(மக்ரோன் கதையின்
இரண்டாம் பாகம்…. இதோ உங்களுக்காக….
ஏன் இந்த விபரீதம்,
எதற்காக இரண்டாம் பாகம் என்றால், தெரியாமல் நடந்து விட்டது. முதலிலேயே சொல்லி விடுவோம்... இரண்டாம் பாகம் எனும் போது முதல் பாகத்தின் கதை தொடர்ச்சி
இல்லை. இன்னும் சொல்லப்போனால் இப்பகுதியின் இலக்கும் பாதையுமே வேறு வேறு. கதை
மாந்தர்கள், கதை களம் இரண்டையும் முதல் பாகத்தில் இருந்து கடன் வாங்கி விடலாம், வேலை
சுலபம் என்றே தொடங்கினேன்.
பின்னர் ஒரு யோசனை,
ஏன் நான் லினியராக சொல்லக் கூடாது, முதல் பாகத்தில் இருக்கும் வெற்றிடங்களை பிடித்து
அதில் கொஞ்சம் ஈயம் பூசினால் நல்லதாயிற்றே… என ஒரு பரிசோதனை முயற்சி)
தூத்துக்குடி விமான
நிலையம் சுத்தமாக இருந்தது. இரவல் வாங்கிய இயற்கையும், குழி தோண்டி நட்டு வைக்கப்பட்ட
மரங்களுமாய் மினுங்கியது. மேல் தட்டு பயணிகள் அவசரம் அவசரமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அரைகுறையாக ஃபோனில் கட்டளையிட்டார்கள்.
சுடச் சுட, அப்போது
இறங்கிய விமானத்தில் இருந்து செந்தில் நடந்து வந்தான். பலமான காற்றில், தலைமுடியை பறக்க
விட்டு, அதை ரசித்த வாறும் நடந்து வந்தான். குதியும் குலுக்கலும் அவன் நடையில் பின்னி
இருந்தது. நடையில் ஒரு பலம் ஒரு உத்வேகம் இருப்பதை உணர்ந்தான். நம்மூர் காத்து பட்டவுடன
சிலுத்துக்குச்சோ… தனக்குள் தன்னைப்பற்றி நினைத்து கொண்டான்.
கசாலி எங்கேயிருப்பான்,
ஏர்போர்ட் வருவதாக சொன்னானே… வந்திருப்பான்… நிச்சயம் வந்திருப்பான், ஈமெயில் எழுதி கூப்பிட்டவன்,
ஃபோனில் … வாறியா… வா..வா…. எல்லாத்தையும் நான் பாத்துக்கிடுதேன்.. உன்ன ராசா மாதிரி
கவனிக்க நான் காரண்டி… என்றானே… சாரி, டிராபிக்
ஜாம், என்றோ இல்ல வரும் போது வர்ற வழியில, ஒரு வேலை…… என்றோ சால்ஜாப்பு சொல்லாமல்,
சொன்ன நேரத்துக்கு வரும் நேர்மை கசாலியிடம் உண்டு. எங்கேயிருப்பான், அது சரி எப்படியிருப்பான்.
அவனை பார்த்தே ஒரு 10 வருடம் ஆகிவிட்டது. ஃபோட்டோ அனுப்பியிருந்தான், என்றாலும் கூட
நேரில் பார்க்க ஒரு 10 வருட இடைவெளி என்பது அதிகம் தான்.
பார்வையாளர்களின்
வரிசையில் கண்களை ஓட விட்டான். ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் தெரிந்த முகங்களாக பட்டது.
இத்தனை பேரை எனக்கு தெரியுமா எனும் சந்தேகம் கூட துளிர்த்தது. இவர்… இவர்… பேர் தெரியல,
ஆனா இவர்…… அவரே தான் என அவசர தீர்மானங்கள் அனிச்சையாய் வந்தது. அங்கு இரண்டாம் தூணுக்கு
அருகில் அவன். கசாலி…. கசாலி மரைக்காயர்….. அவனே தான்… ஐய்யோ குண்டாயிட்டான்… அடப்பாவி….
அவனருகில் சென்று…
கசாலி…………..என குரல் கொடுத்தான்… ஒரு கணம் திகைத்து கசாலி சிரித்தான். அந்த பார்வையில்
ஒரு ஆச்சரியமும் திகைப்பும் இருந்தது. செந்தில் அவனை நெருங்கி கட்டிக் கொண்டான்…. கசாலி
கை வளைத்து… கைக்கு எட்டிய செந்திலின் தோள் ஓரத்தை பற்றிக் கொண்டான்.
ஏ,….வெளுத்திட்டியே…
ஃபேர் அண்ட் லவ்லி நெறையா போடுவியோ’ அப்பாவியாய் ஒரு அன்பு தொனிக்க கசாலி கேட்க… செந்தில்
கசாலியை விடுவித்து அந்த நகைச்சுவையை ரசித்தான்…. காற்று அவர்கள கடந்து சென்றது. காற்றோடு
கூட ஒரு காக்கி சட்டையும் வர, செந்தில் மெதுவாக நகர்ந்து, சுற்றி வந்து கசாலியுடன்
இணைந்து கொண்டான்.
தப்பா நினைச்சுக்காத…
பழைய ஸ்கூல் சேக்காளிதான, நம்ம செந்தில்தானன்னுட்டு…….. ஏல,,,, வால.. மக்கா… அப்படியெல்லாம்
கூப்பிட்டு புட்டேன்.. ஆனா இங்க வந்து பாத்தா, அது தப்புன்னு தோணுது. நீ பெரிய ஆபிசர்,
வெள்ளைக்காரன் கண்ணுல விரல விட்டு ஆட்டுற ஆளு. மரியாத இல்லாம பேசுனது தப்பு. என்ன மன்னிச்சுரு…
செந்தில், கசாலியை
ஆழமாய் பார்த்தான். மெதுவான குரலில் சொன்னான். ஏல… நீ என்னோட வாடிக்கையாளராவோ, அல்லது
என்னோட கம்பெனி ஆளா இருந்தா நீ சொல்றது சரி. ஆனா நீ யார்… என் ஃப்ரெண்டு. உனக்கும்
எனக்கும் உறவே நட்பு அதனாலதான். என்னேரமும் நான் பேங்கர் இல்ல… ஆபிஸ் போகும் போது நான்
பேங்கர்… என் மகள் கிட்ட விளையாடும் போது நான் விளையாட்டுக்காரன்… உன்கூட உன் ஃப்ரெண்டு…
இத பாரு.. நீ நீயா இரு.. நான் நானா இருக்கேன்…
நான் தெளிவா இருக்கேன்.. நீ குழம்பாம என்னையும் குழப்பாம இருந்தா அதே சரியானதுதான்…
போவோமா….
கசாலி, பேச்சொன்றும்
வராமல்… மன்னிச்சுரு மக்கா.. நீ சொன்னது சரிடே…
கரெக்ட்டா சொன்ன… ஹாங்.. என்ன செய்யுறது.. வெளிய தெருவு போவாம, உலகம் தெரியாம, நீ பேசுற
மாதிரி சொல்லவும் வரல… நீ ரோசிக்கிற மாதிரி நினைக்கவும் தெரியல… வா..
இருவரும் அருகில்
இருந்த உணவகத்துக்கு பேசிக் கொண்டே நடந்தனர். அவர்களோடு தேமே என்று டிராலியும் அதில்
அடம் பிடித்து இடம் பிடித்த லக்கேஜூம் சென்றது. நண்பர்கள் அன்பில் உருகி, கைகள்
இணைத்தவாறு நடந்தனர். இத்தனை வருசத்து கதைகளை உடனே பேசி கொள்ளும் ஆர்வம் இருவரிடத்திலும்
இருந்தது.
தூத்துக்குடிக்கு
அந்த உணவகம் பெரியதுதான். கண்ணாடி முகப்பும், கருப்பு குளிர் கண்ணாடியும் வரவேற்க்க…
பாதையோரத்தில் வளர்க்கப்பட்ட க்ரோட்டன்ஸ் செடிகள் பச்சையை கண்களில் காட்டி பசுமையாக
குளுமை என ஏமாற்றிக் கொண்டிருந்தன. காலியான ஒரு மேசை இருக்கையில் அமர்ந்து, இரு காப்பி
என ஆர்டர் செய்தார்கள்.
அவர் எப்படியிருக்கார்…..இவர்…பேரு
என்ன… யே அவன் எங்கயிருக்கான்………… ஐய்யய்யோ…………. அப்படியா.. நெசமாவா………… ஹா...ஹா..சூப்பர்..
இப்படி பல கேள்விகள் பல பதில்கள். தத்தம் கதைகள் பேசி, நேரம் போவதே தெரியாது மகிழ்ச்சியில்
திளைத்தனர்.
பேரர் வந்து காப்பியை
வைத்து விட்டு… சென்றார்… ஏதோ ஒரு பதட்டத்தில் இருந்தார். 60 வயதை தாண்டிய தோற்றமும்,
பேண்ட் சட்டை தலையில் ஃபேரர் தொப்பி என பூசி விட்ட நகரத்து பூச்சும் ஓட்டாமல் இருந்தார்.
கசாலி தேனீரை சாஸரில் கவுத்தி, அசைக்க துவங்கினான். எதிர் திசையில், செந்தில், தேனீரை
மூக்கின் அருகில் கொண்டு வந்து, கண்களை மூடி நுகர்ந்தான், பின் மெல்லிய இதழ்களை கோப்பையின்
ஓரத்தில் வைத்து, சத்தம் வராது, உறிஞ்சினான்… இனிப்பு இல்ல… சர்ர்கரை கலக்கவில்லை…
எதிர்ப்புறம் இருந்த
கசாலியும் இனிப்பு இல்லாத ஏமாற்றத்தில், நிமிர்ந்து… ஏலெ… செந்தில். அதுக்குத்தான்
உன்ன மாதிரி ஆளுங்களோட வரக் கூடாது. பாரு, ஒண்ணும் கேக்கவும் இல்ல கொள்ளவும் இல்ல…
அவனா நினைச்சுக்கிட்டு சுகர் பேஷண்ட்டுன்னு சீனி போடாம வச்சுருக்கான்…
செந்தில் டக்கென மறுத்தான்... யாரு.. என்னைப் பாத்துட்டு... போடா… உன்ன பாத்து,
உன் உடம்ப பாத்துத்தான் சினீ இல்லாம கொடுத்திருக்கான். எனக்கென்னடா ஜம்முன்னு வைச்சிருக்கேன்
பாரு… நோ சுகர்.. நோ பி.பி..
கசாலி அதிர்ந்து
கூப்பிட்டான்.. அண்ணாச்சி, சீனி இல்ல… காப்பியில…
பேரர் அதே பதட்டத்தோடு,
கூடுதலாய் நடுக்கத்தோடு வந்தார். … இருங்க இருங்க… இந்தாங்க என ஒரு கோப்பையை மேசையில்
வைத்தார். கோப்பையில் சீனி இருந்தது. செந்தில் ஏனோ எரிச்சலானான். இது என்ன முறை. என்ன
பதட்டம், வேலை செய்வதில் கவனம் வேண்டாமா.. என்ன சொல்கிறோம் என்பதை கேட்க கூட இல்லாமல்,
இதென்ன நாகரீகம்.
சட்டென தன்னை அடக்கி
கொண்டான். நீ வந்த இடம் வேறு, இது வரை நீ இருந்த இடம் வேறு. வேறுபாடுகள் உணர்ந்து உன்னை
காத்து கொள்ள வேண்டியது அவசியம், என தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டான்.
ஆமா, இன்னிக்கு
சாயங்காலமா தேர் ஓடும்
இல்லல.. நாளைக்குத்தான்
தேரு, இன்னிக்கு ஒரு பூசைதான்..
ஓ…
ஏ.. பொருட்காட்சி
போட்டுருக்காங்க…. போவோம்ல… டெல்லி அப்பளம் சூப்பராயிருக்குது…
சட்டென பேரர் வந்து,
மேசையில் இருந்த சீனிக் கோப்பையை எடுத்து நகர துவங்கினார். செந்திலுக்கு கோபம் பீறிட்டது.
ஒரு நிமிசம், யாரக்
கேட்டு, இந்த மேசையில இருந்தத எடுக்குறீங்க…
அவர் தடுமாறினார்.
சீனி போட்டிருப்பீங்கன்னு…
போட்டோமா.. நீங்க
பாத்தீங்களா… அப்புறமும் என்ன இது, எங்க மேசையில இருந்து ஒரு பொருள எடுக்கும் போது
என்கிட்ட கேக்க வேண்டாமா…
கோபத்தில் செந்திலின்
ரத்தம் வேகமாக ஓடியது, காது விடைத்தது, குரல் உயர்ந்தது, கைகளும் கால்களும் படபடத்தன…
வார்த்தைகளும் குரலும் தடித்தன. கசாலி சூழ் நிலை பார்த்து, போங்க.. வைச்சுட்டு போங்க
… அப்புறம் பாக்கலாம என அவரை அனுப்பி விட்டான்…செந்திலை திரும்பி பார்த்தான்…
வெளங்காதவனே… ஏம்ல
இப்படி ஆடுற… அவன் செஞ்ச தப்புக்கு நீ இப்ப போட்ட ஆட்டம்…. உன் உடம்ப இல்ல புடிக்கும்…
கைய பாரு, இன்னும் நடுங்குது… பிபி.. இல்லியா… நம்மூரில நல்ல டாக்டர்கிட்ட காட்டு..
ஏண்டா…ஏண்டா… ஏன் இப்படி…
செந்தில் தலை குனிந்தான்…
சட்டென தலை நிமிர்ந்து… தெரியுது.. தெரியுதுடா… இவ்வளவு கோபம் இவ்வளவு பதட்டம் அவசியமில்லேன்னு…
ஆனா நடந்துருது… இந்த வேகம்… இந்த முனைப்பு… இந்த உணர்ச்சி சில நேரம் சரியாயிருந்திருக்கு…..
வேலையில என் கோவத்த பாத்திட்டு…கீழ வேலை செய்யுறவன் ஓடிப்போயிருவான். அடுத்த வேளை ஒழுங்கா
செய்வான்… ஆனாலும் இந்த கோபம், இந்த சத்தம்…. சில நேரத்தில எனக்கு அவசியமில்லைன்னு
தோணுது…
அமெரிக்காவில இப்படி
எல்லாம்………. ராவா…….. பச்சையா கோவமும்… உணர்ச்சியும் இல்லாமத்தான் நிறைய பேர் இருக்காங்க…
எங்க ஆபிசுல ஒரு தடவ, ஒருத்தன், எங்க கம்பெனிக்கு துரோகம் செஞ்சுகிட்டு, நல்ல புள்ள
மாதிரி பம்மி கிட்டுருந்தான். என் கூட இருந்தவன், எனக்கு கீழ வேலை செய்யுறவன்… நல்லா
சிரிச்சு சிரிச்சு பேசி, அந்த ராஸ்கல வெளிய அனுப்பினான்…. நான் மட்டும் பேசியிருந்தேன்…
அவன கிழிச்சிருப்பேன்…
எனக்கு ஆசையா இருக்கும்…
ஒரு டிப்ளோமாட்டிக்கா… ஒரு நறுவிசா.. கோவமே இல்லாம இருக்கணும்ன்னு… ஆனா முடியறதில்ல…
ஒரு மௌனம்... கசாலி செந்திலை தேற்றும் விதமாய்... சரி விடு… இதுக்கெல்லாம்
யோசிக்க ஆரம்பிச்சா அப்புறம் வாழவே முடியாது. ஏல… குத்தமும் குறையும் இல்லாம இருக்க
நாம என்ன மிஷினா… மனுசன்ல… மனுசன்…. ஜாலியா இரு… கமான் போலாம்… வா….
கசாலி நகர, செந்தில் அம்மேசை அருகிலேயே நின்றிருந்தான். பில்
வைதிருந்த அட்டையை பார்த்தான். தன் பர்சில் இருந்து இன்னும் பணம் எடுத்து, செந்தில்
அதிகப்படியாய் ஒரு 20 ரூபாய் தாளை பில் ஒளிந்திருந்த சிவப்பு தோல் பையில் வைத்தான்.
ஏதோ அவனுக்கு தெரிந்த சாரி கேட்கும் வழி…
மறு நாள் காலை
செந்திலுக்கு புத்துணர்ச்சியாய் புலர்ந்தது. காக்கைகளின் சத்தமும், முரட்டு குளிர்
காற்றும் இதமாக இருந்தது. சிந்தியா டீச்சர் பற்றிய கனவு கலைந்திருந்தது. மல்லிகை பூவை
அவர் வைத்திருப்பாரா இல்லை படத்துக்கு போட்டிருப்பாரா என ஆவல் தோன்றியது. ம்.. இப்படி
ஒரு சீன்ல, அல்லது ஒரு டயலாக்குல திருந்துற மாதிரி சினிமாவுல தான் நடக்கும்… நெஜ வாழ்க்கையில
திருத்துறதுங்கிறது ரொம்ப கஷ்டம்…. காற்று அவன் மேலே பிடிவாதமாய், அழுத்தமாய் பட பட
வென அடித்து வீசியது.
குட்மார்னிங்…
கையில் கொடுக்கப்பட்ட தேனீர் சுவைத்தபடி கேட்டான். நம்மூர்ல காத்து எப்பவும் இப்படித்தான்
அடிக்குமில்ல..
கசாலி, சிரித்தபடி.... ஏல... செந்திலு... ஆடிக்காத்து… அம்மி
குழவிய தூக்கும்ன்னு கேட்டதில்ல… அது சரி… அம்மு கிழவின்னு சொல்லியிருந்தா நீ நினைவுல
வச்சிருப்ப…
செந்தில் அக்கேலியை ரசித்து சிரித்து... போடா.... அரிசிக் குருணை….
உன் திருவாய தொறந்தாலே இப்படித்தானால… மூடு… காலையில மூட கெடுக்காம கிளம்பு… தங்கத்தேர்
ஓடப்போகுதில்லா… சீக்கிரம் குளிச்சுட்டு வா… என மீதி கோப்பையை வாயில் கவிழ்த்து விட்டு
அவசரமாக இறங்கினான்.
கோவில் இருக்கும்
அந்த பகுதி கூட்டத்தில் திமிறிக் கொண்டிருந்தது. மனித தலைகள், எங்கு பார்த்தாலும் மனித
தலைகள். குடும்பங்கள் புத்தாடை அணிந்து, சிரிப்பு மேக்கப்பை அதிகப்படியாய் போட்டிருந்தார்கள்.
இளம் ஆண்கள் கூட்டமாய் தோளில் கை போட்ட வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். காரணம் எதுவும்
இல்லாமல் சத்தமாய் சிரித்தார்கள். பெண்கள் அலங்காரத்துக்கு மெனக்கெட்டது தெரிந்தது.
அதே கலர் வளையல், அதே கலர் செருப்பு என கடை கடையாய் ஏறி இறங்கி இருப்பது… அவர்களை ஏற
இறங்க பார்த்தால் தெரிந்தது.குழந்தைகள் சில கூட்டம் கண்டு மெரிசலாகி, உச்ச ஸ்தாயியில்
ராகம் பாடிக் கொண்டிருந்தார்கள். அவற்றின் அழுகை நிறுத்த, அப்பா விசிறி வீச, அம்மாக்களோ
செவிட்டில் அடித்து கொண்டிருந்தார்கள்… பேசாம இரு…பேசாம இரு…. என … இதிலெல்லாம் மசியாமல்,
குழந்தைகள் கண்டு கொள்ளாமல் அதே உச்ச ஸ்தாயியில் பாடி கொண்டிருந்தார்கள்.
தேர் தங்கம் போல
தகதகத்தது. பார்த்த அந்த கணத்தில் செந்திலுக்கு புல்லரித்தது. கண்கள் நீர் சொறிந்தன.
வயிற்றில் கேவல் வந்தது. ஏங்கி ஏங்கி மூச்சு உஷ்ணமாய் வந்தது. சிலைகளுக்கு சக்தி உண்டா…
தூத்துக்குடியில் எத்தனையோ முருகன் கோவில்கள், முருகன் சிலைகள். என்றாலும், திருச்செந்தூர்
முருகன் சிலை தானே அந்த சக்தி… திருப்பதி, மெக்கா, வேளாங்கன்னி என சில இடங்கள் மட்டும்
தானே இப்படி. அதனால் தானே அங்கே கூட்டம் கூடுகிறது.
அப்படியென்றால்
ஒரு இடத்துக்கோ ஒரு பொருளுக்கோ என்ன நடக்கிறது…. கண்களில் இருந்து நீர் வழிந்து கன்னத்தில்
ஓடியது… அருகில் ஒரு குரல் கேட்டது… அம்மா… தாயே…. செந்தில் சட்டென திரும்பி பார்த்தான்…
யார் என தெரியவில்லை…
அருகில் இருக்கும் அனைவருமே.. ஒரு பக்தியில், ஒரு வேண்டுதலில், ஒரு கண் மூடிய நிலையில்
இருந்தனர்.
