வானொலி நாடகம்
என்பது கலையின் தனி வடிவம். ஊடகத்தின் ஒரு உட்பிரிவு. அதற்கு கதை வசனம் எழுதுவது
ஒரு விதமான சவால். ஏனெனில் எல்லா விஷயங்களையும் வசனமாகவே சொல்ல வேண்டும்.
ஒரு கிராமம்
என்பதை …… திரைப்படமாக, காட்சியாக சொல்லும் போது, 20 வினாடிகளில் ஒரு குளம், ஒரு
வயல், ஒரு வீடு என படம் பிடித்து…. மிகவும் எளிமையாக சொல்லி விடலாம்.
அதே கிராமத்தை…. கதையாக எழுதும் போது, இரு பத்திகளில் வரிந்து வரிந்து எழுதி விடலாம்… ஆனால் ஒரு கிராமம் என்பதை வானொலியில் வெறும் ஒலியாக சொல்லும் போது…………. ஹூம்…. கொஞ்சம் கடினம் தான்…. என்ன செய்யலாம்….. முன்னுரை ஒன்றை அமைக்கலாம்…. எப்படி… ’பச்சை புல் போர்த்திய வயல்களும் நீர் நிறைந்த குளங்களும் அடங்கிய ஒரு அழகிய கிராமமே நம் கதை நடக்கும் ஊர்………. ‘ என சொல்லலாம்…..
முன்னுரை என பிண்ணனிக்குரலாக
ஒலிக்க செய்வது ஒரு மிக பழைய உத்தி, அதுவும் இல்லாமல் வீரியம் குறைந்த ஒரு
அணுகுமுறை. வேறு வழியே இல்லாத போது முன்னுரை எனும் உத்தியை வைக்க வேண்டும்,
இல்லாமல் அதை தவிர்த்து, கேட்கும் நேயர்களின் மனதில் இந்த கிராமத்தை எப்படி
காட்சியாக வரைவது என எப்போதும் சிந்திப்பேன்… முயலுவேன்….
பேசுவர் யார்,
அவரின் குணாதிசயம் என்ன, அவர் யாருடன் உரையாடுகிறார், அவருக்கும் இவருக்குமான உறவு
என்ன, எங்கே பேசுகிறார்கள் வீட்டிலா ரோட்டிலா, எப்போது பேசுகிறார்கள் பகலிலா
அல்லது இரவிலா என எல்லா பரிமாணங்களையும் வசனங்களில் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு
கீழுள்ள உரையாடல்களை கவனியுங்களேன்.
( காலிங் பெல் ஒலி…………………………….. )
பெண் குரல்
|
வர்றேன்...வர்றேன்...
ஆபிஸ் போயிட்டு வந்தா, இவ்வளவு என்ன அவசரம்... (கதவு திறக்கப்படும் ஓசை) .... அதான் வர்றேன்ல… அதுக்குள்ள என்னங்க….
|
ஆண் குரல்
|
எங்க
இவ்வளவு நேரம்….
|
பெண் குரல்
|
பின்னால
துணி காயப் போட்டுக்கிட்டு இருந்தேன்…
|
ஆண் குரல்
|
ஓ….. சரி….
புள்ளைங்க எங்க
|
பெண் குரல்
|
ரெண்டும்
டியூஷன் போயாச்சு…
|
ஆண் குரல்
|
ஓஹோ…
சின்னவளுக்கு இருமல் இருந்துச்சே… அப்படியுமா டியூஷன் அனுப்பிச்ச……
|
இந்த
உரையாடல்களை கேட்டவுடன் 10 வினாடிகளுக்குள் எத்தனை தகவல்கள் வருகிறதென பார்ப்போம்
- 1. அலுவலகத்துக்கு செல்லும் புருஷன்…….. அவனுடைய வீட்டுக்கு வருகிறான்
- 2. மனைவி – ஹோம் மேக்கர். வீட்டு வேலை செய்து கொண்டு பிசியாக இருக்கிறாள்.
