முன்னிரவு சுமார் 7 மணி இருக்கலாம். ரிலாக்ஸ்டாக பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் எதிரில் பார்த்த காட்சியில் லேசாய் அதிர்ந்தேன், அட்ரெனிலின் கொஞ்சம் அதிகப்படியாய் சுரக்க, இரத்தம் சற்று டாப் கியரில் ஓடியது, உடல் பரபரத்தது. எச்சரிக்கை உடலெங்கும் பரவ, வண்டியை திருப்பி விடலாமா என யோசித்தேன்.
பார்த்தது இதைத்தான். சென்னை புற நகர் ஒதுக்குப் புறமான அந்த சாலையில் நிறைய மனித தலைகளும் கூட்டமும். கும்பல் கும்பலாய் ஆட்கள். சுமார் 200 பேர் இருக்கலாம்.
அடர்ந்த அமைதி அங்கு குடி கொண்டிருந்தது, சிறு சிறு குழுக்களாய் பிரிந்து குசு குசு குரலில் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்க வேண்டும், ஒருவேளை ஏதேனும் கலவரம்… தெரியவில்லை.
ஹூம், கூட்டம் பார்த்ததும் ஏன் இப்படி சிந்திக்கிறது… என்ன செய்வது, தினச் செய்திதாள்கள் புரட்டும் போது, நம்மை புரட்டி போடும் செய்திகள் தானே அதிகம். அவைகள் நமக்கு சொல்லும் சேதிகள் எல்லாம் அப்படி…. எங்கு பார்த்தாலும்… கலை…கள்ளை…. (சாரி, கொ என்பதையே முதல் எழுத்தாக கொள்ள வேண்டும்…. என்னவோ…. அதை சொல்ல விருப்பமில்லாததால்… க வோடு நிறுத்தி விட்டேன்)
என்ன இது, என்ன கூட்டம், என்னதான் நடக்கிறது என ஆரம்ப பார்வை பார்த்து கொண்டு இருக்கும் போதே, நான் ஓரளவு சூழலுக்குள் வந்து விட்டேன், திரும்பி போக இயலாத தூரத்தில் நான் வந்து விட்டேன். சரி விரைவாக கடந்து சென்று விடலாமோ எனவும் யோசிக்க… அப்படி செய்யவிடாமல் கியூரியாசிட்டி கிடுக்கிப் பிடி பிடித்து கிணிகிணிக்கிறது. அங்க என்னதான் நடக்குது என ஆர்வம், என்னை அங்கும் இங்கும் பார்வையை செலுத்த வைத்தது.
கூடியிருக்கும் மக்களின் முகங்களை பார்த்தேன், ஏறக்குறைய அனைவரின் முகங்களிலும் பரபரப்பு இல்லை, படபடப்பு இல்லை, ஒருவித அமைதி, மற்றும் ஒரு புன்னகை. அந்த புன்னகை எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. சரி எதுவும் அசம்பாவிதம் இல்லை, சந்தோசம்…. இருந்தாலும் என்னதான் நடக்கிறது. ஆர்வம், என்னை பிராண்டியது.
ஒரு தேனீர் கடையில் டீ குடிப்பதாய் சாக்கு காமித்து விட்டு, என்ன நடக்கிறது என வேவும் பார்க்கும் ஆசையில் பைக்கை ஓரம் கட்டினேன்.
அழுக்கு தேனீர் கடையில், சாக்குகளே திரைச்சீலைகள். ஓய்யாரமாய் ஒரு பாய்லர், அந்த தேனீர் கடையின் காஸ்ட்லியான இன்வெஸ்ட்மெண்ட்…. ஆணி புடுங்கிக் கொண்டதால் ஆடும் மர பெஞ்சுகளே நம் சிம்மாசனம். வியாபாரம் ஜரூராய் நடக்கிறது. கடையிலும் ஆரவாரம் இல்லை, அமைதிதான். அதிகம் பேச்சு இல்லை….
ஆழமாய் என்னருகில் தேனீர் கடையில் இருந்த ஆளை பார்க்கிறேன். மெலிந்த கருத்த சவரம் செய்யப்படாத முகம். எண்ணையை என் அருகில் கொண்டு வராதே என அடம் பிடித்த தலை. போடாத சட்டையில் தெரிந்த மார்பில் வெள்ளை ரோம புற்புதர். இடுப்பு வேட்டியை ஒரு தாயத்து இறுக்கிய அருணாக் கொடி இழுத்து பிடித்து இருந்தது.
கண்கள் மட்டும் பரபரத்து இருக்க, தலையை அடிக்கடி திருப்பி உயர்த்தி, ஒரு இருட்டு சந்தின் திசையில் பார்த்து கொண்டிருந்தார். என் பார்வையை சற்று திருப்பி அவரை விடுத்து மற்றவர்களை பார்க்க, அனைவரின் பார்வையும் அனேகமாய் அந்த இருட்டு சந்தின் மேலேயே இருக்கிறது.
சற்று நேரத்தில் ஆள் அரவம் தெரிந்தது. கால் சட்டை இன் செய்யப்படாத சட்டை போட்டு, ஒரு இளம் வயதினன் மெலிந்த தேகத்தில் விரைந்த நடையில் வந்தான். வந்தவன் நேரே என் அருகில் இருக்கும் மூத்தவர் இடம் வந்து சுற்றி முற்றும் பார்த்து விட்டு, சட்டை தூக்கி விட்டு, வயிறை ஒரு எக்கு எக்கி, பேண்ட்க்குள் இருந்து ஒரு பாட்டிலை வெளியில் எடுத்தான்.
அது கொல்கண்டா பிராந்தியின் ஒரு குவார்டர் பாட்டில். பெரிசின் முகம் மலர்ந்தது, மீசைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காவி ஏறிய பற்கள் விரிந்து காற்றோடு காரசாரமாய் பேசியது. படக்கென அந்த பாட்டிலை வாங்கி பெரிசு தன் வேட்டியை தூக்கி அதனுள் மறைத்து வைத்தார். வைத்த போது… கிளிங்…. பாட்டிலோடு பாட்டில் உரசும் சத்தம் கேட்டது… ஓஹோ.. பெரிசு இன்று பெரிய ஸ்டாக்கிஸ்ட் தான். அடடா….. மழைடா… அடமழைடா….
பாட்டிலை கொடுத்த இளையவன், மெதுவாய் நகர்ந்து ஒரு கும்பலோடு நின்று கொண்டான். அப்போது கவனிக்கும் போது அந்த கும்பலில் இருந்தவர்கள் அனைவரும்…. வெள்ளை வேட்டி கட்டி, அதே வெள்ளை நிற சட்டை போட்டு, கஞ்சி போட்ட உடுப்பில் மிடுக்காய் இருந்தனர். கறுத்து குண்டாய் ஆரவாரமாய் நின்றனர். நிற்கும் தோரணையிலேயே அவர்கள் அரசியலின் பிரிவை சார்ந்தவர் என்பது புரிந்தது.
ஒன்றும் ஒன்றும் மூன்று என என் மனம் கணக்கு கூட்டியது. உள்ளாட்சி தேர்தல், ஓட்டுக்கு நோட்டு போல, குளி….. சாரி…. குழி…..ஐய்யோ… சாரி….குலி….. ம்… அப்பப்பா…. குபி….. ஹூம்,,,, இல்ல…. குடி மக்களை குஷிப்படுத்தும் திருவிழா என்பது புரிந்தது. பாட்டில் வினியோகம் செய்யும் சடங்கு….. அப்பாடி பரவாயில்ல, பாதி கப் டீ தீரும் முன்னே மேட்டரு புரிஞ்சுருச்சு, இனி நிம்மதியா போகலாம் என பட்டதால் டீயின் சுவையில் நான் அமிழ்ந்தேன்….
அந்த சூழல் எனக்கு விசித்திரமாய் பட்டது. ஜன நாயகம் ஒரு போதையில் விலை போகிறதே என ஆற்றாமை ஒரு புறம். தினம் தினமா குடுப்பான், இப்படி ஆடிக்கும் அம்மாவாசைக்கும் கொடுக்கிறத பெரிசா ஏன் நினைக்கணும்…. என சில ஆற்றாமைகள் முட்டி மோதினாலும்…. அந்த அடித்தட்டு மக்களின் முகங்களும் சந்தோசங்களும் மனதில் மலரை விதைக்கிறது. அப்பா… என்ன ஒரு மகிழ்ச்சி, ஒரு வேளை எப்போதும் பட்டை சாராயம் அருந்துபவனை இந்த உசத்தி சரக்கு உசுப்பி விட்டதோ….
குடிப்பது என்பது ஒரு ‘ஒளித்து செய்யப் படவேண்டிய செயலாகவே’ இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது. அறிஞர் அண்ணா சொன்னது போல், குடிப்பதை பாவம் என்று கருதும் நாடு எங்கள் நாடு. குடித்தேன் என சொல்ல கூச்சப்படும் நாடு எங்கள் நாடு.
அப்படி ஒரு ஒளித்து செய்யப்பட வேண்டிய செயல் என பகுக்கப் பட்டதால் அதற்கு ஒரு கிசுகிசு போல் ஒரு மவுஸ் வந்து அந்த உணர்வுக்கு ஒரு டிப்ளோமேட்டிக் ஸ்டேடஸ் வந்து விட்டது. அழுக்கு தீரவும் களைப்பு தீரவும் குளிக்கிறோம்…. அதைப்பற்றி அகமகிழ்ந்து அக்கம் பக்கம் யாரும் பெருமை பேசுவதில்லையே……… இன்னிக்கு நான் மூணு ரவுண்டு சோப் போட்டேன்… இரண்டு தடவ ஷாம்பு போட்டு, ஜம்முன்னு ரிவர்ஸ்ல ஷேவ் பண்ணேன்… என யாரும் புளகாங்கிதம் அடைவதில்லையே..
அந்த சூழலை பார்க்கிறேன், வயது வித்தியாசம் இல்லாமல், பெரியவரும் இளவயதினரும்…. அங்கே மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அதிகம் பேசாமல், மனமும் கண்களும் பரபரத்து, மனம் வரப் போகும் போதையை எண்ணி இப்போதே மகிழ தொடங்கி விட்டது.
இந்த நிகழ்வு சில கேள்விகள் கேட்க தூண்டியது. எதற்காக குடிக்கிறார்கள்.
- 1. உடல் சோர்வு, களைப்பு, உபாதை இதிலிருந்து தற்காலிகமாக விடைபெற
- 2. மன அழுத்தம், கவலைகள் இதிலிருந்து தப்பித்து கொள்ள
- 3. பரவச, பறக்கும் ஒரு நிலை அடைய
- 4. பலத்துடன், சிந்தனை ஒருமைப்பட, இயல்பு தரிசிக்க…. சில அரிய செயலாற்ற
(போதை தலைக்கேறியதால் மேலே உள்ள நம்பரை (Font) பாருங்கள்... )
இவ்வளவு தானே…. இதற்காகத்தானே நம் மனித குலம் குடிக்கிறது, குடிக்க துடிக்கிறது.
இத்தனைக்கும் தீ போன்ற தித்திப்பில்லாத ஒரு கசப்யின் சுவை, உள்ளுக்குள் இறங்கும் காட்டம், காலையில் எழுந்தால் வரும் ஹேங்க் ஓவர் என எத்தனை இடர்கள் இருந்தாலும், கிடைக்கும் மேற்கூரிய சில காரணங்களுக்காகத்தானே இந்த குடி… ஆங்…. புடி…..அடி….ஒரு ரவுண்ட்…..
சரி, இந்த நாலையும் பெற வேறு எளிய வழி இருக்கிறதா…. இல்லை…. எளிய வழி இல்லை, ஆனால் ஒரு வழி இருக்கிறது. தியானமும் யோகமும் இதை தரும் வல்லமை பெற்றது. போதையை விட ஆழமான நிலைக்கும் ஆரோக்கியமான பக்கவிளைவுகளையும் கொடுக்க கூடிய சக்தி கொண்டது.
என்ன ஒரு கஷ்டம்… குடிப்பதை போல் எளிதாய் இந்த நிலை அடைய முடியாது. கையில ஒரு கிளாச எடுத்தோமா….. நமக்கு தோதான ஒரு மிக்ஸிங் போட்டோமா…. மொடக் மொடக்குன்னு குடிச்சோமா,…. குடிச்ச சில நிமிசத்தில சிந்தனை மட்டுப்பட்டு, மூளை தயங்கி இயங்கி ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். பரவசம் படர்ந்து விடும், அழுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள் தூங்கி கொள்ள, மனம் துவண்டு விடும். உடல் கட்டுப்பாடுகள் தளர்த்தி இலகுவாகி விடும்.
இதே டண்டணக்காவ மெடிடேட் பண்ணி கொண்டு வர ரொம்ப கஷ்டம், யூனிவர்சலா எல்லோருக்கும் ஒர்க் அவுட் ஆகிற மாதி ஒரு பார்மூலாவும் மெடிடேஷன்ல இப்ப இல்ல…. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு மாதிரி. ஆண்டவா…. ஹட யோகா… மந்திர ஜெபா… ராஜ யோகா, கிரியா யோகா…. இப்படி பல ரூட்டு…
இன்னிக்கு தேதியில மெடிடேஷன் எப்படி இருக்குது. ஒண்ணுக்கு பாதி பேர் டவுட்டாவே இருக்காங்க. இல்ல இந்த தியானம்ங்கிறது ஏதாவது இருக்கா, அல்ல வெறும் பம்பாத்தா என ஆரம்ப கட்ட கேள்வியில் நிற்க வைத்தது ஆன்மீகத்தின் முதல் கோளாறு. பயங்கர அட்வென்ஜரசா இருக்கணும், அது மட்டுமில்லாம ஏதோ ஒரு பாதையில கத்துக்கிட்ட பயிற்சிகள மாசக் கணக்கா, வருசக் கணக்கா உடும்புப் பிடி பிடிச்சு செய்யணும். இப்படி பல சேலஞ்சஸ்.
எல்லோருக்கும் ஒத்து வரக்கூடிய எளிமையான அதே நேரம் கண்டிஷனா கம்பிளீட் ப்ளிஸ் (BLISS) வர ….. ஃப்ளீஸ் ஒரு வழி சொல்லுங்களேன்….
ஐய்யா… ஆசிரம அல்டாப்புக்களே…. ஆன்மீகம் விற்பவரே…. ஐயாம் சாரி…. ஆன்மீக விற்பன்னர்களே… காசு பணம் பின்னால போகாம, பொம்பள பின்னால போகாம….. சட்டுன்னு எளிமையா எல்லோருக்கும் தோதுப்படுகிற மாதிரி ரிலாக்ஸேஷனுக்கு ஒரு டெக்னிக்க கண்டுபிடிங்களேன்… உலகமே உங்கள கைய எடுத்து கும்பிடும்….
முடிக்கும் முன்….
படுக்காளி ஒரு டவுட்டு… இந்த பதிவில ஒரு இடத்தில… ‘ஒண்ணும் ஒண்ணும் மூணு’ என ஒரு கணக்கு சொல்லியிருக்கிறாயே…. அதென்ன ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா, இல்ல உன்னோட கணக்கே அந்த ரேஞ்சுதானா என எண்ணியிருப்பவர்களுக்கு…. இது ஒரு பயன்பாடு…
நான் கேட்டு ஆச்சரியப்பட்ட ஒரு ஆச்சி சொல்…. நான் பெற்ற ஆச்சரியம் பெருக இவ்வையகம்….
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது தீர்மானமாய் சொல்ல முடிகிற, நம் கண்ணுக்கு முன்னால் இருக்கிற தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்கள். அப்படி இல்லாமல், மறைந்திருக்கும் சில மேட்டர்களும் சேர்த்தால் தான் ஒரு அர்த்தம் வரும் எனும் ஒரு நிலை வரும் போது…. சீக்ரெட்டான ஒரு ஒண்ணையும் கண்ணுக்கு தெரியும் இரண்டையும் கூட்டி, ஒண்ணும் ஒண்ணும் மூணு என சொல்லும் கணக்கில் தான் சூட்சமம் இருக்கிறது.