பக்கங்கள்

மேஜிக்…!!! இப்ப ஸ்டார்ட்… (சிறுகதை)

பகுதி -1

ஒரு சாயா …. பாய்லரின் திசையில்!!! சொல்லிவிட்டு அந்த டீக்கடையின் மரப் பலகையில் அமர்ந்தான் மாணிக்கம். அவனையும் சேர்த்து இன்னும் சில பேர் அங்கு தற்காலிக ஆக்கிரமிப்பு செய்திருந்தனர், குடிச்சுப்புட்டு அப்புறம் வீட்டுக்கு போவோம் என்பதாய்...

மிகவும் அசிரத்தையாக தினப் பத்திரிக்கையின் குருவியார் கேள்வி பதில் படித்து கொண்டிருந்தார் ஒரு வாடிக்கையாளர். டியர் குருவியாரே, நடிகைகளில் யார் அழகு, அசினா, தமன்னாவா, அமலா பாலா, நமிதாவா என சர்வதேச பிரச்சனையை கேள்வியிருக்க, அதற்கும் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதியிருந்தார் குருவியார்.!!! படித்து கொண்டிருந்த நம் பிரண்ட், மனத்திரையில் அக்கேள்விக்கான விடையை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கென போட்ட டீ அவர் பக்கத்திலேயே இருந்தது. எப்ப சார் குடிப்பீங்க என முதலில் புகையும் மணமும் பரப்பிய தேனீர் இப்போது ஆறிப் போய், ஏழிப் போய், எட்டிப் போயிருந்தது.

கோவையின் புற நகர் பகுதி சில்லென்ற காற்றுடன் அழகாக இருந்தது. அங்கு அமைந்திருந்த அந்த அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா, புண்ணியத்தில், அந்த வட்டாரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. கருப்பு ஸ்பீக்கரின் வழி வந்த இசையில் இரைச்சல் அதிகமிருந்தது. விழா உற்சாகம் எங்கும் பரவியிருந்தது, காற்றில் கூட கலந்திருந்தது. உரத்த குரலில் கூச்சலிட்டு, சிறுவர் கூட்டம் சுற்றி சுற்றி ஓடி வெளாண்டு கொண்டிருந்தது. பளிச்சென்ற வண்ண உடையில் இளம் பெண்களும்,அதனாலேயே கூட்டம் கூட்டமாய் சில இளவட்டங்களும் சிரிப்புடன் இருந்தன. இருக்க கிடைத்த இடமெல்லாம் அமர்ந்து பெருசுகளும் கால் நீட்டி, இளைப்பாறி சிரித்து கொண்டிருந்தனர். மனிதர்கள் அப்பகுதியை நிறைத்து இருந்தனர்.

மாணிக்கம் உட்கார்ந்த நிலையில், டீக்கடையில் வருவோர், மற்றும் சாலையில் கடந்து செல்வோர் என எல்லோரையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் நடை உடை பாவனைகள், பேச்சுக்கள் என உற்று துளாவி கொண்டிருந்தான். அவர்கள் காசு கொடுக்கும் போது எவ்வளவு வைத்திருக்கிறார்கள், எப்படி தருகிறார்கள் எனவும் சூசகமாய் பார்த்து கொண்டிருந்தான்.

கசங்கிய நோட்டுக்கள் என்பது தனி மனித விசயம் அல்ல, அது ஒரு ஊரின் கலாச்சாரமே என மாணிக்கம் நம்புகிறான். குடுக்கல் வாங்குதல் ஜாஸ்தி என்பதால் ரூபாய் கசங்குவதாகவும் அந்த ஊரில் பணப்புழக்கம் ஜாஸ்தி என்பான். மாற்றுக் கருத்து ஏதுமிருந்தால் நீங்கள் மாணிக்கத்திடம் தான் கேட்க வேண்டும். கூட்டம் திருவிழா அங்கு வரும் மனிதர்கள் அவர்கள் பணப்புழக்கம் என பார்த்து மனதில் இறுத்துவது மாணிக்கத்திற்கு மிக மிக முக்கியம், அவசியம். என்ன செய்வது அவன் தொழில் அப்படி….. ஜேப்படி, திருட்டு என குயிக்காக கெஸ் செய்திருந்தால்….. சாரிங்க, அப்படி இல்லை, நம் மாணிக்கம் நல்லவன், அவன் திருவிழா நடக்கும் இடங்களில் டெண்ட் அமைத்து, மேஜிக் தொழில் செய்து வருபவன். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வயிறு கழுவி வண்டியை ஓட்டும் ஒரு நாடோடி.

ஒரு மணி நேரத்துக்கு முன்னாக, சதுரமாய், நான்கு முனைகளில் அளந்து புள்ளி வைத்தான். பின் நடு மையத்தில் இன்னொரு புள்ளி. மூன்றடி ஆழத்தில் கடப்பாரையின் உதவி கொண்டு ஐந்து குழி தோண்டி, மூங்கில் கழி நான்கும், உயரம் கூடிய மூங்கில் நடுவிலும் அமைத்து ஒரு கொட்டகை தயார் செய்தான். மாயாஜாலம் மேஜிக் எனும் பெயிண்ட் அடித்த துணியை முன்னால் கட்டினான். உதவியாளனை பாதுகாப்புக்கு வைத்து விட்டு, டீ குடிக்கும் சாக்கில் இந்த ஊரைப் பற்றி தெரிய வந்து விட்டான்.

வாருங்கோ… என்னாங்கோ…. கேட்டுப் போட்டு போங்கோ…. என்பதை இன்றைய நிகழ்ச்சியில் சேர்த்து விடுவான். கஸ்டமைஸ்ட்டு காம்பேயரிங்க் என்பதுதான் அவன் ட்ரேட் சீக்ரெட்.

அவன் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. மாசம் பிறந்தால் சம்பளம் வரும் சௌகரியம் இல்லை. இதுதான் ஆபிஸ் என செல்லும் இடமும் இல்லை. புதிய ஊர்களும், புதிய உணவும் என வாழ்வு பரந்து விரிந்த மேகத்தின் கீழ். வீடோ, உறவோ எதுவும் இல்லை. அமையவும் இல்லை, அமைக்கும் எண்ணமும் திட்டமும் இல்லை… ஏன் என அவனுக்கும் தெரியவில்லை.

இன்று எப்படி என திட்டவட்டமாய் தெரியாது, நாளைய திட்டமிடுதலும் அத்தனை வலுவானதல்ல. என்றாலும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. தென் இந்தியாவின் கிராமப் புறங்களும் அதன் வாழ்க்கை முறைகளும் அவனை விட அறிந்தவர் யாருமில்லை எனலாம்.

ம்…. இங்க ஓட்டம் அவ்வளவில்லீங்க, புத்தூர் மாரியம்மன் கோவில்ல நல்ல கலெக்‌ஷன், அங்கேயே திரும்பி போயிறலாம்ன்னு இருக்கேன் என பலூன் காரன் சொன்னதை நம்பி இவனும் தன் ஜாகையுடன் இடம் மாறிவிடுவான். இன்னொரு சமயத்தில் வேர் விட்டான் கிராமம் வந்து, இங்க நாலு நாள் டெண்ட்டு என வந்த இடத்தில் அடை மழை இவன் திட்டத்தை மாற்றியது. அன்றே கிளம்பி விட்டான்.

வருத்தங்களோ, சந்தோசங்களோ பெரிய அளவில் அவனை பாதிப்பதில்லை. எதிர்பாராமல் கடைய நல்லூரில் கிடைத்த 10,000 ரூபாய் கலெக்‌ஷன் அவன் எதிர்பாராதது. ஒரு வாரம் தனக்குத்தானே லீவு கொடுத்து கொண்டான். அடுக்கிய ரூபாய் நோட்டுக்களை விசிறி விசிறி கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் முகர்ந்து பார்த்தான் பின் பஜார் சென்று பள பள வெல்வெட்டில் ஒரு கோர்ட் சிவப்பு கலரில் வாங்கினான். இன்றும் அதை அணிகிறான், துவைக்காமலேயே !!! முழங்கால் வரை நீண்ட கோல்ட் மின்னும் ரெக்சின் ஷூஸ் என வியாபாரத்தின் மூலதனங்கள் சில வாங்கினான்.

வயிறு முட்ட உணவருந்தினான். உதவியாளன் குமாருக்கு 3000 ரூபாய் கொடுத்தான். காலில் விழுந்து வணங்கியவனை நினைத்து பெருமையாய் கட்டிப் பிடித்தான். ஆனாலும் இவன் கொடுத்த பணம் தந்த தெம்பில் உதவியாளன் வேலைக்கு வராமல் காணாமல் போனான். தேடி வீட்டுக்கு போயும் பிரயோஜனமில்லை. என்ன செய்வது, வேறு உதவியாளரை பிடித்து, அவனுக்கு பயிற்சி தந்து தொழில் கெடாமல் பார்த்துக் கொண்டான். நல்ல வேளை சில நாட்கள் செலவிலும், கையிருப்பின் புண்ணியத்திலும் சேதாரம் அதிகமில்லை. என்றாலும் அன்று ஒரு முடிவெடுத்தான் கவனமாய் காய் நகர்த்த வேண்டும். அதிகம் லாபம் வந்தால், வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும், என வர்க்க பேதத்தின் முதலாளியாய் சிந்தித்தான்.

மது பழக்கமில்லை, சில நாட்கள் குடித்திருக்கிறான், குடித்தவுடன் உணர்ந்த மிதக்கும் உணர்வு பிடித்திருந்தாலும், அடுத்த நாள் உடல் வாதையும் வாய் நாற்றமும் அவனுக்கு பிடிக்கவில்லை. குடிக்கவே கூடாது என்ற தீர்மானம் எல்லாம் இல்லை என்றாலும், இன்று குடிக்கணும் எனும் தூண்டுதலும் இல்லை. அதனால் குடிக்காமலேயே இருக்கிறான்.

