பக்கங்கள்

கடிதம் எழுதி காக்காவுக்கு கொடுப்பேன் – (சிறுகதை)

லோகு, கடிதத்தை எழுதி முடித்து…. கையெழுத்திட்டான். அப்பாடா என இருந்தது. இரண்டு மூன்று நாட்களாய் அழுந்தியிருந்த மனச்சுமையை, மனதின் பாரத்தை… எழுதி முடித்ததும் ஒரு தளர்ச்சி. மனம் இலகுவாய் இருந்தது.

கடிதத்தை மடித்த போது, விலாசம் எழுதும் இடம் வெறுமையாய் இருந்தது. அதில் என்ன எழுதலாம், எதுவேணா எழுதலாம்… எது எழுதுனாலும் எல்லாரும் சிரிப்பாங்க…. என நினைத்த போது சிரிப்பு வந்தது. எழுதினால்… அவன் நினைத்ததை எழுதினால்….. தபால் நிலையத்தில் படித்தால் என்ன நினைப்பார்கள் என எண்ணிய போது அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. வாய் விட்டு சிரித்தான்.

புருசன் சிரிப்பு சத்தம் கேட்டு கமலி, எட்டிப் பார்த்தாள். ‘என்னதுங்க… லெட்டரா’ கடிதத்தை பார்த்து விட்டு ‘யாருக்கு….’ என தொடர்ந்தாள்.

‘சீனு சாருக்கு…. எப்படி அனுப்புறது. என்னன்னு அட்ரஸ் எழுதுறது என யோசிச்சேன், அதான் சிரிச்சேன்’ என சொல்லிக் கொண்டே டவலை எடுத்து தோளில் விசிறி போட்டு விட்டு, ஆனந்தமாய் பாத்ரூமின் உள் நுழைந்தான். வாய் முழுக்க பாட்டு அடைத்து கொண்டிருக்க, குதூகலத்தில் உடல் பறக்க நேர்த்தியாய் உள்ளே நுழைந்தான். போகும் முன் மனைவியை கிட்ட நெருங்கி கண்ணடித்து விட்டு உள்ளே சென்றான்.

கமலியின் முகம் வெளிறியது. கண்கள் விரிந்தன, வாய் சற்றே பிளந்து ‘ஆண்டவா’ என்றது. கை அனிச்சையாய் நகர்ந்து தாலிச்சரடை வருடி, கண்கள் அருகே கொண்டு சென்றது. அவன் தலை மறைந்ததும், மெல்ல அந்த கடிதத்தை பிரித்தாள்… வாசிக்க துவங்கினாள்.

டியர் சீனு சார்,

நேத்திக்கு ஆபிஸ்ல பெரிய சண்டை, நான் ஏதோ சொல்ல, அவங்க ஏதோ நினைச்சுக்கிட்ட்டாங்க. அதில் என் தப்பு ஒண்ணும் இல்லை,

ஏன் சார் இப்படி. ஒரு வார்த்தைக்கு இவங்களா ஒரு அர்த்தம் பிடிச்சிட்டா நாம என்ன பண்ண முடியும். அதே டென்ஷன்ல வீட்டுக்கு வந்தா கமலி, காப்பி பொடி காலின்னு சொல்லிட்டு டீ போட்டு தர்றா…

சொல்லுங்க சார், சரியா இது…. காப்பி குடிச்சே கல்லா காலியான குரூப்பு நம்மது…. வெத்து டீயில நம்ம தாகம் அடங்குமா. சரிதான் போ, நீயும் உன் டீயும்ன்னு…. கொடி மரத்து கோக்கோ கோலாவே பெட்டருன்னு அங்க போனேன்..

பாருங்க சார், நாயர் பொண்ணுக்கு உடம்பு சரியில்லியாம், கடைய சீக்கிரம் மூடிட்டு, அவன் போயிட்டான். வெறுமே நடந்து போயிட்டு காபியும் கிடைக்காம வயிறும் மனசும் காஞ்சு போச்சு… அப்பத்தான் தோணுச்சு, போன முறை காபி குடிக்க நீங்க காசு கொடுத்தீங்க, இந்த தடவ நான் கொடுத்துருக்கணும், ஏடிஎம்ல காசு எடுக்க மறந்துட்டேன், சட்… வாட் ஏ மிஸ்….. ஹூம்… நீங்க தான் கொடுத்தீங்க… கணக்குல பார்த்தா ரெண்டு தடவ நான் இன்னும் ரீப்பே பண்ணனும்….. (கடிதம் தொடர்ந்தது)

**********

லோகு அன்று அவசரம் அவசரமாக ஆபிஸ் கிளம்பினான். அவசரமாக… இதென்ன புதுசா, எப்பவும் போலத்தான… ஆனால் வீட்டின் வாசலில் மாமி பார்த்தான். பார்த்ததும் முகம் மலர்ந்தான். வாவரசி, மஞ்சள் தேய்த்து எதிரில் வருவது நல்ல சகுனமாச்சே… எதிர் வீட்டில் மாமி குளித்து முடிந்து மஞ்சள் தேய்த்து நின்றது நிறைவாய் இருந்தது.

கமலிகிட்ட சொல்லலாமா, சொன்னா கேட்பாளா, ம்….. டர்மெரிக் கிரிம்தான் தேய்க்கிறேனே அப்புறம் எதுக்கு மஞ்சள் என்பாள். இந்த மஞ்சள் தேய்த்த முகம் லோகுவின் அம்மாவை நினைவுபடுத்தியது. அம்மா இப்படித்தான். சீவக்காய் தேய்த்து, குளித்து, அள்ளி முடிந்த கூந்தலில் ஒரு இணுக்கு பூவும் சூடியிருப்பாள். சாமிக்கு நிறைய பூ வைக்கலேண்ணா ஆணியில நிக்காதே… அதுக்காக நிறைய கண்ணி விட்டு பூ வைக்கணும், அதுவும் போக, வீட்டுல நிறைய சாமி படம்… எது என்னவானாலும், அது ஒரு தனி ஸ்டைல். அழகும் மரியாதையும் அன்பும் அப்பி கொண்டு வரும்.

மாமி குட்மார்னிங் என்றான். மாமி சிரிப்புடன் ஆமோதித்து விட்டு பதில் வணக்கம் சொன்னாள்….  ‘என்ன மாமி கழுத்து பிடிச்சுருக்கா’ அத்தனை அவசரத்திலும் இப்படி கமெண்ட் அடிக்க இவனுக்கு முடிகிறது என வாசல் ஓரத்தில் கமலி புலம்பினாள்… மனசுக்குள்ளே…!!! ‘இல்லியேடா’ அப்படி ஒண்ணும் பிடிக்கலியேடா, காலையில உப்புமா சட்டியில பிடிச்சுருச்சு….’ சிரித்தபடி பதிலுரைத்தாள் 

மாமி….
‘மாமி, மாமா கூப்பிடுறாரு பாருங்க…. ‘ என்றதும் முதுகையும் கழுத்தையும் ஒரு சேர வைத்து கொண்டு, அப்படியே திரும்பினாள் மாமி. ‘பார்த்தீங்களா, மாட்டிக்கிட்டீங்களா…. கழுத்து பிடிச்சுருக்கு…. கழுத்த மட்டும் திருப்ப உங்களால முடியல’ , தான் மாட்டிக் கொண்டதை, மாமி உணர்ந்து, லேசான வெட்கத்தில் சிரித்தாள்.

சிரிப்பில் திண்ணையில் உட்கார்ந்திருந்த மாமாவும் கலந்து கொண்டார். ‘மாமா, இப்ப… இவ்வளவு வயசுல உங்கள பார்க்கும் போது கூட மாமி சிரிப்பில பாரதி தாசன் புத்தகம் இருக்குது. மாமி ஞே!  என விழித்தாள். மாமா புரிந்ததனால் சிரித்து கொண்டே…. அழகின் சிரிப்பு…. அதான் புஸ்தகத்து பேரு என்றார்.

மாமா, வர்றீங்களா, முக்கு கடைக்கு, லோகு அழைத்தான். இல்லடா சாயந்திரமா பார்ப்போம். ப்ரதர் இன் லா வர்றேன்னார், பஞ்சாயத்து ஆபிஸ் வரைக்கும் போகணும்…

*******

கமலி, கண்ணீரை துடைத்தாள், கடிதத்தின் தாள் திருப்பி, மேலும் வாசிக்க துவங்கினாள்..
போன தலைமுறை நடைமுறை சரியில்ல என சொன்னீங்களே… அது தப்பா சரியா என இன்னும் எனக்குள் தீர்மானம் ஆகவில்லை. இருந்தாலும் இந்த போஸ்ட் மார்டனிசம் என்பதே ஒரு சப்பைக்கட்டு… எல்லாம் தெரிந்ததாய் தன்னையும் பிறத்தியானையும் ஏமாற்றும் சோம்பேறித்தனம்.

சரி இத்தனை சொல்கிறீர்களே… போன எலெக்‌ஷன்ல ஜெயிச்ச, நம்ம எம் எல் ஏ இப்ப எங்க இருக்கிறாரு… திகார் ஜெயில்ல… ஏன்யா உன்ன நம்பி, நீ சொன்னேன்னு கேட்டுத்தானே நாங்க ஓட்டு போட்டோம், என்ன ஆச்சு எங்க ஊரு ரோடுன்னு கேக்கணும்… அவர்கிட்டதான கேக்கணும்…  ஏன் மாமா திகார் ஜெயில் உள்ள நம்மள விடுவாங்களா…. இந்த கேள்வி கேக்குறதுக்கு…

அப்புறம் ரெண்டு நாள் ஆபிஸ் டூர், மழை தண்ணின்னு ஒரு நாள் தள்ளிப் போச்சு… வந்து கேட்டா, எனக்கு நம்பவே முடியல….. ரோட்டுல, எங்க வாசலுக்கு பக்கத்துல ஒரு பட்டு வேட்டி, ம்… இருக்கும் ஒரு சாண் ஜரிகையோட…. கீழே கிடந்துச்சு…. சேறும் சகதியுமா இருந்துச்சு… கமலி அதை காட்டி, இதுதான் கடைசியா போர்த்தியிருந்துச்சுங்கிறா… இதென்ன மாமா…. உலகம் பாஸ்ட்ன்னு தெரியும்… இவ்வளவு பாஸ்ட்டா….

சிம்பிளா சொல்றேனே…. இந்த லோகுவுக்கு ஒரு ஆபிஸ், ஒரு குடும்பம், ஒரு முக்கு கடை டீ கடை மாதிரி, நீங்களும் ரொம்ப அவசியம்… இதுல ஏதாவது ஒரு குறைவு வந்துச்சுன்னா வண்டி ஓடுறது ரொம்ப கஷ்டம். சரி, விடுங்க பழகிக்கிறேன், என்ன செய்யுறது.. எப்ப சுகர் வந்துச்சோ, அப்ப சக்கரை போடாதேன்னு சொன்னாங்க… சரின்னு முதல் ரெண்டு மூணு நாள் திகைப்பா இருந்துச்சு, அப்புறம் பழகிருச்சு…. அதே மாதிரிதான்…

அப்புறம் இன்னிக்கு காலைல பாக்குறேன், அந்த ஜரிகை வேஷ்டி பக்கமா குனிஞ்சு உங்க பிரதர் இன் லா ஒரு ப்ளாஸ்டிக் பைல போட்டுக்கிட்டு இருந்தாரு… என்ன சார்னேன்… ‘இல்ல விசேஷத்துக்கு உடுத்தினத புதைச்சிடணும்ங்கிறார்’
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார்.

