பக்கங்கள்

சொம்பு வெட்டியான் தெரு…


குடும்ப சொத்து பங்கிடுதல்….

வில்லங்கமான - விவகாரமான இந்த விஷயம் தான். குடும்பங்களின் அன்பையும், அனுசரணையையும் பாதிக்கிறது - இன்றைய குடும்பங்கள்  இந்த குடும்ப சொத்து பங்கிடுதல்…. குறித்து சிந்திக்க இக்குறிப்புகள் உதவும் என நம்பி,  இவைகள் சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என ஆசைப்பட்டும் இங்கு பதிவிடுகிறேன்.

இப்பதிவை வாசிக்கும் முன், ஒரே ஒரு கணம் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன். ஒரு தட்டில் உண்டு, ஒரு முலையில் பால் குடித்து, ஒரு வீட்டில் தங்கி, ஒரு குடும்பமாய் வாழ்ந்த அண்ணன் தம்பி, தங்கை அக்காக்கள் - என்பதை மறக்காமல், ஒரு பெற்றோருக்கு பிறந்த மலர்கள் தான் நாம்… என நினைவு மேலோங்க… மேலே வாசிக்க துவங்குவோம். அன்று நாம் கண்ட அன்பை இன்று தேடுதலோடு நினைவு கூர்வோம்.
1.   
பெற்றோர் சம்பாத்தியம் அவர்கள் பிள்ளைகளுக்கு சமமாய் பங்கிடுதல் தான் முறை. 

இதில் எந்த பாகுபாடும் சரியில்லை… ஆண் பெண், நல்லவன் கெட்டவன், வாழ்ந்தவன் வாழாதவன் ஒத்திருந்தவன் ஒத்து ஊதாதவன்… எனும் பேதம் கொள்ளாமல், சரி சமமாக பங்கிடுதல் மிக மிக ஆதாரமானது. (என் தங்கச்சி கஷ்டப்படுறா… என தங்கள் சொத்தை, கிப்ட் பண்ண ஒருவருக்கு உரிமை உண்டு, ஆனால், பிரிக்கும் போது, ஏற்ற தாழ்வு செய்யும் சாய்ஸ்… பெற்றோர்களுக்கு கிடையாது)
2.   சரிசமமாக பங்கிடும் - மிகப் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கானது. அது மிகப்பெரும் கடமை. பிற்காலத்தில், சொத்து குறித்து பிள்ளைகள் சண்டை செய்தால் அது பெற்றோர் செய்த தவறு… அவர்களுக்கே இழுக்கு. எனவே கவனமாக, பலதும் ஆராய்ந்து நேர்மையாக பொறுப்புணர்வோடு, பெற்றோர்கள் செயல்படுவது மிக மிக முக்கியமானது.

3.   சரி - சரிசமம் அத்தனை எளிதா.. இல்லை - கிடையாது. காலங்கள் மாறும் போது பிராக்டிக்கலாய் சமமாய் இருக்காது போகலாம். உதாரணம், இரு வீடுகள் இரு பிள்ளைகளுக்கு என பெற்றோர் சொல்லி விட்டார்கள். ஒரு வீடு, 4,39,415.95 இன்றைய மதிப்பு… இன்னொரு வீடு……….. அதே இலக்கங்கள் இருக்குமா… 4,39,416.05 ரூபாயாகி விட்டால்………… 

எனவே.. எவ்வளவு கண் கொத்தி பாம்பாக செயல்பட்டாலும்… சரிசமம் வருவதற்க்கான சாத்தியக் கூறுகள் குறைவு.

இப்படி சில சில்லறை பிரச்சனை வரும்… இதை சில்லறை பிரச்சனை என கொள்ளும் மனப்பக்குவம் வளர வேண்டும்.

4.   பெற்றோர்கள் தரும் சொத்தை…பிள்ளைகள் சந்தோஷமாக சுவீகரிக்க வேண்டும்… எனக்கு வேண்டாம்… அதுல இருந்து ஒரு பைசா வேண்டாம் என சொல்வது அலட்டல்… அதே போல், எல்லாம் எனக்கு வேண்டும் அல்லது, மேஜர் ஷேர் எனக்கு வேண்டும் என்பது அயோக்கியத்தனம்… 

அமைதியாய்… எப்படி பெற்றோரின் அன்பை பகிர்ந்து கொண்டோமோ அது போல செல்வத்தையும் அமைதியாக வாங்கி, மன நிறைவோடு, நம் பெற்றோரை நன்றியுடன் தலை வணங்கி நினைக்க வேண்டும்.

5.   ஒரு முக்கியமான பாயிண்ட் 

இது… இப்பிரச்சனையின் ஆணி வேரே இது தான்.. பிள்ளைகள், பெற்றோரின் சொத்தை… எதிர்பார்க்க கூடாது, எப்படி பாகம் பிரிக்கும் போது சமமாய் பிரிக்க மட்டுமே பெற்றோர்களுக்கு உரிமை என சொன்னோமோ அதுபோல், பிள்ளைகள் தனது தேவைகளை தன் ஆசைகளை, லட்சியங்களை - தன் சம்பாத்தியத்தில் பெற வேண்டும். அது தான் ஒருவருக்கு பெருமை.

 ஒரு பெற்றோர், தம் பிள்ளைக்குத் தரும், மிகப் பெரும் சொத்தே.. ஆரோக்கியமான உடல், அன்பான மனது, உயர்ந்த சமூக வாழ்வியல் படிப்பினைகள், வேல்யூ சிஸ்டம்… அவ்வளவே.. அவர்கள் தரும் பணம்… பொருட்டே அல்ல… பணம் எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும்… நம்மாலேயே… சம்பாதிக்க முடியும்……. என்பதே நிதர்சனம்…. இந்த உண்மை புரியாமல் - காசை பெரிதென நினைப்பதும் - தன்னால் அவ்வளவு சம்பாதிக்க முடியாது எனும் நினைப்புமே சண்டைக்கு வழி உண்டாக்குகிறது.

ஒரு திரைப்பாடலில் சொல்வது போல…………. ’கொடுக்கிற நோக்கம் உறுதியாயிட்டா.. எடுக்கிற நோக்கம் வளராது………’ 

எனவே… பூர்வீக சொத்தை… ஒரு நாளும்…. கணக்கில் கொள்ளாமல், தன் காலில் நின்று.. தனக்கு தேவையானதை … தானே சம்பாதிக்கும் மனப் பக்குவமும்… திடமும்.. ஒவ்வொரு பிள்ளைக்கும் வளர வேண்டும்

6.   வரும் சொத்தில்.. கூடுதல் குறைதல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். கூடுதலாய் உங்களிடத்தில் குடும்பச் சொத்து வந்து விட்டால்.. உடன் பிறந்தோரை அழைத்து, அவர்களுக்கு உரியதை… முறையாக பங்கிட்டு கொடுத்து விடுதல் நலம்.
7.   
ஒரு வேளை.. உங்களுக்கு வர வேண்டியது வராமல்.. குறைவாக வந்தால்.. சிரித்த படி… சரி, நம்ம உடன் பிறந்தது… ஆண்டு அனுபவிக்கட்டும்… என விட்டுக் கொடுப்பது.. உத்தமம்..
எக்காரணம் கொண்டும் - சண்டை செய்வதோ அல்லது நீதிமன்றம் நாடுவதோ - அல்லது மூன்றாம் பேர் உதவி நாடுவதோ வெட்கக் கேடு.

 ஏனெனில்… குடும்பத்தில்.. தோல்வி என்பதில்லை… மனம் முழுக்க…. மகிழ்வுடன்… அந்த உடன் பிறந்தோரை.. ஆசிர்வதித்து… வைத்து கொள்.. நன்றாக இரு.. என ஆசிர்வதிக்கும் மனம் இருக்க வேண்டும்…. சம்பாதித்த பெற்றோர் - அதை விட்டு விட்டுத்தானே சென்றார்கள், எனும் தெளிவு இருந்தால்- இதனால் நமக்கு என்ன யூஸ்... என்ற கேள்வி பிறக்கும்...

இறுதியாக கேட்டுக் கொள்ளுங்கள்….

ஊரில் இருக்குது படியும் தராசும்..

ஆம், 5 அடி பூமிக்காக, நிதிமன்றம் போய், ஜெயித்து கொண்டு வந்தவனை ஊர் என்ன சொல்லும்… வீரன் எனச் சொல்லாது… ஆஹா.. இவனல்லவோ வெற்றி வீரன் என ஒரு நாளும் சொல்லாது…. ஏனெனில்.. ஒரு குடும்பத்தின் அண்ணன் தங்கைக்கிடையே.. ஊர் எந்த காலமும் உள்ளே கால் வைக்காது…

அதே நேரத்தில்… மற்றதை நினைத்து பாருங்கள்…… ” நமக்குள்ள எதுக்கு தகராறு... என்ன 5 அடி தான…  வைச்சுக்கப்பா… இதுல என்ன இருக்கு” என சொல்பவனை ஊர் கொண்டாடும்.. 

தனது சொத்தை கொடுத்து விட்டு வருபவனை... இந்த உலகம்... தோத்தாங்கொளி தோல் புடுங்கி என சொல்லும்… என்ற நினைப்புதான் நம்மில் நிறைய பேரை சண்டை செய்ய வைக்கிறது... இல்லை… நிச்சயம் இல்லை.… ஊர் அவனை பாசக்காரன் என சொல்லும், பரந்த மனசுக்காரன் என சொல்லும்.

என்ன இருந்தாலும்… அவனோட பரந்த மனசு யாருக்கு வரும்.. என புகழ்மாலை சூட்டும்….…ஒரு கோடி ரூபாய்க்காக… பங்காளி கழுத்த அறுப்பதை வீரம் எனவோ.. சூரர் எனவோ….. ஊர் சொல்லாது, அறிவில்லாதவன்.. முட்டாள், பயங்கரமானவன்.. அவனிடம் நெருங்காதே என நினைக்கும்…


ஒரு வேளை நேரடியாய் இதை அவனிடத்தில் சொல்லாது… முகத்திற்கு முன்னே… சூப்பர்… பிரமாதமாய் வெட்டி… நீதான் உங்க அப்பனுக்கு மவன்னு நிறுபிச்சுட்ட என சொல்லும்.. ஆனால், தன் கருத்தை மூடி மறைத்து கொள்ளும்… 
சொம்பு வெட்டி - தன் பங்கை நிறுபிப்பதை விட முக்கியம் - அந்த சொம்பில் தண்ணீர் வாங்கி குடித்து தாகம் தீர்ப்பதே... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக