பக்கங்கள்

3 இடியட்ஸ் – திரை விமர்சனம்

நல்ல படம் என பல்வேறு விமர்சகர்களால் பாராட்டப்பட்டும், வெளியான சில தினங்களிலேயே 100 கோடி வருவாய் எனவும் இரு தளங்களிலுமே இந்த படம் அடைந்திருக்கும் வெற்றி, மிகவும் சந்தோசமாகவும் ஆறுதலாகவும் உள்ளது.

பொழுதுபோக்கே பிரதானம், வியாபாரமே எங்கள் இலக்கு !!! ரசிகர்களுக்கு பிடித்த்தை கொடுக்கிறோம் என டகால்டி விடாமல், திரைப்படம் என்பது கலை வடிவம், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு ஊடகம் என பொறுப்புணர்ச்சியோடு கச்சை கட்டி நிற்பது மிகவும் ஆரோக்கியமானது, அற்புதமானது.

சரி கதை என்ன.
மனிதனாய் பிறந்த எல்லாரையும் நம் சமுதாயம்‘கேட்டுக்கோ நைனா.... இப்படித்தான் இருக்கோணும்’ என ஒரு பாட்டு பாடுகிறது, . பாட்டுப் பாடி பாடாய் படுத்துகிறது. அப்படி படி, இப்படி இரு, என சமூகம் மனிதனுக்கு சில கோட்பாடுகளை தினிக்கிறது.

உன் பையன் இஞ்சினியரா, டாக்டரா சீக்கிரம் சொல்லு. வாழ்க்கையில் பணம் சம்பாதித்தானா இல்லையா டக்குன்னு சொல்லு என வேவு பார்த்து இது இரண்டும் இல்லையா அப்போ வேஸ்ட், நீயெல்லாம் தோன்றலின் தோன்றாமை நன்று என அவசரமாய் சீல் குத்தும்.

அந்த குத்துக்கு பயந்து திணித்தலுக்கு திணறி, மூச்சு முட்டும் பரிதாவத்துக்குறிய ஜீவன் தான் மனிதன், அல்லது முக்கி முனகி முகாரி பாடும் ஜீவனம் தான் மனிதம்.

வாட் நான்செஸ் இஸ்திஸ்.... என கோபமாய் கேள்வி கேட்டார் அமீர்கான், தன் தாரே ஜமீன் பர் படத்தில். என்ன சிறிய குறைபாடுடன் பிறந்த அவாஸ்தி அதில் கதையின் நாயகன். இதில் என்னைப் போல், உங்களைப் போல் சராசரி மனித இயல்பே கதையின் நாயகன். தாரே சமீன் பர்ரின் இன்னொரு எக்ஸ்டேன்ஷன் எனவும் இதை சொல்ல்லாம். எல்லோரும் இந்த நாட்டின் மன்னர்கள் தான், என்றாலும் மனிதர்களாய் இயல்பாய் இருப்பது இயற்கை எனும் அடிப்படை தத்துவமே இந்த படத்தின் கதை.

நான் முக்கியம் இல்ல, நல்ல கதை தான் ஹீரோ என தன்னை முன்னிலைப்படுத்தாது, கதையை களம் இறக்கி விடுவது ஆமீர் ஸ்டைல். இதிலும் அப்படியே.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தை தரை இறங்க வைத்து, தூங்கிக் கொண்டிருக்கும் நண்பனை தட்டி எழுப்பி தங்கள் உயிர் நண்பனை தேடுவதில் பரபரப்பாய் தொடங்கும் கதை. நண்பர்கள் ஒன்றிணைய, இயற்கை எழில் சூழும் சிம்லா சாலையில் கார் விரைய, டைட்டிலுடன் பயணிக்க, ரசிகர்களான நாமெல்லாம் எழுந்து உட்காரும் ஒரு தருணம். அப்போது நிமிர்ந்து உட்கார்ந்த நாம், இறுதி வரை நம்மோடு நம் இதயத்துடன் இணைகிறது இந்த சினிமா.

திரைப்படத்தின் களம், காலேஜ் கேம்பஸ், அதுவும் டெக்னிக்கல் கேம்பஸ் என்பதால் நாய்குட்டிகள் கிலோபைட், மெகா பைட் எனும் நாமகரணம். வாத்தியாய் பெருமையாக, ஒரு பேனாவை காண்பித்து அதை பற்றி தம்பட்டம் அடிக்க, ஸீரோ டிகிரி சூழ் நிலையில் கஷ்டப்பட்டு ஏன் பேனா கண்டுபிடிக்கணும்... பென்சில் போதாதா என பகுத்தறிவு கேள்வி ஆகட்டும், எக்ஸாம் எழுதலைன்னா அடுத்ததா எழுத்லாம் அப்பா போனா வருவாரா என கேள்வி கேட்கும் யதார்த்தமும், ஆல் இஸ் வெல் என இதயம் தடவி சொல்லும் புது கட்டிப்பிடி வைத்தியமும், வைரஸின் முரட்டுத்தனமான டிசிப்பிளின் டிங்கிடாங்கிகளும், சுவாரசியத்தின் நல் முத்துக்கள்.

