பக்கங்கள்

ஆன்மீக அல்வா – (பகுதி – 4)

நீராவி இன்ஜின கண்டுபிடிச்சது யாரு? கம்புயூட்டர கண்டுபிடிச்சது யாரு? வேக வேகமாய் நடந்து கொண்டிருந்த இரு பள்ளி சிறுவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை களவாடி காற்று நம் காதுகளுக்கு சொன்னதே மேற்கூரிய இந்த கேள்விகள். சக நண்பனை கேள்விகளால் துளைத்தான்,  எக்ஸாம் எழுதப் போகும் நம்ம சின்ன வாண்டு. 

கேள்வி கேட்கப்பட்ட கண்மணி  பொறுமையின்றி திருப்பி கேட்டான் எக்ஸாம கண்டுபிடிச்சது 
யாருடா, அவன் மட்டும் கையில கிடைச்சான்னா.....

எப்படி இருக்கும். எக்ஸாம் எனும் ஒன்று இல்லாமலே இருந்தால். ஆஹா சூப்பரப்பு. பிரஷர் இல்லை, பயம் இல்லை. எக்ஸாம் பீவர் இல்லை.... எவ்வளவு நல்லாயிருக்கும், ஆஹா பரவாயில்லையே... நிறைய இல்லை இருக்கே எனும்போது, அது மட்டுமா.

இன்னும் நிறைய இல்லைகளும் உண்டு. நோக்கம் இல்லை, வெற்றி இல்லை, படிப்பினை இல்லை, அறிவு விருத்தி இல்லை, பிரமோஷன் இல்லை. எனவே பிடிக்குதோ இல்லையோ தேர்வு அவசியமாகிறது.

இதோ நம் ஆன்மீக அல்வா தொடருக்கும் ஒரு காலாண்டு தேர்வு. ஆமா இதுவரை சாதிச்சது என்ன, எங்கு நிற்கிறோம் நாம், என அடுத்த பகுதியில் ஒரு குயீக் ரிவியூ செய்வோமா. யெஸ், நல்ல முடிவுதான். அடுத்த பகுதியில் நாம் இதுவரை பேசிய தகவல்களை அலசி, நாம் அடைய நினைத்த இலக்கை அடைந்தோமா, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என தெளிவு அடைவது நல்லதல்லவா. செய்வோம்.

அண்மையில் நம் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி, யோகா கற்றுக் கொள்ள சென்றாராம். அப்படியா என்ன, நம்பவே முடியல, அதிருக்கட்டும் அது என்ன ஆன்மீக தொடர்ல பகுத்தறிவு பகலவன் என்டிரி கொடுக்கிறாரே என தாங்கள் புருவமுயர்த்தினாலும், பத்திரிக்கை சொன்ன ஒரு தகவலையே இங்கு தருகிறேன். யோகா வாத்தியார் யோகப் பயிற்ச்சியில் ஒரு கட்டத்தில் ஒரு போஸில் நிற்கச் சொல்லி விட்டு, ஓம் நாராயணயாய நமஹ என சொல்லுங்கள் என சொல்ல, நம்மாளுக்கு பகுத்தறிவு தடுத்து விட்டது. 

என்னால் நாராயணா என சொல்ல முடியாது என சொல்ல, என்ன செய்வது என பொதுக்குழு கூட்டாமலேயே அங்கு விவாதிக்கப்பட்ட்து.

பின்னர் எல்லோரையும் திருப்தி செய்யும் வண்ணம், ஒரு கூட்டணி ஷேரிங் பார்மூலா தயாரிக்கப்பட்டது. வாய் விட்டு வார்த்தை பதம் ஒன்றை சொல்லி, சொல்லி வணங்க வேண்டும் அவ்வளவு தானே, எனக்கு சூரியன் ரொம்ப பிடிக்கும் சூரியனே என சொல்லவா, என கேட்டு அனுமதி வாங்கி. வாய் விட்டு சூரியனே எனக்கு சக்தி கொடு எனும் ரீதியில் முழங்கி, யோகா முடிந்து விட்டது.

இதுபோல் ஒரு சோதனை நம்மாளு எட்டையபுரத்து எதார்த்த எம்டனுக்கு வந்தது. அவரும் யோகா பயிற்சிக்கு செல்ல, ஓம் என வாய் விட்டு கத்துங்கள் என யோகா வாத்தியார் சொன்னார்.  ஓம் எனும் ஒலியை சொல்ல மறுத்து விட, அவரை புரிந்து அமைதியாய் அருகில் வந்து வாத்தியார் இப்படி சொன்னாராம்.

உங்கள் கையெடுத்து அடி வயிற்றில் வைத்து கொண்டு, உங்கள் காலை யானை மிதித்த மாதிரி சத்தமாக ஆ !!! என ஒரு நான்கைந்து வினாடிகள் சத்தம் எழுப்புங்கள். உள்ளுக்குள் ஒரு அதிர்வு தெரிகிறதா. சரி அப்படியே கையை உயர்த்தி நெஞ்சில் விலா எலும்பருகில் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, ஐஸ் கட்டிய வாய்க்குள்ள போட்டா மாதிரி  உ...ஊ.... என நான்கைந்து வினாடிகள் சொன்னால் மார்புப் பகுதியின் உள்ளே அதிர்வு, அதே கையை உயர்த்தி நெத்தியில் வைத்து கொண்டு பஸ் கார் ஓட்டி விளையாடுற மாதிரி ம்....ம்.... என நான்கைந்து வினாடிகள் சொன்னால் மண்டைக்குள்ள புல்லா கிர்ருங்கும்..... 

இந்த ஆ + ஊ + ம் = ஓம் !!!

ஆ, ஊ, ம் எனும் வார்த்தைகளை கோர்த்தால் கிடைப்பது ஓம். எனவே ஓம் என சொல்லும் போது உள்ளுக்குள் இந்த மூன்று இடங்களிலும் அதிர்வு ஏற்படும்.

சரி உங்களால் ஓம் சொல்ல முடியவில்லை, சிறு வயதில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்ட மத நம்பிக்கையை மீற வேண்டாம். உங்களுக்கு மனம் ஒப்பவில்லை என்றால் ஆமென் என சொல்லுங்கள், அல்லது ஆமீன் / அல்லா சொல்லுங்கள், புத்தம் என சொல்லுங்கள் எல்லாம் ஒரே எபக்ட்டுதான் என்றார்.

மனித உடலில் வயிற்றுப் பகுதியில் உடலுக்கு தேவையான கிரியேட்டிவ் எனர்ஜி தரும் சுரப்பிகள் இருக்கின்றன. எல்லா புரொடெக்‌ஷன் ஐட்டங்களும் இங்கு இருக்கிறது, மார்புப் பகுதியில் உள்ளுக்குள் மெயிண்டெனென்ஸ் எனர்ஜி செக்‌ஷன் இருக்கிறது, கண்ட்ரோல் செக்‌ஷன் பூராவும் தலைப்பகுதியில் இருக்கிறது.

கடவுளை மூன்று தெய்வங்களாகவும், படைக்க, காக்க அழிக்க என மூன்று தொழில்கள் செய்வதாய் சொன்னதே இந்த செயல்பாட்டின் அடிப்படை எனும் காலஷேபம் கூட காம்பிரமைஸிங்கா இருக்கே என கடவுள் தோன்றலின் விளக்கத்துக்கு பொருத்தமா இருக்கே என கன்வின்ஸூடு கந்தசாமி சொல்றாரு.

ஆங்... சாமி பூதம் எல்லாம் கிடையாது. பத்து நாள் பல்லு விளக்காம கூட இருப்பேன், சாமி பேர மட்டும் என் பல்லுல பட வுட மாட்டேன், அந்த சாமி பேர நான் சொல்லவே மாட்டேன் என முடிவெடுப்பதும், என்னதான் இருக்கு என சோதிச்சு பார்ப்போமே என வாய்விட்டு ஒரு கத்து கத்தினால் என்னாகும் என நாமே சோதித்து முடிவு எடுக்கும் சக்தி நம் கைகளில் உள்ளது.

ஆன்மீக பயிற்சி எனும் சுவை தெரிய இதோ ஒரு ஆடியோ பைல் இருக்கிறது. கொஞ்ச நேரம் ஒதுக்கி இந்த ஒலிச் சந்தியை கேளுங்கள். நல்ல ஒரு அனுபவம் கிடைக்க ஆல் த பெஸ்ட்.
அப்போ தனியா உக்கார்ந்துகிட்டு ஆ....ன்னு கத்துறதுதான் ஆன்மீகமா.... இந்த ஆ... வோட.  ராகம் தான் ஆன்மீகமா.... என நைட்டு தூக்கத்தோட பைட்டு போடும் டைட்டு மைட்டானிக் கேக்கிறாரே, அவருக்கு ஒரு பதில சொல்லிட்டு மேல போவோமா....   

