பக்கங்கள்

உங்க பொழைப்புக்கு ஊர உபத்திரவிக்கலாமா.

கோமாளாக்கா !!! கேட்டீகளா சேதிய....

வாங்க கோமதியக்கா, தண்ணி பிடிக்கும் போது ஊர் வம்பு இல்லயேன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். தவிச்ச
வாய்க்கு தண்ணி கிடைச்சுது.

நம்ம கோடிவீட்டு குப்பம்மா வீட்டுல குடித்தனத்துல குத்து வெட்டு.

ரோடே மறிச்சு பந்தல் போட்டு கல்யாணம் பண்ணாளே... பகுசு பரங்கிக்காய், பத்தலேன்னா பப்பரக்காய்!

ஆமாக்கா, மூணாம் மாசத்திலயே தலையண மந்திரம் ஒதி, வீட்ட பிரிச்சுட்டா அந்த மாராசி. !!!!
யாரு ?? ...
வேறாரு.... அவ மருமவதேன்.... ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய துரத்திருச்சாம்.

யேக்கா.... சின்ன புள்ளயா, வெக்கப் படக் கூட தெரியாம இருந்த பிள்ளையா இந்த போடு போடுது.

ஆள பாத்து கணக்கு போடாதக்கா, இந்த ஊரிலேயே வெள்ளந்தியா இருக்கது நீயும் நானும்தேன்....

நாலு பிள்ளைகள வைச்சு கூட்டு குடித்தனம் செஞ்சவளாச்சேடி குப்பம்மா, இத பாத்துக்கிட்டு ஒவ்வொண்ணும் பிச்சிக்குமே....

வீடு கலைந்த கவலை குப்பம்மாக்காவுக்கு, மாநிலம் பிரிந்த கவலை படுக்காளிக்கு.

அறவழியில் உண்ணாவிரதம் என தலைவன் முடிவெடுக்க, அடிச்சு உதைச்சு ஊரேயே ஸ்தம்பிக்க வைக்கணும்னு தொண்டர்கள் தடியெடுக்க, ஆந்திரா கொஞ்சம் ஆடித்தான் போனது.

ஆட்டம் இன்னும் நின்ற பாடில்லை,

அதற்குள் எங்களையும் பிரிச்சு விட்டுருங்க என வெட்டி வீரர்கள் கிளம்பிவிட்டார்கள். தமிழகத்தையும் சேர்த்து ஒன்பது மருமக்கள் தனி குடித்தனம் வேண்டி மாமியிடம் முறையிடுகின்றனர்.

நல்ல வேளை கலகத்தில் குதித்த கழகங்களில் திராவிடர் இல்லாமல் உழைக்கும்களிடம் இந்த கோரிக்கை இருப்பதால் பரவாயில்லை.

வேலை இல்லாத மாமியார் பூனைய பிடிச்சு விளையாண்டாங்கிற கதையா, இந்த பிரிவினை போராட்டம் எல்லாம் அலார்ட்டா வெளாடுறது அவசியம்.

எல்லை கோட்டின் வரைவே இன்னும் பஞ்சாயத்துல இருக்கும் போது, வீட்டுக்குள்ள சண்டை நம்மைத்தான் பலவீனப் படுத்தும்.

மக்களே!!
மக்களின் மக்களே!!! குடி மக்களே,
அரசியல் பெருங்குடி மக்களே
உங்க பொழைப்புக்கு ஊர உபத்திரவிக்கலாமா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக