பொங்கலின் அடுத்த தினத்துக்குத்தான்… அடேயப்பா!!! எத்தனை பெயர்கள். மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், கரி நாள். இதில் இந்த கரிநாள்…. !!! ஏன் இந்த பெயர் வந்தது... எனத் தெரியவில்லை … தெரிந்தால் சொல்லுங்களேன். (ஆட்டுக் / கோழிக் கறி சாப்பிடும் நாள் என குறிப்பிடுவதாய் இருந்தால்….. சூப்பர்…. சப்புக் கொட்டிக்கொண்டு அங்கீகரித்து விடலாம்..)
பொங்கல் கொண்டாடிய எல்லோரும் நிச்சயம் எடுக்க வேண்டிய அடுத்த முடிவு கொண்டாட்டத்திற்கான அடுத்தகட்டம். அதுவே இந்த காணும் பொங்கலுக்கான ஏற்பாடு. திட்டமிட்டு அருகாமையில் ஒரு பயணம் செல்வது குடும்பமாக. பண்டை தமிழரின் நிலாச்சோரு நிகர்த்த நிகழ்வு எனவும் கொள்ளலாம்.
வீட்டின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை. கடமைக்காய் குடும்பத் தலைவர்… ஒரு நாள் வெளியில் செல்லும் ஆசையோடு - சுதந்திரக் காற்றுக்காய் குடும்பத் தலைவி…., அடுத்த வீட்டு மல்லிகா புதுப் புடவையின் நிறமும் பவுசும் தெரிந்து விடும் எனும் நப்பாசையோடு. பருவத்தின் வாயிலில் உள்ளோர்கள்…. நாங்க இருக்கோம்…. எங்களையும் கவனிங்கப்பா…. என தங்களை விளம்பரப் படுத்தும் குதூகூலத்துடன்.
என் சொந்த ஊர் தூத்துக்குடி என்பதால் அது சார்ந்த நினைவுகளே இங்கு பதிக்கப்பட்டிருக்கிறது. முயல் தீவு, சிங்காரத் தோப்பு, கோரம் பள்ளம், ரோச் பூங்கா, கட்டபொம்மன் கோட்டை என மற்ற நாட்களில் மறந்திருந்த கேளிக்கையின் இடங்கள் எல்லாவற்றிற்கும் இன்னிக்கு மவுசு அதிகமாச்சு. மாநகராட்சி புண்ணியத்தில் சுத்தம் செய்யப்பட்டு இந்த விழாக்களுக்கென ஒப்பனை செய்து... ரெடியாக இருக்கும் இந்த இடங்கள்.
இவ்விடங்களுக்கு போய் வர என இன்று என பிரத்யேகமாக வாகனங்கள் தயாராகும். வருடம் பூரா மீன் பிடித்த படகுகள் எல்லாம் இன்று மீன் பிடி, வேலை நிறுத்தி பயணிகள் வாகனம் ஆகும். ஸ்பெஷல் பஸ்கள் என உபரி பேருந்துகள் - பேருந்து நிலையத்தை நிறைக்கும். என்ன ஒரு விசேஷம், ஸ்பெஷல் சர்வீஸ் என்பதால் சேருமிடத்தை கையால் எழுதி, கோணல் மாணலாய் சில சமயம் தப்பும் தவறுமாய் பெயர்ப் பலகை இருக்கும். என்றாலும் நம் முகத்தில் மகிழ்ச்சி வந்து சிரிக்க தூண்டும் இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்த்தான் மகிழ்வின் ஸ்டாம்ப் எனவும் கொள்ளலாம்.
பயணிகள் அனைவரும், கை நிறைய பொதிகளுடன் குடும்பத்துடன் குஷாலாய் கிளம்பி விடுவார்கள். உட்கார விரிப்புக்கள், உணவு, கொறிக்க ஸ்னாக்ஸ் மற்றும் விளையாட இண்டோர் கேம்ஸ் – தாயக் கட்டைகள், பாம்பு கட்டம், செஸ் முதலியன.
சோத்து பொதியில் முதலாக, முந்தைய நாள் வெண் பொங்கல் இன்று புதியது போல சூடு பண்ணி பாத்திரத்தில் இடம் பிடிக்கும். புலால் உண்ணும் கூட்டத்தின் சாப்பாட்டு பொதியில், வருத்த கறி சிவந்த மேனியில் எண்ணை குளித்து மூக்கை துளைக்கும். அது என்னவோ தெரியவில்லை, நம்ம வீட்ட விட அடுத்த வீட்டு கறிக் குழம்புக்கு மணம் ஜாஸ்தி.
குடும்பத்தினருக்கிடையில் எப்போதும் சண்டை உண்டு - யார் சோத்து மூட்டை தூக்க என்று. பொதியிடும்போதே அக்கரையாய் நாம் ஒரு ஆலோசனை சொல்வோம். தூக்கி வீச ஏதுவாய் இலைகளிலும், காகிதத்திலும் பொதி தயார் செய்ய சொன்னாலும், அம்மா ஏனோ… எப்போதும் பாத்திரத்திலே அடைத்திடுவார், அவருக்கு அது ஈசியாய் இருப்பதால். நமக்குத்தான் ஆத்திரமாய் வார்த்தை வரும். தூக்கிச் செல்வது ஒரு சுமை என்றால், எச்சில் பாத்திரத்தை மறுபடியும் அல்லவா தூக்கி சுமக்க வேண்டியிருக்கும்…. காலிப் பாத்திரமே ஆனாலும் கூட…
நல்லதாய் இடம் பிடிக்க எப்போதும் ஆசை உண்டு, அதற்கென, ஒவ்வொரு முறையும் சீக்கிரமாய் கிளம்ப வேண்டும்..... சூரிய உதயத்துக்கு பக்கமாக என திட்டம் ஜகஜோதியாய் இருந்தாலும், ஏனோ தெரியவில்லை, எப்போதும் தாமதமே ஆகும். என்றாலும் பரவாயில்லை. போகின்ற வழி எல்லாம் சந்தோசமாய் தெரியும் மனிதர்கள் நம் உற்சாகம் கூட்டுவர்.
சிலர் நம்மை திகைக்க வைப்பர். நாம் செல்லலாம் என தீர்மானித்த இலக்கு அடுத்தவர் ஆலோசனையில் கேள்வியாய் நிற்கும். முயல் தீவில குடிக்கத் தண்ணியே இல்லீங்களே…. கட்டபொம்மன் கோட்டையில நல்ல தண்ணி, இதமா நிறைய மரம். அதுதாங்க பெட்டர். என கேட்டவுடன்… ஐய்யய்யா… தப்பா யோசிச்சுட்டமோ…. என தயங்கி நிற்கும்.
பேருந்து நிலையத்தில் மீண்டும் நமக்கு தயக்கம், மறுபடியும் சோதனை. நாம் செல்ல வேண்டிய இலக்கில் பேருந்து குறைவாய் இருக்கும் அல்லது மிகுந்த கூட்டத்தோடு இருக்கும். அது ஏங்க இப்படி இருக்குது என இன்று வரை விடை இல்லை. நம்ம போறதுக்கு எதிர் திசையில போக நிறைய பஸ்சு…. அது மட்டுமா… உக்கார்றதுக்கு இடம் வேற.
எப்படியோ ஒரு முடிவெடுக்காமல் நாம் நின்று கொண்டிருக்கும் போதே தொலைவில் நம் கண்ணில் தெரியும் நமக்கான பேருந்து. உடனே பரபரப்பு உடம்பில் தொற்றும். கீழ் வைத்திருந்த பொதிகளை பத்திரப்படுத்தி விட்டு, உட்கார இடம் தேடி, உதிரம் உச்சத்தில் ஓடும். ஓடி, சாடி, தேடி இடம் கிடைத்து பெருமூச்சு வரும் போது , மனம் உலகையே வென்றதாய் இருக்கும்.