கதா நாயகியை சந்தித்து, அவளுக்கு பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை சரியில்லை, ரொம்ப நொர நாட்டியம் இவன், விலைப்பட்டியல் பார்த்து வாழும் கழுதை இவன்....... வேண்டாம்மா உனக்கு அவன் சகவாசம், என குளிர்பான கோப்பையை கையில் வாங்கிவிட்டு சொல்லும் யதார்த்தமும் என தரத்தில் உயர்ந்து, எங்கும் காப்பியடிக்காமல் சுயமாய் ரூம் போட்டு யோசித்த சிந்தனையுமாய் பட்டையை கிளப்புகிறது.

மாதவன், கரீனா, என அத்தனை கதாபாத்திரங்களும் பாத்திரப்படைப்பை பரிமளிக்கிறது. ஒளிப்பதிவு, இசை நம் அனுபவத்தை கூட்டுகிறது.

குறிப்பாய் சொல்ல வேண்டுமென்றால், கதை துவங்கிய நண்பர்களின் பயணம் சென்றடைவது சிம்லா பங்களாவை. தேடிச் செல்லும், சிம்லா பங்களா அடைவதும், அங்கு சாவு வீட்டின் அடையாளம் பார்த்தவுடன், சரி செத்துப் போயிட்டாண்டா.... என நாம் ரொட்டினாய் சிந்திக்க. தாடி வைத்த ஆளை காண்பித்து, இவர் தான் செத்தார் என சொன்னதில் ஆகட்டும். பின்னர் சம்பந்தமே இல்லாத ஆள் அறிமுகமாகி, வீட்டில் உள்ள புகைப்படமும் அதை உறுதி செய்ய நண்பர்களோடு சேர்ந்து நாமும் திகைத்து மண்டையை பிச்சுக்கும் இண்டெர்வல் பஞ்ச் சூப்பர். நிச்சயம் டீ பாப்கார்ன் எல்லாம் தேடாமல், இயற்கை உபாதை மட்டும் அர்ஜெண்டாய் முடித்து விட்டு, அடுத்தது என்ன என எதிர்பார்க்கும் அதிரடி டிவிஸ்ட்.

கரெண்ட் கட்டானதில், மழை பெய்ந்து தண்ணீர் கட்டியதனால், ஆஸ்பத்திரி வரை செல்ல முடியாத சூழ் நிலை உருவாகும் போது பதட்டத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம். அதனால் என்ன, நான் இருக்கிறேன் என அனுபவமே இல்லாத அமீர் பிரசவம் பார்க்கிறேன் என களத்தில் குதிக்கும் அந்த காட்சி உணர்ச்சிகளின் குவியல். அதிலும் அந்த பிஞ்சுக்கு உயிர் கொடுக்கும் ஆல் இஸ் வெல் அற்புதத்தின் சிகரம். நம் எல்லாருக்குமே குழந்தை பிறப்பை பற்றிய அதீத உணர்வும் பயமும் உண்டு. இக்காட்சி நம்மிடம் இருந்து அனுமதி பெறாமலே...... , ,சில கண்ணீர் சொட்டுக்களை
மலர வைக்கிறது. சபாஷ்...

கடைசி காட்சி நல்ல இன்ப அதிர்ச்சி. நல்ல படம், சூப்பரா யிருக்குடா என நாமெல்லாம் தீர்மாணம் செய்து விட்ட பின்னும் கூட அந்த பரபர கிளைமாக்ஸ், ஒரு பம்பர் போனஸ்.... உச்சா நண்பனுக்கு உச்சகட்ட்த்தில் கிடைக்கும் ஷாக் பார்த்து விட்டு, டேய் நம்மாளு இங்கனதான் இருக்கான் பாருங்டா என நண்பர்கள் பரபரப்பாவதும், சகஜமாய் வந்து டீ மாஸ்டர் அறிமுகமாவதும், பின்னர் ஸ்கூட்டரில் பறந்து வந்து கன்னத்தில் அடிக்கும் கதா நாயகி என நச்சு கிளைமாக்ஸ்.

