒரே ஒரு கண்டிஷன் போட்டால் அது எப்படி சரி….

ஆட்டோ கவிஞரிடம் ஆர்குயூமெண்ட் வலுத்தது.... அவருடன் மனசால் பேசிய டயலாக்கு, பதில் வாங்காமல் ஒருதலை ராகமாக இருந்தது. பதில் வாங்காமல், முடிவு எடுக்க முடியாமல் நிற்கும் போது, இன்னொரு கேள்வி உதித்தது… இப்படி தத்துவங்களை ஆட்டோவில் எழுதுவது சரியா….

சரிதான்….. தப்புதான்……

கவனம் சிதைத்தது தப்பு…. கப்புன்னு…  இவ்வளவு தூரம் இதை பற்றி யோசிக்க வைத்ததே…. அது அந்த வாசகத்தின் வெற்றி. 


எந்த ஒரு கருத்தும் எல்லோரிடமும் எஸ்....!!! என ஏற்றுக் கொள்ளும் அந்தஸ்தை பெற்றதில்லை… பெறப் போவதுமில்லை... அத்தகைய அருகதை கருத்துக்களுக்கு இல்லை. மறுத்து சொல்லும் மரபு நமக்கும் நம் மனசுக்கும் உண்டு.

எனவே, இரு நிலை இயல்பையும், இருப்பையும் இனியாவது புரிந்து கொள்வோம். 


கேள்விகள் தொடரட்டும், பதில் தேடும் பயணம் சிறக்கட்டும். 


இங்கே எதிலும் எதுவும் நின்று விடுவதில்லை. 


நிற்காமல் நகர்ந்து கொண்டிருக்கும் புதினமும் புதிருமே…. இந்த பூவுலகம்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக