”என்னா… பிரில்லியண்ட் திங்கிங்….!!! சும்மா சொல்ல கூடாது திங்கிக்குல நீ கிங்குடா…..” ”அடேயப்பா……. அவன் ரொம்ப பிரில்லியண்ட்”
இப்படி, சொல்லும் வார்த்தைகள் நாம் அன்றாட வாழ்வில் கேட்பது தானே. வியப்பாய் வெளியிடும்.... ஒரு நுண்ணிய குணம்… இண்டெலிஜண்ட்டு…………!!!!
புத்திசாலியா இருந்தா சூப்பர், காசு பணம் கூட எப்ப வேணும்னா சம்பாதிச்சிரலாம், ஆனா புத்தி இல்லேண்ணா வேலைக்காவாது. ரொம்ப அவசியம் என நம்மால் பகுக்கப்பட்ட ஒரு குணாதிசயம் இந்த இண்டெலிஜந்து.
புத்திசாலித்தனத்துக்கு, அர்த்தம் சொல்ல முடியுமா???
புத்திசாலித்தனத்தை விளக்க முடியுமா ???? இதை புரிந்து தெளிந்து, நம்மால் அதை மேம்படுத்த முடியுமா, என சிந்திப்பதே இந்த பதிவு.
டாட்டா ஒரு பேட்டியில்.... உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன ????? என கேட்க, ஒரிறு வினாடிகள் யோசித்து விட்டு அமைதியாய் சொன்னார் ‘தகவல்கள்’
முதலில்... என்னது தகவல்களா, !!!! அதுவா வெற்றி தேடித்தரும்…. சே… சே… அது இல்லீங்க... என நாம் தள்ளினாலும், ஆற அமர யோசிக்கும் போது, நமக்கு தகவல்களின் அவசியம் புரியும். கற்று, கேட்டு கருதி நாம் சேகரிக்கும் தகவல்களின் அளவே, நம் வெற்றியை நிர்ணயிக்கிறது என்பது மிகையல்ல.
என்றாலும், தகவல்கள் மிகுந்திருப்பது அல்ல.... புத்திசாலித்தனம்.
உதாரணத்துக்கு.... ஒரு கல்லூரியின் பேராசிரியராய் !!! ஒருவர் இருப்பார். மாணவர்களும் சக ஆசிரியர்களும் ஒரு சேர பிரமித்து, அவர் புத்திசாலி என ஒத்துக் கொள்வர்.
கல்லூரியில் பிரில்லியண்ட் என முத்திரை குத்தப்பட்ட குமார சாமி.... வீட்டிலே மனைவியிடம் அதை பெறாமல் இருக்கலாம். மனைவியிடம் மொத்தும் குத்தும் வாங்கலாம். ”உங்களுக்கு ஏதாவது தெரியுதா, இந்த வீட்டுல நான் மட்டும் இல்லாங்காட்டி சிரிப்பா சிரிச்சுப்புடும்” என மணந்தவள் மடக்கலாம். வீடு பத்தி, உறவு பற்றி, அல்லது சிக்கனம், சேமிப்பு பொருளாதாரம் பற்றி அவருக்கான தகவல்களும் புத்திசாலித்தனமும் குறைவாக இருக்கலாம்.
புத்திசாலித்தனம் என்பது நம், சிந்தையின் வெளிப்பாடு. வெளிப்படும் சிந்தனை, பரவலான அங்கீகாரம் பெற்று..... பாராட்டப்பட்டால் புத்திசாலி.
பரவலான அங்கீகாரம் தருவது, சமூகம் என்பதால், சக மனிதன் என்பதால்... நாம் வாழும் காலம் என்பது மிகப் பெரிய தளமாக இருக்கிறது.
சண்டை போடுவதில் மிக வலுவான ஆயுதம் எது, என ஒரு கேள்வி வந்த போது, அஹிம்சை தான் ..... போராடுவதின் மிக பலமான ஆயுதம் என காந்தி சொன்னார், அது அன்றைய காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடை பிடிக்க பட்டது.
அவரே… ஒரு ஆயிரம் வருசங்களுக்கு முந்தி பிறந்திருந்து, இதே வார்த்தையை சொல்லியிருந்தால்..... முப்பதிரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணுற்றாறு காயங்களை ..... ஆபரணமாக !!!! பூண்டிருந்த விஜயாலய சோழர் காலத்தில் எடுபட்டிருக்குமா… சந்தேகம்தான்.
காலம், அங்கீகாரம்..... படைக்கும் வேள்வியே .....புத்திசாலித்தனம்!!! எனும் போது, புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போமா.
சிந்தனையை மூன்று படிவங்களாக பிரித்து அதை ஆராய்வோமே... மூன்று நிலைகள் தான் ஒரு சிந்தனை வெளிப்பாடு.
1. புரிதல் 2. அலசுதல் 3. அறிவித்தல்
இந்த மூன்று நிலைகளை இன்னும் ஆழமாய் பார்க்க, வாசக தோழமையே ஒரு பிரச்சனையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.