53 அடி உயர, தேருக்கு
முன் இரு வடக் கயிறுகள். தேரை இழுத்து செல்ல அமைக்கப்பட்ட கயிறுகள். ஒவ்வொன்றும் ஒரு
முழங்கை சைசில். சுமாராக 50 – 60 மீட்டர்கள் ஏறக்குறைய 150 அடிகளுக்கும் மேல் நீண்டிருந்தது. அத்தேரின் முன்னால் ஒரு 1000 பேர்…
இவ்வடத்தை இழுக்க ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார்கள். அத்தனையும் மனித தலைகள். ஆர்வமாய்
அதே நேரம் அமைதியாய்.
அதே போல் தேரின்
பின்னாலும் இரு வடங்களும் 1000 பேர்களும். தேர் நகர ஆயத்தங்கள் செய்யப்படுவது தெரிந்தது.
சக்கரங்களின் திசை மாற்ற கூர் கட்டைகளுடன் இருவர் தேருக்கு இருபுறமும்.
தேர் நகர தயாராகவே…
பிரார்த்தனைகள் சொல்லப்பட…. தேரின் மீதிருந்த மனிதர் தன் கையில் உள்ள் கொடியை அசைத்தார்.
அது பச்சை கொடி….
அவ்வளவுதான். அத்தனை
மனிதர்களும் ஒரே குரலாய்… ஒலித்து கொண்டு நகரத்துவங்கினார்கள். கடல் அலைபோல, மனிதர்களின்
தலை அசைந்தது.
ஹேய்…ஹேய்…ஹேய்..ஹேய்… என ஒரே நேரத்தில் 2000 பேர் குரல் கொடுத்த போது,
ஈரக்குலையில் புல்லரித்தது. வாய் அனிச்சையாய் மாதாவே என கூவியது. கண்கள் நீரை முட்டியது.
கன்னத்து மயிர்கள் எழுந்து நின்றன…. தேர் தன் நிலையில் இருந்து ஒரிறு அடிகள் அசைந்து
அடுத்து காட்டப்பட்ட சிகப்பு கொடியில் நின்றது…
சத்தம் அடங்கியது…
மனிதர்கள் அடுத்த கட்டளைக்காக நின்றார்கள்…. படிப்படியாக ஒரு சில அடிகளாக தேர் நகர்ந்து
நகர்ந்து வருவது பார்த்த போது புரிந்தது.
ஊர் கூடி தேர்
இழுத்தது போல்………. எனும் வாசகம் எத்தனை ஆழமானது என… ஆம், தேர் நகர்வது என்பது, ஒரு
சக்தி… மனித சக்தி… ஒருங்கிணைக்கப்பட்ட மனிதர்களின் மாண்பு… தன்னை மறந்து, கட்டளைக்கு
பணிந்து, உச்ச கட்ட வலிமை காட்டி, உணர்வை கூட்டி, நமக்கு நாமே நடத்தி கொள்ளும் ஒரு
யாகம், ஒரு பயிற்சி…
கூட்டத்தில் ஒரு
குரலும்…. அதற்கு பதிலுமாக ஒரு பாடல் ஒலித்தது….
யாரு வர்றா தேரிலே
நம்ம மாதா வர்றா
தேரிலே
எந்த மாதா
பனிமய மாதா…
மறுபடியும் மறுபடியும் ஒலிக்க, அந்த பாடல் செந்திலை என்னவோ செய்தது… செந்தில் சட்டென
திரும்பி பார்த்தான். ஒரு 8 வயசு சிறுவன்… கை கூப்பி அழுது கொண்டு, மாதாவே… மாதாவே…
மரியே வாழ்க என கூவிக் கொண்டிருந்தான்.. அவன் கைகள் இருகி, கண்கள் மூடி, கால்கள் பரப்பி,
நின்று கொண்டிருந்த நிலை பார்த்ததும் செந்திலுக்குள் ஒரு மின்னல் வெட்டியது…
சட்டென புரிந்தது…. எனக்கு கிடைத்த இந்த
மூர்க்கம், இந்த ரா பவர் எங்கிருந்து, இங்கிருந்து தான்… ஆம், இந்த வலிவு, இந்த துணிவு,
இந்த அர்ப்பணிப்பு இவற்றின் சாரமே… என் ஆட்டம், என் உணர்வு…
எதையும் சாதிக்கும்
வல்லமை தருவது இதுவே… எத்தனை சோதனைகள் வந்தாலும், என்ன கஷ்டம் வந்தாலும்… ஹேய்…ஹூ…
என கத்தி, உடலில் மனதிலும் வருமே ஒரு சக்தி அது இதுதான்..
இந்த தேர் இழுக்கும்
சமயத்தில் என் மனமும் உடலும் ஒரு வித்தியாசமான அதிர்வில் இயங்குகிறது. அது தனி மனிதனின்
உச்ச கட்ட மனவெழுச்சி… உணர்வெழுச்சி… உத்வேகம்…. எனர்ஜி…
கண் மூடி, செந்தில்
நின்று கொண்டிருந்தான். கூட்டம் அவனை கடந்து சென்றது. பலர் இடித்து பலர் மிதித்து சென்றும்
கூட செந்தில் அசையாது நின்றிருந்தான். மனம் ஒரு நிலையில் இருந்தது….
சற்று நேர அமைதியில்
கண் திறந்த போது, கசாலி… சொன்னான்….. யப்பா… பயங்கரமா இருக்குதுல்ல… இன்னும் ஒரு வருசத்துக்கு
உண்ணாம உறங்காம என்னால வேலை செய்ய முடியும்… அப்படி ஒரு பவர்… செந்தில் பேசவில்லை…
அவன் பேச ஆசைப்படவில்லை… அமைதியானான்.
அவனுக்கான பதில்
கிடைத்தது… அவன் ஊக்கம், அவன் அதீத செயல்பாடு எங்கிருந்து வந்தது எனும் ஆழம் தெரிந்து
கொண்டான்…
கசாலி தொடர்ந்தான்…
ஹப்பாடி.. என்ன ஒரு தேர்… ம்.. அடுத்தா பாக்கணும்ன்னா இன்னும் 5 வருசம் போகணும்… சும்மா
சொல்லக் கூடாது எவ்வளவு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்குது… இனி எப்போ ஓடுமோ... 13 வருசமோ அல்லது 5 வருசமோ தெரியாது....
பட்டென நெத்தியில்
அடித்தது போல் இருந்தது செந்திலுக்கு… கசாலியை உற்று பார்த்தான்… ஓ… தேர் வருசா வருசம் ஓடாது இல்ல....
கசாலி சொன்னான், கிழிஞ்சுது... ஒவ்வொரு வருசமும் தேர் ஓடுச்சுன்னா என்னாகிறது.... நீதான் பாக்கிறல்ல... எவ்வளவு ஜனம், எவ்வளவு உழைப்பு.. எவ்வளவு பணம்,......
செந்தில், கண்கள் மின்னியது. கசாலியை தோளில் தட்டி, தன் பாராட்டுதலை சொன்னான்... எப்பவாவது 5-10 வருசத்துக்கு
ஒரு முறை தேர் இழுத்தால் போதுமானது… தினம் தினம் இழுத்தால் அதற்கு பெயர் தேர் இல்லை... நான் தான் விவரம் இல்லாமல், எல்லா நேரத்திலும்
எல்லா செய்ல்களிலும் தேர் இழுக்கவும்… முனைப்பு காட்டவும் உத்வேகம் காட்டவும் முயன்றிருக்கிறேன்…
தேர் இழுக்கும்
வலிவு, பெரிதாய் சாதிக்கும் முனைப்பு என அதே உத்வேகத்தை..... வாழ்க்கையில் தினசரி காட்ட முயல்வதே என் பிரச்சனைகளுக்கான காரணமோ…
அக்கேள்வியின்
தாக்கம் தந்த விளைவில் மனம் நெகிழ்ந்தது…
கசாலி மெல்ல நெருங்கி வந்து தோள் தொட்டு அணைத்து…
வால… போவோம்… என்றான்.
செந்தில் அமைதியாய் அவனை பின் தொடர்ந்தான்…. சற்று தொலைவில்
ஒரு பூட்டிய வீட்டின் படியில் அந்த 8 வயசுப் பையன் உட்கார்ந்து இருந்தான். அமைதியாக
தேர் செல்லும் திசையில் அவன் கண்கள் இருந்தது. செந்திலுக்கு தன்னையே சிறுவனாய் பார்க்கும்
நினைவு வந்தது…