பக்கங்கள்

தியானமும் யோகமும் ஒரு பார்வை

(’ஈகரை’ அழைத்திருந்த கட்டுரை போட்டிக்கு 3 வருடங்களுக்கு முன் எழுதியது. உங்களுக்காக இங்கு பிரசுரிக்கிறேன்)

மக்களே, மக்களின் மக்களேபெருங்குடி மக்களேவலை உலகில் மிக பிரபலமான கூகிள்  தேடல்ல, முதல் இடம் வகிப்பது செக்ஸ்…. அல்லது கிளுகிளுப்பு. கிளுகிளுப்புக்கு அடுத்தபடியா மக்கள்  தேடுற  கீ  வேர்டு   ஆன்மீக பயிற்சிகள் தான்.

அடேயப்பா!!! ஆன்மீக பயிற்சிகளுக்கு இத்தனை பிரபலமா... அவ்வளவூ மவுசு. ஏன் இந்த பவுசுன்னு யோசிச்சு அதையே தலைப்பா ஆக்கி போட்டி வைச்ச ஈகரைக்கு ஒரு சபாஷ்தியானமும் யோகமும் ஒரு கை (பார்வை) பார்த்து புடலாம்.
 
ஆன்மீகம் என்றதுமே ஒரு ஆழமான கேள்வி கிளம்பும். கரெக்டா  சொல்லுங்க இந்த ஆன்மீக பயிற்சிகள்ல  உண்மை இருக்கா, இல்ல இதெல்லாம் வெத்து வேட்டா, வெறும் ஏமாத்து   வேலைதான என இந்த ஒரு கேள்வி பரவலா இருக்கு. இந்த கேள்விகளுக்கு விடை காண முயலுவதே இக்கட்டுரை.

பரமார்த்த குரு கதையிலேஅவர் சொல்லுவார். நீச்சல்ல என்னென்ன வகை உண்டோ  அதை எல்லாம் தெரிஞ்சுகிட்டு,   எந்த  சந்தேகமும் வராத வகையிலே  கத்துகிடுற வரைக்கும் ஒரு சொட்டு தண்ணிய தொட மாட்டேன் என்றாராம்.  அவர் சொல்றதுல நியாயம் இருக்குது... என்றாலும் இதெல்லாம் நடக்குற கதையா.

வாசித்தும் கேட்டும், நமக்குள் தகவல்களாய் சேர்த்து இருக்கும் சில ஆன்மீக தகவல்களை அலசி ஆராய்வது அவசியம். நிலக்கரியை பட்டை தீட்டினாலே அது மின்னும் வைரம் ஆகும். சுய சிந்தனையும், பயிற்சியும் முயற்சியும் இருந்தாலே, ஆன்மீகம் பற்றிய உண்மை அறிய முடியும்.

அப்படி ஒரு முயற்சியில்ஆசனம் என குப்புற விழுந்து, ஆன்மீக பயிற்சிகள் சிலவற்றில் என்னை ஈடுபடுத்தி, மூக்க பிடிச்சு மூச்ச படிச்சு தியானம் என ட்ரெயின் விட்டு கொஞ்ச காலமா இந்த விசயத்தை டிரை பண்ணுறேன்.  என் அனுபவத்தின் அரைகுறை உணர்வுகளை இங்கே மகிழ்ச்சியாய் பங்கு வைக்கிறேன்.
சம்மணம் போட்டு உக்கார்ந்து தியானம் என ஒரு சிலரும், கோவில் சென்று மனமுருகி பிரார்த்திக்கும் பக்தி மார்க்கம் என சிலரும், உடலை உறுதி செய்து ஆசனம் என சிலரும் பாதைகள் பலவாயினும் போய் சேரும் இடம் ஒன்றுதான். அது ஆன்ம தரிசனம் தான்.
நான் யோகா செய்யுறேன் என்பது இன்று பரவலாய் சொல்ல கேட்டு இருக்கிறோம். அதில் இருக்குது முதல் தவறு. யோகா என்பது செய்ய முடியாது. யோகம் என்பது ஒரு நிலையே. ரொம்ப பேரு மாதிரி நானும், யோகா என்றதும் கைய வளைச்சு கால வளைச்சு உக்காரதுன்னு நினைச்சேன்.

சில பயிற்சிகளில் ஈடுபடுத்தி, சில தகவல் கேட்டதும் புரிந்தது, ஆசனம் என்பது தான் மேற் சொன்ன பயிற்சிகள்.  ஆசனம் என்பது உடலின் நிலை, யோகம் என்பது வேறு ஒரு நிலை.

