பக்கங்கள்

எல்லா ஒளிர்வுக்கும் பின்னால், ஒரு வெப்பம் இருக்கும்…..

விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சு, எங்க வீட்டு கரெண்ட் பில்லு இந்த மாசம் ரூபாய் 70,69,488 என மும்பாய் தொழிலதிபர் ஒருவர் சொல்வதாய் சேதிகள் வந்ததும், நம் துப்பறியும் மூளை தகவலுக்கு ஏங்கியது.

இலக்கங்கள்ல தப்பில்லையே, 70 லட்சத்தி சொச்சந்தானே, என நம் கையை நாமே கிள்ளி பார்த்து விட்டு, மேலே படிப்போம். இருக்கவே இருக்கிறார், நம்ம கூகுள் அண்ணாச்சி, அவரை நாடி சென்று தகவல்கள் தேத்தினோம்.

முகேஷ் அம்பானியின் மும்பை நகரத்து அண்டிலியா எனும் அவரது வீட்டின் பில்தான் இது. நிஜந்தானா, ஒஹோ!!! இது இந்திய சராசரிப்படி சுமார் 7000 வீட்டுக்கான கரெண்ட் தொகையாவில்ல இருக்கு. சரி…. என்ன ஆதி... இப்படியாயிப்போச்சே என அக்கறையுடன் பார்த்தால் 9 எலிவேட்டர்தான்… லிப்ட் பண்ணி இப்படி வகை தொகையில்லாம போச்சு.

மொத்தம் 27 மாடி ஆனா 60 மாடிக்குள்ள உயரத்தில நிக்குது. முதல் ஆறு வெறுமனே போயிட்டு வர்ற கார நிறுத்துறதுக்கு. என்ன செய்யுறது, 168 கார் இருக்கும்போது நிறுத்துறதுக்கு இடம் வேண்டாமா. அப்புறமா, ஏழாவது மாடியில இருந்து குடும்பம் தங்குறதுக்கு, குளிக்கிறதுக்கு சாப்பிடுறதுக்குத்தான் மீதியெல்லாம்.

அங்க தங்கியிருக்கிறது ஆறு பேரு ஆனா 600 வேலைக்காரங்க இருக்காங்க. அங்கனக்குள்ளேயே தங்கி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறாங்க, அதாவது ஒத்த ஆளுக்கு சராசரி 100 பேரு.

முந்தியெல்லாம், அமிதாப் வீடு சாருக்கான் வீடுன்னு படையெடுத்த லோக்கல் டூரிஸ்ட்டுங்க இப்ப இங்கயும் வாராங்களாம்.

சரி இந்த தகவல்களை கேட்கும் போது நம் மனித மனம், என்ன யோசிக்கிறது. அனேகமா கீழ் காணும் டயலாக்குல ஒண்ணு உங்களுக்கு பொருந்தலாம்….. குத்து மதிப்பா….. பாருங்களேன். இல்லாம புதுசா ஏதாவது தோணுச்சுன்னா, பின்னூட்டத்தில சொல்லுங்க… ப்ளீஸ்….

  • அடேயப்பா, பொறந்தா பொறக்கணும் இப்படி…, இல்லேண்ணா மூடிக்கிட்டு சும்மா இருக்கலாம்.
  • எப்படியாவது இங்க போயி ஒரு நாளாவது வாழ்ந்திரணும் இல்ல அட்லீஸ்ட் பார்த்துரணும்.
  • அடப் போடா, இது என்ன ஜூஜூபி… இத வீட பொம்பாடா நான் கட்டப் போறேன் பாரு…
  • இதெல்லாம் தேவையா, என்னத்த சொல்றது… அற்பனுக்கு பவுசு வந்தா மிட் நைட்டுல கூலிங் கிளாஸ் போடுவான்

இந்த பதிவை படித்து முடித்து மடக்கும்முன்…….. இந்த வீட்டின் உரிமையாளரைப்பற்றி நாம் இதையும் படித்து விடுவது நல்லது.

முகேஷ் அம்பானி

கல்வித் தகுதி : MBA, Stanford University; Bachelor's Degree University of Mumbai; MBA University of Mumbai

அவர் கம்பெனியின் வருடாந்திர வருமானம் : ________ கோடிகள் எல்லா வரிகளும் செலுத்தியபின்

அவரது சம்பாத்தியம் : ________

அவர் நிறுவனத்தில்: இவர் தரும் சம்பளத்தை நம்பி வீட்டில் உலை வைப்பவர்கள் ___

எல்லா ஒளிர்வுக்கும் பின்னால், ஒரு வெப்பம் இருக்கும்….. நம் பார்வையில் ஒளி தெரிந்தபின்....

அந்த வெப்பத்தை உணர்ந்தால் நம் சிந்தை சிறக்கும்

நந்தலாலா – திரை விமர்சனம்

ரசித்து எடுக்கப்பட்ட மிக நல்ல படம். நேர்த்தியான இயக்கம், நெகிழ வைக்கும் இசை ராஜாங்கம், கண்களை கொஞ்சும் ஒளிப்பதிவு, பலமான திரைக்கதை, என எல்லா பரிமாணங்களிலும் நெஞ்சை அள்ளும் சினிமா.

நீர்த் தாவரம் ஒன்று, கொப்பும் குலையுமாய், தண்ணீரில் முழ்கியும் மூழ்காமலும் ஆற்று நீரின் வேகத்தில் மயிலிறகு போல் அசைந்தாடும் அந்த ஆரம்ப காட்சியிலேயே படத்தின் தரம் நமக்கு புரிகிறது. ரசனையின் கட்டியம் கூறுகிறது. இயக்குனருக்கும், எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

அதிலும் டைட்டில் கார்டில் முதல் பெயராய் இளையராஜாவை போட்டு ‘அட… இது புதுசா இருக்கே, வழக்கமா ஹீரோ பேருதான போடுவாங்க என நம்மை சிந்திக்க வைத்து. அப்படி ஏன் முதலில் அவர் பெயர் வருகிறது என்பதை ஜஸ்டிபை செய்யும் இசை. ’இசையுலகின் சூப்பர் ஸ்டார்’ என சொல்லும் அளவுக்கு அம்சமான இசை.

திரைக்கதை அமைப்பில் ஒரு புதுமை. ஒரு காட்சியின் முடிவு, அந்த காட்சியில் சொல்லப்படாமல் அடுத்த காட்சியில் காண்பிப்பது நல்ல உத்தி. அடுத்த காட்சி என்ன என பார்வையாளனை எதிர்பார்க்க வைக்கும் நேர்த்தி.

உதாரணத்துக்கு ஒன்று. தங்கள் பயணத்தில், அன்பாய் சந்திக்கும் அந்த பெண்ணிடம் விடை பெற்று,….. போகலாமா என தீர்மானித்து இருவரும் கிளம்ப, அந்த பெண் வாஞ்சையுடன் சோகத்துடன் பார்க்க இவர்களும் பிரிய மனமில்லாமல் பார்க்க, …. டேய்…. ஒண்ணாப் போங்களேண்டா என நாமெல்லாம் ஏங்க, என்ன நடந்தது என்ன சொல்லாமல் காட்சி முடிந்து விடுகிறது. அடுத்த காட்சி ஒரு லாரி செல்கிறது, கேமரா சுழன்று நகரும் போது மூவரும் அமர்ந்திருப்பதை நாம் காணலாம். எனும் போது, அவர்கள் பேசி முடிவெடுத்து ஒன்றாய் பயணம் செய்கிறார்கள் என நமக்கு புரிகிறது. இதுபோல் பல காட்சிகள் அமைத்து பட ஓட்டத்துக்கு பெரிதும் சுவாரசியம் கூட்டியிருக்கிறார்கள்.

இத்தகைய தரமான திரைப்படங்கள் தமிழில் வருவது நமக்கு பெருமை. வாழ்த்துக்கள். மென்மேலும் இது போல் திரைப்படங்கள் வரவேண்டும் என ஆசிப்போம்.

நிற்க, இது ஒரு காப்பி என சூடான விவாதங்கள் ஒரு புறம் அரங்கேற. அதற்கு பதிலாக, இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் நிறைய வேறுபாடு உண்டு என விளக்கம் அளித்து இன்னொரு புறமும் அனல் பறக்க, என் எளிய சிந்தனை இதுவே. என்னைப் போன்றோருக்கு அன்னிய சினிமா பார்க்கும் வாய்ப்புக்கள் குறைவு, கப்பிஜோரா, டொப்பிமாரா என பார்க்கும் வசதிகளும் இல்லை, எனும் போது. எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம் எனும் பாரதியின் முழக்கம் முறைதானே.


சில கேள்விகள்.


· இப்படத்தின் மூலம், சமூகத்துக்கு சொல்ல நினைக்கும் கருத்து என்ன.


· இப்படி ஒரு கதைக்களமும், கதை மாந்தர்களும் தேர்த்தெடுக்க காரணம் என்ன


· இக்கதையின் மாந்தர்கள் யார்…???.நாயகன்--- மன நிலை பிறண்ட, சமுதாயத்துடன் இயல்பாய் வாழ இயலாத மனிதன் --- . காதல் எனும் பெயரில் தன்னை பறி கொடுத்து, விபச்சார விதியில் விழுந்து, வாழ்வு செல்லும் பாதை அறியாத நாயகி, இப்படி வஞ்சிக்கப்பட்ட பரிதாவத்திற்குறிய மனிதர்களின் வாழ்வு பற்றிய படங்கள் மட்டும்தான் ஏன் கலைப்படம் ஆகிறது.

· ஆற்றல் மிக்க, செயல் திறன் மிகுந்த, சாதிக்கும் மனிதர்களின் கதை, ஏன் வணிக சினிமா என முத்திரை குத்தப் படுகிறது.

· வாழ்வின் இருண்ட பக்கங்களும், நிதர்சனங்களும் தெரிய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இதுதான் சினிமா. இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் இயல்பு, இப்படித்தான் படம் இருக்க வேண்டும் என சொல்வது அபத்தம். இத்தகைய ரசனையுள்ளோரின் மனச்சிக்கல் கொஞ்சம் அபாயகரமானதே. தங்களுக்கு தாங்களே இவர்கள் வரைந்து கொள்ளும் அறிவு ஜீவீ லேபல்கள் சமூக அங்கிகாரத்திற்கென்றால் பிரச்சனையில்லை, உண்மையிலேயே இதெல்லாம் பிடித்தால்…. சாரி, நோ கமெண்ட்ஸ்.

· இயக்குனரே, இதுக்கு முந்தைய படங்கள் குப்பை, இதுதான் பெஸ்ட் என சொல்ல வேண்டிய அவசியம் எதனால் வந்தது.

· மன நிலை பிரண்டால், நடிப்புக்கு ஸ்கோப் ஜாஸ்தி என்பதால், கோணங்கி சேட்டைகளும் அங்க அசைவுகளுமாக எது செய்தாலும் நடிப்பு என்றாகி விட்டது துரதிருஷ்டம்.

· நாம் முன்னமே பார்த்து ரசித்த சேது, இன்ன பிற திரைப்படங்களின் உரசல் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. மிகவும் பாராட்டப்படும் அந்த அம்மா கிளைமாக்ஸ்சை சேது --- ஈஸ்ட்மென் கலர் புத்தம் புதிய காப்பி எனலாமா.

· பெரும்பாலான ரசிகர்களை வசிகரிக்கவில்லை,வணிகத்தில் தோல்வி எனும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு….. ரசனையில் கோளாறு என பாமரன் மீது பாயாமல், வீண் கோபங்களை விட்டுவிட்டு, மக்களின் அங்கீகாரமும், கலை மேன்மையும், வசூலும் தவிர்க்க முடியாத சினிமாவின் அங்கங்கள் என்பது உணரப்பட வேண்டிய உண்மை.

தாட்... பூட்... தஞ்சாவூர் !!!

பேமானி…!! கஸ்மாலம்….!! எங்கேயா பாக்குறீயே.. இங்க பாருடா…. காத இங்க கொடுத்துட்டு கவனத்த எங்கேயோ வைச்சிருக்கியேடா…. பொறம்போக்கே….
சொல்றத கேட்டு அத யோசிடா என் யோக்கியரே….!!!

என் குடியிருப்பின் கதவு தாண்டி, என் காதை குடைந்தது இந்த வசவு சொற்கள். என்ன ஒரு துணிச்சல்… என் எதிரிலே என்னை திட்டும் எகத்தாளம். வார்த்தைகளில் உணர்த்த இயலாத மகா எரிச்சல் எனக்குள் மண்டியது. மனதிற்குள் நானும் திட்ட துவங்கினேன். சே!!! தொடங்கிட்டாண்டா தொம்ஸ் கட்டை!!!, ஏண்டா எமப் பய மவனே! உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா.

என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு, காலைல ஏந்திருச்சு, அரக்க பரக்க கொட்டிக்கிட்டு, ஆபிஸ்ல போயி குத்தும் குடைச்சலும் வாங்கி அதத் தாங்கி, குத்துயிரும் குலையுயிருமா வீட்டுக்கு வந்தா. வீடு சும்மா… சுகமாவா இருக்கு, இங்க பல கொடுமைகள் இங்க ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது. பால்காரன், வாடகை, கரண்டு பில், பைப்பில தண்ணீ வரல இப்படி ஓராயிரம் பிரச்சனை. குத்துதே குடையுதேன்னு நான் யாருகிட்ட போய் கத்துறது. நான் என்ன செய்யுறது, எதை காப்பாத்துறது. வீடு, ஆபிஸ், சமூகம்ன்னு மொத்தக் குத்தகையில குத்துது. கோபம் இயலாமையை இடித்துரைக்க, என் கோபம் லேசாய் அழுகையாக ஆனது. மனதிற்குள் ஒரு விசும்பல்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி. ஊரும் உலகமும் நல்லா சுகமா இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை. என்ன வரம் வாங்கி வந்தேன் இப்படி. அழுகையில் கரைய என்னை நான் அனுமதித்தேன். அந்த உணர்வில் சில நிமிடங்கள் நகர, மேலும் மேலும் நான் அதில் கரைய, வேறு சிந்தனைகள் அற்றுப் போயிற்று.

அதில் ஒரு சுகம் தெரிந்தது. உடல் அசையாது, உணர்வு மட்டும் விழித்து இருந்தது. குளிர் பழகிய அல்லது பாதித்த உடல், சுள்ளென சூரிய கதிர்கள் படும்போது மனம் ஸ்தம்பித்து மோன நிலையில் இருக்குமே, இன்னும் இன்னும் என ஏங்குமே. சிந்தனை எதுமில்லாமல் சோம்பலாய் முடங்கி நிற்குமே அது போல் ஒரு நிலை. இப்போது வெளிக்குரல் இல்லை. ஹப்பா!!! போயிட்டான் போலருக்கு

மெல்லமாய் தலை நீட்டி வெளியில் பார்த்தேன். எங்கும் போகவில்லை அங்கேயே தான் இருக்கிறான். உக்கிரமாய் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவன், அசிங்கமாய் நின்று கொண்டிருந்தவன், இப்ப மண்டையை சொறிந்து கொண்டு உட்கார்ந்திருக்கான். அவ்வளவுதான். சே!!! நாத்தம் குடல புடுங்குது. அழுக்கும் தூசியும் அவனை அப்பி பிடித்திருக்க, அவனை பார்ப்பதே ஒரு தண்டனை. யேயப்பா!!! என்ன உயரம், நிச்சயம் ஒரு ஏழடி இருப்பான். அசப்பில் என் உடல் மற்றும் முகவெட்டு. ம்….. உடல் அசைவில் கூட என்னை மாதிரியே.

எனக்கு மட்டும் இல்லை. பக்கத்து வீட்டு ராமசாமிக்கும்... ராமசாமி உருவத்தில் இதுபோல் ஒரு தொல்லை. ராமசாமியை பார்த்து உரத்த குரலில் திட்டிக் கொண்டிருக்கிறான். என்ன ஒரு வித்தியாசம் என் தொல்லை போல உயரம் இல்லை, குள்ளமான உருவம், கூடிப்போனால் ஒரு நாலடி இருக்கும். என்றாலும் ராமசாமி நல்ல உயரம், அவன் ஆறடி நாலங்குலம் இருப்பான். எதிர்வீட்டு ஏகாம்பரத்துக்கும் எங்களை மாதிரியே. அழுக்காய், நாத்தமாய் அவனுக்கும் இதே தொல்லை.

எனக்கு திட்டு தூய செந்தமிழில். ராமசாமிக்கு அக்மார்க் கெட்ட வார்த்தையில் அன்னிய பாஷையில் திட்டு. ஆங்கிலம் ஸ்டைலாக இருந்தாலும், சே… வாயில் சொல்ல முடியாத அசிங்க அசிங்க வார்த்தைகள். அடப் பாவிகளா!! இந்த குடியிருப்பு மொத்தத்துக்கும் இப்படி ஒரு தொல்லையா. இப்படி குத்தகை எடுத்துக்கிட்டு குத்துறாங்களே… இவனுங்கள கேக்க யாருமே இல்லியா…. சரி யாரிவனுங்க…. ஏன் இந்த பாடு படுத்துறானுக… எல்லாருக்கும் இப்படி ஒரு அவஸ்தை இருக்கே. என்ன இது.

உடல் சோபாவில் தளர்ந்தது. மூச்சு நீண்ட தாள லயத்தில் ஆழமாக ஆனது. இவனுங்க திட்டுதலை தாண்டி என்ன சொல்றானுங்கன்னு கேட்டதில்லையே. அரை குறையா சில வார்த்தைகள் காதில விழுது. திட்டுற வார்த்தையிலயும் இவனுங்க நாத்தத்துலயுந்தான் நம்ம திங்கிங் போகுதே இல்லாம…. நம்மால கான்சேண்ட்ரேட் பண்ண முடியல. சரி இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு எடுத்துறுவோம்.

ஒண்ணு நான், இல்லைன்னா அவன்…. அவனுக்காச்சு எனக்காச்சு.

அவனை உள்ளே வர அனுமதித்தேன். கதவு திறந்து அவன் உள் நுழைந்ததும் நான் அதிர்ச்சியானேன். கண்கள் நிலை குத்தின. கண்கள் மூடி திறந்து என்னை நானே சோதித்து கொண்டேன்.

நான் பார்ப்பது சரியா, ஏதேனும் பார்வைக் கோளாறா, என்பது போல் கண்ணை மூடி மூடி பார்த்தேன். என்ன இது … எப்படி இது…. சரி!!! அப்படி என்ன ஆச்சரியம் எனக் கேட்கிறீர்களா.

வெளியில் இருந்து அவன் கத்திய போது, அவனுக்கு ஏழடி உயரம் இருந்தது, இப்போதோ 1 அடிக்கும் கீழே…. வெளியில் இருந்து அவன் கத்திய போது அழுக்கும், நாத்தமும்… இப்போதோ அவன் மீது நறுமணம் கமழும் நல்ல வாசனை.

பேச்சு வராமல், நான் திகைத்து நிற்க, அவன் தான் தொடங்கினான், ம்… அன்பிற்குறிய என்னவனே… எப்படி இருக்கிறாய். எப்போதோ என்னை உள்ளே அழைத்திருக்கலாம். ஏன் பயந்தாய். ஏன் இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறாய்…. நிச்சயம் நான் உன் நண்பன் தான், உன் முன்னேற்றம் தான் என் விருப்பம்.

அதெல்லாம் இருக்கட்டும் நீ யார்,

நான்????…. அட… என்னை தெரியாதா… நான் தான் நீ. உன் மனதின் ஒரு மலர் நான்.

குழப்பாதே நீ யார்.

உன்னை செப்பனிடுவது யார் யார். மனசு, சிந்தனை, மனசாட்சி. இப்படி பல பெயர்கள் இருக்கலாம். பெயரா முக்கியம், செயல் தானே முக்கியம், உன்னை செயல் படுத்துவது எனது வேலை. உன்னை நெறிப்படுத்தி, ஆலோசனை வழங்குவது எனது வேலை.

இந்த பதிவின் தலைப்பை தமிழில் அர்த்தம் சொல்லுங்களேன், எதிரில் இருந்த குள்ளன் என்னிடம் கேட்க, தலையை சொறிந்தவாறு படுக்காளி இட்ட தலைப்பை ஸ்கோர்ல் செய்து பார்த்து, சொன்னேன். ‘குய்யோ முறையோ என கத்தி…. தாட் பூட்!!! தாம் பூம்!!! என பேசுவது அல்லது குதிப்பது.

ஆஹா!! அற்புதமான விளக்கம். ஆம், தமிழில் இதன் அர்த்தம் சொல்வது பிரச்சனை விளக்கம். அதற்கான தீர்வும் அதே வார்த்தை பதத்தில், அதே தலைப்பில் இருக்கிறது. என்ன கொஞ்சம் சௌகரியக் குறைவாய் ஆங்கிலத்தில் உள்ளது. நே!!!! என விளித்தேன்.