ஆன்மீகம் என்றால் என்ன? சிம்பிளா சுருக்கமா ஒரு விளக்கத்துக்கு முயற்ச்சிக்கலாமே. இது ஆன்மாவின் தேடல், ஆண்டவனிடம் சரணாகதி என மற்றவர் சொல்வதையே திருப்பி சொல்லாமல், முழுதும் புரியாத சில வார்த்தைகளுக்கு லீவும் கொடுத்துவிட்டு வேறு ஒரு புதிய கோணத்தில் கோணல் மாணலாய் இல்லாமல் ஸ்டெய்ராய் சொல்ல முயற்ச்சிப்போமா.  

வெயில் சுட்டெரிக்கும் ஒரு மதிய வேளையில், மேல் மூச்சு கீழ் மூச்சு எல்லாம் வாங்கி, தாகம் தொண்டைய பதம் பார்க்கிற நம்ம பரந்தாமன பாருங்களேன். உடல் பூரா தளர்ந்து தண்ணீர் தண்ணீர் என மட்டுமே ஏங்குகிறது. சுத்தி சுத்தி எங்காவது தண்ணீ இருக்கா என பார்க்கிறார். எங்குமே இல்ல. வேற வழியே இல்லாம அதை தேடி தேடி நடக்கிறார். கடைசி கடைசியா, ஒரு வேப்ப மரமும், மண் பானையும் குளிர்ந்த தண்ணீரும் பார்த்தார். சுர்ருன்னு ஒரு ஜில்லிப்பு. ஒரு நிம்மதி, அரக்க பரக்க ஓடி வந்து பானைய தொறந்து ஆ.... வேக வேகமா தண்ணீர் மொந்து ஒரு ரெண்டு மொடக்கு குடிச்சார். சுகம், அப்படியே லயிச்சு போயிட்டார். மொடக் மொடக்குன்னு ஒரு ரெண்டு சொம்பு தண்ணி உள்ள போனதும், கண்ண மூடி, அந்த சுகத்தில் ஆழ்ந்தார். அப்போ வேப்ப மரத்து காத்து சுழன்று அடிச்சுச்சு. ஹா.... என ஒரு நீண்ட பெறுமூச்சு விட்டு, கண்ண மூடி அப்படியே உக்கார்ந்துட்டார்.

வாசக நண்பர்களே, நிச்சயம் நாமும் முன் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு சுகம் அனுபவித்து இருப்போம். ஒரு சிறு வேண்டுகோள் அல்லது பயிற்சி. இப்படி ஒரு சூழலை, தாங்கள் அனுபவித்த நிகழ்வை மனதில் அனுமதித்து அப்போதைய தங்களின் உணர்வையும் நிலையையும் கொஞ்சம் அனுபவியுங்களேன்.

சரி, இப்போ சில கேள்விகள், வாசிப்பதை நிறுத்தி விட்டு சில நொடிகள் கண் மூடி அமர்ந்து இதில் பங்கு பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன். இல்லையா, வேக வேகமா வெறுமே வாசிச்சு கிட்டு தான் இருந்தீர்கள் என்றால் மீண்டும் ஒரு முறை வேண்டுகிறேன், செய்துதான் பார்ப்போமே. என்னதான் இருக்கிறது இந்த ஆன்மீகத்தில் என இரண்டில் ஒன்று பார்க்கும் முடிவில் இருந்து நாம் பின் வாங்க வேண்டாம், வெறுமனே கருத்து சேர்க்கும் கோஷ்டியில் ஒருவர் என நம்மை அனுமதிக்க வேண்டாம்.  

சரி இனி ஒரு கேள்வி. அது ஏன் கண்ண மூடுறோம்.

அந்த சுகத்தை அனுபவிக்க ஆசைப்படுகிறோம். ஆழமா உள்ளுக்குள் போய் அந்த ஆ... ஹா.... நேரத்தை இன்னும் கிட்ட்த்தில் தரிசிக்க. அவ்வுணர்ச்சியை மனசில் பதிக்க விரும்பியே அப்படி செய்கிறோம். மற்றொன்று அந்த சுகம் போய் விடக்கூடாது என்பதற்க்காக. பார்வையிலோ, மற்ற புற விசயங்களிலோ நம் கவனம் சிதறக் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம். இன்னும் உபரியாய் தங்களுக்கு தோன்றியதை எனக்கு மின்ன்ஞ்சலிலோ, பின்னூட்டத்திலோ சொல்லுங்களேன்.  

இது மனித மனதின் ஒரு ஆழமான, முக்கியமான தேவை. அந்த ஆ!!! நேரம் அல்லது ஹா!!!! நேரம்.

காலையில் எழுந்து தூக்கத்தை உதறிவிட்டு வாக்கிங் போவதும், வாக்கிங்கும் வேண்டாம், பார்க்கிங்கும் வேண்டாம், நான் இன்னும் தூங்கறேன் என இழுத்து போர்த்தி தூங்குவது என மனிதன் செய்யும் எந்த செயல்களின் பின்னால் இருப்பது இந்த ஆ... அல்லது ஹா நேரத்துக்கு செல்வதற்காகத்தான். அப்படியா என்றால் ஆம், நம் எந்த செய்கைக்கும் பின் ஒளிந்து இருப்பது அல்லது பூதாகாரமாய் பரவி நிற்பது இந்த நினைப்புக்கு தான். மேலை நாட்டின் ஒரு அறிஞன் சொன்னது போல், ஒற்றை வரியில் சொன்னால். மனித வாழ்வின் நம் அத்தனை செயல்களின் நோக்கம் என்ன ‘AVOID PAIN AND SEEK PLEASURE’

பாருங்களேன், உணவு, உறவு, வெற்றி, கேளிக்கை என எந்த நம் செயல்களிலும் ஒழிந்து கொண்டிருப்பது இந்த தேவைதான். செத்து போன எங்க அம்மா இருந்தா எப்படி இருக்கும், எங்க ஊர் சாப்பாடு இருந்தா எப்படி இருக்கும், என் வீட்டு லோன் சாங்ஷன் ஆனா எப்படி இருக்கும் என எந்த ஒரு ஏக்கத்திலும் அடி நாதமாய் இருப்பது அந்த ஹா... தான்.

இந்த ஆ... அல்லது ஹா !!!! நேரத்துக்கு விசா வாங்கவே .... அதில் இன்னும் கொஞ்சம் ஆழமாகவோ, நீளமாகவோ இருக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவது ஆன்மீக சிந்தனைகளும் பயிற்சிகளும்.

இன்றைய சிந்தைகளை அசை போட அவகாசம் எடுத்து தொடரும் எனும் வேகத்தடையை அனுமதிப்போமா.தொடரும்.......

5 கருத்துகள்:

 1. "என்னால் நாராயணா என சொல்ல முடியாது என சொல்ல, என்ன செய்வது என பொதுக்குழு கூட்டாமலேயே அங்கு விவாதிக்கப்பட்ட்து."

  கிண்டலை வெகுவாக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. பிடிக்குதோ இல்லையோ தேர்வு அவசியமாகிறது
  True.

  பதிலளிநீக்கு
 3. /// ஏவிஎஸ் சொன்னது…
  "என்னால் நாராயணா என சொல்ல முடியாது என சொல்ல, என்ன செய்வது என பொதுக்குழு கூட்டாமலேயே அங்கு விவாதிக்கப்பட்ட்து."

  கிண்டலை வெகுவாக ரசித்தேன்./////

  மிக்க நன்றி.. நல்ல சில தகவல்களை பதிய வைக்க நகைச்சுவை ஒரு நல்ல உத்தி. சிரிக்க வைக்க ரசிக்க வைக்க என சில சின்ன சிலுமிஷம் செய்யும் போது, அதை ரசிக்கிறேன் என படிக்கும் போது மிக்க மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 4. //// இராஜராஜேஸ்வரி சொன்னது…
  பிடிக்குதோ இல்லையோ தேர்வு அவசியமாகிறது
  True. ////

  வருகை தந்து கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  நீண்ட நாட்களுக்கு பிறகு..... (போன வருடம் மே மாதம் எழுதிய) சில கிறுக்கல்களை இன்று உங்கள் பின்னூட்டம் வந்ததால் மீண்டும் படிக்கும் போது எனக்கு புதியதாக தோன்றுகிறது.

  பரவாயில்லயே யூஸ்புல்லாத்தான் இருக்கு என தோன்றியது.

  நண்பர் ராம்கி அடிக்கடி ஆன்மீக அல்வா நல்லா இருக்குது என்பார். அடிக்கடி இதை ரெபர் செய்வார்.

  என் எழுதுவதின் முயற்சியில் உபயோகம் இருப்பது போல் தோன்றிய தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு