பக்கங்கள்

போதி மரம் (சிறுகதை)

‘லுக் டூட்ஸ்… அங்கிளும் ஆன்டியும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வர்றாங்க, நிச்சயம் டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க இல்ல, தப்பு செஞ்சுட்டுத்தான் மாட்டிக்கிட்டிருப்பாங்க’ நக்கல் குரலில் அந்த இளைஞன் சொல்ல கூட இருந்த நால்வரும் உரக்க சிரித்தனர்.

அங்கிள் ஆன்டி என அழைக்கப்பட்ட மகாதேவனும் அவர் மனைவியும் அமைதியாய் தளர் நடையில் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஓரத்தில் இருந்த சிமிண்ட் பலகையில் உட்கார்ட்ந்தனர். மழை பெய்து ஓய்ந்திருந்த அந்த முன்னிரவு அமைதியாய் இருந்தது. காற்றுக்கு ஈரத்தில் ஒப்பனை. அடர்த்தியாய் குளிர்ந்ததாய் எதிர்ப்படுபவர் எல்லோரையும் அது வரவேற்றது.


இடுப்பில் கால் சட்டை இருக்க வேண்டிய இடத்திலிருந்து சில செண்டிமீட்டர் கீழே, பார்ப்பவர் பதைபதைத்து ஐயோ கீழே விழுந்துருமோ என அஞ்சும் வகையில் பேண்ட் அணிந்திருந்த கூல் டூட் சொன்னான் ‘மாமு! கிரிமினல்ஸ் யாரு, நம்ம மாதிரி நல்லவன் யாருன்னு இப்பல்லாம் கண்டுபிடிக்கவே முடியுறதில்லடா…. பட்டையும் கொட்டையும் போட்டுட்டு மனுசன கூட போட்டு தள்ளுறாங்க’ மீண்டும் நண்பர் குழாம் இடி இடி என சிரித்தது.


பூனை முடி மீசை அணிந்து, கன்னத்து சதையை பருக்களுக்கு குத்தகை விட்டிருந்த இன்னொடு இளைஞன் கையில் மினுங்கும் சாவிக் கொத்துடன் ஏராளமான சாவிகளுடன் கையில் வைத்து சுற்றிக் கொண்டிருந்தான். விர்.. விர்… என சுத்தும் சத்தம் அவனுக்கு கிறக்கம் தந்தது, அதை லாவகமாக இன்னும் விசையுடன் சுற்றினான். அருகிலிருந்தவன் சொன்னான் ‘ஏண்டா டுபுக்கு, இந்த ஊருல உள்ள எல்லா வீட்டுக்கும் சாவி உன்கிட்ட இருக்கு போல. பார்த்து சுத்துறா. ’ மீண்டும் சிரிப்பின் அலை.

நால்வரில் ஒருவன் ’ஏண்டா, எங்ககிட்ட சொல்லாம, சைடு பிஸ்னசா பூட்டுக்கு சாவி போடுறயா’ விஷமமாக சிரித்து கண்ணடித்தான். மீண்டும் சிரிப்பின் அலை. அந்த கேலியின் இன்னொரு அனர்த்தம் விகாரமானது. தாமதாய் புரிந்தவர்கள் கூட இரண்டாவது முறையாய் சிரித்தார்கள். இப்போது அது அடங்க சற்று நேரமாகியது. மகாதேவனும் அவர் மனைவியும் அந்தகாரத்தை வெறித்த வாறு அமைதியில் இருந்தனர். இந்த சிரிப்பும் கொண்டாட்டமும் அவர்களை தாக்கவே இல்லை. கேலிக்கு உள்ளான சாவி சுழற்றுபவன் லேசாய் வெட்கப்பட்டான், அந்த ஒரு நொடி கவன சிதைவில் கையில் சுழன்றிருந்த சாவிக் கொத்து துள்ளி காற்றில் பறந்து மகாதேவன் முகம் நோக்கி சென்றது. மூக்கு கண்ணாடியில் பட்டு வலது கண் பகுதியில் கண்ணாடி சில்லை உடைத்து விட்டு அவர் காலடியில் விழுந்தது.


மகாதேவன் சட்டென அதிர்ச்சியுடன் உடல் குலுக்கினார். மெதுவாக கவனமாக கண்ணாடி கழற்றினார். மனைவி திரும்பி அவரின் கண்ணையும் தலையையும் பார்த்தார். இடுப்பு சேலையில் மடிப்பில் இருந்த கைக்குட்டையை எடுத்து அவர் கண்களின் இமைகளில் இருந்த கண்ணாடி துண்டுகளை கவனமாக எடுத்தார். சற்றே உடல் வளைத்து அந்த கைக்குட்டையை உதறி மீண்டும் ஒரு முறை கணவனை பார்த்து விட்டு, காதோரம் இருந்த கண்ணாடி துண்டை விலக்கினார். மகாதேவன் கண்ணாடியை கழற்றி கீழே இருந்த துணிப்பைக்குள் வைத்து, உடல் தளர்த்தி பின் சரிந்து அமர்ந்தார்.

அங்கு மௌனம். இரவு சுவர்கோழிகள் சத்தம் காதில் அறைந்து இறைந்தது. நண்பர்கள் இப்போது அமைதியாய் இருந்தனர். அவர்களுக்கு நிகழ்ச்சியின் தீவிரம் புரிந்தது. அமைதியாய் எதுவும் சொல்லாத அந்த தம்பதியை புரியவில்லை. ‘ஓடிறாலாம்டா… ‘ ‘சாவி எடுத்துக்கோடா’ ‘சாரி கேட்டுரு’ இப்படி பலவிதமான ரகசிய சம்பாஷனைகள். ஒருவன் மட்டும் நகர்ந்து மகாதேவன் அருகில் வந்தான்.

‘சாரி….’ வார்த்தைகள் பாதியும் பலவீனமாகவும் வர, மகாதேவன் நிமிர்ந்து பார்த்து பின் குனிந்து அந்த சாவி கொத்தை எடுத்து நீட்டினார். தயக்கமாய் ஒரடி முன்னால் நகர்ந்து சாவி வாங்கிக் கொண்டே ‘தெரியாம பட்டுருச்சு, மன்னிச்சுக்கோங்க அங்கிள்’ எந்த உணர்ச்சியும் இல்லாது அசைவின்றி மகாதேவன் இருந்தார். அந்த பெண்மணியும் அங்கனமே. மீதமுள்ள நண்பர்கள் நகர்ந்து அவர்கள் அருகில் வந்தனர்.

ஆழமாய் அவர்களை ஊடுருவி பார்த்து மகாதேவன் ‘ம்… தெரியும் தெரியாமத்தான் செய்யுறீங்க. செஞ்சு முடிச்ச பின்னால் தான் அதனோட தாக்கம் தெரியுது’. அமைதியாய் அவர் அருகில் இருந்த மனைவி விக்கி குலுங்கி அழுதார். அழுது களைத்திருந்த கண்கள் கண்ணீர் இல்லை என அடம் பிடித்தது.

‘சார், இவ்வளவு நடந்த பின்னாலும் நீங்க அமைதியா இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு சார். எதுவும் பெரிய பிரச்சனையா’. மகாதேவன் தொடர்ந்தார் ‘நீங்க கிண்டலும் கேலியும் செஞ்சது என்ன மட்டம் தட்ட இல்ல. உங்களுக்கு ஜாலியா இருக்கிறதுக்கு மட்டுந்தான். அது புரிஞ்சதால தான் பேசாம இருந்தேன். இந்த வயசு அப்படி, உச்ச கட்டம் சந்தோசம் வேணும், மகிழ்ச்சி வேணும். கூட இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் விட இன்னும் அதிகமா கமெண்ட் அடிச்சு, சிரிப்ப வரவழைக்கணும். அது தான் அவ்வளவு தான் நோக்கம்.

எனக்கும் உங்க வயசுல பையன் இருக்கான். போன வாரத்துல இதே மாதிரி ஃப்ரெண்ட்ஸ் கூட தெரு முனையில கமெண்ட் அடிச்சுக்கிட்டு இருந்தான். இங்க நீங்க எங்கள பண்ணுனது மாதிரி அங்க ஒரு பொண்ணு. அவ பயந்து போயி கவனிக்காம பின்னால நகர சாக்கடைல விழுந்து தலைல அடி பட்டு செத்து போயிட்டா. ஈவ் டிஸிங் கேசு, அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

ஒரு நொடி, ஒரு செயல், நாலு இளைஞர்களோட வாழ்க்கைய அவங்க குடும்பத்தோட வாழ்க்கைய, அந்த பொண்ணு, அவங்க குடும்பத்தோட வாழ்க்கைய புரட்டி போட்டுருச்சு. வாழ்க்கையவே தடம் மாற வைச்சுருச்சு.

அந்த பெண், இன்னும் குலுங்கி குலுங்கி அழ, இருமல் தொண்டையை அடைத்தது. நெஞ்சை பிடித்தவாறு லொக் லொக் என இருமினார். மகாதேவன் நகர்ந்து கீழ் இருந்த பையில் தேடி, தண்ணீர் பாட்டில் எடுத்து அவருக்கு தந்தார். இருமியபடியே, வேண்டாம் என்பதாய் அந்த பெண்மணி சைகை காட்ட. தொண்ட டிரையாயிருக்கு கொஞ்சம் குடி சரியாயிரும் என வற்புறுத்தினார். இத்தகைய சூழலிலும் தண்ணீர் தந்த அந்த செயல் வாழ்வின் ஆதாரமாய் அவர்களுக்கு தோன்றியது. மனித கடமைகள், குடும்பத்தலைவன் பொருப்பு என வாழ்க்கை நகரும் சுழற்ச்சி புரிந்தது.

இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது அல்ல காதல், தளர்ந்த போது தண்ணீர் கொடுப்பதிலேயே காதல் இருப்பதாய் அந்த இளைஞர்களுக்கு பட்டது. தனக்கென மகிழ்ச்சி தேடும் இளமைப்பருவம் தாண்டி, வாழ்வின் கடமைகளும் அதன் பரிமாணங்களும் அங்கே வார்த்தையாய் சொல்லப் படாவிட்டாலும் அவர்களுக்கு புரிந்தது. அந்த பேருந்து நிலையம் அவர்களுக்கு போதி மரமானது.

மழை மேகம் பரவலாய் மூடியிருந்த வானத்தை ஏமாற்றி ஒற்றையாய் மின்னிய நட்சத்திரம் கண் சிமிட்டியது. நிலா பளிரென ஒளி சிந்தியது.

6 கருத்துகள்:

  1. படுக்காளி சார்...

    நேரில் பார்த்து எழுதியது போலிருக்கிறதே.. கதைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது!! இல்லையென்றால் உண்மை கதையா என்று கூறவும்...

    கதையின் கரு, எழுத்து நடை, இளைஞர்களின் சேட்டை, மூத்தோரின் சோகம் என அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்திய விதம் அம்சமாக பொருந்தி இருக்கிறது...

    //இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது அல்ல காதல், தளர்ந்த போது தண்ணீர் கொடுப்பதிலேயே காதல் இருக்கிறது//

    கதையின் முடிவில் இளைஞர்களுக்கு காதல் என்றால் உண்மையில் என்ன என்பதை இந்த வார்த்தைகள் மூலம் விளக்கிய விதம் மிக நன்று...

    பதிலளிநீக்கு
  2. //// R.Gopi சொன்னது… நேரில் பார்த்து எழுதியது போலிருக்கிறதே.. கதைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது!! இல்லையென்றால் உண்மை கதையா என்று கூறவும்...////
    ஜி! எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்குது. நேற்று நமது துபாய் கோர்ட் கடக்கும் போது சிக்னலில் வயதான பெற்றோர்களை ஒரிறு நொடிகள் பார்த்தேன். அவ்வளவுதான்…. என்றோ கேள்விப்பட்ட சரிகாவின் சாவும் சேர்ந்து கொள்ள ஒரே மூச்சில் ஒரே டிராப்டில் முடிந்து விட்டது.
    வைரமுத்து சொன்னது போல், இலக்கியம் தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது. இதில் நமது பங்கு என சொல்ல ஒன்றுமே இல்லை.

    //// கதையின் கரு, எழுத்து நடை, இளைஞர்களின் சேட்டை, மூத்தோரின் சோகம் என அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்திய விதம் அம்சமாக பொருந்தி இருக்கிறது...//இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது அல்ல காதல், தளர்ந்த போது தண்ணீர் கொடுப்பதிலேயே காதல் இருக்கிறது// கதையின் முடிவில் இளைஞர்களுக்கு காதல் என்றால் உண்மையில் என்ன என்பதை இந்த வார்த்தைகள் மூலம் விளக்கிய விதம் மிக நன்று...///

    தேங்க்ஸ் தலைவரே…. உற்சாகமூட்டும் வார்த்தைகள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அன்பு லா,

    கதையில் முதியோரின் ஆழமான அனுபவவும், இளைஞர்களின் உணர்ச்சியும் நன்றாக புரிகிறது... ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியமாட்டேன்கிறது. என்னவென்றால் .... கடவுள் நம்மிடம் என்ன மாதிரியான செயல் புரிகிறான்... முத்யவர்களை போன்ற அனுபவதினோட.. இல்ல இளைஞர்களின் உணர்ச்சி போன்ற...????

