பக்கங்கள்

மைனா – திரை விமர்சனம்

மனம் கவரும், தரமான நல்ல சினிமா இந்த மைனா.

தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு இடம் பிடிக்கும் எல்லா தகுதிகளையும் தன்னுள் கொண்டுள்ளது. கலை ரசனையிலும், அவார்டுகளின் அங்கிகாரத்திலும், வர்த்தகத்திலும் இப்படம் அடைந்த வெற்றி உரக்கச் சொல்வது ஒரு உண்மையையே. நல்ல படம் எடுங்கய்யா…. பாக்கிறதுக்கு நாங்க இருக்கிறோம் எனும் சராசரி ரசிகனின் அங்கீகாரமே அது.

சாதிக்க துடிக்கும் மனித வாழ்வு வரப்பிரசாதம். ஆதிக்கம் செய்ய நினைக்கும் மனசு தன்னையும் தன் சுற்றத்தாரையும் அழிக்கும் எனும் ஒற்றை வரிக்கதையே மைனா.

ஒற்றை வரி மற்றும் ஒற்றை நாள் கதை என்றாலும் அந்த கதையை சொன்ன விதத்தில் இயக்குனர் மின்னியிருக்கிறார். இடையிடையே வரும் நேரக்குறிப்புக்கள் கதை ஓட்டத்தை பாகம் பிரித்து நம்மை கட்டிப் போடுகிறது. கண்ணைக் கவரும் அந்த பச்சை புல் போர்த்திய மலையும், ஆறும், பனியும் ஒரு புறம் நம்மை கவர, நேர்த்தியாய் புத்திசாலித்தனமாய் அமைத்த திரைக்கதை வழி நடத்த, நடிப்பு இசை எனும் அனுபவங்கள் மேலும் மெறுகேற்ற, விளைவு நமக்குத்தான் நல்ல திருவிழா.

சினிமா பார்க்கும் நமக்கு, நல்ல அனுபவம் கிடைக்கிறது.

விரைப்பான காக்கி சட்டைக்கு பின்னால் இருப்பது ஒரு சராசரி மனிதனே. பாசமும், பயமும் கோபமும் அவனிடத்தில் இயல்பாக உண்டு என நமக்கு என்னவோ தெரியவில்லை. இதுவரை வந்த திரைப்படங்கள் நம் மனதில் காக்கி சட்டைக்கு, என கொடுத்திருக்கும் பிம்பம், சாரி….!!!! கொஞ்சம் கொடுரமானதே. இயக்குனர் அதை தெள்ளத் தெளிவாக சொல்லியிருப்பது ஆதாரமான உண்மை.

இயலாமையால் இன்ஸ்பெக்டர் கோபம் கொண்டு, உன்னாலதானடா எனக்கு இவ்வளவு கஷ்டம், பாருடா உன்ன கஞ்சா கேசுல போடுறேன், உன்ன வாழ விட மாட்டேண்டா என சீறும் போது….. இப்படி செஞ்சுருவாரோ என நம்மை எதிர்பார்க்க வைப்பது மேற்கூறிய இந்த... நமது மன நிலையே.

திரைப்படத்தின் ஆரம்ப காட்சி அட்டகாசம். தீபாவளிக்கு ஊருக்கு கிளம்பும் மன நிலையும், விழாவின் பொறுப்புக்களும், கடமையின் விரைப்புக்களும் சரிவிகிதத்தில் அலைக்களித்தாலும், தொலைந்த பந்துக்காக பணம் நீட்டும் காவலரின் குணமும் அருமையாக சொல்லப் படுகிறது. அதே பந்தை மைனாவுடன் விளையாடும் சுருளியும் என அந்த தினம் மிக நேர்த்தியாக திரையில் வந்திருக்கிறது.

எதுக்குடா இப்படி இந்த தலைத்தீபாவளி காட்சி முதல்ல வருது கதைக்கு சம்பந்தம் இல்லையே என நினைத்தாலும், உச்சக் காட்சியில் அதை இணைத்ததுதான் பிரபு சாலமனின் புத்திசாலித்தனம்.

யதார்த்த சம்பாஷணைகள் படத்துக்கு மெறுகேற்றுகின்றன, என்ன பாஸ்கர் பங்ஷன்லெல்லாம் எப்படி போச்சு, அது நல்லா போச்சு சார், ஒரு ப்ராப்ளம் சார், என பிரச்சனையை விளக்கியவுடன், என்ன பாஸ்கர் அசால்ட்டா சொல்றீங்க, இன்னிக்கு கவர்மெண்ட் லீவு, எப்படியாவது புடிச்சுருங்க, அதுவரைக்கும் தான் நான் அட்ஜஸ்ட் பண்ண முடியும் என சொல்லும் மேலதிகாரியும் என படம் முழுக்க பிரமாதம்.

முக்கிய கதாபாத்திரங்கள் மின்னுவது மட்டுமல்லாது, துணைக் கதாப்பாத்திரங்களின் கனம் படத்தின் மிகப் பெரிய பலம்.

அண்ணன்கள், நார்த்தனார்களை தன் கைப்பிடியில் வைத்துக் கொண்டு, புருஷனையும் அதே லெவல்ல வைக்க முனையும் அந்த வில்லி கதாப்பாத்திரம் அதிர்ச்சி தரும் ஆனால் யதார்த்தமான பாத்திரப் படைப்பு. உச்சக் காட்சியின் போது, தியேட்டரில் உரக்க கேட்கும் கைதட்டுதான் அந்த பாத்திரப் படைப்பின் மிகப் பெரிய அங்கீகாரம் அல்லது வெற்றி.

பொறுப்பில்லாத குடிகார புருஷனால் கைவிடப்பட்டு, நடுத்தெருவில் விழுந்த பின்னும் மூர்க்கமாய் போரிட்டு வெற்றி பெரும் அந்த பணியாரக் கடைக்காரி ஒரு அற்புதம் என்றால், தன் மகள் வாழ்வு வீணாகி விடுமோ என அஞ்சி அவசர அவசரமாய் காதலனை சாமர்த்தியமாய் போலீசில் மாட்டி விட்டு அவர் ஏற்பாடு செய்யும் திருமணம் ஆகட்டும், தப்பித்து வந்தவனிடம் காட்டும் ரௌத்திரமாகட்டும் கனக் கச்சித பாத்திரப்படைப்பு… பின் நடிப்பு.

ஒரு சில விசயங்கள் நெருடுகிறதே.....

இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு ரௌடி கதா நாயகன், வீரமான கதா நாயகி, மற்றும் அடிதடிக்கு ரெடியான ஒரு சப்போர்ட்டிவ் அப்பா / அம்மா என அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாய் இந்த ஒரு பெண்ணின் அரிவாளுக்கு பயந்து ஓடுவது கொஞ்சம் யதார்த்தம் இல்லையோ…. பஞ்சர் ஆகும் டெம்போ, விபத்துக்குள்ளாகும் பஸ், பேஷன் ஷோ போல…. அடுத்தடுத்து வந்து காமெடியும் கவர்ச்சியும் காட்டும் அந்த சக பயணிகள், விலங்கு எடுத்ததும் தப்பி ஓடும் தம்பதிகள் என கொஞ்சம் செயற்க்கைத்தனங்கள் தெரிந்தாலும் அந்த உச்சக்காட்சியும், இடைவேளையின் பஞ்ச்சும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

எங்கு ஆரம்பிக்கிறது, எதை நோக்கி நகருகிறது என கணிக்க முடியாத சாட்டமே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

பிரபல நடிகர்கள், கவர்ச்சி, ஆக்‌ஷன், காமெடி என சைடு சமாச்சாரங்களில் நம்பிக்கை வைக்காமல் தன் கதையையும் உணர்வையும் மட்டுமே நம்பி களத்தில் நிற்பது இயக்குனரின் நல்ல தன்னம்பிக்கை.

முக்கியமாய் இந்த விஷூவல் மீடியத்தை புரிந்து கொண்ட இயக்குனரின் திறமையும், அறிவும் மிகவும் பாராட்டுக்குறியது. இப்படத்தின் வெற்றியும் ரசிகர்களின் ஆதரவும், அவார்டுகளும் மிகவும் ஆரோக்கியமானதே.

http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post_16.html

இயக்குனர் பிரபு சாலமன் நமக்கு நல்ல நண்பரே..

என்றாலும் இந்த விமர்சனம் எழுதும் போது, நடு நிலை தவறவில்லை.

5 கருத்துகள்:

  1. மைனா படமும் அருமை... மைனா படத்திற்கான உங்களின் விமர்சனமும் அருமை...

    இயக்குநர் பிரபு சாலமன் உங்கள் நண்பரா? அப்படியென்றால் ஒரு உதவி செய்ய முடியுமா?

    என் நண்பர் ஒருவர் இருக்கிறார்... அவர் பெயர் எழுத்தாளர் ஏகலைவன்... இதுவரை அவர் 2000 கதைகள் அளவு எழுதியிருக்க வேண்டியது... அம்பு மன்னாரு அளவு திறமை வாய்ந்தவர்.. ஆனால், கற்பனையில் சிறிது சுணக்கம் வந்ததால், வெறுமே 2 கதைகள் கூட எழுதவில்லை...

    அன்னாரின் அடுத்த படத்திற்கான கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஆர்ட் டைரக்‌ஷன், காஸ்ட்யூம் டிசைனர், டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், டைரக்‌ஷன் இப்படி அனைத்து துறைகளிலும் உதவியோ இல்லை உபத்திரவ்மோ செய்வார்...

    ஒரு சான்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........

    பதிலளிநீக்கு
  2. விமர்சனம் அருமை. படத்தின் சோகமான முடிவு மட்டும் திணிக்கப்பட்டது போல் ஒரு உணர்வு.

    பதிலளிநீக்கு
  3. ஒங்க நண்பர்கிட்ட சொல்லுங்க படம் நல்லா எடுத்துருக்காருன்னு நான் சொன்னதா.

    படம் மட்டும் இல்ல, படம் பார்க்க போன அனுபவமும் மறக்க முடியாதது.

    நானும் மனைவியும் சீனா போவதற்காக தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்து, சென்னையிலிருந்து போக வேண்டிய விமானத்தைப் பிடிக்கும் பத்து மணி நேர இடைவெளியில் இந்தப் படம். ஒரே மழை. சத்யம் பார்க்கிங்கில் இடம் கிடையாது. டாக்சிக்காரர் செல் நம்பர் கொடுத்து, "படம் முடிந்தவுடன் கூப்பிடுங்க. பக்கத்திலிருக்கும் மேம்பாலத்திற்கு கீழே வருகிறேன். விமான நிலையத்திற்கு எளிதாகப் போவதற்கு அதுதான் சிறந்த வழி" என்கிறார். சத்யம் தியேட்டரில் 'இளைஞன்' பட பாடல் விழாவிற்கு முதல்வர் வருகிறார் என்று ஒரே ஆர்ப்பாட்டம். அரங்கத்திற்குள்ளே போகும் போது படம் தொடங்கி கால் மணி நேரம் ஆகியிருந்தது. இடைவெளிக்குப் பிறகு படம் ஒலி மட்டும் கேட்கிறது. ஒளி கிடையாது. அதைச் சரி செய்ய கால் மணி நேரம். படம் முடிந்து வந்தால் வெளியே பலத்த காற்றுடன் மழை. குடையை விரிக்க முடியவில்லை. இதோடு மேம்பாலத்திற்கடியில் காத்திருக்கும் டாக்சியைப் பிடிக்க விரைந்தோம். இத்தனை இடர்களுக்கும் இடையே "படம் அருமை. டைரக்டர் பிரபு சாலமன் முதல் முதல்ல எடுத்த படம் போல" என்று பேசிக் கொண்டே வந்தோம். பிறகுதான் தெரிந்தது அவர் சில படங்கள் முன்னர் எடுத்திருக்கிறார் என்று. சீனாவிற்கு சென்ற பிறகும் அங்கு சந்தித்த ஒரு இந்தியத் தம்பதியரிடம் பரிந்துரைக்குமளவுக்கு குறிப்பான படம்.

