பக்கங்கள்

நந்தலாலா – திரை விமர்சனம்

ரசித்து எடுக்கப்பட்ட மிக நல்ல படம். நேர்த்தியான இயக்கம், நெகிழ வைக்கும் இசை ராஜாங்கம், கண்களை கொஞ்சும் ஒளிப்பதிவு, பலமான திரைக்கதை, என எல்லா பரிமாணங்களிலும் நெஞ்சை அள்ளும் சினிமா.

நீர்த் தாவரம் ஒன்று, கொப்பும் குலையுமாய், தண்ணீரில் முழ்கியும் மூழ்காமலும் ஆற்று நீரின் வேகத்தில் மயிலிறகு போல் அசைந்தாடும் அந்த ஆரம்ப காட்சியிலேயே படத்தின் தரம் நமக்கு புரிகிறது. ரசனையின் கட்டியம் கூறுகிறது. இயக்குனருக்கும், எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

அதிலும் டைட்டில் கார்டில் முதல் பெயராய் இளையராஜாவை போட்டு ‘அட… இது புதுசா இருக்கே, வழக்கமா ஹீரோ பேருதான போடுவாங்க என நம்மை சிந்திக்க வைத்து. அப்படி ஏன் முதலில் அவர் பெயர் வருகிறது என்பதை ஜஸ்டிபை செய்யும் இசை. ’இசையுலகின் சூப்பர் ஸ்டார்’ என சொல்லும் அளவுக்கு அம்சமான இசை.

திரைக்கதை அமைப்பில் ஒரு புதுமை. ஒரு காட்சியின் முடிவு, அந்த காட்சியில் சொல்லப்படாமல் அடுத்த காட்சியில் காண்பிப்பது நல்ல உத்தி. அடுத்த காட்சி என்ன என பார்வையாளனை எதிர்பார்க்க வைக்கும் நேர்த்தி.

உதாரணத்துக்கு ஒன்று. தங்கள் பயணத்தில், அன்பாய் சந்திக்கும் அந்த பெண்ணிடம் விடை பெற்று,….. போகலாமா என தீர்மானித்து இருவரும் கிளம்ப, அந்த பெண் வாஞ்சையுடன் சோகத்துடன் பார்க்க இவர்களும் பிரிய மனமில்லாமல் பார்க்க, …. டேய்…. ஒண்ணாப் போங்களேண்டா என நாமெல்லாம் ஏங்க, என்ன நடந்தது என்ன சொல்லாமல் காட்சி முடிந்து விடுகிறது. அடுத்த காட்சி ஒரு லாரி செல்கிறது, கேமரா சுழன்று நகரும் போது மூவரும் அமர்ந்திருப்பதை நாம் காணலாம். எனும் போது, அவர்கள் பேசி முடிவெடுத்து ஒன்றாய் பயணம் செய்கிறார்கள் என நமக்கு புரிகிறது. இதுபோல் பல காட்சிகள் அமைத்து பட ஓட்டத்துக்கு பெரிதும் சுவாரசியம் கூட்டியிருக்கிறார்கள்.

இத்தகைய தரமான திரைப்படங்கள் தமிழில் வருவது நமக்கு பெருமை. வாழ்த்துக்கள். மென்மேலும் இது போல் திரைப்படங்கள் வரவேண்டும் என ஆசிப்போம்.

நிற்க, இது ஒரு காப்பி என சூடான விவாதங்கள் ஒரு புறம் அரங்கேற. அதற்கு பதிலாக, இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் நிறைய வேறுபாடு உண்டு என விளக்கம் அளித்து இன்னொரு புறமும் அனல் பறக்க, என் எளிய சிந்தனை இதுவே. என்னைப் போன்றோருக்கு அன்னிய சினிமா பார்க்கும் வாய்ப்புக்கள் குறைவு, கப்பிஜோரா, டொப்பிமாரா என பார்க்கும் வசதிகளும் இல்லை, எனும் போது. எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம் எனும் பாரதியின் முழக்கம் முறைதானே.


சில கேள்விகள்.


· இப்படத்தின் மூலம், சமூகத்துக்கு சொல்ல நினைக்கும் கருத்து என்ன.


· இப்படி ஒரு கதைக்களமும், கதை மாந்தர்களும் தேர்த்தெடுக்க காரணம் என்ன


· இக்கதையின் மாந்தர்கள் யார்…???.நாயகன்--- மன நிலை பிறண்ட, சமுதாயத்துடன் இயல்பாய் வாழ இயலாத மனிதன் --- . காதல் எனும் பெயரில் தன்னை பறி கொடுத்து, விபச்சார விதியில் விழுந்து, வாழ்வு செல்லும் பாதை அறியாத நாயகி, இப்படி வஞ்சிக்கப்பட்ட பரிதாவத்திற்குறிய மனிதர்களின் வாழ்வு பற்றிய படங்கள் மட்டும்தான் ஏன் கலைப்படம் ஆகிறது.

· ஆற்றல் மிக்க, செயல் திறன் மிகுந்த, சாதிக்கும் மனிதர்களின் கதை, ஏன் வணிக சினிமா என முத்திரை குத்தப் படுகிறது.

· வாழ்வின் இருண்ட பக்கங்களும், நிதர்சனங்களும் தெரிய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இதுதான் சினிமா. இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் இயல்பு, இப்படித்தான் படம் இருக்க வேண்டும் என சொல்வது அபத்தம். இத்தகைய ரசனையுள்ளோரின் மனச்சிக்கல் கொஞ்சம் அபாயகரமானதே. தங்களுக்கு தாங்களே இவர்கள் வரைந்து கொள்ளும் அறிவு ஜீவீ லேபல்கள் சமூக அங்கிகாரத்திற்கென்றால் பிரச்சனையில்லை, உண்மையிலேயே இதெல்லாம் பிடித்தால்…. சாரி, நோ கமெண்ட்ஸ்.

· இயக்குனரே, இதுக்கு முந்தைய படங்கள் குப்பை, இதுதான் பெஸ்ட் என சொல்ல வேண்டிய அவசியம் எதனால் வந்தது.

· மன நிலை பிரண்டால், நடிப்புக்கு ஸ்கோப் ஜாஸ்தி என்பதால், கோணங்கி சேட்டைகளும் அங்க அசைவுகளுமாக எது செய்தாலும் நடிப்பு என்றாகி விட்டது துரதிருஷ்டம்.

· நாம் முன்னமே பார்த்து ரசித்த சேது, இன்ன பிற திரைப்படங்களின் உரசல் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. மிகவும் பாராட்டப்படும் அந்த அம்மா கிளைமாக்ஸ்சை சேது --- ஈஸ்ட்மென் கலர் புத்தம் புதிய காப்பி எனலாமா.

· பெரும்பாலான ரசிகர்களை வசிகரிக்கவில்லை,வணிகத்தில் தோல்வி எனும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு….. ரசனையில் கோளாறு என பாமரன் மீது பாயாமல், வீண் கோபங்களை விட்டுவிட்டு, மக்களின் அங்கீகாரமும், கலை மேன்மையும், வசூலும் தவிர்க்க முடியாத சினிமாவின் அங்கங்கள் என்பது உணரப்பட வேண்டிய உண்மை.

2 கருத்துகள்:

  1. ஹா...ஹா...ஹா....

    அட போங்க தல.... இந்த படத்துக்கெல்லாம் இவ்ளோ நீள விமர்சனம் எழுதிகிட்டு.... ஒரே வரி விமர்சனம் சொல்றேன் கேட்டுக்கோங்க....

    நந்தலாலா - குணா-பார்ட் (2)

    பதிலளிநீக்கு
  2. பிரமாதம் தல....

    /// மன நிலை பிரண்டால், நடிப்புக்கு ஸ்கோப் ஜாஸ்தி என்பதால், கோணங்கி சேட்டைகளும் அங்க அசைவுகளுமாக எது செய்தாலும் நடிப்பு என்றாகி விட்டது துரதிருஷ்டம்.////

    தலைவா... பூசி மெழுகி, சொம்ப கழுவ வேண்டாமேன்னு தேமேன்னு விட்டுட்டேன். நீங்க நச்சுன்னு கடைசி வரியில சொல்லீட்டீங்களே...

    பதிலளிநீக்கு