குள்ளனை பார்த்து கேட்டேன், ஆமா இந்த பதிவு தலைப்பிலேயே கேள்வியும் பதிலும் இருக்குன்னு பதிவு எழுதுற படுக்காளிக்கு தெரியுமா… என நான் கேட்டவுடன். கலகலவென சிரித்து சொன்னான். பாவம் படுக்காளி, அவன் ஒரு புள்ள பூச்சு, அப்புராணி. தமிழ் மட்டுந்தான் அவனுக்கு தெரியும், இங்கிலீஷ்ல அதுக்கு சொல்யூஷன இருக்கிறது எனக்கு மட்டுந்தான் தெரியும், இப்ப உனக்கு அத சொல்லப் போறேன்…

நான் சுவாரசியமானேன்…… ஆர்வம் மேலிட சீட்டின் நுனி நகர்ந்து காதை தீட்டிக் கொண்டேன். மனதிற்குள் நமட்டுச் சிரிப்பு, ‘அப்போ என்ன சொல்ற, படுக்காளிக்கு இந்த விசயம் தெரியவே தெரியாதா…. ஐய்யோ… ஐய்யோ….’

நன்றாக் கேட்டுக்கோ…. என்னை அனுமதித்து உள் வர அனுமதித்தாயல்லவா அதில் இருக்கிறது உனது வெற்றி. பயப்படாதே, அமைதியாய் அன்பாய் என்னை பேச விடு, நான் சொல்வதை கேள். ஏழடி என நீ நினைத்தது ஓரடி தானே…. அழுக்கு என நீ நினைத்தது இல்லை தானே. ஆம் என்னை அனுமதிக்கும் மனப் பக்குவம் வருவது தான் சிரமம். வந்து விட்டால் எல்லாம் வெற்றிதான். உனக்கு வெளியில் இருந்து உரக்கச் சொல்ல ஆள் இல்லையென்றால் மனிதனான் நீ மகான் ஆகிவிடலாம். இது நீ நினைப்பது போல் மிகச் சிரமமான காரியம் இல்லை. ஈசிதான்….

ராமசாமியும் ரங்கசாமியும் உள்ளே அனுமதிக்காமலேயே செத்து கூட போகலாம். சரி இது தான் அந்த ரகசியம். மூன்று வார்த்தை பதங்கள்

தாட் என்பது நினைவு,

பூட் என்பதில் காலுக்கு செருப்பு / எட்டி உதை… செய்தால் மீண்டும் தமிழுக்கு வருகிறது.

தஞ்சாவூர் – பெரிய கோவில் கற்றளி

உன் நினைவுகளை நெறிப்படுத்தினால் நீயும் தஞ்சை கோவில் போல் சந்திர சூரியர் உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும் சாஸ்வதம் அல்லது சாதனை படைப்பாய்.

காலம் மாறிப் போச்சா -(சிறுகதை)

வெள்ளை நிற ஹைபிரிட் கார், தன் 250 கி.மீ வேகத்தில் அந்த டீசல் டிரக்கின் மேல் பலமாக மோதியது. இடித்த கார் டோயாட்டாவின் லேட்டஸ்ட் மாடல் கேப்பிரிக்கா , இடிபட்ட டீசல் டிரக் பியூஜோவின் மிகப் பெரிய டிரக், திறந்து விட்டால், ஒரு ஊரையே வெள்ளத்தில் அழித்துவிடும் வால்யூமில் மிகப் பெரிய பானை வயிறு அதற்கு.

அடுத்த டிராக்கில் வேகமாய் சென்று கொண்டிருந்த இன்னொரு காரில் இருந்த கெவின் அசட்டையாய் அவியல் போல் சிந்தனையில் சிக்கியிருந்தவன், துணுக்குற்று சூழ் நிலைக்கு வந்தான். சே! என்ன ஒரு விபத்து. வந்த வேகத்தையும், அடித்த நொடியையும் மனம் வேகமாய் ரீவைண்ட் செய்து பார்த்ததில் உடல் குலுங்கியது.

நிச்சயம் அந்த காரின் காவலன் எமலோகத்துக்கு விசா வாங்கியிருப்பான். ஆர் ஏ சி ஒன்றுமில்லை, நிச்சயம் கன்பர்ம்ட்டு பர்த்துதான். தீ பிடித்ததா…. கேள்வி மனதில் வர, அதற்கு விடை தெரியவில்லை. இவனும் உச்சகட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கிறான். திரும்பி பார்த்தபோது, சாலையின் நிலவரம் தெரியவில்லை. சத்தம் கூட கேட்க வில்லை. எதனால் சத்தம் கேட்கவில்லை, நம் கார் கேப்பிரிக்காவின் சவுண்ட் புருப் இண்டிரியரா அல்லது கென்வுட்டின் சிஸ்டத்தின் இசை தூக்கலாய் இருந்ததாலா????.

என்னத்துக்கு இத்தனை வேகம். இயற்கை உபாதையாய் இருந்தால் கூட காருக்குள்ளே பெய்ய வேண்டியது தானே. யூஸ் லெஸ் இடியட். என்ன தலை போற அவசரம்….. இப்ப பாரு உண்மையிலேயே தலை போயிருச்சு. நசுங்கி கூழாயிருக்குமோ.. சே! நினைக்கவே உடம்பு நடுங்குது.

விலைமதிப்பு மிக்க மனித உயிர் இப்படி விபத்தில் முடிவது வேஸ்ட். எத்தனை லட்சியம் இருந்திருக்கும். ஏதோ ஒரு சினிமாவுக்கு போக தீர்மானித்து டிக்கட் கூட வாங்கியிருக்கலாம். இப்ப டிக்கட்ல்ல வாங்கிட்டான்.

அல்லது ஏதோ ஒரு பிளாட் கட்ட லோன் அப்ளை செய்திருப்பான். இவன் குடும்பத்தில் எத்தனை பேரோ, இவன் வருகைக்காக காத்திருப்பார்களோ. இவன் அலுவலகம் இவன் செயல் திறன் எதிர்பார்த்து காத்திருக்குமோ. இப்படி சிலந்தி வலை போல் பின்னப்பட்ட மனித உயிரை ஒரு நொடியில் பறக்க விட்டுவிட்டு பப்பரப்பே!! என படுத்து கிடப்பான் இந்த உடைந்த காருக்குள்ளே. கிடப்பானா அல்லது கிடப்பாரா. முதிர்ந்து இருக்க சான்ஸ் இல்ல, ஏதோ பொறுப்பில்லாத இரண்டும் கெட்டானாத்தான் இருக்கும்.

ஹோல்டான் கெவின், சினிக்காக யோசிக்காதே. யாரும் வேண்டும் என மரணிப்பதில்லை. அது விபத்து. அவன் அறியாமல் அவன் கவனம் சிதைந்த ஒரு நொடியில் நிகழ்ந்து விட்டது. உன் பாசி பிடித்த பிலாசபிக்கல் தாட் பேட்டர்ன், ஏதேதோ உனக்குள் உளறி, பெரிய கண்டுபிடிப்பு பிடித்த மாதிரியும், யூஸ்புல் டிஸ்கஷன் எனும் பெயரிலும், உன் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறது. உன் ஈகோவை சொறிந்து கொண்டிருக்கிறது. உன்னை முயங்குதலை விட்டு விட்டு சமனத்துக்கு வா. என அழுத்தமாய் அக்கறையாய் ஒரு மனக் குரல் எழுந்தது.

காத்ரீன் நேற்றே சொன்னாள், வரும் போது மறக்காமல், ஜிபிஎஸ் சென்சாரின் ரினிவல் பேமெண்ட் குறித்து. வர வர இந்த டெலிகம்யூனிக்கஷேனல் கம்பெனிகளெல்லாம் முகமூடி கொள்ளையர்களாகிவிட்டனர். சோஷியல் நெட்வோர்க் என்பது போய், சோஷியல் நெட்வொர்த்தை பற்றியெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். விலாசம் தவறென்பதால் ஐபி அட்ரெஸ்ஸின் கிளாஷ் இருக்கிறதென்றாள்.

அலுவலகத்தில் ஜான் சொன்னான், அவனுக்கு தெரிந்த யாரோ சீட் கோட் கொடுத்து ஜிபிஎஸ்ன் பேண்ட் வித்தை மாற்றி விட்டானாம். சே திருட்டு விசிடி, டிவிடி மாதிரி, காலங்கள் மாறினாலும் இந்த இடை நிலை பராசைட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இன்றும் வேலைப் பளுவை காரணம் காட்டி, பல் இளிக்க முடியாது. கேத்தரின் மைக்ரோ வேவில் வைத்து வறுத்து விடுவாள். வேறு ஏதேனும் நல்ல காரணம் யோசி. வெயிட்… மாமியார் மத்தியானம் எம் எம் எஸ் செய்திருந்தாரே, பார்வேர்ட் செய்தேனா. ஹம்மாடி, மாட்டிக் கொண்டேன். இன்று செமத்தியாய் டோஸ் வாங்க வேண்டியிருக்கும்.

கார் பார்க்கின் லீவர் உள்வாங்க, தன் பிஎம்டபுள்யூவின் பார்க்கிங் சிஸ்டத்தை ஆன் செய்தான். ரிம்மெனும் ஒலியுடன் பொசிஷன் சிஸ்டம் வேலையை தொடங்கியது. ஏதோ ஒரு விர் சத்தம், லூப்ரிக்கேஷன் செக் செய்ய வேண்டும், அந்த கம்பெனியின் ஏ.எம்.சி இன்னும் இருக்கிறதா, இல்லை காலாவாதி ஆயிற்றா.

திறந்த கதவின் பாதையில் கேத்தரின் அழகாக நின்று கொண்டிருந்தாள். அந்த பச்சை சிந்தடிக் புடவையில் இன்னும் அழகாக இருந்தாள். கைகள் விரித்து காதலுடன் சொன்னான், என் பூவே இன்றுதான் பூவையானது போல் இருக்கிறாய், கண்ணடித்து, வெட்கப்பட்ட மனைவியை கட்டிக் கொண்டான். கழுத்து பிரதேசத்தில் செண்ட் அமோகமாய் மணத்தது. லேசாய் மனம் கிறங்கி, மயக்கம் போல் சுழன்றது. வரவர இந்த செண்ட் கம்பெனிகளின் அராஜகம் தாங்கல. எக்ட்ஸி எலிமெண்ட்சை, கண்ட்ரோல்ட் அளவுக்கு மேலாக யூஸ் பண்ணுகிறார்களோ. கெவின் வி லவ். ஆஹா என்னவொரு மாற்றம், சங்க காலத்தில் ஐ லவ் என ஒருமையில் மட்டும் சொல்வார்களாம். இப்போது பரவாயில்லை எதிர்பார்ப்போ அல்லது ஏக்கமோ வி லவ் என சூசகமாய் சொல்ல பழகி விட்டோம்.

கெவின் ரிலாக்ஸ் இன் த செட்டிங், நான் ஒரு ஆரஞ்ச் கிரஷ் எடுத்துட்டு வர்றேன், அப்புறமா நம்ம அனிவர்சரி டின்னருக்கு அப்பலோ போயிடலாம். ஓகே.

சுருக்கென்று நினைவுக்கு வந்தது. இன்னிக்கு அனிவர்சரி இல்ல. அதான் அத்தை எம்.எம்.எஸ். செஞ்சு கேத்தரின கால் பண்ண சொல்லுங்க என சொன்னாரா. பரவாயில்ல, நான் அனிவர்சரி மறந்தத கேத்தரின் ரியலைஸ் பண்ணல. அட்ஜஸ்ட் மாடிரா…. மவனே என மனம் எக்களித்தது.

செட்டியில் அமர்ந்து சுவரை பார்த்தான். எல்.டபிள்யூ.டி, செய்தி வாசித்தது. பெருகி வரும் சாலை விபத்தை தவிர்க்க, அரசு புது முறை ஒன்றை பரிட்ச்சார்ததமாக இன்று அறிமுகம் செய்துள்ளது. டிரைவர்களின் அஜாக்கிரதையே 70 சதவிகித விபத்துக்கு காரணம் என ஆய்வு சொன்னதால், டிரைவர்களின் கவனம் செயற்கையாய் உருவாக்க, 3டி புரோஷேக்‌ஷன் மூலம் சாலைகளில் வாகன பிம்பங்களை ஒளி பரப்புவது எனும் இத்திட்டத்தை பிரதமர் கொடி அசைத்து திறந்து வைத்தார். அதாவது இந்த வாகன பிம்பங்கள் சாலையில் உங்களோடு பயணிக்கும், சில நேரம் உங்களை உரசுவது போல் அருகில் வரும், இன்னும் சில நேரங்களில் பிம்ப வாகனத்தின் ஓட்டுனரோ, அல்லது பயணியோ உங்களை பார்த்து கையசைப்பார். இதனால் பயணிகள் சாலையில் அலர்ட்டாய் இருக்க உதவும்.

இதை வன்மையாக கண்டித்த எதிர்கட்சி தலைவர், நாட்டையே ஆட்டை போடும் இந்த குடும்ப கட்சியின் கும்மாங்குத்து இது. இதை வன்மையாக கண்டிப்பதோடு எங்கள் கட்சியினர் சட்டசபையை விட்டு வெளி நடப்பு செய்வதாக அறிவித்துள்ளார்.

கெவின் தன் வாட்சின் நேரம் சரி பார்த்தான். 10:55 என துல்லியமாக தெரிந்த டிஸ்பிளேயின்

கீழே… தேதி இப்படி இருந்தது. 14.09.2078

பின் குறிப்பு:

எதிர்காலம் எப்படி இருக்கும் என கற்பனை செய்யும் சுதந்திரம் நமக்கு உண்டு.

* ஹைபிரிட் கார், கரோலா, கேம்ரி என மாடலுக்கு பெயர் வைக்கும் டயோட்டா கேப்பிரிக்கா என வைக்கலாமா....

* LCD, LED என புதுசு புதுசாய் கண்டுபிடிப்பவர்கள், LWD (LIQUID WALL DISPLAY) என ஒரு புது தொழில் நுட்பம் கண்டுபிடிக்காமலா போவார்கள்.

* வாசனை திரவியத்தில் நுண் ஊக்கப் பொருள் கலக்கும் அபாயம் உண்டு.

* 3டி டெக்னாலஜியில் சாலை விபத்தை இப்படி தடுக்கமுடியுமா.

* அப்பவும் அனிவர்சரி மறக்கும் ஆண் மந்தப் புத்தியை மாற்ற முடியாதோ.

உங்கள் உள்ளங்கையில் குட்டிச் சாத்தான் !!!

ஆச்சி : ….. கருப்பு மைய உள்ளங்கையில தேச்சு, குட்டிச் சாத்தான கொண்டு வர்றதா. ரொம்ப டேஞ்சரான டெக்னிக்காச்சேடா படுக்காளி.

(பக…பக… வென படுக்காளி சிரிக்க, அவனை முறைத்தவாறு ஆச்சி தொடர்ந்தார்) அதுக்கு ஏண்டா, அஞ்சு ஹார்ஸ் பவர் மோட்டார முழுங்கின மாதிரி சிரிக்கிற.

படுக்காளி : இல்ல ஆச்சி, தலைப்ப மட்டும் பார்த்துட்டு தப்பு தப்பா செஞ்ச தாமோதரன் சார் கதை ஞாபகத்துக்கு வந்திச்சி அதான் சிரிச்சேன்.

ஆச்சி : 'சேலை என்ன விலைன்னாளாம் சிங்கப்பூர்க்காரி, அவளுக்கு காஞ்சிவரத்துக்கு டிக்கெட் கொடுத்தானாம் கோவிந்த சாமிங்கிற' மாதிரி. அவல நினைச்சுக்கிட்டு உரல இடிக்கிறேடா. முதல்ல அந்த தலைப்ப மட்டும் பார்த்துட்டு தப்பு தப்பா செஞ்ச தாமோதரன் சார் கதைய சொல்லு கேப்போம்.

படுக்காளி : மதுரை தமுக்கம் பக்கத்துல கமுக்கமா ஒரு பள்ளிக் கூடம், அதுல தாமோதரன் சார்ன்னு ஒரு கணக்கு வாத்தியார். நம்மள்ல நிறைய பேரு நியூஸ் பேப்பர்ல வெறுமனே ஹெட்லைன்ஸ் மட்டும் வாசிச்சுட்டு உள்ள வாசிக்காம போயிறுவோம்ல, அது மாதிரி டெய்லி நீயூஸ் வாசிச்சுட்டு வாசிச்சுட்டு போயிருவாராம் அந்த சார்ரு.

ஒரு நாள் என்ன ஆச்சு, ஏதோ ஒரு நீயூஸ் வாசிச்சுட்டு, கிளாஸ்க்கு போயி டெஸ்ட் போட்டுட்டு எல்லோருக்கும் முட்டை மார்க் போட்டாராம். யாருக்கும் ஒண்ணும் புரியல, ஹெட்மாஸ்டர் அவர்கிட்ட போயி, ஏன் சார் இப்படின்னு கேட்டாராம். அதுக்கு அவரு,

"சார் உங்களுக்கு விசயமே தெரியாதா, நம்ம தமிழக முதல்வர் சொல்லியிருக்காரு, இதுவரைக்கும் இலவசமா டிவி கொடுத்தோம், விவசாய நிலம் கொடுத்தோம். ஆனா இன்னியில இருந்து வாரத்துக்கு அஞ்சு நாளும் பள்ளிகளிலே முட்டை போடுவோம்ன்னு….. கவர்மெண்ட் சொன்னா கேக்கணும்ல சார்ன்னாராம்"

ஆடிப்போன ஹெட்மாஸ்டர், அப்புறமாத்தான் சொன்னாராம் அது முட்டை மார்க் இல்லை சார், சத்துணவுல போடுற, கோழி முட்டைன்னு.

ஆச்சி : கதை நல்லாத்தான் இருக்கு, இது என்ன உன் சொந்த சரக்கு மாதிரி இருக்கு. ம்….. என்னத்தடா செய்யுறது, குட்டிச் சாத்தான், உள்ளங்கைன்னவுடன நமக்கு மனசுல கருப்பு மையும் வெத்தலையுந்தான தோணுது,

படுக்காளி : 1984ல ஒரு சினிமா வந்துச்சே, ‘மை டியர் குட்டிச் சாத்தான் - 3டி’

ஆச்சி : அடேயப்பா, அட்டகாசமான சினிமாடா. அதத்தான் நீ சொல்ல வந்தியா. நம்ம சேர தேசத்து அப்பச்சன், அவர் பாட்டிக்கிட்ட கேட்ட மாயாவி, சாத்தான் அப்படிங்கிற மாயாஜால கதைய சினிமாவா எடுத்தாரு. சூப்பர்…. அந்த நெருப்பு அம்பு நம்ம மேலயே வர்றா மாதிரி இருக்குமே…ஐஸ் கிரிம் நம்ம கண்ணு முன்னால ஒழுகுமே… பிரமாதம். எப்படிறா செய்யுறாங்க இத.

படுக்காளி : அது பல்பிரிச் எபக்ட்ட்ன்னு ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. இன்னொரு வகையில சொல்லணும்னா, நம்ம கண்ணோட ஒரு வகை கோளாறு. இடது கண்ணுல டார்க்கா (கருப்பா) ஒரு கண்ணாடியும் வலது கண்ணுல கொஞ்சம் கம்மியுமா கருப்பு போட்டுட்டா, ஏதோ ரெண்டு மூணு லேயர்ல இருக்கிறா மாதிரி நமக்கு தெரியும்.

ரெண்டு காமிராவ ஒரே நேரத்துல வைச்சு, படம் எடுத்துட்டு, அப்புறமா லேப்ல வந்து ரெண்டு முதல் 8 லேயர் வர்றா மாதிரி பிராசஸ் பண்ணிட்டா, நமக்கு இந்த 3டி எபக்ட் கிடைச்சுறும். ஆனா இந்த டெக்னாலஜி ரொம்ப காஸ்ட்லி. ஏன் நம்ம எந்திரன் படத்துக்கு கூட முடியுமான்னு பார்த்துட்டு அப்புறமா செலவ நினைச்சு உட்டுட்டாங்களாம்.

ஆச்சி : சரி இப்ப உள்ளங்கையிலங்கிறியே அதுக்கென்ன அர்த்தம்.

படுக்காளி : முதன் முதலா, 3டி ஹேண்டி கேம் நம்ம பானோசோனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்காங்க. அட்டகாசமா இருக்குது. நம்ம GITEX எக்ஸிபிஷன்ல அத நேரில பார்த்து, அப்படியே அசந்து போயிட்டேன் ஆச்சி. போதாக்குறைக்கு இதுல HD குவாலிட்டி

வேற. அப்படியே அச்சு குண்டா அசத்தலா இருக்குது. விலையும் பரவாயில்ல, 1400$ அவ்வளவுதான். வளர்ந்து வர்ற தொழில் நுட்பம் ஆச்சரியமா இருக்குது.

ஆச்சி : அடப் போடா… 3டி நல்லா இருந்தாலும் ஒரு கண்ணாடிய போட்டுகிட்டு பார்க்கிறதுக்கு அத்தனை சுளுவா இல்லடா. நம்ம செல்லாத்தா பாட்டி சொல்லுச்சு, கலங்கின கண்ணாடி தொட்டி வழியா பாக்கிற மாதிரியே இருக்குதுன்னு….

படுக்காளி : அதுக்கும் நியூஸ் இருக்குது ஆச்சி, தோஷிபா கம்பெனி கண்ணாடி இல்லாமலேயே 3டி டிவிய சின்ன ஸ்கிரின்ல வெற்றிகரமா செஞ்சுறுச்சு. பெரிய சைசுக்கும், விலை குறைக்கிறதுக்கும் தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. வந்துரும் ஆச்சி, இன்னொரு வருசத்துல அதுவும் வந்துரும்.

ஆச்சி : Full HD, 65” LED ஸ்கிரின்னு ஏற்கனவே பட்டைய கிளப்பிட்டாங்க. இப்ப 3டியும் வந்திருச்சுன்னா, தியேட்டர் போய் யாரு படம் பார்ப்பாங்கடா.

படுக்காளி : மாற்றம் ஒன்று தானே மாறாதது ஆச்சி.

போதி மரம் (சிறுகதை)

‘லுக் டூட்ஸ்… அங்கிளும் ஆன்டியும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வர்றாங்க, நிச்சயம் டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க இல்ல, தப்பு செஞ்சுட்டுத்தான் மாட்டிக்கிட்டிருப்பாங்க’ நக்கல் குரலில் அந்த இளைஞன் சொல்ல கூட இருந்த நால்வரும் உரக்க சிரித்தனர்.

அங்கிள் ஆன்டி என அழைக்கப்பட்ட மகாதேவனும் அவர் மனைவியும் அமைதியாய் தளர் நடையில் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஓரத்தில் இருந்த சிமிண்ட் பலகையில் உட்கார்ட்ந்தனர். மழை பெய்து ஓய்ந்திருந்த அந்த முன்னிரவு அமைதியாய் இருந்தது. காற்றுக்கு ஈரத்தில் ஒப்பனை. அடர்த்தியாய் குளிர்ந்ததாய் எதிர்ப்படுபவர் எல்லோரையும் அது வரவேற்றது.


இடுப்பில் கால் சட்டை இருக்க வேண்டிய இடத்திலிருந்து சில செண்டிமீட்டர் கீழே, பார்ப்பவர் பதைபதைத்து ஐயோ கீழே விழுந்துருமோ என அஞ்சும் வகையில் பேண்ட் அணிந்திருந்த கூல் டூட் சொன்னான் ‘மாமு! கிரிமினல்ஸ் யாரு, நம்ம மாதிரி நல்லவன் யாருன்னு இப்பல்லாம் கண்டுபிடிக்கவே முடியுறதில்லடா…. பட்டையும் கொட்டையும் போட்டுட்டு மனுசன கூட போட்டு தள்ளுறாங்க’ மீண்டும் நண்பர் குழாம் இடி இடி என சிரித்தது.


பூனை முடி மீசை அணிந்து, கன்னத்து சதையை பருக்களுக்கு குத்தகை விட்டிருந்த இன்னொடு இளைஞன் கையில் மினுங்கும் சாவிக் கொத்துடன் ஏராளமான சாவிகளுடன் கையில் வைத்து சுற்றிக் கொண்டிருந்தான். விர்.. விர்… என சுத்தும் சத்தம் அவனுக்கு கிறக்கம் தந்தது, அதை லாவகமாக இன்னும் விசையுடன் சுற்றினான். அருகிலிருந்தவன் சொன்னான் ‘ஏண்டா டுபுக்கு, இந்த ஊருல உள்ள எல்லா வீட்டுக்கும் சாவி உன்கிட்ட இருக்கு போல. பார்த்து சுத்துறா. ’ மீண்டும் சிரிப்பின் அலை.

நால்வரில் ஒருவன் ’ஏண்டா, எங்ககிட்ட சொல்லாம, சைடு பிஸ்னசா பூட்டுக்கு சாவி போடுறயா’ விஷமமாக சிரித்து கண்ணடித்தான். மீண்டும் சிரிப்பின் அலை. அந்த கேலியின் இன்னொரு அனர்த்தம் விகாரமானது. தாமதாய் புரிந்தவர்கள் கூட இரண்டாவது முறையாய் சிரித்தார்கள். இப்போது அது அடங்க சற்று நேரமாகியது. மகாதேவனும் அவர் மனைவியும் அந்தகாரத்தை வெறித்த வாறு அமைதியில் இருந்தனர். இந்த சிரிப்பும் கொண்டாட்டமும் அவர்களை தாக்கவே இல்லை. கேலிக்கு உள்ளான சாவி சுழற்றுபவன் லேசாய் வெட்கப்பட்டான், அந்த ஒரு நொடி கவன சிதைவில் கையில் சுழன்றிருந்த சாவிக் கொத்து துள்ளி காற்றில் பறந்து மகாதேவன் முகம் நோக்கி சென்றது. மூக்கு கண்ணாடியில் பட்டு வலது கண் பகுதியில் கண்ணாடி சில்லை உடைத்து விட்டு அவர் காலடியில் விழுந்தது.


மகாதேவன் சட்டென அதிர்ச்சியுடன் உடல் குலுக்கினார். மெதுவாக கவனமாக கண்ணாடி கழற்றினார். மனைவி திரும்பி அவரின் கண்ணையும் தலையையும் பார்த்தார். இடுப்பு சேலையில் மடிப்பில் இருந்த கைக்குட்டையை எடுத்து அவர் கண்களின் இமைகளில் இருந்த கண்ணாடி துண்டுகளை கவனமாக எடுத்தார். சற்றே உடல் வளைத்து அந்த கைக்குட்டையை உதறி மீண்டும் ஒரு முறை கணவனை பார்த்து விட்டு, காதோரம் இருந்த கண்ணாடி துண்டை விலக்கினார். மகாதேவன் கண்ணாடியை கழற்றி கீழே இருந்த துணிப்பைக்குள் வைத்து, உடல் தளர்த்தி பின் சரிந்து அமர்ந்தார்.

அங்கு மௌனம். இரவு சுவர்கோழிகள் சத்தம் காதில் அறைந்து இறைந்தது. நண்பர்கள் இப்போது அமைதியாய் இருந்தனர். அவர்களுக்கு நிகழ்ச்சியின் தீவிரம் புரிந்தது. அமைதியாய் எதுவும் சொல்லாத அந்த தம்பதியை புரியவில்லை. ‘ஓடிறாலாம்டா… ‘ ‘சாவி எடுத்துக்கோடா’ ‘சாரி கேட்டுரு’ இப்படி பலவிதமான ரகசிய சம்பாஷனைகள். ஒருவன் மட்டும் நகர்ந்து மகாதேவன் அருகில் வந்தான்.

‘சாரி….’ வார்த்தைகள் பாதியும் பலவீனமாகவும் வர, மகாதேவன் நிமிர்ந்து பார்த்து பின் குனிந்து அந்த சாவி கொத்தை எடுத்து நீட்டினார். தயக்கமாய் ஒரடி முன்னால் நகர்ந்து சாவி வாங்கிக் கொண்டே ‘தெரியாம பட்டுருச்சு, மன்னிச்சுக்கோங்க அங்கிள்’ எந்த உணர்ச்சியும் இல்லாது அசைவின்றி மகாதேவன் இருந்தார். அந்த பெண்மணியும் அங்கனமே. மீதமுள்ள நண்பர்கள் நகர்ந்து அவர்கள் அருகில் வந்தனர்.

ஆழமாய் அவர்களை ஊடுருவி பார்த்து மகாதேவன் ‘ம்… தெரியும் தெரியாமத்தான் செய்யுறீங்க. செஞ்சு முடிச்ச பின்னால் தான் அதனோட தாக்கம் தெரியுது’. அமைதியாய் அவர் அருகில் இருந்த மனைவி விக்கி குலுங்கி அழுதார். அழுது களைத்திருந்த கண்கள் கண்ணீர் இல்லை என அடம் பிடித்தது.

‘சார், இவ்வளவு நடந்த பின்னாலும் நீங்க அமைதியா இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு சார். எதுவும் பெரிய பிரச்சனையா’. மகாதேவன் தொடர்ந்தார் ‘நீங்க கிண்டலும் கேலியும் செஞ்சது என்ன மட்டம் தட்ட இல்ல. உங்களுக்கு ஜாலியா இருக்கிறதுக்கு மட்டுந்தான். அது புரிஞ்சதால தான் பேசாம இருந்தேன். இந்த வயசு அப்படி, உச்ச கட்டம் சந்தோசம் வேணும், மகிழ்ச்சி வேணும். கூட இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் விட இன்னும் அதிகமா கமெண்ட் அடிச்சு, சிரிப்ப வரவழைக்கணும். அது தான் அவ்வளவு தான் நோக்கம்.

எனக்கும் உங்க வயசுல பையன் இருக்கான். போன வாரத்துல இதே மாதிரி ஃப்ரெண்ட்ஸ் கூட தெரு முனையில கமெண்ட் அடிச்சுக்கிட்டு இருந்தான். இங்க நீங்க எங்கள பண்ணுனது மாதிரி அங்க ஒரு பொண்ணு. அவ பயந்து போயி கவனிக்காம பின்னால நகர சாக்கடைல விழுந்து தலைல அடி பட்டு செத்து போயிட்டா. ஈவ் டிஸிங் கேசு, அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

ஒரு நொடி, ஒரு செயல், நாலு இளைஞர்களோட வாழ்க்கைய அவங்க குடும்பத்தோட வாழ்க்கைய, அந்த பொண்ணு, அவங்க குடும்பத்தோட வாழ்க்கைய புரட்டி போட்டுருச்சு. வாழ்க்கையவே தடம் மாற வைச்சுருச்சு.

அந்த பெண், இன்னும் குலுங்கி குலுங்கி அழ, இருமல் தொண்டையை அடைத்தது. நெஞ்சை பிடித்தவாறு லொக் லொக் என இருமினார். மகாதேவன் நகர்ந்து கீழ் இருந்த பையில் தேடி, தண்ணீர் பாட்டில் எடுத்து அவருக்கு தந்தார். இருமியபடியே, வேண்டாம் என்பதாய் அந்த பெண்மணி சைகை காட்ட. தொண்ட டிரையாயிருக்கு கொஞ்சம் குடி சரியாயிரும் என வற்புறுத்தினார். இத்தகைய சூழலிலும் தண்ணீர் தந்த அந்த செயல் வாழ்வின் ஆதாரமாய் அவர்களுக்கு தோன்றியது. மனித கடமைகள், குடும்பத்தலைவன் பொருப்பு என வாழ்க்கை நகரும் சுழற்ச்சி புரிந்தது.

இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது அல்ல காதல், தளர்ந்த போது தண்ணீர் கொடுப்பதிலேயே காதல் இருப்பதாய் அந்த இளைஞர்களுக்கு பட்டது. தனக்கென மகிழ்ச்சி தேடும் இளமைப்பருவம் தாண்டி, வாழ்வின் கடமைகளும் அதன் பரிமாணங்களும் அங்கே வார்த்தையாய் சொல்லப் படாவிட்டாலும் அவர்களுக்கு புரிந்தது. அந்த பேருந்து நிலையம் அவர்களுக்கு போதி மரமானது.

மழை மேகம் பரவலாய் மூடியிருந்த வானத்தை ஏமாற்றி ஒற்றையாய் மின்னிய நட்சத்திரம் கண் சிமிட்டியது. நிலா பளிரென ஒளி சிந்தியது.

உணர்வெனும் நீரோட்டம்...

எட்டயபுரத்து முண்டாசுக்கவி பாரதி, தமிழ்த்தாயின் அதிசயக் குழந்தை.

வலிமையான வார்த்தைகளை கோர்த்து வாசிப்பவர் மனதில் புத்துணர்ச்சியூட்டுவான். அது மட்டுமா, ஆழ்ந்த கருத்துச் செறிவுகளையும் செதுக்கி வைப்பதால், அவனை மகாகவி என நாம் கொண்டாடுகிறோம்.
அவனது ஒரு பாடலில் தத்துவ சிந்தனை மேலோங்கி, கேள்விகளால் நம்மை உலுக்கி எடுப்பான், உலக விசயங்களை எல்லாம் மூன்று மூன்றாக பகுத்து ஒரு பா புனைந்திருப்பான்.
உலக வாழ்க்கை என்பது என்ன. நாம் பார்ப்பது, பின்னர் நம் சிந்தை அல்லது அறிவு இது பற்றிய சிந்தனைகளை விரிவாய் வினவும் பாடலே அது.

பார்வையின் பரிமாணம் சொல்லும் போது, நம் பார்வையில் விரியும் காட்சிகளை சொல்லும் போது, மொத்தம் மூன்றே மூன்று பிரிவு தான். அவை நிற்பது, நடப்பது பறப்பது என்பான்.
அதே பாடலில் அதே மூன்று பிரிவுகளில், அறிவை சேர்க்கும் முறை பற்றி கூறும்போது.

கற்பது, கேட்பது, கருதுவது என்பான்.
அவ்வளவுதாங்க நம் அறிவு ஏற்பட்டது இந்த மூன்றே முறைகள் தான். நம்ம அறிவு கூட்டணும்னாலும் இந்த மூன்று வழிகள்தான்.
மாஞ்சு மாஞ்சு புத்தகம் படிச்சா மட்டும் போதாது, ஓடி ஓடி அடுத்தவர்கிட்ட பேசுனா மட்டும் போதாது, தனியாக இருந்து தகவல்களை உள்வாங்கி இதுதானா இப்படித்தான் இருக்குமோ என கேள்விகள் கேட்டு ஆலோசிப்பதும் பின் நாமாக ஒரு முடிவு வருவதும் கருதுவது என கொள்ளலாம். கருதுவதும் அறிவுக்கு மிக முக்கியம்.
அப்படி கருதிய ஒரு சிந்தனையை சுருதி சேர்ப்பதே இப்பதிவு. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தற்செயலாய் பார்த்தபோது நேர்ந்தது.

பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு, ஆண்டு வந்த சிற்றரசன் நம் கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் உச்சகாலை பூஜையின் அதே நேரத்தில் அரண்மனையிலும் பூஜை செய்வது அவன் வழக்கம். பூஜையின் நேரம் அறிய திருச்செந்தூர் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி வரை 40 கல் தொலைவிலும் வரிசையாய் மணி மண்டபங்கள் கட்டி, மணி ஒலிக்கச் செய்து, கோவிலில் பூஜை செய்யும் அதே வேளையில் அரண்மனையிலும் பூஜை செய்ததாக சரித்திரம் நமக்கு சொல்கிறது.
சிறு பிள்ளையாய் நான் இருந்த போது, இதென்ன வேலை மெனக்கெட்ட வேலை. இது அவசியமா, கோவிலில் நடக்கும் அதே நேரத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என என்ன கணக்கு. எத்தனை பண/ நேர விரயம் என நினைத்திருக்கிறேன். இன்னொரு பரிமாணத்தில் ஹூம்…..பாவம் தகவல் தொடர்பில் வேறு வழியில்லை. புராண காலத்தில் பூறாவை நம்பித்தானே போஸ்டல் டிப்பார்ட்மெண்டே இருந்தது. சேதி சொல்ல வேற வழி இல்லை. இன்றைய தொழில் நுட்பத்தில் ஒரு வீடியோ கான்பிரன்சிங்கில் ஒரு எஸ்.எம்.எஸ் சில் கூட முடித்து விடலாமே என தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்தும் சிந்தித்து இருக்கிறேன்.

ஆனால் இன்று பளிச்சென்று இன்னொரு பரிமாணத்தில் சிந்தனை பயணித்தது.

ஆண்டவனுக்கு பூஜை, அரசன் பூஜை செய்கிறான் எனும்போது, நாட்டு மக்கள் அத்தனை பேரும் என்ன செய்வார்கள். எண்ணத்தால் ஒருங்கிணைவார்கள் அல்லவா. அது நிச்சயம். மணி ஒலி கேட்ட உடனே மனதில் இந்த சிந்தனை எழுந்திருக்கும். ஒரு சிலர் பூஜையும் செய்யலாம். அதாவது செயலிலும் ஒருங்கிணைந்திருக்கலாம்.

ஒரு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே சிந்தனையில் ஒரே செயலில் கொண்டு வரும் அற்புதம் அல்லவா இங்கு நிகழ்கிறது. ஒரு உணர்வு / இறை உணர்வு நாட்டின் அத்தனை குடிகளிடமும் நீரோடை போல் இணைவது ஒரு மந்திரம் போல் எனக்கு படுகிறது. அது ஒற்றுமை வளர்க்கும், நாட்டுப்பற்றை ஊற வைக்கும்.

இச்செய்கையின் வலிமை புரிந்ததால், இதை இன்று நாம் ஏன் செய்ய முடியாது என கேள்வி கேட்கிறது.

இப்படி வைத்துக் கொள்ளலாமே, வருடத்தில் ஒரு நாள், ஒரே நேரத்தில், ஒரே உணர்வில் காலை பத்து மணிக்கு குழுமி ஒன்றாகிறோம் என வைத்துக் கொள்வோம்,
நம் தேசத்தின் எல்லா கொடி மரங்களிலும் தேசிய கொடி ஏற்றப்படட்டும். நம் நாட்டின் எல்லா குடிமகன்களும் அக்கொடியின் கீழ் ஒன்று கூடுவார்கள். தலை வணங்கி கொடி மரியாதை செய்து எல்லோரும் மௌனமாய் இருப்பார்கள். சரியாக 10.05 க்கு தேசிய கீதம் ஒலிக்கும். பின்னர் 10.08 க்கு அனைவரும் கலைந்து செல்வார்கள். என்று நாம் ஏன் செய்யக் கூடாது.
இது போல் நம் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு நடக்குமா. ஒரு தேசமே, ஒரே சிந்தனையில் ஒரே செயலில் ஈடுபடுமா.
இங்கு கூறுவதில் செலவு இல்லை, நேர விரயம் இல்லை. ஆனால் விளைவு பிரமாண்டமான ஆக்க சக்தி உண்டாக்கும்.
அதிகமில்லை ஒரிறு நிமிடங்கள் இப்படி மனங்களும் மனிதர்களும் இணைவார்களா, அப்படி நடந்தால் மகத்தான மனப் பகிர்வு இருக்கும் என நம்புகிறேன்.

செரோக்கி பழங்குடியினரின்...வாழ்க்கை ரகசியம்!!!

தென் கிழக்கு அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பழங்குடியின மக்களே செரோக்கி. மலை வாழ் மக்கள்! அல்லது குகையின் மைந்தர்கள் !! என குறிப்பதே செரோக்கி எனும் சொற்பதம். அவர்கள் பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருப்பதை சரித்திரம் நமக்கு குறிப்பிடுகிறது.

அவர்களிடையே இருந்த ஒரு பழக்கம் மிகவும் சுவாரசியமானது. அதையே இங்கு பதிவிடுகிறேன்.

குழந்தைக‌ள் வ‌ளர்ந்து அவ‌ர்க‌ள் ம‌னித‌ர்க‌ள், என‌ அறிவிப்ப‌த‌ற்கு அவ‌ர்க‌ளிடையே ஒரு விசித்திர‌ ப‌ழ‌க்க‌ம் இருந்த‌து.

அக்குழ‌ந்தையின் த‌ந்தை அல்ல‌து காவ‌ல‌ர் அக்குழ‌ந்தையை அல‌ங்க‌ரித்து காட்டிற்குள் அழைத்து சென்று க‌ண்க‌ளை க‌ட்டி விட்டு, இவ்வாறு கூறுவாராம்.
ம‌க‌னே! உல‌க‌ம் கொடுமையான‌து, இங்கு ச‌ர்வைவ‌ல் மிக‌ சிர‌ம‌ம். ந‌ம்மை குத்தி குத‌ற‌ வ‌ன‌ வில‌ங்குக‌ளும், ஏன் ம‌னித‌ர்க‌ளும் கூட‌ உண்டு. ம‌ர‌ண‌ம் என‌ ஒரு முடிவும் உண்டு. நாம் வாழ‌.... ந‌ம் முய‌ற்சியும்!!! ந‌ம‌க்கு மேல் ஒரு ச‌க்தியும் உண்டு. இந்த‌ ம‌னித‌ வாழ்வின் ப‌ரிமாண‌ம் புரிந்து கொள்ள‌ இப்போது நீ ஒரு ப‌ரிட்சை எழுத‌ப் போகிறாய்.
உன் க‌ண்க‌ளை க‌ட்டி, உன்னை இந்த‌ ந‌டுகாட்டில் சூரிய அஸ்தமனத்தில் த‌னியாய் விட்டு விடுவேன். எந்த‌ அபாய‌மும் இல்லாம‌ல் நாளை சூரியன் உதிக்கும் போது நீ பிழைத்து இருந்தால் உன் முக‌த்தை சூரிய‌ ஒளி தாக்கும் போது நீ க‌ண் க‌ட்டியிருக்கும் துணியை அக‌ற்ற‌லாம்.

இந்த‌ சோத‌னையின் போது நீ இர‌ண்டு விச‌ய‌ங்க‌ளை செய்ய‌க் கூடாது. உத‌வி என்றோ, வ‌லி என்றோ நீ க‌த்த‌க் கூடாது, ம‌ற்ற‌து.... நீ பிழைத்து வ‌ந்தால் இங்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ன‌ யாருக்கும் சொல்ல‌ கூடாது. அது ர‌க‌சிய‌ம். நீ சாகும் வ‌ரை உன்னுள் புதைந்தே இருக்க‌ வேண்டும். இதுதான் மனித வாழ்வு எனும் வேள்வியின் பாதை.
இந்த கோட்பாடுகள் வடிவமைத்த ஒரு நிகழ்வை இப்போது பார்ப்போமே...

இது போல்... மனிதன் ஆக, பரிட்சை எழுதிய ஒரு மழலையின் கூடவே நாமும் சென்று, அங்கு நடப்பதை பார்ப்போமே. அன்று விடிகாலையில் தொட‌ங்கி அவ‌னுக்கு வீட்டில் அல‌ங்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்டு பெற்ற தாய், ம‌ற்றும் உற‌வின‌ர்க‌ள, இந்த‌ ப‌ரிட்சைக்கு த‌யாராக்கி கொள்கின்றன‌ர்.

மாலை சூரிய‌ன் மேற்கில் ந‌க‌ர்ந்த‌தும், த‌ந்தையுட‌ன் காட்டில் ந‌ட‌க்க‌ தொட‌ங்குகிறான். அட‌ர்ந்த‌ காடு அவ‌னை வ‌ர‌வேற்கிற‌து. உய‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளும் அட‌ர்ந்த‌ புற்க‌ளும் அவ‌னை பிர‌மிப்பூட்டுகின்ற‌ன‌. ந‌டுகாடு அடைந்த‌தும் த‌ந்தையை வ‌ண‌ங்கி க‌ண் க‌ட்டி கொள்கிறான்.

தொட‌க்க‌த்தில் ப‌ய‌ம்.

காட்டு ம‌ர‌ங்க‌ளின் அசைவு, சில் வ‌ண்டின் ஓசை. அவ்வ‌ப்போது கேட்கும் சில‌ வ‌ன‌ வில‌ங்குக‌ளின் ச‌த்த‌ம். ஒரு முறை ஏதோ ஒரு வ‌ன‌வில‌ங்கின் ச‌த்த‌ம் அருகாமையில் கேட்ட‌து. அத‌னை தொட‌ர்ந்து அது தாக்க‌ப்ப‌ட்டுவ‌து போல‌வும் ஓசை கேட்ட‌து.

இது என்ன‌ பிர‌ம்மையா, தெரிய‌வில்லை. நான் உயிருட‌ன் இருக்கிறேனா. ஆம் இருப்ப‌து போல‌த்தான் உள்ள‌து. என்றால் உயிர் என்ப‌து என்ன‌, ப‌ல‌ கேள்விக‌ள் ப‌தில் கூட‌ பாதி பாதி வ‌ருகிற‌து.

இதென்ன விபரீதம். வாழ அல்லது உயிருடன் இருக்க போராட வேண்டாமா. கண்கள் அல்லது காட்சி நமக்கு ஒரு கொடை அல்லவா. எதிரிகளை காணவும் அவர் பலம் தெரியவும் வேண்டாமா. தெரிந்தே.... என்னை தாக்க அனுமதிக்கலாமா. அடர்ந்த காட்டில், விலங்குகளின் மத்தியில் என்னை தனியே இருக்க விடலாமா.... சம்மதத்துடன் இறக்க என்னை அனுமதிப்பது எப்படி..

உற‌க்க‌ம் என‌ சில‌ க‌ண‌ங்க‌ளும்... கிற‌க்க‌ம் என‌ சில‌ க‌ண‌ங்க‌ளுமாக‌... நேர‌ம் க‌ட‌ ந்த‌து. என்றாலும் சுள்ளென‌ சூரிய‌ ஒளி ப‌ட்டு க‌ன்ன‌ம் சூடான‌தும் ... ஆ!!! அட‌டே விடிந்து விட்ட‌தே. நான் உயிரோடிருக்கிறேன். இற‌க்க‌வில்லை. என‌க்கு இன்னொரு வாழ்வு இருக்கிற‌து, என‌ உற்சாக‌மாய் க‌ண்க‌ளை க‌ட்டியிருந்த‌ க‌ட்டை அவிழ்த்தான்.

எதிரில்.... த‌ந்தை ஒரு பாறையில் அம‌ர்ந்து அவ‌னையே பார்த்து கொண்டிருப்ப‌து தெரிந்த‌து.

மௌன‌ம் அங்கு க‌ன‌த்து இருந்த‌து.

தந்தை பேச‌வில்லை, ம‌க‌னும் பேச‌வில்லை. அவ‌ர்க‌ள் பார்வையிலே அர்த்த‌ம் பொதிந்து இருந்த‌து. அதாவது, தந்தையும், மகனும் கண்ணோடு கண் கொண்டு நேர் நோக்கி பார்த்த போது, அங்கு இருவருக்குமே பேச்சு வரவில்லை... அங்கு மௌனமே அவர்களின் பரிபாஷை.
அந்த‌ மௌன‌த்தின் அர்த்தம்.... மனித‌ வாழ்க்கையின் அர்த்தமாக‌ இருந்த‌து.

கண்டுபிடிக்கப்படாத எத்தனை சக்திகள் !!!

கரண்ட கண்டுபிடிச்ச தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு பள்ளியின் அறிவியல் கண்காட்சிக்கு சென்றாராம். மீடியாக்கள் வளர்ச்சியடையாத அன்றைய காலகட்டத்தில் இவர்தான் எடிசன் என எல்லோருக்கும் தெரியாததால் அவர் சாமானியனாக சென்று நோட்டமிட்டாராம்.

அப்போது ஒரு மாணவச் செல்வம் எலக்ட்ரிக் பல்ப் கருவியின் செயல்பாட்டை விளக்கும் சோதனை சாதனத்தின் அருகில் நின்று கொண்டிருந்ததாம். நம்மாளுக்கு ஒரே ஆர்வம் அச்செல்வத்தின் அருகில் சென்று எலக்ட்ரிசிட்டி என்றால் என்ன??? என்றாராம்.

செல்வம் விழித்து ஏதேதோ சொல்ல, எனக்கு விளங்கும் படியாய் எளிமையாய் சொல்லேன் என விண்ணப்பம் வைத்தாராம். செல்வத்துக்கு முடியாததால் ஆசிரியர் உதவிக்கு வந்தார், அவருக்கும் முடியவில்லை, பின்னர் பள்ளியின் முதல்வர் வந்தார்.

எடிசன் விழித்து நீங்கள் ஏதேதோ சொல்கிறீர்களே, சுற்றி வளைத்து அதன் குணங்கள் பற்றி சொல்லாமல், எளிமையாய் எலக்ட்ரிசிட்டி என்றால் என்ன,என சொல்லுங்களேன் என கேட்டார்.

அவர் ஒரு முனைவர் வேறு. அவருக்கும் முடியவில்லை.
விளக்க முடியாமல், தலை குனிந்த முனைவரிடம், எடிசன் சொன்னாராம். வருந்த வேண்டாம் நான் தான் எடிசன். உங்களை பரிசோதிக்கவோ, பரிகசிக்கவோ இந்த கேள்வி கேட்கவில்லை. எனக்கும் தெரியாது, அதற்கான விடைதான் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியாததை தெரிந்து கொள்ளலாமே எனத்தான் கேள்வி கேட்டேன். தவறியிருந்தால் மன்னியுங்கள் என்றாராம்..

நகைச்சுவையாய் சொல்லப்பட்டாலும் முதலில் கேட்ட போது, என்னது.... எடிசனுக்கே எலக்ட்ரிக் கரெண்ட் என்னன்னு தெரியாதா... என்ன கதை விடுறீங்க என கேட்க தோன்றுகிறதல்லவா. வாருங்கள் இதை சற்று ஆழமாய் பார்ப்போம்.

நேயர்கள் கூட கூகிள் போய், எலக்ட்ரிசிட்டி என்றால் என்ன???? என விளக்கம் தேடினால், குத்துமதிப்பாய் கிடைக்குமே அன்றி, சுருக்கமாய் கிடைக்காது.

கூகிள் தேடி, ஒரு குசும்பு விடை ஆங்கிலத்தில் எனக்கு கிடைத்தது, பாருங்களேன்.

Electricity is a mysterious incomprehensible entity which is invisible AND visible BOTH AT THE SAME TIME. Also, it's both matter and energy. It's a type of low-frequency radio wave which is made of protons. It is a mysterious force which looks like blue-white fire, and yet cannot be seen. It moves forward at the speed of light... yet it vibrates in the AC cord without flowing forwards at all. It's totally weightless, yet it has a small weight. When electricity flows through a light bulb's filament, it gets changed entirely into light. Yet no electricity is ever used up by the light bulb, and every bit of it flows out of the filament and back down the other wire. College textbooks are full of electricity, yet they have no electric charge! Electricity is a class of phenomena which can be stored in batteries! If you want to measure a quantity of electricity, what units should you use? Why Volts of electricity, of course. And also Coulombs of electricity, Amperes, Watts, and Joules, all at the same time. Yet "electricity" is a class of phenomena; it's a type of event. Since we can't have an AMOUNT of an event, we can't really measure the quantity of electricity at all... right?

சரி ஏன் நம்மால் விளக்க முடியவில்லை. இனிப்பு என்பதை என்ன வென்று நம்மால் உணர முடியும். திருப்பதி லட்டும் திருநெல்வேலி அல்வாவும் இனிப்புதான்.அது மட்டுமா, திருப்பதி லட்டுக்கும் திரிசூலம் லட்டுக்கும் வித்தியாசம் உண்டு. இனிப்பில் இத்தனை கிலோ என இதுவரை யூனிட்டு சொல்லவில்லை. அத‌னால் தான் திருப்ப‌தி ல‌ட்டு ந‌ல்லா இருக்குங்க‌, திரிசூல‌த்துல‌ வாங்கின‌ ல‌ட்டு ச‌கிக்க‌லைங்க‌ என்கிறோம்.

இன்னும் விளக்கமாய் சொல்ல‌ ஒரு நாயர் கதை கேளுங்கள். ஒரு ஊர்ல ஒரு நாயர் இருந்தாராம், அவருக்கு 21 பிள்ளைங்க. அனில் நாயர், சுனில் நாயர் அருந்ததி நாயர் இப்படி... நாயர்கிட்ட நாயர் எப்படின்னு கேட்டா அவர் என்ன சொல்வாரு. ஒவ்வொரு நாயருக்கும் ஒரு குணாதிசயம். அதனால தான் பார்க்கமுடியும் பார்க்க முடியாது அது ஒரு பொருள் அது ஒரு சக்தி என சருக்குகிறது.

எலக்ட்ரிசிட்டி கண்டுபிடிக்கப்பட்டு நமக்கு பயன்பாட்டுக்கு என வந்து ஒரு நூற்றாண்டு தான் ஆகிறது. இதில் கற்று கொள்ளவும், ஆராயவும் இன்னும் இருக்கிறது என்பதால் நமக்கு புரியும் வண்ணம் விளக்கம் தரும் அறிவியல் ஆய்வாளர்களின் முயற்சிசுக்கு வாழ்த்து தெரிவிப்போம்

எலக்ட்ரிசிட்டி கண்டுபிடிக்கப்படும் முன்னும் எலக்ட்ரிசிட்டி இருக்கத்தானே செய்தது.

எலக்ட்ரிசிட்டி போல், எலக்ட்ரானிக்ஸ் போல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனை சக்திகள் இருக்கின்றன. எப்பய்யா கண்டுபிடிப்பீங்க.....

ராவணன் – திரை விமர்சனம்

‘கோபம் கூட அன்பின் அம்சம்’
மிகவும் பிடித்த இயக்குனர் என்றதால் இப்படி பொத்துகிட்டு வந்திருச்சு. என்ன செய்ய பூசி மெழுகி உணர்ச்சிய மறைக்க முடியல.... சாரி, மணி சார்.


தமிழ் சினிமாவை மாற்றி அமைத்த இயக்குனர்களில் மணி ரத்னம் ஒருவர். அவரது பகல் நிலவு படத்தில் பளீர் என காமெரா, கவிதை போல் மிளிர்ந்தது, இயல்பான நடிப்பு, இசை துல்லியம் போல் காட்சியின் எடிட்டிங் என புது அனுபவம் தந்தது. அக்னி நட்சத்திரம் படம் A சென்டர் B C சென்டர் என்ற பாகுபாடுகளை உடைத்து எல்லோரையும் ரசிக்க வைத்தது.

நாயகன், அஞ்சலி, தளபதி, ரோஜா பம்பாய் என அடுத்தது அதிரடியாய் முன்னேற்ற்றம் தர நாமும் ரசித்து மகிழ்ந்தோம்.

நீண்ட நாட்கள் உழைத்து அவர் எடுத்த ராவணன் ரீலீஸ் என்றதும் எக்ச்பெக்டேஷுன் எகிறித்தான் போச்சு . ஆனால் எதிர்பார்ப்பை ஈடு கட்டாமல் பலவீனமா பரிதாவமா பல் இளிக்குது ராவணன்.

இது இராமாயண கதை என எல்லோரும் சொல்ல, மணிரத்னம் மட்டும் பிடிவாதமா இல்லவே இல்லை, ஒரு சில அம்சங்கள் மட்டும் இருக்கலாம் என சப்பை கட்டு அறிக்கை எல்லாம் விட்டு கேலி கூத்தாய் இருக்குது. இதில போதாகுறைக்கு 'படம் தொடங்கும் போது இக்கதையில் வரும் பெயர்கள் யாவரையும் குறிபிடுவன அல்ல என காமெடி கிச்சு முச்சு வேறு உபரியாய்.
ஸ்டெப் பிரதர்ஸ்குள்ள சண்டை எனும் ஒற்றை வரி கதை தானே அக்னி நட்சத்திரம். இதயத்தை திருடாதே என்ன, சாவு நிச்சயம் ஆன இருவருக்கு காதல் அவ்வளவு தானே.

மிஸ்டர் டைரக்டர் நேரடியாய் கேட்கிறேன், இது போல் வேறு ஒன் லைனெர் இல்லாமலா போனது. அடிச்சு புடிச்சு காப்பி தான் அடிக்கணுமுன்னு என்ன இருக்கு. இப்ப வேற ராமாயணம் மகாபாரதம் முடிஞ்சு போச்சு. இனி சீவக சிந்தாமணிய சீண்டாம சிம்ப்ளா யோசிங்க சார்.
ஏன் இந்த இரவல் எண்ணைகள்.

உங்கள் தனித்துவம் என்ன. ஒற்றை சொல் வசனங்கள். தங்கள் முந்தைய திரை படத்தில், காதல் வெளிபடுத்தும் நாயகன் நாயகியின் வசனம் பாருங்கள் கீழே

அவன் : நெஞ்செல்லாம் அடிச்சிக்குது !!!
அவள் : ஏன் .....

அவன் : தெரியல .....

அவள் : எனக்கும்

அவன் : நிசமா ???

வசனம் எல்லாம் இல்லாம கவிதை போல் எனக்கு மனித உணர்வுகளை படம் பிடிக்க தெரியும் அது தானே உங்கள் பலம்.

மௌன ராகத்தில் நாலு பேர பின்னால நடக்க விட்டு டக் டக்குனு கார்த்திக் நடந்து அறிமுகம் ஆவர். அப்படி ஒரு அப்பில் இருந்துச்சு. ஆஹா இது தான் ஹீரோ என தோணுச்சு. அதுக்கபுறம் கமல் நாயகன்ல நடந்தார், அப்புறம் ரஜினி இப்ப நம்ம குருவி. இப்படி இருவது வருசத்துக்கு முந்தி, காலம் கடந்த தங்கள் ஐடியாஸ் எங்கே.

இதயத்தை திருடாதே வில் ஓடிபோலாமா என நக்கல் நையாண்டி செய்யும் துரு துருப்பு இளமை துள்ளல் எல்லாம் எங்கே. பெண் பார்க்க வந்தவனை வழி மறித்து உடம்புக்கு உண்ணும் குறை இல்லையே என கிழவிகள் கேட்க, அவரை அலேகாய் தூக்கும் இனிமை எங்கே, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜ என கனவுலக்கு சென்ற காமெரா எங்கே.

இதயத்தை திருடாதே படத்தில் ஒரு சவாலான காட்சி. குளிரும் ஊட்டி, பூட்டிய ஒரு நீண்ட அறையில் ஒரு ஓரத்தில் நாயகன் திரும்பி நின்று கொண்டு இருக்கிறான், மறு முனையில் வந்தவர் கதவு திறந்து ஏதும் பேசாமல் நிற்க, திறந்த கதவு வழியே நுழைந்த குளிர் காற்று பட்டு, கூப்பிடாமலே நாயகன் திரும்பி பார்கிறான். வசனங்கள் இல்லாமல் காட்சியாய் இதை புரிய வைப்பது எப்படி. செய்திருப்பார் நம்ம மணி. அது தான் மணி.
ராவணனிலும் அது போல் ஒரு காட்சி.
லோ ஆங்கிளில் காமெரா ஜூம் ஆக தொடங்குகிறது. பிரேமில் மிதவை தெப்பத்தின் முன் விக்ரம் உட்கார்ந்திருக்கிறார். ஜூம் துவங்கிய ஓரிரு நொடியில் மிதவை தெப்பம் அவுட் ஆகி மறைகிறது. இப்பவும் ஜெர்க் எதுவும் இல்லாமல் காமெரா ஜூம். சட்டென விக்ரமும் பேடே அவுட். சட சடவென மழை.... அதிரடி படை வீரர்கள் ஓடி வருகிறார்கள். மொத்தம் 6- 8 செகண்ட் வரும் காட்சி இது.

அதாவது, சே... இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தான், இப்ப,,, இப்ப.... தான் போனான். அதிரடி படை வருவதற்கு சற்று முன் தான் விக்ரம் மிதவை தெப்பத்தில் தப்பித்து விட்டான் என்பதை வசனம் இல்லாமல் கவிதை போல் சொல்லுகிறது.

காமிரா சூப்பரு, லோககேஷுன் சூப்பரு... பிரமாதமுன்னு சொல்ல நாங்க என்ன குழந்தைகளா . இதை விட அடர்ந்த காடும் மிருகங்களும் காட்ட டிஸ்கவேரி சேனல் அனிமல் பிளனேடும் வீட்டுலேயே இருக்கு.

காட்டுக்குள் கடத்தி சென்றவனிடம் நாயகிக்கு தோன்றும் உணர்ச்சி என்ன ???? அன்பா, அக்கறையா, பாசமா, நெசமா, நிச்சயமாய் எல்லோரும் தப்பாக நினைக்கும் காதல் இல்லை என நம்புகிறேன். நம்பிகிட்டே இருந்தேன் ஆனாலும் என் நம்பிக்கையில் மண் விழ, ஒரு சண்டை கம் ஸ்பரிச உணர்ச்சியில் ஒரு பாட்டு ஒண்ணும எடுத்து ஏமாத்தி விட்டீர்களே ஐயா.

குடுத்தனம் பண்ற மனைவி, புருஷன் காரன் சொன்ன ஒரு சொல்லுக்காக (லை டிடக்டர் டெஸ்ட் செஞ்சுக்கணுமுன்னு) ரயில நிறுத்தி எவன் கூடயாவது போற மாதிரியா நம்ம கலாச்சாரம் இருக்குது. சே... சே... சேம் ஆன் யு சர்.

எங்க நம்ம ஆஸ்கர் தம்பி, வேலை செய்யாம ஒப்பி அடிச்ச சேட்டைக்காரன். பாட்டும் சரி பின்னணி இசையும் சரி எங்கையோ பக்கத்து தியட்டர் மிசிக் மாதிரியே இருக்குது.

விக்ரம், ஐஸ்வர்யா, கார்த்திக், பிரபு என ஒரு பட்டாளத்தையே வீணாக்கி விட்டிர்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.