டீ குடித்த போது, சூடாக, ஒரு
கவளம் வாயில் இறங்கியபோது, வாய்ப்புண்ணில் பட்டு, பயங்கர வலி. கண்ணில் நீர் கோர்த்தது.
புண் சுர்ரென வலித்து, உள் வரை சென்றது.
இரண்டு வாரமாய் இந்த தொல்லை.
நல்ல மஞ்சள் நிறப் பழுப்பில், கொப்பளங்கள் நான்கு இருக்கிறது. வாய்க்கு உள்ளே… வலது
புறத்தில் இரண்டு, மேல் மேவாயில் இரண்டு என சிவந்து, வீங்கி இருக்கிறது. சாப்பிடும்
போது பயங்கர வேதனை. ஏதாவது காரமாகவோ, சூடாகவோ பட்டு விட்டால் அவ்வளவு தான். இதற்காகவே
பயந்து கொண்டு, சூடு இல்லாமலும் காரம் குறைவாகவும் சாப்பிடுகிறான் ஆத்மா, தன் பழைய
பழக்கத்தை மாற்றிக் கொண்டது கொடுமையாக இருக்கிறது.
பகல் நேரத்திலும், மாலையிலும்
நாக்கை சுழற்றி, அந்த புண்ணை தடவி கொடுக்கும் போது, ஒரு இதம் தெரிகிறது. இது ஆத்மாவின்
புதிய பழக்கம்.
இந்த வாய்ப்புண் தொல்லை… எப்போது
தொடங்கியது.
ஆம், ஆபிஸ் விஷயமாக பெங்களூர்
வரை சென்று வந்த பிறகு இந்த தொல்லை. திடிர் சீதோஷன மாறுதல் காய்ச்சலாக, ஜலதோஷமாக தொடங்கியது.
ஒரே நாள் மாத்திரையில் காய்ச்சலும் சளி போனது. ஆனால் இந்த வாய்ப்புண் மட்டும் போகவில்லை.
ஒரு வேளை பட்டென சூடு, குளிர் மறுபடி சூடு என்பதால் இப்படி ஆனதோ… அப்படியே இருந்தாலும்
இவ்வளவு நாள் ஏன் இருக்க வேண்டும்.
முதல் நாள் அவஸ்தையிலேயே,
இது வேண்டாம், என உடனே மருத்துவரிடம் சென்றான். காய்ச்சல் போச்சு, சளியும் பரவாயில்லை…
இந்த வாய்ப்புண் தான்… என சொன்னதும், டாக்டர் அதே சீட்டில் இன்னும் சில மருந்துகளை
எழுதினார். அவற்றை வாங்கி சாப்பிட தொடங்கினான். வாயில் போடும் ஒரு களிம்பு, பிறகு சில
மாத்திரைகள் என எதையும் நேரம் தவறாமல் சாப்பிடுகிறான், என்றாலும் எந்த முன்னேற்றமும்
இல்லை. வேண்டுமானால் இப்படி சொல்லலாம். புண்கள் பெரிசாகித் தான் போகின்றன. வலியிலும்
சைசிலும்….
ஒரு வேளை பழுத்து தான் உடையும்
போல… எப்படா இந்த தொல்லை போகும். எப்படா பழையபடி சாதாரணமாகும் என ஏங்குகிறான். அதைப்பற்றியே
நாள் முழுதும் சிந்திக்கிறான்.
பக்கத்து வீட்டு, பாட்டி கூர்மையாக
பார்த்து பிறகு சொன்னாள்.
ஐய்யா… இது கக்கட்டி மாதிரி…
வாக்கட்டி…. ஒண்ணுமில்ல… எல்லாம்… திஷ்டிதான்…
ஆத்மா திஷ்டி பற்றி இதுவரை
கேட்டதில்லை. குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்து கேட்டான்.
அப்படின்னா…
பாட்டி தொடர்ந்து சொன்னாள்…
திருஷ்டின்னா… கண்ணேர்… அப்போதும் ஆத்மாவுக்கு புரியவில்லை. அப்படின்னா… என தொடர்ந்தவனை
உட்காரச் சொல்லி பாட்டி சொன்னாள்.
தம்பி, நீங்க நல்லாயிருக்கிறத
பாத்துட்டு…. ஐய்யோன்னு வாய் பொளந்து பொறாமை பட்டு, உஷ்ணமா ஒரு பெருமூச்சு விட்டா,
அது அப்படியே உங்கள பத்திக்கும். தம்பி இது சும்மாயில்ல… ரொம்ப பவர்ஃபுல்லு…. அப்படியே
பொசுக்கிரும்…
ஓ… அப்ப இதுக்கு என்ன செய்யணும்.
ம்… மண்கட்டி எடுத்து கிணத்துல
போடுங்க… அதுலயும் நிக்கலேண்ணா, திஷ்டி கழிக்க, சூடம் சுத்தி வையுங்க, வத்தல் உப்ப
தலைய சுத்தி அடுப்புல போடுங்க….
ஆத்மா இதில் நம்பிக்கை கொள்ளவில்லை,
என்றாலும் செஞ்சு பார்ப்பதில் என்ன நஷ்டம். ஒரு வேளை வாய்ப்புண் போனால்… சரி செய்துதான்
பார்ப்போமே என பாட்டி சொன்னதை அப்படியே செய்தான்.
நாள் ஒன்றும் போனது, ஆனால்
பயன் தான், பலன் தான் ஒன்றும் இல்லை.
இன்றோடு இரண்டு வாரம் ஆகிறது…
ம்… ஒன்றும் பலனில்லை என கவலையோடு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது அருகில் இருந்த
ஒரு நபர் வாஞ்சையுடன் கூறினார். என்ன தம்பி வாய்ப்புண்ணா…
ஆமா சார், ரெண்டு வாரமா மருந்து
சாப்பிடுறேன்.. சரியாக மாட்டேங்குது… ரொம்ப கஷ்டமா இருக்குது… சொல்லும் போதே, இயலாமையில்
கண்கள் முட்டின, தொண்டை கரகரத்தது.
அவர் பரிதாபப் பட்டார். தம்பி,
சொல்றேன்னு வித்தியாசமா நினைக்காதீங்க. எனக்கு என்னவோ இது வேற மாதிரியா படுது. ஆத்மா
அவரை ஏறிட்டு பார்த்தான். வேற மாதிரின்னா…
அவர் சுற்றும் முற்றும் பார்த்து
விட்டு, உங்களுக்கு வேண்டாதவங்க யாராவது இருக்காங்களா..
வேண்டாதவங்கன்னா….
அதான் தம்பி, விரோதிங்க, ஒரு
வேளை உறவுக்காரங்க… யாராவது உங்கள் பிடிக்காதவங்க…
ஏன் கேக்குறீங்க…
இல்ல தம்பி, நீங்க சொல்றத
பாக்கும் போதும், உங்க முகம் கருத்து இருக்கும் போதும், எனக்கு தோணுது… இது ஏதோ ஒரு
வினை…. எனக்கு சரியா தெரியல… சூனியம், செய்வினைன்னு என்னன்னவோ இருக்குது.
தம்பி இதக் கேளுங்களேன்… எனக்கு
தெரிஞ்சவங்க ஒருத்தங்க இந்த மாதிரித்தான், வயித்து போக்கு, வாந்தி வேற… என்னன்னவோ வைத்தியம்
செஞ்சாங்க… ஆனா ஒண்ணும் தீரல… அப்புறம் மவுண்ட் ரோடு தர்காவுக்கு போய், மந்திரிச்சு
ஒரு தாயத்து கட்டினாங்க… ஆச்சரியம் பாருங்க ஒரே ராத்திரியில சரியாயிருச்சு…
அவர் இறங்க வேண்டிய இடம் வர,
பாத்து தம்பி, ஒண்ணும் கவலைப் படாதீங்க எல்லாம் சரியாகும்.. அவர் இறங்கி சென்றார்.
ஆத்மா மீண்டும் குழப்பமானான்.
என்ன செய்வது… எது வேண்டுமானாலும்
செய்யலாம். தீர்வு இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம்… இவர் சொல்லும் இடம் எது…
எங்கிருக்கிறது, என எண்ணிக் கொண்டிருக்கும் போதே… பின் சீட்டில் அமர்ந்திருந்தவர் அருகில்
வந்து அமர்ந்தார்.
ஆதரவாய் ஆத்மாவின் கைகளை பற்றி
கொண்டு, நீங்க பேசுனத எல்லாம் பின்னால இருந்து கேட்டுகிட்டுத்தான் இருந்தேன்… ஆத்மா
மறுபடியும் உணர்ச்சி வசப்பட்டான். அவரது கைகளை தன் இன்னொரு கையால் பற்றி அழுத்தினான்.
நெஞ்சால் அழுதான்.
வேண்டாம் தம்பி, இந்த செய்வினை,
சூனியம்ன்னு தொடங்கிட்டீங்கன்னா, அப்புறம் வாழ்க்கை முழுக்க அது உங்கள விடாது. இதெல்லாம்
வேண்டாம், அசிங்கமான பாதை. உங்களுக்கு நல்ல வழி நான் சொல்றேன். எங்க சபைக்கு வாங்க…
உங்கள மாதிரி எத்தினியோ பேருக்கு எங்க பாஸ்டர் உதவியிருக்காரு. அவரு மேல பரிசுத்தாவி
இறங்கும் போது, அவரு செபிப்பாரு…. அப்ப எந்த சாத்தானோட செயலும், பரிசுத்தாவியின் வல்லமைக்கு
அடிபணியும். நம்மைப் படைத்த யேசு சாமி சொல்றார், ஒண்ணு பதிமூனுல சொல்றார், நான் உன்
தேவன், உன்னை காப்பேன்னு… அத விசுவாசத்தோட பிரதிக்கனை செய்யுங்க… பிரார்த்தனை செய்யுங்க…
உபவாசம் இருங்க.. சபைக்கு உண்மையாயிருங்க… எந்த துஷ்டாவியும் நம்மை அணுகாது… நம்மை
காக்கும் தேவன் நித்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என வேதம் சொல்கிறது…..
ஒரு வேகமாக, ஒரு ராகமாக அவர்
பிரசங்கம் போல சொல்லி முடிக்காமல் சொல்லி கொண்டே இருந்தார். ஆத்மா அவரை அமைதியாக பார்த்து
கொண்டிருந்தான்…. ஆத்மா இறங்க வேண்டிய இடம் வந்த போது, அவரிட்ம் விடை பெற்று அவன் இறங்கினான்….
ஆள் நடமாட்டமில்லாத அந்த சாலையில்
அவன் வந்த பேருந்தும் கடந்த போது, ஆத்மா தனியாளாக நடந்து கொண்டிருந்தான். வாய்ப்புண்
வேதனையாக இருந்தது. எப்படி இதை போக்க வேண்டும் என தெரியவில்லை. மருந்தும் சாப்பிட்டாயிற்று….
போக மாட்டேன் என்கிறது… எளியதாய் திஷ்டி கழித்தாயிற்று … அதிலும் பயனில்லை….
ஒருவர் சொல்கிறார்… சூனியம்,
செய்வினை என, இன்னொருவரோ…. பரிசுத்தாவியிடம் மன்றாட்டு என்கிறார்… என்ன செய்வது, எங்கே
செல்வது. இரண்டுமே பயமாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை இப்படி சூனியம் செய்வினை, சாத்தான்
இதெல்லாம் இருக்கிறதோ.
இயலாமை… இயலாமை… குழப்பம்…
என்ன நடக்கிறது… என்ன இது… நான் என்ன செய்ய வேண்டும்… தெளிவில்லாமை… ஆத்மா புலம்பினான்..
அழுதான்… வாய் விட்டு ஓவென கத்தினான். கண்கள் தாரை தாரையாக நீர் விட்டது… வாய்ப்புண்
வலித்தது…. ஒரு கெட்ட வார்த்தையை உரக்க சொல்லி….. திட்டினான்.
அவன் யாரை திட்டினான்… தன்னையா…
பிறரையா என தெளிவில்லாது… மீண்டும் மீண்டும் இன்னும் சில வார்த்தைகளால் திட்டுதலை தொடர்ந்தான்.
அப்போது, சாலையில் ஒரு பிள்ளையார்
சிலை கண்ணில் பட்டது. சின்ன சிலை, சின்ன மேடை. அச்சிலை கண்ணில் பட்டதும் வாய் சட்டென
நின்றது. அமைதியானது. மனம் ஸ்தம்பித்தது. கைகள் அமைதியாகின. சட்டென அதை நெருங்கி, முட்டிக்
காலில் அமர்ந்து, பின் தரையில் சரிந்து அப்படியே உட்கார்ந்தான். முதுகை அங்கிருந்த
சுவரில் சாய்த்து, உடலை தளர்த்தினான்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.
காலம், கடமைகள் எதுவும் உரைக்காமல் அவன் அப்படியே உறைந்து இருந்தான். தலைக்கு மேலே
இருந்த, ஆலமரம் குளிர்ந்த காற்றை அவன் மீது வீசியது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ…
திடிரென ஆத்மா எழுந்தான்.
எனக்கு எல்லாம் சரியாச்சு..
வாய்ப்புண் போச்சு… சூனியம் இல்ல, மந்திரமும் இல்ல… எனக்கு ஒண்ணும் இல்ல… நான் சரியாயிட்டேன்
என தீர்க்கமாக வாய் முணுமுணுக்க மனதினுள் உறுதியாய் சொன்னான்.
அமைதியான மனதுடனும், உறுதியான
நடையுடனும் வீட்டிற்கு சென்றான். நன்கு குளித்தான்… இரண்டு செம்பு நீரை வாய் நிறைய
வயிர் நிறைய குடித்தான். வீட்டை சுத்தம் செய்தான். அவன் சாப்பிட்டு கொண்டுருந்த மருந்துகள்
மேசை மேல் இருந்தது. அதை எடுத்து பார்த்தான். தீர்மானமான முகத்துடன், அமைதியாக அதை
வீசியெறிந்தான்.
அவனுக்கு என்னவோ அவன் செய்வது
சரியெனப்பட்டது…. நன்கு உறங்கினான். காலையில்
எழுந்த போது, நான்கில் ஒரு வாய்ப்புண் காணாமல் போயிருந்தது….
முற்றும்.
இக்கதையை இத்துடன்
முடிக்க விரும்பவில்லை… இக்கதையை இப்படி முடித்தால், டேக் லைனர், அல்லது கதையின் மெசேஜ்
என்பது…. ‘கடவுளை நம்பு… உன்னை நம்பு…. வேறெதுவும் வேண்டா…. பயப்படாதே…… என்பதாய் ஆகும்….
இல்லை, இக்கதையை அப்படி முடிக்காமல்,
இன்னொரு விதமாய் முடிக்க ஆசையுண்டு… இது தரும் மெசேஜ் அல்லது டேக் லைனர்… வேறு விதமாய்
ஆகும் என நம்புகிறேன்.
…..
எட்டு வருடங்களுக்கு பின்,
ஒரு நாள் ஆத்மா மருத்துவமனையில் இருந்தான். வாய் திறந்து டார்ச் அடித்து பார்த்த டாக்டர்
சொன்னார். ஹூம்… அலர்ஜி டெஸ்ட் எழுதியிருக்கேன்.. இத பண்ணிருங்க… அதுவரைக்கும் நான்
எழுதிக் கொடுத்த மாத்திரைய சாப்பிட வேண்டாம்.