மனசும் உடம்பும் இணைந்து, எந்த சண்டையும் இல்லாம , சொல்றத கேட்டு சும்மா இருக்கிறது தான் யோக நிலை.

நம் மனிதனுக்கு உடம்பும் மனதும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருக்கும். செய்வோமா என மனசு சொன்னால், இல்லே நான் டையர்டா இருக்கேன் என உடல் ஜகா வாங்கும். உடம்பு எனக்கு இன்னும் கொஞ்சம் ஊக்கம் வேணும், ஒரு டம்ளர் காபி வேணும் எனும்போது, மனசு சொல்லும் இப்பதானே குடிச்ச  எவ்வளவு  குடிப்பேடா என குத்தி காட்டும்.
 
இப்படி எல்லாம் முரண்டு செய்யாமல், அமைதியாய், அன்பாய் உடலும் மனமும் நட்பில் இருக்கும் ஒரு நிலையே யோக நிலை.

உடலின் நிலை ஆசனம் வழியாய் யோகா நிலை அடைந்தால் யோகாசனம் அவ்வளவுதான். யோகாசனம் என விரிவாய் சொல்லாமல் ஷார்ட்டா  சொன்னதுலே அர்த்தமே மாறி போனது தான் இந்த குளறு படி.

என்னது....!!!! மனசும் உடம்பும் சேர்ந்த..... சண்டை போடாத .... ஒரு நிலையா, அப்படி எல்லாம் ஒண்ணு இருக்கா???..... என வாசகருக்கு மனதில் தோன்றும். பகுத்தறிவு பாசறை கூட இது மன நோய் என வரிந்து கட்டி கொண்டு வரும். என்றாலும் இதில் வாதாடவோ, விவாதமோ செய்யாமல் எதாவது ஒரு பயிற்சியை முயற்சி செய்தால் முடிவு தெரியும்.

இதில் பிரச்சினை என்ன வென்றால், சுட்சு போடவுடன் லைட்டு எரியுற மாதிரி ஒரே முயற்சில முடிவு தெரியாதது தான் இதில் துரதிருஷ்டம். ஒருவருக்கு ஒத்து வரும் பயிற்சிகள் சிலருக்கு உதவாது. இன்னும் போக,  சிலருக்கு நாட்களும் சிலருக்கு மாதங்களும், சிலருக்கு வருடங்களும் ஆகும். இருக்குதான்னு ஒரு கை பார்ப்பேன் என தீர்மானம் இருந்தால் துவளாத பயிற்சி இருந்தால் பலன் உண்டாகும்.

அட போங்கப்பா தானா போற மூச்சு காற்ற  அனாவசியமா எதுக்கு புடிச்சு வைக்கணும், கையையும் காலையும் வளைச்சா மூச்சு புடிப்பு தான் வரும் என பயந்து கொண்டுதான் இருந்தேன்.

ஆன்மீக பயிற்சிகள் என்றதுமே நமக்குள் எச்சரிக்கை மணி ஒலித்து!!! டேன்ஜெர் என சிவப்பு ஒளி எறிவதும்....  இயல்பே.  அதற்கு காரணம் இன்றைய  சில போலி சாமியார்களே. இதற்கும் ஒரு தீர்வு உண்டு.  நம் ஆன்மிகம் தேடும் இலக்கு என்ன என தெளிவாய் தெரிந்தால் இந்த பொறி இடம் இருந்தும் விடு படலாம்.

இந்த ஆன்மீக பயிற்சி எல்லாம் எதற்கு. இதை செய்து என்ன ஆக வேண்டும், நமக்கு என்ன வேண்டும். என்ன செய்வதாய் உத்தேசம்.

ஒன்று இன்னும் கொஞ்சம் காசு வேணும், மேலுக்கு சுகம் வேணும், குடும்பம் வேணும், பிள்ளை வேணும், இப்படி நிறைய வேணும் லிஸ்ட். இந்த லிஸ்ட் நமக்கு அடிப்படையாய் தருவது என்ன. மகிச்சி, நிறைவு, நிம்மதி, சந்தோசம் எல்லாம் அடங்கிய ஒரு தளம். இந்த வேணும் லிஸ்ட் எனும் படி கடந்து போனாதான் நிம்மதி தளம் வரும் என எதிர்பார்க்காமல், மகிச்சி என்பது மனதிலே உண்டு என புரிவது தெளிவது சுலபம்.

அடுத்தது இது என்னன்னு கண்டு புடிச்சு அத வைச்சு விவாதம் பண்ணவோ, வியாபாரம் பண்ணவோ திட்டம் இருப்பது இன்னொரு திசைக்கு இப்பயணத்தை எடுத்து செல்லும்.

இப்படி ஒரு பயிற்சிக்கு எதிர்பார்ப்பே இல்லை என சொல்வது மகா உத்தமம். இதை நமக்கே நமக்காய் வேறு யாருக்காகவோ எதற்காகவோ இல்லை என உணர்ந்தால் மிகவும் நல்லது. அதிலும்  எதிர்பார்ப்பை எவ்வளவு குறைத்து கொள்கிறோமோ அதனை எளிதாகும்.  


சரி, புரிகிறது செய்ஞ்சு பார்க்கலாம்..... என்னதான் இருக்குன்னு பார்க்கலாம் என அட்வெஞ்சரஸ் மன நிலை வர வேண்டும். இது எளிதல்ல, பழகிய தெரிந்த நிலைகளை விட்டு விட நாம் பயம் கொள்வோம். இருப்பதே இருக்கட்டுமே, புதுசா எதுக்கு ஒண்ணு என சிந்திக்காமல், ஒரு கை பார்க்கலாம் என கிளம்பும் மன நிலைக்கு வாசகர் வந்து இருப்பீர்கள் எனும் நம்பிக்கையில் தொடரலாம்.

ஆன்மீக பயிற்சிகளில் தியானம் மிக முக்கியமான ஒரு வார்த்தை. இந்த வார்த்தை இல்லாத ஆன்மீக பயிற்சியே இல்லை. ஏன் யோகாசனம் கூட இல்லாது இருக்கலாம்.. ஆனால் தியானம் இல்லாத ஆன்மீகம் இல்லை. ஏன் எல்லா மதங்களிலும் இந்த வார்த்தை உண்டு. சரி தியானம் என்பது என்ன....

தியானத்திற்கு எத்தனையோ விளக்கங்களும் வியாக்கியானங்களும் கேட்டு இருந்தாலும் சுருக்கமாய் தெளிவாய், நான் கேட்ட ஒரு விளக்கம் எனக்கு புடித்தது. இதை சொன்ன சுவாமியார் நன்றாக கிளீன் ஷேவ் செய்து, டிப்டாப்பாக பேண்டு சர்ட்டு  போட்ட ஒரு குடும்பஸ்தனான ஆன்மீக குரு. அவரது பெயர்  அமரா. இந்த பெங்களூர் நண்பருக்கும் இது போல் எனக்கு தகவல்களும் ஊக்கமும் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

உடல் மனம் புத்தி எல்லாம் அமைதியாய் ஆவதே தியானம். Silencing of Body Mind and Intellect is meditation.

காலில் ஒரு எறும்பு ஊர்ந்தால் டேய்....!!!! அங்க என்னன்னு பாரு...   என்னவோ குரு குருங்குதுரா, என காலின் உள்ளே  உள்ள நரம்பு மூளைக்கு செய்தி சொல்லும் அல்லவா. காற்று விரைவாக வீசினால் கூட உடல் சிலிர்த்து கொள்ளும் அல்லவா. அப்படி யென்றால் என்ன அர்த்தம் உடல், தன்னை தற்காத்துக் கொள்ள, விழிப்பாக என்ன நடக்குது என பார்த்து கொண்டு இருக்கும். தூங்கும் சமயத்தில் கூட இந்த எச்சரிக்கை உணர்வு தூங்குவதில்லை.

அப்படி அலர்ட்டா இருக்கிற உடம்ப அன்போட, நீ ரொம்ப வேலை செஞ்ச்சுட்ட, கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக்கோ என அமைதி படுத்தி விட்டு, ஒரு அரை மணி நேரம் சும்மா இருக்கா முடியுமா. உடல் என்ற ஒன்று இருப்பதாய் மூளை அலட்டிக் கொள்ளாமல், ஓய்வு எடுக்க முடியுமா.... இது முதல் படி. ரொம்ப்ப கஷ்டம். ஒரு பத்து நிமிஷம் ஒரே போஸ்ல உக்கர்ந்தவுடன் குறுக்கு புடிச்சுக்கும். மூதுகு வலிக்கும், கால் வலிக்கும்.


ஒரு பரிசோதனையில, 26 நிமிசம் அமைதியா உடல் ஆடாம அசையாம இலகுவா ரிலாக்ஸ்டாக இருந்தா அந்த ஓய்வெடுக்க கூடிய நிலைக்கு உடல் சென்று விடுகிறது என கண்டுபிடித்தார்கள்.

சரி, இந்த உடல் அமைதியுடன் கூடவே, செய்ய வேண்டியது மன அல்லது சிந்தனை அமைதி.... உடம்ப அமைதியாக்கி உக்காரும்போது தான் ஊர் பட்ட யோசனை வரும். ஆண்டிபட்டில இருந்து அமெரிக்கா வரைக்கும் போயிட்டு வரும் நம்ம மனசு. அதையும் அன்போட, ஹாய்.... ஹௌ ஆர் யூ.... நீ ரொம்ப வேலை செஞ்ச்சுட்ட, கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக்கோ. இந்த ஒரு அரை மணி நேரம் சிந்திக்கலேண்ணா உலகத்துல ஒண்ணும் ஆகாது. என எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் வெற்றமைதியாய் இருத்தல் இரண்டாம் நிலை. மனதை அமைதி படுத்தி விட்டு, சிந்தனை எனும் வேலை இல்லாமல் இருப்பது ரொம்ப.... ரொம்ப..... கஷ்டம்.

இந்த இரண்டையும் அமைதியாக்கினா கூட, ஒரு உணர்வு இன்னும் முழிச்சிக்கிட்டே தான் இருக்கும். அது தான் இந்த புத்தி. டே பார்ரா..... உடம்பு காத்து மாதிரி இருக்குது, உடம்பு இருக்கிற மாதிரியே தெரியல, உடம்பு அமைதி ஆயிருசுடா. அப்புறம் பெரிசா யோசனையும் இல்ல, மனசும் அமைதி ஆயிருச்சு, இது தானா தியானம்... ஆமா நான் தியானம் பண்றேன்... அடடே நல்லா இருக்கே.. இந்தா இந்த தியானத்த குறிச்சு வைச்சிக்கோ ... அப்புறம்.... இப்படி சொவது புத்தி. மனசையும் புத்தியையும் ஏன் தனித்தனியா சொல்லணும் எல்லாம் ஒண்ணுதான என சிலர் நினைக்கலாம்.

மனசையும் புத்தியையும் வேறு வேறு இயக்கங்கள் செயலாற்றுகின்றன. நினைவும், சுயமும் (EGO) இயக்கும் தளமே மனசு. புத்தி மாறுபட்ட தளத்திலேயே பணியாற்றும்.

வாத்தியார் வேலை பார்க்கும் புத்தியையும். தலையில் தட்டி அமைதி ஆக்கினால், ஒரு நிலை வரும் அதுவே உடல் மனம் புத்தி எல்லாம் அமைதியாய் ஜிவ்வுன்னு  ஒரு சிலிர்ப்பு.  

இதை ஒரே நாளில் எட்ட முடியாது என நினைக்கிறேன். வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் இந்த நிலை அடையும் போது, அதன் இனிமையை விளக்க சிரமம். ஆனால் மிகவும் இனிமையானது. புத்துணர்ச்சி புயல் மாதிரி உடலிலும் மனசிலும் வீசும். இன்று புதியதாய் பிறந்தது போல தோன்றும்.

இப்படி வேணா வைச்சுக்கலாமே.... ஒரு இரண்டு வாரம் நல்ல தூக்கம்..... தூங்கினா எப்படி இருக்கும், பத்து தடவை பல் விளக்கி, எட்டு தடவை குளிச்சு தும்பை பூ போல டிரஸ் போட்டு ஊட்டி குளிர்ல டி குடிச்சா எப்படி ஜில்லுனு இருக்குமோ அப்படி இருக்கும். பிரெஷா புதுசா பகுமானமா இருக்கும்.,

ஆன்மிகம் என்றதும் அப்படி இப்படி என அறிவுரை சொல்லாது, பயம் காட்டமால், எளிமையாய் தங்களை ஊக்கு விக்கும் எண்ணமே இந்த கட்டுரையின் நோக்கம். ஈகரையின் இந்த கட்டுரை போட்டி தரும் மிக பெரிய பரிசு இதுவே.

வாழ்வை புரிந்து, மனிதம் வளர்ந்தால், ஆன்மிகம் தன் இலக்கு அடையும்.