பிரச்சனையை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்.??? அது கழுத்தை நெருக்கும் கயிறாக !!!சிந்திக்கிறோமா, அல்லது.... காலை வருடும் பயிராக சிந்திக்கிறோமா.
நான் எடுக்கும் இந்த முடிவு ..... என்ன விளைவுகள் ஏற்படுத்தும் !!! என கவனம் கொள்கிறோமா, அல்லது வருவது வரட்டும் என ஈசியாக இருக்கிறோமா.... எனும் மெமரி இன்பர்மேஷன் ஃப்ளாக்கே (Flag) புத்திசாலித்தனத்தின் முதல் படி. சுருக்கமாக சொல்வதென்றால் நம் சிந்திப்பில் முனைப்பு இருக்கிறதா, ஏனோதானா என முயல்கிறோமா அல்லது ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் யோசிக்க துவங்குகிறோமா என்பதே..... புத்திசாலித்தனத்திற்கான பாதை.
முனைப்பு இல்லாத முயற்சியால், இலக்கை எட்ட முடியாது. நம்மை புத்திசாலி எனும் ஊருக்கு கொண்டு போய் சேர்க்கும் டிக்கெட், வாங்க வேண்டியது முதல் படியில் தான். முதல் படி எடுத்து வைத்து, நம் சிந்தனை செலுத்தும் பாதை ..... அடுத்து வருவது அலசுதல் கட்டத்துக்கு.
நம் பிரச்சனையின் தீர்வுகள் என்ன என்ன, எப்படி சமாளிக்கலாம், என நாம் தேடும் இடம் நம் நினைவுகளே... தகவல்கள் ஆற்றும் மிக பெரிய பணி இங்குதான்.
இது மிக முக்கியமான ஒரு கட்டம். இப்படி இருக்குமோ, இப்படி செய்யலாமோ, இப்படி செய்தால் இப்படி ஆகி விடுமோ என நமக்குள் நடக்கும் ஒரு கருத்து மோதல்கள்.
முதலில் நம் முந்தைய அனுபவங்களை தேடுவோம், இது போல் எப்போதேனும் நடந்ததா.... இல்லை வேறு யாருக்கேனும் நடந்து, அவர்கள நமக்கு சொன்னது.... தகவல்களாய் இருக்கிறதா என நாம், சல்லடை போட்டு தேடுவோம். சில சமயம் புத்தக தகவல்களாகவோ, கதையாகவோ, கூட இந்த தகவல்கள் நமக்குள் இருக்கலாம். இந்த நிலையில் நாம் எவ்வளவு அலசுகிறோம் என்பதே புத்திசாலித்தனம்.
பல கோணங்கள் சிந்திக்கப் படுகிறதா... பல பரிமாணங்கள் பார்க்கப் படுகிறதா..... இப்படி பரந்து விரியும் சிந்தனையின் விசுவரூபம் தான் ஒரு புத்திசாலித்தன யோசனை.... என குறிக்கப் படுகிறது.
வீக்கான, குட்டி சிந்தனைகள் நம்மை முட்டாள் என முடிவு கட்டி விடுகிறது....
எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதும், எவ்வளவு ஆழமாய் இந்த நிலையில் சஞ்சரிக்கிறோம் என்பதுமே புத்திசாலி எனும் முத்திரை வாங்கும் குணம் கொண்டது. அவசரப் பட்டு, கொஞ்சம் மட்டுமே சிந்தித்த சிந்தனை பலன் இல்லை.
அப்படி நம்மை புல் ஸ்டாப் போட வைக்கும் சக்தியே இந்த மூன்றாம் நிலை. முதல் இரண்டு நிலைகளையும் நிற்க வைப்பதே இந்த அறிவித்தல் நிலை. போதும்... இது சரியா இருக்கும் .... இப்படி செய்தால் போதுமானது என நாம் சிந்திக்கிறோம் அல்லவா, அதுவே இந்த நிலை.
இந்த அறிவித்தல் ஒன்று வார்த்தையாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படலாம்.
நிறைய சமயங்களில், அறிவிப்பதில் நாம் அவசரப் படுவோம். ஓகே… முடிஞ்சுருச்சு…. யோசிச்சாச்சு, இனிம அறிவிக்கப் போகிறேன் என ஒரு முடிவெடுக்கும் போதே, நாம் முதல் இரண்டு நிலைகளை மூடி விடுவோம். அனேகமாக இந்த மூன்றாம் நிலை வந்த பின்பு முதல் இரு நிலைகளுக்கு திரும்பி செல்வது கடினம். செல்ல முடியாது என்பதில்லை, போவதில் நடைமுறை சிரமம் என்பது மட்டும் நிதர்சனம்.
நம்மால் புரிந்து கொள்ள வேண்டியதும், மிக முக்கியமானதும் ஒன்றே. வேகம் மிக அவசியம் என்றாலும், வேகம் மட்டும் முக்கியமில்லை, விரிந்து பரவும் அடர்த்தியே முக்கியம். பல தளங்களில் விரிந்து, பல கோணங்களை தரிசித்து, ஒரு நினைவு வெளி வருமானால் அதுவே புத்திசாலித்தனம் எனும் முத்திரை குத்தப் படுகிறது.