தெனாவெட்டு பிரெண்டு, நக்கல் செய்து திரும்ப, ஏன் பேர் தெரியாதே உனக்கு, என ஆமிர் பேப்பே காட்டும் போது, அந்த பிரெண்டு மட்டும் அல்ல நாமும் அதிர்ச்சி அடைகிறோம்.

மனதில் தோன்றிய சில சின்ன நெருடல்கள். பொறுப்பான படைப்பாளிகளாய் இருப்பதால் இந்த உரிமை எடுத்துக் கொள்ள தோன்றியது.

· விமானத்தை நிறுத்தி, ஏமாற்றுவது சுவாரசியமான தொடக்கம் என்றாலும். எவ்வளவு சப்பை கட்டு கட்டினாலும், நிச்சயம் அது தனிமனித ஒழுக்க மீறலே. சினிமா சராசரி மனிதனின் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் இது போல் விசயங்களை தவிர்ப்பது நல்லது.

· ராகிங் கொடுமையை சமயோகிதமாய் ஷாக் கொடுத்து தவிர்த்தாலும் ராகிங்கை எதிர்த்து போராடு என மாணவருக்கு சொல்லாமல் சொல்லுகிறதே. நிஜ வாழ்க்கையில் இப்படி எதிர்மறையாய் முடிவு எடுக்கும் போது சில சமயம் விபரீத விளைவுகள் அல்லவா விளையும்.

அதை விட ஒரு நல்ல யோசனை, அடங்குவது போல் அடங்கி விட்டு அசட்டை செய்யாமல் இருப்பது ராகிங்கில் எளிதல்லவா.

· என்னதான் இயல்பு என்றாலும் சிறுநீர், குளியல் என பயாஸ்கோப் காட்டி, பாத்ரூமில் கேமரா நுழையலாமா.

நீண்ட நாட்களுக்கு பிறகு, எடுத்தா இப்படி படம் எடுக்கணும் இல்லையா, எகிறிக் குதிச்சு ஓடிருங்க என படைப்பாளிகளை பார்த்து நாம் பஞ்ச் டயலாக் பேச வைத்திருக்கும் படம்.



3 இடியட்ஸ் 3 சியர்ஸ்.

4 கருத்துகள்:

  1. 3 இடியட்ஸ்..... 3 சியர்ஸ்.... 3 சிக்ஸர்ஸ்...

    பலே படுக்காளி அவர்களே.... திரை விமர்சனம் படு சூப்பர்.... ஆனாலும், கதையை முழுதும் இங்கே விமர்சனத்தில் தருவது சரியா??

    லேட்டஸ்ட் அப்டேட் பாருங்க “தல”

    இந்த படம் தமிழில் எடுக்கப்பட இருக்கிறது... படத்தின் பெயர் “ஒரே அறிவாளி”.... நடிக்க இருக்கும் ஹீரோ, மூன்று வேடமும் தானே நடிக்க இருப்பதாக தெரிவித்தார்.............

    பதிலளிநீக்கு
  2. வாங்க கோபி,

    வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

    //// ஆனாலும், கதையை முழுதும் இங்கே விமர்சனத்தில் தருவது சரியா?? ////

    நிச்சயம் சரி இல்லை.

    நானும் கதை என்னவென்று சொல்லவே இல்லை. கதை திரைப்படத்தில் பத்திரமாய் இருக்கிறது. பார்வையாளருக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது. 100% கியாரண்டி.

    முழு கதையும் சொல்லி படம் பார்க்க இருப்பவரின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ள கூடாது என கவனமாய் எழுதிய விமர்சனமே இது.

    அடுத்த முறை எழுதும் போது இன்னும் கவனமாக இருப்பேன், தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

    ஒரு திரை விமர்சனம், படத்தை பார்க்க தூண்ட வேண்டும் அல்லாது, சுவாரசியம் குறைக்க கூடாது என மிக ஜாக்கிரதையாகவே எழுதுவேன்.

    நிற்க. தங்கள் மூன்று அறிவாளி நியூஸ் சூப்பராயிருக்கு. இந்த விசயம் அந்த ஒரே அறிவாளிக்கு தெரியுமா..

    பதிலளிநீக்கு
  3. ரசித்து எழுதியிருக்கிறீர்கள். நல்ல விமரிசனம்.

    “Avatar" "3 Idiots" என வேற்று மொழிப் படங்களின் சிறப்புகளைத் தமிழ் ரசிகனுக்கு விருந்தாக்கும் உங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாருங்கள் அண்ணா,

    விமர்சனம் படித்து, பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

    இந்த இரண்டு திரைப்படங்களுமே தத்துவ சுகர் கோட் கொண்டிருந்ததால் ரொம்ப பிடிச்சுப் போச்சு. தங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு