பக்கங்கள்

அங்காடி தெரு – திரை விமர்சனம்

அங்காடி தெரு அற்புதம். எனக்கு மட்டுமல்லாது குடும்பத்துக்கே பிடித்தது. வசந்தபாலனுக்கும், ஜெயமோகனுக்கும் மொத்தக் குழுவுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

நம் எல்லோரையும் சிரிக்க வைத்து, அழ வைத்து, கைதட்ட வைத்து, வாழ்க்கையை பற்றி சொல்லி.... அடேயப்பா படம்ன்னா இப்படித்தான் இருக்கணும்.

விளிம்பு கோட்டுக்கு மிக சமீபமாய் ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கி சின்னா பின்ன மாகும் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வு, அவர்கள் ஆசைகள், உணர்வுகள் என துல்லியமாய் படம் பிடித்த நேர்த்தி பாராட்டுதலுக்குறியது. ஆர்ட் படம் என நம் பொறுமையை சோதிக்காமல் கலகல கும்மாளமுமாய், பரவசப்படுத்தும் காதல் காட்சிகளுமாய் செய்த பேக்கேஜிங் நிச்சயம் வெகு ஜனத்தை கவரும் ஜில் ஜில் ஐஸ் கிரீம்.

படம் பார்த்தபின் இனிமேல் ரங்கராஜன் தெரு சென்றால் நம் பார்வை நிச்சயம் வேறுபடும். சாலையில் நம்மிடம் வந்து விற்கும் அத்தனை ஆண் பெண்ணையும் இரக்கத்தோடு நிச்சயம் பார்ப்போம். சேல்ஸ்மேன், கழிவரை காப்பவர் என அத்தனை பேரையும் அன்பு செய்யும் அபாயம் கூட உண்டு.

மழை பெய்த இரவு சாலையில் ஒரு ஆணும் பெண்ணும் சில்மிஷம் செய்வதில் படம் தொடங்குகிறது. சே! வாட் நான்சென்ஸ் என எல்லோராலும் வெறுக்கப் படுகிறது. ஏன் நாமும் கூட லேசாய் எரிச்சலாகிறோம். ஆயினும் அந்த பாரடைம் ஷிப்ட் எபக்ட் கொடுக்கிறாரே அங்கு தொடங்குகிறார் இயக்குனர். படம் முழுக்க பின்னிப் பிரித்து இருக்கிறார். விமர்சனம் எழுதலாம், நல்ல விடயங்களை பட்டியலிடாம் என சிறு குறிப்பு எழுதி வைத்தேன். கூட்டிப் பார்த்தேன், 48 விஷயங்கள் இருக்கிறது. யேயப்பா. இத்தனையும் எழுதினால் எப்படி அது விமர்சனமாகும்...எதை விடுப்பது எதை கோர்ப்பது..

ஆக்கபூர்வமாய் ஒரு படம். யானை வாழுற காட்டில தான் எறும்பும் வாழுது இதே ரோட்டில நான் வாழ்ந்து காட்டுறேண்டா என ஹீரோ முழங்குகிறாரே. தஞ்சாவூர்க்காரர் ‘மனச தளர விடாதீங்க, இத எடுத்துட்டு போயி கூவி கூவி வில்லுங்க, விக்கத் தெரிஞ்சவன் வாழுவான். முப்பது வருசமா மனுசன நம்பி கடை வைச்சேன், ஒரு குறையும் இல்ல என்கிறாரே’. அண்ணன் கடை பையை வாஞ்சையுடன் தொட்டு, பின் வாங்கி சாமிபடத்துக்கு பக்கத்தில் மாட்டும் தங்கச்சி. உன் சேர்க்கைக்கு தான வீட விட்டு வந்தேன், பேசாம இருக்காத என அழும் நண்பன், நரம்பு கோளாறில் உயிர் விடும் ஊழியன், பூப்படையும் சிறுமி, இப்படி அட்லீஸ்ட் ஒரு முப்பது நாப்பது இடங்களில் கைதட்டி, கண்ணீர் மல்க நம்மை ஆட்கொள்கிறார்கள் படக்குழு.