அலர்ஜி டெஸ்ட் முடிந்து, ரிசல்ட்
கொடுத்த போது, ஆத்மாவுக்கு புரியவில்லை. டாக்டர் அதை படித்து, பின்னர் ஒரு தாளில் எதையோ
எழுத ஆரம்பித்தார். முடித்து, பின்னர் ஆத்மாவை நோக்கி சொன்னார்.
உங்களுக்கு சல்ஃபா அலர்ஜி.
அதான் வாயில கொப்பளம் வருது. அதனால வேற மாத்திரை எழுதியிருக்கேன்… உங்க கையில இருக்கிற
மாத்திரைய போடாதீங்க… ரிட்டர்ன் பண்ணிருங்க….
ஆத்மா… டாக்டரை பார்த்து…
சல்ஃபா அலர்ஜி… அப்படின்னா…
ஒரு சில கெமிக்கல்ஸ், நம்ம
உடம்புக்கு ஒத்துக்காது. கெமிக்கல்ஸ் மட்டுமில்ல சில விநோத அலர்ஜிகள் கூட உண்டு… இவ்வளவு
ஏன் சிலருக்கு எள் கூட அலர்ஜி.
தெரியாம சாப்பிட்டாங்கன்னா,
உடம்பெல்லாம், வீங்கி, தடுப்பு தடுப்பா வரும்… இந்த அலர்ஜி பற்றி நமக்கு ஒரு விழிப்புணர்வு
அவசியம். இது பற்றி, தெரியாம, சில விபரீதங்களும் நடந்ததுண்டு…. இப்படி வைச்சுக்கோங்களேன்…
வாய்ல புண்ணு வந்து அத குணமாக்க கொடுக்கிற ஆண்டி பயாட்டிக்கில சல்ஃபா இருந்துச்சுன்னா….
ம்… மருந்தே…. நோயாகிடும்….
ஆத்மா வெளி வந்தான்… எட்டு
வருசத்துக்கு முன், வாய்ப்புண் வந்ததும் அடுத்து நிகழ்ந்ததும் நினைவுக்கு வந்தது. அந்த
நிகழ்வில் அவன் பயப்பட்டதும், அழுததும்… என்ன செய்யலாம் என வேதனைப்பட்டதும் மனதில்
ஓடியது.
சூனியம் செய்வினை என குழம்பியதும்,
பிரார்த்தனை, ஆக்கபூர்வமான மனவெழுச்சி என தீர்வாக அவன் கொண்டதும்…. மருந்துகளை தூக்கி
வீசியதும்… அதுதான் அவனை குணமாக்கியது என நம்பியதும்… நினைவில் ஆடியது.
வாய்ப்புண் குறைந்து, சரியான
போது, தன் மேலும், பிரார்த்தனை மேலும் நம்பிக்கை கூடியதை நினைத்தான். இதுதான் சரி என
தீர்மானம் போட்டது மனது… அது அன்று…
ஆனால், இன்று கேட்ட ஒரு தகவலில்,
மொத்தமும் வேறு திசையில் ஆகிறது. எது சரி, ஒரு வேளை இறைவன் என்பது இல்லையோ, அது நம்
மனம் தரும் ஒரு மாயைதானோ என ஒரு சிந்தனை.
தீர்மானம் கிடைக்காது, அதே
சிந்தனையோடு ஆத்மா வீட்டுக்குள் நுழையும் முன் பக்கத்து வீட்டு பாட்டி யாரோடோ உரத்த
குரலில் சொல்லி கொண்டிருந்தாள்..
பனை மரத்துல தேள் கொட்டினா,
தென்னை மரத்துலயா நெறி கட்டும்…
அடப் போடா… நீ புடிச்ச முயலுக்கு
மூணு கால்ன்னு …. ஏம்ல ஒத்தை கால்ல நிக்குற…
ஆத்மா சிரித்தான்…
அந்த சிரிப்பின் அர்த்தம்
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு காரணமாகவும் இருக்கும்….