அப்பா அம்மா யார், தெளிவாய் தெரியாது. விவரம் புரிய ஆரம்பித்த 4 வயதில் ஒரு வயதான தாத்தாவுடன்தான் சுற்றித் திரிந்தான். அவரது சுருங்கிய கருத்த கையை பிடித்து கொண்டு உலகை வலம் வந்த போது மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பும் தெரிந்தது. அவர் மடியில் அமர்ந்து, ரோட்டோரம் பார்த்த வாகனம் இன்னும் நினைவிலிருக்கிறது. அதிகம் பேசாத, அவரை அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு சாலை விபத்தில் அவரை பலி கொடுத்து விட்டு, அரசு மருத்துவமனை பிணவறையின் வாசலில் உட்கார்ந்திருந்த போது பயமே மிஞ்சியிருந்தது. பசியும் அதிகமிருந்தது. அவன் பசியறிந்து, உணவிட்டவன் பிணமாகி உள்ளே படுத்த தினம் தான் மாணிக்கத்தின் வாழ்வு திசை மாறியது.

நீ யாருடா, அவருக்கு என்ன உறவு என கான்ஸ்டபிள் கேட்ட கேள்விக்கு வாய் விட்டு அழவே தெரிந்திருந்தது. பயம் அலைக்களிக்க, போலீஸ் இல்லாத சமயத்தில் ஒரே ஓட்டமாய் ஓடி, ரயிலேறி எங்கோ இறங்கி, ஊர் பேரெல்லாம் தெரியாத ஒரு குளக்கரையில் விழுந்து கிடந்து, சாலையோர குப்பை தொட்டியில் கிடந்த உணவுப் பொட்டலத்தில் பசியாறி, அடுத்து என்ன செய்யணும் என யோசிக்க தெரியாத போது, விதி குருவி தலையில் பனம் பழம் தான் வைத்திருந்தது.

அந்த தாத்தாவுடன் மறைந்து போன தன் பிறப்பு தகவல்களை இவன் தோண்டி துருவி பார்க்கவும் இல்லை. மாணிக்கம் கவலைப்படுபவன் இல்லை. உறவு சமைக்கும் எண்ணமே இல்லாததால் யாரிடமும் ஒட்டு இல்லை. ஊர் ஊரான சுற்றுதல், விதவிதமான மனிதர்கள் என அவனுக்கு அவனது வாழ்க்கை பிடித்தே இருக்கிறது.

தேனீர் கோப்பையை சுவைத்து கொண்டிருந்த மாணிக்கம், தன் உதவியாளர் ஓடி வருவதை பார்த்தான். மூச்சிரைக்க, ஓடி வந்தவன் சொல்லத்துவக்கினான். அருகில் இருந்த மரத்தில் இருந்த காகம் இவர்கள் சம்பாஷனையை கேட்டது…..

தொடரும்……………..

2 கருத்துகள்:

  1. தலைவா...

    கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு... அடுத்த பகுதிக்காக ஆவலாக வெயிட்டிங்....

    திரும்பவும் ஏதோ ஒரு தேடலுக்கு உள்ளார போயிட்டீங்க போல... இந்த கதையில என்ன தேடலோ!!??

    எச்சூச் மி... ஒரு சுமால் டவுட்டு... முதல் ஃபோட்டோவுல இருக்கற ஆளுங்கல்ல யாருங்க நம்ம ஹீரோ “மாணிக்கம்”??.....

    பதிலளிநீக்கு
  2. /// R.Gopi சொன்னது… தலைவா... கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு////

    தேங்க்ஸ் ஜி... உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும். என்னை எழுத வைச்சு ஊக்கம் தந்ததே தங்கள் தூண்டுதல்தான்.இன்றும் தொடர்கிறது.

    நேர்மையா சொல்லணும்னா, எழுதுறதுக்கு முன்னால இந்த கதை ரொம்ப ஆசையா இருந்துச்சு... எழுதி... இப்ப வாசிச்சு பார்க்கும் போது சுமார்ன்னு தான் தோணுது.

    //// திரும்பவும் ஏதோ ஒரு தேடலுக்கு உள்ளார போயிட்டீங்க போல... இந்த கதையில என்ன தேடலோ!!??////

    கரெக்ட்டா புடிச்சிட்டீங்க... தலிவா..

    வீடு வாசல் உறவு வேலை என நமக்கு உள்ள எல்லைகள் இல்லாத சில சக மனிதர்களும் நம்மிடையே வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வை கற்பனையாய் வாழ்ந்து கொண்டு எழுதியதே இது...

    கொஞ்சம் ரிசர்ச் பண்ண வேண்டிய டாப்பிக்...

    //// எச்சூச் மி... ஒரு சுமால் டவுட்டு... முதல் ஃபோட்டோவுல இருக்கற ஆளுங்கல்ல யாருங்க நம்ம ஹீரோ “மாணிக்கம்”??..... ////

    அடிச்சீங்க ஜி... கோல்.... உங்கள் பாணியில் டக்குன்னு சிரிப்பு வரவழைக்கும் நச் கமெண்ட்...

    பதிலளிநீக்கு