இல்லையென்று சொல்லாமல் குறையாய் இது தோன்றியது. வட்டாரத்தமிழ் ஓங்கி ஒலிக்கிறது. தென் மாவட்டங்களை சேர்ந்தவர் சிலாகிப்பார், மிச்சவர் புரிந்தால் மட்டுமே ரசிப்பார். செத்த மூதி கால தரிச்சுப் புடுவேன் என்கிற ஒரு வசனம். அரிவாளால் வெட்டி இரு துண்டங்களாக்குவது. அங்கும் இங்கும் வெட்டி மரத்தையோ, கட்டையையோ கொஞ்சம் சின்னதாய் ஆக்குவது தரிப்பது. கோட்டி பிடிப்பது என்பது மனம் பிறழுவது (மரை கழலுவது / லூஸ்) இது போல் ஒரு களஞ்சியமே படத்தில் இருக்கிறது.

எல்லா தமிழ் ரசிகரும் பார்க்க வேண்டிய படம். தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்து இருக்கிறது, நமக்கெல்லாம் பெருமை.

பார்த்து, படித்து, சிலாகித்து பாராட்ட வேண்டிய நல்ல படம்.

சம்சார சாம்ராஜ்யமே

இருவது இருவத்தைஞ்சு வருசத்துக்கு முந்தி ஒரு சினிமா பாட்டு. 'மதினி மதினி மச்சான் இல்லயா இப்ப வீட்டுல' என கொழுந்தனார் கேட்பார்.

இந்த பாட்லை, கேட்ட சென்ஸார் போர்டு
நே!!! என விழித்து
நோ என சொல்லி!!
போ என தள்ள!!!,
மதினிக்கு பதிலாக மயிலு மயிலு என மாற்றி விட்டார்கள். பரவாயில்லியே ஒரு கட்டுப்பாடு இருக்கே என சிந்தித்து சிந்தை கொஞ்சம் சைடு வாங்கி யோசித்த்து.

புரட்சித் தலைவரின் அன்பே வா படத்திலும், உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே என்ற பாடல் எதிர்க்கப்பட்டு உதயசூரியனை புதிய சூரியனாக்கியது. இப்பதான் தோணுது திரைக்கு இருக்கிற கட்டுப்பாடு சினிமா பாட்டுக்கோ, டி.வி.க்கோ !!!??? இல்லை.

மயிலு பத்தி இன்னொரு நினைவு. பதினாறு வயதினிலே எனும் திரைப்படத்தின் கதா நாயகி, தமிழ் ரசிகனுக்கு மிகவும் பிரபலமானவள். மிக அழகானவள், அவள் பெயர் மயிலு. சமீபத்தில் தேசிய விருது பெற்ற பாடல் வரி பவதாரினியின் குரலில், 'மயில் போல பொண்ணு ஒண்ணு''. ஆங்... அதுவும் மயிலுதான்.

என்னடா படுக்காளி, மயிலு மயிலுன்னு மருகுறியே என்ன மேட்டருன்னு கேட்டீங்கன்னா, கடந்த சில காலமாவே நம்ம மகளிர் இடஒதுக்கிடு மசோதா மக்கள் மன்றத்துல சூடா விவாதிக்கப்படுது.

நம்ம தேவகவுடா பிரதமரா இருந்தப்போ 1996ல வீட்டுல இருக்கிற பொம்பளையெல்லாம் வரச் சொல்லுங்கப்பா. ஒரு 33% நாடாளுமன்றத்துலயும் சட்டமன்றத்துலயும் கொடுத்துறலாம்னார். அப்ப இருந்து இந்த திட்டம் சட்டமாகாம நொண்டிக்கிட்டு தான் இருக்கு.

பஞ்சாயத்து பரவாயில்ல. மகளிர் இட ஒதுக்கிடு அங்கனவரைக்கும் சரியாயிருச்சு. இன்னிக்கும் ஒரு பத்து லட்சம் பெண் ஆட்சியாளர்களை நாம் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

சமூக கட்டமைப்பில் வீட்டு நிர்வாகம் யாரிடத்தில் இருக்கிறது. உங்க வீட்டுல எப்படி மதுரையா!!! மீனாட்சியா!!! என வீடு யாரு கண்ட்ரோல்ல இருக்கு என பேசிக் கொள்வார்கள். பெண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என முடிவு எடுத்த புருஷனை மதுரை... மீனாட்சி எனவும், அல்லது காலை தூக்கி நடனமாடும் புருஷன் என் பேச்சை கேட்டுக்கோ எனும் நடராஜனோ எப்படி செட்டாகுது என்பது சுவாரசியமான சூட்சமம்.
விரிவாய் இன்னொரு சமய்த்தில் இது பற்றி பேசுவோம்.

நிற்க, நிலுவையில் இருக்கும் ஏறக்குறைய அமல்படுத்த இருக்கும் இந்த மகளீர் மசோதாவின் வீகம் என்ன. வரிந்து கட்டிக் கொண்டு வேண்டாம் எனும் எதிர் குழுவின் எண்ணம் என்ன.

ஒண்ணுல மூணு பொம்பளன்னு சொல்லீட்டீங்கன்னா சாதிய அடிப்படையில இவ்வளவு இருக்கணும்னு சொல்ல முடியாதே என்பதே இவர்களின் பிரச்சனை. கட்சியில் ஏற்கனவே கூட்டம் ஜாஸ்தியாயிருச்சு. கொசுராய் இருக்கிற தலைவர்களை எப்படி அக்காமடேட் செய்வது என அக்கப்போரா இருக்கு இதுல அக்காவுக்கு சீட் கொடுக்கணும்னா எப்படி என்பது உபரி கவலை.

மகளிர் இட ஒதுக்கிடை எப்படியும் கண்டிப்பா செஞ்சுரணும்னு காங்கிரஸ் கோதாவில இருக்கு, மேட்டரு முடிஞ்சுரும்ன்னு தோணுது.

மேட்டர இப்படியே விட்டுபுட்டு தொடங்கிய பிரச்சனைக்கு வருகிறேன். பெண்ணடிமையை எதிர்த்து முழங்கிய பெரியார், பாரதியார் போன்றோருக்கு ஒரு வணக்கமும் தெரிவித்து விட்டால் சொல்வதை சேதாரம் இல்லாமல் சொல்லி விடலாம்.

ஆண் மயில் தோகை உடையது, அழகானது, பெண் மயில் பார்க்க பாவம் போல் இருக்கும். ஆனால் என்னவோ பெண்ணில் அழகை குறிக்க மயிலை அதுவும் ஆண் மயிலை மெட்டபராய் தப்பாய் எடுத்துக் கொண்டோம். இத்தனைக்கும் முருகனின் வாகனமாய் சொல்லப்பட்ட மெட்டபரை மறந்தும் ஆழமாய் பார்க்கவும் தவறி விட்டோம்.

இயல்பில் பிறப்பில் ஆண், பெண் இருவருக்கும் சிந்தையிலும் செயலிலும் நிறைய வேறுபாடு உண்டு. உடலும் உள்ளமும் சமைத்த வேறுபாட்டின் வித்து அது. உயரமும் உறுதியும் கொஞ்சம் சுருங்கிய அமைப்பில் பெண் ஏன் இருக்கிறாள் என இறைவனை கேட்கலாமா. அது முதல் படி. பின்னர் நம் முன்னோர் பூட்டி விட்ட கலாச்சாரத்தின் கட்டமைப்பு, வீரிய வரைவு இன்னும் வித்தியாசமாக்கியது.

பெண்ணின் திட்டம் வேறு, திடம் வேறு. சிங்க இனத்தில் பிடறி வைத்துக் கொண்டு பெரிய உருவத்துடன் சிலிர்ப்பு காட்டினாலும் பைசாவுக்கு பிரயோஜனமில்லாதது தான் ஆண் இனம். வெறும் பம்மாத்துதான். ஆனால் இரை தேடி, குடும்பம் காத்து, எதிரியை வெல்வது பெண் இனமே.

தேனீக்களில் ராணித்தேனிதான். பல சிந்தைகள் முட்டி மோதினாலும், ஒரு கேள்வி தனித்து நிற்கிறது. நம் மனித ஜாதியில் எப்படி. மதுரையா? சிதம்பரமா எது நல்லது. பாரத மாதா, என நம் தேசத்தின் அடையாளத்தை பெண்ணாக்கிய !!! நமக்கு எது நல்லது.

காலம்காலமாய் சார்ந்திருக்கும் சமூக அமைப்பு அசையத்தான் செய்யும். மாற்றத்துக்கு தயாராவோம். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் எனும் விந்தை மனிதர் இன்று அட்ரஸ் இல்லாமல் தான் இருக்கிறார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என வீறு கொண்டு எழும் பெண்கள் போற்றுதலுக்குறியவரே.

துபாய் ஜமாய்


இறைவனா !!!
இங்குள்ளவரா ....
எவர் படைத்தார்
இந்த சொர்க்கம்...

விழியிலா
உள்மனதிலா
எங்கே பூக்குது
நம் இவ்வியப்பின் வீரியம்

உயர்விலா உழைப்பிலா
நினைப்பிலா முனைப்பிலா
திட்டத்திலா திடத்திலா
கலாச்சாரத்திலா கட்டமைப்பிலா
எதில் உண்டிங்கு வெற்றியின் ரகசியம்

பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு

நம்ம எக்ஸ் இன்போசிஸ் நந்தன் நீலகேனி இப்ப என்ன செய்யுறாருன்னா. இந்திய Unique Identification Authority of India வின் சேர்மன். UIDAI …. உடே...ய்.... பற்றி தெரிந்தவர் ஒரு பாராவை உட்டு விடு ஜீட் என நகரலாம். இல்லாதவர் கீழே வாங்க.

பத்து வருசத்துக்கு முந்தியே.... சவுதி அரேபியாவை நான் முதலில் பார்த்த போது பரவசம் வந்தது. புதிராகவும் பிரமிப்பாகவும் இருந்த்து, எங்கனயாச்சும் ரோட்டுல நடமாடினா, ஹோட்டல்ல ரூம்பு போட்டா, ஏதாவது புதுசா வாங்கினீங்கன்னா பில் போட, டிக்கட் புக்கிங் என என்ன செஞ்சாலும் போலீசு அல்லது அதிகாரிகள் நம்மகிட்ட வந்து கேக்குறது ஒரே வார்த்தை தான். ‘இக்காமா ப்ளீஸ்’ அவ்வளவுதேன்.

அதென்ன இக்காமா. அக்கா மாமா தெரியும், அவருக்கும் இவருக்கும் என்ன உறவு என்று கேட்பவருக்கு. இக்காமா என்றால் அடையாள அட்டை எனும் அரேபிய சொல், அம்புட்டுதேன்.

நம்ம கையில இருக்குற அந்த அடையாள அட்டைய பார்த்து அவர்கள் கம்புயூட்டர்ல தட்டினா யாரு, என்ன விவரம் எல்லாம் புட்டு புட்டு வைச்சுரும். ஏமாத்தவோ, பேர மாத்தி சொல்லவோ சான்ஸே இல்ல.

அலுவலகங்களும், போலீஸ் கார்களும் கூட கம்புயூட்டர் இணைப்பின் மூலம் இந்த தகவலை பெற்றுக் கொள்ளலாம். யப்பா, என்ன சிஸ்டம்டா சாமி, நம்ம நாட்டுக்கும் வந்தா நல்லா இருக்காது என ஏங்கி ஏப்பம் இட வைத்தது.

நீங்க மதுரைக்கார்ர்ன்னு வையுங்க, மெட்ராஸூக்கு போகணும்னா, ஊரெல்லைல இருக்கிற எல்லை காவலர்கிட்ட உங்க இக்காமா நம்பர சொல்லிட்டு போயிட வேண்டியதுதான். ஏதோ ஒரு அவசர தேவை உங்ககிட்ட அரசாங்கம் ஏதாவது அவசர சேதி சொல்லணும்னா, கம்புயூட்டர் பார்த்தா போதும் எங்க இருக்கீங்கன்னு சொல்லிடும். அந்த நாட்டின் ஒரு காவலர் பெருமையாய் என்னிடம் சொன்னார். யாரையாவது தூக்கணும்னா (யப்பாடி... சாக்கிரதையா இருக்கணும்) ஒரு 20 நிமிசத்துல நாங்க ரவுண்ட் அப் செய்துரலாம்ன்னார்.

சின்ன ஊரு, ராஜா ஆட்சி, சர்ப்ளெஸ் காசு எல்லாம் இத சாதிக்க முடிஞ்சுச்சு. நம்ம நாடு ரொம்ப பெரிசு. வீடு இல்லாம, ரோட்டுல கூட குடித்தனம் நட்த்துரவுங்கன்னு மக்கள் நிறைய பேர் உண்டு. ஊர மாத்தி, லோகேஷன மாத்தி பொழப்ப பார்க்க வேண்டியதும் உண்டு. இப்படி எத்தனை சாக்கு போக்கு சொன்னாலும் நம்ம இந்திய அரசாங்கம் இதன் முக்கியத்தனம் உணர்ந்து, அதை கையில் எடுத்துள்ளது. பிளானிங் கமிஷனுக்கு கீழே இத உண்டாக்கி முனைப்பாக செய்கிறார்கள்.

கொசுறு ஆச்சரியம், ஆண்டவனப் பத்தியது. அது எப்படிங்க இப்படி!!!! எல்லா மனிசனும் யூனிக். படைக்கப்பட்ட எல்லா மனிதனும் கண் திரைகளிலும், விரல் ரேகைகளிலும் வித்தியாசப்படுவது ஆச்சரியத்தின் அத்திரி பாட்சா.

சரி உடேய் என்ன செய்யப் போகுது, அத சொல்லுங்க. இந்திய குடிமக்கள் அனைவரும் பட்டியலிடப்பட்டு, அவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒரு பொது இடத்தில் பாதுகாக்கப்பட்டு, பரிமாறப்பட்ட விருக்கிறது.... மக்கா, அது ரொம்ப பெரிய விசயம்ப்பா........

இது மட்டும் நடந்தால், மிகப் பெரிய மாறுதல் நடக்கும். அது நடக்க வாழ்த்துக்கள்.

செப்டம்பர் 2009 தேதியின் படி, இந்த உடேய் (பேரு நல்லா இருக்குங்க....அதுவும் நம்ம தாய் மொழியில் சொல்றப்போ ஜிவ்வுங்குது) உத்தரவாதம் தந்திருப்பது, இன்னும் மூன்று வருடங்களில் டில்லியில் இது அமுல் படுத்தி விடுவோம் என்று.

என்னங்க இது, சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டாமா, இழுத்துட்டு போறது நல்லாவா இருக்கு என நாம் நினைப்பது சரியே. தாமதத்துக்குக்கான காரணங்களை, நடைமுறை சிக்கல்களையும் கீழ் உள்ள புள்ளி விவரங்கள் விளக்கும்.

தில்லியில் திட்டமிட்ட இந்த செயல் 9 லட்சம் குடிமனைகள் உள்ளடக்கிய 4.2 கோடி மக்களின் பெயர், பிறந்த தேதி, விலாசம், பெற்றோர் விவரம், ரேகை, கண் இமைகளின் விவரம் எல்லாம் இதில் அடங்கும். தில்லி என்பது உ.பி., ராஜஸ்தான் எனும் அக்கம் பக்கத்தை சேர்க்காததே.
ஆனாலும் தில்லி இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம், உலகத்தின் எட்டாவது மிக பெரிய நகரமும் இதுவே.