பக்கங்கள்

போதி மரம் (சிறுகதை)

‘லுக் டூட்ஸ்… அங்கிளும் ஆன்டியும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வர்றாங்க, நிச்சயம் டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க இல்ல, தப்பு செஞ்சுட்டுத்தான் மாட்டிக்கிட்டிருப்பாங்க’ நக்கல் குரலில் அந்த இளைஞன் சொல்ல கூட இருந்த நால்வரும் உரக்க சிரித்தனர்.

அங்கிள் ஆன்டி என அழைக்கப்பட்ட மகாதேவனும் அவர் மனைவியும் அமைதியாய் தளர் நடையில் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஓரத்தில் இருந்த சிமிண்ட் பலகையில் உட்கார்ட்ந்தனர். மழை பெய்து ஓய்ந்திருந்த அந்த முன்னிரவு அமைதியாய் இருந்தது. காற்றுக்கு ஈரத்தில் ஒப்பனை. அடர்த்தியாய் குளிர்ந்ததாய் எதிர்ப்படுபவர் எல்லோரையும் அது வரவேற்றது.


இடுப்பில் கால் சட்டை இருக்க வேண்டிய இடத்திலிருந்து சில செண்டிமீட்டர் கீழே, பார்ப்பவர் பதைபதைத்து ஐயோ கீழே விழுந்துருமோ என அஞ்சும் வகையில் பேண்ட் அணிந்திருந்த கூல் டூட் சொன்னான் ‘மாமு! கிரிமினல்ஸ் யாரு, நம்ம மாதிரி நல்லவன் யாருன்னு இப்பல்லாம் கண்டுபிடிக்கவே முடியுறதில்லடா…. பட்டையும் கொட்டையும் போட்டுட்டு மனுசன கூட போட்டு தள்ளுறாங்க’ மீண்டும் நண்பர் குழாம் இடி இடி என சிரித்தது.


பூனை முடி மீசை அணிந்து, கன்னத்து சதையை பருக்களுக்கு குத்தகை விட்டிருந்த இன்னொடு இளைஞன் கையில் மினுங்கும் சாவிக் கொத்துடன் ஏராளமான சாவிகளுடன் கையில் வைத்து சுற்றிக் கொண்டிருந்தான். விர்.. விர்… என சுத்தும் சத்தம் அவனுக்கு கிறக்கம் தந்தது, அதை லாவகமாக இன்னும் விசையுடன் சுற்றினான். அருகிலிருந்தவன் சொன்னான் ‘ஏண்டா டுபுக்கு, இந்த ஊருல உள்ள எல்லா வீட்டுக்கும் சாவி உன்கிட்ட இருக்கு போல. பார்த்து சுத்துறா. ’ மீண்டும் சிரிப்பின் அலை.

நால்வரில் ஒருவன் ’ஏண்டா, எங்ககிட்ட சொல்லாம, சைடு பிஸ்னசா பூட்டுக்கு சாவி போடுறயா’ விஷமமாக சிரித்து கண்ணடித்தான். மீண்டும் சிரிப்பின் அலை. அந்த கேலியின் இன்னொரு அனர்த்தம் விகாரமானது. தாமதாய் புரிந்தவர்கள் கூட இரண்டாவது முறையாய் சிரித்தார்கள். இப்போது அது அடங்க சற்று நேரமாகியது. மகாதேவனும் அவர் மனைவியும் அந்தகாரத்தை வெறித்த வாறு அமைதியில் இருந்தனர். இந்த சிரிப்பும் கொண்டாட்டமும் அவர்களை தாக்கவே இல்லை. கேலிக்கு உள்ளான சாவி சுழற்றுபவன் லேசாய் வெட்கப்பட்டான், அந்த ஒரு நொடி கவன சிதைவில் கையில் சுழன்றிருந்த சாவிக் கொத்து துள்ளி காற்றில் பறந்து மகாதேவன் முகம் நோக்கி சென்றது. மூக்கு கண்ணாடியில் பட்டு வலது கண் பகுதியில் கண்ணாடி சில்லை உடைத்து விட்டு அவர் காலடியில் விழுந்தது.


மகாதேவன் சட்டென அதிர்ச்சியுடன் உடல் குலுக்கினார். மெதுவாக கவனமாக கண்ணாடி கழற்றினார். மனைவி திரும்பி அவரின் கண்ணையும் தலையையும் பார்த்தார். இடுப்பு சேலையில் மடிப்பில் இருந்த கைக்குட்டையை எடுத்து அவர் கண்களின் இமைகளில் இருந்த கண்ணாடி துண்டுகளை கவனமாக எடுத்தார். சற்றே உடல் வளைத்து அந்த கைக்குட்டையை உதறி மீண்டும் ஒரு முறை கணவனை பார்த்து விட்டு, காதோரம் இருந்த கண்ணாடி துண்டை விலக்கினார். மகாதேவன் கண்ணாடியை கழற்றி கீழே இருந்த துணிப்பைக்குள் வைத்து, உடல் தளர்த்தி பின் சரிந்து அமர்ந்தார்.

அங்கு மௌனம். இரவு சுவர்கோழிகள் சத்தம் காதில் அறைந்து இறைந்தது. நண்பர்கள் இப்போது அமைதியாய் இருந்தனர். அவர்களுக்கு நிகழ்ச்சியின் தீவிரம் புரிந்தது. அமைதியாய் எதுவும் சொல்லாத அந்த தம்பதியை புரியவில்லை. ‘ஓடிறாலாம்டா… ‘ ‘சாவி எடுத்துக்கோடா’ ‘சாரி கேட்டுரு’ இப்படி பலவிதமான ரகசிய சம்பாஷனைகள். ஒருவன் மட்டும் நகர்ந்து மகாதேவன் அருகில் வந்தான்.

‘சாரி….’ வார்த்தைகள் பாதியும் பலவீனமாகவும் வர, மகாதேவன் நிமிர்ந்து பார்த்து பின் குனிந்து அந்த சாவி கொத்தை எடுத்து நீட்டினார். தயக்கமாய் ஒரடி முன்னால் நகர்ந்து சாவி வாங்கிக் கொண்டே ‘தெரியாம பட்டுருச்சு, மன்னிச்சுக்கோங்க அங்கிள்’ எந்த உணர்ச்சியும் இல்லாது அசைவின்றி மகாதேவன் இருந்தார். அந்த பெண்மணியும் அங்கனமே. மீதமுள்ள நண்பர்கள் நகர்ந்து அவர்கள் அருகில் வந்தனர்.

ஆழமாய் அவர்களை ஊடுருவி பார்த்து மகாதேவன் ‘ம்… தெரியும் தெரியாமத்தான் செய்யுறீங்க. செஞ்சு முடிச்ச பின்னால் தான் அதனோட தாக்கம் தெரியுது’. அமைதியாய் அவர் அருகில் இருந்த மனைவி விக்கி குலுங்கி அழுதார். அழுது களைத்திருந்த கண்கள் கண்ணீர் இல்லை என அடம் பிடித்தது.

‘சார், இவ்வளவு நடந்த பின்னாலும் நீங்க அமைதியா இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு சார். எதுவும் பெரிய பிரச்சனையா’. மகாதேவன் தொடர்ந்தார் ‘நீங்க கிண்டலும் கேலியும் செஞ்சது என்ன மட்டம் தட்ட இல்ல. உங்களுக்கு ஜாலியா இருக்கிறதுக்கு மட்டுந்தான். அது புரிஞ்சதால தான் பேசாம இருந்தேன். இந்த வயசு அப்படி, உச்ச கட்டம் சந்தோசம் வேணும், மகிழ்ச்சி வேணும். கூட இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் விட இன்னும் அதிகமா கமெண்ட் அடிச்சு, சிரிப்ப வரவழைக்கணும். அது தான் அவ்வளவு தான் நோக்கம்.

எனக்கும் உங்க வயசுல பையன் இருக்கான். போன வாரத்துல இதே மாதிரி ஃப்ரெண்ட்ஸ் கூட தெரு முனையில கமெண்ட் அடிச்சுக்கிட்டு இருந்தான். இங்க நீங்க எங்கள பண்ணுனது மாதிரி அங்க ஒரு பொண்ணு. அவ பயந்து போயி கவனிக்காம பின்னால நகர சாக்கடைல விழுந்து தலைல அடி பட்டு செத்து போயிட்டா. ஈவ் டிஸிங் கேசு, அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

ஒரு நொடி, ஒரு செயல், நாலு இளைஞர்களோட வாழ்க்கைய அவங்க குடும்பத்தோட வாழ்க்கைய, அந்த பொண்ணு, அவங்க குடும்பத்தோட வாழ்க்கைய புரட்டி போட்டுருச்சு. வாழ்க்கையவே தடம் மாற வைச்சுருச்சு.

அந்த பெண், இன்னும் குலுங்கி குலுங்கி அழ, இருமல் தொண்டையை அடைத்தது. நெஞ்சை பிடித்தவாறு லொக் லொக் என இருமினார். மகாதேவன் நகர்ந்து கீழ் இருந்த பையில் தேடி, தண்ணீர் பாட்டில் எடுத்து அவருக்கு தந்தார். இருமியபடியே, வேண்டாம் என்பதாய் அந்த பெண்மணி சைகை காட்ட. தொண்ட டிரையாயிருக்கு கொஞ்சம் குடி சரியாயிரும் என வற்புறுத்தினார். இத்தகைய சூழலிலும் தண்ணீர் தந்த அந்த செயல் வாழ்வின் ஆதாரமாய் அவர்களுக்கு தோன்றியது. மனித கடமைகள், குடும்பத்தலைவன் பொருப்பு என வாழ்க்கை நகரும் சுழற்ச்சி புரிந்தது.

இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது அல்ல காதல், தளர்ந்த போது தண்ணீர் கொடுப்பதிலேயே காதல் இருப்பதாய் அந்த இளைஞர்களுக்கு பட்டது. தனக்கென மகிழ்ச்சி தேடும் இளமைப்பருவம் தாண்டி, வாழ்வின் கடமைகளும் அதன் பரிமாணங்களும் அங்கே வார்த்தையாய் சொல்லப் படாவிட்டாலும் அவர்களுக்கு புரிந்தது. அந்த பேருந்து நிலையம் அவர்களுக்கு போதி மரமானது.

மழை மேகம் பரவலாய் மூடியிருந்த வானத்தை ஏமாற்றி ஒற்றையாய் மின்னிய நட்சத்திரம் கண் சிமிட்டியது. நிலா பளிரென ஒளி சிந்தியது.

உணர்வெனும் நீரோட்டம்...

எட்டயபுரத்து முண்டாசுக்கவி பாரதி, தமிழ்த்தாயின் அதிசயக் குழந்தை.

வலிமையான வார்த்தைகளை கோர்த்து வாசிப்பவர் மனதில் புத்துணர்ச்சியூட்டுவான். அது மட்டுமா, ஆழ்ந்த கருத்துச் செறிவுகளையும் செதுக்கி வைப்பதால், அவனை மகாகவி என நாம் கொண்டாடுகிறோம்.
அவனது ஒரு பாடலில் தத்துவ சிந்தனை மேலோங்கி, கேள்விகளால் நம்மை உலுக்கி எடுப்பான், உலக விசயங்களை எல்லாம் மூன்று மூன்றாக பகுத்து ஒரு பா புனைந்திருப்பான்.
உலக வாழ்க்கை என்பது என்ன. நாம் பார்ப்பது, பின்னர் நம் சிந்தை அல்லது அறிவு இது பற்றிய சிந்தனைகளை விரிவாய் வினவும் பாடலே அது.

பார்வையின் பரிமாணம் சொல்லும் போது, நம் பார்வையில் விரியும் காட்சிகளை சொல்லும் போது, மொத்தம் மூன்றே மூன்று பிரிவு தான். அவை நிற்பது, நடப்பது பறப்பது என்பான்.
அதே பாடலில் அதே மூன்று பிரிவுகளில், அறிவை சேர்க்கும் முறை பற்றி கூறும்போது.

கற்பது, கேட்பது, கருதுவது என்பான்.
அவ்வளவுதாங்க நம் அறிவு ஏற்பட்டது இந்த மூன்றே முறைகள் தான். நம்ம அறிவு கூட்டணும்னாலும் இந்த மூன்று வழிகள்தான்.
மாஞ்சு மாஞ்சு புத்தகம் படிச்சா மட்டும் போதாது, ஓடி ஓடி அடுத்தவர்கிட்ட பேசுனா மட்டும் போதாது, தனியாக இருந்து தகவல்களை உள்வாங்கி இதுதானா இப்படித்தான் இருக்குமோ என கேள்விகள் கேட்டு ஆலோசிப்பதும் பின் நாமாக ஒரு முடிவு வருவதும் கருதுவது என கொள்ளலாம். கருதுவதும் அறிவுக்கு மிக முக்கியம்.
அப்படி கருதிய ஒரு சிந்தனையை சுருதி சேர்ப்பதே இப்பதிவு. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தற்செயலாய் பார்த்தபோது நேர்ந்தது.

பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு, ஆண்டு வந்த சிற்றரசன் நம் கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் உச்சகாலை பூஜையின் அதே நேரத்தில் அரண்மனையிலும் பூஜை செய்வது அவன் வழக்கம். பூஜையின் நேரம் அறிய திருச்செந்தூர் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி வரை 40 கல் தொலைவிலும் வரிசையாய் மணி மண்டபங்கள் கட்டி, மணி ஒலிக்கச் செய்து, கோவிலில் பூஜை செய்யும் அதே வேளையில் அரண்மனையிலும் பூஜை செய்ததாக சரித்திரம் நமக்கு சொல்கிறது.
சிறு பிள்ளையாய் நான் இருந்த போது, இதென்ன வேலை மெனக்கெட்ட வேலை. இது அவசியமா, கோவிலில் நடக்கும் அதே நேரத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என என்ன கணக்கு. எத்தனை பண/ நேர விரயம் என நினைத்திருக்கிறேன். இன்னொரு பரிமாணத்தில் ஹூம்…..பாவம் தகவல் தொடர்பில் வேறு வழியில்லை. புராண காலத்தில் பூறாவை நம்பித்தானே போஸ்டல் டிப்பார்ட்மெண்டே இருந்தது. சேதி சொல்ல வேற வழி இல்லை. இன்றைய தொழில் நுட்பத்தில் ஒரு வீடியோ கான்பிரன்சிங்கில் ஒரு எஸ்.எம்.எஸ் சில் கூட முடித்து விடலாமே என தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்தும் சிந்தித்து இருக்கிறேன்.

ஆனால் இன்று பளிச்சென்று இன்னொரு பரிமாணத்தில் சிந்தனை பயணித்தது.

ஆண்டவனுக்கு பூஜை, அரசன் பூஜை செய்கிறான் எனும்போது, நாட்டு மக்கள் அத்தனை பேரும் என்ன செய்வார்கள். எண்ணத்தால் ஒருங்கிணைவார்கள் அல்லவா. அது நிச்சயம். மணி ஒலி கேட்ட உடனே மனதில் இந்த சிந்தனை எழுந்திருக்கும். ஒரு சிலர் பூஜையும் செய்யலாம். அதாவது செயலிலும் ஒருங்கிணைந்திருக்கலாம்.

ஒரு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே சிந்தனையில் ஒரே செயலில் கொண்டு வரும் அற்புதம் அல்லவா இங்கு நிகழ்கிறது. ஒரு உணர்வு / இறை உணர்வு நாட்டின் அத்தனை குடிகளிடமும் நீரோடை போல் இணைவது ஒரு மந்திரம் போல் எனக்கு படுகிறது. அது ஒற்றுமை வளர்க்கும், நாட்டுப்பற்றை ஊற வைக்கும்.

இச்செய்கையின் வலிமை புரிந்ததால், இதை இன்று நாம் ஏன் செய்ய முடியாது என கேள்வி கேட்கிறது.

இப்படி வைத்துக் கொள்ளலாமே, வருடத்தில் ஒரு நாள், ஒரே நேரத்தில், ஒரே உணர்வில் காலை பத்து மணிக்கு குழுமி ஒன்றாகிறோம் என வைத்துக் கொள்வோம்,
நம் தேசத்தின் எல்லா கொடி மரங்களிலும் தேசிய கொடி ஏற்றப்படட்டும். நம் நாட்டின் எல்லா குடிமகன்களும் அக்கொடியின் கீழ் ஒன்று கூடுவார்கள். தலை வணங்கி கொடி மரியாதை செய்து எல்லோரும் மௌனமாய் இருப்பார்கள். சரியாக 10.05 க்கு தேசிய கீதம் ஒலிக்கும். பின்னர் 10.08 க்கு அனைவரும் கலைந்து செல்வார்கள். என்று நாம் ஏன் செய்யக் கூடாது.
இது போல் நம் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு நடக்குமா. ஒரு தேசமே, ஒரே சிந்தனையில் ஒரே செயலில் ஈடுபடுமா.
இங்கு கூறுவதில் செலவு இல்லை, நேர விரயம் இல்லை. ஆனால் விளைவு பிரமாண்டமான ஆக்க சக்தி உண்டாக்கும்.
அதிகமில்லை ஒரிறு நிமிடங்கள் இப்படி மனங்களும் மனிதர்களும் இணைவார்களா, அப்படி நடந்தால் மகத்தான மனப் பகிர்வு இருக்கும் என நம்புகிறேன்.