இடம் கிடைக்காது நிற்கின்ற சக பிரயாணிகளை பாவமாய் பார்க்க தோன்றும். என்றாலும் சில சமயம் சிக்கல் வரும். அங்கு நிற்பவர், தெரிந்தவராய் இருந்து, நிற்கும் தகுதியை கடந்து இருந்தால் என்ன செய்வது. பள்ளியின் வாத்தியாராய் இருக்கலாம், உறவில் மூத்தவராய் இருக்கலாம், உடலில் முதிர்ந்தோ அல்லது குழந்தையை தூக்கி கொண்டோ நிற்கலாம். அப்படி என்றால் நம் சீட் பறி போகும்.
சன்னலோர இருக்கையும் கிடைத்து, அமர்ந்திருந்தால் ஓடாத பஸ்சில் - தூசியான காலடியில், உணவை வைக்க மனம் இல்லாது மடியிலே வைக்க நேரிடும் கொடுமை சில சமயம் உண்டு. என்ன செய்வது சில சமயம்… அவை சுடும் வாய்ப்பு உண்டு. அது நம்மிடம் வந்த உணவுப் பொதியை பொறுத்தது. பேருந்து கிளம்பாமல் காத்திருத்தல் மிகக் கொடுமை, என்றாலும் அந்த பேருந்தின் வயிறு பிளந்து காக்கி சட்டை ஓட்டுனராய் அமர சந்தோசமாய் ஒரு பெருமூச்சு வரும். உடம்பெல்லாம் விரைப்பாகும். வண்டி நகர துவங்க, அடித்து வீசும் முரட்டு காற்று வியர்த்த தேகத்தில் இன்பமாய் படரும்.
இன்று கூட்டம் அதிகமானதால், பயணசீட்டு வழங்க வேண்டி ஊர் எல்லையில் பஸ் நிற்கும்போது சுத்த காற்று உத்வேகம் தரும். இனிமையாக இருக்கும். என்றாலும் கூட்டத்தோடு மல்லுக் கட்டி, டிக்கெட் டிக்கெட்டு என கத்தி தொண்டை கட்டிய கண்டெக்டர்…. பாவம்!!! என தோன்றும். அதோடு கூட, விடுமுறை நாளிலும் வேலை செய்யும் ஓட்டுனர் நடத்துனர் அவர் தம் குடும்பம் என இறக்கம் லேசாய் எட்டி பார்க்கும். நம் நிலமைக்கு ஆண்டவனை நோக்கி... நெஞ்சார நன்றி சொல்லும்.
இலக்கை அடைந்ததும் நல்ல இடம் தேடி கண்கள் அலையும். தேர்வு செய்த இடத்தில் அரை மனதாய் போர்வை விரிக்க படும். இன்னும் நல்ல இடம் இருந்திருக்கலாம், இருந்தாலும் பரவாயில்லை என்பதாகவே என்றும் விரிக்கப்படும். நாம் வீசி விரிக்க, துவைக்கும் கடினம் தோன்ற அக்கரையாய் அம்மா மட்டும் பார்ப்பார். பார்த்து விரியேண்டா என சில சமயம் சொல்வார். அந்த ‘பார்த்து….’ எனபதின் அழுத்தம் இன்றுதானே புரிகிறது. விரித்து வைத்த போர்வையிலே, மர நிழலிலே நம் இருப்பு நிச்சயம ஆகும். வேறு ஆட்களுக்கில்லை, இனி இது நம் இடம், நாம் எழுந்து செல்லும் வரை. சக மனிதர் சுற்றி இருப்பார் என்றாலும் நாம் விரித்த போர்வையே நம் எல்லையாகி விடும்.
மொத்த குடும்பமும் நெருங்கி அமர்ந்து, அனுசரணையாக இணைத்திடும் அந்த நேரம் இனிமையானது. அத்தனை மனங்களும் இன்பமாய் இணையும் குடும்ப அன்பிலே. நேற்று போட்ட சண்டை கூட இன்று மறந்திடும். இது நம் குடும்பம் என்று பெருமையாய் உணரும் தருணம்.
உணவுக்கு ஆசைப் பட்டு நாய்கள் கூட நம்மை சுற்றி குழைந்து வால் ஆட்டிக் கொண்டும் நிற்கும் வாய்ப்பு உண்டு. அது நம் உணவின் மணத்தை பொறுத்தே என்பது மறுக்க முடியாத உண்மை சோத்து பொட்டலம் பிரிக்கலாமா என்று பெரிசுகள் சொல்லும், உடனடியாய் மறுத்து இளம் சோட்டு உறுப்பினர் எல்லாம் ஒரு நடை செல்ல ஆசை படுவார் ..
புதிய சூழ்நிலையில் சாப்பாட்டின் சுவை கூடும். அரக்க பரக்க சாப்பிட்ட மற்றைய தினத்தின் முறை மறந்து ஆர அமர உண்பது ஒரு புதிய அனுபவம். பறந்து வரும் தூசிகூட எளிதாக மறந்து போகும், சிரமம் இல்லாமல் அவை நம் உணவோடும் கலக்கும்.
நண்பர்கள் சிலர் ஒரே உடையில், சீருடையாய் கூட்டமாய் திறிந்திடுவார், தனி மனித அடையாளமோ அங்கிகாரமோ வேண்டாத / விரும்பாத சில காளைகள். குழுமத்தில் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட மனது உடையவர் எடுக்கும் முடிவு அது. சுற்றுலாவே வந்தாலும் கடமையாய் காதில் ஈயர்போன் மாட்டி இசை கேட்கும் சிலர்…. என்றாலும் ஒரு கேள்வி உண்டு. அங்கு பாட்டு கேட்பது உண்மையிலேயே தங்களுக்காகவா அல்லது பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவா…
நெருங்கிய நண்பராக இருக்கலாம், வகுப்பறையில் அடுத்த இருக்கையிலும் இருக்கலாம், என்றாலும் அவனது குடும்பத்தை அறிய மாட்டோம் . ஆனாலும் இன்று அந்த அறிமுகம் கிடைக்கும். உறவு பலப்படலாம். இனிமேல் ராஜா வீட்டுக்கு போயி, புஸ்தகம் வாங்கிட்டு வர்றேம்மா எனும் போது நம் குடும்பத்திற்கும் விளக்கம் கிடைக்கும்.
இளம் வயதினருக்கு சில நேரம் லாட்டரி அடிக்கலாம். ஆம்… சிலருக்கு காதல் பூக்கும், பூத்த காதல் சிலருக்கு மலரும், சந்தோஷமான மனதில் நல்லதே நடக்கும் அல்லவா. கனவில் உள்ள தேவதையை சிலர் இங்கு தான்… இன்று தான்…. காணுவர், நாளையில் இருந்து அவன் நாற்பது நாட்களுக்கு காதல் கவிதையாக எழுதி திளைப்பான்.
காதல் சிலரை பதம் பார்ப்பதும் உண்டு, வெகு காலமாய் முயன்று வரும் தன் காதல் சிலருக்கு தோற்கும். தன் நாயகியை வேறு ஒருவரோடு காண்பார், நாளை முதல் தாடி வளர்ப்பார். அவரும் கவியாவார்.
சூரியன் மேற்கில் சாய மெதுவாய் கிளம்பி வீடு வந்து சேருவோம், அடுத்த முறை பயணம் எங்கே என்று அன்றே தீர்மானிப்போம், ஆனாலும் எப்படியும் நம் திட்டம் மாறும் என தெரியாமலேயே.
நாளை அலுவல் நோக்கி கொஞ்சம் அசதியுடன் காத்திருப்போம், அடுத்த முறை ஆயதங்கள் மறுபடி இனிமை சேர்க்கும். வாழ்வு ஒரு சுழற்ச்சி….