    செல்லத்துரை, மதுரை-துபாய்

    பதிலளிநீக்கு
  4. cdhurai சொன்னது…/// கதையில் முதியோரின் ஆழமான அனுபவமும், இளைஞர்களின் உணர்ச்சியும் நன்றாக புரிகிறது... ஆனால் கடவுள் நம்மிடம் என்ன மாதிரியான செயல் புரிகிறான்... முத்யவர்களை போன்ற அனுபவதினோட.. இல்ல இளைஞர்களின் உணர்ச்சி போன்ற...////

    அன்பு தோழமைக்கு வணக்கமும் நன்றியும்.

    ஒரு தனி மனித வளர்ச்சி என சொல்லும் போது மூன்று படிகளாக வளர்ச்சியை சொல்லும் ஸ்டிபன் ஆர். காவியின் தத்துவம் ஒன்று உண்டு.

    DEPENDANCY – INDEPENDANCY – INTERDEPENDANCY

    அதாவது பிறந்த நாம் அனைவருமே உண்ண, நடக்க, படிக்க என அடுத்தவரை நம்பி வாழும் முதல் பருவம் கடந்து.. கையை ஊணி கரணம் போட்டு, உருண்டு பிரண்டு எழுகிற நடு நிலையையும் கடந்து. மெழுகுவர்த்தி போல் தன்னை உருக்கி அடுத்தவருக்கு வெளிச்சம் தரும் விருட்சமாய் வளர்ந்து என அடுத்தடுத்து சில படிகளை கடக்க வேண்டும் என்பான்.

    நாம் அனைவருமே இந்த மூன்று படிமன்களையும் கடக்க வேண்டியே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. Hi Lawrance,

    Katha romba nalla. Padikaratha kaatchigalaa thathrupama pakkamudiyuthu. its simply superb.Neengal therntheydukum vaarthigal, kathayai kondusellum azhagu yellamey fantastic.

    Eranday Kelvigal..

    1. இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது "Mattum" அல்ல காதல் yendru irukalamo?

    2.Yen inthamathiri kathaigal 20 vayasula thonama 40 vayasula irukaravangaluku thaan thonuthu? Ungalukku yeppadi?

    Ungalidamirunthu naraya yethirparkum rasigai...

    பதிலளிநீக்கு
  6. ///பெயரில்லா சொன்னது… படிக்கிறத காட்சிகளா தத்துருபமா பார்க்க முடியுது. இட்ஸ் சிம்பிளி சூப்பர்ப்.

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், கதையை கொண்டு செல்லும் அழகு எல்லாமே ஃபண்டாஸ்டிக்////

    மிக்க நன்றி.

    கதை எழுதும் முன்பு கண்களை மூடி, மனத்திரையில் காட்சிகளாய் ஓட விட்டு பார்க்க முயல்வேன். பின்னர் மனதில் விரிந்த காட்சியை எழுத்தில் கொணரவும் முயலுவேன், வாசித்த அனுபவம் தங்களுக்கு காட்சிகளாய் மனதில் விரிந்தது என கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    இது உச்சகட்ட பாராட்டு. தங்கள் அன்பிற்கு நன்றி.

    //// இரண்டு கேள்விகள்.
    1. இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது "Mattum" அல்ல காதல் yendru irukalamo?////

    மிகச் சரியே. தங்கள் வார்த்தைப் பிரயோகம் தான் சரி. அன்பை காட்ட, கண்டிப்பாக ரோஜாவை நீட்ட வேண்டும், அது இல்லாமல் லவ்வா…..

    ரோஜாவுக்கோ அல்லது ரோஜா விற்பவருக்கோ நிச்சயம் நாம் எதிரி அல்ல.

    //// 2. ஏன் இந்த மாதிரி கதைகள் 20 வயசுல தோணாம, 40 வயசுல இருக்கிறவுங்களுக்கு தான் தோணுது. உங்களுக்கு எப்படி???////

    அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா அல்லவா நம் தமிழ்க்கடவுள். ஓம் எனும் பிரணவ மந்திரம் தன் தந்தை சிவனுக்கே உபதேசித்தவன் நம் முருகன்.

    வருகை தந்து கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    தங்கள் தொடர் வரவை விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு