பக்கங்கள்

உயிர் (சிறுகதை)

’பாம்பு… பாம்பு..’ கத்தியது யாழினி… 
எங்க.. எங்கடி... பதறியது அம்மா…
‘வந்திட்டேன்.வந்திட்டேன்….’ கையில் கம்பு தேடி, எடுத்து ஓடி வந்தது அப்பா…

இங்கதான்.. இங்கதான்ப்பா… மஞ்ச கலர்ல.. ம்.. ஃப்ரெளன் கலர்ல.. நீளமா…

நெல்சன், மயிலாப்பூரில் ஒரு அடுக்ககத்தில் 15 வருடங்களாக இருந்து விட்டு, இப்போது தான் சென்னை புற நகரில் அரைகிரவுண்டுக்கு குறைவாக ஒரு நிலம் வாங்கி, அதில் 764 சதுர வீடு கட்டி... பால் காய்ச்சி….,

இங்கயா…
அங்க அந்த சிமிண்ட் மூடைக்கு கீழ ஓடிப் போச்சு…
இருங்க.. நீங்க தனியா போகாதீங்க.. நான் பக்கத்து வீட்டுல குரல் கொடுக்கிறேன்… அம்மா வாசல் பக்கம் ஓடினாள். அப்பா, கவனமாக, சிமிண்ட் மூடையை தூக்கி பார்த்தான், கையில் தயாராக கம்பு வைத்திருந்தான்… சாக்குக்கு கீழே… ஒன்றுமில்லை…
உதறிப் பாருங்கப்பா…
சட்டென பொறி தட்ட.. கையை உதறினார்.. சாக்கு பை கீழே விழுந்தது.. சிமெண்ட் தூசி.. சட்டென மேல் கிளம்பி, பரவலாய் புகை மேகம் கிளப்பியது.. நெல்சன் இருமினான்… கண்களை சிமிண்ட் அமிலம் போல் சுரண்டியது… இருமலோடு… கண்களை இடுக்கி பார்த்தான்.. ம்..ஹுகும்.. ஒன்றுமில்லை.. இல்லியே… சொல்லிக் கொண்டிருந்த போதே….


வாசல் பக்கமிருந்து, அரை டிரவசரில்.. ஒருவர் வந்தார்… சட்டைக்கு லீவு கொடுத்து, வயிற்று தொப்பைக்கு ஓவர் டைம் கொடுத்திருந்தார். சாரையா நல்லதா சார், உள்ளே வரும்போதே கேள்வியுடன் வந்தார்…

ம்… ம்.. என்னது…
இல்ல.. வந்தது…
ம்.. பாம்பு…
ஐய்யய்யோ.. அத சொல்லாதீங்க…
இல்ல சார்.. பாம்பு தான்..
ஐய்யோ.. ஐய்யோ.. அத சொல்லக் கூடாது சார், வேணும்ன்னா.. கயிறுன்னு சொல்லுங்க..
இல்ல சார், பாம்பு தான்… யாழினி சொன்னாள்.. நான் பாத்தேன்..
ஐய்யோ.. பாப்பா… வாயால பாம்புன்னு சொல்லக் கூடாது…
ஏன் சார்.

அது அப்படித்தான். பெரியவங்க சொல்லியிருக்காங்க.. பெரியவங்க சொன்னா அப்படியான்னு கேட்டுக்கணும்… சும்மா எதிர் கேள்வி கேக்க கூடாது

ஓக்கே சார்… சார், ஒரு வேளை பாம்புன்னு பேர் வைச்சது அதுக்கும் தெரிஞ்சுருக்குமோ.. அதான் பாம்புன்னு சொன்னதும்… நம்மள கூப்பிடுறாங்கன்னு வந்துருமோ…

அரை டிரவுசர் முறைத்தார்… அதில்.. இந்த காலத்து இளசுங்களுக்கு மரியாதையே தெரியாது, சும்மா ஃபேஸ்புக்.. ஸ்மார்ட் ஃபோன் தெரிஞ்சுக்கிட்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி அலட்டிக்கும்ங்க… ம்.. கலிமுத்திப் போச்சு… என ஒன்றரை பக்க வசனத்தை ஒற்றை பார்வையில் பார்த்தார்..

அடிச்சுட்டீங்களா..
இல்ல சார், காணோம்..
ஆங்… ஏன்னா நல்லதுன்னா அடிக்க கூடாது… அது சாமி… சாரைன்னா அடிக்கலாம்.

சார், நான் சிட்டில வளர்ந்தவன், எனக்கு எப்படி சார் நல்லது கெட்டது இதெல்லாம் தெரியும், அப்புறமும் இங்க பாம்பெல்லாம் இருக்கா..
ம்… இருக்காவா.. நான் வீடு கட்டி வந்த புதுசுல.. தினத்துக்கும் ஒண்ண பாப்பேன்.. என்ன ஒண்ணும் செய்யாது… ஏன்னா நான் சிவ பக்தன்.. அதனால எனக்கு ஒண்ணுமே ஆகாது…

ஓ… தன் பங்குக்கு எவ்வளவு முடியுமோ.. அவ்வளவு பீதியை கிளப்பி விட்டு.. கிளம்பினார் அடுத்த வீட்டுக்காரர். நெல்சனின் மனைவி பிலுபிலுவென பிடித்து கொண்டாள்.

நான் சொன்னேனா.. சொன்னத கேட்டீங்களா… தாம்பரத்துல ப்ளாட் வாங்குவோம்னேன்.. கோல்ட் காயின் ஃப்ரீன்னு ஆப்பர்… 2 BHK, காமன் பார்க் ஸ்விம்மிங் பூல் வேற… அங்க இந்த மாதிரி பிரச்ச்னை இருக்குமா.. ம்.. சொல்லுங்க…

நெல்சன் இதில் மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை. மூன்று நாட்கள் முன்னால் இதே டாப்பிக்கில் டாக்.. (TALK) சீரியசாகி… டாக்.. (DOG) லெவல் ஆனதில்.. ஒன்றை உணர்ந்தான்.. குடும்ப சண்டையில் பேசாமல் இருந்தால் சேதாரம் குறைவு, செய்கூலி அதிகம் என…

என்றாலும் பார்க்காத அந்த பாம்பு அவனை கவலைப்படுத்தியது. இப்ப இருக்குமோ.. போய் பாப்போமா.. என இரு முறை வந்து பார்த்தான். மறு நாள் காலையில் உற்று உற்று.. எங்காவது தெரிகிறதா என பார்த்தான்… வொய்ப்… சொன்னது சரிதானோ.. ப்ளாட் வாங்கியிருக்கணுமோ… அலுவலகத்திலும் இதே சிந்தனை… வீட்டுக்கு இரு முறை ஃபோன் செய்தான். 

நேரடியாக இதை கேட்காமல், என்னன்னவோ பேசினான்…. மாமனார், மாமியார் பற்றியெல்லாம் கூட குசலம் விசாரித்தான். மனைவி சந்தோசப்பட்டாள்… அப்புறம் வேற ஒண்ணுமில்லையே… என பேசி வைத்தான். சொல்லாத பாம்பு பற்றி நிம்மதி அடைந்தான்.


ஆபிசில் நண்பர் ஒருவர் ஐடியா கொடுத்தார்… சுற்றிலும்.. சிமிண்ட் போட்டு, தளமாக்கி விட்டால், பிரச்சனையில்லையே.. பாம்புக்கு தரையில் வர முடியாது…

ஓஹோ என கேட்டுவிட்டு காண்ட்ராக்டரிம் ஃபோன் செய்த போது, ம்… ஆமா சார் அவசியம் தான் செஞ்சுரலாம்… ம்… என என்னவோ கணக்கு போட்டு பார்த்து, 2.80 ல முடிச்சுரலாம் சார்… என்றார்…
என்னது… 2 லட்சமா,

சார், உங்களுக்காக சீப்பா சொன்னேன்…. மெட்டிரியல் காஸ்ட்.. லேபர் காஸ்ட் மட்டும் தான்.. இதுல எதுவுமே லாபம் கணக்கு போடல…
ஐய்யய்யோ… அப்புறம் பாப்போம் சார்… பட்டென ஃபோனை வைத்து விட்டான்… 

சிம் கார்டுக்கு வழி இல்லாத போது, ஸ்மார்ட் போனுக்கு ஆன்லைன்ல சர்ச் பண்ணினான் ஒருத்தன்கிற கதையா என பட்டென வைத்து விட்டான்.

அம்மாடி.... தளம்... இது நடக்குறதில்ல, வீடு கட்டலாம்.. தனி வீடுன்னு.. என்னவோ நினைப்புல கைய வைச்சு… இப்ப வீடு முடியும் போது, போதும் போதும்ன்னு ஆயிருச்சு. வாங்காத இடத்துல எல்லாம் கடன வாங்கி, எவ்வளவு கடன் இருக்குன்னு கணக்கே போடாம பயந்துகிட்டு இருக்கேன்.. இந்த நிலையில… இன்னும் செலவா…

மாலையில் வீட்டுக்கு வரும் போது… சாலையோரத்தில்.. சந்தை பார்த்தான்… அதில்… காய்கறி விதைகள் இருந்தது. எப்போதோ கேள்விப்பட்ட ஒரு தகவலும் நினைவுக்கு வந்தது. செடி விற்றுக் கொண்டிருந்தவரின் அருகில் நெருங்கினான்… 

இந்த… வந்து… இந்த பாம்பு வராம இருக்கிறதுக்கு ஒரு செடி உண்டே… அது
ஆங்… இருக்குது…
வராதா… பாம்பு சுத்தமா வராதா…
ம்..ஹூகும்.. வரவே வராது…கியாரண்டி சார்…
சின்ன செடியா இருக்கே…
சார், இது ஒரு சின்ன, குத்து செடி தான்.. ஆனா இதோட வாசம் ரொம்ப ஸ்டாரங்க்.. நம்ம மூக்குக்கு தெரியாது...  ஆனா அதுக்கு புடிக்காது அதனால இந்த செடி இருக்கிற ஏரியா பக்கமே வராது….
எவ்வளவு..
60 ரூபா…
ரெண்டு கொடுங்க.. முன்னால ஒண்ணு பின்னால ஒண்ணு…
ஒண்ணு போதும் சார்…
பரவாயில்ல சார், டபுள் ப்ரொட்டக்‌ஷன்..

செடி கொண்டு வந்து, நட்டு வைத்தான்.. தவறாது நீர் ஊற்றினான்… என்றாலும்.. தினம் தினம் உத்து உத்து பாம்பு பார்க்கவும் முயற்சித்தான்… 

இரண்டு நாட்களில் செடி வாடித் தெரிந்தது. செடி… சோகமாக.. ஒரு தொய்வாகவே நின்றது… ஒரு வாரத்தில், செடி பட்டுப் போனது… இலைகள் உதிர்ந்து விட்டது.

அதே சந்தைக்கு அதே செடி வித்தவனிடம் சென்றான்..
செடி பட்டுப் போச்சு…
அதுக்கு நான் என்ன சார் செய்யுறது, தண்ணீ ஊத்துணீங்களா…
தவறாம ஊத்துனேன்…
அப்புறம் எப்படி, இங்க பாருங்க.. உங்ககிட்ட வித்தப்ப உள்ள செடி… கூடவுள்ள சோடிகள்.. இப்பவும் நல்லாத்தான இருக்குது… வேணும்ன்னா… நீங்க இத எடுத்துட்டு போங்க… ஆனா ஏன் பட்டு போச்சுன்னு தெரியணுமே… தொட்டியிலயா.. தரையிலயா..
தரையிலதான்..
ம்… உங்க வீடு எங்க இருக்குது..  நான் வர்றேன்..

தோட்டக்காரன் வந்தான்… பார்த்தான்… மணலை கிண்டினான்.. கல்.. கல்.. சிமிண்ட்... வேலை செய்த துகள்கள்.. செங்கல் துணுக்குகள்.. டைல்ஸ் துண்டுகள்...

சார், பூரா… சிமிண்ட்டும்.. செங்கல்லும்.. அப்புறம் எப்படி சார்… இங்க வாங்க… இந்த இடத்துல.. பூரா சிமிண்ட் காரை… அதெல்லாம் மண்ணுக்கு எதிரி சார்… சத்த பூரா உறிஞ்சுக்கும்… புல் பூண்டு வளர விடாது… இந்த சிமிண்ட்டு கல்ல பூராவும் எடுத்துட்டு, செங்கல்லு பூரா எடுத்துட்டு, மண்ண கிளறி கிளறி விட்டு, வீட்டுல உள்ள கறி காய் வேஸ்ட்டு.. டீ தூள்… வாழைப்பழத் தோல்… மூட்டை ஓடு… இதெல்லாம் போடுங்க.. குப்பைன்னு நீங்க தூரப் போடுறத.. இந்த மண்ணுல போடுங்க… மண்ணப் போட்டு மூடுங்க… தினத்துக்கு ஒரு வேள தண்ணி விடுங்க… அவ்வளவுதான்…அவன் சென்று விட்டான்.

நெல்சன் டிவியை அணைத்து விட்டு, வேட்டியை இருகக் கட்டிக் கொண்டு செடியின் அருகில் அமர்ந்தான்… இரும்புக் கம்பியினால், பூமியை கிளறி கிளறி… சிமிண்ட்… வேஸ்டுகள், செங்கல் உடைந்தவைகளை அகற்றி.. வெளியில் எறிந்தான்.. மாட்டுச்சாணம் கொண்டு வந்து மனைவி அச்செடியின் அருகில் புதைத்து வைத்தாள்… யாழினி.. பாம்பு வராதாப்பா என அக்கரையாய் கேட்டாள்… 

தினம் கறி காய்களின் வெங்காயத் தோல், இஞ்சி தோல் எல்லாம் கொணர்ந்து புதைத்து வைத்தான்.… ஒரு இரண்டு நாட்களில், செடி, பச்சையாய் நிமிர்ந்து நின்றது… மூன்றாம் நாளில் துளிர்ந்து ஒரு நுனி பச்சையாய் வந்தது.

அவனுக்கு ஏதோ சொல்ல முடியாத ஒரு சந்தோஷம்… ஒரு கிளர்ச்சி.. அடிக்கடி செடியை பார்த்தான். அந்த பச்சையும் வளர்ச்சியும்.. அவனுக்கு மிகுந்த சந்தோஷம் கொடுத்தது… பாம்பு வரவில்லை… இரண்டு நாட்களில் பாம்பு பற்றிய நினைப்பும் வரவில்லை... 

திடிரென ஒன்று தோன்றியது… ஏன் மீதம் இருக்கும் இடத்தில் செடி வைக்க கூடாது… இரண்டு மூன்று, பூச் செடிகளும், சில காய்கறி விதைகளும் வாங்கி வந்தான்.

மண்ணை கிளறினான்… கவனமாய், சிமிண்ட்.செங்கல். கற்களை ஒரு வாளியில் அள்ளி வெளியில் வீசினான், மண்ணோடு பேசினான்… சிமிண்ட்டால். எவ்வளவு பெரிய கஷ்டம்… மக்கி உரமாகும் வழியில்லாது.. காலம் காலமாய் இங்கே திடமாக இருக்கும். ப்ளாஸ்டிக் போல.... 

மண் ஒரு செடியை வாழ வைக்க விடாமல் அல்லவா இச்சிமெண்ட் தடுக்கிறது… மண்ணின் உயிர் இந்த சிமெண்டினால் பறி போகிறதே… என உள்ளுக்குள் பதறினான்.. சிமிண்ட் கட்டிடங்கள் பார்த்து சிறிய கோபம் வந்தது. இது அவனுக்கு புதியதாய் தோன்றியது…

சிமெண்ட்டும்.. ப்ளாஸ்டிக்கும்.. இந்த மண்ணுக்கு பெரிய தீங்கு செய்கிறது… என தோன்றியது… அவனுக்கு அப்புதிய தோட்ட வேலை.. உற்சாகம் தந்தது… தோட்டம் பச்சையாய் விரிந்தது..

ஒரு மாலையில் அமர்ந்திருந்த போது, சட சடவென ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்தது.. அதன் வண்ணங்கள் அவனை கிறங்கடித்தது.. யாழினி… டாடி.. பட்டர்ஃப்ளை என ஓடி வந்தாள்…

செடிகளின் இலைகளுக்கு மேல்.. ஒரு குருவி.. வந்தமர்ந்து… இருந்தது. மரத்துக்கு கீழே… அணில் ஒன்று இருப்பதை அப்போது தான் கவனித்தான்… யாழினி துள்ளினாள்.


உயிர்கள்.. உயிர்கள்.. அவனை சுற்றி.. உயிர்கள்.. மண் வளம் பெற்று.. உயிராய் இருந்தது… அணில்.. வண்ணத்து பூச்சி குருவி எல்லாம்…  ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. யாழினி அவைகளை நெருங்கி கொண்டிருந்தாள்..

நெல்சன் திரும்பி மனைவியை பார்க்க, அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தான். சிரித்தான். அவள் அழகாக அவன் கண்ணுக்கு தெரிந்தாள்.. கிறங்கினான்… 

மெல்ல ஒய்யாரமாய் அவள் அருகே வந்து… அவன் தலையை கோதி… 

எல்லாம் ஒரு உயிரால தொடங்குச்சுல்ல….என்றாள்.
நெல்சன் கண்களை சுருக்கி என்ன என்பது போல் பார்க்க…

ம்.. பாம்ப சொன்னேன்… என்றாள்…. 

நெல்சன் தலை திருப்பி செடிகளை பார்த்தான்… யாழினி செடிகளோடு விளையாடி கொண்டிருக்க.. கை நீட்டி மனைவியை தொட்டான். அந்த தொடுதலிலும் உயிர் தெரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக