சேட்டை ஜாஸ்தியாயிருச்சுடா, இறைவனை பத்தியே குறையா…. அரை குறை..!!! என அவசர தீர்மானம் போட வேண்டாம். இறைவன் என இங்கே சொன்னது ஒரு வார்த்தை பிரயோகமே. இறை என சொல்லும் போது, அதன் சில குணங்களை மட்டும் எடுத்து கொண்டேன். இறைவன் என்பதில் நிறைவானவன் / முழுமையானவன் அன்றின் படைக்கும் வல்லமை பெற்றவன் எனும் இரு குணாதிசயங்கள் மட்டுமே விவாதிக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஓகோ அது சரி, அப்ப சரி, ஆனால்…. அரைகுறை என்கிறாயே….. அது என்ன எனும் கேள்விக்கு, இறையும் இல்லாமல் விலங்கும் இல்லாமல்…. இரு குணங்களும் சரி விகிதத்தில் கலந்த துர்பாக்கியசாலி…. நம்மைப் பற்றித்தான் எழுதுகிறேன். மனிதர்களைப் பற்றித்தான்.
உயிரினங்களை பிரிக்கும் போது, அதன் அறிவு வகையை கொண்டு பிரித்தால், ஒவ்வொரு அறிவாக ஏறும் படிக்கட்டில் 5 அறிவுகளை கொண்டு விலங்குகளும், 6 வது அறிவை கொண்டு நாமும் நிற்கிறோம். சரி அஞ்சுக்கும் ஆறுக்கும் இடையில் என்ன வித்தியாசம்….
அதை எளிமையாய் சொல்லுவோமா எனும் சிந்தனைக்கு நாம் ஒரு திரைப்பாடலை கடன் வாங்குவோம்.
மரத்தில் படரும் கொடியே, உன்னை படைத்தவரா அங்கு படர விட்டார்.
பாய்ந்து செல்லும் நதியே, உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்…
ஆஹா… இரு வரிகளில் எவ்வளவு ஆழமான ஒரு விடயம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வரிகள் சொல்வது, படைத்தவர் படைப்போடு நிறுத்தி விட்டார். அவர் வாழவோ… வாழும் முறையையோ…, பாதை சொல்லவோ முயலவில்லை. உயிரினங்கள் தங்களுக்குள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே வாழ்க்கை அமைகிறது எனும் சித்தாந்தம் இங்கு மிளிர்கிறது.
’மரத்த வைச்சவன் தண்ணீர் ஊற்றுவான்’
என இன்னொரு கவிஞர் சொல்கிறாரே…. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என கேட்டிருக்கிறோமே… அது எப்படி…..
அது அப்போ….. எது சரி…. என நமக்குள் எழும் கேள்வியே…. இப்பதிவின் ஆணி வேர்.
வடிவேலு சொல்வாரே…. ‘உக்கார்ந்து யோசிப்பாங்களோ…!!!!’ ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ…!!!’ என கேட்பாரே.. அது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனி பலம். சிந்தித்து சில விசயங்களை படைப்பது அல்லது மாற்றுவது….. நம்மால் சாத்தியம். நம்மால் மட்டுமே சாத்தியம்.
படைப்பு எனும் போது எத்தனையோ உண்டு. வீடு… குடும்பம், குழு, சமூகம், கம்பெனி, இலக்கியம், அறிவியல் கண்டுபிடிப்பு, இப்படி எத்தனையோ…..
ஒரு சின்ன வேண்டுகோள், இந்த படைப்பை பற்றியும் அதன் பரிமாணம் பற்றியும் எழுதலாம். ஆனால் வெறும் பதிவு…. நீ நீ நீ ண்ண்ண்ண்டு…. கட்டுரை போலாகிவிடும். எனவே ஒரு நிமிடம் வாசிப்பதை நிறுத்தி விட்டு படைப்பை பற்றியும் அதில் நமக்குள்ள பலம் பற்றியும் கொஞ்சம் நீங்களே யோசித்து விடுங்கள்.
பசியாற மட்டுமே விலங்குகள் உண்ணுகின்றன. ஆனால் நாமோ பசி மட்டுமல்லாது, ருசியும் வேண்டும் என நிர்பந்திக்கிறோம். உண்மைதானே. ஆம்…. அது ஏன்…..
நமக்கு பசியும் ஆற வேண்டும் பின்னர், அது ருசியாகவும் இருக்க வேண்டும். அதற்கு காரணம், நம்மால் ருசி என உணரப்பட்டால், அது ஒரு வித மகிழ்ச்சியை நம்மின் உள்ளுக்குள் ஏற்படுத்தும். ஒரு நிறைவை நமக்குள் உண்டாக்கும். அந்த மகிழ்ச்சியை நிறைவை நாம் அனுபவிப்பவர்கள். அதை வேண்டும் இன்னும் இன்னும் வேண்டும் என ஆசிப்பவர்கள்.
அதனால் தான் உண்ணுதல் மட்டுமல்லாது நம் எல்லா செய்கையையிலும் இந்த இன்பம் துய்த்தல் எனும் செயல் பாடு உண்டு. உன்னைப் போல் யாரேனும் உண்டா…. என நமக்கு தரப்படும் சமூக அங்கீகாரத்துக்காக நம் உயிரையும் கொடுக்க சித்தமாகிறோம்.
விலங்குகளுக்கு உணவு தேவைப்பட்டால், சக உயிரை கொல்ல உரிமையும் தார்மீக அனுமதியும் இருக்கிறது. பழிவாங்கும் உணர்ச்சி கூட இயல்பு என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் மனிதனுக்கு அப்படியில்லை. உயிரை கொல்வது பாவம், பழிவாங்குவது மிருக குணம் என அறிவுரை வழங்கப்படுகிறது.
பாதி மிருக இயல்பும், பாதி இறை குணமும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதாலேயே அவனுக்கு இந்த தொல்லை. இந்த வாழ்வியல் துன்பம். மிருக வழியா, இறை வழியா என அவன் தன் பாதை தேர்ந்தெடுத்து செல்வதிலும், அந்த தீர்மானிக்கும் திறனிலுமே அத்தனை கோளாறுகளும்.
ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் என குழப்பங்களும், மன தயக்கங்களும் அவனை வாட்டும்.
அன்பிற்குரியவர்களே…. இப்பதிவில் சொல்லப்படுவது ஒரு எளிய ஆனால் ஆழமான தகவல். இந்த தகவல் அதன் அர்த்தத்தில் புரியப்பட்டால், நம் மனித வாழ்வில் நிம்மதி வரும், இனிமை வரும். தயக்கங்கள் அகலும். தெரியுமப்பா, எனக்கு …. என தன்னம்பிக்கை வரும். நம்மை பகுத்து நம் செயல்திறனும், சிந்தனை ஓட்டமும் புரியும்.
ஆம்… இது ஒரு டிப் ஆப் த ஐஸ்பெர்க்தான். இதன் நுனி பிடித்து கொஞ்சம் சிந்தித்தால் ஒரு சில ஆழமான விசயங்கள் தொட முடியும். அந்த தேடல் பயணத்தின் ஆரம்பத்தில் தான் நானும் இருக்கிறேன். தயவு கூர்ந்து தங்களுக்கு தோன்றியதை என்னுடன் பகிர்ந்தால் எனக்கும் மற்றவருக்கும் உதவியாய் இருக்கும்.