பக்கங்கள்

வலி தவம்


வலி உபாதை அல்ல.
அது ஒரு உணர்ச்சி. மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாயம்.
போராட வேண்டாம். அதோடு சண்டை இட அவசியமில்லை. வலி! விலக்க அதன் போக்கில் சென்று அதை நிர்வகிக்க வேண்டும். இந்த அனுபவம் / பதிவு அதை வி(ல)ளக்கினால் தாய் தமிழுக்கு நன்றி.

தொடங்கும் முன் :
குடல் இறக்கம், மூலம் என்று இரண்டு தொல்லைகள். எனக்குத்தான். இந்த இரண்டு தொல்லைகளுமே என்னை அறுவை சிகிச்சை செய்தால் தான் ஆயிற்று என்று நிர்பந்தித்ததால் வேறு வழியின்றி அது சொல் படி கேட்டேன்.
மூன்று வார விடுமுறையும் நல்ல உடல் நலமுமாய் திரும்ப வந்து விட்டேன். இதுவும் ஒரு அனுபவம், இதையும் பங்கு வைக்கலாமே என்ற போது, ஒரு சின்ன தயக்கம். இது அந்தரங்கமா. இது சொல்வது சரியா.
சரேலேன்று ஒரு நியாபகக் கீற்று.
சிறு வயதில் என்னை செதுக்கிய இருவர். என் எண்ணங்களுக்கும் இயல்புக்கும் காரணகர்தாக்கள். என் குடும்பத்தின் அடி வேர்கள். எனக்கு இரு வேறு ஆலோசனை தந்தனர்.
ஒருவர்: காய்ச்சல் என்று லீவு எடுத்த உன்னை பார்க்க வரும் ஆட்களுக்கு முகத்தில் சோர்வை காட்டு. மெதுவாய் பேசு. உன் வலியை உணர்த்து. அவர் அனுதாபம் சம்பாதி.
மற்றவர்: அடுத்தவர் பரிதாவம் உனக்கு என்ன பயன். உன்னோடு சிரிக்கத்தான் இந்த உலகம் தயார், அழ விரும்பினால் உன்னை தனியாய் விட்டு செல்லும். நம் துன்பம் நம்மோடு. ரௌத்திரம் பழகு. உள்ளுக்குள் போராடு. குறை இல்லை என்பதாய் மூர்க்கம் காட்டு. உன்னிடத்தும் உலகிடத்தும்.
எனக்கு குழப்பம். இன்று வரை தெளிவு இல்லை என்றாலும் இரண்டில் உள்ள நிறை குறை தெரிகிறது. தீர்மானம் இல்லாது வாழும் எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரி மேலே!!! .... என்று கவுண்டமணி பாணியில் செல்வோம்.
சற்று நேரம் சிந்தித்தேன். சிறிய ஆலோசனையில் தெளிவு பிறந்தது. எழுதுவது நல்லது என பட்டது. நேர்மையாய் உணர்ந்ததை சொல்லலாம் என்று தோன்றியது. என் நினைவுகளை பதித்தது மட்டும் அல்லாது, எவருக்கேனும் நல்லது செய்தால் இந்த பதிவின் படைப்பு நோக்கம் பூரணம் பெறும்.

எங்கே தொடங்குவது :

ரம்ஜான் நோன்பு நேரம். துபாய் அலுவலங்கள் கதவு மூடி உணவு உட்கொள்ள தயார் ஆகும் மாலை நேரம். சூரியன் மறைந்தால் ஆரம்பிக்கலாம் என்று இஸ்லாம் சகோதரர்கள்.
நான் மட்டும் அலுவலகத்தில்.
முடிக்க வேண்டிய முக்கியமான வேலையின் காரணமாய். பாதாள கார் பார்க்கிங்கில் உடன் பணி புரியும் அதிகாரியோடு நீண்ட நேரமாய் நின்ற வாக்கில் சம்பாஷனை, இரண்டு மணி நேரமாய்.

உடல் சோர்வு. வியர்வை. முதலில் அசொவ்கரியமாய் ஆரம்பித்த உடல் சோர்வு மெல்ல பரவி உடல் முழுதும் வியாபித்தது. கால் மாற்றி கால் மாற்றி அவஸ்தையாய் நின்று இருந்தேன். வியர்வையின் அளவு அதிகரித்தது. முக்கியமாய் முகத்தில் கூடுதலாய் வியர்த்தது. காற்று குறைவு என்று மனதில் ஒரு நினைப்பு.
முடிக்க வேண்டிய வேலையின் அளவு தெரிந்ததால் அவரிடம் சொல்லி விட்டு சரி வேலை தொடங்கலாம் என்று மெதுவாய் நகர்ந்தேன்,பாதாள கார் பார்க்கிங்கில் இருந்து மெதுவாய் மேலே வந்தேன்.
வியர்வையின் அளவு குறையவே இல்லை. மிதப்பது போல் ஒரு பிரமை. உச்ச ஸ்தாயியில் சில் வண்டின் குரல் போலே காதில் கேட்கிறது. கால் தன வலுவிழந்து சற்றே தள்ளாட்டம். முகத்தில் சதை திரசியில் ஒரு உணர்வின் வீக்கம். நடக்க முடியுமா என்ற கேள்வி சந்தேகமாய் தோன்றுகிறது. முடியும் என்று மனது சொல்லுகிறது. சுவரின் அண்மை பார்த்து கை அன்னிசையாய் தடவி பிடித்தது. உடலில் ஒரு சிறு பதட்டம் காரணமாய் நடையில் ஒரு வேகம். விசையுடன் தலை சுழல்வது தெரிகிறது. கண்களில் ஒன்றிக்கும் மேலாய் நீருற்று போலே தெரிந்து பார்வையில் ஒரு குழப்பம்.
சே... என்ன இது தொல்லை. சாப்பிட்டோமா . ஆம் சாப்பிட்டேனே. பின்னே என்ன இது. எதோ பிரச்சினை போல் தெரிகிறதே. பெரிதாய் இருக்குமோ. சரி போய் அலுவலகத்தில் உட்கார்ந்து ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் சரி ஆகும்.
காதுகளில் கேட்கும் ஒலியின் தாக்கம் அன்னியமாய் பட்டது. தட்டுத் தடுமாறி என் மேசையை அடைந்து இருக்க, மேலும் சுழன்றது. முன் சரிந்து படுத்த நிலை மேலும் அசௌகரியம் தர நிலையை மாற்றி தலை பின்னுக்கு சாய்த்தேன். நினைவு தவற காது சில் வண்டின் சத்தம் அதிகரிக்க கண்கள் இருட்ட தரையில் மயங்கி விழுந்தேன்.
................................. தொடரும்.

1 கருத்து:

 1. படுக்காளி அவர்களே

  வெகு நாட்களுக்கு பின் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி........ ஆயினும், இந்த இடைவேளையில் தாங்கள் துன்பப்பட்டதை அறிந்ததும், மனம் ஏதோ சிறிது பாரமானது......

  இதன் தொடர்ச்சியை வரும் நாட்களில் படித்து முடிக்கும் வரை, நெஞ்சுள் ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருக்கும்........

  நல்ல சுற்றமும், குருவருளும் தங்களை பழைய நிலைக்கு கொண்டு வரும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை.

  "உலகை காக்கும் ஆண்டவனை" வேண்டும் பிரார்த்தனையே தற்போது தங்களுக்கு சிறந்த "வலிவிலக்கி"யாக இருக்கும்..... அவனின் முழு அருளும் உங்களை அடைந்து, அந்த பிரார்த்தனையின் பலனாய், விரைவில் பழைய துடுக்காளியை காணும் ஆவலில் உள்ளேன்.

  இன்பத்தில் திளைக்கும் போது நாம் இவ்வுலகை மறப்பது மானுடத்தின் நியதி.... ஆனால், கடும் சோதனையின் போதும், துன்பத்தில் உழலும் போதும், அந்த தெய்வத்தின் தாள் பற்றுவதன்றி நமக்கு ஏது வேறு கதி??

  பதிலளிநீக்கு