- 3. அவர்களுக்கு 2 பிள்ளைகள்
- 4. சின்ன பெண்ணுக்கு உடல் சரியில்லை
- 5. காட்சி நடப்பது வீட்டில்
- 6. காட்சி நடப்பது ஒரு மாலையில்
இப்படி ஒரு
உரையாடலின் ஊடே தகவல்களை தர வேண்டும். இயல்பாகவும் இருக்க வேண்டும், சுவாரசியமும்
செய்ய வேண்டும், அதே நேரம், கேட்கும் நேயர்களுக்கு எந்த குழப்பமும் இல்லாமல்……….
கேள்வியே கேட்காத தெளிவில், விஷயங்களை சொல்ல வேண்டும்.
வசனங்கள் எழுதி
முடித்து விட்டு, நாமே ஒரு நேயராக இருந்து கொண்டு, கண் கொத்தி பாம்பாக எல்லாம்
புரிகிறதா, தகவல்கள் திணிக்கப்பட்டு செயற்கையாக இருக்கிறதா என கவனமாக பார்க்க
வேண்டும். மிகவும் சுவாரசியமான பணி இது.
கதையில்
சொல்லப்படும் குடும்பத்தை நேயர்களுக்கு பிடிக்க வேண்டும், இல்லையெனில் கதையில்
பேசப்படும் பிரச்சனை உணர்வு பூர்வமாக உரைக்காது… அதனால் நேயர்கள் தன்னை தொடர்பு
படுத்தி இந்த குடும்பத்துடன் இணைய வேண்டும் என சுவாரசியமாக அமைத்த அந்த காட்சி, இரு
குழந்தைகள் டிவி ரிமோட்டுக்கு சண்டை செய்வது போல், தங்களுக்கு பிடித்த
நிகழ்ச்சிகள் குறித்து பேசுவது போல், காட்சி அமைத்து எழுதி எடுத்து சென்றேன். கடைசியில்
தூரப் போட வேண்டியதாயிற்று.
ஆம், ஆல் இந்தியா ரேடியோ இயக்குனர் என்னிடம் ‘ சீன்
நல்லா இருக்கு, ஆனா சார், குழந்தை நட்சத்திரங்கள் நம் நிலையத்தில் இப்போது இல்லை, எனவே
அந்த கதா பாத்திரங்களை தவிர்க்க முடியுமா என்றார்….
‘அதற்கென்ன
சார், செய்தால் போயிற்று என காட்சியை மாற்றியமைத்தேன். பிள்ளைகளை……. பாவம்…..
டியூஷனுக்கு அனுப்பி விட்டு, கணவன் மனைவியை கல்யாண அனிவர்சரி கொண்டாடும் படி
காட்சியை மாற்றி அமைத்து எழுதினேன்…. கணவன் மனைவியின் அன்னியோன்யத்தையும்
அன்பையும் கொண்டு, கேட்கும் நேயர்களுக்கு…. பிடிக்கும் விதமாக மாற்றி அமைக்க
வேண்டியதாயிற்று.
வானொலி
நாடகங்கள் ஒரு வித்தியாசமான தளம். அதன் நிறை குறை அறிந்து உணர்ந்து ரசித்தால் அது
தரும் இன்பம் அலாதியானது.
வானொலி நாடகங்கள்
இன்று குறைந்து போயின. அதற்க்கான நேயர் வட்டமும் சுருங்கியதாகவே இருப்பது
துரதிருஷ்டம்.
எது
எப்படியோ…. என்னை வளர்த்த இந்த கலை வடிவம் எப்போதுமே எனக்கு பிடிக்கும். வரும்
காலத்தில் ஒலி வடிவ இந்த கலை வடிவம் இன்னும் மேன்மை பெறட்டும் என ஆசிக்கிறேன்.