அன்புடன் லோகு

***

காலிங் பெல் அடிக்க கமலி அவசரம் அவசரமாய் கடிதத்தை அங்கேயே வைத்து விட்டு சென்றாள். லோகுவுக்குத்தான் ஏதோ ஒரு பாங்கின் கிரெடிட் கார்டு ஸ்டேட்டுமெண்ட்….. எதிர் வீட்டை பார்த்த போது, மாமி நின்றிருந்தாள், மஞ்சள் குங்குமம் பூ என எதுவும் இல்லாமல்…. அவள் அணியாத அவை மூன்றும் அங்கிருந்த மாமாவின் படத்தில் மாட்டப்பட்டிருந்தது….

 
முற்றும்…. 

3 கருத்துகள்:

 1. ம்.... தேங்க்ஸ் செல்லா....

  இக்கதையில் நான் சொல்ல வந்தது .....

  வாழ்க்கையில் நண்பர்கள் மிக மிக அவசியம்... சில நண்பர்கள் ஆழமான நம் அத்தனையையும் அறிந்தவர்கள்... அது போல் இல்லாமல், சில பரிமாணங்களை மட்டுமே அறிந்த நம் வாழ்க்கையின் சில பக்கங்களை அறிந்த நண்பர்கள் மட்டுமே உண்டு.
  அப்படி ஒரு எதிர் வீட்டுக்காரர்... அவர் இறந்து விடுகிறார். அவர் இறந்திருக்கும் சமயத்தில் நம் கதா நாயகன் வெளியூரில் டூர் போய் இருக்கிறான். வந்து பார்க்கும் போது, அவர் இல்லை. அவர் வாழ்ந்த சுவடுகளும் இல்லை. மரணம் அப்படி ஒரு கொடுமையானது.

  இறந்து போன அந்த பெரியவரின் மரணம் பாதித்ததால் இவன் துவண்டு போகிறான். திடுக்கிடுகிறான். என்ன செய்வதென்றே தெரியாமல் போகிறான். அப்படி ஒரு நிலையில் ஒரு கடிதம் எழுதி, அவன் உள்ளத்தின் அத்தனையையும் கொட்டி விடுகிறான். அக்கடிதம் எழுதியவுடன் மனம் அமைதி பெற்று சகஜ வாழ்க்கைக்கு திரும்புகிறான். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்....

  நிச்சயம் இம்முறை புரியும் என நம்புகிறேன்... நன்றிகள்....

  பதிலளிநீக்கு
 2. மாமா…. உலகம் பாஸ்ட்ன்னு தெரியும்… இவ்வளவு பாஸ்ட்டா….

  சிம்பிளா சொல்றேனே…. இந்த லோகுவுக்கு ஒரு ஆபிஸ், ஒரு குடும்பம், ஒரு முக்கு கடை டீ கடை மாதிரி, நீங்களும் ரொம்ப அவசியம்… இதுல ஏதாவது ஒரு குறைவு வந்துச்சுன்னா வண்டி ஓடுறது ரொம்ப கஷ்டம். சரி, விடுங்க பழகிக்கிறேன், என்ன செய்யுறது.. எப்ப சுகர் வந்துச்சோ, அப்ப சக்கரை போடாதேன்னு சொன்னாங்க… சரின்னு முதல் ரெண்டு மூணு நாள் திகைப்பா இருந்துச்சு, அப்புறம் பழகிருச்சு…. அதே மாதிரிதான்…

  அப்புறம் இன்னிக்கு காலைல பாக்குறேன், அந்த ஜரிகை வேஷ்டி பக்கமா குனிஞ்சு உங்க பிரதர் இன் லா ஒரு ப்ளாஸ்டிக் பைல போட்டுக்கிட்டு இருந்தாரு… என்ன சார்னேன்… ‘இல்ல விசேஷத்துக்கு உடுத்தினத புதைச்சிடணும்ங்கிறார்’
  எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார்.

  பதிலளிநீக்கு