    உங்களது விமர்சனம் நன்றாக உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட வண்ணம் சிறு, சிறு பாத்திரங்களும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளன. படமெங்கும் இருக்கும் யதார்த்த நகைச்சுவை வசனங்களுக்கு அரங்கத்தில் ஒரே வரவேற்பு. கேரள உணவகத்தில் வரும் மனித உரிமையாளர், பேருந்தில் வரும் குடிகாரன், ரியல் எஸ்டேட் விற்பனையாளர், கவரிமான் கேரக்டர் எல்லோரும் மனதிலேயே நிற்கிறார்கள்.

    யதார்த்த படங்களின் தொடக்கம் எது? பருத்தி வீரனா, சுப்பிரமணியபுரமா? எனக்கென்னவோ பதினாறு வயதினிலே என்றுதான் தோன்றுகிறது. மைனா அந்த யதார்த்தம் பெரிய அளவில், வரவேற்கத்தக்க வகையில், தமிழில் ஆளுமை செய்யும் என்பதை நிலை நிறுத்தும் ஒரு மைல் கல் என்பது என் அனுமானம்.

    பதிலளிநீக்கு
  4. /// பெயரில்லா சொன்னது… விமர்சனம் அருமை. படத்தின் சோகமான முடிவு மட்டும் திணிக்கப்பட்டது போல் ஒரு உணர்வு ////

    வருகை தந்து கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    உங்கள் கருத்தும் உணர்வும் புரிகிறது.

    பாசிட்டிவ் இன்ஸ்பிரேஷனையே விரும்பும்....!!!! குழுவில் நானும் உள்ளேன் என்பதால் தங்கள் எண்ணம் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  5. //// படம் மட்டும் இல்ல, படம் பார்க்க போன அனுபவமும் மறக்க முடியாதது. //////

    அடடா....சுகமான வலி என்றாலும், படிக்கும் போது தங்களின் உடன் இருந்து நாங்களும் குடை மடக்க முடியாமல் மழையில் ஓடியது போன்ற உணர்வை வடித்து விட்டீர்கள். தங்கள் எழுத்துக்கு சபாஷ். தங்கள் தமிழுக்கு யதார்த்ததுக்கு மீண்டும் பாராட்டு.

    //// சிறு, சிறு பாத்திரங்களும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளன. படமெங்கும் இருக்கும் யதார்த்த நகைச்சுவை வசனங்களுக்கு அரங்கத்தில் ஒரே வரவேற்பு. கேரள உணவகத்தில் வரும் மனித உரிமையாளர், பேருந்தில் வரும் குடிகாரன், ரியல் எஸ்டேட் விற்பனையாளர், கவரிமான் கேரக்டர் எல்லோரும் மனதிலேயே நிற்கிறார்கள்./////

    மிக்க நன்றி. பட்டியலிட்டு கருத்து சேர்த்த தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    //// யதார்த்த படங்களின் தொடக்கம் எது? பருத்தி வீரனா, சுப்பிரமணியபுரமா? எனக்கென்னவோ பதினாறு வயதினிலே என்றுதான் தோன்றுகிறது. மைனா அந்த யதார்த்தம் பெரிய அளவில், வரவேற்கத்தக்க வகையில், தமிழில் ஆளுமை செய்யும் என்பதை நிலை நிறுத்தும் ஒரு மைல் கல் என்பது என் அனுமானம் ////

    மிகச் சரியானதே..... பிரபு சாலமனே கூட, தன் பயணத்தின் தொடக்கம்..... அன்னக்கிளி, பதினாறு வயதினிலே எனும் தங்கள் கருத்தையே சொல்கிறார்.

    எளிமையான நேர்மையான புதுமையான ஒரு நல்ல படைப்புக்கு ஆதரவு தரும் தமிழ் ரசிகனுக்கு நம் சார்பில் ஒரு சபா

    பதிலளிநீக்கு